இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.
அமெரிக்காவில் கிட்டத்தட்ட 3,000ம் பேர்களை பலிகொண்ட 2001 செப்டம்பர் 11 பயங்கரவாதத் தாக்குதல்கள் நடந்து 25 ஆண்டுகள் நிறைவடைகின்றன. பத்தொன்பது பேர்கள் — அவர்களில் 15 பேர் சவூதி அரேபியாவைச் சேர்ந்தவர்கள் — நான்கு விமானங்களைக் கடத்தினர். அவற்றில் இரண்டை நியூ யோர்க் நகரிலுள்ள உலக வர்த்தக மையத்தின் இரட்டைக் கோபுரங்கள் மீதும், ஒன்றை பென்டகன் மீதும் மோதச் செய்தனர். நான்காவது விமானம், கடத்தல்காரர்களை எதிர்த்துப் பயணிகள் போராடியதைத் தொடர்ந்து பென்சில்வேனியாவில் உள்ள ஒரு திறந்தவெளியில் அது விழுந்து நொறுங்கியது. அமெரிக்க உள்நாட்டுப் போருக்குப் பிறகு, அந்நாட்டில் ஒரே நாளில் நிகழ்ந்த மிக அதிகமான வன்முறை மரணங்கள் இதுவேயாகும்.
செப்டம்பர் 12, 2001 அன்று, உலக சோசலிச வலைத் தளம் (WSWS) பின்வரும் அறிக்கையை வெளியிட்டது:
உலக சோசலிச வலைத் தளம், உலக வர்த்தக மையம் மற்றும் பென்டகன் மீதான பயங்கரவாதத் தாக்குதல்களைத் திட்டவட்டமாகக் கண்டிக்கிறது. நான்கு வணிகப் பயணிகள் விமானங்களைக் கடத்தி, அவற்றை விமானக் குண்டுகளாக மாற்றியதற்குப் பொறுப்பானவர்கள் பெருமளவிலான படுகொலைக்குக் காரணமான குற்றவாளிகள் ஆவர். மனித உயிர்களை இத்தகைய பாகுபாடற்ற மற்றும் இரக்கமற்ற முறையில் அழிப்பதன் மூலம் சமூக ரீதியாக முற்போக்கான எந்தவொரு காரியமும் சாதிக்கப்படப் போவதில்லை.
கொலைவெறி கொண்ட பயங்கரவாதத்தின் இச்செயல்கள், மனச்சோர்வு கலந்த அவநம்பிக்கை, மத மற்றும் தீவிர-தேசியவாத பிற்போக்குத்தனமான அறியாமைவாதம், மற்றும் —இதையும் சேர்த்தே சொல்ல வேண்டும்— மிகவும் மோசமான அரசியல் சந்தர்ப்பவாதம், ஆகியவற்றின் நச்சுச் சேர்க்கையை வெளிப்படுத்துகின்றன. அமெரிக்க எதிர்ப்புப் பிரச்சாரங்களை மேற்கொண்ட போதிலும், பயங்கரவாத அமைப்புகள் ஒரு குறிப்பிட்ட மாயையின் அடிப்படையிலேயே தங்கள் உத்திகளை வகுக்கின்றன. கண்மூடித்தனமான கொடூர வன்முறைச் செயல்கள் அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் கொள்கைகளை மாற்றியமைக்க அவர்களை நிர்பந்திக்கும் என்று அவை நம்புகின்றன. ஆக, இறுதியில் வாஷிங்டனுடன் ஒரு உடன்பாட்டை எட்டவே அவை விழைகின்றன.
பயங்கரவாத முறையை எவ்வகையில் நியாயப்படுத்த முயன்றாலும், அது அடிப்படையில் பிற்போக்குத்தனமானதே ஆகும். ஏகாதிபத்திய இராணுவவாதத்திற்கு எதிரான ஒரு சக்திவாய்ந்த அடியைக் கொடுப்பதற்குப் பதிலாக, ஆளும் உயரடுக்கின் புவிசார்-அரசியல் மற்றும் பொருளாதார நலன்களைப் பின்தொடர்வதற்காகப் போரை நாடுவதை நியாயப்படுத்தவும், செல்லுபடியாக்கவும் இத்தகைய நிகழ்வுகளைப் பயன்படுத்திக் கொள்ளும் அமெரிக்க நிறுவன அமைப்பிற்குள் உள்ள கூறுகளுக்கே பயங்கரவாதம் சாதகமாக அமைகிறது. அப்பாவிப் பொதுமக்கள் படுகொலை செய்யப்படுவது, பொதுமக்களிடையே ஆத்திரத்தையும், திசைதிருப்பலையும், குழப்பத்தையும் ஏற்படுத்துகிறது. இது தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச ஐக்கியத்துக்கான போராட்டத்தைக் குறைமதிப்பிற்கு உட்படுத்துவதுடன், மத்திய கிழக்கின் தற்போதைய நிகழ்வுகளுக்குப் பின்னணியாக இருக்கும் வரலாறு மற்றும் அரசியலைப் பற்றி அமெரிக்க மக்களுக்குக் கற்பிப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் முறியடிக்கிறது.
அதைத் தொடர்ந்து நடந்த அனைத்து நிகழ்வுகளும் இந்தப் பகுப்பாய்வை உறுதிப்படுத்தின. இந்த அறிக்கை, மேலும் பல அறிக்கைகளுடன் சேர்த்து, 9/11 குறித்தும் அதன் தோற்றம் மற்றும் விளைவுகள் குறித்தும் WSWS-ன் பதிவைக் காட்டும் ஒரு சிறப்புக் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளது.
இந்தத் தாக்குதல் உடனடியாக, நாட்டின் வரலாற்றிலேயே அமெரிக்க உளவுத்துறை எந்திரத்தின் மிகப்பெரிய “தோல்வி” என்று வர்ணிக்கப்பட்டது. ஊடகங்களில் இது குறித்து மிக விரிவாகச் செய்திகள் வெளியாகியிருந்த போதிலும், 9/11 ஆணையத்தின் விசாரணை மற்றும் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற எண்ணற்ற விசாரணைகள் ஆகியவற்றுக்குப் பிறகும் கூட, இக்குற்றச் செயல் எவ்வாறு திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டது என்பது குறித்து, அது நடந்த மறுநாளில் இருந்ததை விட இன்று அமெரிக்க மக்களுக்கு மிகக் குறைந்த அளவிலேயே கூடுதல் தகவல்கள் தெரிந்திருக்கின்றன
மேலும், இந்தப் பேரழிவிற்குப் பொறுப்பேற்கவோ அல்லது அதற்காகப் பணிநீக்கம் செய்யப்படவோ, பதவி இறக்கம் செய்யப்படவோ அல்லது வேறு ஏதேனும் வகையில் ஒரு நபர் கூட பொறுப்புக்கூற வைக்கப்படவோ இல்லை. டிசம்பர் 7, 1941 அன்று பேர்ல் ஹார்பர் மீது ஜப்பான் நடத்திய தாக்குதலுக்குப் பிறகு, கடற்படையின் பல அட்மிரல்களும், கீழ்நிலை அதிகாரிகளும் தங்கள் பதவிகளை இழந்தனர். ஆனால், செப்டம்பர் 11 சம்பவத்திற்குப் பிறகு அத்தகைய நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை.
அதற்குப் பதிலாக, உளவுத்துறையினரால் “தனித்தனித் தகவல்களை ஒருங்கிணைத்துப் பார்க்க முடியவில்லை” என்ற வாதத்தை முன்வைத்து, ஒரு தொடர்ச்சியான மற்றும் திட்டமிட்ட மூடிமறைப்பு நடவடிக்கையே மேற்கொள்ளப்பட்டது. விவரிக்க முடியாத நிகழ்வுகளுக்கு இது ஒரு பொதுவான விளக்கமாக அமைந்துவிட்டது. நன்கு அறியப்பட்ட அல்-கொய்தா உறுப்பினர்கள் அமெரிக்காவிற்குள் நுழையவும், பயணிகள் விமானங்களை ஓட்டுவதற்கான பயிற்சி பெறும் பள்ளிகளில் சேரவும், மேலும் பொஸ்டன் மற்றும் வாஷிங்டன் டி.சி. ஆகிய இடங்களிலிருந்து ஒரே நாளில் புறப்பட்ட நான்கு விமானங்களைக் கைப்பற்ற ஆயுதம் ஏந்திய நான்கு அல்லது ஐந்து பேர் கொண்ட குழுக்களைத் திரட்டவும் அமெரிக்கப் பாதுகாப்பு அமைப்புகள் அனுமதித்தன.
இந்தக் கண்காட்சியில் தொகுக்கப்பட்டுள்ள டசின் கணக்கான கட்டுரைகளில் WSWS விளக்கியுள்ளபடி, அதிகாரப்பூர்வமாக அளிக்கப்பட்ட விளக்கம் என்பது, பாதுகாப்பு நடவடிக்கைகளை வேண்டுமென்றே முடக்கிய செயலை மூடிமறைக்கும் ஒரு முயற்சியாகவே இருந்தது. ஜனவரி 2002-ல், பொதுவெளியில் கிடைக்கப்பெற்ற தகவல்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு வெளியிடப்பட்ட நான்கு பகுதி ஆய்வுக் கட்டுரையில் WSWS இவ்வாறு குறிப்பிட்டிருந்தது: “விமானங்கள் உலக வர்த்தக மையம் மற்றும் பென்டகன் மீது மோதும் வரை, கடத்தல்காரர்களின் நடவடிக்கைகள் குறித்து அமெரிக்காவின் பிரம்மாண்டமான தேசிய பாதுகாப்பு எந்திரத்திற்கு எதுவுமே தெரியாது என்பதுதான். இது, அன்றைய நிகழ்வுகள் குறித்த விளக்கங்களிலேயே மிகவும் நம்பகத்தன்மையற்றதும், சாத்தியக்கூறுகள் மிகக் குறைவானதுமான ஒன்றாகும்.”
வரவிருக்கும் பயங்கரவாதத் தாக்குதல்கள் குறித்துப் பல எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டிருந்தன. இதில், ஆகஸ்ட் 2001-இல் ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ. புஷ்ஷுக்கு விமானக் கடத்தல் ஆபத்து குறித்து அளிக்கப்பட்ட, மிகவும் அறியப்பட்ட அந்த விளக்கமும் அடங்கும்.
அமெரிக்கப் பாதுகாப்பு சேவைகளுக்கு விமானக் கடத்தல்காரர்கள் பலரை நேரடியாக அணுகும் வாய்ப்பு இருந்தது. அவர்களில் இருவரான நவாஃப் அல்-ஹஸ்மி மற்றும் காலித் அல்-மிஹ்தார், சான் டியாகோவில் ஒரு FBI உளவாளியின் வீட்டில் தங்கியிருந்தனர். தலைமை ஏற்பாட்டாளரான முகமது அட்டா, 2001 ஜனவரியில் ஒரு சுற்றுலா விசாவில் மியாமி வழியாக மீண்டும் அமெரிக்காவிற்குள் நுழைந்தார். மேலும், அவர் புளோரிடாவில் உள்ள ஒரு விமானப் பயிற்சிப் பள்ளியில் பயிற்சி பெற்று வருவதாகக் குடிவரவு ஆய்வாளர்களிடம் கூறினார்—இது அவரது நுழைவுக்கான நிபந்தனைகளுக்கு நேரடி முரண்பாடாக இருந்தது. எப்படியோ அவர் இரண்டாம் கட்ட ஆய்வுக்கு அனுமதிக்கப்பட்டார். உலக வர்த்தக மையத்தின் வடக்குக் கோபுரத்தில் ஓர் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் 767 விமானத்தை மோதவைக்க வழிவகுத்த அந்தப் பயிற்சியை எடுப்பதுக்கே அவர் மீண்டும் அங்கு சென்றிருந்தார்.
அல்-கொய்தா அமைப்பு அமெரிக்க உளவுத்துறை நிறுவனங்களுக்கு நன்கு பரிச்சயமான ஒன்றாகும். அதன் நிறுவனரான ஒசாமா பின் லேடன், சவுதி அரேபியாவின் கட்டுமானத் துறை கோடீஸ்வரர் ஆவார். 1979 ல் சோவியத் யூனியனை (USSR) எதிர்த்துப் போராடும் நோக்கில், ஆப்கானிஸ்தானில் சோவியத் எதிர்ப்பு துணை இராணுவப் படையை உருவாக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, ஒசாமா பின்லேடனுக்கு அமெரிக்காவின் CIA நிதியுதவி அளித்திருந்தது. ஜனநாயகக் கட்சி ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டரின் தேசிய பாதுகாப்பு ஆலோசகரான ஜிக்னியூப் பிரெஜின்ஸ்கியின் வார்த்தைகளில் கூறுவதானால், இதன் நோக்கம் “USSR-க்கு அதன் வியட்நாமை வழங்குவதாகும்.” 1990-91-ஆம் ஆண்டு நடைபெற்ற பாரசீக வளைகுடாப் போரின்போது, சவூதி அரேபியாவைத் தளமாகக் கொண்டு 7,00,000 அமெரிக்கப் படைகள் திரட்டப்பட்ட பின்னரே, பின் லேடன் தனக்கு ஆதரவளித்த அமெரிக்கர்களுக்கு எதிராகத் திரும்பினார்.
இன்னும் விளக்கப்படாத இந்தச் சதியின் குறிப்பிட்ட கூறுகள் எவையாக இருந்தாலும், இந்தத் தாக்குதல்களின் உண்மையான அரசியல் முக்கியத்துவம் என்னவெனில், அமெரிக்க அரசாங்கத்தின் வெளியுறவுக் கொள்கை மற்றும் உள்நாட்டுக் கொள்கை ஆகிய இரண்டிலும் அவை எவ்வாறு ஒரு திருப்புமுனையாக மாறின என்பதேயாகும். “பயங்கரவாதத்திற்கு எதிரான போர்” என்பது, சர்வதேச அளவில் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளையும், உள்நாட்டில் ஒடுக்குமுறையையும் முன்னெடுப்பதற்கான ஒரு பொதுவான சாக்குப்போக்காக மாறியது. இத்தகைய நடவடிக்கைகள் நீண்ட காலத்திற்கு முன்பே திட்டமிடப்பட்டிருந்தன. அவை செயல்படுத்தப்படுவதற்குத் தேவைப்பட்ட ஒரு பொருத்தமான சாக்குப்போக்கை 9/11 நிகழ்வு வழங்கியது.
சில வாரங்களுக்குள், ஜனநாயகக் கட்சியினர் மற்றும் குடியரசுக் கட்சியினரின் கிட்டத்தட்ட ஒருமனதான ஆதரவுடன், 9/11 தாக்குதல்களுக்குப் பொறுப்பானவர்களுக்கு எதிராக இராணுவ வலிமையை பயன்படுத்துவதற்கான அதிகாரமளிக்கும் சட்டத்தை (AUMF) அமெரிக்க நாடாளுமன்றம் நிறைவேற்றியது. ஒசாமா பின் லேடன் தனது முக்கிய தளத்தைக் கொண்டிருந்த ஆப்கானிஸ்தான் மீது படையெடுப்பதற்கான அடிப்படையாக, புஷ் நிர்வாகத்தால் இச்சட்டம் முதன்முதலில் பயன்படுத்தப்பட்டது. ஆயினும், பாகிஸ்தானில் தொடங்கி சிரியா, லிபியா மற்றும் வட ஆப்பிரிக்கா வரை குறைந்தது 22 நாடுகளில் ட்ரோன் தாக்குதல்கள் மற்றும் சிறப்புப் படை நடவடிக்கைகள் உள்ளிட்ட கூடுதல் இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும், ஜனநாயக மற்றும் குடியரசுக் கட்சி நிர்வாகங்கள் இச்சட்டத்தையே மீண்டும் மீண்டும் அடிப்படையாகக் கொண்டன. பின் லேடன் கொல்லப்பட்டு 15 ஆண்டுகள் கடந்த நிலையிலும், இச்சட்டம் இன்றும் நடைமுறையில் உள்ளது. அதேவேளையில், வாஷிங்டனின் கொள்கைகளுக்குச் சாதகமாக அமையும்போது, அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கை இலக்குகளுக்குச் செயல்பட ஒப்புக்கொள்ளும்போது, அல்-கொய்தாவுடன் தெளிவான தொடர்பைக் கொண்ட சிரிய ஆட்சியும் ஒரு கூட்டாளியாக வரவேற்கப்படுகிறது.
ஈராக் போருக்கு ஒரு தனி AUMF சட்ட அடிப்படையாக இருந்தபோதிலும், புஷ் நிர்வாகம் இரண்டாவது போர் தீர்மானத்தைப் பெறுவதற்கான ஒரு காரணமாக, சதாம் ஹுசைனுக்கும் அல்-கொய்தாவுக்கும் (உண்மையில் இவர்கள் பரம எதிரிகள்) இடையே இல்லாத ஒரு தொடர்பைக் குறிப்பிட்டது. மற்றொரு பொய் என்னவெனில், ஈராக் “பேரழிவு ஆயுதங்களை” வைத்திருப்பதாகவும், அமெரிக்காவிற்கு எதிராகப் பயன்படுத்த அல்-கொய்தாவுக்கு ஒரு அணுகுண்டை வழங்கக்கூடும் என்பதுமான கூற்றாகும். ஈராக், அமெரிக்காவிற்கு ஓர் அச்சுறுத்தல் என்பதற்கான ஆதாரத்தின் தேவையை நிராகரித்து, புஷ்ஷின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் கொண்டலீசா ரைஸ் 2002-ல் இவ்வாறு அறிவித்தார்: “குற்றத்தை நிரூபிக்கும் ஆதாரம் ஒரு காளான் மேகமாக இருக்க நாங்கள் விரும்பவில்லை.”
அமெரிக்காவில், செப்டம்பர் 11 தாக்குதலின் தாக்கம் ஒருவேளை இன்னும் அதிகமாகவே இருந்தது. நாடு போர்க்கால நிலைக்கு மாற்றப்பட்டு, இராணுவம் மற்றும் பொலிசை உள்ளடக்கிய பரந்த அளவிலான உள்நாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையில் 357-க்கு 66 என்ற வாக்கு வித்தியாசத்திலும், செனட் சபையில் 98-க்கு 1 என்ற வாக்கு வித்தியாசத்திலும் தேசபக்தி சட்டம் நிறைவேற்றப்பட்டது.
22 முகமைகளை ஒன்றிணைத்து, உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை என்ற ஒரு புதிய கூட்டாட்சித் துறை உருவாக்கப்பட்டது. இதில், ட்ரம்பின் பொலிஸ்-அரசு நடவடிக்கைகளின் முன்னணிப் பிரிவாக மாறியுள்ள, புதிதாக நிறுவப்பட்ட குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கப் பிரிவும் (ICE) இடம்பெற்றிருந்தது. உலகெங்கிலும் உள்ள இரகசிய சிஐஏ சிறைகளிலும், கியூபாவில் உள்ள குவாண்டநாமோ விரிகுடாவில் உள்ள அமெரிக்க கடற்படைத் தளத்தின் பிரதான தடுப்பு மையத்திலும் சித்திரவதை ஒரு வழக்கமான நடைமுறையாக மாறியது. “மற்றொரு 9/11” நிகழ்வைத் தடுக்கும் பெயரில், கைதிகளை நீரில் மூழ்கடித்துச் சித்திரவதை செய்வதை நீதித்துறை குறிப்புகள் நியாயப்படுத்தின.
ஜனநாயகக் கட்சி “பயங்கரவாதத்திற்கு எதிரான போரில்” முழுமையாகப் பங்கேற்றது. புஷ்ஷின் போர்களுக்கு நிதியளிக்க மீண்டும் மீண்டும் அது வாக்களித்து வந்ததோடு, பின்னர் ஒபாமாவின் கீழ் அவற்றைத் தொடர்ந்தும் விரிவுபடுத்தியும் வந்தது. ஒபாமாதான் லிபியா மீதான அமெரிக்க-நேட்டோ குண்டுவீச்சையும், சிரியா மற்றும் யேமனில் அமெரிக்க ஆதரவுப் போர்களையும் தொடங்கினார். ஒபாமாவின் தலைமை வழக்கறிஞரான எரிக் ஹோல்டர்தான், முறையான சட்ட நடைமுறைகள் இன்றி, அமெரிக்கக் குடிமக்கள் உட்பட பலரையும் ஆளில்லா விமான ஏவுகணைகள் மூலம் படுகொலை செய்வதற்கான சட்ட அடிப்படையை உருவாக்கினார். மேலும், அமெரிக்காவின் போர்க்குற்றங்களையும் சட்டவிரோதப் பெருங் கண்காணிப்பையும் அம்பலப்படுத்திய செல்சியா மேனிங் மற்றும் எட்வர்ட் ஸ்னோடன் போன்ற துணிச்சலான தகவலாளர்களைத் துன்புறுத்துவதையும் அவர் முன்னின்று நடத்தினார்.
பெருநிறுவன ஊடகங்கள், சர்வதேச சட்டம் மற்றும் அரசியலமைப்புச் சட்டத்தின் மீதான தாக்குதல்களுக்கு மிகுந்த உற்சாகத்துடன் ஆதரவளித்தன. ஊடக சுதந்திரத்தின் ஒவ்வொரு துளியும் தூக்கியெறியப்பட்டது; ஜனநாயகக் கட்சியின் தாராளவாதத்தின் பிரதான குரலாக விளங்கிய நியூ யோர்க் டைம்ஸ் இதற்கு வழி காட்டியாக இருந்தது.
பெருநிறுவன ஊடகங்களின் அடிமைத்தனத்திற்கு முற்றிலும் முரணான ஒரு பாத்திரத்தை உலக சோசலிச வலைத் தளம் (WSWS) வகித்து வந்தது. செப்டம்பர் 11 தாக்குதல்கள் இடம்பெற்ற நாளிலிருந்தே, அவற்றை வெகுஜனப் படுகொலைகளுடன் கூடிய பிற்போக்குத்தனமான செயல்கள் என்று WSWS கண்டனம் செய்தது. அதேவேளையில், நீண்ட காலமாகத் திட்டமிடப்பட்டிருந்த இராணுவத் தாக்குதல்களை மேற்கொள்ளவும், உள்நாட்டில் ஜனநாயக உரிமைகளை ஒழித்துக்கட்டவும் அமெரிக்க ஏகாதிபத்தியம் இத்தாக்குதல்களை ஒரு கருவியாகப் பயன்படுத்திக்கொள்ளும் என்றும் அது எச்சரித்தது.
ஊடகங்களும் அரசாங்கமும் உண்மைகளை மறைக்க முயன்றபோதிலும் வெளிப்பட்ட அனைத்து ஆதாரங்களையும் நாங்கள் கவனமாக பகுப்பாய்வு செய்தோம். அத்துடன், ஜனநாயகக் கட்சியினர் மற்றும் குடியரசுக் கட்சியினர் ஆகிய இரு தரப்பினராலும் முன்னெடுக்கப்பட்ட போர் மற்றும் ஒடுக்குமுறை நிகழ்ச்சித் திட்டங்களுக்கு எதிராகத் தொழிலாள வர்க்கத்தைத் அணிதிரட்டப் போராடினோம். அல்-கொய்தா நடத்திய படுகொலைகளை வரவேற்ற குட்டி-முதலாளித்துவ இடதுசாரிகளின் ஒரு பிரிவினரின் போலித்தனமான பிரச்சாரத்தை நாங்கள் நிராகரித்தோம். தாக்குதல்கள் நடந்து பத்து நாட்களுக்குப் பிறகு, அத்தகைய போக்கை “போலி-சோசலிசத்தின் ஒரு வடிவம்” என்றும், “சிடுமூஞ்சிகளாலும் முட்டாள்களாலும் முன்வைக்கப்படும் போலியான ‘ஏகாதிபத்திய எதிர்ப்பு’” என்றும் நாங்கள் எழுதினோம்.
மேலும், இராணுவ ஆக்கிரமிப்பு, பாரிய தடுப்புக்காவல்கள் மற்றும் சித்திரவதையை நியாயப்படுத்த செப்டம்பர் 11-ஐப் பயன்படுத்திய தாராளவாத கல்வியாளர்கள் மற்றும் அறிவுஜீவிகளின் சரணடைதலை நாங்கள் அம்பலப்படுத்தினோம். “நாம் எதற்காகப் போராடுகிறோம்” என்ற அறிக்கையில் கையெழுத்திட்ட அறுபது பேராசிரியர்கள் குறித்து, WSWS இவ்வாறு எழுதியது: “இங்கு சம்பந்தப்பட்டிருப்பது அறியாமையோ அப்பாவித்தனமோ அல்ல, மாறாக நேர்மையின்மையும் சிடுமூஞ்சித்தனமுமே ஆகும்.”
செப்டம்பர் 11 தாக்குதல்களுக்குப் பிந்தைய 25 ஆண்டுகளில், இந்தப் பிரச்சாரத்தின் மூலம் பரப்பப்பட்ட பொய்கள் அம்பலமாகியுள்ளன. அதேவேளையில், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஆழமான நெருக்கடியும் வெளிப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் போரானது 100,00 திற்கும் மேற்பட்ட ஆப்கானியர்களின் இறப்புடனும், 6,000 அமெரிக்கர்களின் இறப்புடனும் படுதோல்வியில் முடிவடைந்தது. இறுதியில் தலிபான்கள் மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்றினர். ஈராக் போரானது இன்னும் ஒரு பெரிய இரத்தக் களறியாக அமைந்தது. இதில் சுமார் 10 லட்சம் ஈராக்கியர்களும் 7,000 அமெரிக்கர்களும் உயிரிழந்தனர். தற்போது அமெரிக்கா ஈரானுடன் போரில் ஈடுபட்டுள்ள நிலையில், செப்டம்பர் 11 தாக்குதல்களை நடத்தியவர்களில் பெரும்பாலோரை வழங்கியதும் அவர்களில் சிலருக்கு நிதியுதவி அளித்ததும் ஆகிய சவூதி அரேபியா, வாஷிங்டனுடன் இன்னும் நெருக்கமான உறவைக் கொண்டுள்ளது.
செப்டம்பர் 11 தாக்குதலுக்கு அது அளித்த எதிர்வினை, அமெரிக்க ஆளும் வர்க்கத்தினரிடையே ஜனநாயகத்திற்கான ஆதரவு ஏதுமில்லை என்பதை வெளிப்படுத்தியது. அப்போதிருந்து, உள்நாட்டுப் போலீஸ் அதிகாரங்கள் —கண்காணிப்பு, போலீஸ் கொலைகள், பெருமளவிலான சிறைபிடிப்புகள்— மிகத் தீவிரமான வேகத்தில் அதிகரித்துள்ளன. இது போன்ற மற்றொரு தாக்குதல் நடந்தால் —அல்லது ஹிட்லரின் நாடாளுமன்ற தீ விபத்து சம்பவத்தைப் போல திட்டமிட்டு நடத்தப்பட்டால்—, முதலாளித்துவ அரசின் எதிர்வினை இன்னும் கட்டுப்பாடற்றதாக இருக்கும். தெருக்களில் இராணுவத்தினர் நிறுத்தப்படுவார்கள், பெருமளவில் கைதுகள் நடைபெறும், மேலும் முழு அளவிலான பொலீஸ்-அரசு வழிமுறைகள் அமல்படுத்தப்படும்.
அதேநேரம், தொழிலாள வர்க்கமும் கசப்பான பாடங்களைக் கற்றுக்கொண்டுள்ளது. புஷ், ஒபாமா, ட்ரம்ப், பைடென், இப்போது மீண்டும் ட்ரம்ப் ஆகியோரால் நடத்தப்படும் “முடிவற்ற போர்களுக்கு” எந்த ஆதரவும் இல்லை. இராணுவ-உளவுத்துறை எந்திரத்தின் மற்றும் அதன் ஊடக எக்காளங்களின் போர்-ஆதரவுப் பிரச்சாரத்தை ஒரு சிலரே தீவிரமாக எடுத்துக்கொள்கிறார்கள். ஜேர்ஜ் பிளாய்ட் பொலீசால் கொல்லப்பட்ட சம்பவம் 2020-இல் மிகப்பெரிய மக்கள் போராட்டங்களை உருவாக்கியது. மீண்டும் பதவியேற்றுள்ள ட்ரம்ப் நிர்வாகம், அமெரிக்க வரலாற்றிலேயே மிகப்பெரிய எதிர்ப்புப் பேரணிகளான “மன்னர்கள் வேண்டாம்” போராட்டங்களை எதிர்கொண்டுள்ளது. தொழிலாளர்கள் வர்க்கப் போராட்ட வழிமுறைகளை நோக்கி அதிகளவில் திரும்புகின்றனர். அங்கே அவர்கள் உடனடியாகத் தொழிற்சங்க எந்திரத்தின் எதிர்ப்பை எதிர்கொள்கிறார்கள்.
இப்போதைய பணி என்னவெனில், கடந்த கால் நூற்றாண்டின் — மேலும் அதற்கு மேலான காலத்தின் — அரசியல் பாடங்களைப் உள்வாங்கி, ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சி ஆகிய பெருநிறுவனங்களின் கட்சிகளிலிருந்து ஓர் அரசியல் முறிவை அடிப்படையாகக் கொண்டு, ஒரு புரட்சிகர சோசலிச வேலைத் திட்டத்தை முன்னெடுத்து, முதலாளித்துவத்திற்கு எதிராகத் தொழிலாள வர்க்கத்தின் ஒரு சக்திவாய்ந்த பாரிய வெகுஜன இயக்கத்தைக் கட்டியெழுப்புவதேயாகும்.
செப்டம்பர் 11 நிகழ்வுகள், அவற்றின் பின்னணி மற்றும் விளைவுகள் குறித்த உலக சோசலிச வலைத் தளத்தின் பதிவுகளைத் தொகுத்து வழங்கும் இந்த அறிக்கையுடன் இணைக்கப்பட்டுள்ள ஆவணத்தை முழுமையாகப் படிக்குமாறு வாசகர்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம். அத்துடன், 1990-ல் பாரசீக வளைகுடாப் பகுதியில் தொடங்கிய போர் நடவடிக்கைகளின் பின்னணியில் இந்தத் தாக்குதல்களைப் பகுப்பாய்வு செய்து டேவிட் நோர்த் எழுதிய ஒரு கால் நூற்றாண்டுப் போர்: உலகளாவிய மேலாதிக்கத்திற்கான அமெரிக்காவின் உந்துதல் 1990-2016’ என்ற நூலையும் வாசகர்கள் வாங்கி வாசிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
