இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.
இலங்கையில் ஆளும் மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசிய மக்கள் சக்தி (ஜே.வி.பி./தே.ம.ச.), வீழ்ச்சியடைந்து வரும் வெகுஜன ஆதரவை அதிகரிப்பதற்கான அவநம்பிக்கையான முயற்சியாக, ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் நிறைவடைவதைக் குறிக்கும் வகையில், செப்டெம்பர் 6 முதல் நாடு முழுவதும் பொதுக் கூட்டங்களை நடத்தி வருகிறது.
செப்டெம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் அரசாங்கம் மேற்கொள்ளவுள்ள திட்டத்தின்படி, ஒவ்வொரு மாவட்டத்திலும் இரண்டு கூட்டங்கள் நடத்தப்பட உள்ளன. அவற்றில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக கலந்துகொண்டு, “கடந்த இரண்டு ஆண்டுகளில் தனது அரசாங்கத்தின் சாதனைகள் குறித்து மக்களிடம் நேரடியாகப் பேசுவதோடு, முன்னோக்கிச் செல்வதற்கான அதன் நோக்கத்தை விளக்குவார்.” முதல் கூட்டங்கள் மேல் மாகாணத்தில் உள்ள களுத்துறை மாவட்டத்தின் புலத்சிங்கள மற்றும் பேருவளை ஆகிய இடங்களில் நடைபெற்றன.
புலத்சிங்களவில் பேசும் போது, 2024 செப்டெம்பரில் தான் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டமை, “நீண்ட காலமாக மாறி மாறி நமது நாட்டை ஆட்சி செய்த அரசியல் முகாம்களின்” முழுமையான தோல்வியைக் குறித்தது என்று திசாநாயக அறிவித்தார். 2024 பொதுத் தேர்தலில், “அதிக எண்ணிக்கையிலான தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுடனும் அதிக எண்ணிக்கையிலான வாக்குகளுடனும் ஒரு வலுவான அரசாங்கத்தை மக்கள் எமக்கு வழங்கினர்” என்று அவர் பெருமையடித்துக் கொண்டார்.
தனது “மக்களை மையமாகக் கொண்ட அரசாங்கம்” “மக்களின் அதிகாரத்தை” பிரதிநிதித்துவப்படுத்துவதாக ஜனாதிபதி கூறினார். “இந்த அரசாங்கத்தைத் தேர்ந்தெடுத்தது மக்களே; இந்த அரசாங்கத்தை முன்னோக்கிக் கொண்டு செல்வதும் மக்களே; இந்த அரசாங்கத்தைப் பாதுகாப்பதும் மக்களே” என்று அவர் மேலும் கூறினார்.
உண்மையில், திசாநாயக அரசாங்கம் பெரும்பான்மையான உழைக்கும் மக்களின் நலன்களை முற்றிலும் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை, மாறாக அது முதலாளித்துவ வர்க்கத்தினதும் உலகளாவிய மூலதனத்தினதும் நலன்களை இரக்கமின்றிப் பாதுகாத்து வருகிறது. கடந்தகாலத்தில் கொண்டிருந்த அனைத்து “சோசலிச” பாசாங்குகளையும் கைவிட்டுள்ள ஜே.வி.பி./தே.ம.ச., சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கனக் கோரிக்கைகளான வரி அதிகரிப்பு, விலை உயர்வுகள் மற்றும் தனியார்மயமாக்கலை, தான் ஆதரவு கோரும் தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற ஏழைகள் மீதே திணித்து வருகிறது. “மக்கள் இந்த அரசாங்கத்தைப் பாதுகாப்பார்கள்” என்ற அவரது கூற்று யதார்த்தத்தை தலைகீழாக மாற்றிக் காட்டுகிறது: வெகுஜன எதிர்ப்பு தலைதூக்குவதை நன்கு அறிந்துள்ள அவரது அரசாங்கம், அதை நசுக்குவதற்காக அரச எந்திரத்தையும் தனது கட்சியின் குண்டர் குழுக்களையும் தயார்படுத்தி வருகிறது.
நாட்டை வங்குரோத்து நிலைக்குத் தள்ளியது ஊழல்தான் என்று ஜனாதிபதி அறிவித்தார். “திறைசேரிக்கு வர வேண்டிய ஒவ்வொரு சதமும் வேறு வழிகளில் திசைதிருப்பப்படுவதை நாங்கள் தடுத்தோம், அந்த சட்டவிரோத வழிகள் அனைத்தையும் மூடி, திறைசேரியைப் பலப்படுத்தினோம்” என்று அவர் பெருமையடித்துக் கொண்டார்.
திசாநாயகவின் ஊழல் எதிர்ப்பு பாசாங்கானது, உழைக்கும் மக்கள் எதிர்கொள்ளும் துயரமான நிலைமைகளின் உண்மையான மூல காரணத்தை மூடிமறைக்கிறது. அதாவது உலக முதலாளித்துவத்தின் ஆழமடைந்து வரும் நெருக்கடியையே இலங்கையில் தீவிரமாக வெளிப்படுகிறது என்ற உண்மையை அது மூடிமறைக்கிறது. ஆயினும், திறைசேரியானது ஊழல் செய்யும் தனிநபர்களால் “காலி” செய்யப்படவில்லை; மாறாக, உலகளாவிய நிதி மூலதனத்தின் கோரிக்கைகளாலேயே அது காலி செய்யப்பட்டது. பூகோள நிதி மூலதனத்தின் சிக்கனத் திட்டத்தையே அவரது அரசாங்கம் இப்போது தீவிரமாக அமுல்படுத்தி வருகிறது. “திறைசேரியைப் பலப்படுத்துவது” என்பது தொழிலாள வர்க்கத்தின் நலனுக்காக அல்ல, மாறாக, கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கும் முதலாளித்துவ இலாபத்திற்காகவும் வருவாயை பிரமாண்டமாக விரிவுபடுத்துவையே அது குறிக்கிறது.
திசாநாயக இந்தக் கொள்கைகளைப் பற்றி பெருமையடித்துக் கொண்டுள்ளார். 2025 ஆம் ஆண்டில், தனது அரசாங்கம் “30 ஆண்டுகளில் மிக உயர்ந்த அரசாங்க வருவாயை, அதாவது மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 16.7 சதவீதமாக பதிவு செய்ய முடிந்தது” என்றும், “1957 க்குப் பின்னர் மிகக் குறைந்த வரவு-செலவுத் திட்டப் பற்றாக்குறையை” பதிவு செய்துள்ளதாகவும் அவர் கூறினார். இவற்றை அவர் நிதி ஒழுங்கின் வெற்றிகளாக முன்வைக்கிறார். உண்மையில், இந்தப் புள்ளிவிபரங்கள், திசாநாயகவின் முன்னோடியான ரணில் விக்கிரமசிங்க ஏற்றுக்கொண்ட சர்வதேச நாணய நிதியத்தின் கோரிக்கைகளின் துல்லியமான குறிகாட்டிகளாகும். ஆட்சிக்கு வந்த சில நாட்களுக்குள் அந்த உடன்படிக்கையை “முழுமையாக” நடைமுறைப்படுத்துவதாக ஜே.வி.பி./தே.ம.ச. அரசாங்கம் உறுதியளித்ததுடன், உடன்படிக்கையை மறுபேச்சுவார்த்தைக்கு உட்படுத்துவதாக அது வழங்கிய தேர்தல் வாக்குறுதியையும் கைவிட்டது.
இந்தப் புள்ளிவிபரங்கள் உழைக்கும் மக்கள் மீது சுமத்தப்பட்டுள்ள சுமையை அளவிடுபவையே அன்றி, மக்களின் நல்வாழ்வு பற்றிய அளவீடு அல்ல. அதே நேரம், அத்தியாவசிய சேவை உத்தரவுகள் மூலம் வேலைநிறுத்தங்களை அரசாங்கம் குற்றமாக்கியுள்ளதுடன், பயங்கரவாதத்தில் இருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இது அடக்குமுறை அதிகாரங்களை மேலும் விரிவுபடுத்துவதைக் குறிக்கிறது.
தான் இரண்டு ஆண்டுகள் ஆட்சியில் இருந்த பின்னர் வறுமை குறித்தோ அல்லது மோசமடைந்து வரும் வாழ்க்கைத் தரம் குறித்தோ திசாநாயக எதுவும் கூறவில்லை. உலக வங்கி, வறுமை கிட்டத்தட்ட 22 சதவீதமாக இருப்பதாகவும், மேலும் 10 சதவீதமான மக்கள் வறுமைக் கோட்டுக்கு சற்று மேலே வாழ்வதாகவும் மதிப்பிடுகிறது. உலக உணவுத் திட்டத்தின் தகவலின்படி, 39 சதவீதமான குடும்பங்கள் போதுமான உணவைப் பெற முடியாத நிலையில் உள்ள அதேவேளை, ஐந்து வயதுக்குக் குறைந்த பிள்ளைகளில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பகுதியினர் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தொழிலாளர்கள் அதிகரித்து வரும் பொருளாதார அழுத்தத்தை எதிர்கொள்கின்றனர். 2022 ஆம் ஆண்டிலிருந்து அரச ஊழியர்களின் உண்மையான ஊதியங்கள் 33 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளன. பொருளாதார நிபுணர் நிஷான் டி மெல் மேற்கோளிட்ட ஊழியர் சேமலாப நிதியத் தரவுகளின்படி, தனியார் துறையில் முறையான வேலைவாய்ப்பில் உள்ளவர்களில் 92 சதவீதமானோர் மாதம் 100,000 ரூபாய்க்கும் குறைவாகவே சம்பாதிக்கின்றனர். அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. கோதுமை மாவின் விலை 9 சதவீதம் அதிகரித்து ஒரு கிலோகிராம் 207 ரூபாயாகியுள்ளதுடன் பணவீக்கம் 8 சதவீதத்தை எட்டியுள்ளது. வாங்கும் சக்திக்கு ஏற்ப சரிசெய்யப்பட்ட குறைந்தபட்ச ஊதியங்களைப் பொறுத்தவரை, இலங்கை 130 நாடுகளில் 120 ஆவது இடத்தில் உள்ளது.
பல்கலைக்கழக மாணவர்களுக்கான மஹாபொல புலமைப்பரிசில்களை இரட்டிப்பாக்குதல், உர மானியங்கள், ஊனமுற்றோருக்கான கொடுப்பனவுகள் போன்ற திசாநாயக பட்டியலிட்டுள்ள ஒரு சில நலன்புரி நடவடிக்கைகள், இந்தப் பின்னணியில் அற்பமானவையாகும்.
எவ்வாறாயினும், உரையின் மையக் கவனம் “கறுப்பு அரசு”—“கறுப்பு அரசியல்,” “கறுப்புப் பொருளாதாரம்” மற்றும் “கறுப்புச் சட்டம்”—என்பவற்றுக்கு எதிரான ஆவேசமான வசைபாடலாக இருந்தது. அதன் மூலம் அவர் இலங்கையின் நெருக்கடியை ஊழல், குற்றச்செயல்கள் மற்றும் அறநெறிச் சீரழிவின் விளைவாக சித்தரித்தார். ஊழல்வாதிகளைத் தண்டிப்பதற்காக, “அச்சமின்றி தேவையான அரசியலமைப்புத் திருத்தத்தை கொண்டுவருவோம்” என்று திசாநாயக அறிவித்தார்.
“கறுப்பு அரசை அழித்தொழிப்போம்” என்ற திசாநாயகின் உறுதிமொழி, முதலாளித்துவ அரசை வெறுமனே ஊழலில் இருந்து சுத்தப்படுத்த வேண்டிய ஒரு நடுநிலையான நிறுவனமாக சித்தரிப்பதன் மூலம், உலக முதலாளித்துவ நெருக்கடி சம்பந்தமான வெகுஜன கோபத்தை திசைதிருப்புவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. போட்டி அரசியல்வாதிகளையும் கட்சிகளையும் அழிப்பதன் மூலம் அரசாங்கத்தைத் தாங்கிப் பிடிப்பதற்கான வழிமுறையாகவும் இது உள்ளது.
அரசாங்கம், கடந்த இரண்டு ஆண்டுகளில், முன்னாள் ஜனாதிபதி விக்கிரமசிங்க மற்றும் எதிர்க்கட்சி அரசியல்வாதியான நாமல் ராஜபக்ஷ உட்பட போட்டி அரசியல்வாதிகளையும் ஊழல் குற்றச்சாட்டுகளின் பேரில் கைது செய்துள்ளது. தொழிலாளர்களின் சமூக மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களில் இருந்து கவனத்தைத் திசைதிருப்புவதற்கும், தொழிலாள வர்க்கத்தை எதிர்கொள்வதற்காக தனது கரத்தைப் பலப்படுத்திக்கொள்வதற்கும் அரசாங்கம் மேற்கொண்டுவரும் முயற்சியையே இந்தக் கைதுகள் வெளிப்படுத்துகின்றன.
“ஒரு கண்ணீர்ப்புகைத் தாக்குதல்கூட இல்லாமல்” இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்டதாகவும், “பொலிசின் கையிருப்பில் இருந்த கண்ணீர்ப்புகையும் இப்போது காலாவதியாகிவிட்டதாகவும்” திசாநாயக பெருமையடித்துக் கொள்கிறார். ஆனால், கண்ணீர்ப்புகை பயன்படுத்தப்படாதது அடக்குமுறை இல்லாததைக் குறிக்கவில்லை. தொழிலாளர்கள் துரோகத் தொழிற்சங்கங்களில் இருந்து சுயாதீனமாக நடவடிக்கைகளில் இறங்கத் தொடங்கும்போது, அரசாங்கம் ஏற்கனவே பயன்படுத்தி வரும் அடக்குமுறையை மேலும் மேலும் நம்பியிருக்கும்.
முதல் இரண்டு ஆண்டுகளில் தே.ம.ச. அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில், “இனவாத மோதல் தொடர்பான ஒரு பொலிஸ் முறைப்பாடுகூட இல்லை... அந்த இனவாத கறுப்பு அரசியலை நாம் முற்றிலுமாகத் தோற்கடித்து தேசிய ஐக்கியத்தை நிறுவியுள்ளோம்” என்று அறிவித்ததன் மூலம், தனது அரசாங்கத்தை இனவாதத்திற்கு எதிரானதாகவும் ஜனாதிபதி சித்தரிக்க முயன்றார்.
ஜே.வி.பி. அதன் ஆரம்பகாலம் முதலே சிங்களப் பேரினவாதக் கொள்கைகளில் ஊறிப்போயிருந்ததுடன், 1983 இல் தொடங்கிய நீண்டகால தமிழர் விரோத இனவாதப் போருக்கு ஆதரவளிப்பதில் முன்னணியில் இருந்தது. போரினால் சீரழிக்கப்பட்ட யாழ்ப்பாண மாவட்டத்தில், இடம்பெயர்ந்த 14 தமிழ் குடும்பங்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட காணியில் இராணுவத்தால் சட்டவிரோதமாக கட்டப்பட்ட பௌத்த கோயிலான திஸ்ஸ விகாரையை முறையாகப் பதிவு செய்வதற்கான அரசாங்கத்தின் நடவடிக்கையில் அதன் பிற்போக்கு இனவாத அரசியல் தெளிவாக வெளிப்படுகிறது. அந்தக் குடும்பங்களின் எதிர்ப்பை புறக்கணித்தே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள தமிழ் மக்களின் காணிகளைத் திருப்பிக் கொடுப்பது, அரசியல் கைதிகளை விடுதலை செய்வது, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தலைவிதியை வெளிப்படுத்துவது ஆகிய வாக்குறுதிகளிலிருந்து அது பின்வாங்கியுள்ளது. வடக்கு மற்றும் கிழக்கில் இன்னமும் சுமார் 100,000 துருப்புக்கள் நிலைகொண்டுள்ளன. பௌத்தத்திற்கு முன்னுரிமையை உறுதிப்படுத்தியுள்ள, சிங்களத்தை உத்தியோகபூர்வ மொழியாக வைத்துள்ள இனவாத அரசியலமைப்பை ஜே.வி.பி. தொடர்ந்து பேணுகிறது.
திசாநாயகவின் அனைத்து வாய்ச்சவடால்களுக்கும் பின்னால், ஜே.வி.பி./தே.ம.ச. அரசாங்கம் வீழ்ச்சியடைந்து வரும் தனது மக்கள் ஆதரவை அதிகரிக்க அவநம்பிக்கையுடன் முயன்று வருகிறது. வெரிட்டே ரிசேர்ச்சின் “நாட்டின் மனநிலை” பற்றிய சமீபத்திய கருத்துக்கணிப்பின்படி (ஜூலை 2026), ஜே.வி.பி./தே.ம.ச. அரசாங்கத்துக்கான ஆதரவு விகிதம் சுமார் 50 சதவீதமாகக் கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது. இது 2026 பெப்ரவரியில் தேர்தலுக்குப் பின்னர் பதிவான 65 சதவீதம் என்ற உயர் நிலையிலிருந்து ஏற்பட்ட வீழ்ச்சியாகும். ரயில்வே தொழிலாளர்கள், சுகாதாரத் தொழிலாளர்கள், நெல் விவசாயிகள், வேலையற்ற பட்டதாரிகள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், ஆசிரியர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் அண்மையில் நடத்திய போராட்டங்களில் இது வெளிப்படையாகத் தெரிந்தது.
தொழிலாள வர்க்கம் அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகள் மற்றும் பொலிஸ்-அரசு அடக்குமுறைக்கு எதிராகப் போராட்டத்தில் இறங்கிவருகிறது. எனினும், ஒரு உண்மையான போராட்டத்தை முன்னெடுப்பதற்கு, தொழிலாளர்கள் தொழிற்சங்கங்களில் இருந்தும் அனைத்து முதலாளித்துவக் கட்சிகளில் இருந்தும் சுயாதீனமான, தமது சொந்த நடவடிக்கைக் குழுக்களை ஸ்தாபிக்க வேண்டும். இதற்கு அவர்களின் வர்க்க நலன்களை முன்னிறுத்தும் ஒரு அரசியல் வேலைத்திட்டமும் அவசியமாகும் —அது அனைத்துலகவாத முன்னோக்கையும் சோசலிசக் கொள்கைகளையும் அடிப்படையாகக் கொண்ட தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்திற்கான போராட்டம் ஆகும்.
மேலும் படிக்க
- இலங்கையில் 2022 மாபெரும் எழுச்சிக்குப் பின் நான்கு ஆண்டுகள்: அரசியல் படிப்பினைகள்
- இலங்கை: பாராளுமன்ற உறுப்பினரின் கொலை தொடர்பாக மரண தண்டனை விதிக்கப்பட்ட 12 பேரின் குடும்பங்கள் நிதி உதவி கோருகின்றன
- இலங்கை வனத் திணைக்கள அதிகாரிகள் பூநகரி ஒன்றுபட்ட மக்கள் அமைப்பின் தலைவரை தாக்கி கைது செய்தனர்
- யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்தை பொலிசார் வன்முறையாகக் கலைத்தனர்
