இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.
உலக சோசலிச வலைத் தளத்தின் (WSWS) சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவரும், அமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சியின் (SEP) தேசியத் தலைவருமான டேவிட் நோர்த் ஆற்றும் ஐந்து பல்கலைக்கழக வளாகங்களிலான சொற்பொழிவுத் தொடரின் முதல் இரண்டு கூட்டங்களை சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பு (IYSSE) நடத்தியது. “முதலாளித்துவ நெருக்கடி, ஏகாதிபத்தியப் போர் மற்றும் உலக சோசலிசப் புரட்சி” என்ற தலைப்பில் நடைபெறும் இந்தச் சொற்பொழிவுத் தொடரின் ஒரு பகுதியாக, அக்டோபர் 20 செவ்வாய்க்கிழமை டெட்ராய்ட்டிலுள்ள வெய்ன் ஸ்டேட் பல்கலைக்கழகத்திலும், அக்டோபர் 21 புதன்கிழமை ஈஸ்ட் லான்சிங்கிலுள்ள மிச்சிகன் ஸ்டேட் பல்கலைக்கழகத்திலும் நோர்த் உரையாற்றினார். இரண்டு கூட்டங்களுக்கும் வலுவான வரவேற்பு கிடைத்தது. ஒவ்வொரு கூட்டத்திலும் பல டஜன் மாணவர்களும் தொழிலாளர்களும் கலந்துகொண்டதுடன், நூற்றுக்கணக்கான டாலர் மதிப்பிலான நூல்கள் மற்றும் அரசியல் வெளியீடுகளும் விற்பனையாகின.
சொற்பொழிவின் போது, பிரான்சிலும், ஐரோப்பா முழுவதிலும் மற்றும் சர்வதேச அளவிலும் இளைஞர்கள் மற்றும் தொழிலாளர்களிடையே வெகுஜனப் போராட்டங்கள் மற்றும் வேலைநிறுத்தங்களின் எழுச்சியை நோர்த் விவரித்தார். இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் உலக முதலாளித்துவம் எதிர்கொண்டுள்ள மிகப் பெரிய நெருக்கடியின் மத்தியில் இந்தப் போராட்டங்கள் வெடித்தெழுகின்றன என்றும், அந்த நெருக்கடியே ஆளும் வர்க்கங்களை உலகளாவிய போர் மற்றும் சர்வாதிகாரத்தை நோக்கித் தள்ளுகிறது என்றும் அவர் விளக்கினார். மார்க்ஸ் மற்றும் ட்ரொட்ஸ்கியின் எழுத்துக்களின் அடிப்படையில், இந்த நெருக்கடியின் வேர்களையும் அதன் புரட்சிகரமான தாக்கங்களையும் நோர்த் ஆராய்ந்து விளக்கினார்.
மில்லியன் கணக்கான இளைஞர்களிடையே சோசலிசத்திற்கான ஆதரவின் எழுச்சியை நோர்த் வரவேற்றார். இருப்பினும், சோசலிசத்தின் கோட்பாட்டு மற்றும் வரலாற்று அடித்தளங்கள் குறித்த புரிதல் மிகவும் குறைவாகவே உள்ளது என்று அவர் விளக்கினார். வர்க்கப் போராட்டம் நீண்டகாலமாக ஒடுக்கப்பட்டு வந்தமை, குறிப்பாக 1991இல் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து நிலவிய சூழல், ஒரு அரசியல் இயக்கமாக சோசலிசத்திற்கும், சமூகத்தின் அடிப்படைப் புரட்சிகர சக்தியாக தொழிலாளர் வர்க்கம் வகிக்கும் பாத்திரத்திற்கும் இடையிலான இன்றியமையாத தொடர்பைப் பற்றிய புரிதலைச் சிதைத்துவிட்டது. இதற்கு எதிராக, சோசலிசத்திற்கான போராட்டம் மார்க்சியக் கோட்பாட்டிலும், முதலாளித்துவக் கட்சிகளிடமிருந்து தொழிலாளர் வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்திலும், சோசலிச சர்வதேசியவாத முன்னோக்கிலும் வேரூன்றியிருக்க வேண்டும் என்று நோர்த் வலியுறுத்தினார்.
சொற்பொழிவைத் தொடர்ந்து நடைபெற்ற கலந்துரையாடல்கள் இரு கூட்டங்களினதும் முக்கிய அம்சமாக அமைந்தன. மாணவர்களும் தொழிலாளர்களும் எழுப்பிய தீவிரமான, கூர்ந்த கேள்விகள், போர், சர்வாதிகாரம் மற்றும் சமூக சமத்துவமின்மைக்கு எதிராகப் போராடுவதற்கான ஒரு அரசியல் முன்னோக்கை இளைஞர்கள் தேடி வரும் நிலையில், பல்கலைக்கழக வளாகங்களில் வளர்ந்து வரும் அரசியல்மயமாதலைப் பிரதிபலித்தன.
மிச்சிகனில் அமெரிக்க செனட் தேர்தலில் போட்டியிடும், அமெரிக்க ஜனநாயக சோசலிஸ்டுகளின் (DSA) ஆதரவைப் பெற்ற ஜனநாயகக் கட்சி வேட்பாளரான அப்துல் எல்-சயீத்திடம் நோர்த் என்ன கேள்வி கேட்பார் என்று வெய்ன் ஸ்டேட் பல்கலைக்கழகத்தில் ஒரு மாணவர் கேட்டார். இதற்குப் பதிலளித்த நோர்த், சோசலிச சமத்துவக் கட்சிக்கும் எல்-சயீத்துக்கும், அதேபோல் ஜனநாயகக் கட்சிக்குள்ளும் அதைச் சுற்றியும் செயல்படும் அனைவருக்கும் இடையிலான அடிப்படை அரசியல் வேறுபாடுகளை எடுத்துரைத்தார்.
ஆளும் உயரடுக்குகளிடமிருந்து தொழிலாளர் வர்க்கத்திற்குச் செல்வத்தை மாற்றுவதற்கான மூலோபாயம் என்ன என்று எல்-சயீத்திடம் தாம் கேட்பேன் என்று நோர்த் கூறினார். “அவர் பாதுகாக்கும் முதலாளித்துவ வேலைத்திட்டத்தின் அடிப்படையில், தனது சீர்திருத்தங்களில் எதையாவது அவர் எவ்வாறு நடைமுறைப்படுத்த முடியும்? இலாப அமைப்பையும், உற்பத்திச் சாதனங்கள் மீதான தனியார் உடைமையையும் சமூகத் தேவைகளுடன் அவர் எவ்வாறு சமரசப்படுத்த முடியும்?” என்று நோர்த் கேட்டார். நோர்த் மேலும் கூறியதாவது: “பாதுகாக்கப்பட வேண்டிய ஒரு தேசிய நலன் உள்ளது என்பதை எல்-சயீத் ஓர் அடிப்படைக் கொள்கையாக ஏற்றுக்கொள்கிறார். அதை நாங்கள் முற்றிலுமாக நிராகரிக்கிறோம். தொழிலாளர் வர்க்கத்தின் சர்வதேச ஒற்றுமைக்காக நாங்கள் நிற்கிறோம்.”
இளமைப் பருவத்திலிருந்தே டெட்ராய்ட்டின் போராட்ட இயக்கங்களில் தீவிரமாகச் செயல்பட்டு வரும் ஓர் இளம் தொழிலாளி, வோல் ஸ்ட்ரீட்டை ஆக்கிரமிப்போம் இயக்கம் முதல் ஜோர்ஜ் ஃபிளாய்டின் போலிஸ் படுகொலைக்கு எதிரான போராட்டங்கள் வரை, ஒவ்வொரு மக்கள் எழுச்சியும் ஏன் குறுகிய காலமே நீடித்தது என்று கேட்டார். இதற்குப் பதிலளித்த நோர்த், இவை சமூகத்தின் அடித்தளங்களை ஒருபோதும் ஆராயாத நடுத்தர வர்க்க இயக்கங்களே எனக் குறிப்பிட்டார். “வரலாற்றையும், சமூகத்தின் இயல்பு குறித்த விஞ்ஞானபூர்வமான புரிதலையும் அடிப்படையாகக் கொண்ட” ஒரு வேலைத்திட்டத்தால் மட்டுமே “நீடித்த இயக்கத்தைத் தக்க வைத்துக்கொண்டு முன்னெடுத்துச் செல்ல முடியும்” என்று அவர் கூறினார். ஏனெனில், அத்தகைய வேலைத்திட்டம்தான் “பரந்துபட்ட மக்களின் நலன்களைப் புறநிலையாக வெளிப்படுத்துகிறது” என்றும் அவர் விளக்கினார்.
மிச்சிகன் ஸ்டேட் பல்கலைக்கழகத்தில், வளாகத்தில் தொழிற்சங்க அமைப்பாளராகச் செயல்படும் ஒரு மாணவர், சாமானிய தொழிலாளர் குழுக்களைக் கட்டியெழுப்ப வேண்டும் என்ற IYSSE-யின் அழைப்பில் ஆர்வம் தெரிவித்ததுடன், அத்தகைய குழுக்கள் எங்கெல்லாம் உருவாக்கப்பட்டுள்ளன என்றும் கேட்டார். இதற்குப் பதிலளித்த அக்கூட்டத்தில் கலந்துகொண்ட சாகினாவைச் சேர்ந்த நெக்ஸ்டீர் சாமானிய தொழிலாளர் குழுவின் உறுப்பினர் ஒருவர், “நாங்கள் இன்னும் பெரிய அமைப்பாக இல்லை. ஆனால் மற்ற தொழிலாளர்களிடமும் தொழிற்சங்க உறுப்பினர்களிடமும் பேசி வருகிறோம். அந்த இலக்கை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறோம்” என்றார். இந்த வசந்த காலத்தில், DSA ஆதரவு பெற்ற தலைவர் ஷான் ஃபேய்ன் தலைமையிலான ஐக்கிய வாகனத் தொழிலாளர் சங்கத்தின் (UAW) ஊழல்மிக்க அதிகாரத்துவம் பேச்சுவார்த்தை மூலம் கொண்டுவந்த மூன்று தற்காலிக ஒப்பந்தங்களை நெக்ஸ்டீர் தொழிலாளர்கள் நிராகரித்தனர். அந்தப் போராட்டத்தின் போது உருவான நெக்ஸ்டீர் சாமானிய தொழிலாளர் குழு, ஜூன் மாதத்தில் ஆலைக்குள்ளேயே நடத்தப்பட்ட வாக்கெடுப்பின் மூலம் UAW உள்ளூர் 699 கிளை திணித்து நிறைவேற்றிய நான்காவது ஒப்பந்தத்தையும் எதிர்த்தது. அதன்பின்னர், பணிநீக்கங்கள் மற்றும் தொழிலாளர்களின் மருத்துவக் காப்பீட்டின் மீதான தாக்குதல்களுக்கு எதிராகவும் அக்குழு போராடி வருகிறது.
சட்டம் பயில விரும்பும் ஒரு மாணவர், தொழிற்சாலைத் தளத்திற்கு அப்பாற்பட்ட தொழில்முறைப் பணிகளில் நுழைபவர்கள் சோசலிசத்திற்கான போராட்டத்தில் எவ்வாறு பொருந்துகிறார்கள் என்று கேட்டார். சர்வதேச அளவில் தொழிலாள வர்க்கம் மிகப் பெருமளவில் வளர்ந்துள்ளதையும், நடுத்தர வர்க்கத்தின் பரந்த பிரிவினர் பாட்டாளி வர்க்கமயமாக்கப்படுவதையும் நோர்த் சுட்டிக்காட்டினார். “வழக்கறிஞர்கள் பாட்டாளி வர்க்கமயமாக்கப்பட்டு வருகின்றனர்; மேம்படுத்தப்பட்ட நுண்ணறிவு (AI) அதை மிகப் பெரிய அளவில் துரிதப்படுத்தப் போகிறது” என்று அவர் கூறினார். “சவால் என்னவென்றால், இவற்றில் எது வேகமாக வளர்ச்சி பெறும் என்பதே: தொழிலாள வர்க்கத்தில் சோசலிச நனவுக்கான போராட்டமா, அல்லது புற்றுநோய் போலப் பரவிவரும் உலகப் போரும் பாசிச இயக்கங்களின் ஒழுங்கமைப்புமா. பிரச்சினை இப்படித்தான் முன்வைக்கப்படுகிறது: சோசலிசமா அல்லது காட்டுமிராண்டித்தனமா.”
பிரான்சில் நடைபெறும் வெகுஜனப் போராட்டங்களும் கலவரங்களும் நம்பிக்கையூட்டுபவையா என்று கேட்கப்பட்டபோது, அவை “நிச்சயமாக மிகப் பெரிய சமூகக் கோபத்தின் வெளிப்பாடு” என்று நோர்த் கூறினார். ஆனால், இளைஞர்களாலும் மாணவர்களாலும் முதலாளித்துவத்தைத் தூக்கியெறிய முடியாது என்பதையும் அவர் வலியுறுத்தினார். அந்த ஆற்றலைக் கொண்ட ஒரே சமூக சக்தி தொழிலாளர் வர்க்கமே. “இதனால்தான் பிரான்சில் எழுப்பப்படும் மையக் கேள்வி என்னவென்றால், சுயாதீனமான அரசியல் வேலைத்திட்டத்தின் அடிப்படையில் தொழிலாளர் வர்க்கத்தைப் போராட்டத்திற்குள் கொண்டுவர முடியுமா என்பதே” என்று நோர்த் கூறினார். இதனைத் தடுப்பதற்குத் தொழிற்சங்கங்கள் தங்களால் இயன்ற அனைத்தையும் செய்து வருகின்றன என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும், கூட்டத்தில் கலந்துகொண்டவர்களிடம், “பிரான்சை நமது சொந்த அனுபவத்தின் ஒரு பகுதியாகப் பாருங்கள்” என்றும் அவர் வலியுறுத்தினார்.
மருத்துவப் படிப்புக்குத் தயாராகி வரும் ஒரு மாணவர், மருத்துவமனைகளில் AI பயன்படுத்தப்படுவது குறித்தும், இணையவழிப் பணிக்கு மாற்றப்பட்டதன் விளைவாக தொழிலாளர்கள் தனிமைப்படுத்தப்படுவது குறித்தும் கவலை தெரிவித்தார். இத்தகைய சூழ்நிலைகளில் தொழிலாளர் வர்க்கத்தை எவ்வாறு ஒன்றிணைக்க முடியும் என்றும் அவர் கேட்டார். ஆளும் வர்க்கம் சுரண்டலைத் தீவிரப்படுத்துவதற்குத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தினாலும், பல்வேறு மொழிகளுக்கு இடையிலான உடனடி மொழிபெயர்ப்பு உட்பட, தொழிலாளர்களைச் சர்வதேச அளவில் ஒழுங்கமைப்பதற்கான மகத்தான சாத்தியக்கூறுகளையும் அதே தொழில்நுட்பம் உருவாக்குகிறது என்று நோர்த் விளக்கினார். “சர்வதேச வர்க்கமான தொழிலாளர் வர்க்கம், இப்போது தன்னைச் சர்வதேச அளவில் நனவுபூர்வமாக ஒழுங்கமைத்துக்கொள்ள முடியும்” என்று அவர் கூறினார். ஆனால், தீர்மானகரமான கேள்வி இந்தத் தொழில்நுட்பத்தை எந்த வர்க்கம் கட்டுப்படுத்துகிறது என்பதுதான். “AI மனிதகுலத்தின் நலனுக்காக வாழ்க்கை நிலைமைகளில் புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும்; அல்லது அது நம்மை அழிவுக்குத் தள்ளக்கூடும்” என்று அவர் கூறினார்.
இந்தச் சொற்பொழிவுத் தொடரில் இன்னும் மூன்று சொற்பொழிவுகள் எஞ்சியுள்ளன. அவை ஜோர்ஜ் மேசன் பல்கலைக்கழகம், கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் பெர்க்லி வளாகம் மற்றும் மிச்சிகன் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் நடைபெறவுள்ளன. வாஷிங்டன் டி.சி. பகுதி, சான் பிரான்சிஸ்கோ விரிகுடாப் பகுதி மற்றும் மிச்சிகன் முழுவதிலும் உள்ள எங்கள் வாசகர்கள் மற்றும் ஆதரவாளர்கள் அனைவரும் இந்தக் கூட்டங்களில் கலந்துகொள்ளவும், அவற்றை விளம்பரப்படுத்த உதவவும், தங்களது சக ஊழியர்கள், வகுப்புத் தோழர்கள் மற்றும் நண்பர்களையும் அழைத்து வரவும் நாங்கள் வலியுறுத்துகிறோம்.
ஜோர்ஜ் மேசன் பல்கலைக்கழகம்
புதன்கிழமை, அக்டோபர் 28, இரவு 7 மணி
Planetary Hall, Room 131
10430 Rivanna River Way, Fairfax, Virginia
கலிபோர்னியா பல்கலைக்கழகம், பெர்க்லி
திங்கட்கிழமை, நவம்பர் 2, மாலை 5 மணி
Genetics and Plant Biology Building, Room 100
Bayard Rustin Way, Berkeley, California
மிச்சிகன் பல்கலைக்கழகம்
திங்கட்கிழமை, நவம்பர் 9, இரவு 7 மணி
Michigan League, Vandenberg Room, second floor
911 N. University Ave., Ann Arbor, Michigan
சோசலிசத்திற்காகப் போராட விரும்பும் அனைத்து மாணவர்களையும் இளைஞர்களையும் கீழே கொடுக்கப்பட்டுள்ள படிவத்தை நிரப்புமாறு நாங்கள் அழைக்கிறோம். உங்கள் கல்வி நிறுவனத்தில் IYSSE-யின் ஒரு கிளையைக் கட்டியெழுப்புவது குறித்து கலந்துரையாடுவதற்காக நாங்கள் உங்களைத் தொடர்புகொள்வோம்.
