இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.
இடைக்காலத் தேர்தல்களில் குடியரசுக் கட்சி சந்தித்துள்ள மிகப்பெரும் தோல்வி, பல தசாப்தங்களாக அமெரிக்காவிலும் அதன் இரு கட்சி அமைப்புமுறையிலும் ஆதிக்கம் செலுத்தி வந்த வலதுசாரி அரசியல் கட்டமைப்புக்கு எதிராக வளர்ந்துவரும் எழுச்சியைப் பிரதிபலிக்கிறது.
ரிச்சர்ட் நிக்சன் பதவிநீக்கக் குற்றவிசாரணையைத் தொடர்ந்து பதவி விலகிய பின்னர் நடைபெற்ற 1974 தேர்தல்களுக்குப் பிறகான அரை நூற்றாண்டுக்கும் மேலான காலத்தில், பதவியிலுள்ள ஜனாதிபதியின் கட்சிக்கு எதிராக வெளிப்பட்ட மிகக் கடுமையான நிராகரிப்பாக இந்த வாக்கு அமைந்தது. செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தேர்தலில், பிரதிநிதிகள் சபைக்கான தேசிய வாக்குகளில் ஜனநாயகக் கட்சி ஏறத்தாழ 13 புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன், குறைந்தது ஏழு செனட் இடங்களையும் கைப்பற்றியது. அவற்றில் ஆறு இடங்கள் ட்ரம்ப் மூன்று தேர்தல்களிலும் வெற்றி பெற்ற மாநிலங்களில் அமைந்திருந்தன.
இந்த மாற்றம் ஒவ்வொரு பிராந்தியத்திலும், மக்களின் ஒவ்வொரு பிரிவிலும் வெளிப்பட்டது. கிராமப்புற மாவட்டங்கள், இளம் ஆண்கள், கல்லூரிப் பட்டம் பெறாத தொழிலாளர்கள் என்று ட்ரம்ப் தனது ஆதரவுத் தளமாகக் கூறிக்கொண்டவர்களிடையே அது மிகவும் கூர்மையாக வெளிப்பட்டது. தேர்தலைத் தன்மீதான பொதுவாக்கெடுப்பாக ட்ரம்ப் ஆக்கினார்; அதில் படுதோல்வியடைந்தார்.
பெருவணிகத்தின் இரு கட்சிகளுக்கு மாற்றாக வேறு எதையும் அனுமதிக்காத ஓர் அரசியல் அமைப்பின் வரம்புகளுக்குள்ளேயே, ஈரான் மீதான போர், பணவீக்கம், தீவிரமடைந்துவரும் சமூக சமத்துவமின்மை மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களுக்கு எதிரான எதிர்ப்பை இந்த வாக்கு பிரதிபலிக்கிறது. கடந்த ஆண்டு மில்லியன் கணக்கான மக்கள் பங்கேற்ற “மன்னர்கள் வேண்டாம்” ஆர்ப்பாட்டங்களும், 2026 தொடக்கத்தில் மினியாபோலிஸிலும் பிற நகரங்களிலும் ICE (குடியேற்ற மற்றும் சுங்க அமலாக்கத் துறை) படுகொலைகளுக்கு எதிராக வெடித்த வெகுஜனப் போராட்டங்களும் தேர்தல் என்ற சூழலில் தொடர்ச்சியாக வெளிப்பட்டதே இந்த வாக்காகும்.
கடந்த இரண்டு மாதங்களில் பிரான்ஸ், இத்தாலி, கிரீஸ், பெல்ஜியம், ஸ்பெயின் மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகளில் பரவிய இளைஞர்கள் மற்றும் தொழிலாளர்களின் வெகுஜன ஆர்ப்பாட்டங்கள் என்ற சர்வதேச இயக்கத்தின் ஒரு பகுதியே இந்த வாக்கு. மேலும், பிரேசிலில் பாசிசவாதியான பொல்சனாரோ அடைந்த தோல்வியைத் தொடர்ந்து வெறும் இரண்டு வாரங்களுக்குள் ட்ரம்ப் இந்தப் படுதோல்வியைச் சந்தித்துள்ளார்.
ட்ரம்புக்கு ஏற்பட்ட அரசியல் அவமானத்தைக் குறித்து தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் உண்மையான மகிழ்ச்சிப் பெருக்கு நிலவுகிறது. ஆனால், தனது பாசிச வேலைத்திட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுப்பதில் உறுதியாக உள்ள ட்ரம்ப் இன்னும் பதவியிலேயே தொடர்கிறார் என்பது மட்டுமல்ல; பெருந்திரளான மக்களை உந்தித் தள்ளும் உணர்வுகளுக்கும் ஜனநாயகக் கட்சிக்கும் இடையே நிரப்ப முடியாத ஒரு பெரும் பிளவும் நிலவுகிறது.
தேர்தல் இரவில் எவ்வளவு ஆரவாரமும் கொண்டாட்டமும் நிலவினாலும், காங்கிரஸில் பெரும்பான்மை ஜனநாயகக் கட்சியின் கைகளுக்குச் சென்றிருப்பது ஆளும் வர்க்கத்தின் கொள்கைகளை அடிப்படையில் மாற்றிவிடப் போவதில்லை. போர்கள் விரிவடையும்; சமூக சமத்துவமின்மை அதிகரிக்கும்; ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்கள் தொடரும். தொழிலாளர் வர்க்கம் இடது நோக்கி நகர்ந்து வரும் அதேவேளையில், நிதியியல்-பெருநிறுவனத் தன்னலக்குழு ஏகாதிபத்திய இராணுவவாதம் மற்றும் வர்க்கப் போர் என்ற தனது வேலைத்திட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுக்கும்.
ட்ரம்பின் இரு பதவிக்காலங்கள் முழுவதிலும், ஜனநாயகக் கட்சியினர் அவரை எதிர்ப்பதற்குப் பதிலாக, அவருக்குத் துணைபோகும் சக்திகளாகவே செயல்பட்டனர். அவர்களது நிலைப்பாடு ஒருபோதும் மாறவில்லை: இருகட்சி ஒத்துழைப்பு, “பொதுத் தளம்”, ஜனாதிபதியுடன் “இணைந்து செயல்படத்” தயாராக இருத்தல். அமெரிக்க நகரங்களுக்கு ட்ரம்ப் படைகளை அனுப்பியபோதும், புலம்பெயர்ந்தோருக்கான தடுப்பு முகாம்களை அமைத்தபோதும், ஈரான் மீது போரைத் தொடுத்தபோதும் அவர்கள் இதே நிலைப்பாட்டையே திரும்பத் திரும்ப வலியுறுத்தினர்.
இந்த வேலைத்திட்டத்திற்கு இடதுசாரிப் போர்வையை வழங்குவதற்கு ஜனநாயகக் கட்சி அமெரிக்க ஜனநாயக சோசலிஸ்டுகளை (DSA) நம்பியிருப்பர். செவ்வாய்க்கிழமை, நியூயோர்க், பென்சில்வேனியா, மிச்சிகன், கொலராடோ மற்றும் கலிபோர்னியா ஆகிய மாநிலங்களில் இருந்து புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆறு உறுப்பினர்கள் அலெக்ஸாண்ட்ரியா ஒகாசியோ-கோர்ட்டெஸ் மற்றும் ரஷிதா த்லைப் ஆகியோருடன் இணைந்ததைத் தொடர்ந்து, பிரதிநிதிகள் சபையில் DSA உறுப்பினர்களின் எண்ணிக்கை இரண்டிலிருந்து எட்டாக உயர்ந்தது.
பிரதிநிதிகள் சபையில் உள்ள DSA உறுப்பினர்கள் குழு, ஜனநாயகக் கட்சிக்கு ஒரு இடதுசாரி மறைப்புத் திரையாகச் செயல்படும். அதன் உறுப்பினர்கள் ஜனநாயகக் கட்சியினராகவே தேர்தலில் போட்டியிட்டனர்; ஹக்கீம் ஜெஃப்ரீஸ் தலைமையிலான ஜனநாயகக் கட்சியின் காங்கிரஸ் குழுவிலேயே அவர்கள் இடம்பெறுவார்கள். 2023ஆம் ஆண்டிலிருந்து கூடிய ஒவ்வொரு காங்கிரஸிலும், சபாநாயகர் பதவிக்கான ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராக ஜெஃப்ரீஸை ஆதரித்து ஒகாசியோ-கார்டெஸும் த்லைபும் வாக்களித்துள்ளனர்.
DSA-வின் மிகவும் அறியப்பட்ட பதவி வகிப்பவரின் செயல்பாட்டுப் பதிவு, இது எங்கே இட்டுச் செல்கிறது என்பதைக் காட்டுகிறது. மில்லியன் கணக்கான மக்கள் ட்ரம்புக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது, DSA-வைச் சேர்ந்த நியூயோர்க் மேயர் சோஹ்ரான் மம்தானி, ட்ரம்பை வெள்ளை மாளிகையில் இருமுறை சந்தித்ததுடன், அரசியல் ஒத்துழைப்பைப் பகிரங்கமாகக் காட்டும் வகையில் அவரை கிரேசி மேன்ஷனுக்கு வரவேற்றார்.
இந்த நடத்தை வெறும் கோழைத்தனத்தின் விளைவு மட்டுமல்ல. ஜனநாயகக் கட்சி வோல் ஸ்ட்ரீட் மற்றும் ஆளும் வர்க்கத்தின் கட்சியாகும்; ட்ரம்புக்கு எதிராகக் கீழிருந்து எழும் எதிர்ப்பையே அது எல்லாவற்றையும்விட அதிகமாக அஞ்சுகிறது. ட்ரம்புக்கு எதிராக அது இடைவிடாத பிரச்சாரத்தை நடத்திய ஒரே பிரச்சினை, உக்ரேனில் ரஷ்யாவுக்கு எதிரான போரே ஆகும்.
வாக்குப்பதிவு முடிந்து சில மணி நேரங்களுக்குள்ளேயே, ஜனநாயகக் கட்சியினர் தங்களது வழக்கமான அரசியல் வசனத்தையே மீண்டும் பேசத் தொடங்கிவிட்டனர். “அமெரிக்க மக்கள் தீவிரப்போக்கை விட பொருளாதாரத்தையே தேர்ந்தெடுத்துள்ளனர். அமெரிக்க மக்கள் வெறுப்பை விட நம்பிக்கையைத் தேர்ந்தெடுத்துள்ளனர்” என்று ஜனவரியில் பிரதிநிதிகள் சபையின் சபாநாயகராகப் பதவியேற்கவுள்ள ஜெஃப்ரீஸ் அறிவித்தார். “எதிர்த்தரப்புடன் இருகட்சிப் பொதுத் தளத்தைக் கண்டறிய நாங்கள் தயாராகவும், விருப்பத்துடனும், திறனுடனும் இருக்கிறோம்.”
“வெறுப்பை விட நம்பிக்கை” என்பதற்காக மில்லியன் கணக்கானோர் வாக்களிக்கவில்லை. அவர்கள் போருக்கும், சமூகத் துயரத்திற்கும், சர்வாதிகாரத்திற்கும் எதிராகவே வாக்களித்தனர். ஆனால், சர்வாதிகாரியாக மாறத் துடிக்கும் ஒருவருடன் பொதுத் தளத்தைக் கண்டறிவதிலேயே இரண்டு ஆண்டுகளைக் கழித்த பிறகும், அந்தத் தேடல் தொடரும் என்றே ஜெஃப்ரீஸ் அறிவித்தார்.
பராக் ஒபாமாவும் அதே பல்லவியையே பாடினார்; “மக்களைப் பிளவுபடுத்தாமல் ஒன்றிணைக்கும் ஓர் அரசியலுக்கு” அவர் அழைப்பு விடுத்தார். 2016இல் ட்ரம்ப் முதன்முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மறுநாள், அந்தத் தேர்தல் போட்டி ஒரே அணியின் இரு பிரிவுகளுக்கு இடையிலான வெறும் “உள்பயிற்சிப் போட்டி” மட்டுமே என்று நாட்டுக்கு உறுதியளித்தவரும் இதே ஒபாமாதான்.
இரண்டு ஆண்டுகளாக ஜனாதிபதி சர்வாதிகாரத்தை நிறுவுவதற்கு உழைத்து வரும் ஒரு கட்சிக்கு “இருகட்சிப் பொதுத் தளத்தை” வழங்குவது என்பது வோல் ஸ்ட்ரீட்டுக்கு அளிக்கப்படும் ஒரு உறுதிமொழியாகும்; வோல் ஸ்ட்ரீட்டும் அந்தச் சமிக்ஞையை உடனடியாகப் புரிந்துகொண்டது. புதன்கிழமை, டவ் ஜோன்ஸ் தொழில்துறை சராசரிக் குறியீடு 1,570 புள்ளிகள், அதாவது 3 சதவீதம் உயர்ந்தது. இது 2025 ஏப்ரலுக்குப் பிறகு அது கண்ட மிகச் சிறந்த நாளாகவும், ட்ரம்ப் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்து இரண்டாவது மிகச் சிறந்த நாளாகவும் அமைந்தது.
தேர்தல் குறித்து நிதியியல் தன்னலக்குழு வழங்கிய தீர்ப்பு அதுவே. வங்கியாளர்கள் அப்பாவிகளும் இல்லை, உணர்ச்சிவசப்படுபவர்களும் இல்லை. சோசலிசம் ஒருபுறம் இருக்க, சமூகச் சீர்திருத்தக் கொள்கையையே கூட ஜனநாயகக் கட்சியினர் அமல்படுத்தப் போவதில்லை என்பது அவர்களுக்குத் தெரியும். தேர்தல் தமது நலன்களுக்கு ஏதேனும் அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாக அவர்கள் நம்பியிருந்தால், அவர்கள் கொண்டாடிக்கொண்டிருக்க மாட்டார்கள்.
1992இல் பில் கிளிண்டன் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, ஜனநாயகக் கட்சியினர் வரவு-செலவுத் திட்டப் பற்றாக்குறையைக் குறைக்கும் கொள்கைகளைத் திணித்து, நலன்புரித் திட்டங்களை ஒழித்தனர். 2008இல் பராக் ஒபாமா தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, அவர்கள் வங்கிகளைக் காப்பாற்றினர்; புதிதாகப் பணியமர்த்தப்பட்ட வாகனத் தொழிலாளர்களின் ஊதியத்தைப் பாதியாகக் குறைத்தனர்; குடியரசுக் கட்சியினருடன் ஒரு “மாபெரும் பேரத்தை” எட்டும் முயற்சியில் சமூகப் பாதுகாப்புத் திட்டத்தில் (Social Security) வெட்டுக்களை முன்வைத்தனர். ட்ரம்பின் முதல் பதவிக்காலத்தைத் தொடர்ந்து வந்த ஜோ பைடன், ரஷ்யாவுக்கு எதிரான போரை முன்னெடுத்தார்; காஸாவில் இடம்பெற்ற இனப்படுகொலைக்கு ஆயுதம் வழங்கினார்; ட்ரம்ப் மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கான பாதையையும் அமைத்தார்.
ஊடகங்களில் மேலோங்கியுள்ள மற்றொரு கருத்து, இந்தத் தேர்தல் இயல்புநிலைக்குத் திரும்புவதைக் குறிக்கிறது என்பதாகும். “ட்ரம்ப் தனக்கு நிகரானவரைச் சந்தித்துவிட்டார்” என்ற தலைப்பின் கீழ், “அமைப்புமுறை நிலைத்துள்ளது” என்று நியூயோர்க் டைம்ஸ் ஆசிரியர் குழு பிரகடனம் செய்தது.
ஏமாந்துவிடாதீர்கள்: ட்ரம்ப் ஓர் அறிகுறியே தவிர, காரணம் அல்ல. அவர், அதிகாரத்தைத் தனது பிடிக்குள் தொடர்ந்து வைத்திருக்கின்ற ஒரு நிதியியல் தன்னலக்குழுவின் அரசியல் பிரதிநிதி ஆவார்.
வரவிருக்கும் காலகட்டத்தில் அரசின் கொள்கைகளிலும் அதன் எதிர்வினையிலும் இரண்டு சக்திகள் ஆதிக்கம் செலுத்தும். முதலாவது பொருளாதார நெருக்கடி; அது ஒரு புதிய கட்டத்திற்குள் நுழைவதற்கான பல அறிகுறிகளைக் காட்டி வருகிறது. தேசியக் கடன் 40 டிரில்லியன் டாலரைத் தாண்டியுள்ள நிலையிலும், போர் விலைகளையும் கடன் வாங்கும் செலவுகளையும் உயர்த்தி வரும் நிலையிலும், தொழிலாளர் வர்க்கமே இதற்கான விலையைச் செலுத்த வேண்டும் என்று ஆளும் வர்க்கம் கோரும். ஜெஃப் பெசோஸுக்குச் சொந்தமான வாஷிங்டன் போஸ்ட், புதன்கிழமை இந்த வேலைத்திட்டத்தை வெளிப்படையாக முன்வைத்தது.“பொதுத் தளத்தைக் கண்டறிவதற்காக அவசரமாகக் கவனம் செலுத்தப்பட வேண்டிய ஒரு பிரச்சினை உள்ளது: நெருங்கிவரும் நிதிப் பாதாளம்” என்று அது பிரகடனம் செய்தது; அதாவது, சமூகத் திட்டங்களில் பெரும் வெட்டுக்களை மேற்கொள்வது.
இரண்டாவது, அமெரிக்க ஏகாதிபத்தியம். காங்கிரஸின் அமைப்பில் ஏற்படும் மாற்றத்தால் அது ஒரு சாதுவான ஆட்டுக்குட்டியாக மாறிவிடாது. இந்தத் தேர்தல் ஈரானுக்கு எதிரான போரின் முடிவைக் குறிக்கிறது என்று பரவலாகப் பேசப்படுகிறது. ஆனால், மத்திய கிழக்கில் ஒரு பெரும் பின்னடைவைச் சகித்துக்கொள்ளத் தயாராக உள்ள எந்தப் பிரிவும் ஆளும் வர்க்கத்தில் இல்லை. மேலும், ஈரான் மீதான போர் உலகளாவிய போரின் ஒரு போர்முனையாகும். அந்த உலகளாவிய போரில், ஜனநாயகக் கட்சியினரின் முதன்மை முன்னுரிமையாக உள்ள உக்ரேனில் ரஷ்யாவுக்கு எதிரான போரும் அடங்கும்.
மக்களின் உணர்வு ஜனநாயகக் கட்சியை விட மிகவும் இடதுபுறம் உள்ளது. போருக்கு முடிவு, ஜனநாயக உரிமைகளின் பாதுகாப்பு மற்றும் தமது வாழ்க்கை நிலைமைகளில் அடிப்படையான முன்னேற்றம் ஆகியவற்றை மில்லியன் கணக்கான மக்கள் விரும்புகின்றனர். ஆளும் வர்க்கத்தின் ஒவ்வொரு பிரிவும், அதனுடன் சேர்த்து சொல்ல வேண்டுமானால் தொழிற்சங்க எந்திரமும், இந்த வாக்கில் வெளிப்பட்டுள்ள தீவிரமயமாதலையும் அது முன்னறிவிக்கும் அரசியல் வளர்ச்சிகளையும் கண்டு பீதியடைந்துள்ளன.
பல தசாப்தங்களாக, அமெரிக்க சமூகத்தின் ஆழமான வர்க்கப் பிளவுகள் பெருவணிகத்தின் இரு கட்சிகளாலும், தொழிற்சங்க அதிகாரத்துவத்தாலும், வர்க்கம் என்ற ஒன்று இருப்பதையே மறுத்த அதிகாரபூர்வ அரசியல் கலாச்சாரத்தாலும் அடக்கப்பட்டு வந்துள்ளன. இப்போது அவை வெடித்தெழத் தொடங்கியுள்ளன; வெடிப்பான ஆற்றலுடன் அவை மேலும் வளர்ச்சி பெறும்.
தேர்தலில் வெளிப்பட்ட எதிர்ப்பு தேர்தல் களத்துடன் நின்றுவிடாது. வாக்களிப்பைத் தூண்டிய பிரச்சினைகள் தொழிற்சாலைகளிலும் பணியிடங்களிலும் பள்ளிகளிலும் போராடித் தீர்மானிக்கப்படும், தீவிரமடைந்துவரும் வர்க்கப் போராட்டக் காலகட்டத்திற்குள் அமெரிக்கா நுழைந்துகொண்டிருக்கிறது.
அடிப்படைப் பிரச்சினை, நெருக்கடியின் அளவுக்கும் தொழிலாள வர்க்கத்திற்குத் தேவையான தலைமையின் வளர்ச்சிக்கும் இடையிலான இடைவெளியே ஆகும். போர், சமத்துவமின்மை, சர்வாதிகாரம் ஆகியவற்றுக்கு எதிரான ஒரு வெகுஜன இயக்கத்திற்கான புறநிலை நிலைமைகள் விரைவாக முதிர்ச்சியடைந்து வருகின்றன. அந்த இயக்கத்தை முன்னெடுத்துச் செல்லத் தேவையான அரசியல் நனவு இப்போதுதான் வடிவம் பெறத் தொடங்கியுள்ளது.
தனது நலன்களை முன்னெடுப்பதற்குத் தொழிலாளர் வர்க்கம், தேசிய எல்லைகளைக் கடந்து தொழிலாளர்களுடன் ஐக்கியப்பட்டு, சோசலிச மற்றும் புரட்சிகர வேலைத்திட்டத்தை ஆயுதமாகக் கொண்ட ஒரு சுயாதீனமான அரசியல் சக்தியாக வளர வேண்டும். சோசலிசத்தின் வெற்றியும் மனிதகுலத்தின் எதிர்காலமும் சார்ந்திருக்கும் நமது சகாப்தத்தின் மைய அரசியல் கடமை, தொழிலாளர் வர்க்கத்தில் புரட்சிகரத் தலைமையின் நெருக்கடியைத் தீர்ப்பதே ஆகும்.
