சோசலிச சமத்துவக் கட்சியின் (பிரித்தானியா) இணையவழிக் கூட்டத்தில் பங்கேற்க வாருங்கள்: “கிளர்ந்தெழுந்துள்ள ஐரோப்பா: வர்க்கப் போராட்டத்தின் ஒரு புதிய கட்டம்”

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

சோசலிச சமத்துவக் கட்சி (பிரித்தானியா), நவம்பர் 11 புதன்கிழமை மாலை 7 மணிக்கு (லண்டன் நேரம்; பாரிஸ் நேரப்படி இரவு 8 மணி), 'கிளர்ந்தெழுந்துள்ள ஐரோப்பா: வர்க்கப் போராட்டத்தின் ஒரு புதிய கட்டம்' என்ற தலைப்பில் ஓர் இணையவழிப் பொதுக் கூட்டத்தை நடத்தவுள்ளது.

ட்ரொட்ஸ்கிச இயக்கத்தில் எமது சகோதரக் கட்சியான பிரெஞ்சுச் சோசலிச சமத்துவக் கட்சியின் (PES) தேசியச் செயலாளர் அலெக்ஸ் லான்ரியேர் பிரதான உரையாற்றுவார். அவருடன் சோசலிச சமத்துவக் கட்சியின் (பிரித்தானியா) தேசியச் செயலாளர் கிறிஸ் மார்ஸ்டனும் இணைந்து உரையாற்றுவார்.

2024இல் லண்டனில் நடைபெற்ற பேரணியில் உரையாற்றும் அலெக்ஸ் லான்ரியேர்

கண்டம் முழுவதும் பரவிவரும் போராட்டங்கள் மற்றும் வேலைநிறுத்தங்களின் அலை குறித்த மார்க்சிய ஆய்வை இக்கூட்டம் வழங்கும். நவம்பர் 5 அன்று பிரான்சில் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ள தேசிய வேலைநிறுத்தங்களுக்கு ஒரு வாரத்திற்குப் பிறகு, ஸ்பெயினில் தேசிய வேலைநிறுத்தங்கள் நடைபெறும் அதே நாளில், அயர்லாந்தில் பொதுத்துறை வேலைநிறுத்தம் நடைபெறுவதற்கு ஒரு நாள் முன்பாகவும், ஜேர்மனியில் தேசிய இளைஞர் போராட்டங்களின் இரண்டாவது வார இறுதிக்கு முன்னதாகவும் இக்கூட்டம் நடைபெறவுள்ளது.

வாழ்க்கைச் செலவு நெருக்கடிக்கும், இராணுவவாதத்திற்கும், கட்டாய இராணுவச் சேவைக்கும், தீவிர வலதுசாரிகளின் எழுச்சிக்கும், காலநிலைப் பேரழிவுக்கும் எதிராகத் தொழிலாளர்களும் மாணவர்களும் போராடி வருகின்றனர்.

இதே போராட்டங்கள் பிரித்தானியாவுக்கும் வரும். தொழிற்சங்க அதிகாரத்துவமும், பசுமைக் கட்சியினரும், கோர்பினிஸ்டுகளும் தொழிலாளர்கள் மீதும் இளைஞர்கள் மீதும் திணித்துள்ள கட்டுப்பாடுகளாலும், ஆளும் வர்க்கம் கோரும் முழுமையான சிக்கன நடவடிக்கைகளையும் இராணுவவாத வேலைத்திட்டத்தையும் நடைமுறைப்படுத்துவதில் தொழிற்கட்சி அரசாங்கத்திடம் நிலவும் அச்சம் கலந்த தயக்கத்தாலும் மட்டுமே அவை தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. இவ்விரண்டும் நீடிக்க முடியாது.

பிரான்சிலும், ஐரோப்பா முழுவதிலும் போராட்டங்களைத் தூண்டும் அடிப்படைப் பிரச்சினைகள் அனைத்தும் பிரித்தானியாவையும் பாதிக்கின்றன. பிரித்தானியாவின் பொதுக் கடன் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் (GDP) 100 சதவீதத்தை நெருங்கி வருகிறது; சமூக நலச் செலவினங்களைக் குறைக்குமாறு முதலீட்டாளர்கள் நெருக்குவதால், ஜி7 நாடுகளிலேயே மிக உயர்ந்த கடன் பெறும் செலவுகளில் சிலவற்றை பிரித்தானியா எதிர்கொள்கிறது.

'நலன்புரி உதவித் திட்டங்களுக்கான செலவினத்தை நாம் குறைத்தாக வேண்டும்' என்று பிரதமர் ஆண்டி பேர்ன்ஹாமும் நிதி அமைச்சர் ஜோன் ஹீலியும் வலியுறுத்தியுள்ளனர். அடுத்த ஆண்டின் செலவின மறுஆய்வில் ஈடுசெய்ய வேண்டியிருக்கும் பொதுச் செலவினத்திற்கான 17 பில்லியன் பவுண்டுகள் பற்றாக்குறையை அவர்களே உருவாக்கிக்கொண்டுள்ளனர்.

அதேவேளையில், 2030க்குள் பாதுகாப்புச் செலவினத்தை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3 சதவீதமாக உயர்த்துவதற்காக இராணுவத்திற்குக் கூடுதலாக 11 பில்லியன் பவுண்டுகள் செலவிடப்படும் என்று அவர்கள் உறுதியளித்துள்ளனர். போருக்குத் தயாராவதற்கு இப்போது 1,000 நாட்களுக்கும் குறைவான காலமே உள்ளது என்று பாதுகாப்புச் செயலாளர் வெஸ் ஸ்ட்ரீட்டிங் மக்களிடம் தெரிவித்துள்ளார்.

தொழிலாளர் வர்க்கம் எதிர்கொள்ளும் புரட்சிகரக் கடமைகளையும், அவற்றுக்குப் பொருத்தமான ஒரு சோசலிச வேலைத்திட்டத்தின் அவசியத்தையும் ஐரோப்பாவில் நடைபெறும் நிகழ்வுகள் உறுதிப்படுத்துகின்றன.

கண்டம் முழுவதிலுமுள்ள அரசாங்கங்கள் போராட்டக்காரர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற மறுத்து, அதற்குப் பதிலாக முன்னெப்போதும் இல்லாத ஒடுக்குமுறையுடன் பதிலளித்து வருகின்றன: பிரான்சில் 10,000-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்; அவர்களில் பெரும்பாலானோர் சிறார்கள். காவல்துறையின் மிருகத்தனமான வன்முறையும், வீதிகளில் இராணுவ வீரர்களின் குவிப்பும் நடைபெற்று வருகின்றன. மூர்க்கமான செலவின வெட்டுக்களையும் விரைவான மீள் இராணுவமயமாக்கலையும் நடைமுறைப்படுத்துவதற்காக அரசின் முழு அடக்குமுறை வலிமையையும் அவர்கள் தயார்படுத்தி வருகின்றனர்.

அனைத்து ஐரோப்பிய ஏகாதிபத்திய சக்திகளுக்கும் ஒவ்வொரு முதலாளித்துவக் கட்சிக்கும் பொதுவான போர்வெறி நிகழ்ச்சிநிரல், கண்டத்தையும் உலகையும் அணு ஆயுதம் தாங்கிய நேட்டோவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான நேரடிப் போர் என்ற பேரழிவின் விளிம்புக்குக் கொண்டுவந்துள்ளது.

தீவிர வலதுசாரிக் கட்சிகள் கருத்துக் கணிப்புகளில் முன்னேறி வருகின்றன; சமூக அதிருப்தியைத் தகர்ப்பதற்கான கருவியாக ஆளும் வர்க்கத்தால் அவை மேலும் மேலும் நாடப்படுகின்றன; அதேவேளையில், போருக்கும் சமூகச் சமத்துவமின்மைக்கும் எதிரான இடதுசாரிப் போராட்டங்களை நோக்கி நகரும் மக்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

கிரீஸின் பிரேயஸ் நகரில் துறைமுகத் தொழிலாளர்களும் பிற துறைமுகப் பணியாளர்களும் அணிவகுத்துச் செல்கின்றனர். [Photo: PAME/X]

ஜோன்-லூக் மெலோன்சோனின் அடிபணியாத பிரான்ஸ் (LFI), ஸ்பெயினில் சுமார் (Sumar) மற்றும் சோசலிஸ்ட் கட்சி, ஜேர்மனியில் இடதுக் கட்சி (Die Linke) போன்ற முதலாளித்துவ ஆதரவுக் கட்சிகள், முதலாளித்துவத்திற்கு எதிரான வர்க்கப் போராட்டத்திற்கு மாறாக, போலிச் சீர்திருத்தங்களைக் கொண்ட ஒரு நாடாளுமன்ற வேலைத்திட்டத்தின் மூலம் தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்குப் பதிலளிக்க முன்மொழிகின்றன. இந்த அரசியலை முன்னெடுக்க தொழிற்சங்க அதிகாரத்துவம் அவற்றுக்கு உதவுகிறது.

ஆனால் இந்தக் கட்சிகள் முன்வைக்கும் வேலைத்திட்டம் காட்டிக்கொடுப்புக்கும் தோல்விக்குமானதாகும். தற்கால முதலாளித்துவம் சீர்திருத்தங்களுக்கு எந்த அடிப்படையையும் வழங்கவில்லை; மாறாக, கடந்த காலத்தில் வென்றெடுக்கப்பட்ட சீர்திருத்தங்களையே அது அழித்து வருகிறது. மெலோன்சோனும் அவரது அரசியல் கூட்டாளிகளும் விதைத்துள்ள மாயைகள், கருத்துக் கணிப்புகளில் முன்னணியில் உள்ள மரின் லு பென்னின் தேசிய பேரணியைப் (RN) போல, தீவிர வலதுசாரிகளை அதிகாரத்திற்குக் கொண்டுவரும் பாதையாக அமையாவிட்டால், LFI போன்ற கட்சிகள் பெருநிறுவன மற்றும் நிதியியல் தன்னலக்குழு கட்டளையிடும் மூர்க்கமான நிபந்தனைகளின் அடிப்படையில் ஆட்சி நடத்தும்.

10 ஆண்டுகளுக்கு முன்பு கிரீஸில் சிரிசாவுடனான (SYRIZA: தீவிர இடது கூட்டணி) பேரழிவுகரமான அனுபவத்திலிருந்தும், ஸ்பெயினில் பொடெமோஸுடனான இதேபோன்ற அனுபவத்திலிருந்தும் தொழிலாளர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்.

ஜெர்மி கோர்பின் பிரித்தானியாவில் முன்னெடுத்த இதே திவாலான அரசியல், ஒரு வலதுசாரித் தொழிற்கட்சி அரசாங்கத்தை ஆட்சியில் தக்கவைத்ததோடு, 'இடது' எதிர்ப்பை நிலவும் அமைப்புமுறைக்கு முற்றிலும் இசைந்துபோகும் ஸாக் போலன்ஸ்கியின் பசுமைக் கட்சியாகச் சுருக்கிவிட்டது.

தொழிலாளர்களுக்குத் தமது போராட்டங்களை வழிநடத்த ஒரு புதிய, சோசலிச சர்வதேசியவாத அரசியல் தலைமை தேவை. கண்டம் முழுவதும் பரவிவரும் வேலைநிறுத்தங்களாலும் போராட்டங்களாலும் புறநிலையாக முன்வைக்கப்படுவது, போருக்கும் பொருளாதார இன்னல்களுக்கும் எதிராகவும், அவற்றுக்கு மூலமாக உள்ள தனியார் சொத்துடமையையும் தேசிய அரசுகளையும் அடிப்படையாகக் கொண்ட முதலாளித்துவ அமைப்புமுறைக்கு எதிராகவும் நடத்தப்படும் ஐரோப்பா தழுவிய போராட்டமாகும்.

ஆனால் இந்தச் சாத்தியத்தை யதார்த்தமாக்குவதற்கு, தொழிற்சங்க அதிகாரத்துவங்களிலிருந்து சுயாதீனமான சாமானிய தொழிலாளர் குழுக்களாகிய புதிய வர்க்க அமைப்பு வடிவங்களும், மார்க்சிசத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு புரட்சிகர சோசலிச அரசியல் வேலைத்திட்டமும் தேவை. இந்த அடிப்படையில் மட்டுமே தொழிலாள வர்க்கம், தன்னைத் தவறாக வழிநடத்தும் போலிச் சீர்திருத்தவாதத் தலைவர்களின் செல்வாக்கிலிருந்து விடுபட முடியும்.

இந்த முக்கியமான கேள்விகள் குறித்த கலந்துரையாடலில் பங்கேற்க, நவம்பர் 11 புதன்கிழமை சோசலிச சமத்துவக் கட்சியுடனும் (பிரித்தானியா) பிரெஞ்சுச் சோசலிச சமத்துவக் கட்சியுடனும் (PES) இணையுங்கள். இப்போதே பதிவு செய்யுங்கள்!

Loading