முன்னோக்கு

அமெரிக்க இடைக்காலத் தேர்தல்கள் வர்க்கப் போராட்டத்தின் வெடிப்புமிக்க வளர்ச்சியை முன்னறிவிக்கின்றன

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

அமெரிக்க மாநில, மாவட்ட மற்றும் நகராட்சி ஊழியர்களின் கூட்டமைப்பின் (AFSCME) மாவட்ட கவுன்சில் 37-இன் தொழிலாளர்கள், 2026 செப்டம்பர் 24. [Photo: DC 37 AFSCME]

பதவியில் இருக்கும் ஜனாதிபதியின் கட்சிக்கு அரை நூற்றாண்டில் ஏற்பட்ட மிகப்பெரிய தோல்வியை விளைவித்த செவ்வாய்க்கிழமை இடைக்காலத் தேர்தல்களின் பின்னணியில், வாழ்க்கைச் செலவு, போர், சமூக சமத்துவமின்மை, ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல் ஆகியவற்றால் உருவாகியுள்ள சமூகக் கோபத்தின் மகத்தான வளர்ச்சி உள்ளது. தேர்தல் வடிவங்களுக்குள் அடக்கிவைக்க முடியாத, அடக்கிவைக்கப்படப் போவதுமில்லாத அந்தக் கோபம் வர்க்கப் போராட்ட வடிவில் வெடித்தெழும்.

தேர்தல் முடிந்து மூன்று நாட்களுக்குப் பிறகு, இந்தச் செயல்முறை ஏற்கனவே கண்கூடாகத் தெரிகிறது. வெள்ளிக்கிழமை நள்ளிரவில், நியூயோர்க் நகரத்துக்கும் அமெரிக்க மாநில, மாவட்ட மற்றும் நகராட்சி ஊழியர்களின் கூட்டமைப்பின் (AFSCME) மாவட்ட கவுன்சில் 37-க்கும் இடையிலான நகரளாவிய ஒப்பந்தம் காலாவதியானது. இது எழுத்தர் பணியாளர்கள், சமூகநலப் பணியாளர்கள், பள்ளி உதவியாளர்கள், நூலகப் பணியாளர்கள் மற்றும் 911 அவசர அழைப்பு சேவை ஊழியர்கள் உட்பட சுமார் 90,000 நகராட்சித் தொழிலாளர்களை உள்ளடக்கியது. இதற்கு முன்னர் நடைமுறையில் இருந்த, 2023ஆம் ஆண்டில் கையெழுத்தான ஒப்பந்தம், ஆண்டுக்கு 3 சதவீத ஊதிய உயர்வையும், நகரின் குறைந்தபட்ச ஊதியத்தைவிட 1 டாலர் அதிகமான 18 டாலர் என்ற ஊதிய அடித்தளத்தையும் வழங்கியது.

மணிக்கு 18 டாலர் ஊதியம் என்பது, முழுநேர வேலைக்கு வரி பிடிப்புகளுக்கு முன் ஆண்டுக்கு 37,440 டாலராகும். ஸ்ட்ரீட்ஈஸி (StreetEasy) தரவுகளின்படி, நியூயோர்க் நகரில் வாடகைக்குக் கேட்கப்படும் தொகையின் இடைநிலை மதிப்பு மே மாதத்தில் மாதத்துக்கு 4,199 டாலர் என்ற சாதனை அளவை எட்டியது; அதாவது ஆண்டுக்கு 50,000 டாலருக்கும் அதிகம். 18 டாலர் என்ற அடித்தள ஊதியம் பெறும் ஒரு நகராட்சித் தொழிலாளர், சந்தையில் உள்ள ஒரு வழக்கமான குடியிருப்பை வாடகைக்கு எடுப்பதற்காக, தமது ஓராண்டு மொத்த ஊதியத்தைவிட அதிகமான தொகையைச் செலுத்த வேண்டியிருக்கும்.

இந்த நிலைமைகள் எங்கும் நிலவுகின்றன. தேர்தலையொட்டி நடத்தப்பட்ட வாக்குச்சாவடிக் கருத்துக்கணிப்புகளில், 90 சதவீத வாக்காளர்கள் வாழ்க்கைச் செலவை ஒரு முக்கியக் கவலையாகக் குறிப்பிட்டனர்; நிதி ரீதியாகத் திணறுவதாகத் தம்மை விவரித்துக்கொண்டவர்கள் ட்ரம்புக்கும் குடியரசுக் கட்சியினருக்கும் எதிராக 60 புள்ளிகள் அளவுக்குத் திரும்பினர். ஏறக்குறைய 70 சதவீதம் பேர், பொருளாதார அமைப்பு செல்வந்தர்களுக்குச் சாதகமாக உள்ளது என்று கூறினர்.

தொழிலாளர் புள்ளியியல் பணியகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட வேலைவாய்ப்பு அறிக்கை, சராசரி மணிநேர வருமானம் ஓராண்டில் 3.1 சதவீதம் உயர்ந்துள்ளதைக் காட்டியது; அதே வேளையில், போரால் உயர்த்தப்பட்ட பெட்ரோல் விலைகளால் உந்தப்பட்டு, செப்டம்பர் வரையிலான 12 மாதங்களில் நுகர்வோர் விலைகள் 3.7 சதவீதம் உயர்ந்தன. அதாவது, உண்மையான ஊதியங்கள் குறைந்து வருகின்றன. நியூயோர்க் பெருநகரப் பகுதியில் விலைகள் 4.5 சதவீதம் உயர்ந்தன; பெட்ரோல் மற்றும் உணவுப் பொருட்களின் விலைகளில் உழைக்கும் மக்கள் எதிர்கொள்ளும் பணவீக்கத்தை அதிகாரபூர்வ புள்ளிவிவரங்கள் குறைத்துக் காட்டுகின்றன.

பெருமளவிலான ஆட்குறைப்புகளும் வரவிருக்கின்றன. 2026ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட மொத்த வேலை வெட்டுக்களில் ஏறத்தாழ ஐந்தில் ஒரு பங்கான 121,401 வெட்டுக்களுக்கு நிறுவனங்கள் செயற்கை நுண்ணறிவை (AI) காரணமாகக் குறிப்பிட்டுள்ளன. இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஆலோசனை நிறுவனமான மெர்சர் (Mercer) நடத்திய ஆய்வொன்று, 99 சதவீத நிறுவன நிர்வாகிகள் இரண்டு ஆண்டுகளுக்குள் ஊழியர் எண்ணிக்கைக் குறைப்புகளை AI உந்தும் என்று எதிர்பார்ப்பதைக் காட்டியது.

அயோவா மாநிலத்தில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஒரு செனட்டரும் ஆளுநரும் தேர்ந்தெடுக்கப்பட்ட மறுநாளான நவம்பர் 4, புதன்கிழமை காலை, டீர் (Deere) நிறுவனம் 115 ஆண்டுகள் பழமையான தனது ஒட்டும்வா வொர்க்ஸ் (Ottumwa Works) ஆலையையும் கிளாரியனில் உள்ள தனது ஆலையையும் மூடுவதாக அறிவித்தது. டெட்ராய்ட்டில், டக்கோட்டா இன்டகிரேட்டட் சிஸ்டம்ஸ் (Dakkota Integrated Systems) நிறுவனம் தனது வாகன கருவிப் பலகை உற்பத்தி ஆலையை மூடி, 397 வேலைகளை நீக்குகிறது.

வரவிருக்கும் மாதங்களில், தொழிலாள வர்க்கத்தின் ஒவ்வொரு பிரிவிலும் இந்த மோதல்கள் உச்சக்கட்டத்தை எட்டும். நியூயோர்க்கில், மே மாதம் முதல் காலாவதியான ஒப்பந்தத்தின் கீழ் பணியாற்றிவரும் போக்குவரத்துத் தொழிலாளர் சங்கத்தின் (TWU) லோக்கல் 100 கிளையைச் சேர்ந்த 40,000 சுரங்கப்பாதை ரயில் மற்றும் பேருந்துத் தொழிலாளர்களுடன் DC 37 தொழிலாளர்களும் இணைகின்றனர்; அதே வேளையில், பெருநகரப் போக்குவரத்து ஆணையம் (MTA) 2 சதவீத ஊதிய உயர்வை வழங்க முன்வருவதோடு, சுகாதாரச் செலவுகளை இரட்டிப்பாக்கவும் கோருகிறது. பாஸ்டனில், பிரிகம் அண்ட் விமன்ஸ் மருத்துவமனையின் 4,000-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் நவம்பர் 12ஆம் தேதி தொடங்கவுள்ள காலவரையற்ற வேலைநிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

ஹார்வர்டில் பட்டதாரித் தொழிலாளர்கள் அக்டோபர் 27 முதல் வேலைநிறுத்தத்தில் உள்ளனர்; மசாசூசெட்ஸ் தொழில்நுட்பக் கழகத்திலும் (MIT) கலிபோர்னியா மாநிலப் பல்கலைக்கழகத்திலும் இந்த மாதம் வேலைநிறுத்தக் காலக்கெடுக்கள் நெருங்கி வருகின்றன. யு.எஸ். ஸ்டீல் (US Steel) மற்றும் கிளீவ்லாந்து-கிளிஃப்ஸ் (Cleveland-Cliffs) நிறுவனங்களில் பல பத்தாயிரம் உருக்குத் தொழிலாளர்கள் செப்டம்பர் 1 முதல் ஒப்பந்தமின்றிப் பணியாற்றி வருகின்றனர். நியூ ஹாம்ப்ஷயரில் 250 மளிகைக் களஞ்சியத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் உள்ளனர்; UPS நிறுவனம் 30,000 வரையிலான வேலைகளை நீக்கி வருகிறது.

ட்ரம்புக்கு எதிரான பெரும் எதிர்ப்புக்கு ஜனநாயகக் கட்சியினர் “இருகட்சி ஒத்துழைப்பு”, “பொதுத் தளம்” என்ற அழைப்புகளுடன் பதிலளித்துள்ளனர். இது, ஆளும் வர்க்கத்தின் ஒவ்வொரு பிரிவும் பகிர்ந்துகொள்ளும் வர்க்கப் போராட்டத்தின் வளர்ச்சி குறித்த அச்சத்தால், எல்லாவற்றுக்கும் மேலாக, உந்தப்படுகிறது. உயர்ந்த ஊதியங்களுக்காகவும், மலிவு விலையிலான சுகாதாரப் பாதுகாப்புக்காகவும், போரின் முடிவுக்காகவும், தன்னலக்குழு ஆட்சியின் முடிவுக்காகவும் பல பத்து மில்லியன் மக்கள் வாக்களித்தனர். ஆனால், ஜனநாயகக் கட்சியின் கட்டுப்பாட்டில் வரவிருக்கும் பிரதிநிதிகள் சபைக்கும் செனட்டுக்கும் வோல் ஸ்ட்ரீட்டால் செயல் உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளன: சந்தைகளைக் காப்பாற்றுங்கள், போருக்கு நிதியளியுங்கள்.

தேர்தலுக்கு முன்பு எத்தகைய பாவனைகளைக் காட்டியிருந்தாலும், ஜனநாயகக் கட்சியினர் தொழிலாள வர்க்கத்தின் மீது போர் தொடுக்க நிர்ப்பந்திக்கப்படுவர். 40 டிரில்லியன் டாலரை நெருங்கும் தேசியக் கடனுக்கான செலவை யார் ஏற்க வேண்டும்? இராணுவ வரவு-செலவுத் திட்டம் 1.5 டிரில்லியன் டாலராக எவ்வாறு உயர்த்தப்பட வேண்டும்? இந்த இரு கேள்விகளுக்கும் இரு கட்சிகளின் பதில் ஒன்றே; தொழிலாள வர்க்கத்துடன் ஒரு மோதல் ஏற்படுவது தவிர்க்க முடியாதது.

ஜனநாயகக் கட்சியினர் நிர்வகிக்கும் நகரங்களிலும் மாநிலங்களிலும், அக்கட்சியின் அமெரிக்க ஜனநாயக சோசலிஸ்டுகள் (DSA) குழு ஆளும் இடங்கள் உட்பட, இந்த மோதல் ஏற்கனவே உருவாகி வருகிறது.

கலிபோர்னியாவில், மாநிலத் தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற ஆளுநர் கவின் நியூசம் மறுத்தது, சேவைப் பணியாளர்களின் சர்வதேச சங்கத்தின் (SEIU) லோக்கல் 1000 கிளையின் வரலாற்றில் முதல் வேலைநிறுத்தத்தைத் தூண்டியது. அக்டோபர் 21ஆம் தேதி நடைபெற்ற அந்த வேலைநிறுத்தத்தில் 100,000 தொழிலாளர்கள் பங்கேற்றனர். DSA-வின் ஆதரவைப் பெற்றவரும், சிகாகோ ஆசிரியர் சங்கத்தின் முன்னாள் பணியாளருமான ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த பிராண்டன் ஜான்சன் நிர்வகிக்கும் சிகாகோவில், நகரமும் அதன் பள்ளி மாவட்டமும் 1.5 பில்லியன் டாலருக்கும் அதிகமான பற்றாக்குறைகளை எதிர்கொள்கின்றன. நகராட்சித் தேர்தல்கள் தொடங்கும் நிலையில், மிகப்பெரிய செலவு வெட்டுக்களுக்கும் “மறுசீரமைப்புக்கும்” திட்டங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

சியாட்டிலில், தன்னை ஜனநாயக சோசலிஸ்ட் என்று கூறிக்கொள்ளும், ஆனால் DSA உறுப்பினராக இல்லாத மேயர் கேட்டி வில்சன், போலீசுக்கான நிதியை 68 மில்லியன் டாலர் அதிகரிக்கும் அதேவேளையில், ஆண்டுக்கு ஏறக்குறைய 50 மில்லியன் டாலர் செலவு வெட்டுகளை முன்மொழிந்துள்ளார். தீயணைப்புத் துறையின் சில பிரிவுகளின் செயல்பாட்டை நிறுத்த வேண்டிய நிலையை உருவாக்கும் என்று தீயணைப்புத் தலைவர் எச்சரித்திருந்த அந்த வெட்டுகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்க, கடந்த மாதத் தொடக்கத்தில் நகர மன்றத்தின் வரவு-செலவுத் திட்ட விசாரணைக் கூட்டத்தில் தீயணைப்பு வீரர்கள் பெருமளவில் திரண்டனர்.

ட்ரம்புடன் அரசியல் கூட்டணியை உருவாக்குவதில் ஜனநாயகக் கட்சியினரை வழிநடத்திவரும் DSA உறுப்பினரான சோஹ்ரான் மம்தானியால் நியூயோர்க் நகரமே நிர்வகிக்கப்படுகிறது. அடுத்த ஆண்டில் 7 பில்லியன் முதல் 9 பில்லியன் டாலர் வரையிலான வரவு-செலவுத் திட்டப் பற்றாக்குறை ஏற்படும் என மதிப்பிடப்படும் நிலையில், அவர் நகரத் துறைகளின் செலவுகளில் இரண்டு கட்ட வெட்டுகளை உத்தரவிட்டுள்ளார். மேலும், பொது ஊழியர்கள் வேலைநிறுத்தம் செய்வதைத் தடைசெய்யும் மாநிலச் சட்டமான டெய்லர் சட்டத்தின் கீழ், உதவி ஆசிரியப் பணியாளர்களுக்கான 10,000 டாலர் போனஸ்களைத் தடுக்க வழக்குத் தொடுத்துள்ளார்.

வளர்ந்துவரும் இந்த மோதலில், வர்க்கப் போராட்டத்தை நசுக்க முயல்வதில் தொழிற்சங்க எந்திரம் தீர்க்கமான பங்கு வகிக்கிறது. மம்தானி தொழிற்சங்க எந்திரத்தையும் தனது நிர்வாகத்துக்குள் கொண்டுவந்துள்ளார். பைடன் நிர்வாகத்தில் தற்காலிக தொழிலாளர் செயலாளராக இருந்தபோது, நாடு தழுவிய ரயில் மற்றும் துறைமுக வேலைநிறுத்தங்களைத் தடுக்க உதவிய ஜூலி சு, அவரது “பொருளாதார நீதிக்கான துணை மேயராக” உள்ளார்; DC 37-இன் மூத்த அதிகாரியான ஜமிலா எட்வர்ட்ஸ், அவரது அரசுகளுக்கிடையிலான விவகாரங்களுக்கான அலுவலகத்தை நடத்துகிறார். நகரத் தொழிலாளர்களுக்கு எதிராக டெய்லர் சட்டம் பயன்படுத்தப்பட்டால், அதை அமல்படுத்தப் போவது DSA உறுப்பினர் ஒருவரே.

ஷான் ஃபேயினின் தலைமையிலான ஐக்கிய வாகனத் தொழிலாளர் சங்கத்தின் (UAW) அதிகாரத்துவம், ஆலைகளில் ஒவ்வொரு போராட்டத்தையும் நசுக்கிக்கொண்டே, ஜனநாயகக் கட்சியினரைத் தேர்ந்தெடுக்கச் செய்வதற்குத் தனது வளங்களைக் கொட்டியது; இதைப் பல தசாப்தங்களில் தனது “மிகப்பெரிய அரசியல் வேலைத்திட்டம்” என்று ஃபேயின் குறிப்பிட்டார். பிராட்ஃபோர்ட் வைட் (Bradford White) நிறுவனத்தில் 47 நாள் வேலைநிறுத்தத்தைத் தனிமைப்படுத்திய அது, நிறுவனத்தின் நிபந்தனைகள் அங்கீகரிக்கப்படும் வரை அவற்றை நான்கு முறை மீண்டும் வாக்கெடுப்புக்குக் கொண்டுவந்தது. டக்கோட்டா, டீர் ஆலை மூடல்களை எதிர்த்துப் போராட அது எதுவும் செய்யவில்லை.

டீம்ஸ்டர்ஸ் சங்கத்தின் தலைவர் ஷான் ஓ’பிரையன் (Sean O’Brien), புளோரிடா செனட்டர் ஆஷ்லி மூடி (Ashley Moody) உட்பட குடியரசுக் கட்சியினருக்காகப் பிரச்சாரம் செய்தார். ஐக்கிய உருக்குத் தொழிலாளர் சங்கம், ஆயிரக்கணக்கான உருக்குத் தொழிலாளர்களை தொடர்ச்சியாகப் புதுப்பிக்கப்பட்ட 48 மணிநேர இடைக்கால நீட்டிப்புகளின் கீழ் வேலையில் வைத்திருந்த பின்னர், பணவீக்க விகிதத்தைவிடச் சற்றே அதிகமான ஊதிய உயர்வுகளை உள்ளடக்கிய ஒரு தற்காலிக ஒப்பந்தத்தை கிளீவ்லாந்து-கிளிஃப்ஸ் நிறுவனத்துடன் எட்டியுள்ளதாக அறிவித்துள்ளது. ஜனநாயகக் கட்சியை ஆதரித்தாலும் சரி, குடியரசுக் கட்சியை ஆதரித்தாலும் சரி, இந்த எந்திரம் தொழிலாளர்களை நிறுவனங்களுடனும் அரசுடனும் பிணைத்து, தொழிலாளர் வர்க்கத்தின் எந்தவொரு சுயாதீன இயக்கத்தையும் தடுக்கிறது.

தொழிலாளர்களுக்குத் தமக்கே உரிய அமைப்புகள் தேவை: ஒவ்வொரு பணியிடத்திலும் தொழிலாளர்களால் ஜனநாயக முறையில் நிர்வகிக்கப்படும், அதிகாரத்துவத்திடமிருந்தும் இரு கட்சிகளிடமிருந்தும் சுயாதீனமான சாமானிய தொழிலாளர் குழுக்கள். சாமானிய தொழிலாளர் குழுக்களின் சர்வதேச தொழிலாளர் கூட்டணி (IWA‑RFC), இத்தகைய குழுக்களைக் கட்டியெழுப்புவதற்கும், அவற்றைப் பணியிடங்கள், தொழில்துறைகள் மற்றும் தேசிய எல்லைகளைக் கடந்து இணைப்பதற்குமான போராட்டத்திற்கு முன்னின்று வழிநடத்துகிறது.

இதே செயல்முறை சர்வதேச அளவிலும் விரிவடைந்து வருகிறது. பிரான்சில் பொதுத்துறைத் தொழிலாளர்கள் நவம்பர் 5 வியாழக்கிழமை நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். ஸ்பெயினில் நவம்பர் 11ஆம் தேதி பொது வேலைநிறுத்தமும், அயர்லாந்தில் நவம்பர் 12ஆம் தேதி பொதுத்துறை வேலைநிறுத்தமும், இத்தாலியில் நவம்பர் 20ஆம் தேதி பொது வேலைநிறுத்தமும் நடைபெறவுள்ளன; அதே வேளையில், எல்லா நாடுகளிலும் தொழிற்சங்கங்கள் போராட்டத்தை ஒருநாள் நடவடிக்கைகளுக்குள் அடக்கிவைக்கின்றன. ஒவ்வொரு நாட்டிலும் தொழிலாளர்கள் ஒரே நெருக்கடியையும், சிக்கன நடவடிக்கைகள் மூலம் போருக்கான செலவைத் தாம் ஏற்க வேண்டும் என்ற ஒரே கோரிக்கையையும் எதிர்கொள்கின்றனர்.

நிறுவனங்களும் நகர வரவு-செலவுத் திட்டங்களும் எதைத் தாங்கக்கூடியது என்று கூறுகின்றனவோ அதன் அடிப்படையில் அல்ல; மாறாக, தொழிலாளர்களுக்கு என்ன தேவையோ அதன் அடிப்படையிலேயே IWA-RFC தனது கோரிக்கைகளை முன்வைக்கிறது: பணவீக்கத்தை ஈடுசெய்து, விலைகளுடன் தானாகவே உயரும் ஊதிய உயர்வுகள்; உத்தரவாதமான சுகாதாரப் பாதுகாப்பு; பணிநீக்கங்களோ ஆலை மூடல்களோ கூடாது; புதிய தொழில்நுட்பம் யாருடைய உழைப்புக்குப் பதிலாகப் பயன்படுத்தப்படுகிறதோ அவர்களிடமே அதன் மீதான கட்டுப்பாடு இருக்க வேண்டும். நியூயோர்க்கில் இதன் பொருள், டெய்லர் சட்டத்தை மீறத் தயாராக இருக்கும் குழுக்கள் நகரின் ஒவ்வொரு துறையிலும் அமைக்கப்பட வேண்டும் என்பதாகும்.

இந்தப் போராட்டங்கள் அனைத்தும் அடிப்படையான அரசியல் கேள்விகளை எழுப்புகின்றன. சமத்துவத்தையும், சமூகத்தின் மீதான தன்னலக்குழுவின் ஆதிக்கத்துக்கு முடிவையும் முதலாளித்துவத்தின் கீழ் வென்றெடுக்க முடியாது. DSA பேசுவது உயர் நடுத்தர வர்க்கத்தின் சலுகை பெற்ற பிரிவுகளுக்காகவே; இவை தன்னலக்குழுவின் செல்வத்துக்கு முடிவுகட்ட முயலவில்லை. மாறாக, மக்கள்தொகையின் மேல்தட்டு 10 சதவீதத்தினருக்குள் அந்தச் செல்வம் தமக்கு அதிகம் சாதகமாக மறுவிநியோகம் செய்யப்படுவதையே நாடுகின்றன. உண்மையான சோசலிசம் என்பது, அதிகாரத்தை தொழிலாளர் வர்க்கத்திடம் மாற்றுவது, தன்னலக்குழுவின் முறைகேடாகக் குவிக்கப்பட்ட செல்வத்தைக் கைப்பற்றுவது, வங்கிகளையும் மாபெரும் நிறுவனங்களையும் தொழிலாளர் வர்க்கத்தின் ஜனநாயகக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருவது ஆகியவற்றைக் குறிக்கிறது.

தீர்க்கமான கேள்வி தலைமைதான். வாக்களிப்பில் வெளிப்பட்ட தீவிரமயமாதல் தன்னியல்பாகவே சோசலிசத்துக்கான நனவுபூர்வமான இயக்கமாக வளர்ந்துவிடாது. அதற்கு, இந்த முன்னோக்கை ஒவ்வொரு போராட்டத்துக்குள்ளும் எடுத்துச் செல்ல வேண்டும்: ஜனநாயகக் கட்சி, DSA, தொழிற்சங்க எந்திரம் ஆகியவற்றின் பாத்திரத்தை அம்பலப்படுத்த வேண்டும்; சாமானிய தொழிலாளர் குழுக்களைக் கட்டியெழுப்ப வேண்டும்; மிகவும் முன்னேறிய தொழிலாளர்களையும் இளைஞர்களையும் சோசலிசத்தின் பக்கம் வென்றெடுக்க வேண்டும். இதுவே சோசலிச சமத்துவக் கட்சியின் (SEP) பணியாகும்.

Loading