இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.
நவம்பர் 11 புதன்கிழமை அன்று, ஸ்பெயினில் மில்லியன் கணக்கான தொழிலாளர்கள், வானளாவ உயர்ந்துவரும் வீட்டுவசதிச் செலவுகள், வீழ்ச்சியடைந்துவரும் வாழ்க்கைத் தரங்கள், சமூக நெருக்கடி ஆகியவற்றுக்கு எதிராக 24 மணி நேர நாடு தழுவிய வேலைநிறுத்தத்தை நடத்துகின்றனர். வீட்டுவசதிக்கான வெகுஜனப் போராட்டங்களில் பங்கேற்றவர்களால் தொடக்கத்தில் அழைப்பு விடுக்கப்பட்ட இந்த வேலைநிறுத்தம், பின்னர் ஸ்பெயினின் இரண்டு பிரதான தொழிற்சங்கக் கூட்டமைப்புகளான தொழிலாளர் ஆணையங்கள் (CCOO), தொழிலாளர்களின் பொதுச் சங்கம் (UGT) ஆகியவற்றால் ஆதரிக்கப்பட்டது.
தொழிலாளர் போராட்டங்களும் இளைஞர்களின் வெகுஜனப் போராட்டங்களும் அடங்கிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஓர் அலை ஐரோப்பா முழுவதும் வீசிவரும் நிலையில் இந்த வேலைநிறுத்தம் நடைபெறுகிறது. பிரான்சில், பல வாரங்களாக நடைபெற்ற இளைஞர்களின் வெகுஜனப் போராட்டங்களைத் தொடர்ந்து, கடந்த வாரம் நடைபெற்ற நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் 193 நகரங்களில் 1.6 மில்லியன் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்; நவம்பர் 17 அன்று மற்றொரு வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஜேர்மனியில், 120,000க்கும் மேற்பட்ட இளைஞர்கள், கல்வி வெட்டுக்களுக்கும் இராணுவச் சேவை மீண்டும் அறிமுகப்படுத்தப்படுவதற்கும் எதிராக 30 நகரங்களில் அணிவகுத்தனர். இத்தாலி, பெல்ஜியம், கிரீஸ், போர்த்துக்கல், செர்பியா ஆகிய நாடுகளில் இளைஞர்களின் வெகுஜனப் போராட்டங்களும் வேலைநிறுத்தங்களும் வெடித்துள்ளன; இத்தாலியிலும் (நவம்பர் 20) கிரீஸிலும் (நவம்பர் 25) நாடு தழுவிய வேலைநிறுத்தங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஸ்பெயினில், ஒரு வெகுஜன வேலைநிறுத்த அலை நடைபெற்று வருகிறது. முர்சியாவில் (Murcia) ஏறத்தாழ 35,000 உலோகத் தொழிலாளர்கள், சோசலிஸ்ட் கட்சி (PSOE)-சுமார் (Sumar) அரசாங்கத்தின் போலீஸ் ஒடுக்குமுறையையும் மீறி, காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். மாட்ரிட்டிலும் காஸ்டில்லா இ லியோனிலும் (Castilla y León) ஏறத்தாழ 100,000 அரசுப் பள்ளி ஆசிரியர்கள் வேலைநிறுத்தம் செய்து வருகின்றனர். 69 பேர் கொல்லப்பட்ட அக்டோபர் 28 ஊர்டா (Urda) ரயில் பேரழிவைத் தொடர்ந்து, ரயில்வே தொழிலாளர்கள் நாடு தழுவிய பணிநிறுத்தங்களை நடத்தினர். பல பிராந்தியங்களில் மருத்துவர்கள், பொது சுகாதார அமைப்பில் மோசமடைந்து வரும் நிலைமைகளை முன்னிட்டு வேலைநிறுத்தம் செய்து வருகின்றனர்; ஏறத்தாழ 126,000 இறைச்சிப் பதப்படுத்தும் தொழிலாளர்கள் இந்த வாரம் முழுவதும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஐரோப்பா முழுவதும் உள்ள தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் தீர்க்கமான பிரச்சினை, இந்த இயக்கத்தை ஒரு புரட்சிகர முன்னோக்கின் அடிப்படையில் சுயாதீனமாக ஒழுங்கமைப்பதும் சர்வதேச அளவில் ஒன்றிணைப்பதுமே ஆகும். தொழிலாளர்களும் இளைஞர்களும், தொழிற்சங்க அதிகாரத்துவங்களிடமிருந்து சுயாதீனமாகப் போராட்டத்தை ஒழுங்கமைப்பதற்கும், முதலாளித்துவக் கட்சிகளை எதிர்ப்பதற்கும், ஐரோப்பா முழுவதும் உள்ள தமது வர்க்கச் சகோதர சகோதரிகளுடன் ஒன்றுபடுவதற்கும், ஓர் ஐரோப்பியப் பொது வேலைநிறுத்தத்தைத் தயார்படுத்துவதற்கும் சாமானிய தொழிலாளர்களின் நடவடிக்கைக் குழுக்களைக் கட்டியெழுப்ப வேண்டும். இத்தகைய வேலைநிறுத்தம், ஐரோப்பாவை ஆளப்போவது யார் என்ற கேள்வியை நேரடியாக முன்வைக்கும்: முதலாளித்துவத் தன்னலக்குழுவா, அல்லது தொழிலாள வர்க்கமா?
PSOE-சுமார் அரசாங்கத்தின் வீட்டுவசதிக் கொள்கைகளுக்கு எதிராகவும், குறிப்பாக, 87 வயதான மரிகார்மென் அபாஸ்கல் (Maricarmen Abascal) செப்டம்பர் 23 அன்று கொடூரமாக வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டு, அதன் விளைவாக உயிரிழந்ததற்கு எதிராகவும் நடைபெற்ற வெகுஜனப் போராட்டங்களிலிருந்தே நவம்பர் 11 வேலைநிறுத்தம் உருவானது. 2019ஆம் ஆண்டில் சோசலிஸ்ட் கட்சி முதன்முதலில் பொடெமோஸுடன் (Podemos) அரசாங்கக் கூட்டணியை அமைத்ததிலிருந்து, வாடகைகள் ஏறத்தாழ 45 சதவீதமும் வீட்டு விலைகள் 86 சதவீதமும் உயர்ந்துள்ளன. அக்டோபர் தொடக்கத்தில், மில்லியன் கணக்கான மக்கள் நாடு முழுவதும் நகரச் சதுக்கங்களை ஆக்கிரமித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர்; பொது வேலைநிறுத்தத்திற்கான அழைப்புகள் பெருமளவில் பரவின.
பிரதமர் பெட்ரோ சான்சேஸ், தனது சொந்த சோசலிஸ்ட் கட்சி-சுமார் அரசாங்கத்தைக் கலைத்து, நவம்பர் 29 அன்று முன்கூட்டிய தேர்தல்களை அறிவித்ததன் மூலம் இதற்குப் பதிலளித்தார். தற்போதைய ஆளும் கட்சிகளை ஆதரிப்பது அல்லது வலதுசாரி மக்கள் கட்சிக்கும் (PP) பாசிச வோக்ஸ் (Vox) கட்சிக்கும் இடையிலான கூட்டணி ஆட்சிக்கு வருவதை ஏற்றுக்கொள்வது என்ற விஷம் தோய்ந்த ஒரு தேர்வை முன்வைத்ததன் மூலம், அவர் தொழிலாளர்களின் தலையில் துப்பாக்கியை வைத்து மிரட்டுவது போலவே நடந்துகொண்டார். அதன் பின்னர், சுமாருடன் பிணைந்துள்ள ஸ்ராலினிச CCOO அதிகாரத்துவமும், சோசலிஸ்ட் கட்சியுடன் பிணைந்துள்ள சமூக ஜனநாயக UGT அதிகாரத்துவமும், நாடு தழுவிய வேலைநிறுத்த நடவடிக்கைக்கு அழைப்பு விடுப்பதற்குத் தாம் முன்னர் தெரிவித்து வந்த மறுப்பைக் கைவிட்டன.
நவம்பர் 11 வேலைநிறுத்தம் அரசாங்கத்தை ஆதரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று ஆளும் கட்சிகளும் தொழிற்சங்க அதிகாரத்துவங்களும் ஆரவாரமாகப் பிரகடனம் செய்கின்றன. கடந்த வெள்ளிக்கிழமை சான்சேஸ் பின்வருமாறு அறிவித்தார்: “இந்த வேலைநிறுத்தம் யாருக்கும் எதிரானது அல்ல; இது ஒரு நோக்கத்திற்கான வேலைநிறுத்தம், ஒரு பெண்ணின் பெயரால், தனது வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்ட பின்னர் உயிரிழந்த எண்பது வயதுப் பெண்மணியின் பெயரால் நடத்தப்படும் வேலைநிறுத்தம் …”
அதேபோல், UGT பொதுச் செயலாளர் பெப்பே ஆல்வாரெஸ் இவ்வாறு கூறினார்: “குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்திய ஓர் அரசாங்கத்திற்கு எதிராகவா நாங்கள் வேலைநிறுத்தம் செய்யப் போகிறோம்? அவர்கள் என்ன எழவைத்தான் நினைக்கிறார்கள்? நாங்கள் முட்டாள்கள் என்றா நினைக்கிறார்கள்?” சுமார் தலைமையிலான, ஆனால் பல பிராந்தியங்களில் பொடெமோஸையும் உள்ளடக்கிய பரந்த முன்னணியின் தலைவர்களில் ஒருவரான எமிலியோ டெல்காடோ, “இது அரசாங்கத்திற்கு எதிரான வேலைநிறுத்தம் அல்ல; இது அதிகார சக்திகளுக்கு எதிரான வேலைநிறுத்தம்” என்று அறிவித்தார்.
இது ஒரு மோசடியான பிரச்சாரம். ஸ்பெயினில் வீட்டுவசதிக்கான போராட்டங்களில் ஈடுபட்டவர்கள் களமிறங்கியதன் நோக்கம், சான்சேஸின் கொள்கைகளை எதிர்ப்பதே ஆகும்; மரிகார்மெனின் மரணத்திற்கு வழிவகுத்த வெளியேற்றத்தை நடத்தியது அவரது போலிஸ்தான். ஸ்பெயினில் சோசலிஸ்ட் கட்சி-பொடெமோஸ் (2019-2023), சோசலிஸ்ட் கட்சி-சுமார் (2023-2026) அரசாங்கங்கள் நடைமுறைப்படுத்திய கொள்கைகளை எதிர்ப்பதால்தான், ஐரோப்பா முழுவதும் மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் ஆட்சியிலுள்ள அதிகார சக்திகளுக்கு எதிராக வேலைநிறுத்தம் செய்து வருகின்றனர்.
இராணுவ வரவு-செலவுத் திட்டத்தை இரட்டிப்பாக்கிய இந்த அரசாங்கங்கள், காஸா இனப்படுகொலையின்போது இஸ்ரேலுக்கும், ரஷ்யாவுக்கு எதிரான நேட்டோ போரில் உக்ரேனின் அசோவ் பட்டாலியன் போன்ற தீவிர வலதுசாரி சக்திகளுக்கும் ஆயுதம் வழங்குவதற்கு உதவின. மெலில்லாவிலும், பின்னர் சியூட்டாவிலும், புலம்பெயர்ந்தோருக்கு எதிராக நடத்தப்பட்ட போலிஸ் படுகொலைகளுக்கு இதே அரசாங்கங்கள் பொறுப்பாக இருந்தன. தொழிலாளர்கள் அதிகரித்துவரும் இன்னல்களை எதிர்கொண்ட அதேவேளையில், பல பத்து பில்லியன் யூரோ மதிப்பிலான ஐரோப்பிய ஒன்றியப் பிணையெடுப்பு நிதிகளை ஸ்பானியப் பெருநிறுவனங்களிடம் அவை ஒப்படைத்தன. இந்த அரசாங்கங்களின் கொள்கைகளுக்கு எதிரான சமூக ஆத்திரத்தை மக்கள் மயக்க அரசியல் மூலம் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட வோக்ஸ் கட்சியை இயல்பாக்குவதற்கான பாதையை இது முதலாளித்துவ வர்க்கத்திற்குத் திறந்துவிட்டது.
தொழிலாளர்கள், PP-க்கும் வோக்ஸுக்கும் எதிரான விட்டுக்கொடுப்பற்ற எதிர்ப்பைப் பேணும் அதேவேளையில், சான்சேஸ் அரசாங்கத்தை மீண்டும் தேர்ந்தெடுப்பது என்ற திவாலான தேசிய முன்னோக்கின் பின்னால் இயக்கத்தைத் திசைதிருப்புவதற்கான முயற்சிகளை எதிர்க்க வேண்டும். CCOO மற்றும் UGT அதிகாரத்துவங்கள் போன்ற அரசாங்க ஆதரவு சக்திகளிடம் போராட்டத்தை ஒப்படைக்க முடியாது. ஐரோப்பா முழுவதும் உள்ள நாடுகளைப் போலவே, ஸ்பானிய அரசும் ஸ்பெயினின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 100 சதவீதம் அளவுக்கு முதலாளித்துவத் தன்னலக்குழுவிடம் கடன்பட்டிருப்பதால், தனது கொள்கைகளிலிருந்து பின்வாங்கி உழைக்கும் மக்களுக்குச் சமூகச் சலுகைகளை வழங்குவதற்கான நிதி ரீதியான வாய்ப்பு அதற்கு இல்லை.
ஸ்பெயினிலும் சர்வதேச அளவிலும் உழைக்கும் மக்கள் எதிர்கொள்ளும் எரியும் பிரச்சினைகள், முதலாளித்துவ அரசு எந்திரத்தின் உச்ச மட்டத்தில் மேற்கொள்ளப்படும் சூழ்ச்சிகளால் தீர்க்கப்படாது; மாறாக, வர்க்கப் போராட்டத்தைச் சாத்தியமான முழு வீச்சில் அணிதிரட்டுவதன் மூலம் மட்டுமே அவை தீர்க்கப்படும்.
நவம்பர் 11 வேலைநிறுத்தம் ஒரு தொடக்கப் புள்ளியாகும். பல வாரங்களாகத் தனித்தனியாகப் போராடி வந்துள்ள தொழிலாளர் பிரிவுகளை அது ஒரே நாளில் ஒன்றிணைக்கிறது. ஐரோப்பா முழுவதும் தொழிற்சங்க அதிகாரத்துவங்கள், ஸ்பெயின், பிரான்ஸ், இத்தாலி, கிரீஸ் ஆகிய நாடுகளில் தேசிய வேலைநிறுத்தங்களை, ஒவ்வொன்றையும் மற்றவற்றிலிருந்து பிரித்து வைத்து, ஒரு வாரம் அல்லது அதற்கும் மேற்பட்ட இடைவெளிகளில் திட்டமிட்டுள்ளன.
இந்தப் பிளவுபடுத்தலுக்கு எதிராக, உலக சோசலிச வலைத் தளமும், சாமானிய தொழிலாளர் குழுக்களின் சர்வதேச தொழிலாளர் கூட்டணியும் (IWA-RFC), போருக்கும் முதலாளித்துவத் தன்னலக்குழுவுக்கும் எதிரான ஒருங்கிணைந்த ஐரோப்பியப் போராட்டத்திற்கான வேலைத்திட்டத்தை முன்வைக்கின்றன. 2021ஆம் ஆண்டில் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் (ICFI) முன்முயற்சியில் நிறுவப்பட்ட IWA-RFC, வெவ்வேறு பணியிடங்கள், தொழில்துறைகள் மற்றும் நாடுகளில் உள்ள குழுக்கள் தகவல்களைப் பகிர்ந்துகொள்வதற்கும், நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதற்கும், ஒவ்வொரு போராட்டத்தின் மீதும் தொழிற்சங்க எந்திரங்கள் திணிக்கும் தனிமைப்படுத்தலை உடைப்பதற்கும் உதவும் கட்டமைப்பை வழங்குகிறது.
ஸ்பெயினில், இதன் பொருள் CCOO, UGT எந்திரங்களிடமிருந்து சுயாதீனமாக ஒழுங்கமைவதாகும்; இந்த எந்திரங்கள், சான்சேஸ் நாடாளுமன்றத்தைக் கலைத்த பின்னரே நவம்பர் 11 வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தன; அதுவும், இந்த வேலைநிறுத்தம் வெளிப்படுத்தும் ஆத்திரத்தை அவரது மறுதேர்வுக்கு ஆதரவாகத் திருப்பிவிடுவதற்காக மட்டுமே அவ்வாறு செய்தன.
1991ஆம் ஆண்டில் ஸ்ராலினிசம் சோவியத் ஒன்றியத்தைக் கலைத்ததிலிருந்து ஐரோப்பிய சமூகம் பயணித்து வந்துள்ள முழுப் போக்கையும் தலைகீழாக மாற்றுவதற்கான போராட்டத்தில் தொழிலாள வர்க்கம் நுழைந்திருப்பது, ஸ்ராலினிசம், முதலாளித்துவம் ஆகிய இரண்டுக்கும் எதிரான ட்ரொட்ஸ்கிச எதிர்ப்பின் தீர்க்கமான முக்கியத்துவத்தை முன்னுக்குக் கொண்டுவருகிறது. சோசலிஸ்ட் கட்சி-பொடெமோஸ், சோசலிஸ்ட் கட்சி-சுமார் அரசாங்கங்களின் ஆட்சிக்காலச் செயல்பாடுகளும், அவற்றுக்கு எதிராக வெடித்துள்ள வெகுஜன எதிர்ப்பும் இதனை மிகக் கூர்மையாக எடுத்துக்காட்டுகின்றன.
ட்ரொட்ஸ்கிச இயக்கத்தில் தீர்க்கமான போராட்டமாக அமைந்தது 1953ஆம் ஆண்டுப் பிளவு ஆகும். அந்தப் பிளவின்போது, ஸ்ராலினிசத்தையும் முதலாளித்துவ தேசியவாதத்தையும் தொழிலாள வர்க்கத்தின் முறையான தலைமையாக முன்னிறுத்திய மிஷேல் பப்லோ மற்றும் ஏர்னஸ்ட் மண்டேல் தலைமையிலான கன்னையை எதிர்த்து ICFI நிறுவப்பட்டது. 70 ஆண்டுகளுக்கும் மேலாகிய பின்னர், அந்தப் பிளவின் முக்கியத்துவம் ஸ்பெயினில் நேரடியாக வெளிப்படுகிறது; அங்கு பப்லோவாத, ஸ்ராலினிச சக்திகள் ஒன்றிணைந்து முதலாளித்துவ ஆதரவுப் பொடெமோஸ் கட்சியைக் கட்டியெழுப்பின; அதிலிருந்தே பின்னர் சுமார் உருவானது.
1917 அக்டோபர் புரட்சியால் திறந்துவைக்கப்பட்ட சோசலிசப் புரட்சியின் சகாப்தம் முடிவுக்கு வந்துவிடவில்லை என்று ICFI வலியுறுத்துகிறது. முதலாளித்துவ அரசாங்கங்களுக்கும் தொழிற்சங்க அதிகாரத்துவங்களுக்கும் அழுத்தம் கொடுத்துத் தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றச் செய்ய முடியும் என்று கூறும் அனைவருக்கும் எதிராக, அரசியல் அதிகாரத்தை தொழிலாளர் வர்க்கத்தின் கைகளில் கொண்டுவந்து சோசலிசத்தைக் கட்டியெழுப்புவதற்கான ஒரு அரசியல் இயக்கத்தை தொழிலாளர் வர்க்கத்திற்குள் கட்டியெழுப்ப அது போராடுகிறது.
ICFI-இன் ஐரோப்பியப் பிரிவுகள், நவம்பர் 11 வேலைநிறுத்தத்திலும் ஐரோப்பா முழுவதும் பரவிவரும் போராட்டங்களிலும் இந்த வேலைத்திட்டத்தை முன்வைக்கின்றன: சுயாதீனமான சாமானிய தொழிலாளர் குழுக்களைக் கட்டியெழுப்புதல்; போருக்கும் முதலாளித்துவத் தன்னலக்குழுவுக்கும் எதிரான ஓர் ஐரோப்பியப் பொது வேலைநிறுத்தத்திற்கான தயாரிப்புகளை மேற்கொள்ளுதல்; ஐரோப்பிய ஒன்றியத்திற்குப் பதிலாக ஐரோப்பிய ஐக்கிய சோசலிச அரசுகளை நிறுவுதல். இந்தப் போராட்டத்திற்குத் தலைமை தாங்குவதற்காக, ஸ்பெயினிலும் ஐரோப்பா கண்டம் முழுவதிலும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பிரிவுகளைக் கட்டியெழுப்ப அவை போராடி வருகின்றன.
