இலங்கை: நோர்வூட் ஃபெஷன் நிறுவனத்தில் இரண்டாயிரத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் தொழிலை இழக்கும் அபாயத்தில் உள்ளனர்

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

வரையறுக்கப்பட்ட நோர்வூட் ஃபெஷன் (தனியார்) நிறுவனத்தை கலைப்பதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்தின் காரணமாக, இரண்டாயிரத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் வேலை இழக்கும் அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளனர். நிறுவனத்தைக் கலைப்பதற்கு இந்த ஆண்டின் தொடக்கத்தில் கொழும்பு வணிக உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை, நிறுவன நிர்வாகம் அக்டோபர் மாத தொடக்கம் வரையில் தொழிலாளர்களிடமிருந்து மறைத்து வைத்திருந்தது. தொழிலாளர்கள் தமது வேலைகளைப் பாதுகாப்பதற்கான போராட்டத்தில் இறங்குவதைத் தடுப்பதே தொழிற்சாலை உரிமையாளர்களின் இழிவான நோக்கமாக இருந்துள்ளது.

ஆடைத் தொழிற்சாலை மூடப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொழிலாளர்கள் போராடிய போது

தமது வேலைகளைப் பாதுகாப்பதற்கான போராட்டத்தில் இறங்குமாறு சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) நோர்வூட் ஃபெஷன் தொழிலாளர்களுக்கு அழைப்பு விடுக்கிறது. அத்துடன் அவர்களது போராட்டத்தைப் பாதுகாப்பதற்காக, வர்க்க நடவடிக்கைகள் மூலம் செயல்பூர்வமாக ஆதரவளிக்குமாறு அனைத்து தொழிலாளர்களிடமும் சோ.ச.க. கேட்டுக்கொள்கிறது.

2014 இல் நிறுவப்பட்ட இந்த நிறுவனம், பூரணப்படுத்தப்பட்ட ஆடை உற்பத்தி நிறுவனமாகும். அதன் உற்பத்திப் பொருட்கள் பிரதானமாக அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. நிறுவனத்தின் இரண்டு ஆடைத் தொழிற்சாலைகள் ஹட்டன், பொல்கஹவெல ஆகிய இடங்களில் அமைந்துள்ளன. இந்த இரண்டு ஆடைத் தொழிற்சாலைகளிலும் அலுவலகங்களிலும் மொத்தம் இரண்டாயிரத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் பணியாற்றுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நோர்வூட்டில் அமைந்துள்ள ஆடைத் தொழிற்சாலை அக்டோபர் 2 முதல் மூடப்பட்டுள்ளது. இதன் காரணமாக 200க்கும் அதிகமான தொழிலாளர்களின் தொழில்கள் பறிக்கப்பட்டுள்ளன.

தொழிலாளர்களுக்கு ஏப்ரல் மாதத்தில் கொடுக்கப்பட வேண்டிய வருடாந்த போனஸ், ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களுக்கான சம்பளமும் மேலதிக நேர வேலைக்கான கொடுப்பனவுகளும் வழங்கப்படவில்லை. ஊழியர் சேமலாப நிதி (EPF) மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியும் (ETF) தொழிலாளர்களின் சம்பளத்திலிருந்து கழிக்கப்பட்டிருந்த போதிலும், சுமார் இரண்டரை ஆண்டுகளுக்கான தொகைகள் மத்திய வங்கியின் உரிய கணக்குகளில் வைப்புச் செய்யப்படவில்லை என்றும் தொழிலாளர்கள் உலக சோசலிச வலைத் தளத்திடம் (WSWS) தெரிவித்தனர்.

தொழிற்சாலையை மீண்டும் திறந்து மீண்டும் வேலை வழங்க வேண்டும், நிலுவையிலுள்ள சம்பளங்களைச் செலுத்துவதோடு ஓய்வூதிய நிதிக் கணக்குகளில் பணத்தை வைப்புச்செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து, அக்டோபர் 21 அன்று தொழிலாளர்கள் அனைவரும் தொழிற்சாலைக்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தொழிற்சாலையை மூடுவதற்கான காரணமாக, ஆணைகள் குறைந்துவிட்டதாக நிர்வாகத்தினர் தொழிலாளர்களிடம் கூறியுள்ளனர். எனினும், நிறுவனத்தின் நிர்வாகி ஜெரால்ட் பெரேராவின் கையொப்பத்துடன் 2026 பெப்ரவரி 13 திகதியிட்டு வெளியிடப்பட்ட கடிதத்தில், கடன்களைத் திருப்பிச் செலுத்தத் தவறியதன் காரணமாக, கொமர்ஷல் வங்கி நோர்வூட் நிறுவனத்தைக் கலைப்பதற்காக மேல் மாகாண வணிக மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி, நீதிமன்றம் நிறுவனத்துக்கு ஒரு கலைப்பாளரை (liquidator) நியமித்துள்ளதுடன், நிறுவனத்தின் நிர்வாக நடவடிக்கைகள் தொடர்பான சட்டபூர்வ அதிகாரத்தையும் அந்தக் கலைப்பாளரிடம் ஒப்படைத்துள்ளது.

நிறுவனத்தை கலைப்பதற்கான சட்ட நடவடிக்கைகள் நிறைவடையும் வரையில், அதன் தொழிற்சாலைகளும் அலுவலகங்களும் தற்காலிகமாக மூடப்பட்டிருக்கும் என்றும், உற்பத்தி நடவடிக்கைகள் இடைநிறுத்தப்படும் என்றும் நிர்வாகப் பணிப்பாளரின் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தக் காலப்பகுதியில் தொழிற்சாலைகளுக்கோ அலுவலக வளாகங்களுக்கோ வேலைக்கு வருவதைத் தவிர்க்குமாறும் தொழிலாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மாதாந்த சம்பளங்கள், ஊழியர் சேமலாப நிதி, ஊழியர் நம்பிக்கை நிதி மற்றும் ஏனைய சட்டரீதியான கொடுப்பனவுகள், நீதிமன்ற உத்தரவின்படி நிறுவனத்தின் சொத்துக்கள் கலைக்கப்பட்ட பின்னர், கலைப்பாளரின் மேற்பார்வையின் கீழ் மேற்கொள்ளப்படும் என்றும் அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கடிதம் பெப்ரவரி 13 திகதியிடப்பட்டிருந்த போதிலும், அது அக்டோபர் 30 அன்றுதான் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டது என்றும், நோர்வூட் தொழிற்சாலை அக்டோபர் 2 அன்று மூடப்பட்டது என்றும் அங்குள்ள தொழிலாளர்கள் உலக சோசலிச வலைத் தளத்திடம் தெரிவித்தனர். நிறுவனத்தை மூடுவதற்கான அபாயம் குறித்து பெப்ரவரி மாதத்திலேயே தொழிலாளர்களுக்கு வேண்டுமென்றே அறிவிக்காமல் இருந்ததன் நோக்கம், அவர்கள் தமது வேலை உரிமைகளைப் பாதுகாப்பதற்கான போராட்டத்தில் உடனடியாக இறங்குவதைத் தடுப்பதாகும் என்பது தெளிவாகிறது.

எனினும், கடந்த சில மாதங்களாக தொழிலாளர்களுக்குத் தெரியாமல் அவர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வந்துள்ளன. அரசாங்கத்தின் தொழில் திணைக்களமும் இதற்குத் துணைபோயுள்ளது. அக்டோபர் 2 அன்று தொழிற்சாலை மூடப்பட்ட பின்னர், தொழிலாளர்கள் இது தொடர்பாக ஹட்டன் தொழில் திணைக்களத்தில் முறைப்பாடு செய்தனர். அதனைத் தொடர்ந்து, அங்குள்ள உதவி தொழில் ஆணையாளருடன் நான்கு தடவைகள் கலந்துரையாடிய போதிலும், ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் 'பிரச்சினையைத் தீர்த்துத் தருவதாக' மட்டுமே ஆணையாளர் கூறியதாகத் தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

இந்தத் தொழிற்சாலை இதற்கு முன்னர் 2023 நவம்பர் 22 அன்று மூடப்பட்டு, 2024 மே 10 அன்று மீண்டும் திறக்கப்பட்டதாகவும், அன்றிலிருந்தே ஊழியர் சேமலாப நிதி மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியையும் கணக்குகளில் வைப்புச் செய்வது புறக்கணிக்கப்பட்டு வந்ததாகவும் தொழிலாளர்கள் தெரிவித்தனர். நோர்வூட் தொழிற்சாலையில் முன்னர் சுமார் 300 தொழிலாளர்கள் வேலை செய்துள்ளனர். ஆனால், சகித்துக்கொள்ள முடியாத வேலை நிலைமைகள் காரணமாக அவர்களில் சுமார் 100 பேர் வேலையை விட்டு வெளியேறியுள்ளனர்.

இந்த நிலைமைகளின் கீழ், தமது வேலைகள் மற்றும் நிலுவையிலுள்ள சம்பளம் தொடர்பான பிரச்சினைகளுக்குத் தீர்வு காணத் தலையிடுமாறு கோரி, கண்டி மாவட்ட தொழில் திணைக்களம், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் பெருந்தோட்டத் தொழிற்சங்கங்களிடமும் கையளிப்பதற்கான கடிதமொன்றில் கையொப்பமிடுவதற்காக, வேலை இழந்த தொழிலாளர்கள் நவம்பர் 1 அன்று தொழிற்சாலைக்கு அருகில் வந்தனர். தொழிலாளர்கள் தொழிற்சாலைக்குள் நுழைவதையும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதையும் தடுப்பதற்காக நிர்வாகத்தினர் பொலிஸாரை அழைத்திருந்தனர்.

உலக சோசலிச வலைத் தள செய்தியாளர்கள் தொழிலாளர்களுடன் கலந்துரையாடுவதைத் தடுப்பதற்கும் பொலிஸார் முயற்சித்த போதிலும், தகவல்களைப் பெற்றுக்கொள்வதும் தொழிலாளர்களுடன் கலந்துரையாடுவதும் அடிப்படை உரிமை என்பதை எமது செய்தியாளர்கள் வலியுறுத்திய பின்னர், அதற்கு பொலிஸார் அனுமதிக்க வேண்டியிருந்தது.

அதன் பின்னர், உலக சோசலிச வலைத் தளத்தின் செய்தியாளரும் சோசலிச சமத்துவக் கட்சியின் (சோ.ச.க.) மத்திய குழு உறுப்பினருமான எம். தேவராஜா தொழிலாளர்கள் முன் உரையாற்றினார்:

“உங்களுடைய பிரச்சினையைத் தீர்ப்பதில் உதவி தொழில் ஆணையாளர் அக்கறை காட்டவில்லை என்றால், தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் உங்களுடைய பிரச்சினையைத் தீர்ப்பதில் எந்தவிதமான அக்கறையும் காட்டவில்லை என்பதே இதன் மூலம் தெளிவாகிறது. மாறாக, உங்கள் போராட்டத்தை நிறுத்துவதற்காகவே அவர்கள் தொழிற்சாலைக்கு பொலிஸாரை அழைத்துள்ளனர். இந்த அரசாங்கம் ஆடைத் தொழிற்சாலைகள் மூடப்படுவதற்கு ஆதரவளிப்பது மட்டுமல்லாமல், 34 அரச நிறுவனங்களையும் மூடுவதற்குத் தீர்மானித்துள்ளது.

“இந்தத் தாக்குதல்களைத் தோற்கடிப்பதற்கு தொழிலாள வர்க்கத்தின் அனைத்துப் பிரிவினரும் ஒன்றிணைய வேண்டும். உங்களுடைய கோரிக்கைகள் சம்பளப் பிரச்சினைக்கு மட்டும் மட்டுப்படுத்தப்படக் கூடாது. தொழிற்சாலையை மீண்டும் திறப்பதற்காக நீங்கள் போராட வேண்டும். அதற்காக ஏனைய ஆடைத் தொழிற்சாலைகள், பெருந்தோட்ட நிறுவனங்கள் மற்றும் ஏனைய அனைத்துத் துறைகளிலும் உள்ள தொழிலாளர்களின் ஆதரவைப் பெற்றுக்கொள்ள வேண்டும்” என தேவராஜா குறிப்பிட்டார்.

நோர்வூட்டில் நடத்தப்படும் தாக்குதல்கள், முதலாளித்துவ நெருக்கடியின் சுமை தொழிலாளர்கள் மீது சுமத்தப்படுவதை வெளிப்படுத்துகின்றன என்றும், முதலாளித்துவ அமைப்புமுறைக்குள் அவர்களால் தீர்வுகளைப் பெற்றுக்கொள்ள முடியாது என்றும் தேவராஜா குறிப்பிட்டார். சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன நடவடிக்கைகளை ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கத்தின் மீதும் திணிப்பதன் மூலம், மக்கள் விடுதலை முன்னணி/தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், உலகளாவிய நெருக்கடியால் தீவிரமடையும் பொருளாதார நெருக்கடியின் சுமையைத் தொழிலாளர்கள் மீது சுமத்தி வருகிறது.

இதற்கு எதிரான போராட்டத்தை ஒழுங்கமைப்பதற்காக, தொழிலாளர்களின் வாக்குகளால் தேர்ந்தெடுக்கப்படும் ஒரு நடவடிக்கைக் குழுவை அமைப்பதற்கு நோர்வூட் ஃபெஷன் தொழிலாளர்கள் முன்வர வேண்டும் என்றும் தேவராஜா குறிப்பிட்டார். அவரது அழைப்புக்கு ஆதரவு தெரிவித்து, பல பெண் தொழிலாளர்கள் நடவடிக்கைக் குழுவொன்றை அமைப்பதற்கு இணக்கம் தெரிவித்தனர்.

இந்தத் தொழிலாளர்களில் பெரும்பான்மையானவர்கள் பெண்களாவர். அவர்களில் பெரும்பாலானோர் கடும் வறுமையாலும் வேலையின்மையாலும் பாதிக்கப்பட்டுள்ள பெருந்தோட்டத் தொழிலாளர் குடும்பங்களைச் சேர்ந்த இளம் பெண்களாவர். அடிப்படைச் சம்பளம் 30,700 ரூபாய் என்றும், மேலதிக நேர வேலைக்காக ஒரு மணித்தியாலத்துக்கு 200 ரூபாய் வழங்கப்படுவதாகவும், ஆனால் ஏப்ரல் மாதத்திலிருந்து மேலதிக நேரக் கொடுப்பனவுகள் வழங்கப்படவில்லை என்றும், ஆகஸ்ட் மாதத்தில் சம்பளத்தின் அரைவாசி மட்டுமே வழங்கப்பட்டதாகவும் தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

“ஏனைய ஆடைத் தொழிற்சாலைகளுடன் ஒப்பிடும்போதுகூட, இங்கு வசதிகள் மிகவும் குறைவாக உள்ளன. நாளொன்றுக்கு ஒருமுறை மட்டுமே சாதாரண தேநீர் வழங்கப்படுகிறது. கடுமையான நோயினால் பாதிக்கப்பட்டாலும் விடுமுறை பெறுவதற்காக வேலைத்தளத்துக்கு வர வேண்டியுள்ளது. இந்த வேலையின் மூலம் கிடைக்கும் வருமானத்தில்தான் நாங்கள் வாழ்கிறோம். வேலையை இழந்தால் நாங்கள் பட்டினி கிடக்க வேண்டியிருக்கும். எனவே, எங்களுடைய பிரச்சினை நிலுவையிலுள்ள சம்பளம் தொடர்பான பிரச்சினைக்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்டதல்ல. எங்களுக்கு வேலை தேவை” என்று ஒரு பெண் தொழிலாளி கூறியதுடன் ஏனைய தொழிலாளர்கள் அதை ஆமோதித்தனர்

தொழிற்சாலைகளில் உள்ள தொழிலாளர்கள் ஒன்றோடொன்று பிணைக்கப்பட்ட சுரண்டல் நடவடிக்கைகளுக்கு இரையாகியுள்ளனர். மூலதனத்துக்கு கடனாகப் பணத்தை வழங்கும் வங்கிகள், உற்பத்தியில் ஈடுபடும் நிறுவனங்களைப் பிணையாக வைத்துக்கொள்கின்றன. தொழிலாளர்களிடமிருந்து சுரண்டப்படும் இலாபத்தின் ஒரு பகுதி, வட்டியையும் கடன் தவணைகளையும் செலுத்துவதற்குப் பயன்படுத்தப்பட வேண்டும். ஏனைய பூரணப்படுத்தப்பட்ட ஆடை உற்பத்தி நிறுவனங்களைப் போலவே, நோர்வூட் ஃபெஷன் நிறுவனத்தின் ஆடை உற்பத்திப் பொருட்களும் அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஐரோப்பாவில் உள்ள பெரிய சில்லறை விற்பனை நிறுவனங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. அந்த வெளிநாட்டுக் கூட்டுத்தாபனங்கள் பெரும் இலாபத்தைப் பெறுவதற்காகக் குறைந்த விலையில் ஆடைகளை கொள்வனவு செய்வதற்கு, இலங்கையிலுள்ள நிறுவனங்கள் குறைந்த சம்பளத்துக்கு தொழிலாளர்களைச் சுரண்ட வேண்டியுள்ளது.

மத்திய கிழக்கில், ஈரானுக்கு எதிராக அமெரிக்கா முன்னெடுத்துள்ள போர் கடல் போக்குவரத்தைப் பாதித்து, இறக்குமதி-ஏற்றுமதி நடவடிக்கைகளை நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது. எரிபொருள் விலை அதிகரிப்பு அனைத்து நாடுகளையும் பாதிக்கிறது. இறக்குமதியைச் சார்ந்துள்ள நாடுகளில், போருக்கான செலவுகளின் சுமையும் தொழிலாளர்கள் மற்றும் ஏழை மக்கள் மீது சுமத்தப்படுகிறது. இந்தக் காரணங்களால் ஏற்றுமதித் தொழில்துறை நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளது. நோர்வூட் ஃபெஷன் நிறுவனம் கடன் தவணைகளையும் வட்டியையும் திருப்பிச் செலுத்தத் தவறியதால், அதற்குக் கடனாக நிதி மூலதனத்தை வழங்கிய வங்கி, நிறுவனத்தைக் கலைத்து விற்பனை செய்வதன் மூலம் தனது பணத்தை மீட்டெடுக்கத் தீர்மானித்துள்ளது.

உலகச் சந்தையில் அதிகரித்துவரும் போட்டித்தன்மை, இலங்கையின் ஆடை ஏற்றுமதித் தொழில்துறையையும் நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது. இந்த நெருக்கடியின் மத்தியில், தொழிலாளர் எண்ணிக்கையைக் குறைத்தல், தொழிற்சாலைகளை மூடுதல் அல்லது அவற்றை வேறு நிறுவனங்களிடம் ஒப்படைத்தல் போன்ற நடவடிக்கைகள் பரவலாக இடம்பெறுகின்றன. தெற்காசியாவின் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றான மாஸ் ஹோல்டிங்ஸ், தனது தொழிலாளர் எண்ணிக்கையை 26,000 ஆல் குறைப்பதற்குத் திட்டமிட்டுள்ளது. 2026 பெப்ரவரி 19 அன்று, அது துல்ஹிரிய தொழிற்சாலையில் ஆடை உற்பத்தி நடவடிக்கைகளை நிறுத்தியது. இதன் மூலம் 2,200 தொழில்கள் அழிக்கப்பட்டன. வெலிஓயாவில் அமைந்துள்ள மிலா ஃபெஷன், கம்பஹா திஹாரியில் அமைந்துள்ள ஹெல குளோதிங் மற்றும் ஜா-எல ஏகலவில் அமைந்துள்ள எல்பீஎஸ் உட்பட தொழிற்சாலைகளின் தொழிலாளர்களும் வேலை அழிப்பை எதிர்கொண்டனர்.

ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கமும் தமது வாழ்க்கை நிலைமைகள் மற்றும் ஜனநாயக உரிமைகளுக்கு எதிராக நடத்தப்படும் ஒரேவிதமான தாக்குதலை எதிர்கொண்டுள்ளது. சர்வதேச நாணய நிதியம் விதிக்கும் சிக்கன நடவடிக்கைகளுக்கு மேலதிகமாக, ஏகாதிபத்தியப் போரினால் தீவிரமடையும் பொருளாதார நெருக்கடியின் சுமையையும் தொழிலாள வர்க்கத்தின் மீது சுமத்துவதற்கு மக்கள் விடுதலை முன்னணி/தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முயற்சித்து வருகிறது.

ஆடைத் தொழிலாளர்கள் ஒவ்வொரு தொழிற்சாலையிலும் தங்களுக்கென சொந்தமான நடவடிக்கைக் குழுக்களைக் கட்டியெழுப்ப வேண்டும். நிறுவனங்களுடனும் அரசாங்கத்துடனும் இணைந்து செயல்படும் தொழிற்சங்கத் தலைவர்களையும், அனைத்து முதலாளித்துவக் கட்சிகளையும் இந்தக் குழுக்களிலிருந்து விலக்கி வைக்க வேண்டும். இதன் மூலம் தொழில்கள், சம்பளங்கள் மற்றும் வேலை நிலைமைகளைப் பாதுகாப்பதற்கான பொதுவான போராட்டத்தில், ஏனைய துறைகளைச் சேர்ந்த தொழிலாளர்களுடன் ஐக்கியப்படுவதற்கு அவர்களால் முடியும்.

தொழிற்சாலைகள் மூடப்படுவதற்கு எதிரான போராட்டத்தின் ஒரு படியாக அத்தகைய தொழிற்சாலைகளில் தொழிலாளர்கள் உள்ளமர்ந்து போராடுவதும், அந்தப் போராட்டத்தைப் பாதுகாப்பதற்காக ஏனைய தொழிலாளர்களின் செயல்பூர்வமான ஆதரவைக் கோருவதும் அவசியமாகும். ஏனைய தொழிலாளர்களின் வர்க்க நடவடிக்கைகள் மூலம் தமது ஆதரவைத் திரட்ட வேண்டும். இந்த முன்முயற்சியை முன்னெடுப்பதற்கு தொழிலாளர் நடவடிக்கைக் குழுக்களைக் கட்டியெழுப்புவது அத்தியாவசியமானதாகும்.

Loading