இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.
சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பு (IYSSE) ஏற்பாடு செய்திருந்த ஐந்து பல்கலைக்கழக வளாகச் சுற்றுப்பயணத்தின் இறுதிக் கூட்டமாக, திங்கட்கிழமை அன்று மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் டேவிட் நோர்த் ஆற்றிய உரையின் காணொளிகளை உலக சோசலிச வலைத் தளம் (WSWS) வெளியிடுகிறது. நாம் ஏற்கனவே செய்தி வெளியிட்டபடி, WSWS சர்வதேச ஆசிரியர் குழுவினதும் அமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சியினதும் (SEP) தலைவரான டேவிட் நோர்த் நவம்பர் 3 இடைக்காலத் தேர்தல்கள் குறித்து வழங்கிய மதிப்பீட்டைக் ஏறத்தாழ 100 பேர் கேட்டனர்.
முதல் காணொளி உரையின் இறுதிப் பகுதியை வழங்குகிறது; அதில் நோர்த் தனது உரையின் மைய முடிவுகளைத் தொகுத்துரைத்தார். முதலாளித்துவத்தின் உலகளாவிய நெருக்கடியால் உந்தப்பட்டு, அமெரிக்காவிலும் சர்வதேச அளவிலும் தொழிலாள வர்க்கத்தின் ஆழமடைந்து வரும் தீவிரமயமாதலை இந்தத் தேர்தல் பதிவு செய்கிறது என்றும், வர்க்கப் போராட்டத்தின் பாரிய வெடிப்பை இது முன்னறிவிக்கிறது என்றும் அவர் விளக்கினார். ஜனநாயகக் கட்சி மீது நம்பிக்கை வைக்குமாறு தொழிலாளர்களுக்கும் இளைஞர்களுக்கும் கூறும் அமெரிக்க ஜனநாயக சோசலிஸ்டுகள் (DSA) அமைப்புக்கு எதிராக, சோசலிசத்திற்கான போராட்டம் தொழிலாள வர்க்கத்தையும் அதிகாரத்தைக் கைப்பற்றுவதை நோக்கமாகக் கொண்ட சர்வதேசியவாத மூலோபாயத்தையும் அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும் என நோர்த் வலியுறுத்தினார். “இப்போதுள்ள தீர்க்கமான கேள்வி தொழிலாள வர்க்கத்திற்குள் ஒரு புரட்சிகர இயக்கத்தைக் கட்டியெழுப்புவதே ஆகும்” என்று கூறிய அவர், “அதற்கான நிலைமைகள் கனிந்துள்ளன” என்றார்.
இரண்டாவது காணொளி முழு உரையையும் வழங்குகிறது. நவீன அமெரிக்க வரலாற்றின் முக்கியத் திருப்புமுனைகளான 1896, 1912, 1932 மற்றும் 1980 ஆகிய ஆண்டுகளின் தேர்தல்களின் வரலாற்றுச் சூழலுக்குள் இந்த இடைக்காலத் தேர்தல்களை நோர்த் பொருத்திப் பார்த்தார். தேர்தல்களுக்கு நியூயோர்க் டைம்ஸ், ஜனநாயகக் கட்சியினர் மற்றும் DSA ஆகியோரின் எதிர்வினைகளை ஆய்வு செய்த அவர், இளைஞர்களுக்கும் தொழிலாளர்களுக்கும் ஒரு மார்க்சிய விமர்சனத்தையும் முன்னோக்கையும் விரிவாக முன்வைத்தார். அடுத்து வந்த கலந்துரையாடலின் காணொளித் துணுக்குகளை எதிர்வரும் நாட்களில் வெளியிடுவோம்.
ஜனநாயகக் கட்சியின் வெற்றியை இருகட்சி ஒத்துழைப்பு ஆட்சிக்கான ஒரு தொடக்கமாகவோ அல்லது அக்கட்சி உள்ளிருந்தே உருமாறுவதன் ஆரம்பமாகவோ சித்தரிக்கும், தேர்தல் குறித்த மேலோங்கியுள்ள விளக்கங்களுக்கு நேரெதிராக இந்த உரையில் முன்வைக்கப்பட்ட முன்னோக்கு அமைந்துள்ளது. பொருளாதார நெருக்கடி மற்றும் புற்றுநோய் போலப் பரவிவரும் உலகப் போரின் நிலைமைகளின் கீழ் தொழிலாள வர்க்கத்திற்குத் தேவையான அரசியல் நனவை, தற்போது நடைபெற்று வரும் வெகுஜனத் தீவிரமயமாதல் தானாகவே உருவாக்கிவிடாது. அந்த நனவு வரலாற்றைக் கற்பதன் மூலம் வளர்த்தெடுக்கப்பட்டு, அதன் படிப்பினைகளால் ஆயுதபாணியாக்கப்பட்ட ஒரு புரட்சிகரக் கட்சியால் தொழிலாள வர்க்கத்திற்குள் கொண்டு செல்லப்பட வேண்டும்.
பல்கலைக்கழக வளாகங்களில் IYSSE-இன் வளர்ச்சியும், சாமானிய தொழிலாளர் குழுக்களின் சர்வதேச தொழிலாளர் கூட்டணி (IWA-RFC) மூலமாகச் சாமானிய தொழிலாளர் குழுக்களின் வளர்ச்சியும், சோசலிச சமத்துவக் கட்சியின் (SEP) வளர்ச்சியும், ஜனநாயகக் கட்சியினராலோ அவர்களது போலி-இடது துணை அமைப்புகளாலோ வழங்க முடியாத தீர்வுகளை ஏற்கனவே தேடிக்கொண்டிருக்கும் தொழிலாளர்களையும் இளைஞர்களையும் இந்த முன்னோக்கு சென்றடைவதையே சார்ந்துள்ளன. மாணவர்களையும் இளைஞர்களையும் இந்த முன்னோக்கின் பக்கமும், மார்க்சியத்தையும் ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் வரலாற்றையும் கற்பதன் பக்கமும், எதிர்வரும் போராட்டங்கள் கோரும் தொழிலாள வர்க்கத்தை நோக்கிய திருப்பத்தின் பக்கமும் வென்றெடுப்பதற்காகச் சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பு போராடுகிறது.
