முன்னோக்கு

தேர்தலில் போர் நிராகரிக்கப்பட்ட ஒரு வாரத்திற்குப் பின்னர், போர்த்துறைச் செயலாளர் ஹெக்செத்தை ஜனநாயகக் கட்சியினர் காப்பாற்றினர்

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

வாஷிங்டனில் உள்ள பென்டகனில் 2026 நவம்பர் 10 செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் பேசுகிறார். [AP Photo/Nathan Howard]

ட்ரம்ப் நிர்வாகத்தையும் ஈரானுக்கு எதிரான அதன் போரையும் மக்கள் பெருமளவில் நிராகரித்த இடைக்காலத் தேர்தல்கள் நடந்து ஒரு வாரத்திற்குப் பின்னர், செவ்வாய்க்கிழமை மாலை, போர்த்துறைச் செயலாளர் பீட் ஹெக்செத்தைப் பதவிநீக்கக் குற்றவிசாரணையிலிருந்து ஜனநாயகக் கட்சி காப்பாற்றியது.

ஹெக்செத்துக்கு எதிரான எட்டுப் பதவிநீக்கக் குற்றச்சாட்டுகளைக் கொண்ட தீர்மானத்தை நீதித்துறைக் குழுவுக்கு அனுப்புவதற்கு ஆதரவாகப் பிரதிநிதிகள் சபை 211-204 என்ற வாக்குக் கணக்கில் வாக்களித்தது; இதன் மூலம், பதவிக்காலம் முடிவடையும் தறுவாயிலுள்ள காங்கிரஸின் எஞ்சிய கூட்டத்தொடர் முழுவதற்கும் அத்தீர்மானம் முடக்கப்பட்டது. வாக்களித்த ஜனநாயகக் கட்சி உறுப்பினர்கள் அனைவரும் தீர்மானத்தைக் குழுவுக்கு அனுப்பும் முன்மொழிவை எதிர்த்தனர்; ஆனால், 11 ஜனநாயகக் கட்சி உறுப்பினர்கள் வாக்களிக்கவில்லை. அவர்கள் அனைவரும் தமது வாக்குகளைப் பதிவு செய்திருந்தால், அந்த முன்மொழிவு 215-211 என்ற கணக்கில் தோல்வியடைந்திருப்பதுடன், பதவிநீக்கக் குற்றவிசாரணை மீதே நேரடியாக வாக்களிக்க வேண்டிய கட்டாயமும் பிரதிநிதிகள் சபைக்கு ஏற்பட்டிருக்கும்.

ஜனநாயகக் கட்சி உறுப்பினர்கள் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாததற்குக் கூறப்பட்ட காரணங்கள் அபத்தமானவை. முன்னாள் சபாநாயகர் நான்சி பெலோசி, “முன்னாள் இராணுவத்தினருக்கான வாழ்நாள் ஆதரவாளர் விருது” ஒன்றைப் பெறுவதற்காகச் சான் பிரான்சிஸ்கோவில் இருந்தார். வேறு நால்வர் போக்குவரத்து நெரிசலைக் காரணமாகக் கூறினர். மிச்சிகனைச் சேர்ந்த பிரதிநிதிகள் சபை உறுப்பினர் ஹேலி ஸ்டீவன்ஸ் எந்த விளக்கமும் அளிக்கவில்லை. ஒன்பது நாட்களுக்கு முன்னர், காஸா இனப்படுகொலை குறித்துத் தமது கட்சியின் வேட்பாளரான அப்துல் எல்-சயீத் முன்வைத்த விமர்சனங்களைக் குறிப்பாகக் காரணம் காட்டி, அவருக்கு எதிராகப் போட்டியிட்ட, ட்ரம்ப் ஆதரவு பெற்ற குடியரசுக் கட்சி செனட் வேட்பாளர் மைக் ரோஜர்ஸை ஸ்டீவன்ஸ் ஆதரித்திருந்தார்.

வாக்கெடுப்பில் பங்கேற்காத 11 ஜனநாயகக் கட்சி உறுப்பினர்களும் துரதிர்ஷ்டவசமான போக்குவரத்து நெரிசலாலோ அல்லது முக்கியமான “வாழ்நாள்” விருதுகளாலோ வர முடியாமல் போனதாகக் கூறப்படும் அனைத்து வாதங்களும் அபத்தமானவை. உக்ரேனுக்கு நிதியளிப்பதற்கான வாக்கெடுப்பாக இது இருந்திருந்தால், தேவைப்பட்டால் மரணப் படுக்கையிலிருந்தும் கூட அந்த உறுப்பினர்கள் எழுப்பி அழைத்து வரப்பட்டிருப்பார்கள்.

இது, வெள்ளை மாளிகையுடன் ஒருங்கிணைந்து எடுக்கப்பட்ட ஓர் அரசியல் முடிவும், இடைக்காலத் தேர்தல்களுக்குப் பின்னரான முதலாவது பெரும் அரசியல் சோதனையும் ஆகும். ரஷ்யா குறித்தும் இராணுவ வரவு-செலவுத் திட்டம் குறித்தும் வெள்ளை மாளிகையுடன் தாம் நடத்தி வரும் கலந்தாலோசனைகளுக்கு மத்தியில், போர் விவகாரத்தில் நிர்வாகத்திற்கு ஓர் அரசியல் தோல்வியை ஏற்படுத்த வேண்டாம் என்று “இருகட்சி ஒத்துழைப்பு” என்ற பதாகையின் கீழ் ஜனநாயகக் கட்சியினர் முடிவெடுத்தனர்.

தமக்கு என்ன வழங்கப்பட்டது என்பதைக் குடியரசுக் கட்சியினர் புரிந்துகொண்டனர். இந்த முடிவை “ஒரு மாபெரும் அமெரிக்கத் தேசபக்தருக்குக் கிடைத்த குற்றவிடுதலை” என்று பாராட்டிய ட்ரம்ப், பதவிநீக்கக் குற்றவிசாரணை “பரிதாபகரமாகத் தோல்வியடைந்துவிட்டது!” என்று அறிவித்தார். ஹெக்செத் தன் பங்கிற்கு, அன்றைய தினம் முன்னதாக நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில், இந்தப் பதவிநீக்கக் குற்றவிசாரணை முயற்சியை “நாசவேலை” என்று அழைத்து அதற்குப் பதிலளித்ததுடன், அதை ஆதரித்தவர்கள் துரோகிகள் என்றும் மறைமுகமாகக் குறிப்பிட்டார்.

இந்த வாக்கெடுப்புக்குப் பின்னால் இருந்த கணக்கு, மறுநாள் “வாக்கெடுப்புக்கு வராத 11 ஜனநாயகக் கட்சியினர் பீட் ஹெக்செத்தைக் காப்பாற்றினர்; கட்சியையும் அதனிடமிருந்தே காப்பாற்றினர்” என்ற தலைப்பில் வெளியான நியூஸ்வீக் பகுப்பாய்வில் தெளிவாக எடுத்துரைக்கப்பட்டது. ஹெக்செத்தைக் கூர்ந்து ஆராய ஜனநாயகக் கட்சியினருக்கு “பதவிநீக்கக் குற்றவிசாரணை என்ற குழப்பம் தேவையில்லை” என்று அதன் கட்டுரையாளரான மூத்த ஆசிரியர் ஷேன் க்ரௌச்சர் வாதிட்டார். இங்கு “குழப்பம்” என்பது, போருக்கு எதிரான மக்கள் எதிர்ப்பை ஊக்குவிக்கக்கூடிய அல்லது அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இருகட்சி நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவிக்கக்கூடிய எதையும் குறிக்கிறது.

பதவிநீக்கக் குற்றவிசாரணையைச் சுற்றி நடந்த ஒட்டுமொத்தக் காய்நகர்த்தல்களும் முற்றிலும் கபடத்தனமானவையாக இருந்தன. ஹெக்செத்தைப் பதவிநீக்கக் குற்றவிசாரணைக்கு உட்படுத்துவது குறித்துத் தமது நிலைப்பாடு “உறுதியாக ஆம்” என்று பிரதிநிதிகள் சபை சிறுபான்மைக் கட்சித் தலைவர் ஹக்கீம் ஜெஃப்ரீஸ் அறிவித்தார்; அதன் பின்னர் வாக்கெடுப்பு தோல்வியடைவதை அக்கட்சி உறுதி செய்தது. இதற்கிடையில், அரசாங்கத்தின் தலைமையில் இருக்கும் குற்றவாளியான ட்ரம்பிற்கு எதிராகப் பதவிநீக்கக் குற்றவிசாரணை கொண்டுவருவதை ஜனநாயகக் கட்சியினர் முற்றிலுமாக எதிர்த்து வருகின்றனர்.

ஜனநாயகக் கட்சியினர் செயலற்றுப் போக அனுமதித்த அந்தத் தீர்மானத்தை அவர்களே அறிமுகப்படுத்தவில்லை; மாறாக, அதை அறிமுகப்படுத்தியவர் தோமஸ் மாஸ்ஸி ஆவார். மாஸ்ஸி ஒரு சுதந்திரவாத குடியரசுக் கட்சி உறுப்பினர் ஆவார்; ஆனால், ஜனநாயகக் கட்சியினர் சொல்ல முன்வராத விடயங்களை முறையான குற்றச்சாட்டுகளாகப் பதிவு செய்துள்ளது என்ற வகையில் அத்தீர்மானத்தின் உள்ளடக்கம் முக்கியத்துவம் வாய்ந்தது. ஈரானுக்கு எதிரான போர் அதன் தொடக்கத்திலிருந்தே “சட்டவிரோதமானது” என்று அது குற்றஞ்சாட்டுகிறது. போரின் முதல் நாள் காலையில் மினாப் (Minab) நகரிலுள்ள ஒரு தொடக்கப் பள்ளியின் மீது அமெரிக்கா நடத்திய, குறைந்தது 120 குழந்தைகள் கொல்லப்பட்ட தாக்குதலை விவரிக்கும் அத்தீர்மானம், ஹெக்செத் “பொதுமக்கள் படுகொலையை நிகழ்த்தினார்” என்றும் குற்றஞ்சாட்டுகிறது.

கரீபியன், பசிபிக் கடற்பகுதிகளில் படகுகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில், “மூழ்கிய படகுகளிலிருந்து உயிர்தப்பியவர்கள் மீது நடத்தப்பட்ட இரண்டாம் கட்டத் தாக்குதல்கள்” உட்படக் குறைந்தது 243 பேர் “நீதிக்குப் புறம்பாகப் படுகொலை” செய்யப்பட்டதற்காக அது அவர் மீது குற்றஞ்சாட்டுகிறது. ஜனவரியில் வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ சிறைபிடிக்கப்பட்டதை, “வெனிசுலாவின் எண்ணெய் இருப்புக்கள் மீது அமெரிக்கக் கட்டுப்பாட்டை நிலைநாட்டுவதற்காக” மேற்கொள்ளப்பட்ட “இறையாண்மை கொண்ட ஒரு நாட்டிற்கு எதிரான போர் நடவடிக்கை” என்று அழைக்கும் அத்தீர்மானம், கடந்த ஆண்டு யேமன் மீது நடத்தப்பட்ட குண்டுவீச்சில் எட்டு வாரங்களுக்கும் குறைவான காலத்தில் சுமார் 224 பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும் குற்றஞ்சாட்டுகிறது.

ஜூன் 3, ஜூன் 23 ஆகிய தேதிகளில், போர் அதிகாரச் சட்டத்தின் (War Powers Act) கீழ், ஈரானிலிருந்து அமெரிக்கப் படைகளைத் திரும்பப் பெறுமாறு ஜனாதிபதிக்கு உத்தரவிடும் தீர்மானத்தைக் காங்கிரஸின் இரு அவைகளும் நிறைவேற்றியதையும் அது பதிவு செய்கிறது; 1973ஆம் ஆண்டில் அச்சட்டம் இயற்றப்பட்ட பின்னர் இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டது அதுவே முதன்முறையாகும். நிர்வாகம் அதைப் புறக்கணித்தது; கிட்டத்தட்ட ஐந்து மாதங்களாக, காங்கிரஸின் சொந்த முடிவை அமல்படுத்த ஜனநாயகக் கட்சியினர் எதுவும் செய்யவில்லை.

ஜனநாயகக் கட்சியினரின் தேர்தல் பிரச்சாரத்தில் இத்தகைய வாசகங்கள் எதுவுமே இடம்பெறவில்லை. அவர்கள் போரைப் பற்றிக் குறிப்பிட்ட அளவுக்கு, அது ஏறத்தாழ முழுமையாக அதன் செலவு பற்றியதாகவே இருந்தது.

உண்மையில், ஜனநாயகக் கட்சியினர் போரின் நோக்கங்களை ஆதரிப்பதோடு, அதன் தொடக்கத்திலிருந்தே அதற்கு நிதியளிக்கப்படுவதையும் உறுதி செய்துள்ளனர். 2025 ஜூன் மாதத்தில், ஈரானின் அணுசக்தி வசதிகள் மீது குண்டுவீசியதற்காக ட்ரம்பிற்கு எதிராக அல் கிரீன் பதவிநீக்கக் குற்றச்சாட்டுகளை அறிமுகப்படுத்தியபோது, ஒட்டுமொத்தக் கட்சித் தலைமை உட்பட 128 ஜனநாயகக் கட்சி உறுப்பினர்கள் அவற்றைக் கிடப்பில் போடுவதற்கு ஆதரவாக வாக்களித்தனர். இந்த ஆண்டு ஜனவரியில், ஐந்து வாரங்களுக்குப் பின்னர் ஈரான் மீது தொடுக்கப்பட்ட தாக்குதலுக்கு நிதியளித்த 839 பில்லியன் டாலர் இராணுவ ஒதுக்கீட்டு மசோதாவுக்கு ஆதரவாகப் பிரதிநிதிகள் சபையின் 149 ஜனநாயகக் கட்சி உறுப்பினர்கள் வாக்களித்தனர்.

போரின் இலக்குகளை அடைய ட்ரம்ப் தவறிவிட்டார் என்பதும், அதன் மூலம் ஹோர்முஸ் நீரிணை விவகாரம் உட்பட ஈரானின் நிலையை அவர் வலுப்படுத்திவிட்டார் என்பதுமே அவர்களின் முக்கியப் புகாராக இருந்து வருகிறது. ஜூலை 21 அன்று நடைபெற்ற செனட் ஒதுக்கீட்டுக் குழு விசாரணையில், மிச்சிகன் செனட்டர் கேரி பீட்டர்ஸ் ஹெக்செத்திடம் இவ்வாறு கூறினார்: “உங்களிடம் ஒரு மூலோபாயம் இல்லை. இந்தப் போரில் உண்மையில் வெற்றி பெறுவதற்கான நீண்டகாலத் திட்டம் உங்களிடம் இல்லை. போரில் வெற்றி பெறுங்கள்!”

எனினும், நிர்வாகத்துடனான தமது மோதல்களில் ஜனநாயகக் கட்சித் தலைமையை உந்திச் செலுத்தி வரும் விவகாரம், உக்ரேனில் ரஷ்யாவுக்கு எதிராக நடக்கும் போரே ஆகும். மினாப் தாக்குதல் குறித்தோ கரீபியன் படகுத் தாக்குதல்கள் குறித்தோ அல்ல; மாறாக, உக்ரேனிய இராணுவத்திற்கான ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் சேவை மட்டுப்படுத்தப்பட்டமை குறித்துச் சாட்சியமளிப்பதற்காகவே ஹெக்செத் செனட் முன் கொண்டுவரப்பட வேண்டும் என்று செனட்டர் ஆடம் ஷிஃப் கூறியுள்ளார். ஜூலை மாதம் நடைபெற்ற அதே விசாரணையில், இல்லினோய்ஸ் செனட்டர் டிக் டர்பின், “உக்ரேன் போரில் நாங்கள் வெற்றி பெறக்கூடிய ஒரு வரலாற்றுத் தருணத்தில் இருக்கும்போது” ஈரான் மீது செலவிடுவதற்கு ஆட்சேபம் தெரிவித்தார்.

தி ஹில் மேற்கோள் காட்டிய செனட் வட்டாரங்களின்படி, பென்டகனுக்கான நிதி டிசம்பர் 11 அன்று காலாவதியாகவுள்ள நிலையில், பதவிக்காலம் முடிவடையும் தறுவாயிலுள்ள காங்கிரஸின் கூட்டத்தொடரில் பாதுகாப்புச் சட்டங்கள் தொடர்பாகத் தமது ஒத்துழைப்பை வழங்குவதற்கான விலையாக, அவரைப் பதவியிலிருந்து நீக்குவதைச் செனட் ஜனநாயகக் கட்சியினர் யோசனையாக முன்வைத்துள்ளனர். இரு அவைகளிலும் தாம் பெரும்பான்மை வகிக்கவிருக்கும் ஜனவரி மாதத்திற்காக இந்த அச்சுறுத்தலைக் கைவசம் வைத்திருக்கவும், உக்ரேன் குறித்தும் இராணுவ வரவு-செலவுத் திட்டம் குறித்தும் வெள்ளை மாளிகையுடன் தாம் நடத்தும் காய்நகர்த்தல்களில் அதைப் பயன்படுத்தவும் ஜனநாயகக் கட்சியினர் விரும்புகின்றனர்.

ஜனநாயகக் கட்சி என்பது வோல் ஸ்ட்ரீட் மற்றும் இராணுவ-உளவுத்துறை எந்திரத்தின் கட்சியாகும். ட்ரம்புடன் அதற்குள்ள வேறுபாடுகள், போர் தொடுக்க வேண்டுமா இல்லையா என்பது குறித்தல்ல; மாறாக, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உலகளாவிய நலன்களை எவ்வாறு மிகச் சிறப்பாகப் பாதுகாப்பது என்பது குறித்தே ஆகும்.

இந்த நோக்குநிலையுடன் மிகவும் நேரடியாகப் பிணைந்துள்ள கட்சியின் அணி, இராணுவம் மற்றும் உளவுத்துறை அமைப்புகளிலிருந்து வந்த வேட்பாளர்களான “CIA ஜனநாயகக் கட்சியினர்” என்று உலக சோசலிச வலைத் தளம் குறிப்பிடும் அணியே ஆகும். இந்த ஆண்டு காங்கிரஸ் தேர்தலில் அவர்களில் 67 பேரை ஜனநாயகக் கட்சியினர் போட்டியிட நிறுத்தினர். பதவியிலிருந்த 10 பேர் அனைவருடனும் இணைந்து, 13 பேர் பிரதிநிதிகள் சபை இடங்களில் வெற்றி பெற்று, அந்த அணியின் உறுப்பினர் எண்ணிக்கையை இருமடங்கிற்கும் மேலாக அதிகரித்துள்ளனர்.

அமெரிக்க ஜனநாயக சோசலிஸ்டுகள் (DSA) அமைப்பும் காங்கிரஸில் உள்ள அதன் பிரதிநிதிகளும் இதற்கு அரசியல் போர்வையை வழங்குகின்றனர். இந்தத் தேர்தல் ஜனநாயகக் கட்சியை இடதுபக்கமாக நகர்த்தியுள்ளது என்றும், அதை மேலும் இடதுபக்கம் தள்ள முடியும் என்றும் அவர்கள் முன்வைக்கும் மைய வாதம் ஒரு கட்டுக்கதையாகும்.

தேர்தலுக்குப் பின்னர், நியூயோர்க் டைம்ஸ் ஆசிரியர் குழு தொடங்கி பெர்னி சாண்டர்ஸ், சோஹ்ரான் மம்தானி வரை அனைவரும் “இருகட்சி ஒத்துழைப்பு” என்ற ஒரே பல்லவியையே பாடி வருகின்றனர். இதன் பொருள் ட்ரம்புடனும் குடியரசுக் கட்சியினருடனும் ஒத்துழைப்பதாகும்: அதாவது, போர் குறித்த உடன்பாடும், வோல் ஸ்ட்ரீட்டின் கட்டளைகளை நிறைவேற்றுவதற்காகச் சமூக நலத் திட்டங்கள் மீதும் தொழிலாள வர்க்கத்தின் மீதும் தொடுக்கப்படும் கூட்டுத் தாக்குதலும் ஆகும். போருக்கும் சமத்துவமின்மைக்கும் எதிரான எதிர்ப்பை, வோல் ஸ்ட்ரீட்டாலும் உளவுத்துறை அமைப்புகளாலும் கட்டுப்படுத்தப்படும் ஒரு கட்சிக்குப் பின்னால் மீண்டும் திருப்பி விடுவதே DSA-வின் பணியாகும்; அக்கட்சியில், தம்மைத் தாமே சோசலிஸ்டுகள் என்று அழைத்துக்கொள்பவர்களை விட CIA ஜனநாயகக் கட்சியினரே மிக அதிகச் செல்வாக்குச் செலுத்துகின்றனர்.

போர், சமூக சமத்துவமின்மை, சர்வாதிகாரத்தை நோக்கிய நகர்வு ஆகியவற்றுக்கு எதிரான தொழிலாள வர்க்கத்தின் ஆழமான எதிர்ப்பை இடைக்காலத் தேர்தல்கள் வெளிப்படுத்தின. வாக்களிப்பில் வெளிப்பட்ட உணர்வுகள் ஒட்டுமொத்த அரசியல் அமைப்புமுறையுடனும் மோதும் பாதையில் உள்ளன. இந்த மோதல் வர்க்கப் போராட்டத்தில் தனது வெளிப்பாட்டைக் கண்டாக வேண்டும்; கண்டே தீரும். ஏகாதிபத்தியப் போருக்கும் சர்வாதிகாரத்திற்கும் எதிரான போராட்டத்தை, இவ்விரண்டிற்கும் மூலாதாரமாக இருக்கும் முதலாளித்துவ அமைப்புமுறைக்கு எதிராகச் சர்வதேச அளவில் தொழிலாள வர்க்கத்தைச் சுயாதீனமாக அணிதிரட்டுவது என்ற அடித்தளத்தில் மட்டுமே முன்னெடுக்க முடியும்.

Loading