இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.
கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் தகவலின்படி, அமெரிக்க பசிபிக் இராணுவத்தின் (USARPAC) துணைத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் ஜோயல் பி. “ஜே.பி.” வோவெல், இலங்கைக்கு வருகை தந்தவர்களில் மிக உயர்தரத்திலான அமெரிக்க இராணுவ அதிகாரி ஆவார். செப்டம்பர் 29 முதல் அக்டோபர் 1 வரை அவர் மேற்கொண்ட இந்த விஜயமானது “பயிற்சி, கூட்டுச் செயல்பாட்டுத் திறன், பேரிடர் தயார்நிலை மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பையும் விரிவுபடுத்தும்” நோக்கம் கொண்டதாக உத்தியோகப்பூர்வமாகத் தெரிவிக்கப்பட்டது.
'வோவெல்லின் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க பயணம், இலங்கையுடனான நமது பாதுகாப்பு ஒத்துழைப்பின் வளர்ந்து வரும் வலிமையையும் மற்றும் முடிவுகளை வழங்குவதற்கான நமது கூட்டு அர்ப்பணிப்பையும் பிரதிபலிக்கிறது' என்று அமெரிக்க தூதர் எரிக் மேயர் கூறினார்.
வோவெல் ஐந்து போர் நடவடிக்கைகளில் பங்கேற்றுள்ளார்—அவற்றில் மூன்று ஆப்கானிஸ்தானிலும், இரண்டு ஈராக்கிலும் நிகழ்ந்தன. இதற்கு முன்பு, அவர் ஜப்பானில் உள்ள அமெரிக்க இராணுவப் பிரிவு (US Army Japan/I Corps (Forward)) மற்றும் ஈராக், சிரியாவில் செயல்பட்ட கூட்டுப் பணிக்குழுவுக்கும் (Combined Joint Task Force-Operation Inherent Resolve) தலைமை தாங்கியுள்ளார். தற்போது, அமெரிக்க பசிபிக் இராணுவத்தின் (USARPAC) துணைத் தளபதியாக, இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அமெரிக்க இராணுவத்தின் செயல்பாடுகள், தயார்நிலை, இராணுவக் கூட்டணிகள் மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை வழிநடத்த அவர் உதவுகிறார். இப்பிராந்தியத்தில், சீனாவின் இராணுவ வளர்ச்சியை எதிர்கொள்வதையும், சீனாவைச் சுற்றி வளைப்பதையும் மையமாகக் கொண்ட உத்தியையே இந்த இராணுவக் கட்டளை அமைப்பு குவிமையப்படுத்தியுள்ளது.
அமெரிக்க ஏகாதிபத்தியம், இலங்கை போன்ற கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த நாடுகளை, தீவிரமடைந்து வரும் தனது போர்த் திட்டங்களுக்குள் இழுத்துக்கொள்ள முயல்கிறது. பிரதி பாதுகாப்பு அமைச்சர் அருண ஜயசேகர, பாதுகாப்புச் செயலாளர் ஏயார் வைஸ் மார்ஷல் சம்பத் துயகோந்த (ஓய்வுபெற்ற) மற்றும் உயர் இராணுவத் தளபதிகளுடன் வோவெல் நடத்திய சந்திப்புகளின் நோக்கம் இதுவேயாகும்.
கலந்துரையாடல் தலைப்புகளில் ஒன்றான “ஒருங்கிணைந்த செயல்பாட்டுத் திறன்” என்பது, வெவ்வேறு ஆயுதப் படைகள் ஒன்றிணைந்து தொடர்புகொள்வதற்கும், தகவல்களைப் பரிமாறிக்கொள்வதற்கும், திட்டமிடுவதற்கும், பயிற்சி அளிப்பதற்கும் மற்றும் செயல்படுவதற்குமான திறனை வளர்ப்பதைக் குறிக்கிறது. வெள்ளம் மற்றும் பிற அவசரநிலைகளுக்குப் பிரதிபலிப்பதில் இத்தகைய ஒருங்கிணைப்பு மதிப்புமிக்கது என்று கூறப்பட்டாலும், இதன் உண்மையான நோக்கம், இலங்கைப் படைகளை அமெரிக்கப் படைகளுடன் நெருக்கமாக ஒருங்கிணைத்து, இராணுவங்களுக்கு இடையே ஒத்துழைப்பு, நிலையான செயல்பாட்டு நடைமுறைகள், இடைச்சேவை இணைப்புகள் மற்றும் தனிப்பட்ட வலையமைப்புகளைக் கட்டியெழுப்புவதேயாகும்.
அமெரிக்க பசிபிக் தரைப்படை கட்டளை மையத்திற்கும் இலங்கை இராணுவத்திற்கும் இடையிலான முதலாவது இருதரப்பு பாதுகாப்பு கலந்துரையாடலான, மே மாதம் நடைபெற்ற அமெரிக்க-இலங்கை தரைப்படை தொடர்பான பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்தே வோவெல்லின் இந்தப் பயணம் இடம்பெற்றது.
பாரசீக வளைகுடா, ஆப்பிரிக்கா மற்றும் ஆசியாவையும் இணைக்கும் கடல் பாதைகளுக்கு அருகில் இலங்கை அமைந்துள்ளதால், அதன் துறைமுகங்கள், விமான நிலையங்கள் மற்றும் தகவல் தொடர்பு உள்கட்டமைப்புகள் குறிப்பிடத்தக்க மூலோபாய முக்கியத்துவத்தைப் பெறுகின்றன.
“சுதந்திரமான மற்றும் திறந்த இந்தோ-பசிபிக்” என்ற வோவெல்லின் அறிவிக்கப்பட்ட குறிக்கோளானது அமெரிக்க ஏகாதிபத்தியம் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் தனது இராணுவ மேலாதிக்கத்தை நிலைநாட்டவும், சீனாவுக்கு எதிரான போருக்குத் தயாரிப்பை மேற்கொள்ளும் முயற்சியைக் குறிக்கும் ஒரு மறைமுக சொல்லாகும். ஆசியாவின் மிக முக்கியமான கடல்வழிப் பாதைகள் மற்றும் சந்தைகள் மீது அமெரிக்காவின் ஆதிக்கத்தைத் தக்கவைத்துக் கொள்வதற்காக, நாட்டுக்கு நாடு அமெரிக்க இராணுவத் தளங்கள் விரிவாக்கப்பட்டு வருவதுடன் அமெரிக்காவின் கூட்டணிகளும் பலப்படுத்தப்பட்டு வருகின்றன.
அமெரிக்கா வெனிசுலாவை சூறையாடிக்கொண்டும், லத்தீன் அமெரிக்காவை மீண்டும் காலனித்துவப்படுத்த முயன்றுகொண்டும், ஈரானுக்கு எதிரான குற்றவியல் போரைத் தீவிரப்படுத்திக்கொண்டும் இருக்கும் சூழலிலேயே, இலங்கையின் மக்கள் விடுதலை முன்னணி / தேசிய மக்கள் சக்தி (ஜே.வி.பி./தே.ம.ச.) அரசாங்கம் அமெரிக்காவுடனான உறவுகளை வலுப்படுத்திக்கொண்டு வருகிறது.
முன்னதாக, அமெரிக்காவுடன் 2007ல் கையெழுத்திடப்பட்டு, 2017ல் புதுப்பிக்கப்பட்ட கையகப்படுத்துதல் மற்றும் பரஸ்பர-சேவை ஒப்பந்தத்திற்கு (ACSA) எதிராக, ஜே.வி.பி./தே.ம.ச. போராட்டங்களை நடத்தியிருந்த போதிலும், 2024ல் ஆட்சிக்கு வந்த பிறகு அது இந்த ஒப்பந்தத்தைத் தொடர்ந்து நடைமுறைப்படுத்தி வருகின்றனது. இந்த ACSA ஒப்பந்தமானது, அமெரிக்க இராணுவத்தின் வானூர்திகள் மற்றும் கப்பல்கள் இலங்கையிலுள்ள வசதிகளைப் பயன்படுத்தி எரிபொருள், அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் இடைச்சேவை உதவிகளைப் பெறுவதற்கான கட்டமைப்பை வழங்குகிறது.
கொழும்பு, 2025 நவம்பர் 14 அன்று, அமெரிக்காவுடன் ஒரு பாதுகாப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு இலங்கையை வாஷிங்டனின் இராணுவ வலையமைப்புடன் இன்னும் நெருக்கமாக பிணைக்கிறது. இந்த ஒப்பந்தமானது பயிற்சி, தகவல் தொடர்பு, இணைய செயல்பாடுகள் மற்றும் கடல்சார் கண்காணிப்பு மூலம் இலங்கை ஆயுதப்படைகளை, மொன்டானா தேசிய பாதுகாப்புப் படை (Montana National Guard) மற்றும் அமெரிக்கக் கடலோரக் காவல்படையுடன் இணைக்கிறது.
அமெரிக்க வெளியுறவுத் துறை உதவிச் செயலாளர் எஸ். பால் கபூர், பசிபிக் விமானப் படைகளின் தளபதி ஜெனரல் கெவின் ஷ்னைடர் ஆகியோரின் ஜூன் மாதப் பயணங்களைத் தொடர்ந்தே வோவெல்லின் பயணம் அமைந்திருந்தது. எஸ்.எல்.என் கஜபாகு கப்பலுக்கு 4 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான செயற்கைக்கோள் தகவல் தொடர்புகளை மேம்படுத்தி தருவதாக கபூர் அறிவித்தார். வாஷிங்டன் வழங்கிய பத்து டி.எச்-57 ஹெலிகாப்டர்கள் மற்றும் கடலோரக் காவல் கப்பல்களுடன் சேர்ந்து, இந்த உதவியானது அமெரிக்க மற்றும் இலங்கை இராணுவங்களுக்கு இடையிலான செயல்பாட்டு ஒருங்கிணைப்பை ஆழப்படுத்துகிறது.
ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 4 வரை நடைபெற்ற அட்லஸ் ஏஞ்சல் II பயிற்சி ஒத்திகையைத் தொடர்ந்தும் இது நடைபெற்றது. “இயற்கைப் பேரிடர்களுக்கு”த் தயாராகும் சாக்கில், அமெரிக்க மற்றும் இலங்கை இராணுவ வீரர்கள், விமானப் பராமரிப்பு மற்றும் “இரசாயன, உயிரியல், கதிரியக்க, அணு, மற்றும் வெடிபொருள் அபாயங்களுக்கு” பிரதிபலிப்பது உட்பட விரிவான பயிற்சிகளை மேற்கொண்டனர்.
குறிப்பிடத்தக்க வகையில், வோவெல் இலங்கை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைகளை நடத்திக்கொண்டிருந்த வேளையில், செப்டம்பர் 30 அன்று, வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் இதழ் “அமெரிக்காவின் அழுத்தமான நடவடிக்கைகளால் ஆசியக் கடல் பகுதிகளில் ஈரானிய எண்ணெய் கப்பல்கள் சிக்கிக்கொண்டன” என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை வெளியிட்டது.
இலங்கையின் தென்மேற்குக் கடற்கரையிலிருந்து சுமார் 15 மைல் தொலைவில் உணவு, எரிபொருள் மற்றும் குடிநீர் தட்டுப்பாட்டுடன் சுமார் 20 ஈரானிய காலியான எண்ணெய் கப்பல்கள் சிக்கியுள்ளதால், ஒரு பெரும் மனிதாபிமான நெருக்கடி உருவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜேர்னலின் படி, இந்தக் கப்பல்கள் ஈரானிலிருந்து கொண்டுவரப்பட்ட, “தடைகளுக்கு” உட்பட்ட கச்சா எண்ணெயை பிரதானமாக சீனாவுக்கு விநியோகித்திருந்தன. ஆனால், அமெரிக்காவின் தடை காரணமாக அவற்றால் மீண்டும் ஈரானுக்குத் திரும்ப முடியவில்லை. ஜூலை மாதத்திலிருந்து, ஈரானைச் சேர்ந்த அல்லது ஈரானுடன் தொடர்புடைய டசின் கணக்கான எண்ணெய் கப்பல்கள் இலங்கை மற்றும் மலேசியக் கடற்கரைக்கு அருகில் நங்கூரமிட்டுள்ளன.
ஈரானியக் கப்பல்களுக்கு உணவு மற்றும் தண்ணீர் போன்ற அத்தியாவசியப் பொருட்களை வழங்குமாறு ஈரான் விடுத்த கோரிக்கைகளை இலங்கை அரசாங்கம் முற்றிலுமாக நிராகரித்துள்ளது. அக்டோபர் 3 அன்று சண்டே ரைம்ஸ் நாளிதழிடம் பேசிய வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத், 'ஒரு அரசாங்கமாக, இதுவரை நாங்கள் அவர்களுக்கு எதையும் வழங்கவில்லை; எதிர்காலத்திலும் வழங்கப்போவதில்லை' என்று தெரிவித்தார்.
ஈரானியக் கப்பல்கள் தொடர்பாக அமெரிக்காவிடமிருந்து “எந்தவொரு அதிகாரப்பூர்வச் செய்தியும் கிடைக்கவில்லை” என்று ஹேரத் தெரிவித்தார். இருப்பினும், அமெரிக்க அதிகாரிகளிடமிருந்து அழுத்தம் வருவதை அவர் மறுக்கவில்லை. “கப்பல்களுக்கான இத்தகைய விநியோகங்கள் பொதுவாக தனியார் துறையாலேயே மேற்கொள்ளப்படுகின்றன”, எனவே இது அரசாங்கம் சார்ந்த விவகாரம் அல்ல என்று கூறி அவர் அந்த விடயத்தை ஓரங்கட்டினார்.
'சாத்தியமான மனிதாபிமான நெருக்கடி இருந்தபோதிலும், ஈரானியக் கப்பல்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை வழங்குவதற்கு எதிராக கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகமும், வருகை தந்த அமெரிக்க சிவில் மற்றும் இராணுவ அதிகாரிகளும் இலங்கையை மீண்டும் மீண்டும் எச்சரித்துள்ளனர்' என்று இலங்கை வெளியுறவு அமைச்சக வட்டாரங்களை மேற்கோள் காட்டி தி டிப்ளமேட் அக்டோபர் 6 அன்று செய்தி வெளியிட்டது.
ஜே.வி.பி./தே.ம.ச. அரசாங்கம், அமெரிக்காவின் அழுத்தத்திற்குப் பணிவது இது முதல் முறையல்ல. மார்ச் 4 அன்று இலங்கை கடல் பகுதிக்கு அருகே ஈரானிய போர்க்கப்பலான ஐ.ஆர்.ஐ.எஸ். டெனா மூழ்கடிக்கப்பட்டதன் மூலம், வாஷிங்டனுக்கு அது பணிந்துபோனது அம்பலமானது. சர்வதேச கடல் பகுதியில் ஒரு அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் அந்தக் கப்பலை டோர்பிடோவால் தாக்கியதில், அதில் இருந்த 108 பேர் கொல்லப்பட்டனர். இந்தியா நடத்திய பன்னாட்டு கடற்படைப் பயிற்சிகளிலிருந்து அந்தப் போர்க்கப்பல் திரும்பிக்கொண்டிருந்தபோதேஎந்தவித முன்னறிவிப்பும் இன்றி இந்தத் தாக்குதல் நிகழ்ந்தது.
பின்னர், வாஷிங்டன் தனது தூதரகப் பொறுப்பாளர் ஜெயின் ஹோவல் மூலம் கொழும்புக்கு அழுத்தம் கொடுத்தது. அவர், ஐ.ஆர்.ஐ.எஸ். புஷேர் என்ற மற்றொரு கப்பலின் குழுவினரையோ அல்லது மீட்கப்பட்ட 32 டெனா மாலுமிகளையோ ஈரானிடம் விடுவிக்க வேண்டாம் என்று இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தினார். இஸ்ரேலின் தூதரும் இந்தப் பேச்சுவார்த்தைகளில் கலந்துகொண்டார். ஆரம்பத்தில், கொழும்பு புஷேர் கப்பல் நாட்டிற்குள் நுழைய மறுத்தது, பின்னர் அந்தக் கப்பலையும் அதன் குழுவினரையும் காவலில் எடுத்துக்கொண்டது.
இலங்கை “மனிதநேயத்தின் கொடியை ஏந்திச் செல்கிறது” என்று கூறி, திசாநாயக தன்னை “நடுநிலையாளர்” எனக் காட்டிக்கொண்டார். ஆனால், கசிந்த அமெரிக்க வெளியுறவுத்துறை தகவல் பரிமாற்றம் ஒன்று இந்த மூடிமறைப்பைத் தகர்த்து, அமெரிக்க-இஸ்ரேலியப் போர் நோக்கங்களுக்குக் கொழும்பு இணக்கமான ஒரு இடைத்தரகராகச் செயல்படுவதையும், ஈரானிய மாலுமிகளைத் தடுத்து வைத்து, அவர்களது “பிரச்சாரத்தைத்” தடுப்பதற்காக அவர்களை வாய்மூடச் செய்வதையும் அம்பலப்படுத்தியது. அந்த மாலுமிகள் இறுதியில் ஏப்ரல் மாத நடுப்பகுதியில் ஈரானுக்குத் திருப்பி அனுப்பப்பட்டனர்.
