பாரிய வறுமைக்கும் சமத்துவமின்மைக்கும் எதிர்ப்பு அதிகரிக்கையில் எகிப்தின் எல்-சிசி அடக்குமுறையை அதிகரிக்கின்றார்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

எகிப்தின் இராணுவ சர்வாதிகாரி அப்தெல் பத்தா எல்-சிசி தனது கொடூரமான ஆட்சிக்கு எதிரான அனைத்து எதிர்ப்புகளையும் ஒடுக்க நீதிமன்றங்கள், புதிய சட்டங்கள் மற்றும் இணையம் மற்றும் சமூக ஊடகங்களின் தணிக்கை ஆகியவற்றைப் பயன்படுத்துகிறார்.

பாரிய வறுமை, சமூக சமத்துவமின்மை, ஒரு இராணுவ அதிகாரத்துவம் மற்றும் கோவிட்-19 இனால் அதிகரித்து வரும் இறப்பு எண்ணிக்கையை எதிர்கொள்ளும் தொழிலாள வர்க்கத்தின் சமூக வெடிப்புக்கு எதிராக நாட்டில் எகிப்திய மற்றும் வெளிநாட்டு மூலதனத்தை பாதுகாப்பதே அவரது முக்கிய நோக்கமாகும்.

எகிப்தின் ஜனாதிபதி அப்தெல் பத்தா எல்-சிசி (en.kremlin.ru)

ஜூலை 2013 இல் ஜனாதிபதி முகமது மோர்சியின் முஸ்லீம் சகோதரத்துவ-சார்பு அரசாங்கத்திற்கு எதிரான இரத்தம்சிந்திய சதித்திட்டத்தில் ஆட்சியைப் பிடித்த எல்-சிசி, பயங்கரவாத அமைப்பு என்று முத்திரை குத்தப்பட்டு, சட்டவிரோதமாக்கப்பட்ட எகிப்தின் மிகப்பெரிய அரசியல் எதிர்ப்புக் கட்சியான முஸ்லீம் சகோதரத்துவத்தை மட்டுமல்லாது அரசியலில் உள்ள அனைத்து எதிரிகளையும் ஒடுக்குகின்றார்.

அவர் பலவந்தமாக காணாமல் ஆக்குதல், பாரிய கைதுகள், பலரும் விசாரணைக்கு உட்படுத்தப்படாத 60,000 அரசியல் கைதிகளை சித்திரவதை செய்தல் மற்றும் தூக்குத்தண்டனை மூலம் எகிப்தை ஆட்சிசெய்கின்றார். சர்வதேச மன்னிப்புச் சபை படி இத்தண்டனைக்கு உட்பட்டவர்களில் ஒரு பகுதி பட்டியல் மட்டுமே என நம்பப்படும் பதிவு செய்யப்பட்ட எண்ணிக்கை 2019 இல் 32 இல் இருந்து 2020 இல் 107 ஆக உயர்ந்தது.

அவர் ஏப்ரல் 2017 முதல் 18 வது முறையாக எகிப்தின் அவசரகால நிலையை புதுப்பித்தார். பொதுக் கூட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களை சட்டவிரோதமாக்கி, விசாரணையின்றி அல்லது குற்றச்சாட்டு இல்லாமல் கூட மக்களை தடுத்து வைப்பதை அனுமதித்து மற்றும் ஊடகங்களை தணிக்கை செய்தார். அரசியல்வாதிகள், வழக்கறிஞர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் உட்பட நூற்றுக்கணக்கான மக்கள் கைது செய்யப்பட்டு அரச பாதுகாப்பு நீதிமன்றத்தால் விசாரணை செய்யப்பட்டனர். சமீபத்தில் ஆஸ்திரியாவின் மத்திய ஐரோப்பிய பல்கலைக்கழகத்தின் முதுகலை மாணவரான அஹ்மத் சமீர் சாந்தவி கைதுசெய்யப்பட்டார். 2020 பாராளுமன்றத்திற்கு போட்டியிட முயற்சித்ததற்காக அவரும் அவரது 'நம்பிக்கை கூட்டணியின்' மற்ற உறுப்பினர்களும் கைது செய்யப்பட்ட பின்னர் சாந்தவி பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர் மற்றும் சமூக ஊடகங்களில் பொய்யான செய்திகளை பரப்பியதற்காக நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

ஜூலை 28 அன்று, தமன்ஹூர் குற்றவியல் நீதிமன்றம் 2014 மற்றும் 2015ம் ஆண்டுகளில் இரண்டு தனித்தனி சம்பவகளில் போலீஸ் அதிகாரிகளைக் கொன்றதற்காக 24 முஸ்லிம் சகோதரத்துவ உறுப்பினர்களுக்கு மரண தண்டனை விதித்தது. குற்றம் சாட்டப்பட்ட 24 பேரில் 8 பேர் ஆஜராகாதபோதும் அவர்களுக்கும் தண்டனை விதிக்கப்பட்டது.

அதே நாளில், எகிப்தின் மிக உயர்ந்த நீதிமன்றமான காசேசன் நீதிமன்றம், முஸ்லீம் சகோதரத்துவத்தின் தலைவர் முகமது பாடி, அவரது துணைதலைவர் கைரத் எல்-ஷேட்டர் மற்றும் பலரின் ஆயுள் தண்டனைகளுக்கு எதிரான மேல்முறையீடுகளை நிராகரித்தது. தேசிய பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை சீர்குலைக்க, கடந்த 2006 ஆம் ஆண்டு பாலஸ்தீன தேர்தலில் வெற்றி பெற்று காஸாவை கட்டுப்படுத்தும் முஸ்லிம் சகோதரத்துவத்தின் கூட்டமைப்பான ஹமாஸுடன் இணைந்து செயல்பட்டதாக அவர்கள் குற்றம் சாட்டப்பட்டனர். ஹமாஸை ஆதரித்த கத்தார் உடன் எகிப்து சமாதானம் செய்தாலும், முஸ்லீம் சகோதரத்துவத்திற்கு பாதுகாப்பான புகலிடத்தை வழங்குவதாக நீண்டகாலமாக குற்றம் சாட்டப்பட்டு வருகின்ற துருக்கியுடன் ஒரு நல்லுறவை ஆரம்பித்தாலும் கூட இது நடைபெறுகிறது.

ஜூலை 25 அன்று, செப்டம்பர் 2020 எதிர்ப்பு பற்றி குறிப்பிட்டு அரசுக்கு எதிராக பொதுமக்களைத் தூண்டியதற்காக எல் சிசியின் முன்னாள் கட்டுமான ஒப்பந்ததாரரும் இப்போது ஸ்பெயினில் நாடுகடந்துவாழும் விமர்சகருமான முகமது அலி உட்பட மூன்று எகிப்திய பிரஜைகளை கைது செய்யுமாறு இன்டர்போலை அழைக்குமாறு அரச பாதுகாப்பு நீதிமன்றம் அரசாங்கத்தைக் கேட்டது. மற்ற இருவரும் சட்டவிரோத முஸ்லீம் சகோதரத்துவத்துடன் சேர்ந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இரண்டு வாரங்களுக்கு முன்பு, நாட்டின் முக்கிய அரசு பத்திரிகை அல்-அஹ்ராமின் தலைமை ஆசிரியராக இருந்த அப்தெல் நாசர் சலாமாவை அதிகாரிகள் 2012-2014 ஆண்டுகளில், 'பயங்கரவாதத்திற்கு நிதியளித்தார்', சமூக ஊடகங்கள் மற்றும் அரசு நிறுவனங்கள் மற்றும் நிறுவனங்களை குறைமதிப்பிற்கு உட்படுத்தினார் என்ற குற்றச்சாட்டின் கீழ் கைது செய்தனர். எகிப்திற்கு “பாரிய தோல்விக்கு” இட்டுச்சென்ற எதியோப்பியாவின் Grand Renaissance அணையைக் கையாண்டதற்காக எல்-சிசியை இராஜினாமா செய்ய அழைப்பு விடுத்த அவரது பேஸ்புக் இடுகையைப் பின்தொடர்ந்தது. இத்திட்டத்தால் நீலநைல் நதியில் உள்ள மிகப்பெரிய நீர்-மின்சார அணையின் பின்னால் உள்ள நீர்த்தேக்கத்தை எதியோப்பியா நிரப்பத் தொடங்கியுள்ளது. இது சூடான் மற்றும் எகிப்தினுடாக பாயும் நைல் நதியின் சுமார் 80 சதவீத நீராகும். இதனால் வறட்சி ஆண்டுகளில் இரு நாடுகளும் தண்ணீர் பற்றாக்குறையை சந்திக்க நேரிடும் என்ற அச்சத்தைத் தூண்டியது.

ஜூன் மாதத்தில், வெனிசுவேலாவின் முன்னாள் எகிப்திய தூதர் யாஹ்யா நஜ்ம், அணை நெருக்கடியின் அரசாங்கத்தின் 'தவறான நிர்வாகத்திற்கு' எதிராகப் பேசியதற்காக 'பயங்கரவாதக் குழுவில் சேர்ந்து, பொய்யான செய்திகளைப் பரப்பி, சமூக ஊடகங்களை தவறாகப் பயன்படுத்தியதற்காக 15 நாட்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டார்.

ஆகஸ்ட் 2013 எல்-சிசியின் சதித்திட்டத்திற்கு எதிராக ரபா அல்-அதாவியா சதுக்கத்தில் வெகுஜன ஆர்ப்பாட்டங்கள் தொடர்பாக 12 முஸ்லீம் சகோதரத்துவ உறுப்பினர்களுக்கு எகிப்தின் உயர் பொதுநீதிமன்றம் மரண தண்டனை வழங்கியது. எல்-சிசியின் படைகள் சமீபத்திய வரலாற்றில் மிகவும் இரத்தவெறி கொண்ட படுகொலைகளில் ஒன்றை நிகழ்த்தி, குறைந்தது 1,000 ஆர்ப்பாட்டக்காரர்களைக் கொன்றது. இதற்காக எந்தவொரு பாதுகாப்புப் படையினர் மீது வழக்குத் தொடரவில்லை என்றாலும், 12 சகோதரத்துவ உறுப்பினர்கள் 'குடியிருப்பாளர்களை தாக்கிய குற்றவாளிக் குழுக்களுக்கு ஆயுதம் ஏந்திய குற்றவாளிகள் மற்றும் காவல்துறையினரை எதிர்த்தது அத்துடன் துப்பாக்கிகள் ... வெடிமருந்துகள் ... மற்றும் வெடிகுண்டு தயாரிக்கும் பொருட்கள்' மற்றும் 'போலீஸ்காரர்களைக் கொல்வது ... அதிகாரிகளை எதிர்ப்பது ... மற்றும் ஆக்கிரமிப்பு மற்றும் பொது சொத்துக்களை அழித்தல்' ஆகியவற்றிற்காக தீர்ப்பளிக்கப்பட்டனர்.

ஏப்ரலில், குறைந்தது 9 பேர் 2013 படுகொலை தொடர்பான போலியாக உருவாக்கிய குற்றச்சாட்டுகளில் தூக்கிலிடப்பட்டனர்.

சர்வதேச நீதித்துறை ஆணையம் எகிப்திய நீதித்துறையை 'அடக்குமுறைக்கான கருவி' என்று அழைத்துள்ள அதே நேரத்தில் ஐக்கிய நாடுகள் சபை, மனித உரிமைகள் கண்காணிப்பு சபை மற்றும் சர்வதேச மன்னிப்பு சபை ஆகியவை நாட்டின் நீதி அமைப்பை பரவலாக கண்டித்துள்ளன.

கோவிட்-19 தொற்றுநோய் தொழிலாளர்களின் வாழ்க்கை நிலைமைகளை அழிக்கின்ற நிலைமைகளின் கீழ் எல்-சிசியின் இரத்தக்களரி அடக்குமுறை நடைபெறுகிறது. நெருக்கடியின் தொடக்கத்தில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 15 சதவிகிதமான உல்லாசப் பயணத்துறையின் நிறுத்தம், வளைகுடாவில் தொழிலாளர்களிடமிருந்து பணப்பரிமாற்றம் குறைதல் மற்றும் வெளிநாட்டு நாணய வருவாய், எகிப்தின் கடன் மற்றும் முதலீட்டு சந்தைகளில் இருந்து குறைந்தபட்சம் 13 பில்லியன் டாலர் முதலீட்டாளர்கள் திரும்பப் பெறுதல் போன்றவற்றிற்கு இட்டுச்சென்றது. மற்றும் பகுதி பூட்டுதல்கள் 800,000 பட்டதாரிகள் என, வேலை செய்யும் வயதில் வேலை செய்யும் எகிப்தியர்களில் வெறும் 35 சதவிகிதத்தின் வேலையிழப்பிற்கு வழிவகுத்தது. 2013 ஆம் ஆண்டில் எல்-சிசியை ஆட்சிக்குக் கொண்டுவந்த அதன் வளைகுடா பயனாளிகளான சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகியவை யேமனில் தங்கள் குற்றம்மிக்க போரை ஆதரிக்கத் தவறியதால் தங்கள் ஆதரவை வாபஸ் பெற்ற பின்னர் தொற்றுநோய்க்கு முன்பு தவித்த அரசாங்கம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 95 சதவீத அளவிலான கடன் மட்டத்தை நெருங்குகிறது.

சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து இரண்டு கடன்களை அடைப்பதற்கு எல்-சிசி பின்வரும் தன் உத்தரவுகளை அமுல்படுத்தினார்: அடிப்படை உள்நாட்டு மற்றும் விவசாய பொருட்களுக்கான மானியங்களைக் குறைத்தது, எரிபொருள் விலைகளை உயர்த்தியது, மதிப்பு கூட்டப்பட்ட வரியுடனான புதிய வரிகள், சுகாதார மற்றும் கல்வி வரவு-செலவுத் திட்டங்களை குறைத்தது, அரசு ஊழியர்கள் மற்றும் நாணயத்தின் மதிப்பு நிலையற்றதாக இருக்க அனுமதித்தது. இந்த நடவடிக்கைகள் வாழ்க்கைச் செலவை உயர்த்தி, எகிப்தின் நடுத்தர வர்க்கத்தின் பெரும்பகுதியை அழித்து, வறுமை விகிதத்தை உயர்வதற்கு வழிவகுத்தது.

பெருநிறுவனங்களின் இலாபத்தை பாதிக்கும் எதையும் செய்ய ஆட்சி மறுத்துவிட்டது. அதற்கு பதிலாக தொற்றுநோயின் தாக்கத்தை ஈடுசெய்ய வணிகத்திற்கு 6.4 பில்லியன் டாலர்களை வழங்கியது. மேலும் நகர்வு சுதந்திரத்தையும் மற்றும் சமூக செயற்பாட்டை குறைப்பதை நோக்கமாகக் கொண்ட தொடர் நடவடிக்கைகளை அறிவித்தது. தங்கள் வாழ்வாதாரத்தை இழந்தவர்களுக்கு சிறிய அரசாங்க நிதி உதவி வழங்கி மில்லியன் கணக்கான மக்களை வறுமையில் தள்ளியது.

தொற்றுநோயை சமாளிக்க எகிப்தின் பாழடைந்த சுகாதாரப் பாதுகாப்பு அமைப்பினால் இயலாது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. வளங்கள் இல்லாமையால் மருத்துவ ஊழியர்கள் இடம்பெயர்ந்துள்ளனர். அதே நேரத்தில் மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சை நிலையங்களில் அடிப்படை உபகரணங்களான காற்றாடிகள், ஆக்ஸிஜன் வினியோகம் மற்றும் அவர்களின் ஊழியர்களுக்கான தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் இல்லை. 500 க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் இந்த நோயால் இறந்துவிட்டாலும், நாட்டின் நெருக்கடி பற்றி பேசினால் அல்லது அரசாங்கத்தின் புள்ளிவிவரங்களை கேள்வி கேட்டால் மருத்துவர்கள் கைது செய்யப்பட்டு துன்புறுத்தப்படுகிறார்கள். அதேநேரத்தில் அவர்கள் நோயாளிகளின் இறப்புக்கு பொறுப்பேற்க வேண்டும். எகிப்தின் 100 மில்லியன் மக்களில் 2 சதவீதத்திற்கும் குறைவாகவே தடுப்பூசி போடப்பட்டுள்ளனர்.

கடந்த வாரம், துறைமுக நகரமான அலெக்ஸாண்ட்ரியாவில் உள்ள ஒரு razor blade தொழிற்சாலையில் தற்போது 2000 எகிப்திய பவுண்டுகளாக உள்ள ($127) சராசரி ஊதியத்தை ஆக்குறைந்த மாதாந்த வருமானமான 2,400 ($150) ஆக அதிகரிக்கக்கோரி 2,000 தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இது அதிகரித்து வரும் வேலைநிறுத்தங்கள் மற்றும் போராட்டங்களில் ஒன்றாகும். மனித உரிமைகள் தகவலுக்கான அரபு வலைப்பின்னலின் (ANHRI) கருத்துப்படி, 2021 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 80 தொழிலாளர் போராட்டங்கள் நடத்தப்பட்டன. வாழ்க்கை நிலைமைகள் மோசமடைந்துள்ளதால் தற்கொலைகளும் நிகழ்ந்துள்ளன. மற்றும் இரண்டாவது காலாண்டில் 44 போராட்டங்கள் நடத்தப்பட்டன. மிகப்பெரிய ஆர்ப்பாட்டங்களில் ஒன்று, புதிய வணிக மற்றும் பொழுதுபோக்கு வளாகங்களுக்கு வழி வகுப்பதற்காக தங்கள் வீடுகளை இடிக்க திட்டமிட்டு அலெக்ஸாண்ட்ரியாவின் தொழிலாள வர்க்க பகுதியான நடி அல்-சீட் பகுதியில் நூற்றுக்கணக்கானோர் வீதிகளில் இறங்கியபோது மிகப்பெரிய போராட்டங்களில் ஒன்று நடந்தது. இது இடிக்கும் குழுவினருடன் நூற்றுக்கணக்கான கலகம் அடக்கும் போலீசாரை எதிர்கொண்டது.

ஜூலை மாதத்தின் முதல் இரண்டு வாரங்களில் ஐந்து சமூகப் போராட்டங்கள் மற்றும் இரண்டு தொழிலாளர் வேலைநிறுத்தங்கள் நடந்தன. அவற்றில் மிக முக்கியமானது, அலெக்ஸாண்ட்ரியாவின் சிறப்பு பொருளாதார மண்டலத்தை அடிப்படையாகக் கொண்ட Nile Linen குழுமத்தின் தொழிலாளர்கள், குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்துவதற்கான ஒப்பந்தத்தை நிர்வாகம் செயல்படுத்த மறுத்ததால் செய்யப்பட்டதாகும்.

முதலாளித்துவ அமைப்பின் நெருக்கடி மற்றும் மக்களை பாதிக்கும் சமூக பேரழிவை எதிர்கொள்வதில் அதன் மோசமான தோல்வி, மத்திய கிழக்கு மற்றும் வட ஆபிரிக்கா முழுவதும் வெளிப்படுகிறது. எகிப்தின் கடுமையான பொருளாதார மற்றும் சமூக பதட்டங்கள் பற்றிய அச்சம் தான் துனிசியாவின் ஜனாதிபதி கைஸ் சயீத் அவசரகால அதிகாரங்களை ஏற்றுக்கொள்வதையும், பிரதமர் ஹிச்செம் மெச்சிச்சியை பதவி நீக்கம் செய்தல், பாராளுமன்றத்தை இடைநிறுத்துதல், ஊரடங்கு உத்தரவு மற்றும் ஊடகங்கள் மீது கட்டுப்பாடு மற்றும் அல் ஜசீராவின் மீது சோதனை, தேசிய தொலைக்காட்சி சேவையின் தலைவரை பதவிநீக்கல் ஆகியவற்றை ஆதரிக்க இந்த இராணுவ சர்வாதிகாரியை தூண்டியது. Middle East Eye இன்படி, துனிசிய பிரதமர் இராஜினாமா செய்ய ஒப்புக்கொள்வதற்கு முன் ஜனாதிபதி மாளிகையில் எகிப்திய பாதுகாப்பு அதிகாரிகள் தாக்கப்பட்டனர்.

எகிப்திய தொழிலாள வர்க்கம், சமூக சமத்துவம் மற்றும் ஜனநாயக உரிமைகளுக்கான போராட்டத்தை வழிநடத்த ஒரு சர்வதேச புரட்சிகர முன்னணியை உருவாக்க பிராந்தியத்தில் உள்ள அதன் நட்பு நாடுகளிலுள்ள அதன் வர்க்க சகோதர, சகோதரிகளை நோக்கித் திரும்ப வேண்டும்.