மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
கடந்த வாரம் எகிப்தில் இராணுவ சதியின் பத்தாவது ஆண்டு நிறைவைக் குறிக்கிறது. ஜூலை 3, 2013 அன்று, ஏகாதிபத்திய சக்திகளின் ஆதரவுடன் ஆட்சியைப் பிடித்த அப்போதைய இராணுவத் தலைவர் ஜெனரல் அப்தெல் ஃபதா அல்-சிசி, முழு உலகிலும் மிகவும் கொடூரமான மற்றும் இரத்தக்களரி ஆட்சிகளில் ஒன்றை நிறுவியுள்ளார்.
எகிப்தில் சிசியின் சதி இரத்தக்களரியில் உச்சம் பெற்றது. ஆகஸ்ட் 14, 2013 அன்று, அவரது தலைமையில் இராணுவம் மற்றும் பொலிஸ் பிரிவுகள் எகிப்திய தலைநகரான கெய்ரோவில் ஆட்சிக்கவிழ்ப்பு எதிர்ப்பாளர்களின் இரண்டு எதிர்ப்பு முகாம்களை அழித்தன, இதில் 1,000 க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டனர், அவர்களில் பலர் பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆவர். மனித உரிமைகள் கண்காணிப்பகம், 'எகிப்தின் நவீன வரலாற்றில் நடந்த மிக மோசமான சட்டவிரோதமான கொலைச் சம்பவமாக' இது ஒரு 'படுகொலை' என்று கூறியது.
அப்போதிருந்து, இன்னும் நூற்றுக்கணக்கான எதிர்ப்பாளர்கள் ஆட்சியின் அடியாட்களால் கொல்லப்பட்டுள்ளனர். பல்லாயிரக்கணக்கான அரசியல் கைதிகள் நாட்டின் சித்திரவதை நிலவறைகளில் அடைக்கப்பட்டு செயலிழக்கப்பட்டுள்ளனர். போராட்டங்கள் மற்றும் வேலைநிறுத்தங்கள் தடை செய்யப்பட்டுள்ளன. ஆட்சியை விமர்சிக்கும் கட்சிகள் மற்றும் அமைப்புகளைப் போலவே, சுதந்திர ஊடகங்களும் தணிக்கை செய்யப்பட்டு தடை செய்யப்படுகின்றன. எகிப்தில் மரண தண்டனைகள் தொடர்ந்தும் அதிகரித்து வருகிறது. 2020 இல், மரணதண்டனைகள் -பெரும்பாலும் தூக்கிலிடப்பட்டவர்களின் - எண்ணிக்கை -அதிகாரப்பூர்வ மொத்தம் 107 ஆக மூன்று மடங்காக அதிகரித்தது.
சிசியின் ஆட்சிக்கவிழ்ப்பு வெறுமனே அப்போதைய ஜனாதிபதி, இஸ்லாமியவாதியான முகமது முர்சி மற்றும் அவர் உறுப்பினராக இருந்த முஸ்லிம் சகோதரத்துவ கட்சிக்கு எதிராக மட்டும் இயக்கப்படவில்லை. அவர் எகிப்திய புரட்சியை நசுக்குவதை நோக்கமாகக் கொண்டிருந்தார். 2011 இன் தொடக்கத்தில், மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் மேற்கத்திய ஆதரவுடைய நீண்டகால சர்வாதிகாரி ஹோஸ்னி முபாரக்கை வெகுஜன வேலைநிறுத்தங்கள் மற்றும் எதிர்ப்புக்கள் மூலம் வீழ்த்தினர், எகிப்திய முதலாளித்துவம் மற்றும் பிராந்தியத்தில் ஏகாதிபத்தியத்தின் ஆதிக்கத்தை அதன் அடித்தளம் வரை அவர்கள் உலுக்கிப்போட்டனர்.
சிசியின் ஆட்சிக் கவிழ்ப்புடன், முர்சியின் கீழ் கூட தணியாத வெகுஜன இயக்கத்தை ஒருமுறை நிரந்தரமாக நிறுத்துவதற்கு இராணுவம் முயன்றது. 2013 இன் முதல் பாதியில், தொழிலாளர்கள் இஸ்லாமிய அரசாங்கத்திற்கு எதிராக 4,500க்கும் மேற்பட்ட வேலைநிறுத்தங்களையும் சமூக எதிர்ப்புகளையும் ஏற்பாடு செய்தனர். ஜூன் 2013 இறுதியில் வெகுஜன எதிர்ப்புக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டபோது, மில்லியன் கணக்கானவர்கள் முர்சியின் முதலாளித்துவ சார்பு கொள்கைளுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்கு மற்றும் காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்கான அவர் வழங்கும் ஆதரவுக்கு எதிராக மற்றும் சிரியாவில் ஏகாதிபத்தியத்தின் ஆட்சி மாற்றத்திற்கான போருக்கு எதிராகவும் எதிர்ப்பு தெரிவிக்க நாடு முழுவதும் கலந்து கொண்டனர்.
2011ல் முபாரக் தூக்கியெறியப்பட்டது போலவே, போராட்டங்கள் தொழிலாள வர்க்கத்தின் மாபெரும் சக்தியைக் வெளிப்படுத்திக் காட்டின. அதே நேரத்தில், இந்த ஆட்சிக்கவிழ்ப்பு எகிப்தியப் புரட்சியின் அடிப்படைப் பிரச்சனையான அரசியல் முன்னோக்கு மற்றும் தலைமைத்துவம் இல்லாததை, மீண்டும் ஒருமுறை கூர்மையாகக் குவித்தது. ஒரு சர்வதேச சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் தொழிலாள வர்க்கத்தை அதிகாரத்திற்கான போராட்டத்திற்கு அணிதிரட்ட ஒரு புரட்சிகர கட்சி இல்லாத நிலையில், இறுதியில் இராணுவத்தால் ஆதிக்கம் செலுத்த முடிந்தது.
வெகுஜன இயக்கத்தை திசைதிருப்பி இறுதியில் சிசியின் கொடுங்கோன்மைக்கு அதை வழங்குவதில் முக்கிய பங்கு எகிப்திய போலி-இடதுகளால் ஆற்றப்பட்டது. பிரிட்டனில் சோசலிஸ்ட் தொழிலாளர் கட்சி (SWP) மற்றும் ஜேர்மனியில் இடது கட்சியுடன் நெருங்கிய தொடர்புகளை வைத்திருக்கும் (RS) போன்ற சக்திகள், தொழிலாள வர்க்கம் ஒரு சுயாதீனமான பாத்திரத்தை வகிக்க முடியாது, ஆனால் முதலாளித்துவத்தின் ஒரு பிரிவு அல்லது மற்றொரு பிரிவுக்கு தன்னைத்தானே அடிபணியச் செய்ய வேண்டும் என்று அறிவித்தன.
பிப்ரவரி 11, 2011 அன்று முபாரக் வீழ்ச்சியடைந்த உடனேயே, முபாரக்கின் முன்னாள் பாதுகாப்பு மந்திரி முஹம்மது தந்தவியின் தலைமையின் கீழ் அதிகாரத்தை கைப்பற்றிய ஆயுதப்படைகளின் உச்ச கவுன்சிலில் (SCAF) புரட்சிகர சோசலிஸ்டுகள் மாயைகளை பரப்பியது. பிரிட்டன் பத்திரிகையான கார்டியனில், புரட்சிகர சோசலிஸ்டுகளின் ஆர்வலரும் பதிவருமான ஹோசம் எல்-ஹமாலவி 'இளம் அதிகாரிகள் மற்றும் வீரர்களை' 'எங்கள் கூட்டாளிகள்' என்று கொண்டாடி, இராணுவம் 'இறுதியில் ஒரு 'பொதுமக்கள்' அரசாங்கத்திற்கான மாற்றத்தை உருவாக்கும்' என்று அறிவித்தார்.
இராணுவம் அதன் உண்மையான தன்மையை வெளிப்படுத்தியது மற்றும் வன்முறையுடன் வேலைநிறுத்தங்கள் மற்றும் எதிர்ப்புகளை ஒடுக்கியது, 'இரண்டாம் புரட்சி'க்கான அழைப்புகள் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களிடையே எழுப்பப்பட்டன. புரட்சிகர சோசலிஸ்டுகள் இதை வெளிப்படையாக நிராகரித்தது மற்றும் அதற்கு பதிலாக முஸ்லீம் சகோதரத்துவ கட்சியை 'புரட்சியின் வலதுசாரி' என்று உயர்த்தியது. அவர்கள் 2012 ஜனாதிபதித் தேர்தலின் இரண்டாம் கட்டத்தில் முர்சியை ஆதரித்தனர், அதன்பின் இஸ்லாமியவாதிகளின் வெற்றியை 'புரட்சிக்கான வெற்றி' என்றும் 'எதிர்ப்புரட்சியை பின்னுக்குத் தள்ளுவதில் பெரும் சாதனை' என்றும் கொண்டாடினர்.
இராணுவ சதியில் புரட்சிகர சோசலிஸ்டுகளின் பங்கு, அதன் எதிர்ப்புரட்சிகர தன்மையை முழுமையாக அம்பலப்படுத்தியது. புரட்சிகர சோசலிஸ்டுகள் அதை ஒரு 'இரண்டாம் புரட்சி' என்று அழைத்ததுடன், இராணுவத் தலைமையின் மீது மாயைகளை மீண்டும் தூண்டியது. ஜூலை 11 அன்று ஒரு அறிக்கையில், 'மில்லியன் கணக்கான ஏழை எகிப்தியர்களின் நலனுக்காக, சமூக நீதியை அடைவதற்கான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க' சதி ஆட்சியின் மீது அழுத்தம் கொடுக்கப்பட வேண்டும் என்று அது அழைப்பு விடுத்தது.
ஆட்சிக்கவிழ்ப்புக்கான புரட்சிகர சோசலிஸ்டுகளின் ஆதரவு வார்த்தைகளுடன் மட்டுப்படுத்தப்படவில்லை. அதற்கான வழியை அது தீவிரமாக தயாரித்து வைத்திருந்தது. போலி-இடதுகள், 'தாராளவாதிகள்' (முகமது எல்-பரடேய்), எகிப்திய பில்லியனர்கள் (நகுயிப் சாவிரிஸ்) மற்றும் முபாரக் ஆட்சியின் முன்னாள் பிரதிநிதிகள் (அஹ்மத் ஷபிக்) ஆகியோர் அடங்கிய டமாரோட் கூட்டணியின் மிகவும் தீவிரமான ஆதரவாளர்களில் புரட்சிகர சோசலிஸ்டுகளும் இருந்தனர். மக்கள் எதிர்ப்பை இராணுவத்திற்கு ஆதாயமாக மாற்றுவது தான் அவர்களின் பணியாக இருந்தது.
ஜூலை 3 அன்று சிசி அரசு தொலைக்காட்சியில் ஆட்சி கைப்பற்றப்பட்டதை அறிவித்தபோது, தமரோட் தலைவர்கள் மஹ்மூத் பத்ர் மற்றும் முகமது அப்தெல் அஜீஸ் ஆகியோர் சிசிக்கு பக்கபலமாக நின்றனர். சில வாரங்களுக்கு முன்புதான், மே 28, 2013 அன்று, கிசாவில் உள்ள புரட்சிகர சோசலிஸ்டுகளின் தலைமையகத்தில் இருவரும் வரவேற்கப்பட்டு கொண்டாடப்பட்டனர். முன்னதாக, தமரோட் 'புரட்சியை நிறைவு செய்வதற்கான ஒரு வழி' என்று புரட்சிகர சோசலிஸ்டுகள் ஒரு அறிக்கையை வெளியிட்டதுடன், 'இந்த பிரச்சாரத்தில் முழுமையாக பங்கேற்கும் நோக்கத்தையும்' அது அறிவித்தது.
பத்து ஆண்டுகளுக்குப் பிறகு, புரட்சிகர சோசலிஸ்டுகள் அதன் தடங்களை மூடிமறைப்பது குறித்த வலியில் உள்ளது. 'எகிப்து: எதிர்ப்புரட்சியின் ஒரு தசாப்தம்' என்ற தலைப்பில் சதித்திட்டத்தின் ஆண்டு நிறைவைக் குறித்த தனது கட்டுரையில், 'மோர்சியின் ஆட்சியின் மீதான எகிப்திய தொழிலாளர்களின் விரக்தி, பல்வேறு முகாம்களில் இருந்து வந்த தொழிலாளர் இயக்கத் தலைவர்களின் செல்வாக்கின் காரணமாக இறுதியில் ஒரு பிற்போக்கு நிலைக்குத் தள்ளப்பட்டது' என்று ஹமலாவி குறிப்பிடுகிறார். இந்த 'தலைவர்கள்' மற்றும் 'முகாம்களில்' தானும் புரட்சிகர சோசலிஸ்டுகளும் இருந்த உண்மையை ஹமாலாவி கடந்து செல்கிறார்.
சிசியின் ஆட்சிக் கவிழ்ப்பு அமைச்சரவையில் 'சுயாதீனமான' தொழிற்சங்கத் தலைவர் மற்றும் மனிதவள அமைச்சர் கமல் அபு எய்தாவை பற்றி ஹமலாவி குறிப்பிடுகிறார். முதல் அமைச்சராக, 'தொழில்துறை நடவடிக்கைகளை முடக்குவதில் முக்கிய பங்கு வகித்த' அவரது ஆட்சியின் கீழ் 'தொழில்துறை அமைப்பாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர், பாதிக்கப்பட்டனர் அல்லது விடியற்காலை சோதனைகளில் கைது செய்யப்பட்டனர். சுயாதீன தொழிற்சங்கங்கள் கழுத்தறுக்கப்பட்டு வேலைநிறுத்தங்கள் தடை செய்யப்பட்டன. மீண்டும், பல ஆண்டுகளாக புரட்சிகர சோசலிஸ்டுகளின் மிக நெருங்கிய கூட்டாளிகளில் நாசரைட் அபு ஈடாவும் ஒருவர் என்பதை ஹமலாவி குறிப்பிடத் தவறிவிட்டார்.
ஹமாலாவி, புரட்சிகர சோசலிஸ்டுகள் மற்றும் அவர்களது சர்வதேச கூட்டாளிகள் தங்கள் அரசியல் நிலைப்பாடு பேரழிவிற்கு இட்டுச் சென்றதை ஒப்புக்கொள்ளத் தயாராக இல்லை என்பது ஒரே ஒரு முடிவுக்கு மட்டுமே அனுமதிக்கிறது. செல்வந்த மத்தியதர வர்க்கத் தட்டுகள் எதிர்ப்புரட்சி எவ்வளவு இரத்தக்களரியாக இருந்தாலும் சரி அதை விட ஒரு சுதந்திரமான தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர இயக்கத்தை கண்டு அஞ்சுகின்றனர் என்பதாகும்.
இந்த அனுபவத்திலிருந்து தொழிலாளர்களும் இளைஞர்களும் தேவையான அரசியல் முடிவுகளை எடுக்க வேண்டும். ஜனநாயக மற்றும் சமூக உரிமைகளுக்கான அவர்களின் போராட்டத்தில் வெற்றிபெற, அவர்களுக்கு அவர்களின் சொந்த சுயாதீனமான புரட்சிகர அரசியல் தலைமையும் சர்வதேச சோசலிச முன்னோக்கும் தேவை. உலக சோசலிச வலைத் தளமும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும் (லியோன் ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சியின் முன்னோக்கை அடிப்படையாகக் கொண்டது) புரட்சியின் ஒவ்வொரு கட்டத்திலும் இந்த நோக்கு நிலைக்காகப் போராடி வருகின்றன.
பிப்ரவரி 10, 2011 அன்று தொழிலாள வர்க்கத்தால் முபாரக் தூக்கியெறியப்படுவதற்கு முந்தைய நாள், உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவரான டேவிட் நோர்த் பின்வருமாறு எழுதினார்:
புரட்சிகர மார்க்சிஸ்டுகளின் பொறுப்பு, தொழிலாளர்கள் மத்தியில் அவர்கள் மகத்தான அரசியல் அனுபவங்களைக் கடந்து செல்லும் போது, அதிகாரத்திற்கான ஒரு சுயாதீனமான போராட்டத்தின் அவசியத்தைப் பற்றிய புரிதலை வளர்ப்பதாகும். புரட்சிகர மார்க்சிஸ்டுகள் தொழிலாளர்களின் ஜனநாயக அபிலாஷைகளை முதலாளித்துவக் கட்சிகளின் கீழ் அடைய முடியும் என்ற அனைத்து மாயைகளுக்கும் எதிராக அவர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும். முதலாளித்துவ வர்க்கத்தின் அரசியல் பிரதிநிதிகளின் பொய்யான வாக்குறுதிகளை அவர்கள் இரக்கமின்றி அம்பலப்படுத்த வேண்டும். அரசியல் போராட்டம் தீவிரமடையும் போது, தொழிலாள வர்க்கத்திற்கு அதிகாரத்தை மாற்றுவதற்கான அடிப்படையாக சுயாதீனமான அமைப்புகளை உருவாக்குவதை அவர்கள் ஊக்குவிக்க வேண்டும், தொழிலாளர்களின் அத்தியாவசிய ஜனநாயக கோரிக்கைகளை நிறைவேற்றுவது என்பது சோசலிச கொள்கைகளை செயல்படுத்துவதில் இருந்து பிரிக்க முடியாதது என்பதை அவர்களுக்கு விளக்க வேண்டும்.
எல்லாவற்றிற்கும் மேலாக, புரட்சிகர மார்க்சிஸ்டுகள் தங்கள் சொந்த நாட்டின் எல்லைகளுக்கு அப்பால் எகிப்திய தொழிலாளர்களின் அரசியல் எல்லைகளை உயர்த்த வேண்டும். எகிப்தில் இப்போது விரிவடைந்து வரும் போராட்டங்கள், உலக சோசலிசப் புரட்சியின் வளர்ந்து வரும் உலகளாவிய நிகழ்முறையுடன் பிரிக்கமுடியாத வகையில் இணைக்கப்பட்டுள்ளன என்பதையும் எகிப்தில் புரட்சியின் வெற்றிக்கு ஒரு தேசிய முன்னோக்கு அல்ல, மாறாக ஒரு சர்வதேச மூலோபாயம் தேவைப்படுகிறது என்பதையும் அவர்கள் விளக்க வேண்டும்.
உலகெங்கிலும் வர்க்கப் போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில் மற்றும் தொழிலாளர்கள் தங்கள் அரசாங்கங்களின் போர்-சார்பு மற்றும் சிக்கனக் கொள்கைகளுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ள நிலையில், இந்த மார்க்சிச தாக்குதலை வலுப்படுத்துவது அவசியம். எகிப்தில், ஒரு புரட்சி மிகவும் புறநிலையாக வளர்ந்தது. அங்கு இல்லாமல் போன அகநிலைக் காரணி: வெகுஜனங்களில் நங்கூரமிட்டு சர்வதேச சோசலிசத்தின் முன்னோக்கிற்காக போராடும் ஒரு புரட்சிகர கட்சியாகும். எகிப்திய புரட்சி மற்றும் எதிர்ப்புரட்சியின் முக்கியமான பாடம், அத்தகைய புரட்சிகர தலைமையை சரியான நேரத்தில் கட்டியெழுப்ப வேண்டியதன் அவசியத்தையாகும்.