இலங்கை: நிரந்தர நியமனம் கோரி போராடி வரும் வடமாகாண தொண்டர் ஆசிரியர்கள் WSWS உடன் பேசினர்

மூன்று தசாப்தகால இனவாதப் போரினால் நாசமாக்கப்பட்ட இலங்கையின் வடமாகாணத்தில் கடந்த ஒரு தசாப்தத்துக்கும் மேலாக பாடசாலைகளில் தொண்டர் ஆசிரியர்களாக சேவையாற்றி வரும் சுமார் 186 பேர் தங்களுக்கு நிரந்தர ஆசிரியர் நியமனம் கோரி கடந்த தசாப்தம் பூராவும் அடிக்கடி போராடி வந்துள்ளனர்.

இவர்களில் பலர் 2009 இல் முடிவுக்கு வந்த பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் காலத்திலும் அர்ப்பணிப்புடன் கல்விச் சேவையாற்றியவர்கள் ஆவர். சுமார் 800 பேர் வரை இருந்த தொண்டர் ஆசிரியர்களில் ஏனையோர் நீண்ட போராட்டங்களின் பின்னர் நியமனம் பெற்றுள்ளனர் அல்லது வேறு வேலை தேடிக்கொண்டுள்ளனர்.

வடமாகாணத்திலுள்ள பாடசாலைகளில் ஆசிரியர் பற்றாக்குறை உள்ள நிலமைகளாலேயே கடந்த 2001 இல் வலய கல்விப்பணிமனையால் அனுமதி வழங்கப்பட்டு பாடசாலைகளில் தாங்கள் தொண்டராசிரியர்களாக இணைக்கப்பட்டதாகவும், கொரோணா தொற்று நோய் காலத்திலும் வேலை வாங்கிவிட்டு, கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் வடமாகாண கல்வி அமைச்சு தங்களை வேலையில் இருந்து நிறுத்திவிட்டதாகவும் தொண்டராசிரியர்கள் முறைப்பாடு செய்கின்றனர்.

ஜனாதிபதி கோடாபய இராஜபக்ஷ அரசாங்கம் ஏற்கனவே எதிர்கொண்டிருந்த பொருளாதர நெருக்கடி கோவிட் 19 தொற்ற நோயினால் மேலும் தீவிரமாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடன் பெறுவதற்காக சர்வதேச நாணய நிதியத்தை நாடும் அரசாங்கம், அதற்காக மேற்கொள்ளும் சிக்கன நடவடிக்கைகளில் புதிய நியமனங்களை நிறுத்துவதும் அடங்கும்.

இந்த நிலைமையை நன்கு அறிந்து வைத்துள்ள, கொழும்பு ஆளும் தட்டுடன் கொடுக்கல் வாங்கலை எதிர்பார்த்துள்ள வடக்கு தமிழ் கட்சிகள், தொண்டர் ஆசிரியர்கள் போராட்டத்துக்கு வரும் போதெல்லாம் தற்காலிக வாக்குறுதிகளை கொடுத்து அவர்களை திருப்பி அனுப்பி விடுகின்றன.

மார்ச் 22 அன்று ஆளுனர் அலுவலகத்துக்கு முன்னால் தொண்டர் ஆசிரியர்கள் நடத்திய போராட்டம் [Photo: WSWS media]

இவ்வாறான போராட்ங்களில் தொண்டர் ஆசிரியர்கள் மேற்கொண்ட அண்மைய போராட்டம் மார்ச் 22 அன்று நடந்ததாகும். அன்று சுமார் 40 தொண்டர் ஆசிரியர்கள் வடமாகாண கல்வி அமைச்சின் அலுவலகத்தை முற்றுகையிட்டு அமர்ந்திருந்தனர்.

எல்லா தொழிற்சங்கங்களையும் போலவே வடமாகாண தொண்டராசிரியர்கள் சங்கமும் சுயநல அரசியலில் ஈடுபடுவதால், அந்த அமைப்பை மீறியே ஆசிரியர்கள் சுயாதீனமாக அணிதிரண்டு இந்த போராட்டத்தை நடத்தியிருந்தனர். இதற்காக அவர்கள் முதல் நாள் மாலையில் இருந்தே அங்கு தங்கியிருந்தனர்.

கடந்த 10 வருடங்களுக்கு மேலாகவும் யுத்த காலத்திலிருந்தும் தங்களது கற்பித்தல் நடவடிக்கைகளுக்கு சம்பளமோ அல்லது வேறு எதுவிதமான கொடுப்பனவுகளுமோ வழங்கப்படுவதில்லை என அவர்கள் தெரிவிக்கின்றனர். போர் முடிந்து 13 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் ஏதாவதொரு வழியில் தங்களுக்கு நிரந்தர நியமனம் கிடைக்கும் என்ற ஏக்கத்தில் அவர்கள் தொடர்ந்து கற்பித்தலில் ஈடுபட்டு வருகின்றனர்.

எனினும், நிரந்தர நியமனம் வழங்குமாறு கோரி கல்வி அமைச்சின் அலுவலகத்தை முற்றுகையிட்ட போது, வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர், மாகாணத்தில் தொண்டராசிரியர்கள் என்று எவரும் இல்லை என்றும் பொலிசாரை வரவழைத்து தான் முறைப்பாடு எழுதி தருவதாகவும் இவர்களை கைது செய்யுங்கள் என பொலிசாரிடம் கூறி மிரட்டியதாகவும், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

கல்வி அமைச்சுக்கு சென்று கேட்ட போது, “வடக்கில் தொண்டராசிரியர் என்று எவரும் இல்லை” என வடமாகாணத்தில் இருந்து கடிதம் வந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளரும் இதை ஏற்றுக்கொண்டுள்ளார். “ஆனால், பழைய பட்டியலை பற்றி அங்கிருந்து ஏதும் கேட்கப்படவில்லை. அப்படி கேட்டால் அவற்றை நாங்கள் அனுப்புவோம், நாங்களாக எதையும் அனுப்பமாட்டோம், நீங்கள் கொழும்பு மத்திய அமைச்சில் சென்று கதையுங்கள்” என்று கூறி செயலாளர் கைவிட்டுவிட்டதாக தொண்டர் ஆசிரியர்கள் கூறுகின்றனர்.

தமது நியமனங்களுக்காக வடக்கு மாகாண ஆளுனர் மற்றும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவையும் சந்தித்துள்ளனர். தேவானந்தா, உங்களது பிரச்சனைக்கு இரண்டு வாரத்தில் பதிலளிப்பதாக கூறி அனுப்பிவைத்ததாகவும், ஆனால் தற்போது அவரை சந்திக்கக்கூட முடியாதுள்ளதாக தொண்டராசிரியர்கள் தெரிவித்தனர்.

அரசியல்வாதிகள் தங்களின் கட்சிக்கு ஆதரவளிக்காததால் நியமனப் பட்டியலில் இருந்து தங்களின் பெயர்களை எடுத்துவிட்டிருந்ததாக ஆசிரியர்கள் குற்றம்சாட்டினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 2019ல் வடமாகாண கல்வி அமைச்சின் வாயிலை முற்றுகையிட்டு போராட்டம் ஒன்றையும் அவர்கள் நடத்தியிருந்தனர். பின்னர் இவர்களது பெயர் பட்டியல் இசுறுபாய என்றழைக்கப்படும் கல்வி அமைச்சுக்கு அனுப்பப்பட்டிருந்தாலும், ஆட்சியும் மாறியதை அடுத்து, நியமனங்கள் கைவிடப்பட்டுள்ளது.

வடமாகாண தொண்டராசிரியர் சங்கம் என்று இருப்பதாகவும் அதன் தலைவர் மற்றும் செயலாளர் என தம்மை தாமே கூறிவரும் நபர்கள் சிலர், மாதத்தில் இரண்டு தடவைகளோ அல்லது 10 நாட்களுக்கு ஒருமுறையோ கூட்டங்களை கூட்டி ஒவ்வெரு தொண்டராசிரியரிடமும் 500 ரூபா வீதம் அறவிடுவதோடு, நிரந்தர நியமனம் வாங்கித் தருவதாக ஏமாற்றி அவர்களுக்கு நெருக்கமானவர்களுக்கு நியமனம் வாங்க செயற்படுவதாகவும் ஒரு ஆசிரியர் குற்றம் சாட்டினர்.

இந்தப் போராட்டத்தை எப்படியாவது முடிவுக்கு கொண்டுவருவதில் தாம் அக்கறை காட்டுவதை தொண்டராசிரியர் சங்கத் தலைவர் சதீஷ் வெளிப்படுத்தினார். அவர் உலக சோசலிச வலைத் தளத்துடன் பேசும் போது, தாம் ஆளுனருடன் தொண்டராசிரியர்களின் நியமனம் சம்பந்தமாக பேசியதாகவும் எங்களுக்கு நோர்முகத்தேர்வு நடத்தி எங்களில் சிலருக்கேனும் நியமனம் வழங்குமாறு தான் கோரியதாக தெரிவித்தார்.

இதற்கு தொண்டராசிரியர்கள் மறுப்பு தெரிவித்தனர். நேர்முகத்தேர்வு புதிதாக வேலையில் சேர்பவர்களுக்குத்தான். நாங்களோ எத்தனையோ வருடங்களாக கல்வி கற்பித்து வருகின்றோம். இந்த தொழிற்சங்கம் தற்போது நாங்கள் மேற்கொள்ளும் போராட்டத்தை எப்படியாவது நிறுத்தவே முயற்சிக்கின்றது என அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

பல தொண்டர் ஆசிரியர்கள் தங்களுடை நிலைமைகளை உலக சோசலிச வலைத் தளத்துடன் பகிர்ந்துகொண்டனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த உதயலேகா செல்வச்சந்திரன், 45, எட்டு வருடங்களுக்கும் மேலாக தொண்டராசிரியராக இயங்கியவர். “நான் 2001 முதல் 2006 வரை கிளிநொச்சி பூனகரி மகாவித்தியாலயம், திருவையாறு மகாவித்தியாலயம் மற்றும் இராமநாதபுரம் மேற்கு பாடசாலை போன்றவற்றில் ஆங்கில ஆசிரியராக கற்பித்தேன். இறுதி யுத்தத்தில் எனது கணவர் படுகாயமடைந்தமையால் மருத்துவ சிகிச்சைக்காக நாங்கள் இந்தியா செல்லவேண்டி ஏற்ப்பட்டது. அங்கு எனது கணவருக்கு வலதுகை வலது கால் அறுவைச் சிகிச்சை மூலம் நீக்கப்பட்டது. அதன் பின்னர் 2017 இல் இருந்து 2021 இறுதிவரை முல்லைத்தீவு, தேராவில், இந்து மகாவித்தியாலயத்தில் ஆங்கில பாட ஆசிரியராகவே கற்ப்பித்து வந்தேன்.

உதயலேகா [WSWS media]

“இவ்வளவு காலமாக சம்பளமே அல்லது வேறு எந்தக் கொடுப்பனவோ இன்றி கற்பித்து வந்த நான், எப்படியும் எங்களுக்கு நியமனம் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன், எனது இரண்டு பிள்ளைகளுடன், மாற்றித்திறனாளியான கணவர் ஈட்டும் சொற்ப வருமானத்தில் வாழ்க்கையை ஓட்டிவந்துள்ளேன்,” என உதயலேகா கூறினார்.

கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் வடமாகாண கல்வி அமைச்சில் இருந்து, உங்களை கற்பித்தில் நடவடிக்கையில் இருந்து நிறுத்துமாறு தமக்கு அறிவுறுத்தல் வந்துள்ளதாக தெரிவித்து பாடசாலை நிர்வாகம், தன்னை இனிமேல் பாடசாலைக்கு வர வேண்டாம் என்று அறிவித்ததாக, அவர் கூறினார்.

“தற்போதுள்ள பொருளாதார நெருக்கடியான காலகட்டத்தில் நாளாந்தம் கூலிவேலைக்கு சென்று வருமானம் ஈட்டும் தொழிலாளிகளால் வாழ்க்கை நடத்தமுடியாத நிலமையின் கீழ், ஒரு மாற்றுத்திறனாளியான கணவரின் வருமானத்தில் உள்ள குடும்பம் எப்படி ஜீவிக்க முடியும்? அரசாங்க வேலை பெறும் வயதின் இறுதி எல்லையில் நிற்கின்றோம். எனவே எங்கள் சகலருக்கும் நியமனம் வழங்கப்பட்டே ஆகவேண்டும்” என அவர் கோரினார்.

மன்னார் மாவட்டத்தை சேர்ந்த ஜூட் ஜீவனா, 39, மடு கல்வி வலயத்தில் கடந்த 2004ம் ஆண்டு தொடக்கம் 2012 வரை சம்பளம் ஏதுமின்றி கல்வி கற்பித்துள்ளார். 2006 மேண்டும் போர் ஆரம்பித்த பின்னர் உலக உணவு திட்டத்தின் கீழ் பாடசாலை மாணவர்களுக்காக வழங்கப்படும் உலர் உணவுப்பொருட்களில் சிறிதளவு பாடசாலை அதிபரால் அவர்களுக்கு வழங்கப்பட்டு வந்ததாக அவர் கூறினார்.

“இறுதிக்கட்ட யுத்தத்தின் போது முகாம்களில் கூட நாம் கல்வி கற்பித்து வந்தோம். எங்களிடம் அதற்கான ஆதாரங்கள் உள்ளது. குறிப்பாக “லொக் என்றி” மற்றும் “கையொப்ப பதிவுப் புத்தகம்” “கருத்தரங்கு சன்றிதழ்”, அவற்றுக்கும் மேலாக முன்னர் நான் கல்வி கற்பித்த பகுதியில் இருந்த கல்விப் பணிப்பாளர் கையொப்பமிட்ட கடிதங்களும் எம்மிடம் உள்ளன,” என அவர் விளக்கினார்.

தொழிற்சங்க தலைவரின் ஏமாற்று வித்தைகளை விளக்கிய அவர் மேலும் கூறியதாவது: “இந்த நிலமைக்குள் தற்போதுள்ள தலைவர் சதீஷ் நான் உங்களுக்கு ஒரு மாதத்தில் அல்லது இரண்டு மாதத்தில் நியமனம் வாங்கித்தருவேன் எனக் கூறி, அவர் கேட்கும் போதெல்லாம் 186 தொண்டர் ஆசிரியர்களிடம் இருந்து, தொடர்ந்து 2,000 முதல் 3,000 ரூபாய் வரைக்கும் பணம் வாங்கிக்கொண்டு எங்களை ஏமாற்றி வருகின்றார். இப்போது அவர் வசதியாக உள்ளார். ஆனால், எங்களுக்கு எதுவுமே செய்யவில்லை. இப்போது கூட போராட்டம் முடிந்த பின்னர் கண்துடைப்பாக வீதியில் நின்று பார்த்துவிட்டு செல்கின்றார்.”

தன்னுடைய வாழ்க்கை நிலைமையை அவர் விளக்கினார். “தற்போதைய சூழலில் 3 பிள்ளைகளுடன் சரியான சிரமத்தின் மத்தியில் ஜீவிக்கும் நாங்கள் பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகள் மற்றும் அவர்களின் பரீட்சைகளுக்கான போப்பர் கூட வாங்க முடியாத நிலை உள்ளது. அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாட்டுடன் விலை உயர்வுகளும் எங்களைப் போன்றோர் வாழ்க்கை நடத்த முடியாத அளவுக்கு அதிகரித்து செல்கின்றது. இந்த நிலமை இப்படியே நீடித்தால் நாங்கள் சாக வேண்டித்தான் வரும்.”

முல்லைத்தீவு மாவட்டம் கள்ளப்பாடு பாடசாலையில் கற்பித்த சிவனேந்திரராசா கெங்காதரன், 44, இரண்டு பிள்ளைகளின் தந்தை ஆவார். அவர் 2000 ஆண்டில் இருந்து 15 வருடங்களுக்கும் மேலாக கற்பித்து வருகின்றார். “2004 இல் சுனாமி தாக்கியதில் எனது தாய், தந்தையை இழந்துவிட்டேன். அத்தோடு நான் கற்பித்த பாடசாலை சுனாமியால் தரைமட்டமானது. நேர்முகத்தேர்வில் எனது ஆவணங்கள் அழிவடைந்தமை சம்பந்தமாக முல்லைத்தீவு அரசாங்க அதிபரிடம் உறுதிப்படுத்திய கடிதம் கேட்டார்கள். வாங்கிக்கொடுத்தேன். ஆனால், நியமனத்தின் போது ஆவணமற்றவர் என புறந்தள்ளி விட்டார்கள்,” என அவர் கூறினார்.

“கடைசியாக வந்த அரசாங்க சுற்றுநிருபத்தின் அடிப்படையில் 2015க்கு முன்னர் 3 வருட சேவையை பூர்த்தி செய்திருக்க வேண்டும். எனக்கு அந்த பூர்த்தி தாராளமாக உள்ளது. அதைவிடவும் அவர்கள் கேட்ட ஆவணங்களையும் தற்போது என்னால் வழங்க முடியும். எது எப்படியோ, எங்களுக்கு நியமனம் வழங்கப்பட வேண்டும்,” என அவர் மேலும் விளக்கினார்.