மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
ஈராக்கில் உள்ள குர்திஸ்தான் பிராந்திய அரசாங்கத்தின் (KRG) பிரதேசத்தில் உள்ள தோஹூக் மாகாணத்தின் ஜாக்ஸோ மாவட்டத்தில் உள்ள சுற்றுலா கிராமமான பெரெக்ஸ் மீது புதன்கிழமை நடத்தப்பட்ட குண்டுவெடிப்பில் இரண்டு குழந்தைகள் உட்பட குறைந்தது 9 பொதுமக்கள் கொல்லப்பட்டனர், 20 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அதில் ஒரு குழந்தைக்கு ஒரு வயது எனக் கூறப்படுகிறது.
ஈராக்கின் மத்திய அரசாங்கமும் குர்திஸ்தான் பிராந்திய அரசாங்கமும் பீரங்கித் தாக்குதலுக்கு துருக்கியைக் குற்றம் சாட்டின, இருப்பினும் அங்காரா குற்றச்சாட்டை மறுத்துள்ளது. ஏப்ரல் முதல், துருக்கிய ஆயுதப் படைகள் (TSK) துருக்கிய எல்லைக்கு அருகிலுள்ள இந்த சுற்றுலாப் பகுதிக்கு அருகாமையில் குர்திஸ்தான் தொழிலாளர் கட்சியின் (PKK) படைகளுக்கு எதிராக இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றன. அங்காரா மீது ஈராக்கின் பகிரங்க குற்றச்சாட்டுகளுக்குப் பின்னர், துருக்கிக்கு எதிரான போராட்டங்கள் பாக்தாத்திலும் பிற நகரங்களிலும் வெடித்தன.
தாக்குதலில் காயமடைந்த ஹசான் தஹ்சின் அலி, தாக்குதல்களை ‘கண்மூடித்தனமான’ செயல் என்றார். மருத்துவமனையின் முன் AFP இடம் பேசுகையில், அவர், “எங்கள் இளைஞர்கள் இறுந்துவிட்டனர், எங்கள் குழந்தைகள் இறந்துவிட்டனர், யார் அவர்களை எங்களுக்கு திருப்பித் தருவார்கள்?” என்று கேட்டார்.
ஈராக்கிய பிரதம மந்திரி முஸ்தபா அல்-காதிமி துருக்கியை குற்றம்சாட்டி இந்த தாக்குதல் ‘ஈராக்கிய இறையாண்மை மற்றும் ஈராக் பொதுமக்களின் உயிர் மற்றும் பாதுகாப்பின் மீதான அப்பட்டமான மற்றும் தெளிவான மீறலாகும்’ என்றார். அத்தகைய தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்க பாக்தாத்துக்கு ‘முழு உரிமை’ உள்ளது என்றும் கூறினார். இந்த கொடூரமான படுகொலைக்கு ஈராக் தேசிய துக்க காலத்தை அறிவித்துள்ளது.
ஈராக் வெளியுறவு அமைச்சகம், “ஈராக்கிய இறையாண்மை மீதான துருக்கியின் தொடர்ச்சியான தாக்குதல்கள் பற்றிய கோப்பு ஒன்றை தயார் செய்து, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அவசர புகார் ஒன்றை சமர்ப்பிக்கவுள்ளது” என்று கூறப்படுகிறது.
ஈராக் பாக்தாத்தில் உள்ள துருக்கியின் தூதரை வெளியுறவு அமைச்சகத்திற்கு வரவழைத்து, துருக்கிய இராணுவம் உடனடியாக நாட்டிலிருந்து அனைத்து ஆயுதப் படைகளையும் திரும்பப் பெறுமாறு கோரியது. மேலும், அது அங்காராவிலிருந்து ஈராக் பொறுப்பாளர்களையும் திரும்பப் பெற்றது. எவ்வாறாயினும், ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகனின் அரசாங்கம் ஈராக் பிராந்தியத்தில் சட்டவிரோத ஆக்கிரமிப்பை நிறுத்துவதற்கான கோரிக்கைகளை நீண்ட காலமாக புறக்கணித்து வருகிறது.
ஈராக் ஜனாதிபதி பர்ஹாம் சாலியும் இந்த தாக்குதலைக் கண்டித்து, “டுஹோக்கில் துருக்கியின் குண்டுவீச்சு தாக்குதல் … கண்டனத்துக்குரியது மற்றும் கண்டிக்கத்தக்கது, மற்றும் நாட்டின் இறையாண்மையை மீறுவதாகவும், ஈராக் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகவும் உள்ளது” என்று கூறினார்.
குர்திஸ்தான் பிராந்திய அரசாங்கமும் துருக்கியை குற்றம் சாட்டியது, அது “துருக்கி படைகள் சாகோ தன்னாட்சி நிர்வாகத்தின் டார்கர் எல்லைக்கு அருகில் உள்ள பராக்கே உல்லாசப் போக்கிடத்தின் மீது குண்டுவீச்சு தாக்குதல் நடத்தப்பட்டதை வன்மையாகக் கண்டித்தது.” மேலும், “குர்திஸ்தான் பிராந்தியத்தின் எல்லைப் பகுதிகளில் துருக்கியப் படைகளுக்கும் PKK போராளிகளுக்கும் இடையிலான மோதல்கள் எங்கள் குடிமக்களின் உயிருக்கும் நல்வாழ்வுக்கும் தொடர்ந்து அச்சுறுத்தலாக மாறியுள்ளன” என்றும் அது கூறியது.
ஈராக் குர்திஸ்தானில் உள்ள Rudaw ஊடகத்தின் கூற்றுப்படி, உயர் ஷியைட் மதகுரு முக்தாதா அல்-சதர் (Muqtada al-Sadr) துருக்கிய குண்டுவீச்சைக் கண்டித்து, “துருக்கியுடனான இராஜதந்திர உறவுகளைக் குறைத்தல், வான்வழி மற்றும் தரைவழிப் பாதைகளை மூடுதல், ஐ.நா. விடம் உத்தியோகபூர்வ புகாரளித்தல் மற்றும் அங்காராவுடனான அனைத்து பாதுகாப்பு ஒப்பந்தங்களையும் இரத்து செய்தல் ஆகியவற்றின் மூலம் தனது இறையாண்மையை மீண்டும் மீண்டும் மீறும் துருக்கிக்கு எதிராக ஈராக் நடவடிக்கை எடுக்க” பரிந்துரைக்கிறார்.
மேலும், “இக்கொடிய குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் மத்திய மற்றும் தெற்கு ஈராக்கைச் சேர்ந்த 200 பேர் கொண்ட சுற்றுலாக் குழுவினர் ஆவர் என்று ஜாகோ மேயர் முஹ்சின் பஷீர் கூறியதாக” இது தெரிவித்தது.
எவ்வாறாயினும், பொதுமக்கள் இறப்புக்கு பொறுப்பேற்க அங்காரா திட்டவட்டமாக மறுத்துவிட்டது. துருக்கி வெளியுறவு அமைச்சகம் ஒரு அறிக்கையில் இவ்வாறு கூறியுள்ளது: “பொதுமக்களை குறிவைத்து நடத்தப்படும் அனைத்து வகையான தாக்குதல்களுக்கும் துருக்கி எதிரானது. துருக்கி சர்வதேச சட்டத்தின்படி பயங்கரவாதத்திற்கு எதிரான தனது போராட்டத்தை நடத்துகிறது, பொதுமக்கள், குடிமக்கள் உள்கட்டமைப்பு, வரலாற்று மற்றும் கலாச்சார சொத்துக்கள் மற்றும் சூற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் துருக்கி மிகுந்த உணர்திறன் கொண்டது.”
PKK மீதான தாக்குதலை மறைமுகமாக குற்றம் சாட்டி, அது மேலும் இவ்வாறு தெரிவித்தது: “அப்பாவி பொதுமக்களை குறிவைத்து பயங்கரவாத அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டதாக மதிப்பிடப்படும் இத்தகைய தாக்குதல்கள், பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் எங்கள் நாட்டின் நியாயமான மற்றும் உறுதியான நிலைப்பாட்டை குறிவைக்கின்றன.”
“உண்மையை வெளிப்படுத்த அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க,” உறுதியளித்து அங்காரா அறிக்கையை முடித்ததுடன், “ஈராக் அரசாங்க அதிகாரிகள் நம்பத்தகாத பயங்கரவாத அமைப்பின் சொல்லாடல்கள் மற்றும் பிரச்சாரத்தின் செல்வாக்கின் கீழ் அறிக்கைகளை வெளியிட வேண்டாம், மற்றும் இந்த துயர சம்பவத்தின் உண்மையான குற்றவாளிகளை வெளிச்சத்திற்கு கொண்டு வர ஒத்துழைக்க வேண்டும்” என்று அழைப்பு விடுக்கிறது.
அரசுக்கு சொந்தமான TRT Haber ஊடகத்திடம் பேசிய துருக்கிய வெளியுறவு மந்திரி Mevlut Cavusoglu இந்த அறிக்கையை மறுபடியும் ஒப்பித்து, “துருக்கி ஒருபோதும் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தியதில்லை என்பதை உலகம் அறியும்” என்று கூறினார்.
“பொதுமக்கள் மீது ஒருபோதும் தாக்குதல் நடத்தவில்லை” என அங்காரா கூறுவது உண்மை அல்ல. குறிப்பாக, மிக இழிவான சம்பவங்களில் ஒன்றான ரோபோஸ்கி படுகொலையில், டிசம்பர் 28, 2011 அன்று ஈராக்கில் இருந்து துருக்கிக்குள் நுழைந்த குர்திஷ் குடிமக்கள் கடத்தல்காரர்கள் மீது துருக்கிய விமானப்படை குண்டுவீசித் தாக்கியதில் 34 பேர் கொல்லப்பட்டனர்.
Rudaw இன் கூற்றுப்படி, PKK, “கொடிய சாகோ குண்டுவெடிப்புக்கு துருக்கியை குற்றம் சாட்டியதுடன், தாக்குதல் நடந்த இடத்தில் PKK-ஐச் சார்ந்த எந்தப் படைகளும் இருக்கவில்லை என்று கூறியது.”
அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் நெட் பிரைஸூம் இந்த தாக்குதலை பாசாங்குத்தனமாக கண்டித்து, “பொதுமக்கள் கொல்லப்படுவது ஏற்றுக்கொள்ள முடியாதது, மேலும் அனைத்து நாடுகளும் பொதுமக்கள் பாதுகாப்பு உட்பட சர்வதேச சட்டத்தின் கீழ் தங்கள் கடமைகளை மதிக்க வேண்டும்” என்று கூறினார். மேலும் அவர், “ஈராக் குர்திஸ்தான் பிராந்தியம் உட்பட ஈராக்கின் இறையாண்மை மற்றும் அதன் பாதுகாப்பு, ஸ்திரத்தன்மை, மற்றும் செழுமை ஆகியவற்றிற்கு எங்களது வலுவான ஆதரவை தொடர்ந்து பேணுவோம்” என்றும் கூறினார்.
2003 இல், மற்ற ஏகாதிபத்திய நாடுகள் அல்லது துருக்கி போன்ற பிராந்திய சக்திகளின் ஆதரவுடன் சட்டவிரோதமாக ஈராக்கை ஆக்கிரமித்து ஒரு குற்றவியல் நடவடிக்கையில் ஈடுபட்ட ஒரு நாட்டிலிருந்து இந்த அறிக்கை வெளிவருகிறது. ‘பேரழிவு ஆயுதங்கள்’ பற்றிய பொய்களை அடிப்படையாகக் கொண்ட இந்த ஏகாதிபத்திய தாக்குதல் ஒரு மொத்த சமூகத்தை பேரழிவிற்குட்படுத்தி, குறைந்தது 1 மில்லியன் மக்களைக் கொன்று குவித்தது, மில்லியன் கணக்கானவர்களை காயப்படுத்தியது. ஒரு காலத்தில் அரபு உலகின் மிகவும் வளர்ச்சியடைந்த நாடுகளில் ஒன்றான ஈராக்கில், உயிர் தப்பிய மில்லியன் கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற நேரிட்டது, அதனால் அவர்கள் வெளிநாடுகளில் அல்லது ஈராக்கிலேயே பேரழிவுகர நிலைமைகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.
மேலும், ஈராக்கின் இறையாண்மையை வாஷிங்டன் தொடர்ந்து காலிலிட்டு நசுக்கி வருகிறது. ஜனவரி 2020 இல் பாக்தாத்தில் ஈரானிய ஜெனரல் காசிம் சுலைமானியை வாஷிங்டன் படுகொலை செய்ததன் பின்னர், அமெரிக்கப் படைகள் நாட்டை விட்டு வெளியேற வேண்டுமென ஈராக் பாராளுமன்றம் வாக்களித்தது, ஆனால் வாஷிங்டன் அதை நிராகரித்தது.
துருக்கிக்கும் PKK க்கும் இடையிலான ஆயுத மோதல் 1984 க்கு முன்னர் இருந்து வந்தாலும், 1991 க்குப் பிந்தைய ஈராக்கிற்கு எதிரான அமெரிக்க ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பு மற்றும் சோவியத் ஒன்றியத்தை ஸ்ராலினிச அதிகாரத்துவம் கலைத்தது ஆகியவற்றின் விளைவாக வடக்கு ஈராக்கிற்குள் இதன் விரிவாக்கம் நிகழ்ந்தது. 2017 இல் KRG ஒரு சுதந்திர வாக்கெடுப்பை நடத்தியபோது அது படையெடுப்பதாக அச்சுறுத்திய போதிலும், அங்காரா இப்போது KRG உடன் கூட்டணியில் உள்ளது. இதன் மூலம் ஈராக்கில் PKK கட்டுப்பாட்டில் உள்ள ஒரு பகுதி தோன்றுவதை இது தடுக்க முயல்கிறது.
துருக்கிக்குள் இருக்கும் மில்லியன் கணக்கான குர்திஷ்களால் துருக்கிய எல்லைகளில் ஒரு சுதந்திர குர்திஷ் நாடு உருவாகும் என அஞ்சும் துருக்கிய முதலாளித்துவம், சிரியாவிலும் இதேபோன்ற கொள்கையை பின்பற்றுகிறது, அதாவது அமெரிக்க ஆதரவு மற்றும் PKK உடன் இணைக்கப்பட்ட மக்கள் பாதுகாப்பு அலகுகளை (YPG) அது நசுக்க முயற்சிக்கிறது.
சிரியாவில் YPG க்கு எதிராக தனது அரசாங்கம் ஒரு புதிய இராணுவ நடவடிக்கைக்கு தயாராகி வருவதாக மே மாதம் அறிவித்த எர்டோகன், செவ்வாயன்று தெஹ்ரானில் ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை சந்தித்தார். பேச்சுவார்த்தைக்குப் பின்னர், அவர் இவ்வாறு அறிவித்தார்: “அமெரிக்கா இப்போது யூப்ரடீஸின் கிழக்கில் இருந்து வெளியேற வேண்டும்… துருக்கியும் இதை எதிர்பார்க்கிறது, ஏனென்றால் அங்குள்ள பயங்கரவாத குழுக்களை அமெரிக்காதான் வளர்க்கிறது.”
சிரியாவில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேற வேண்டுமென ஈரானும் ரஷ்யாவும் விரும்பினாலும், தெஹ்ரானும் மாஸ்கோவும் அங்காரவுடனான தீவிர மோதலில் உள்ளன, இது சிரிய ஜனாதிபதி பஷார் அல்-அசாத்திற்கு எதிரான ஆட்சி மாற்றத்திற்கான நேட்டோவின் தசாப்த கால போரை ஆதரிப்பதுடன், வடக்கு சிரியாவின் சில பகுதிகளை ஆக்கிரமித்துள்ளது. இந்த பரந்த மோதலின் காரணமாக, லிபியாவில் இருந்து காகசஸ் வரை மற்றும் உக்ரேன் போர் வரை, தெஹ்ரான் உச்சிமாநாட்டில் ரைசி மற்றும் புட்டினிடமிருந்து தான் விரும்பிய ஆதரவை எர்டோகன் பெறவில்லை.
சமீபத்திய தகவல்களின்படி, ரஷ்ய மற்றும் ஈரானிய ஆதரவுடன் YPG கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் சிரிய அரசாங்க துருப்புகளும் கனரக ஆயுதங்களும் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. இது, நேட்டோ அங்கத்துவ நாடான துருக்கி, சிரியாவுடன் மட்டுமல்லாது, ஈரானிய மற்றும் ரஷ்ய படைகளுடன் கூட நேரடி மோதலில் ஈடுபடும் அபாயத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
உக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிரான தனது போரை நேட்டோ தீவிரப்படுத்துகையில், மத்திய கிழக்கில் நிலவும் மோதல்கள் நேரடியாக பெரும் வல்லரசுகளுக்கு இடையிலான போர்களாக விரிவடையும் அபாயமானது, சர்வதேச தொழிலாள வர்க்கத்தில் ஏகாதிபத்திய போருக்கு எதிராக ஒரு பாரிய சோசலிச இயக்கம் கட்டியெழுப்பப்பட வேண்டியதன் அவசரத்தை சுட்டிக்காட்டுகிறது.
மேலும் படிக்க
- துருக்கி, குர்திஷ் ஊடகவியலாளர் அரசியல்வாதிகளை கைதுசெய்கிறது, சிரியா மீது படையெடுக்க தயாராகிறது
- ட்ரொட்ஸ்கிசத்திற்கான போராட்டத்தில் ஒரு வரலாற்று முன்னேற்றம்: நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவானது சோசலிச சமத்துவக் குழுவை துருக்கியில் அதன் பிரிவாக நிறுவுவதற்கான விண்ணப்பத்தை ஏற்றுக்கொள்கிறது
- மாட்ரிட்டில் நடந்த போர் உச்சிமாநாட்டிற்கு மத்தியில் நேட்டோவில் சுவீடனும் பின்லாந்தும் இணைவதற்கு எதிரான வீட்டோ தடுப்பதிகாரத்தை துருக்கி திரும்பப் பெறுகிறது