துருக்கி, குர்திஷ் ஊடகவியலாளர் அரசியல்வாதிகளை கைதுசெய்கிறது, சிரியா மீது படையெடுக்க தயாராகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ஜூன் 8 அன்று தியர்பாகிரில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 20 குர்திஷ் ஊடகவியலாளர்களில் பதினாறு பேர் கைது செய்யப்பட்டு வியாழன் அன்று சிறைக்கு அனுப்பப்பட்டதுடன், ஜனாதிபதி ரசீப் தயீப் எர்டோகன் இன் அரசாங்கம் தகவல் சுதந்திரத்தின் மீது தாக்குதலை தீவிரப்படுத்துகின்றது.

உலக சோசலிச வலைத் தளம் இந்தத் தாக்குதல்களைக் கண்டிப்பதுடன், அனைத்து ஊடகவியலாளர்களையும் விடுவிக்கக் கோருகிறது. அதிகரித்து வரும் பணவீக்கம் மற்றும் வறுமை, அத்துடன் தொழிலாள வர்க்கத்திற்குள் வளர்ந்து வரும் எதிர்ப்பு மற்றும் வேலைநிறுத்த இயக்கம் ஆகியவற்றை எதிர்கொண்டுள்ள எர்டோகன் அரசாங்கம், வர்க்கப் போராட்டத்தை ஒடுக்குவதற்கும் அடிப்படை ஜனநாயக உரிமைகளைத் தாக்குவதற்கும் இராணுவவாதம் மற்றும் பேரினவாதத்தைப் பயன்படுத்த முயல்கிறது.

குர்திஷ் செய்தித்துறையில் இருந்து கைது செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் [Credit: Mezopotamya Agency]

கைது செய்யப்பட்ட ஊடகவியலாளர்களில் Dicle Fırat செய்தித்துறை அமைப்பின் (DFG) இணைத் தலைவர் Serdar Altan, Xwebûn நிர்வாக ஆசிரியர் Mehmet Ali Ertaş, JinNews இயக்குநர் Safiye Alagaş, JinNews ஆசிரியர் Gülşen Koçuk மற்றும் Mezopotamya Agency (MA) இன் ஆசிரியர் Aziz Oruç ஆகியோர் அடங்குவர்.

குர்திஸ்தான் தொழிலாளர் கட்சி (PKK), சிரியாவில் உள்ள ஜனநாயக யூனியன் கட்சி (PYD), ஈரானின் குர்திஸ்தான் சுதந்திர வாழ்க்கை கட்சி (PJAK), ஈராக்கின், குர்திஸ்தான் ஜனநாயக தீர்விற்கான கட்சி (PÇDK) ஆகியவற்றை உள்ளடக்கிய குடை அமைப்பான, சட்டவிரோதமாக்கப்பட்ட குர்திஸ்தான் சமூகங்களின் ஒன்றியத்தில் (KCK) 'உறுப்பினர்' என்ற குற்றச்சாட்டின் பேரில் ஊடகவியலாளர்கள் கைது செய்யப்பட்டனர். இந்தக் குற்றச்சாட்டு என்று அழைக்கப்படுபவை துருக்கிய அரசு பல தசாப்தங்களாக கைது செய்ய பயன்படுத்திய ஒரு சாக்குப்போக்காகும்.

Mezopotamya அமைப்பின் கூற்றுப்படி, இரகசிய மற்றும் வெளிப்படையான சாட்சியங்களின் அடிப்படையிலான விசாரணை, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை உருவாக்க KCK தலைவர்களுடனான நேர்காணல்களை 'அறிவுறுத்தல்களாக' ஊடகவியலாளர்கள் பயன்படுத்தியதாக குற்றம் சாட்டுகிறது. கைது செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளில் ஒன்று, வெளிநாடுகளில் உள்ள குர்திஷ் தொலைக்காட்சிகளுக்கு நிகழ்ச்சிகளை நடத்தியது.

Elif Üngürக்கு எதிரான ஒரு குற்றச்சாட்டு என்னவென்றால், அவர் சிறையில் உள்ள குர்திஷ் கலைஞர் Nûdem Durak இனை விடுவிப்பதற்கான பிரச்சாரத்திற்காக ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியை நடத்தினார். அவர் சர்வதேச அளவில் ரோஜர் வாட்டர்ஸ் போன்ற கலைஞர்களால் ஆதரிக்கப்பட்டார். குர்திஷ்-தேசியவாத படைகளின் கட்டுப்பாட்டில் உள்ள வடகிழக்கு சிரியாவில் உள்ள கமாஸ்லோ நகரத்தின் படங்களை தொலைக்காட்சி நிகழ்ச்சியில் காட்டியதாகவும் Üngür மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

JinNews ஆசிரியர் Gülşen Koçuk, நோய்வாய்ப்பட்ட கைதிகளுக்கான 'நீதி கண்காணிப்பு' பிரச்சாரத்தைப் பின்பற்றுகிறாரா என்று கேட்கப்பட்டதுடன், ஊடகவியலாளர் Lezgin Akdeniz இடம் JİTEM இன் கொலைகள் பற்றிய அவரது தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கான செய்தி ஆதாரங்களுடனான அவரது தொலைபேசி அழைப்புகள் பற்றி கேட்கப்பட்டது. ஒரு உத்தியோகபூர்வமற்ற அரச புலனாய்வு நிறுவனமான JİTEM 1990களில் PKK மீதான துருக்கிய அரசின் போரின் போது குர்திஷ் பிராந்தியத்தில் பல தீர்வுகாணப்படாத குடிமக்கள் கொலைகளுக்காக பெயர்பெற்றது.

ஊடகவியலாளர்களின் மீதான கைது, அவர்களின் செய்தி அறிக்கைகள் 'KCK இற்கு துருக்கிய இராணுவத்தின் நடவடிக்கை பற்றி தெரிவித்தன, KCK வின் பலாத்கார மற்றும் வன்முறைச் செயல்களை பாராட்டி ஊக்குவித்தன' எனக் கூறப்பட்டு நியாயப்படுத்தப்பட்டது. ஊடகவியலாளர்களின் வழக்கறிஞர்களில் ஒருவரான Resul Temur, BirGün நாளிதழிடம், முழுச் செயல்முறையும் சட்டவிரோதமானதும் மற்றும் முறைகேடுகள் நிறைந்தது என்று கூறினார்.

ஊடகவியலாளர்கள் தடுப்புக்காவலில் இருந்த 8 நாட்களில், அவர்களின் வழக்கு பற்றிய எந்தத் தகவலும் அவர்களுக்கு வழங்கப்படவில்லை அல்லது தடுப்புக்காவல் மற்றும் இரகசியம்காக்கும் உத்தரவும் காட்டப்படவில்லை என்று தெமூர் கூறினார். அவர் மேலும் கூறினார், “வழக்குத்தொடுனர் அலுவலகம்கூட [விசாரணையின் போது ஒரு ஊடகவியலாளரிடம்:] ‘நீங்கள் குர்திஷ் பிரச்சனையை குறிப்பிட்டுள்ளீர்கள். குர்துகளுக்கு என்ன பிரச்சனை?’ எனக்கூறியுள்ளது. ஆனால் இதை அவர்கள் பதிவேடுகளில் பதிவு செய்யவில்லை. விசாரணையில் 80 மணிநேர உள்ளடக்கம் இருந்தது. ஆனால் எங்களால் அதைப் பார்க்க முடியவில்லை... உண்மையில், அவர்கள் தடுத்துவைக்கப்படுவதற்கு காரணமேதும் இருப்பதாக காணவில்லை”.

இந்தக் கைதுகள் துருக்கியில் சட்டபூர்வமான குர்திஷ்-தேசிய மக்கள் ஜனநாயகக் கட்சி (HDP) மற்றும் அதனுடன் தொடர்புடைய கட்சிகள் மீதான தொடர்ச்சியான பொலிஸ் சோதனைகளைத் தொடர்ந்து வருகின்றன. இந்த மாத தொடக்கத்தில், மக்கள் ஜனநாயக காங்கிரஸின் (HDK) 29 நிர்வாகிகள், HDP யும் அங்கம் வகிக்கும் ஒரு குடை அமைப்பில், ஒரு பகுதியாக 'KCK உறுப்பினர்கள்' மற்றும் 'இக்குழுவுக்காக பிரச்சாரம் செய்தார்கள்' என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டனர். அவர்கள் Tekirdağ தலைமை அரசு வழக்குத்தொடுனர் அலுவலகம் மூலம் விசாரணைக்குட்படுத்தப்பட்டனர்.

வியாழனன்று, இஸ்தான்புல்லில் நடந்த வீட்டுச் சோதனைகளில் Demokratik Modernite இதழின் ஊடகவியலாளர் Saliha Aras மற்றும் HDP இன் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் உட்பட 12 பேர் கைது செய்யப்பட்டனர்.

கடந்த வாரம், HDK மற்றும் பல அமைப்புகள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து Gemlik வரை ஒரு அணிவகுப்பை ஏற்பாடு செய்ய முயன்றன. அங்கு İmralı என்ற தீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள PKK தலைவர் அப்துல்லா ஓச்சலான் மீது விதிக்கப்பட்ட தனிமைக்கு எதிர்ப்புத் தெரிவிக்க ஒழுங்கமைக்கப்பட்டது. ஓச்சலான் 1999 முதல் சிறையில் உள்ளார். கடைசியாக ஓச்சலான் தனது வழக்கறிஞர்களை சந்திக்க அனுமதிக்கப்பட்டது ஆகஸ்ட் 2019 இல் தான். கடைசியாக அவர் தொலைபேசி அழைப்புகள் செய்ய அனுமதிக்கப்பட்டது ஏப்ரல் 2020 இல் தான்.

இஸ்தான்புல், தியார்பாகிர் மற்றும் வான் போன்ற நகரங்களில் இருந்து Gemlik இற்கு அணிவகுப்பு அனுமதிக்கப்படவில்லை என்றாலும், ஆர்ப்பாட்டங்கள் மீதான பொலிஸ் தாக்குதல்களின் போது டஜன் கணக்கான மக்கள் தடுத்து வைக்கப்பட்டனர். காடிகோய், இஸ்தான்புல்லில் கைது செய்யப்பட்ட இருவர் Kadıköy இல் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

குர்திஷ் ஊடகவியலாளர் பெருமளவில் கைது செய்யப்பட்டு, குர்திஷ் அரசியல்வாதிகள் மீதான ஒடுக்குமுறை அதிகரிக்கையில், எர்டோகன் அரசாங்கம் ஈராக்கில் PKK படைகளுக்கு எதிரான தனது நடவடிக்கையைத் தொடர்வதுடன் மற்றும் சிரியாவில் அமெரிக்க ஆதரவுடையதும் ஜனநாயக யூனியன் கட்சியுடன் தொடர்புபட்ட YPG இன் இராணுவக்குழுக்களைத் தாக்கத் தயாராகிறது.

மே 23 அன்று, எர்டோகன் சிரியாவில் ஒரு படையெடுப்பை சமிக்ஞை செய்தார்: 'எங்கள் தெற்கு எல்லைகளில் 30 கிலோமீட்டர் ஆழமான பாதுகாப்பான மண்டலங்களை உருவாக்க நாங்கள் தொடங்கியுள்ள பணிகளின் மீதமுள்ள இடங்களில் விரைவில் புதிய நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்குகிறோம்' என்றார்.

அங்காரா அதன் நேட்டோ கூட்டாளிகள், குறிப்பாக வாஷிங்டனிடம் YPG ஐ சிரியாவில் பினாமிப்படையாக ஆதரிப்பதை நிறுத்த வேண்டும் என்று கோரியுள்ளது. மேலும் அதன் தெற்கு எல்லைகளில் குர்திஷ் அரசு தோன்றுவதைத் தடுக்க 2016 முதல் சிரியாவில் பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. 4.4 மில்லியன் மக்கள் வசிக்கும் சிரியாவின் 10 சதவீதத்தை துருக்கிய ஆயுதப் படைகளும் அவர்களது இஸ்லாமிய பினாமிகளும் இப்போது கட்டுப்படுத்துகின்றனர்.

சுவீடனும் பின்லாந்தும் PKK மற்றும் YPG ஐ ஆதரிக்கிறார்கள் என்ற அடிப்படையில், ரஷ்யாவிற்கு எதிராக நேட்டோவில் சேரவிரும்பும் அவற்றின் கோரிக்கைக்கு எதிராக தடுப்பதிகாரத்தை பயன்படுத்துவதாக எர்டோகன் அச்சுறுத்தியதை அடுத்து சமீபத்திய இராணுவ அறிவிப்பு வந்தது.

ஜூன் தொடக்கத்தில், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் அந்தோனி பிளிங்கென், சிரியாவில் அதன் முக்கிய பினாமிகளை இலக்காகக் கொண்ட துருக்கிய படையெடுப்பிற்கு வாஷிங்டனின் எதிர்ப்பை தெளிவாக்கினார். அவர்: 'வடக்கு சிரியாவில் எந்தவொரு மோதலையும் நாங்கள் எதிர்ப்போம். மேலும் தற்போதைய போர்நிறுத்த எல்லைகளைப் பராமரிப்பதை நாங்கள் ஆதரிக்கிறோம்' எனக் கூறினார்.

ரஷ்ய அரசாங்கமும் எர்டோகனின் திட்டங்களை விமர்சித்தது. 'சிரிய அரபு குடியரசின் சட்டபூர்வமான அரசாங்கத்தின் உடன்பாடு இல்லாத நிலையில், அத்தகைய நடவடிக்கை, சிரியாவின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை நேரடியாக மீறுவதாகும்' என ரஷ்ய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மரியா ஜாகரோவா கூறினார்: 'சிரியாவில் ஏற்கனவே உள்ள கடினமான சூழ்நிலையில் ஆபத்தான சீரழிவுக்கு வழிவகுக்கும் செயல்களில் இருந்து அங்காரா விலகியிருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்”.

மேலும், ஜூன் 9 அன்று RT இடம் பேசிய சிரிய ஜனாதிபதி பஷர் அல்-அசாத்: 'ஒரு படையெடுப்பு நடந்தால், நிச்சயமாக, சிரிய இராணுவம் நிலைநிறுத்தப்பட்ட இடங்களில் முதல் கட்டத்தில் பரந்த எதிர்ப்பு இருக்கும்...., மேலும் இது சிரியாவில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் அனுப்பப்படவில்லை, மேலும் இராணுவ நிலைமைகள் மோதலுக்கு அனுமதிக்கும் போது, நாங்கள் இதைச் செய்வோம்”என்று கூறினார்.

YPGஇன் முதுகெலும்பாக இருக்கும் அமெரிக்க ஆதரவுடைய சிரிய ஜனநாயகப் படைகள் (SDF), சிரிய ஆட்சியிடம் இருந்து இராணுவ ஆதரவைப் பெறுவதன் மூலம் சாத்தியமான துருக்கிய படையெடுப்பிற்கு பதிலளிப்பதாகக் கூறியது. எவ்வாறாயினும், அமெரிக்காவும் துருக்கியும் 2011 முதல் அசாத்தின் அரசாங்கத்திற்கு எதிராக ஆட்சிக்கான போரை நடத்தி வருகின்றன. இது நூறாயிரக்கணக்கான இறப்புகளுக்கு வழிவகுத்ததுடன் மற்றும் மில்லியன் கணக்கானவர்களை அகதிகளாக்கியது.

ஜூன் 5 அன்று, SDF தளபதி Mazloum Abdi, சிரிய அரசாங்கம் துருக்கிய விமானங்களுக்கு எதிராக அதன் வான் பாதுகாப்பு அமைப்புகளைப் பயன்படுத்த வேண்டும் என்றும், துருக்கியப் படைகளை எதிர்த்துப் போரிடுவதற்கு SDF சிரிய இராணுவத்துடன் 'இணைய தயாராகவுள்ளது' என்றும் கூறினார்.

ரஷ்ய ஆதரவு பெற்ற சிரியப் படைகளுக்கு எதிராக நேட்டோ அங்கத்துவ நாடான துருக்கியை மீண்டும் ஒருமுறை நிறுத்தக்கூடிய அபாயகரமான விரிவாக்கத்திற்கான சாத்தியத்தை இது சுட்டிக்காட்டுகிறது. சிரியாவை ஆக்கிரமிப்பதற்கான அங்காராவின் தயாரிப்புகளும், குர்திஷ்-தேசியவாதிகள் அமெரிக்கப் பினாமிகளாக இயங்கத்தயாராக இருப்பதும் துருக்கிய மற்றும் குர்திஷ் தேசியவாதத்தின் திவால்தன்மை மற்றும் பிற்போக்குத்தனமான தன்மையை அம்பலப்படுத்துகின்றன. இவை இரண்டும் ஏகாதிபத்தியத்துடனான ஒப்பந்தங்களைக் உருவாக்கிக்கொள்ள முயல்கின்றன.

போரை எதிர்க்காமல் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்க முடியாது என்பதை ஊடகவியலாளர்கள் பாரிய கைது மீண்டும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இராணுவவாதம் மற்றும் பேரினவாதத்திற்கு எதிரான ஒரு சோசலிச மற்றும் சர்வதேச வேலைத்திட்டத்தின் அடிப்படையில், அனைத்து முதலாளித்துவக் கட்சிகளிலிருந்தும் சுயாதீனமாக, தொழிலாள வர்க்கத்தில் வளர்ந்து வரும் இயக்கத்தை ஐக்கியப்படுத்துவதும் அணிதிரட்டுவதும் இதற்குத் தேவைப்படுகிறது.