ரஷ்யா மீதான நேட்டோ போருக்கு மத்தியில் ரஷ்ய-துருக்கிய பேச்சுக்கள் மேற்கத்திய தலைநகரங்களில் கவலைகளை எழுப்புகின்றன

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

துருக்கி ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகன் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் ஆகியோர் கருங்கடல் விடுமுறை நகரமான சோச்சியில் வெள்ளிக்கிழமை பேச்சுவார்த்தை நடத்தினர். ஜூலை மாதம் தெஹ்ரானில் ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியுடன் நடந்த முத்தரப்பு சந்திப்புக்கு 17 நாட்களுக்குப் பின்னர் இந்த சந்திப்பை, உக்ரேனில் ரஷ்யா மீது போர் தொடுத்தும் மாஸ்கோவிற்கு பொருளாதாரத் தடைகளை விதித்தும் வரும் நேட்டோ சக்திகள் நெருக்கமாகப் பின்தொடர்ந்தன.

உக்ரேன் போர், உக்ரேன் மற்றும் ரஷ்யாவிலிருந்து தானிய ஏற்றுமதி தொடர்பான சிரமங்கள், ரஷ்யாவிற்கும் துருக்கிக்கும் இடையிலான ஆழ்ந்த பொருளாதார, எரிசக்தி மற்றும் சுற்றுலா உறவுகள் மற்றும் சிரியா, லிபியாவில் நடந்து வரும் போர்கள் குறித்து கவனம் செலுத்திய இந்த சந்திப்பு நான்கு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது.

இருதரப்பு சந்திப்புக்கு முன், ஒரு பத்திரிகையாளர் சந்திப்பைத் தொடர்ந்து, ரஷ்யாவை இலக்காகக் கொண்ட அமெரிக்க-ஐரோப்பிய பொருளாதார மற்றும் நிதித் தடைகள் இருந்தபோதிலும், துருக்கிக்கும் ரஷ்யாவிற்கும் இடையே வளர்ந்து வரும் வர்த்தகத்தை புட்டின் வலியுறுத்தினார். அவர் கூறினார், 'கடந்த ஆண்டு எங்கள் வர்த்தகம் 57 சதவிகிதம் வளர்ந்தது, மேலும் இந்த ஆண்டின் முதல் சில மாதங்களில் ஜனவரி முதல் மே வரை இரண்டு மடங்கு அதிகரித்தது.'

துருக்கி வழியாக ஐரோப்பாவிற்கு ரஷ்யா எரிவாயு விநியோகம் நடந்து கொண்டிருப்பதையும் புட்டின் சுட்டிக்காட்டினார்: “துர்க்ஸ்ட்ரீம் (TurkStream) ஐ சில காலத்திற்கு முன்பு நாங்கள் கட்டி முடித்தோம், இன்று ஐரோப்பாவிற்கு ரஷ்ய எரிவாயுவை வழங்குவதற்கான மிக முக்கியமான பாதைகளில் ஒன்றாகும். துர்க்ஸ்ட்ரீம், ஐரோப்பாவிற்கான நமது ஹைட்ரோகார்பன் விநியோகத்தின் மற்ற எல்லா திசைகளையும் போலல்லாமல், நன்றாகவும், சீராகவும், தோல்வியுமின்றி செயல்படுகிறது.

ஜூலை பிற்பகுதியில் இஸ்தான்புல்லில் எட்டப்பட்ட 'தானிய வழித்தட' ஒப்பந்தத்திற்கு அவர் எர்டோகனுக்கு நன்றி தெரிவித்தார். 'கருங்கடல் துறைமுகங்கள் மூலம் உக்ரேனிய தானிய ஏற்றுமதி பிரச்சனை உங்கள் தனிப்பட்ட ஈடுபாடு மற்றும் ஐ.நா. செயலகத்தின் மத்தியஸ்தத்தால் தீர்க்கப்பட்டது,' என்று அவர் கூறினார்.

ஒப்பந்தத்தின் கீழ் முதல் தானியக் கப்பல் கடந்த வாரம் ஒடெஸாவை விட்டு வெளியேறி, இஸ்தான்புல்லில் சோதனை செய்யப்பட்ட பின்னர், லெபனானுக்கு சென்றது. அயர்லாந்து மற்றும் பிரிட்டனுக்கு சுமார் 60,000 டன் தானியங்கள் ஏற்றப்பட்ட மூன்று கப்பல்கள் உக்ரேனிய துறைமுகங்களில் இருந்து புறப்பட தயாராகி வருவதாக கூறப்படுகிறது.

எர்டோகன் கூறினார்: “எங்கள் இருதரப்பு உறவுகளில் நாங்கள் ஒரு புதிய பக்கத்தைத் திறப்போம். இது எரிசக்தி பற்றியது, குறிப்பாக கருங்கடல் வழியாக 'தானிய வழித்தடம்', நாங்கள் நடவடிக்கை எடுத்துள்ளோம்... துருக்கியின் பார்வையில், உலக அரங்கில் ரஷ்யா ஒரு சிறப்புப் பாத்திரத்தை வகிக்கிறது என்பதை நான் குறிப்பிட விரும்புகிறேன்.

ரஷ்யா-துருக்கி உறவுகளில் நேட்டோ நட்பு நாடுகளின் கவலை மற்றும் பொருளாதாரத் தடைகள் மீறப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் பற்றி அறிந்த எர்டோகன், 'இன்று உலகம் சோச்சியின் மீது கவனம் செலுத்தியது: சோச்சியில் அவர்கள் என்ன செய்வார்கள், சோச்சியில் என்ன பேசுவார்கள், என்ன கலந்துரையாடுவார்கள்? சோச்சியில் எங்கள் சந்திப்பை உலகம் உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கலாம். மேலும், இந்தக் கேள்விகளுக்கான சிறந்த பதில்கள் எங்கள் சந்திப்பிற்குப் பின்னர் வழங்கப்படும்.

கியேவுக்கு பைராக்டர் ட்ரோன்களை வழங்கிய அங்காரா, உக்ரேன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பைக் கண்டித்துள்ளது. எவ்வாறாயினும், அது மேற்கத்திய பொருளாதாரத் தடைகளில் பங்கேற்கவில்லை மற்றும் உக்ரேனில் போர் தொடங்கியதிலிருந்து போர் நிறுத்தத்திற்கு மத்தியஸ்தம் செய்ய முயன்றது, ஏனெனில் அது மாஸ்கோவுடன் நெருக்கமான பொருளாதார மற்றும் இராணுவ உறவுகளையும் கொண்டுள்ளது. போரை நீடித்து, கிரெம்ளினில் ஒரு ஆட்சி மாற்றத்தை திணித்தது மற்றும் ரஷ்யாவை அவர்களின் கட்டளைகளுக்கு அடிபணியச் செய்ய முற்படும் அமெரிக்கா மற்றும் பிற நேட்டோ ஏகாதிபத்திய சக்திகளுக்கு இது ஏற்றுக்கொள்ள முடியாதது.

எர்டோகன், “இஸ்தான்புல்லில் செலென்ஸ்கியுடனான சந்திப்பை நாங்கள் நடத்த முடியும் என்று புட்டினுக்கு நினைவூட்டினேன்' என்று கூறினார். துருக்கிய வெளியுறவு மந்திரி Mevlüt Çavuşoğlu ட்விட்டரில் எழுதினார், அங்காரா தானிய ஒப்பந்தங்கள் உக்ரேனில் 'போர்நிறுத்தம் மற்றும் நிலையான அமைதியை உறுதிப்படுத்த' ஒரு அடிப்படையாக செயல்படும் என்று நம்புகிறது.

இருப்பினும், கூட்டத்திற்குப் பின்னர் வெளியிடப்பட்ட கூட்டு ஊடக அறிக்கையில் இந்த பிரச்சினைகள் குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை; சிரியாவில் அமெரிக்க ஆதரவு குர்திஷ் தேசியவாத படைகள் மீதான அங்காராவின் சாத்தியமான தாக்குதலையும் குறிப்பிடவில்லை.

“போக்குவரத்து, வணிகம், விவசாயம், தொழில், நிதி, சுற்றுலா மற்றும் கட்டுமானம் போன்ற துறைகள் தொடர்பாக இரு நாடுகளின் நிகழ்ச்சி நிரலிலும் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள பிரச்சினைகள் பற்றிய ஒத்துழைப்பை அதிகரிக்க” அவர்கள் ஒப்புக்கொண்டதாக அது அறிவித்தது. 'ரஷ்யாவின் தானியங்கள், உரங்கள் மற்றும் அதன் உற்பத்திக்குத் தேவையான மூலப்பொருட்களின் பங்குகளை தடையின்றி ஏற்றுமதி செய்வது உட்பட, இஸ்தான்புல் ஒப்பந்தத்தை முழுமையாக செயல்படுத்த வேண்டும்' என்றும் கூட்டு அறிக்கை அழைப்பு விடுத்துள்ளது.

துருக்கி துருப்புக்களை சட்டவிரோதமாக சிரிய மண்ணில் வைத்திருந்தாலும், ரஷ்ய மற்றும் துருக்கிய தலைவர்கள் 'சிரியாவின் அரசியல் ஒற்றுமை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை பாதுகாப்பதற்கும்' மற்றும் 'அனைத்து பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிரான போராட்டத்தில் ஒருங்கிணைப்பு மற்றும் ஒற்றுமையுடன் செயல்படுவதற்கும்' உறுதி பூண்டுள்ளனர்.

மே மாதம் முதல், எர்டோகன் சிரியாவில் உள்ள குர்திஷ் தேசியவாத மக்கள் பாதுகாப்பு பிரிவுக்கு (YPG) எதிராக ஒரு புதிய இராணுவ நடவடிக்கைக்கு அச்சுறுத்தி வருகிறார், அங்காரா சுமார் 1 மில்லியன் சிரிய அகதிகளை மீள்குடியேற்றக்கூடிய 30-கிலோமீட்டர் ஆழமான மண்டலத்தை உருவாக்குகிறார். எவ்வாறாயினும், ஈரானுடன் இணைந்து டமாஸ்கஸ் ஆட்சியின் முக்கிய ஆதரவாளர்களில் ஒன்றான ரஷ்யா இன்னும் இந்த திட்டத்தை எதிர்க்கிறது என்று கூட்டு அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. மேலும், மாஸ்கோ, அங்காராவைப் போல, YPG ஐ ஒரு பயங்கரவாத அமைப்பாகக் கருதவில்லை மற்றும் அதனுடன் குறிப்பிடத்தக்க உறவுகளைப் பேணுகிறது.

எர்டோகனின் படையெடுப்பு அச்சுறுத்தல்களுக்குப் பின்னர், YPG முதுகெலும்பாக இருக்கும் சிரிய ஜனநாயகப் படைகள் (SDF), 'சர்வதேச சமூகத்திற்கு', அதாவது வாஷிங்டன் மற்றும் பிற ஏகாதிபத்திய சக்திகளுக்கு மட்டுமல்ல, சிரிய ஜனாதிபதி பஷார் அல்- அசாத்துக்கும் ஆதரவளிக்க வேண்டுகோள் விடுத்தன.

சமீபத்திய தகவல்களின்படி, துருக்கிக்கு எதிராக YPG-யின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் சிரிய இராணுவம் படைகளை உருவாக்குகிறது. Kommersant கருத்துதெரிவிக்கையில், “சிரிய இராணுவம் ரஷ்ய இராணுவத்தின் பங்கேற்புடன் பெரிய அளவிலான பயிற்சிகளை நடத்தியது. கூடுதலாக, முதல் முறையாக SDF போராளிகள் சிரிய இராணுவத்தில் இணைந்ததாக சமூக வலைப்பின்னல்களில் வதந்திகள் உள்ளன. உத்தியோகபூர்வமாக, இந்த அறிக்கை ரஷ்ய அல்லது சிரிய தரப்பால் உறுதிப்படுத்தப்படவில்லை, ஆனால் இது அல்-ஜசீரா தொலைக்காட்சி சேனல் மற்றும் அல்-ஷார்க் அல்-அவ்சாத் செய்தித்தாள் உட்பட மிகவும் மதிக்கப்படும் அரபு ஊடகங்களால் எடுக்கப்பட்டுள்ளது.

உச்சிமாநாட்டின் மிக முக்கியமான விளைவுகளில் ஒன்று என ரஷ்ய துணைப் பிரதமர் அலெக்சாண்டர் நோவாக் இரு தலைவர்களுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைக்குப் பின்னர் அறிவித்தார். மேலும் அவர், 'துருக்கி குடியரசிற்கு எரிவாயு விநியோகம் பற்றி கலந்துரையாடப்பட்டது, இது ஒரு வருடத்திற்கு 26 பில்லியன் கன மீட்டர் அளவுக்கு மிகப்பெரிய அளவில் வழங்கப்படுகிறது. நாங்கள் பகுதி எரிவாயு விநியோகத்தையும், ரூபிளில் பணம் செலுத்துவதையும் தொடங்குவோம் என பேச்சுவார்த்தையின் போது ஜனாதிபதிகள் ஒப்புக்கொண்டனர்,” எனக் கூறினார்.

'விநியோகங்கள் முதல் கட்டத்தில் ரஷ்ய ரூபிள்களில் ஓரளவு செலுத்தப்படும். இது உண்மையில் புதிய கட்டம், நமது பணவியல் மற்றும் நிதிய உறவுகளை மேம்படுத்துவதற்கான புதிய வாய்ப்புகள்,' என்று நோவக் மேலும் கூறினார்.

கூட்டத்திற்குப் பின்னர், எர்டோகன், துருக்கியில் ஷாப்பிங் மற்றும் தங்குவதற்கு ரஷ்யாவின் MIR அட்டையை பயன்படுத்த ரஷ்ய சுற்றுலாப் பயணிகளை அனுமதிக்கும் முயற்சிகள் உள்ளன, இது மேற்கத்திய நிதித் தடைகளைத் தவிர்க்கும் ஒரு நடவடிக்கையாகும்.

பல்வேறு பேச்சுவார்த்தைகளுக்கு பின்னர் சுவீடன் மற்றும் ஃபின்லாந்தின் நேட்டோ உறுப்பினர் மீதான தனது வீட்டோவை துருக்கி நீக்கிய போதிலும், சமீபத்திய எர்டோகன்-புட்டின் சந்திப்பு மற்றும் மேற்கத்திய தடைகளை மழுங்கடிக்கும் சாத்தியமான ஒப்பந்தங்கள் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய அரசியல் மற்றும் ஊடக ஸ்தாபகங்களில் தீவிர கவலைகளை எழுப்பியுள்ளன.

வெள்ளிக்கிழமை, வாஷிங்டன் போஸ்ட் எழுதியது, “மாஸ்கோ அதன் பொருளாதாரத்தை ஆழமாக காயப்படுத்திக் கொண்டிருக்கும் அதன் வங்கி, எரிசக்தி மற்றும் தொழில்துறை துறைகள் மீதான கட்டுப்பாடுகளைத் தவிர்க்க எர்டோகனின் உதவியை நாடுகிறது என மேற்கு மற்றும் உக்ரேன் ஆகிய இரு நாடுகளிலும் கவலைகள் அதிகரித்து வருகின்றன”.

போஸ்ட் கூறுகிறது, 'சந்திப்புக்கு முன்னதாக ஒரு ரஷ்ய முன்மொழிவு இடைமறிக்கப்பட்டு, உக்ரேனிய உளவுத்துறையால் வாஷிங்டன் போஸ்ட்டுடன் பகிர்ந்து கொள்ளப்பட்டது' எர்டோகன் 'துருக்கிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள், முனையங்கள் மற்றும் சேமிப்பகங்களில் பங்குகளை வாங்க ரஷ்யாவை அனுமதிக்க வேண்டும் — இது அடுத்த ஆண்டு ஐரோப்பிய ஒன்றியத்தின் எண்ணெய் தடையை முழுமையாக உதைத்த பின்னர் அதன் ஏற்றுமதிகளின் தோற்றத்தை மறைக்க உதவும் என்று பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர்.

அறிக்கையின்படி, 'பல அரசுக்கு சொந்தமான துருக்கிய வங்கிகள் ரஷ்யாவின் மிகப்பெரிய வங்கிகளுக்கு நிருபர் கணக்குகளை அனுமதிக்க வேண்டும் என்று ரஷ்யா கோரியது — பொருளாதார வல்லுநர்கள் மற்றும் பொருளாதாரத் தடைகள் நிபுணர்கள் மேற்கத்திய பொருளாதாரத் தடைகளை அப்பட்டமாக மீறுவதாகக் கூறுகிறார்கள் — மேலும் ரஷ்ய தொழில்துறை உற்பத்தியாளர்கள் துருக்கியில் சுதந்திர பொருளாதார மண்டலங்களுக்கு வெளியே செயல்பட அனுமதிக்கப்படுவார்கள்.”

'இத்தகைய ஏற்பாடுகளுக்கு துருக்கி ஒப்புக் கொண்டதாக பேச்சுவார்த்தைக்குப் பின்னர் எந்த அறிகுறியும் இல்லை' என போஸ்ட் ஒப்புக்கொண்டது, ஆனால் இது துருக்கியின் 'சொந்த வங்கிகள் மற்றும் நிறுவனங்களை மேற்கத்திய சந்தைகளுக்கான அணுகலை இரண்டாம் நிலை பொருளாதாரத் தடைகள் [துண்டிக்கும்] அபாயத்தில் ஆழ்த்துவதாக அச்சுறுத்தியது.”

'ரஷ்யாவுடனான துருக்கியின் ஆழமான உறவுகள் குறித்து மேற்கத்தைய தலைநகரங்களில் எச்சரிக்கை எழுகிறது' என பைனான்சியல் டைம்ஸ் (FT) எழுதியது, ஆறு மேற்கத்திய அதிகாரிகளை மேற்கோள் காட்டி, 'சோச்சியில் நான்கு மணி நேர கூட்டத்திற்குப் பின்னர், வணிகம் மற்றும் எரிசக்தியில் தங்கள் ஒத்துழைப்பை விரிவுபடுத்த துருக்கி மற்றும் ரஷ்ய தலைவர்கள் வெள்ளிக்கிழமை செய்த உறுதிமொழியைப் பற்றி கவலைப்படுகிறார்கள்” எனக் குறிப்பிட்டது.

ரஷ்யாவுடனான வர்த்தகத்திற்கான ஒரு தளமாக துருக்கி 'பெருகிய முறையில்' உள்ளது என்ற ஐரோப்பிய ஒன்றிய அதிகாரியின் கவலையை அது மேற்கோளிட்டுள்ளது. மற்றொரு மூத்த மேற்கத்திய அதிகாரி 'நாடுகள் தங்கள் நிறுவனங்களையும் வங்கிகளையும் துருக்கியில் இருந்து வெளியேற அழைக்கலாம்' என்று பரிந்துரைத்தார். 'துருக்கி ரஷ்யாவுடன் மிக நெருக்கமாக இருந்தால் எந்த எதிர்மறையான செயல்களையும் அவர் நிராகரிக்க மாட்டார்' என்று அந்த அதிகாரி மேலும் கூறினார்.

மாஸ்கோவுடனான அங்காராவின் ஆழ்ந்த உறவுகள் குறித்து முக்கிய நேட்டோ சக்திகளின் கோபம், எர்டோகனை அகற்றுவதற்கு 2016 இல் தோல்வியுற்ற இராணுவ சதித்திட்டத்திற்கு ஆதரவளிக்க, முன்னர் அவர்களை வழிநடத்தியது.

வியாழன் அன்று, துருக்கியின் முக்கிய நிதிய நாளிதழான Dünya, இவ்வாறு அறிவித்தது: 'உலகம் முழுவதிலும் உள்ள பல்வேறு நாடுகளின் சரக்குகள் துருக்கியின் பல்வேறு துறைமுகங்களில் தடை சோதனைக்குப் பின்னர் இறக்கப்படுகின்றன, மேலும் பொருட்கள் மறுஏற்றுமதி செயல்முறை மூலம் ரஷ்யாவிற்கு அனுப்பப்படும் கப்பல்களுக்கு மாற்றப்படுகின்றன. 'துருக்கியில் இருந்து ரஷ்யாவிற்கு கொண்டு செல்லப்பட்ட பொருட்களின் மொத்த அளவு, 4 பில்லியன் அமெரிக்க டாலர்களை நெருங்கியுள்ளது' என ரஷ்ய பொருளாதார மேம்பாட்டு அமைச்சர் மாக்சிம் ரெஷெட்னிகோவ் கூறியதை மேற்கோள் காட்டியுள்ளது.

Loading