மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
ஜேர்மன் கூட்டாட்சிக் குடியரசின் வரலாற்றில் மிகப்பெரிய பொலிஸ் சோதனைகளில் ஒன்று புதன்கிழமை நடைபெற்றது. சிறப்புக் காவல் படையைச் சேர்ந்த சுமார் 3,000 அதிகாரிகள் புதன்கிழமை காலை 11 மாநிலங்களில் 137 இடங்களில் அதிரடியாக தாக்கி 25 பேரைக் கைது செய்தனர். மேலும் 27 பேரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. அவர்கள் பயங்கரவாத அமைப்பின் உறுப்பினர்கள் அல்லது ஆதரவாளர்கள் என அரசு வழக்குத்தொடுனர் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் தேடுதல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
'கைது செய்யப்பட்ட குற்றம் சாட்டப்பட்டவர்கள் நவம்பர் 2021 இன் இறுதியில் நிறுவப்பட்ட ஒரு பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள். இது ஜேர்மனியில் தற்போதுள்ள அரசு அமைப்பைக் கவிழ்த்து அதன் சொந்த அரசாங்கத்தை நிறுவுவதை நோக்கமாகக் கொண்டது' என மத்திய அரசு வழக்குத்தொடுனரின் அறிக்கை குறிப்பிட்டது. மேலும் 'இராணுவ வழிமுறைகளைப் பயன்படுத்துவதன் மூலமும், அரச பிரதிநிதிகளுக்கு எதிரான வன்முறையின் மூலமும் மட்டுமே இந்தத் திட்டத்தை நிறைவேற்ற முடியும் என்பதை அமைப்பின் உறுப்பினர்கள் நோக்கமாக கொண்டிருக்கிறார்கள். இதில் கொலைக் குழுவும் அடங்கும்” என அது தெரிவித்தது.
கைது செய்யப்பட்டவர்கள் மொட்டைத் தலையுடனும், காலணிகளுடனும் உலாவும் நாஜிக்கள் அல்ல. மாறாக உயர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இளவரசர் றொயிஸ் ஹைன்ரிச் XIII (Reuss Heinrich XIII) கூட்டாட்சி அரசு வழக்கறிஞரால் அவர்களின் தலைவனாக குற்றம் சாட்டப்பட்டார். இளவரசர் றொயிஸ் ஒரு பிராங்ஃபேர்ட் நகர நில-கட்டிட முகவரும், வோக்ட்லாண்ட் பகுதியை 700 ஆண்டுகளாக ஆட்சி செய்த துரிங்கிய உயர் குடும்பத்தின் வழித்தோன்றலுமாவார். மற்றொரு முக்கிய சந்தேக நபரான முன்னாள் இராணுவ பாராசூட் பிரிவு தளபதி ரூடிகர் வி.பி. அமைப்பின் “இராணுவப் பிரிவிற்கு” தலைமை தாங்குகிறார்.
கைது செய்யப்பட்டவர்களில் டாக்டர் பட்டம் பெற்ற வழக்கறிஞர், மருத்துவர், விமானி, ஒரு இசைகலைஞர், பேர்லின் நீதிபதியும் ஜேர்மனிக்கான தீவிர வலதுசாரி மாற்றீட்டு கட்சியின் (AfD) முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான பிர்கிட் மல்சாக்-வின்கெமான், முன்னாள் உயரடுக்கு சிறப்புப் படைகள் (KSK) தளபதி மாக்சிமில்லியான். ஈ உட்பட, அப் படையினரின் முன்னாள் உறுப்பினர்களும் அடங்குவர். தேடப்பட்ட இடங்களில், பாடன்-வூர்ட்டெம்பேர்க்கில் உள்ள கால்வ் நகரிலுள்ள KSK இன் முகாமும் அடங்கும். இது ஏற்கனவே வலதுசாரி பயங்கரவாத ஹன்னிபால் வலையமைப்பின் (Hannibal network) மையமாக இருந்தது.
றைஸ் குடிமக்கள் (Reichsbürger) அமைப்பின் ஒரு பகுதியாகவும், QAnon சித்தாந்தத்தின் ஆதரவாளர்களாகவும் அடையாளம் காணப்பட்ட இந்த பயங்கரவாத வலையமைப்பு, குறிப்பிட்ட சதித் திட்டங்கள் மற்றும் மேம்பட்ட இராணுவத் தயாரிப்புகளை கொண்டிருந்ததாக அரசு வழக்குத்தொடுனர் குற்றம் சாட்டினார். இந்தக் குற்றச்சாட்டுகள் மத்திய குற்றவியல் விசாரணைக் குழுவின் (BKA) விசாரணைகளின் அடிப்படையில் அமைந்தன. இது செப்டம்பர் தொடக்கத்தில் இருந்து பல நூறு அதிகாரிகளின் ஈடுபாட்டுடன் குற்றம் சாட்டப்பட்டவர்களின் தகவல்தொடர்புகளைக் கண்காணித்து இடைமறித்து வருகிறது. வங்கிக் கணக்குகள் விசாரிக்கப்பட்டு, வலைத் தள கலந்துரையாடல் குழுக்களும் கண்காணிக்கப்பட்டன.
அரசு வழக்குத்தொடுனரின் கூற்றுப்படி, றொயிஸ் தலைமையிலான ஒரு 'குழு' 'நவம்பர் 2021 முதல் ஜேர்மனியில் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கும், அதன் சொந்த அரசு கட்டமைப்புகளை நிறுவுவதற்கும் திட்டமிடுவதற்காக தொடர்ந்து இரகசியமாக சந்தித்து வந்திருக்கிறது.' றொயிஸ் எதிர்கால அரச தலைவராக இருக்க வேண்டும், மற்ற உறுப்பினர்கள் 'நீதி,' 'வெளிவிவகாரங்கள்' மற்றும் 'சுகாதாரம்' உட்பட பல்வேறு அமைச்சகங்களுக்குப் பொறுப்பேற்க வேண்டும் என திட்டமிடப்பட்டிருந்தது.
இந்த'குழு' 'இராணுவப் பிரிவுடன்' இணைக்கப்பட்டது. சில உறுப்பினர்கள் 'கடந்த காலத்தில் இராணுவத்தில் தீவிரமாக பணியாற்றிவர்கள்'.
'ஆயுத பலத்தால் திட்டமிடப்பட்ட அதிகாரத்தை கைப்பற்றுவதற்கு அமைப்பின் இந்த பகுதியே பொறுப்பு' என வழக்குத்தொடுனர் குறிப்பிட்டார். இது 'உள்நாட்டு பாதுகாப்பு பிரிவுகள்' என்று அழைக்கப்படும் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள அமைப்பின் மூலம் நிறைவேற்றப்பட வேண்டும்” என்பதே அதன் நோக்கமாகும்.
ரூடிகர் v. P. தலைமையிலான 'இராணுவப் பிரிவின்' முன்னணி ஊழியர்கள், 'ஏனைய பணிகளுடன், புதிய உறுப்பினர்களை ஆட்சேர்ப்பு செய்தல், ஆயுதங்கள் மற்றும் பிற உபகரணங்களை வாங்குதல், இடைமறிக்க முடியாத தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத்தை நிறுவுதல் ஆகியவற்றைக் கையாண்டனர். இக்கட்டமைப்பு சுடும் பயிற்சிகளை நடத்துதல் மற்றும் 'உள்நாட்டு பாதுகாப்பு பிரிவுகளின்' எதிர்கால தங்குமிடம் மற்றும் உணவு வழங்குவதற்கான திட்டங்களுக்கும் பொறுப்பேற்கும். 'ஆட்சேர்ப்பு முயற்சிகளின் கவனம்' 'குறிப்பாக ஆயுதப்படை மற்றும் போலீஸ் உறுப்பினர்கள் மீது' இருந்தது. இந்த நோக்கத்தை செயல்படுத்த 2022 கோடையில் பல கூட்டங்கள் நடத்தப்பட்டன.
இதுவரை நடந்த விசாரணைகளின்படி, 'அமைப்பின் தனிப்பட்ட உறுப்பினர்கள் ஒரு சிறிய ஆயுதக் குழுவுடன் ஜேர்மன் கூட்டாட்சி பாராளுமன்றத்தினுள் வலுக்கட்டாயமாக ஊடுருவுவதற்கு உறுதியான தயாரிப்புகளை செய்துள்ளனர் என்ற சந்தேகமும் உள்ளது.' ஜனவரி 6, 2021 அன்று டொனால்ட் ட்ரம்பின் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி இதற்கு ஒரு முன்மாதிரியாக இருந்தது.
அரசியல்வாதிகளும் ஊடகங்களும் பயங்கரவாத வலையமைப்பிற்கு எதிரான சோதனையை, 'ஜனநாயகத்தை பாதுகாக்கும்' (தாராளவாத ஜனநாயகக் கட்சியின் நீதித்துறை அமைச்சர் மார்கோ புஷ்மான்) வெற்றியாகவும், 'நமது ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கான அர்ப்பணிப்பு' (சமூக ஜனநாயகக் கட்சியின் உள்துறை அமைச்சர் நான்சி பேசர்) வெற்றியாகவும் கொண்டாடினர்.
வலதுசாரி நாளிதழான Frankfurter Allgemeine Zeitung இக் குழுவுக்கு எதிரான அடியை, 'பாதுகாப்புப் படைகள் வலதுசாரி அச்சுறுத்தல்களை கண்டுகொள்ளாமல் இருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் அபத்தமானது' என்பதற்கான ஒரு அடையாளம் என குறிப்பிட்டது. இதைத்தவிர, செய்தித்தாள் பிரச்சினைகளைத் தவிர்க்க முயன்றது. 'இந்த நபர்களை தீவிரமாக எடுத்துக்கொள்வது அவர்களுக்கு மிகவும் மரியாதை கொடுப்பதாக இருக்கும்' என்று FAZ ஆசிரியர் ஜஸ்பர் வொன் அல்டென்போக்கம் எழுதினார்.
“‘ஹென்ரிச் XIII P.R.’ ஐ சுற்றியுள்ள குழுவின் கொடூரமான நோக்கங்கள் இருந்தபோதிலும், நாம் மிகை மதிப்பீடு செய்யக்கூடாது. சதிகாரர்கள் வெற்றி பெறுவதற்கான எந்த அடிப்படையும் இல்லை,” என்று அவர் தொடர்ந்தார்.
உண்மையில், தீவிர வலதுசாரிகளும் அதன் சித்தாந்தமும் எந்த அளவிற்கு ஊடுருவி, அரசு எந்திரம் மற்றும் ஆளும் வட்டங்களால் பாதுகாக்கப்படுகின்றன என்பதை இந்தக் குழுவின் நடவடிக்கைகள் உறுதிப்படுத்துகிறது.
ஒரு வருடத்திற்கு முன்புதான் குழு உருவாக்கப்பட்டது என்ற கூற்று வெறுமனே நம்பத்தகுந்ததல்ல. AfD, Reichsbürger பிரிவினர் மற்றும் ஹன்னிபால் வலைப்பின்னல் போன்ற பயங்கரவாத குழுக்களுடனான அதன் தொடர்புகள் பற்றி விரிவாக ஊடகத்துறையினரால் வெளிப்படுத்தப்பட்ட போதிலும், பாதுகாப்புப் படைகள் பெரும்பாலும் அப்படியே இருந்தன என்பது மிகவும் வெளிப்படையானவை.
ஜேர்மனியின் இரகசிய சேவைக்கு எட்டு ஆண்டுகள் தலைமை தாங்கிய ஹான்ஸ்-ஜோர்க் மாஸன், AfD க்கு அறிவுரை வழங்கி பாதுகாத்து, அதன் இனவெறி சித்தாந்தத்தைப் பகிர்ந்து கொண்டார். National Socialist Underground (NSU) அமைப்பின் மூவரால் அதனால் பாதிக்கப்பட்டவர்களை பல ஆண்டுகளாக தடையின்றி கொலை செய்ய முடிந்தது. அதே நேரத்தில் உளவுத்துறை முகவர்கள் அதன் உறுப்பினர்களை சுற்றியிருந்தனர். காஸல் பிராந்திய தலைவர் வால்டர் லூப்கவின் கொலையாளி NSU சூழலில் இருந்து வந்தவரும் மற்றும் அதிகாரிகளால் ஒரு குற்றவியல் வலதுசாரி தீவிரவாதி என்று அறியப்பட்டவருமாவார்.
இந்த கண்டறியப்பட்ட குழுவின் தலைவனாக கருதப்படுபவர் கூட புதியவர் அல்ல. உளவுத்துறை அமைப்புகள் வோக்ட்லாந்தின் இளவரசரை பல ஆண்டுகளாக Reichsbürger சுற்றுசூழலின் ஒரு பகுதியாக கருதுகின்றன. 'அவரது பேச்சுகள் யூத-விரோத, ஜனநாயக விரோத மற்றும் சதித்தனமான அறிக்கைகளால் நிறைந்திருந்தன' என்று Die Zeit பத்திரிகை எழுதுகிறது.
2019 ஆம் ஆண்டில், சுரிச் நகரில் Worldwebforum இல் றொயிஸ் மிகவும் பாராட்டப்பட்ட ஒரு விரிவுரையை வழங்கினார். இது அவரை தீவிர வலதுசாரி சூழலின் நட்சத்திரமாக மாற்றியது. யூத ரோத்ஸ்சைல்ட் குடும்பம் முடியாட்சிகளை அகற்றுவதற்காக போர்கள் மற்றும் புரட்சிகளுக்கு நிதியளித்ததாக அவர் குற்றம் சாட்டினார். முதலாம் உலகப் போரின் நோக்கம், ஏனையவற்றுடன் 'யூத மக்களின் பரவலை ஊக்குவிப்பதாகும்' என்று றொயிஸ் கூறுகிறார்.
றொயிஸ் வலதுசாரி பயங்கரவாதக் குழுவிற்கு நிதியுதவி செய்ததாக சந்தேகிக்கப்படுகிறது. 1998 ஆம் ஆண்டில், அவர் பழங்கால பொருட்கள், தளபாடங்கள், நகைகள் மற்றும் ஓவியங்களை 3.5 மில்லியன்களுக்கு ஏலத்தில் விற்றார். அவை ஜேர்மன் ஜனநாயகக் குடியரசின் (GDR) முடிவிற்குப் பின் இக் குடும்பத்திற்கு திரும்ப கிடைத்தவையாகும். நிலப்பிரபுத்துவ ஆளும் குடும்பத்திற்கு நிலங்கள், அரண்மனைகள், காடுகள் மற்றும் விவசாய சொத்துக்களை திரும்பப் பெறுவதற்காக றொயிஸ் பல வழக்குகளையும் தாக்கல் செய்தார். ஆனால் அவை அனைத்திலும் தோல்வியுற்றார்.
பிர்கிட் மல்சாக்-வின்கெமான் (Birgit Malsack-Winkemann) இன் வழக்கு, நீதித்துறை மற்றும் பாதுகாப்புப் படைகள் வலதுசாரி தீவிரவாதிகளை எவ்வாறு பாதுகாக்கின்றன என்பதை தெளிவாகக் காட்டுகிறது. பேர்லின் பிராந்திய நீதிமன்றத்தில் நீதிபதியான இவர், 2013 இல் AfD இல் சேர்ந்து, 2017 இல் நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் 2021 இல் தனது பதவியை இழந்து நீதித்துறைக்குத் திரும்பியபோது, பேர்லின் நீதித்துறை நிர்வாகம் முதலில் அவரை சேவையிலிருந்து நீக்க முயற்சித்தது. ஆனால் நீதிச் சேவை நீதிமன்றம் இந்த வலதுசாரி தீவிரவாதியை மீண்டும் நியமனம் செய்வதற்கு ஆதரவாக தீர்ப்பளித்தது.
அக்டோபர் 13, 2022 அன்று, ஒரு பயங்கரவாத அமைப்பை உருவாக்குவதில் மல்சாக்-வின்கெமானின் தொடர்பு குறித்து மத்திய குற்றவியல் திணைக்களம் விசாரிக்கத் தொடங்கிய நீண்ட காலத்திற்குப் பின்னர், நீதிபதிகள் பின்வருமாறு தீர்ப்பளித்தனர். நீதிமன்றத்தின் செய்தி அறிக்கையின்படி: “ஒரு நீதிபதியை ஓய்வு பெறுவதற்கு அனுப்புவதற்கான கடுமையான சட்டவிதிமுறைகள் தேவைப்படுகிறது. அவற்றை இங்கு கண்டறிய முடியாதுள்ளது. நீதிபதியின் மீதான பொது நம்பிக்கையின்மைக்கு, அவர் பதவியில் நீடிப்பது சுதந்திரமான மற்றும் பாரபட்சமற்ற நீதித்துறையின் மீதான பொதுமக்களின் நம்பிக்கையையும் பாதிக்கும் மற்றும் நீதிபதியினால் சட்டத்தை பாதுகாப்பது நம்பகத்தன்மையற்றதாக தோன்றும் அளவுக்கு இது சேதப்படுத்தப்பட்டிருக்க வேண்டும். இந்த முடிவுக்கு வருவதற்கு இங்கு போதுமான உண்மைகள் இல்லை”.
மல்சாக்-வின்கெமான் AfD இன் தீவிர வலதுசாரி 'Wing' பிரிவுடன் தொடர்பைப் பேணியது, அகதிகளைப் பற்றி இனவெறி அறிக்கைகளை வெளியிட்டது மற்றும் கோவிட்-19 பொது சுகாதாரத்திற்கு எதிராக பேர்லின் 'வேறுவிதமான சிந்தனையாளர்கள்' (Querdenker-Demo) ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றது, ஆகஸ்ட் 2020 இல் தீவிர வலதுசாரிப் படைகள் பாராளுமன்ற நுழைவாயிலை ஆக்கிரமித்ததில் பங்கேற்றது ஆகியவை நீதிபதிகளை ஈர்க்கவில்லை.
புலம்பெயர்ந்தோருக்கு எதிரான இனவெறி வெறுப்புப் பேச்சை நீதிமன்றம் தவறுதலாக வாய்தடுமாறி நிகழ்ந்த ஒன்றாக விவரித்தது. 'அரசியலமைப்பு வலைப்பதிவில்' (“Verfassungsblog“) இல் சட்ட அறிஞர் ஆண்ட்ரியாஸ் பிஷர்-லெஸ்கானோ பின்வருமாறு விளக்குகிறார். 'இந்த அறிக்கைகளில் வெளிப்படும் 'வெளிநாட்டு வெறுப்பு மனப்பான்மை' காரணமாக (நீதிமன்றம் இனவெறி என்ற வார்த்தையைத் தவிர்க்கிறது), 'எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பிரதிவாதியின் அணுகுமுறை அரசியலமைப்பிற்கு எதிரானது என்று முடிவு செய்ய முடியாது' என்று பிஷ்ஷர்-லெஸ்கானோ நீதித்துறை தீர்ப்பை மேற்கோள் காட்டுகிறார்.
2021 நவம்பரில் மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு எதிராக சோசலிச சமத்துவக் கட்சியின் வழக்கை நிராகரித்த பேர்லின் நிர்வாக நீதிமன்றத்தின் ஒரு பகுதியாக இந்த நீதித்துறை சேவை நீதிமன்றம் உள்ளது. சோசலிச சமத்துவக் கட்சி (SEP), இரகசிய சேவையானது அதன் வருடாந்திர அறிக்கையில் இருந்து அதை நீக்கிவிட்டு, 'இடதுசாரி தீவிரவாத' அமைப்பு என அவதூறு செய்வதையும் அதை இரகசிய சேவை மூலம் கண்காணிப்பதையும் நிறுத்த வேண்டும் என்று கோரியது.
'சமத்துவ, ஜனநாயக மற்றும் சோசலிச சமூகம்' என்ற அதன் கோரிக்கை ஜேர்மனியின் அடிப்படை சட்டத்திற்கு முரணானது என்ற அடிப்படையில், சோசலிச சமத்துவக் கட்சிக்கு எதிரான அதன் முடிவை நீதிமன்றம் நியாயப்படுத்தியது. இந்த தீர்ப்பைவிட நீதிமன்றத்தின் வலதுசாரி மற்றும் எதேச்சதிகார மனப்பான்மையை இன்னும் தெளிவாகக் காட்டியிருக்க முடியாது. AfD இன் தீவிர வலதுசாரி அரசியலும் இனவாதமும் அரசியலமைப்போடு ஒத்துப்போகின்றன. ஆனால் ஒரு ஜனநாயக மற்றும் சோசலிச சமூகத்திற்கான கோரிக்கை அவ்வாறு ஒத்துப்போகவில்லை!
இறுதியில், இத்தாலி, அமெரிக்கா மற்றும் பல நாடுகளிலும் தெளிவாகத் தெரிவதுபோல், தீவிர வலதுசாரி சர்வாதிகார ஆட்சி வடிவங்களை நோக்கி ஆளும் வர்க்கத்தின் நகர்வு முதலாளித்துவ அமைப்பின் ஆழந்த நெருக்கடிக்கான அதன் எதிர்வினையாகும். 90 ஆண்டுகளுக்கு முன்பு செய்தது போலவே, ஆட்சியாளர்கள் சமூகப் பதட்டங்களின் தீவிரத்திற்கும் வர்க்கப் போராட்டத்தின் வளர்ச்சிக்கும் இராணுவவாதத்துடனும் சர்வாதிகாரத்துடனும் பதிலளிக்கின்றனர். அவர்கள் உக்ரேனில் உள்ள பாசிச சக்திகளுடன் ரஷ்யாவிற்கு எதிராக தங்கள் பினாமி போரை நடத்தும் போது, கீழிருந்து வரும் தங்கள் வலதுசாரி கொள்கைகளுக்கு எந்த எதிர்ப்பையும் நசுக்குவதற்கு அவர்கள் அரசு எந்திரத்தில் தீவிர வலதுசாரி வலையமைப்புகளை திட்டமிட்டு கட்டமைக்கிறார்கள்.
இரண்டு டஜன் வலதுசாரி தீவிரவாதிகளின் கைது அதை மாற்றாது. வைய்மார் குடியரசிலும், அரசு நாஜிகளை அவ்வப்போது தண்டித்தது. ஆனால் 1933 இல் நிலைமை மோசமடைந்தபோது, அனைத்து முதலாளித்துவக் கட்சிகளும் ஹிட்லரின் சர்வாதிகார சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தன. தொழிலாள வர்க்கத்தின் ஒரு சுயாதீனமான, சோசலிசத் தாக்குதலால் மட்டுமே தீவிர வலதுசாரிகளின் எழுச்சியைத் தடுக்க முடியும்.
மேலும் படிக்க
- ஜேர்மனிய இரகசிய சேவையானது உத்தியோகபூர்வமாக ஜேர்மனிக்கான மாற்றீட்டு கட்சியை "சந்தேகத்திற்குரிய வலதுசாரி தீவிரவாத வகை" என அடையாளப்படுத்துகிறது
- ஜேர்மனியின் பிராங்பேர்ட் நகர பொலிஸ் சிறப்பு நடவடிக்கை பிரிவில் வலதுசாரி தீவிரவாத வலையமைப்பு அம்பலமானது
- புதிய சோசலிச எதிர்ப்பு சட்டங்களை நிறுத்து! ஜேர்மன் இரகசிய சேவைக்கு எதிராக சோசலிச சமத்துவக் கட்சியை பாதுகாக்கவும்!
- ஜேர்மன் இரகசிய சேவைக்கு எதிரான சோசலிச சமத்துவக் கட்சியின் வழக்கை ஆயிரக்கணக்கானோர் ஆதரிக்கின்றனர்