டிசம்பர் 10, IYSSE போர் எதிர்ப்பு பேரணி உரை

இளம் தலைமுறை மனிதகுலத்தின் தலைவிதியை தன் கைகளில் கொண்டிருக்கிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

'உக்ரேனில் போரை நிறுத்த மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் வெகுஜன இயக்கத்திற்கு!' என்ற டிசம்பர் 10 பேரணியில் பார்பரா சுலோட்டர் வழங்கிய உரையை கீழே காணலாம். சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர்கள் மற்றும் மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டது.

சுலோட்டர் இங்கிலாந்தில் உள்ள சோசலிச சமத்துவக் கட்சியின் உறுப்பினர். 95 வயதில், அவர் நான்காம் அகிலத்தின் மிக நீண்ட செயலில் உள்ள உறுப்பினர் ஆவார். IYSSE இல் சேர்வது பற்றிய கூடுதல் தகவலுக்கு, iysse.comஐப் பார்வையிடவும்.

எனக்கு 95 வயதாகிறது. முதலாம் உலகப் போர் முடிந்து ஒன்பது ஆண்டுகளுக்குப் பின்னர், ஆகஸ்ட் 1927 இல் பிறந்தேன். IYSEE அறிக்கையில் கூறியது போல, “ஏகாதிபத்தியம் அகழிப் போர் மற்றும் விஷ வாயு மற்றும் வான்வழி குண்டுவீச்சுகள், நீருக்கடியில் செல்லும் ஏவுகணைகள் கொண்ட நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் டாங்கிகள் போன்ற கொலைகார தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளின் கொடூரங்களை உலகிற்கு அறிமுகப்படுத்திய, 20 மில்லியன் மக்களைக் கொன்ற மற்றும் 21 மில்லியன் மக்களைக் காயப்படுத்திய ஒரு போராக இருந்தது.”

பார்பரா சுலோட்டர் | போருக்கு எதிரான IYSSE பேரணிக்கான கருத்துக்கள்

என் பெற்றோரின் தலைமுறைக்கு, இது 'எல்லாப் போர்களையும் முடிவுக்குக் கொண்டுவருவதற்கான போர்' என்று கருதப்பட்டது. ஆனால் எனது குழந்தைப் பருவம் இரண்டாம் உலகப் போரை மெதுவாகக் கட்டியெழுப்பிய பின்னணியில் வளர்ந்தது. ஜேர்மனியில் நாஜிக்கள் அதிகாரத்தைக் கைப்பற்றியபோது எனக்கு ஆறு வயது, ஸ்ராலினிஸ்டுகளின் துரோகத்தால் ஜேர்மனி, இத்தாலி மற்றும் ஸ்பெயினின் ஒருங்கிணைந்த பாசிசப் படைகள் ஸ்பெயினின் தொழிலாள வர்க்கப் புரட்சியை இரத்தத்தில் மூழ்கடித்தபோது ஒன்பது வயது.

எனக்கு 12 வயதாக இருந்தபோது, உலகம் இன்னும் இரத்தக்களரி மோதலில் மூழ்கியது, அது 'மொத்த போர்' என்று விவரிக்கப்பட்டது. இது கற்பனை செய்ய முடியாத அளவிலான ஒரு தொழில்மயமாக்கப்பட்ட படுகொலை ஆகும், இதன் விளைவாக 70 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இறந்தனர் — உலக மக்கள் தொகையில் 3.5 சதவீதம்.

ஜேர்மன் ஏகாதிபத்தியத்தின் குற்றங்கள் மகத்தானவை. சோவியத் ஒன்றியத்திற்கு எதிரான நிர்மூலமாக்கும் போர் ஹிட்லரின் 'இனப் போரின்” மையத்தில் இருந்தது. யூத அழிப்பு — அவுஸ்விட்ஸ்-புர்கெனாவ், ட்ரெப்ளிங்கா மற்றும் பிற இடங்களில் உள்ள நிர்மூலமாக்கும் முகாம்களில் ஆறு மில்லியன் யூதர்கள் திட்டமிட்ட வகையில் கொல்லப்பட்டனர்.

ஆனால் இது உலகளாவிய காட்டுமிராண்டித்தனத்தின் போராக இருந்தது. 1942 முதல் 1945 வரை அமெரிக்கா மற்றும் பிரிட்டனின் கண்மூடித்தனமான 'பயங்கர குண்டுவீச்சு' மூலம் ஜேர்மனியின் பெரும்பாலான நகரங்களை அழித்து 600,000 மக்களைக் கொன்றது, அவர்களில் பெரும்பாலோர் பெண்களும் குழந்தைகளுமாவர்.

அமெரிக்காவினால் ஜப்பான் மீது அணுகுண்டுகளை வீசியதே முழுமையான குற்றத்தின் இறுதிச் செயலாக இருந்தது. ஆகஸ்ட் 1945 அன்று, ஹிரோஷிமா மீது வீசப்பட்ட ஒரு அணு குண்டு, 80,000 பேரைக் கொன்றது. மேலும் பல்லாயிரக்கணக்கானோர் கதிர்வீச்சு வெளிப்பாட்டால் இறக்க நேரிட்து. இரண்டாவது குண்டு, இரண்டு நாட்களுக்குப் பின்னர், நாகசாகி மீது வீசப்பட்டது, அதில் 40,000 க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.

இரண்டு உலகப் போர்களிலும், கடந்த நூறு ஆண்டுகளின் மற்ற அனைத்து மோதல்களிலும், கொரியாவில், வியட்நாம், பால்க்லேண்ட்ஸ், ஆப்கானிஸ்தான், ஈராக், சிரியா, லிபியா மற்றும் பிற இடங்களிலுட் நடத்தப்பட்ட ஏகாதிபத்திய சக்திகளின் குற்றங்கள் அனைத்தும் சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்தின் பாதுகாப்பின் பாசாங்குத்தனமான ஆக்கிரமிப்புகளால் நியாயப்படுத்தப்பட்டுள்ளன — அனைத்தும் பொய்களின் தொகுப்பே தவிர வேறில்லை.

இன்று உலகம் மீண்டும் ஒரு படுகுழியின் விளிம்பில் நிற்கிறது. உக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்க-நேட்டோ பினாமிப் போர், ஒரு மூன்றாம் உலகப் போரை நோக்கி தீவிரமடைந்து வருகிறது — இது மனிதகுலத்தின் இருப்பையே அச்சுறுத்தும் பேரழிவாகும். இரண்டாம் உலகப் போர் முடிவடைந்த இடத்தில் அணு ஆயுதங்களைப் பயன்படுத்தி அத்தகைய போர் தொடங்கும். ஆனால் இந்த ஆயுதங்களின் அழிவுத் திறன் கற்பனை செய்ய முடியாத அளவிற்கு அதிகரித்துள்ளது. ஒரு மெகாதொன் வலுக் கொண்ட ஒரு அணுகுண்டு 80 சதுர மைல் பரப்பளவை முற்றிலுமாக அழித்துவிடும். ஆயினும்கூட, புட்டினுக்கு எதிராக பைடெனின் சமீபத்திய இறுதிப் பேரழிவு அச்சுறுத்தல், அணுசக்திப் போருக்கான திட்டங்கள் சிந்திக்கப்பட்டவை மட்டுமல்ல, ஆனால் ஏற்கனவே தயாரிக்கப்பட்டுள்ளன என்பதையும் தெளிவுபடுத்துகிறது.

இது நிறுத்தப்பட வேண்டும்! சர்வதேச தொழிலாள வர்க்கத்தால் மட்டுமே இந்த பைத்தியக்காரத்தனத்தை நிறுத்த முடியும். தொழிலாள வர்க்கம் இந்த கிரகத்தில் மிகவும் சக்திவாய்ந்த சக்தியாகும். உலகப் போரை இன்னும் கொடியதாக ஆக்கிய தொழில்நுட்பத்தின் வளர்ச்சி, உலக அளவில் தொழிலாள வர்க்கத்தை விரிவுபடுத்தி ஒன்றிணைத்துள்ளது.

நான் ஒரு நூற்றாண்டு இரத்தக்களரி போர்களைப் பற்றி பேசினேன். ஆனால் போருக்கு முடிவு கட்டவும், முதலாளித்துவத்திற்கு முடிவு கட்டவும் முயன்ற தொழிலாள வர்க்கத்தின் வெகுஜன சோசலிச இயக்கத்திற்குள் என் வாழ்க்கையை நான் வாழ்ந்திருக்கிறேன்.

உலகப் போரின் கொடூரங்கள் என்னை ஒரு சோசலிஸ்டாக மாற்ற வழிவகுத்தன. அக்டோபர் 1917 புரட்சியால் நான் ஈர்க்கப்பட்டேன் — அது முதலாம் உலகப் போரை முடிவுக்குக் கொண்டு வந்து ஒரு சிறந்த உலகிற்கான சாத்தியத்தைத் திறந்த ஒரு வரலாற்று நிகழ்வு.

ஆனால் இருபதாம் நூற்றாண்டில் எனது தலைமுறை மற்றும் பிறரின் தலைவிதி, ஸ்ராலினிசம் மற்றும் சமூக ஜனநாயகத்தின் ஆதிக்கத்தால் தீர்மானிக்கப்பட்டது, இது மில்லியன் கணக்கான மக்களின் நம்பிக்கையை கொண்டிருந்தது. இரு உலகப் போர்களுக்குப் பின்னர் வெடித்த பாரிய புரட்சிகரப் போராட்டங்களிலிருந்து, மனிதகுலத்தின் பெரும் செலவில் முதலாளித்துவத்தை பாதுகாப்பதில் அவை கருவியாக இருந்தன.

ஸ்ராலினிசத்தின் குற்றங்கள் அம்பலமானது, என்னை ட்ரொட்ஸ்கிச இயக்கத்தில் உறுப்பினராக்க வழிவகுத்தது, உலக தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு உண்மையான சோசலிச தலைமையை கட்டியெழுப்ப என் வாழ்க்கையை அர்ப்பணித்தது.

ஏறக்குறைய ஒரு நூற்றாண்டு காலம் பரவியிருக்கும் ஒரு வாழ்க்கையின் பார்வையில் இருந்து —எட்டு தசாப்தங்கள் சோசலிசத்திற்கான பல தசாப்த கால போராட்டத்திற்கு அர்ப்பணிக்கப்பட்டது— இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட இளைஞர்களுக்கு என்னால் சொல்ல முடியும், நாம் அனைவரும் எதிர்கொள்ளும் ஆபத்துகள் மகத்தானவை என்றாலும், அவற்றைக் கடப்பதற்கான சூழ்நிலைகள் இன்றுபோல் ஒருபோதும் சாதகமாக இருந்ததில்லை.

இன்று, ஸ்ராலினிசமும் சமூக ஜனநாயகமும் மில்லியன் கணக்கான மக்களின் பார்வையில் மதிப்பிழந்து போயுள்ளன. உலக சோசலிசத்திற்கான முன்னோக்கைப் பாதுகாக்க ஸ்ராலினிசத்திற்கு எதிரான லியோன் ட்ரொட்ஸ்கியின் போராட்டம், போரை வெல்லக்கூடிய ஒரே அடிப்படையாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

அந்த முன்னோக்கிற்கு தொழிலாள வர்க்கத்தின் விசுவாசத்தை வென்றெடுக்கும் நாட்கள் இவை, நான் முதன்முதலில் அரசியல் ரீதியாக சுறுசுறுப்பாக மாறியதை விட மிக மிக சாதகமானது, மற்றும் உலகளாவிய உற்பத்தி நிகழ்ச்சிப்போக்குகள் மற்றும் அசாதாரண தொழில்நுட்ப வளர்ச்சிகள், உடனடி தகவல்தொடர்புகள் ஆகியவற்றால் புறநிலை ரீதியாக ஒன்றிணைக்கப்பட்டுள்ளது. இது ஒரு ஒருங்கிணைந்த உலகத்தை உருவாக்குவதற்கான பரந்த திறனைக் காட்டுகிறது.

ஆனால், அதற்காகப் போராட வேண்டும். இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டிருக்கும் இளைஞர்களுக்கு நான் அழைப்பு விடுக்கிறேன்: உங்களது தலைமுறை இப்போது மனிதகுலத்தின் தலைவிதியை அதன் கைகளில் கொண்டிருக்கிறது. இந்த சவாலை எடுத்துக் கொள்ளுங்கள். IYSSE ஐக் கட்டியெழுப்புங்கள்! அணு ஆயுதப் போரை நோக்கிய பொறுப்பற்ற உந்துதலை நிறுத்துங்கள்! வறுமை, சுரண்டல், போர் மற்றும் அனைத்து வகையான ஒடுக்குமுறைகளும் இல்லாத சோசலிச எதிர்காலத்திற்காக போராடுங்கள்!