முன்னோக்கு

அமெரிக்க கோவிட்-19 கொள்கை: வயதான அமெரிக்கர்கள் மீதான “சமூகக் கொலை”

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

கோவிட்-19 தொற்றுநோயின் மூன்றாம் ஆண்டு முடிவடைகையில் அதன் தொடர்ச்சியாக ஒரு பயங்கரமான இறப்பு எண்ணிக்கையை அது விட்டுச்செல்கிறது. இந்த ஆண்டு ‘தொற்றுநோய் முடிந்துவிட்டது,’ என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடென் அறிவித்துள்ள போதிலும், 2022 இல் 250,000 க்கும் அதிகமான அமெரிக்கர்களை கோவிட்-19 தொற்றுநோய் கொன்று குவித்துள்ளது. இந்த இறப்பு எண்ணிக்கை முதலாம் உலகப் போரின் அல்லது இரண்டாம் உலகப் போரின் எந்த ஒரு வருடத்திலும் அமெரிக்க போர்க்களத்தில் இறந்தவர்களை விட பல மடங்கு அதிகமாகும். மேலும், நோய்தொற்றுக்கள் மற்றும் மருத்துவமனை அனுமதிப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், இறப்பு எண்ணிக்கையும் உயரும்.

இந்த ஆண்டு அமெரிக்காவில் கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டவர்களில் முக்கால்வாசி பேர் அல்லது 185,436 பேர் 65 வயதுக்கு மேற்பட்டவர்களாவர். நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (CDC) கடந்த வாரத்தில் இந்த எண்ணிக்கை 92 சதவீதமாக உயர்ந்துள்ளது என்று தெரிவித்துள்ளது.

உடல்ரீதியாக பாதிக்கப்படக்கூடிய மக்கள் பிரிவினரிடையே பாரிய மரணத்தை ஏற்றுக்கொள்ளும், மற்றும் ஊக்குவிக்கும் ஒரு கொள்கையை நடைமுறைப்படுத்துவதை ஜனநாயகம் என்று கூறிக்கொள்ளும் ஒரு நாட்டில் அதற்கான நவீன முன்மாதிரி எதுவும் இல்லை. கோவிட் பரவுவதைத் தடுப்பதற்கான பொது சுகாதார நடவடிக்கைகளை தீவிரமாகவும், திட்டமிட்டும் நீக்குவது என்பது, பெரும் எண்ணிக்கையிலான வயோதிபர்களைக் பராமரிக்கத் தேவையான சமூக ‘சுமையை’ குறைப்பதற்கான ஒரு சிறந்த வழிமுறையாக ஆளும் வர்க்கத்தின் சக்திவாய்ந்த பிரிவுகளால் பார்க்கப்படுகிறது.

உண்மையில், பைடென் நிர்வாகமும் உலகெங்கிலும் உள்ள செல்வந்த முதலாளித்துவ நாடுகளின் அரசாங்கங்களும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படாத, ஆனால் வயோதிபர்களைக் குறிவைக்கும் சமூகக் கொலைக்கான முற்றிலும் வேண்டுமென்றே திணிக்கப்படுகின்ற ஒரு கொள்கையை ஏற்றுக்கொண்டுள்ளன. ஊனமுற்றவர்களை கொலைசெய்யும் நாஜி ஆட்சியின் கொள்கையை நினைவூட்டும் ஒரு வகை கொலைவெறி மனித இனமேம்பாட்டியல் கொள்கையாகும்.

கிட்டத்தட்ட ஓராண்டுக்கு முன்பு, பைடென் நிர்வாகம் கோவிட்-19 ‘உடன் வாழும்’ ‘புதிய இயல்புநிலைக்கு’ அழைப்பு விடுத்தது. ‘இலேசானது,’ என்று பைடென் நிர்வாகம் அறிவித்ததான ஓமிக்ரோன் மாறுபாட்டின் நோய்தொற்று எழுச்சியின்போது, நோய் பரவலைத் தடுக்கும் எஞ்சிய அனைத்து நடவடிக்கைகளையும் திட்டமிட்டு அகற்றுவதற்கு வெள்ளை மாளிகை அழைப்பு விடுத்தது.

கோவிட்-19 நோயாளிகளுக்கான தனிமைப்படுத்தல் காலத்தை ஐந்து நாட்களாக குறைக்க CDC அழைப்பு விடுத்ததுடன், தினசரி கோவிட்-19 அறிக்கையிடலை நிறுத்துமாறு மாநிலங்களை ஊக்குவித்தது, மேலும் PCR பரிசோதனைகளை இழிவுபடுத்தி, முகக்கவசப் பயன்பாட்டை அவசியமற்றதாக்கியது. அமெரிக்காவில் உள்ள தொடர்பு தடமறிதலுக்கான முழு அமைப்பும் அகற்றப்பட்டது.

சமூக இடைவெளி நடைமுறையில் சாத்தியமற்றதாகி, வைரஸ் கட்டுப்பாடற்று பரவும் நிலையில், விஞ்ஞானிகளும், ஊனமுற்றவர்கள் மற்றும் ஓய்வு பெற்றவர்களுக்காக பரிந்து பேசுபவர்களும் எச்சரித்துள்ள இந்தக் கொள்கைகளானது, வயோதிபர்கள் மத்தியில் பாரிய இறப்புகளுக்கு வழிவகுக்கும்.

இது வேண்டுமென்றே எடுக்கப்பட்ட முடிவு என்பது விரைவில் தெளிவாகத் தெரிந்தது. தொற்றுநோயின் ‘புதிய இயல்பு’ என்பது, காலவரையின்றி வயதான அமெரிக்கர்களிடையே கணிசமாக அதிக இறப்பு விகிதத்தை உள்ளடக்கியது.

ஜனவரி 10 அன்று ஒரு நேர்காணலில், CDC இயக்குநர் ரோச்செல் வாலென்ஸ்கி, கோவிட்-19 இறப்பு எண்ணிக்கை “ஊக்கமளிக்கும்” கூறுகளைக் கொண்டுள்ளது எனக் கூறினார், இந்த நோய் முதன்மையாக ஊனமுற்றவர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள் மற்றும் வயதானவர்களைக் கொன்றது என்றார்.

“பெரும் எண்ணிக்கையிலான இந்த இறப்புக்கள் —75 சதவீதத்திற்கும் அதிகமானவை— குறைந்தது நான்கு கூட்டு நோய்களைக் கொண்டவர்கள் மத்தியில் தான் நிகழ்ந்துள்ளது. எனவே உண்மையில் இவர்கள் ஆரம்பத்திலேயே உடல்நிலை சரியில்லாதவர்களாவர் — ஆம், ஓமிக்ரோன் சூழலில் உண்மையில் ஊக்கமளிக்கும் செய்திகள்” என்று வாலென்ஸ்கி கூறினார்.

CDC இயக்குனர் கருத்து தெரிவித்தபோது, கோவிட்-19 நோயால் வாராந்திரம் இறக்கும் 65 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களின் விகிதம் 68 சதவீதமாக இருந்தது. இது இன்று 92 சதவீதமாக உள்ளது.

மீதமுள்ள அனைத்து கோவிட்-19 பாதுகாப்புகளையும் வெள்ளை மாளிகை அகற்றுவதானது, பாதிக்கப்படக்கூடிய மக்கள் தொற்றுநோயைத் தவிர்ப்பதை பெருகி முறையில் சாத்தியமற்றதாக்கியுள்ளது.

பராமரிப்பு இல்லங்கள் மற்றும் மருத்துவமனைகளில், பராமரிப்பாளர்கள் மற்றும் செயலில் கோவிட்-19 தொற்று உள்ள பிற தொழிலாளர்கள் ஊக்குவிக்கப்பட்டு, பல சந்தர்ப்பங்களில், வேலைக்கு வர வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர், இந்த நோயை மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்கள் உட்பட பரந்தளவிலான மக்களிடையே பரப்புகிறார்கள்.

'அனைவருக்கும்' கோவிட்-19 நோய்தொற்று ஏற்படும் என்று டாக்டர் அந்தோனி ஃபவுசி ஜனவரியில் அறிவித்தது, வைரஸின் இயல்பைப் பற்றிய பகுப்பாய்வு என்பதை விட நிர்வாகத்தின் கொள்கைகளின் விளைவாகும். எனவே, இது உள்நோக்கமுள்ள ஒரு அறிக்கையாகவும் இருந்தது.

பைடென் நிர்வாகத்தின் “புதிய இயல்பு” திட்டத்தின் சூத்திரதாரி எசேக்கியேல் இமானுவல், 2014 ஆம் ஆண்டு 'நான் ஏன் 75 வயதில் இறப்பேன் என்று நம்புகிறேன்', என்ற இழிவான கட்டுரையை எழுதினார். அதில் அவர் ‘இயற்கை அதன் போக்கை விரைவாகவும் உடனடியாகவும் மாற்றிக் கொண்டால், சமூகம்… சிறப்பாக இருக்கும்’ என்று அறிவித்தார்.

இமானுவல் மற்றும் பைடெனின் கோவிட்-19 ஆலோசனைக் குழுவின் பிற உறுப்பினர்கள், அமெரிக்க மருத்துவ சங்கத்தின் இதழில் (JAMA) தொடர்ச்சியான கட்டுரைகளை வெளியிட்டனர். அவை கோவிட்-19 உடன் 'புதிய இயல்பான' வாழ்க்கைக்கு அழைப்பு விடுத்தது, அது நோய்தொற்று கணக்கெடுப்பு மற்றும் தொற்று கண்காணிப்பு நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும்.

NBC இல் ஒரு நேர்காணலில், இமானுவல், “நாம் காய்ச்சலுடன் இருப்பது போலவே, கோவிட் நோய் நம்மைச் சுற்றி இருக்கும் போதும் நமது இயல்பான வாழ்க்கையை நாம் தொடர முடியும்” என்று கூறினார்.

நியூ யோர்க் டைம்ஸ் மற்றும் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகைகளில் இந்த திட்டம் முதல் பக்க செய்தியாக வரவேற்பைப் பெற்றது. ‘புதிய இயல்பு’ திட்டத்தின் வடிவமைப்பாளரான இமானுவல், ஆயுட்காலத்தைக் குறைப்பதற்கான ஒரு முன்னணி ஆலோசகர் என்ற உண்மையை எந்த அறிக்கையும் குறிப்பிடவில்லை.

ஆகஸ்ட் 21, 2019 அன்று மாசசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், வயதான அமெரிக்கர்கள் சமூகத்தின் மதிப்புமிக்க உறுப்பினர்கள் என்று தான் ஏன் நம்பவில்லை என்பதை இமானுவல் விளக்கினார். அதாவது, ‘நமது நுகர்வு நமது பங்களிப்புக்கு மதிப்பானதா’ என்பதே முக்கியமான கேள்வியாக இருந்தது என்று அவர் கூறினார்.

இமானுவல் மேலும் இவ்வாறு தொடர்ந்தார்,

70, 80, 90 வயது வரை சுறுசுறுப்பான வாழ்க்கை வாழும் இவர்கள் ‘என்ன செய்கிறார்கள்’ என்பதைப் பார்க்கும்போது, கிட்டத்தட்ட அவர்களின் செயல்கள் அனைத்தையும் நான் விளையாட்டாக வகைப்படுத்துகிறேன். இது அர்த்தமுள்ள வேலை இல்லை. அதாவது, அவர்கள் மோட்டார்சைக்கிள் ஓட்டுகிறார்கள்; அவர்கள் நடைப்பயணம் செய்கிறார்கள். இவையனைத்திற்கும் மதிப்பு இருக்கலாம் – என்னை தவறாக எண்ண வேண்டாம். ஆனால் அது உங்கள் வாழ்க்கையில் பிரதான விஷயமாக இருக்குமானால்? அட, அது அநேகமாக அர்த்தமுள்ள வாழ்க்கை அல்லவே.

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், மக்கள் வேலை செய்யும் வரை, அதாவது நிறுவனத்திற்கு இலாபம் ஈட்டும் வரை மட்டுமே வாழ வேண்டும். மக்கள் உழைக்காத அளவுக்கு, சமுதாயத்திற்கு சுமையாக இருக்கிறார்கள் என்றால் கூடிய சீக்கிரம் இறந்தால் நல்லது.

இமானுவலின் வாதம் அமெரிக்க ஜனநாயகம், மற்றும் சுதந்திரப் பிரகடனத்தில், “வாழ்க்கை, சுதந்திரம், மற்றும் மகிழ்ச்சியைப் பின்தொடர்வது” என்பதே உண்மையில் சமூகத்தின் ஒரே “அர்த்தமுள்ள” குறிக்கோள் என்ற அறிவொளி சிந்தனையின் முழு பாரம்பரியத்திற்கும் நேர் எதிரானது. தோமஸ் ஜெபர்சனின் பிரபலமான அறிவிப்பு, “மனித வாழ்க்கையையும் மகிழ்ச்சியையும் கவனிப்பதே தவிர, அவர்களின் அழிவு நல்ல அரசாங்கத்தின் முதலானதும் மற்றும் ஒரே சட்டபூர்வமானதுமான இலக்கு அல்ல” என்று தெரிவித்தது.

ஆனால் இமானுவலின் கொடூரமான வாதம் அதன் சொந்த தகுதியில் கூட தவறானது. ‘வேலை’ செய்யாத வயோதிபர்கள், குழந்தைகளுக்கு கற்பிப்பது, அவர்களை பராமரிப்பது, மற்றும் வளர்ப்பதன் மூலம், அவர்களின் கடந்த கால அனுபவங்கள், திறமைகள், மற்றும் ஞானத்தை நிகழ்காலத்திற்கு கொண்டு வருவதன் மூலம், மற்றும் தங்கள் அன்புக்குரியவர்களின் வாழ்க்கையை வளப்படுத்துவதன் மூலம் சமூகத்திற்கு பெரும் பங்களிப்பு செய்கிறார்கள்.

அந்த நேரத்தில் உலக சோசலிச வலைத் தளம் விளக்கியது போல், இந்த வாதம், அமெரிக்க மனித இனமேம்பாட்டியல் (eugenics) இயக்கம் மற்றும் நாஜி கருணைக் கொலைத் திட்டத்தை நியாயப்படுத்துதல் ஆகிய இரண்டிற்கும் அடிப்படையில் ஒத்ததாக இருந்தது. அதாவது, ஒரு ஊனமுற்ற நபரைக் கொல்வது என்பது முழு ‘ஆரோக்கியமான’ குடும்பத்திற்கு வளங்களை விடுவிக்க வழி செய்யும் என்று அது வாதிட்டது.

மனித இனமேம்பாட்டியல் கொள்கையாளர்களின் (eugenicists) வாதங்கள் எப்போதும் “சமூகத்தின்” தேவைகளின் அடிப்படையில் கட்டமைக்கப்படுகின்றன. உண்மையில், அவை முதலாளித்துவ வர்க்கத்தின் சுயநலமிக்க மற்றும் கொள்ளையடிக்கும் நலன்களை வெளிப்படுத்துகின்றன. ஓய்வூதியம் பெறுவோர் மற்றும் நோய்வாய்ப்பட்டவர்களுக்கு எந்த அளவிற்கு குறைவாக பணம் செலவழிக்கப்படுகிறதோ, அவ்வளவு அதிகமாக அது சமூகத்தில் ஆதிக்கம் செலுத்தும் நிதிய தன்னலக்குழுவின் இலாபங்களுக்கு நேரடியாகப் பாயும்.

வயோதிபர்களைக் கொல்லும் பிரச்சாரத்தில் முக்கியமான மற்றொரு நோக்கமும் உள்ளது. பல ஆண்டுகளாக, அமெரிக்க இராணுவ மூலோபாயவாதிகள், கூட்டாட்சி உரிமைத் திட்டங்கள், மருத்துவ காப்பீடு மற்றும் மருத்துவ உதவிக்கான செலவினங்களைக் குறைப்பதற்கான வழிமுறையாக அமெரிக்க ஆயுட்காலம் குறைக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

மூலோபாய மற்றும் சர்வதேச ஆய்வுகளுக்கான மையத்தின் (Center for Strategic and International Studies-CSIS) அந்தோனி கோர்ட்ஸ்மன் எழுதிய 2013 கட்டுரை, சாமானிய அமெரிக்கர்களின் ஆயுட்காலம் அதிகமாக நீட்டிக்கப்படுவதை அமெரிக்க முதலாளித்துவத்திற்கான ஒரு முக்கிய மூலோபாய பிரச்சினையாக முன்வைத்தது.

மத்திய அரசின் உதவி பெறத் தேவையானவர்களுக்கான செலவினங்களின் விலை உயர்வை சமாளிக்க முடியாதிருப்பதை போன்ற எவ்வித தீவிரமான வெளிநாட்டு அச்சுறுத்தலையும் அமெரிக்கா எதிர்கொள்ளவில்லை' என்று கோர்ட்ஸ்மன் எழுதினார். இது, 'பெரும்பாலும் பிரத்தியேகமாக முக்கிய சுகாதாரப் பாதுகாப்புத் திட்டங்கள், சமூகப் பாதுகாப்பு மற்றும் கடனுக்கான நிகர வட்டிச் செலவு ஆகியவற்றின் மீதான கூட்டாட்சி செலவினங்களின் அதிகரிப்பால்' உந்தப்படுகிறது என்றார்.

‘21 ஆம் நூற்றாண்டிற்கான போட்டியை’ ‘வெல்வதே’ அதன் மிகப்பெரிய இலட்சியம் என்று பைடென் நிர்வாகம் பெருகிய முறையில் அறிவித்து வரும் நிலையில், வயோதிபர்களை ஆதரிப்பதானது சமூக வளங்களை போர் தயாரிப்புகளுக்கு பாய்ச்சுவதற்கு ஒரு தடையாக இருக்கும் என மேலும் மேலும் பார்க்கப்படுகிறது.

சமுதாயத்தில் ஆதிக்கம் செலுத்தும் தன்னலக்குழுக்கள், தொழிலாளர்கள் வேலை செய்தால், ஓய்வுக்குப் பின்னர் அவர்கள் நிம்மதியாகவும், பாதுகாப்பாகவும் மற்றும் மகிழ்ச்சியாகவும் வாழ்வார்கள் என்ற எண்ணத்தை ஊக்குவித்ததான புதிய ஒப்பந்தம் மற்றும் பெரும் சமூகம் (New Deal and Great Society) என்பதன் கீழ் தொழிலாளர்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற தங்களிடம் பணம் இல்லை என்று அறிவிக்கின்றனர்.

உலக மக்கள்தொகையில் அடிமட்ட பாதிக்கு சமமான செல்வத்தை மூன்று பில்லியனர்கள் கட்டுப்பாட்டில் கொண்டுள்ள தன்னலக்குழுக்கள் தாங்கள் அதிகமாக வறுமையில் இருப்பதாகக் கூறுகின்றன.

அமெரிக்க சமூகத்தை கட்டுப்படுத்தும் ஒட்டுண்ணிகள், சமூகம் அதன் உறுப்பினர்களை அமைதி, மகிழ்ச்சி மற்றும் பாதுகாப்புடன் வாழ அனுமதிக்க முடியாது என்று அறிவிக்கிறது. யதார்த்தத்தில், இந்த சமூகத்தால் தான் இந்த தன்னலக்குழுக்களை தாங்க முடியாதுள்ளது.

முதலாளித்துவ அரசியலின் பாரிய நோய்தொற்று கொள்கையின் அழிவுகள் ஒருபுறமிருந்தாலும், கோவிட்-19 ஒரு தடுக்கக்கூடிய நோயாகவே உள்ளது. பாரிய பரிசோதனைகள், தனிமைப்படுத்தல் மற்றும் தொடர்புத் தடமறிதல் போன்ற நடவடிக்கைகளை தீவிரமாக நடைமுறைப்படுத்துவதன் மூலம், நோய் பரவுவதை நிறுத்த முடியும், மேலும் அதை அகற்றி முற்றிலும் ஒழிக்கவும் முடியும்.

கோவிட்-19 நோயின் கடும் தாக்கத்தை முடிவுக்குக் கொண்டுவருவது என்பது, நிதியத் தன்னலக்குழுவின் செல்வம் மற்றும் சலுகைகள் மீதான ஒரு முன்னோடித் தாக்குதலைக் குறிக்கும், மற்றும் அருவருக்கத்தக்க வகையில் சிலரது வாழ்க்கையை வளப்படுத்தும் மற்றும் பலரைக் கொல்லும் முதலாளித்துவ சமூக அமைப்புக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

Loading