முன்னோக்கு

ஏகாதிபத்திய சக்திகள் மூன்றாம் உலகப் போருக்குத் தயாராகின்றன: அமெரிக்கா, ஜப்பான், ஜேர்மனி மிக அதிகபட்ச இராணுவச் செலவுகளுக்குத் திட்டமிடுகின்றன

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

கடைசியாக நடந்த உலகப் போரில் சண்டையிட்ட மூன்று முக்கிய நாடுகளான அமெரிக்கா, ஜேர்மனி மற்றும் ஜப்பான், கடந்த வாரத்தில், ரஷ்யா மற்றும் சீனா உடனான இராணுவ மோதலுக்கான அவற்றின் தயாரிப்புகளில் ஒவ்வொன்றும் ஒரு பெரிய விரிவாக்கத்தைக் குறிக்கும் விதத்தில், இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய அவற்றின் மிகப்பெரிய இராணுவ வரவு செலவுத் திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்தன.

வியாழக்கிழமை, அமெரிக்க செனட் 858 பில்லியன் டாலர் தேசிய பாதுகாப்பு அங்கீகார மசோதாவுக்கு ஒப்புதல் வழங்க பெருவாரியாக வாக்களித்தது, இது வெள்ளை மாளிகை கோரியதை விட 45 பில்லியன் டாலர் அதிகம், அவ்விதத்தில் அது பென்டகன் கோரியதை விட அதிகமாக இருந்தது.

இரண்டு அமெரிக்க விமானப்படை B-1B குண்டுவீச்சு விமானங்கள், மேல் மையம், தென் கொரிய விமானப்படை F-35 போர் விமானங்கள் மற்றும் அமெரிக்க விமானப்படை F-16 போர் விமானங்கள், கீழே இடது, தென் கொரியாவில் ஒரு கூட்டு வான் பயிற்சியின் போது தென் கொரியா தீபகற்பத்தின் மீது சனிக்கிழமை, நவம்பர் 19, 2022. [AP Photo/South Korean Defense Ministry via AP]

இந்த வரவு-செலவுத் திட்டம் கடந்த ஆண்டை விட எட்டு சதவீதம் அதிகம் என்பதுடன், 2016 பென்டகன் வரவு-செலவுத் திட்டத்தை விட இராணுவ செலவினங்களில் 30 சதவீத அதிகரிப்பைக் குறிக்கிறது. சராசரி அமெரிக்க குடும்பத்தின் நிஜமான வருமானம் கடந்த 12 மாதங்களில் மூன்று சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ள நிலையில், இராணுவ செலவினங்களில் இந்த மிகப் பெரிய அதிகரிப்பு வருகிறது.

அமெரிக்க மக்களில் பெரும் பெரும்பான்மையினருக்கு, இந்த நடவடிக்கை விவாதிக்கப்பட்டு வந்ததோ அல்லது இதன் மீது வாக்களிக்கப்பட்டதோ தெரிவிக்கப்படவில்லை. பிரதிநிதிகள் சபை அல்லது செனட் சபையில் இந்த வாரம் இந்த உச்சபட்ச வரவு-செலவுத் திட்டக்கணக்கு நிறைவேற்றப்பட்டு இருப்பதும் கூட மாலை நேர கேபிள் செய்திகளில் தான் தெரிவிக்கப்பட்டது.

இந்த மசோதா, ஒவ்வொரு இராணுவத் துறைக்கும் மற்றும் ஆயுதத் திட்டத்திற்குமான நிதி ஒதுக்கீடுகளை அதிகரிக்கிறது. மூன்று Arleigh Burke ரக நடுத்தர போர்க்கப்பல்கள் மற்றும் இரண்டு வேர்ஜீனியா ரக நீர்மூழ்கிக் கப்பல்கள் உட்பட புதிய போர்க்கப்பல்களுக்காக 32 பில்லியன் டாலர் அமெரிக்க கப்பற்படைக்குக் கிடைக்கும். இன்னும் கூடுதலாக 36 F-35 ரக போர்விமானங்களை வாங்க பென்டகனுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது, இவை ஒவ்வொன்றுக்கும் சுமார் 89 மில்லியன் டாலர் செலவாகும்.

'சீனாவுடனான எதிர்கால மோதல்' என்று அவர்கள் எதைக் குறிப்பிடுகிறார்களோ அதற்காகவும், இப்போது ரஷ்யாவுக்கு எதிராக நடந்து வரும் அமெரிக்க தலைமையிலான பினாமி போருக்கும் தயாரிப்பு செய்வதே இந்த மசோதாவின் மைய நோக்கம் என்ற உண்மையை மறைக்க வேண்டுமென கூட காங்கிரஸ் சபை உறுப்பினர்கள் நினைக்கவில்லை.

'அமெரிக்காவின் வன்மையான பலத்திலும், இந்தோ-பசிபிக்கில் அமெரிக்க தோரணையைப் பலப்படுத்துவதிலும், நம் கூட்டாளிகளை ஆதரிப்பதிலும் முதலீடு செய்வதன் மூலம், இந்த ஆண்டின் NDAA [தேசிய பாதுகாப்பு அங்கீகார சட்டம்], சீனா உடனான ஓர் எதிர்கால மோதலுக்குத் தயாராவதில் உறுதியான படிகளை எடுக்கிறது,” என்று குடியரசுக் கட்சியின் விஸ்கான்சின் பிரதிநிதி மைக் கல்லாகர் தெரிவித்தார்.

அமெரிக்காவின் NDAA, முதல்முறையாக தைவானுக்கு நேரடியாக 10 பில்லியன் டாலர் இராணுவ நிதி ஒதுக்கீடு வழங்குவதன் மூலம் சீனா தொடர்பாக அமெரிக்காவின் பல தசாப்த கால பழமையான ஒரே சீனா கொள்கையை மாற்றியமைக்கும். இந்த மசோதா, அமெரிக்க அரசுக்குப் பாதுகாப்புத்துறை ஒப்பந்ததாரர்கள் அவர்கள் விரும்பிய தொகையை விதிக்கும் விதத்தில், பொதுவாக போர்க்காலங்களில் மட்டுமே பயன்படுத்தப்படும், ஏல-முறை இல்லாத ஒப்பந்தங்களையும் கொண்டு வரும்.

உக்ரேன் எப்படி ரஷ்யாவுடனான போருக்கு அமெரிக்க பினாமியாக செயல்படுகிறதோ அதே விதத்தில், சீனாவுடனான மோதலுக்கான முன்னணி பினாமியாக இந்த மசோதா தைவானை மாற்றுகிறது. ஒரு செய்திக்குறிப்பில், கல்லாகர் குறிப்பிடுகையில், இந்த மசோதா 'உக்ரேனை நோக்கி நமக்கிருக்கும் அதிகாரத்தைப் போலவே, தைவானையும் ஆயுதமயமாக்க அதேபோன்ற அதிகாரத்தை வழங்குகிறது' என்ற உண்மையைப் பாராட்டினார்.

அதற்கடுத்த நாள், வெள்ளிக்கிழமை, ஜப்பானிய அரசாங்கம் ஒரு புதிய தேசிய பாதுகாப்பு மூலோபாயத்தை வெளியிட்டது, அது அந்நாட்டின் இராணுவ வரவு-செலவுத் திட்டத்தை இரட்டிப்பாக்கும் என்பதோடு, அதன் இராணுவத்தை ஒரு எதிர்தாக்குதல் நடத்தும் படையாக மாற்றும். ஜப்பான், முதன்முறையாக, எதிர்தாக்குதல் நடத்துவதற்காகச் சீனாவைச் சென்று தாக்கும் நீண்ட தூர ஏவுகணைகளை வாங்க உள்ளது.

'தரைவழி, கடல்வழி மற்றும் வான்வழி படைகளும் மற்றும் பிற போர் திறன்களும் ஒருபோதும் தக்க வைக்கப்படக் கூடாது' என்று அறிவிக்கும் ஜப்பானின் அரசியலமைப்பை இந்த மூலோபாயம் வெளிப்படையாக மீறுகிறது.

ஆசியா முழுவதும் ஜப்பானிய ஏகாதிபத்தியம் நடத்திய குற்றங்கள் மற்றும் அமெரிக்காவுடனான போரில் ஜப்பானிய மக்கள் மீது ஏற்படுத்தப்பட்ட பேரழிவு ஆகிய இரண்டின் பயங்கரத்தையும் அடிப்படையாக வைத்து, ஜப்பானிய மக்கள் பெருவாரியாக இராணுவ மீள்ஆயுதமயமாக்கலை எதிர்க்கின்றனர்.

ஜப்பானிய ஏகாதிபத்திய அரசாங்கம் மனிதப் படுகொலைகள், பட்டினி மற்றும் கட்டாய உழைப்பு மூலம் மில்லியன் கணக்கான மக்கள் கொல்லப்படுவதை மேற்பார்வையிட்டது. ஜப்பான் படையெடுத்த சீனாவில் மட்டும், அந்தப் போரில் 10 முதல் 25 மில்லியன் அப்பாவி மக்கள் இறந்ததாக மதிப்பிடப்படுகிறது. பசிபிக்கில் அதன் போரின் போது, அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான ஜப்பானிய மக்களைக் கொன்றன, அதில் டோக்கியோ மீதான நெருப்பு குண்டுவீச்சு, ஹிரோஷிமா மற்றும் நாகசாகி மீதான அணுகுண்டு வீச்சு ஆகியவையும் உள்ளடங்கும்.

புதன்கிழமை, ஜேர்மன் நாடாளுமன்றத்தின் வரவு-செலவுத் திட்டக்கணக்கு குழு அமெரிக்காவில் இருந்து அணுசக்தி திறன் கொண்ட F35 விமானங்களை வாங்குவதற்கு ஒப்புதல் வழங்கி வாக்களித்தது. ஜேர்மனிக்குச் சொந்தமாக அணு ஆயுதங்கள் இல்லை என்றாலும், நேட்டோவின் உறுப்பினராக அது அமெரிக்காவுடன் அணு ஆயுதங்களைப் பகிர்ந்து கொள்வதில் பங்கேற்கிறது, அமெரிக்க அணு ஆயுதங்கள் ஜேர்மனியில் நிலை நிறுத்தப்பட்டுள்ளன.

F-35 போர் விமானங்களை வாங்குவது, இந்தாண்டு தொடக்கத்தில் ஜேர்மன் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 100 பில்லியன் டாலர் செலவினப் பொதியின் பாகமாக மேற்கொள்ளப்படுகிறது, இது முந்தைய ஜேர்மன் இராணுவ செலவினங்களை விட இரண்டு மடங்குக்கும் அதிகமாகும்.

இரண்டாம் உலகப் போரில் ஜேர்மன் ஏகாதிபத்தியத்தின் கொடூரமான குற்றங்களின் விளைவாக, ஜேர்மனியிலும், ஜப்பானைப் போலவே, இராணுவ மீள்ஆயுதமயமாக்கலுக்குப் பரந்த மக்கள் எதிர்ப்பு உள்ளது. நாஜிக்கள் நடத்திய யூத இனப்படுகொலையில் ஆறு மில்லியன் ஐரோப்பிய யூதர்களையும், மில்லியன் கணக்கான மற்ற ஐரோப்பிய மக்களையும் கொன்றனர், அந்தக் கண்டத்தின் பெரும் பகுதிகளை நாசமாக்கினர். ஜேர்மன் ஏகாதிபத்தியம், சோவியத் ஒன்றியத்தில் ஏறக்குறைய 19 மில்லியன் மக்களைக் கொன்றதற்கும் பொறுப்பாகிறது, அங்கே அது ஒரு மூர்க்கமான 'நிர்மூலமாக்கல் போரை' நடத்தியது.

முதல் மற்றும் இரண்டாம் உலகப் போர்களுக்கு முந்தைய ஆண்டுகளில், பாரியளவில் உலகளாவிய ஆயுதப் போட்டியில் இராணுவச் செலவினங்கள் அதிகரிக்கப்பட்டன. நூரெம்பேர்க் தீர்ப்பாணைய விசாரணையின் போது, நாஜி ஜேர்மனி தலைவர்களுக்கு எதிரான வழக்கின் ஒரு முக்கிய தூணாக இருந்தது என்னவென்றால், அந்தத் தலைவர்கள் ஆக்ரோஷமான போர் நடத்துவதற்கான தயாரிப்பில் பல ஆண்டுகளாக இராணுவக் கட்டமைப்புகளுக்கு ஒத்துழைத்து வந்தனர் என்பது தான்.

இப்போதும் கூட, ஜேர்மனியும் ஜப்பானும் இரண்டுமே, இரண்டாம் உலகப் போரில் அவற்றின் மக்களை நாசமாக்கியதைப் போலவே, அவர்கள் மக்களுக்கு அபாயகரமான விளைவுகளைக் ஏற்படுத்தும் போர்களுக்குத் தயாரிப்பு செய்து வருகின்றன.

ஜூன் மாதம், நேட்டோ ஒரு மூலோபாய ஆவணத்தை வெளியிட்டது, ஜேர்மனியை உள்ளடக்கிய அந்தக் கூட்டணி, ரஷ்யா மற்றும் சீனா உட்பட 'அணு ஆயுதமேந்திய நேரடி போட்டியாளர்களுக்கு எதிராக அதிதீவிர, பன்முக போருக்கு' தயாராக வேண்டும் என்று அது அறிவிக்கிறது.

அமெரிக்கா, ஜேர்மனி, ஜப்பான் மற்றும் பிற ஏகாதிபத்திய சக்திகள் ஒரு புதிய ஏகாதிபத்திய உலகப் போருக்குத் தயாராகி வருகின்றன. அவர்களின் இலக்குகள் ரஷ்யா மற்றும் சீனா ஆகும்: அவ்விரு நாடுகளும், பல தசாப்தங்களாக, ரஷ்ய மற்றும் சீனப் புரட்சிகளின் விளைவாக ஏகாதிபத்தியத்தின் நேரடி சுரண்டலில் இருந்து தப்பித்து இருந்தன. ஸ்ராலினிசத்தின் முதலாளித்துவ மீட்டமைப்புக்குப் பின்னரும் கூட அவை ஏகாதிபத்தியத்தின் நேரடி கட்டுப்பாட்டுக்கு வெளியே இருந்தன. ஆனால் ஏகாதிபத்திய போர் முனைவின் பிரதான இலக்குகள் இப்போது ரஷ்யாவும் சீனாவும் தான் என்றாலும், ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான போட்டிகளின் தர்க்கம் தவிர்க்கவியலாமல் இன்றைய இந்த தற்காலிக கூட்டாளிகளிடையே பகிரங்கமான மற்றும் கடுமையான மோதல்கள் மீண்டும் ஏற்பட வழி வகுக்கும்.

அமெரிக்கா தூண்டிவிட்ட, ஆத்திரமூட்டிய மற்றும் நீடிக்க செய்த, உக்ரேனில் நடந்து வரும் போர், உலகின் இந்த புதிய உலகளாவிய மறுபங்கீட்டுக்கு வினையூக்கியாக ஆகி உள்ளது. கிரிமியாவை மீட்பது என்ற உக்ரேனின் அறிவிக்கப்பட்ட குறிக்கோளை பற்றி — இது ரஷ்யாவிடம் இருந்து அணுஆயுத பதிலடியை அச்சுறுத்தும் ஓர் நகர்வாகும் — அமெரிக்க அதிகாரிகள் இப்போது வெளிப்படையாக விவாதித்து வருகின்ற நிலையில், இந்தப் போர் தீவிரமடைந்து மட்டுமே வருகிறது.

Economist பத்திரிகைக்கு இந்த வாரம் அளித்த பேட்டியில், உக்ரேனிய ஜனாதிபதி வொலொடிமிர் செலென்ஸ்கி 2014 இல் ரஷ்யா அதனுடன் இணைத்துக் கொண்ட கிரிமியாவை மீட்பதே உக்ரேனின் இலக்கு என்ற அவர் அறிவிப்பை இரட்டிப்பாக்கினார். “1991 எல்லைகளுக்கு” உக்ரேன் முன்னேறுவதற்கு என்ன 'விலை அதிகபட்சமாக இருக்கும்' என்று கேட்கப்பட்ட போது, என்ன விலையாக இருந்தாலும் அந்த தீபகற்பத்தை முழுமையாக மீட்பதே அவர் நோக்கம் என்பதை செலென்ஸ்கி தெளிவுபடுத்தினார்.

ரஷ்யா உடனான போரில் ஏற்கனவே 100,000 க்கும் அதிகமான உக்ரேனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர் அல்லது காயமடைந்துள்ளனர். அந்த தீபகற்பத்தை மீட்டெடுக்க, 'ஆனால் நீங்கள் எத்தனை உயிர்களை இழக்கப் போகிறீர்கள்' என்று கேட்ட போது, செலென்ஸ்கி பதிலளிக்க மறுத்து விட்டார்.

உண்மையில் இந்த கேள்விக்கு எந்த ஏகாதிபத்திய அரசாங்கங்களாலும் நேர்மையாக பதிலளிக்க முடியாது. டோக்கியோ மற்றும் பேர்லினில் உள்ள அரசாங்கங்கள், இரண்டாம் உலகப் போரின் கொடூரங்கள் மீண்டும் நடக்கும் அபாயத்தை எதிர்கொள்ள விரும்புகின்றனவா? அவை ஒருபோதும் மக்களுக்கு இதைக் குறித்து கூற மாட்டார்கள் என்றாலும், ஆமாம் என்பது தான் இதற்கான பதிலாக இருக்கும்.

ஏகாதிபத்திய சக்திகளின் போர்த் திட்டங்களை நிறுத்துவதற்கு, ஒரு சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் ஒழுங்கமைக்கப்பட்ட தொழிலாள வர்க்கம் மற்றும் இளைஞர்களின் அரசியல் தலையீடு தேவைப்படுகிறது. இந்த முன்னோக்கு தான், 'உக்ரேனில் போரை நிறுத்த மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் வெகுஜன இயக்கத்திற்காக!' என்ற டிசம்பர் 10 இணையவழி பேரணியில் முன்வைக்கப்பட்டது.

இந்தப் பேரணியில் வழங்கப்பட்ட உரைகளைப் படிக்குமாறும், சோசலிச சமத்துவக் கட்சிகள் மற்றும் சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் அமைப்புடன் தொடர்பு கொண்டு, அதில் இணைவதற்கு முடிவெடுக்குமாறும் நம் வாசகர்களை நாம் கேட்டுக் கொள்கிறோம்.