டிசம்பர் 10 IYSSE போர்-எதிர்ப்பு பேரணி உரை

எதிர்காலத்திற்காக போராட வேண்டுமானால், நாம் சோசலிசத்திற்காக போராட வேண்டும்!

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த 'உக்ரேனில் போரை நிறுத்த மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் பாரிய இயக்கத்திற்காக!” என்ற டிசம்பர் 10 பேரணியில் கிரிகோர் லிங்க் உரையின் அறிமுகக் குறிப்புகளை கீழே காணலாம். லிங்க், ஜேர்மனி IYSSE இன் உறுப்பினர் ஆவார். IYSSE இல் இணையவும், கூடுதல் விபரங்களைத் தெரிந்து கொள்ளவும், iysse.comதளத்தைப் பார்வையிடவும்.

சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் அமைப்பு (IYSSE) நடத்தும் 'உக்ரேனில் போரை நிறுத்த இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் பாரிய இயக்கத்திற்காக' என்ற சர்வதேச இணையவழி பேரணிக்கு உங்களை வரவேற்கிறோம்.

என் பெயர் கிரிகோர் லிங்க், நான் ஜேர்மனி IYSSE இன் ஓர் உறுப்பினர் ஆவேன். IYSSE என்பது உலக சோசலிசப் புரட்சியின் ட்ரொட்ஸ்கிசக் கட்சியான நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் இளைஞர் இயக்கமாகும்.

Gregor Link | Introduction to the IYSSE rally against war

மூன்றாம் உலகப் போராக விரிவடைய அச்சுறுத்தி வரும் உக்ரேன் போருக்கு எதிராக உலகெங்கிலுமான இளைஞர்கள் மற்றும் உழைக்கும் மக்களை ஐக்கியப்படுத்துவதே இந்தப் பேரணியின் நோக்கமாகும். என்ன விளைவுகள் ஏற்பட்டாலும் பரவாயில்லை என்று அதன் உலகளாவிய புவிசார் அரசியல் திட்டநிரலைப் பொறுப்பின்றி பின்பற்றி வரும் நேட்டோவின் ஏகாதிபத்திய இராணுவத்திற்கும், ரஷ்ய தன்னலக் குழுவினது முதலாளித்துவ ஆட்சியின் அதிகரித்து வரும் பெரும்பிரயத்தன நடவடிக்கைகளுக்கும் இடையிலான இடைத்தொடர்பு ஓர் அணுஆயுத மோதலாக விரிவடைய அச்சுறுத்துகிறது. இந்த வாரம் இரண்டு ரஷ்ய விமானப்படை தளங்கள் மீதான ட்ரோன் தாக்குதல்கள் மற்றொரு அச்சுறுத்தும் விரிவாக்கத்தைக் குறிக்கின்றன.

உக்ரேனில் இந்த அமெரிக்க-நேட்டோ பினாமிப் போர், மனித நாகரீகத்தையே முடிவுக்குக் கொண்டு வந்து விடக்கூடிய ஓர் உலகளாவிய பேரழிவாக போய் முடிவதற்கு முன்னால், அதை உடனடியாக நிறுத்தியாக வேண்டும்.

'போரில் உண்மை தான் முதலில் பலியாகிறது' என்ற பிரபல கூற்று நிரூபணமாகி வருகிறது. நேட்டோ அதிகாரங்களும் அவை கட்டுப்பாட்டில் கொண்டுள்ள ஊடகங்களும் நியாயப்படுத்துகின்ற, இந்த போரின் ஒவ்வொரு அம்சமும், பொய்களையே அடிப்படையாக கொண்டுள்ளன. இந்தப் போரை நடத்தி வரும் அரசாங்கங்களின் புவிசார் அரசியல் நலன்கள் மற்றும் பொருளாதார நலன்களைப் பரிசீலிப்பது ஒருபுறம் இருக்கட்டும், இதன் வரலாற்று தோற்றுவாய்களைக் குறித்தும் கூட அங்கே எந்த ஆய்வும் இல்லை. செய்தி விபரங்களிலோ, பிரச்சாரங்களைத் தவிர வேறொன்றும் இல்லை.

நமது இந்தப் பேரணி, உக்ரேன் போர் எவ்வாறு திட்டமிடப்பட்டது மற்றும் அது எவ்வாறு தொடங்கப்பட்டது என்பதை விளக்கும். சர்வதேச அளவில் IYSSE இன் முன்னணி உறுப்பினர்கள், பரிணமித்து வரும் இந்த மோதலின் வேர்களை அம்பலப்படுத்திக் காட்டுவார்கள். அவர்கள் இந்தப் போருக்குப் பொறுப்பான சமூக சக்திகளையும், தொடர்ந்து அது விரிவாக்கப்பட்டு வருவதற்கு அடியிலுள்ள அரசியல் பொருளாதார நோக்கங்களையும் வெளிப்படுத்துவார்கள். வரலாற்றில் இருந்தும் மற்றும் புரட்சிகர சர்வதேசியவாதத்தின் ஒட்டுமொத்த மரபியத்தில் இருந்தும் படிப்பினைகளை எடுத்து, உலகெங்கிலும் இருந்து வந்துள்ள பேச்சாளர்கள், இந்தப் போருக்கு எதிராக போராட இளைஞர்களுக்கும் தொழிலாளர்களுக்கும் ஓர் ஒருங்கிணைந்த சோசலிச முன்னோக்கை விவரிப்பார்கள்.

இந்தப் பேரணியின் நிலைப்பாடு, இந்தப் போரை நடத்தி வரும் அனைத்து அரசாங்கங்களையும் நிபந்தனையின்றி எதிர்க்கிறது. இந்தப் போரை அமெரிக்க ஏகாதிபத்தியம் தூண்டிவிடுவதை IYSSE அம்பலப்படுத்துவது, உக்ரேன் மீதான ரஷ்ய படையெடுப்புக்கான நம் எதிர்ப்பைக் குறைத்து விடாது, ரஷ்ய அரசாங்கம் ரஷ்ய தொழிலாள வர்க்கத்தின் பாதுகாப்புக்காக அல்ல, மாறாக அந்நாட்டின் செல்வந்தத் தட்டுக்களின் நலன்களுக்காக இந்தப் படையெடுப்பை நடத்தி வருகிறது.

கியேவ் அரசாங்கம் மற்றும் அதன் நேட்டோ ஆதரவாளர்களின் குற்றவியல் கொள்கைகளுக்கு உக்ரேனிய மக்கள் பொறுப்பாக மாட்டார்கள், ஆனால் அவர்கள் கொடூரமாகக் கொல்லப்படுவதை நாம் கண்டிக்கிறோம். புட்டின் ஆட்சி ரஷ்ய தேசியவாதத்திற்கு முறையீடு செய்வதை நாம் நிராகரிக்கிறோம், அக்டோபர் 1917 சோசலிசப் புரட்சியில் முதலாளித்துவத்தைத் தூக்கியெறிந்த போது தொழிலாள வர்க்கத்தால் நிராகரிக்கப்பட்ட ஒரு பிற்போக்குத்தனமான சித்தாந்தத்திற்கு புட்டின் ஆட்சி புத்துயிரூட்டியது.

இவ்விதத்தில் IYSSE, உக்ரேன் மீதான ரஷ்ய படையெடுப்பை ஏகாதிபத்திய வலதில் இருந்து அல்ல, சோசலிச இடதில் இருந்து எதிர்க்கிறது.

போருக்கு எதிராக ஓர் இயக்கத்தைக் கட்டமைக்கவும், கொலைகளை நிறுத்தவும், மோதல்கள் ஓர் அணுஆயுத மூன்றாம் உலகப் போராக விரிவடைவதைத் தடுக்கவும் அவசியமான புரிதலை உங்களுக்கு வழங்குவதே இந்தப் பேரணியின் நோக்கமாகும். இந்த பூமி தொடர்ந்து நிலைத்திருப்பதும், இளம் தலைமுறையின் எதிர்காலமும் பெரும் ஆபத்தில் உள்ளது.

முதலாளித்துவ ஆளும் வர்க்கங்களுக்கு முறையீடு செய்வதன் மூலம் இந்தப் போரை நிறுத்த முடியாது என்பதே இந்தப் பேரணியின் மையக் கருப்பொருள். நேட்டோ 'சமாதானத்தை' விரும்பவில்லை. அது போரை விரும்புகிறது. ரஷ்யாவின் எல்லைகளை நோக்கி பல தசாப்த கால நேட்டோ விரிவாக்கமும் மற்றும் கியேவில் உள்ள அதன் ஊழல்பீடித்த துணை ஆட்சியைப் பாரியளவில் ஆயுதமயப்படுத்துவதன் மூலமும் வேண்டுமென்றே இந்த மோதலைத் தூண்டிவிட்டுள்ள ஏகாதிபத்திய சக்திகள், கிரெம்ளினின் தவறாக கணக்கிடப்பட்ட, அரசியல்ரீதியில் பிற்போக்குத்தனமான, உக்ரேன் மீதான இந்த நாசகரமான படையெடுப்பை அடிவரைச் சுரண்டிக் கொள்ள தீர்மானகரமாக உள்ளன.

சுதந்திரம் மற்றும் மனித உரிமைகளுக்காகப் போர் நடத்தப்படுகிறது என்ற பிரச்சாரம் —உடந்தையாய் உள்ள முதலாளித்துவ ஊடகங்களால் முடிவின்றி மீண்டும் மீண்டும் கூறப்படும் இது— ஒரு பொய் மூட்டை ஆகும். அமெரிக்கா மற்றும் நேட்டோவுக்கு உக்ரேனில் உள்ள தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் வாழ்க்கைக் குறித்து ஒரு துளியும் அக்கறை இல்லை என்பதோடு, கிரெம்ளினுக்கு எதிரான அவர்களின் கொலைபாதக பினாமி போரில் அவை அவர்களை வெறும் பகடைக் காய்களாக கருதுகின்றன.

ரஷ்யாவை அடிபணியச் செய்து, கலைத்து, அந்நாட்டின் பரந்த மூலோபாய வள வினியோகங்களைத் தடையின்றி அணுகுவது, அவ்விதத்தில் யூரேஷிய நிலப்பரப்பின் மீது தீர்க்கமான கட்டுப்பாட்டைப் பெறுவது ஆகியவையே அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நோக்கங்களாகும். மில்லியன் கணக்கானவர்கள் கொல்லப்பட்ட மற்றும் பத்து மில்லியன் கணக்கானவர்களை இடம்பெயரச் செய்த, ஆப்கானிஸ்தான், ஈராக், லிபியா மற்றும் சிரியாவில் 30 ஆண்டு கால அமெரிக்க தலைமையிலான போர்களுக்குப் பின்னர், வோல் ஸ்ட்ரீட்டும் பென்டகனும் அதிகரித்தளவில் அமெரிக்காவின் மூலோபாய போட்டியாளர்களை நோக்கி திரும்பி வருகின்றன. வாஷிங்டனின் போர் வல்லுனர்களின் பார்வையில், உக்ரேனில் நடத்தப்பட்டு வரும் மனித படுகொலைகள், சீனாவுக்கு எதிரான போருக்கும் மற்றும் 'வல்லரசு மோதலுக்கும்' வெறுமனே ஒரு வெள்ளோட்டம் மட்டுமே ஆகும்.

ஐரோப்பிய சக்திகளோ அவற்றின் சொந்த ஏகாதிபத்திய திட்டநிரல்களை ஆக்ரோஷமாக பின்பற்றி வருகின்றன. அமெரிக்கா மற்றும் கனடாவைப் போலவே, ரஷ்யாவுக்கும் உக்ரேனுக்கும் இடையிலான அனைத்து பேச்சுவார்த்தைகளையும் சிதைத்துள்ளதுடன், எந்த போர்நிறுத்தத்தையும் நிராகரித்து விட்டன மற்றும் தீவிரமாக போரை விரிவுபடுத்தி வருகின்றன. உக்ரேனை ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் நேட்டோவின் கீழ் கொண்டு வர திட்டமிட்டு, அவை உக்ரேனிய மக்கள் கதியைக் குறித்து முற்றிலும் அலட்சியத்தைக் காட்டி உள்ளன. ஜேர்மன் அரசாங்கம், ஹிட்லருக்குப் பின்னர் மிகப் பெரியளவில் மீளஆயுதமயப்படலைத் தொடங்குவதற்கு இந்தப் போரைக் கைப்பற்றியது — இது நீண்டகாலமாகத் தயாரிப்பு நிலையில் இருந்தது — அது ஐரோப்பாவின் மிகப்பெரிய இராணுவ சக்தியாக மாறும் நோக்கில் உள்ளது. சோவியத் ஒன்றியத்திற்கு எதிரான நாஜி நிர்மூலமாக்கல் போருக்கு எண்பது ஆண்டுகளுக்குப் பின்னர், ஜேர்மன் ஏகாதிபத்தியம் மீண்டும் ரஷ்யாவுக்கு எதிராக உக்ரேனுக்குள் டாங்கிகளை அனுப்பி வருகிறது.

ஜேர்மன் ஆளும் வர்க்கம் 20 ஆம் நூற்றாண்டில் இரண்டு முறை உக்ரேன் மீது படையெடுத்து, அதன் மில்லியன் கணக்கான மக்களைப் படுகொலை செய்தது. நாஜி ஜேர்மனியின் பாசிசப் படைகளின் இனப்படுகொலை நடவடிக்கை மொத்தத்தில் சோவியத் ஒன்றியத்தின் 27 மில்லியன் பேரையும், ஆறு மில்லியனுக்கும் அதிகமான யூதர்களையும் படுகொலை செய்தது. தற்போதைய இந்தப் போர் பிரச்சாரமும் அதே பாரம்பரியத்தில் நிற்கிறது — இன்றைய இந்தச் சண்டையும் கூட பல்வேறு அதே இடங்களில் நடக்கின்றன. பேர்லின் அதன் அமெரிக்க, கனேடிய மற்றும் பிரிட்டிஷ் கூட்டாளிகளுடன் சேர்ந்து, மூச்சுமுட்டும் அளவுக்கு நாஜி குற்றங்களைக் குறைத்துக் காட்டும் பிரச்சாரத்துடன், உக்ரேனில் நாஜி இராணுவ (Wehrmacht) ஒத்துழைப்பாளர்களின் அரசியல் வாரிசுகளை ஆயுதமயப்படுத்தி வருகிறது.

ஐரோப்பிய ஆளும் வர்க்கங்கள் அவற்றின் எல்லைகளையும், சந்தைகள் மற்றும் உலகளாவிய செல்வாக்கையும் விரிவுபடுத்துவதில் உறுதியாக உள்ளன, இது நேட்டோ சக்திகளுக்கு இடையேயும் பதட்டங்களைத் தீவிரப்படுத்துகிறது. பால்டிக் கடலில் இருந்து கிழக்கு மத்தியதரைக் கடல் வரை, இரண்டு உலகப் போர்களுக்கு வழிவகுத்த ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான போட்டிகள், ஐரோப்பாவிலும், உலகெங்கிலும் மீண்டும் உடைத்துக் கொண்டு முன்வருகின்றன.

நம் அறிக்கையில், முதலாளித்துவ தன்னலக்குழுக்கள் அவற்றின் இலாபங்களுக்காக மில்லியன் கணக்கானவர்களை உயிர்தியாகம் செய்ய வைக்க விரும்புகின்றனர் என்பதை அவை 20 ஆம் நூற்றாண்டில் இரண்டு முறை தெளிவுபடுத்தி உள்ளன என்ற உண்மையைக் கவனிக்குமாறு நாம் கேட்டுக் கொள்கிறோம். உலகின் மேற்புறத்தில் பரந்த பல பகுதிகளில் வாழும் மக்கள், வரலாற்றில் முன்னெப்போதும் கண்டிராத அளவில் காட்டுமிராண்டித்தனத்தைப் பார்த்து விட்டனர். நாம் எழுதினோம்:

1914 இல் வெடித்த முதலாம் உலகப் போரில், 20 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டனர். ஏகாதிபத்தியம் அதிபயங்கரமான போர்முறைகளையும், நச்சு வாயுக்களையும், விமான குண்டுவீச்சில் படுகொலை செய்வதற்கான புதிய முறை தொழில்நுட்பங்களையும், நீருக்கடியில் இருந்து ஏவுகணைகளைச் செலுத்தும் நீர்மூழ்கிக் கப்பல்களையும், டாங்கிகளையும் உலகிற்கு அறிமுகப்படுத்தியது.

ஆனால் அந்த உலகளாவிய மோதலின் கொடூரங்கள், முதல் உலகப் போர் முடிந்து 21 ஆண்டுகளுக்குப் பின்னர், 1939 இல் தொடங்கிய இரண்டாம் உலகப் போரின் காட்டுமிராண்டித்தனத்திற்கு ஒரு வெள்ளோட்டமாக மட்டுமே இருந்தன. இரண்டாம் உலகப் போரில், உத்தியோகபூர்வ மற்றும் வேண்டுமென்ற செய்யப்பட்ட ஒரு கொள்கை விஷயமாக, அப்பாவி மக்கள் கும்பல் கும்பலாக அழிக்கப்பட்டனர். தொழில்மயமாக்கப்பட்ட யூத இனப்படுகொலை மற்றும் முக்கிய நகரங்கள் மீதான குண்டுவீச்சும் (…) இதில் உள்ளடங்கும், ஹிரோஷிமா மற்றும் நாகசாகி மீது அமெரிக்கா அணுகுண்டுகளை வீசுவதில் இது உச்சமடைந்தது. அந்த மரணத்தின் அளவு கிட்டத்தட்ட கற்பனையும் செய்ய முடியாதளவில் உள்ளது.

வேகமாக வளர்ந்து கொண்டிருக்கும் ஒரு மூன்றாம் உலகப் போர், அதிநவீன அணு ஆயுதங்களைக் கொண்டு நடத்தப்படும் என்பதோடு, அதில் மில்லியன் கணக்கானவர்கள் இல்லை மாறாக பில்லியன் கணக்கானவர்கள் உயிரிழக்க நேரிடும். அது தற்போது நடந்து வரும் ஒவ்வொரு மோதலையும் நேரடியாக விரிவாக்கி, புவியில் எல்லா நாடுகளையும் உள்ளீர்க்கும். ஷாங்காய், நியூ யோர்க், பேர்லின் மற்றும் மாஸ்கோ போன்ற பெருநகரங்கள் ஒரு சில நிமிடங்களில் அழிக்கப்படும். நம் அறிக்கையில், நாம் பின்வருமாறு எச்சரித்தோம்:

ஆளும் வர்க்கம் அதன் புவிசார் அரசியல் நலன்களை முன்னெடுப்பதில் பத்து மில்லியன் கணக்கானவர்களின் உயிர்களைத் தியாகம் செய்யாது என்று நம்பும் எவரொருவரும், கடந்த இரண்டரை ஆண்டு கால அனுபவத்தைக் கருத்தில் கொள்ள வேண்டும். கோவிட்-19 பெருந்தொற்றுக்கு விடையிறுக்கும் வகையில், பெருநிறுவன மற்றும் நிதிய தன்னலக்குழு, இலாபங்களுக்குத் தடையாக இருந்தன என்பதற்காக இந்த வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்தத் தேவையான மிக அடிப்படையான பொது சுகாதார நடவடிக்கைகளைக் கூட நிராகரித்தது. இதன் விளைவாக 20 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்தார்கள்.

இந்தப் பெருந்தொற்றுக்கு எரியூட்டிய, இந்த முதலாளித்துவ வெகுஜன படுகொலைக் கொள்கை இப்போது கிட்டத்தட்ட கற்பனை செய்யவியலாத மட்டத்திற்கு எடுத்துச் செல்லப்படுகிறது. மில்லியன் கணக்கானவர்களைக் கொன்று வரும் இந்த 'வைரஸூடன் தான் வாழ' வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு இருப்பதுடன், நேட்டோ சக்திகளும் அவற்றின் கூட்டாளிகளும் இப்போது பில்லியன் கணக்கானவர்களைக் கொல்லும் ஓர் அணுஆயுதப் போரின் சாத்தியக்கூறை வைத்து தங்களை 'மிரட்டி' விட முடியாது என்று வலியுறுத்திகின்றன.

ஓய்வுபெற்ற அமெரிக்க ஜெனரல் பென் ஹோட்ஜஸ் போன்ற முன்னணி நேட்டோ பிரமுகர்கள், போரைக் கூடுதலாகத் தீவிரப்படுத்துவது 'ரஷ்ய கூட்டமைப்பின் முழு தோல்விக்கு' — அதாவது உலகின் மிகப்பெரிய அணுஆயுதக் கிடங்கைக் கொண்ட அந்நாட்டை வன்முறையாக உடைக்க — வழிவகுக்கும் என்று வெளிப்படையாக அறிவிக்கிறார்கள்.

ஆனால் இந்த ஆபத்தைக் குறிப்பிடுவது, எந்த வகையிலும் புட்டின் ஆட்சிக்கு ஓர் ஆதரவு காட்டுவதற்காக இல்லை. நான் ஏற்கனவே கூறியது போல, நாம் ரஷ்ய இராணுவத்தின் தலையீட்டை சந்தேகத்திற்கு இடமின்றி எதிர்க்கிறோம், அது போரை மேலும் விரிவாக்குவதுடன் அதற்கு எந்த முற்போக்கான தன்மையும் இல்லை. கிரெம்ளினின் இராணுவப் படையெடுப்பு, ரஷ்யாவில் உள்ள முதலாளித்துவ தன்னலக்குழுவுக்குத் தான் ஆதாயமாகிறது. ரஷ்யாவைச் சேர்ந்த ஒரு தோழர் இந்த விஷயம் குறித்து இன்னும் விரிவாகப் பேசுவார்.

ஏகாதிபத்தியம் முதலாம் மற்றும் இரண்டாம் உலகப் போர்களில் இறங்குவதை எளிதாக்கிய இரண்டாம் மற்றும் மூன்றாம் அகிலங்களின் நினைவுகூரத்தக்க துரோகங்களின் படிப்பினைகளை மதிப்பாய்வு செய்த, மாபெரும் புரட்சிகர சோசலிசவாதி லியோன் ட்ரொட்ஸ்கி 1934 இல் குறிப்பிடுகையில், 'மக்கள் உயிர் வாழ வேண்டுமானால், தேசிய அரசை அதன் அஸ்திவாரங்களில் இருந்து இடித்துத் தள்ள வேண்டும்,” என்று நிறைவு செய்தார். அவர் தொடர்ந்து பின்வருமாறு குறிப்பிட்டார்:

தேசிய பாதுகாப்பை போதிக்கும் ஒரு “சோசலிவாதி” என்பவர், வீழ்ச்சியடைந்து வரும் முதலாளித்துவத்திற்கு சேவை செய்யும் ஒரு குட்டி-முதலாளித்துவ பிற்போக்குவாதியாவர். சமாதானமான காலத்தில் தேசிய அரசின் மீது சமரசமற்ற போரை அறிவித்த ஒரு கட்சிக்கு மட்டுமே, போர் காலத்தில் தேசிய அரசுடன் தன்னை பிணைத்துக் கொள்ளாமல், போர் வரைபடத்தை அன்றி வர்க்கப் போராட்டத்தின் வரைபடத்தைப் பின்பற்றுவது சாத்தியமாகும். ஏகாதிபத்திய அரசின் புறநிலையான பிற்போக்கு பாத்திரத்தை முழுமையாக உணர்ந்து கொள்வதன் மூலம் மட்டுமே, பாட்டாளி வர்க்க முன்னணிப் படையினர் அனைத்து வகையான சமூக தேசபக்தியாலும் பாதிக்கப்படாதவர்களாக மாற முடியும். இதன் அர்த்தம் என்னவென்றால், சர்வதேச பாட்டாளி வர்க்கப் புரட்சியின் நிலைப்பாட்டில் இருந்து மட்டுமே உண்மையில் 'தேசிய பாதுகாப்பு' என்ற சித்தாந்தம் மற்றும் கொள்கையில் இருந்து முறித்துக் கொள்ள முடியும்.

இதுதான் IYSSE மற்றும் ICFI இன் சர்வதேசியவாத சோசலிச முன்னோக்கு ஆகும், இப்போது இதற்காகவே போராட வேண்டும். ஜேர்மன் சோசலிச சமத்துவக் கட்சி இந்தப் போராட்டத்தை, ஏகாதிபத்திய குற்றங்களின் உலகத் தலைநகரான பேர்லினில் நடக்க உள்ள அதன் தேர்தல் பிரச்சாரத்தின் இதயதானத்தில் வைக்கும். நாம், லுக்செம்பேர்க் மற்றும் லீப்னெக்ட், லெனின் மற்றும் ட்ரொட்ஸ்கியின் இந்தப் புரட்சிகர சோசலிச சர்வதேசியவாத மரபியத்தில் நம்மை நிறுத்தி உள்ளோம்.

இந்தப் புவியில் அதிகரித்தளவில் போராட்டத்தில் நுழைந்து வரும் பாரிய பெருந்திரளான மக்களான சர்வதேச தொழிலாள வர்க்கம் மட்டுமே மூன்றாம் உலகப் போரை நிறுத்தக்கூடிய ஒரே சக்தியாகும். இந்த மிகவும் சக்தி வாய்ந்த சமூக சக்தியின் சுயாதீனமான தலையீடு இல்லாவிட்டால், இந்த போர் தொடர்ந்து செல்லும் மற்றும் விரிவாக்கப்படும். ஆளும் வர்க்கம் இதை முடிவுக்குக் கொண்டு வராது — அவர்கள் இந்த முடிவை எடுத்து விட்டார்கள். மனிதகுலத்தின் எதிர்காலமே பணயத்தில் இருப்பதால் இதை நாம் முடிவுக்குக் கொண்டு வந்தாக வேண்டும். நம் அறிக்கையில் நாம் பின்வருமாறு எழுதுகிறோம்:

நானூறு ஆண்டுகளுக்கு முன்பு, ஷேக்ஸ்பியரின் ஹேம்லெட்டில் ஒரு அடிப்படை இருத்தலியல் கேள்வியை முன்வைத்தார்: 'வாழ்வதா அல்லது இல்லையா?' இன்றைய உலகில், இந்தக் கேள்வி ஒரு தத்துவ ஊகமாக எழுப்பப்படவில்லை, மாறாக மனிதகுலம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய அரசியல் சவாலாக எழுப்பப்படுகிறது. அணு ஆயுதப் போரின் அச்சுறுத்தலுக்கு கூடுதலாக, காலநிலை மாற்றம் மற்றும் எதிர்கால தொற்றுநோய்கள் வரவிருக்கும் தசாப்தங்களில் நூற்றுக்கணக்கான மில்லியன் மக்களின் வாழ்க்கையை அச்சுறுத்துகின்றன. முதலாளித்துவம் உலகை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு முன்னர், தொழிலாள வர்க்கம் முதலாளித்துவத்தை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும்.

இவை, நம் தலைமுறை முகங்கொடுக்கும் அடிப்படைக் கேள்விகளாகும். அனைத்து நாடுகளின் இளைஞர்களும் தொழிலாள வர்க்கத்தை நோக்கி திரும்புமாறும், அனைத்து தொழிற்சாலைகள், பணியிடங்கள், பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் இந்த சர்வதேச போர்-எதிர்ப்பு இயக்கத்தைக் கட்டமைக்குமாறும் IYSSE அழைப்பு விடுக்கிறது.