இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.
கட்சியின் நீண்டகால தொழிலாள வர்க்க உறுப்பினரான சரத் குமாரவின் மரணத்தை ஆழ்ந்த துக்கத்துடனும் இழப்பு உணர்வுடனும் இலங்கை சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) அறிவிக்கிறது.
57 வயதான சரத், சவூதி அரேபியாவில் உள்ள அல் ஜுபார் தொழில்துறை வலயத்திற்கு அருகிலுள்ள மருத்துவமனையில் ஒரு திடீர் சுகயீனத்தால் டிசம்பர் 21 அன்று காலமானார். 1991 முதல், சோ.ச.க. உறுப்பினராக செயற்பட்ட அவர், தனது மனைவியும் நீண்டகாலப் பங்காளியுமான நில்மினியையும், சோ.ச.க. உறுப்பினரான சத்துர மற்றும் அனுஷ ஆகிய இரு மகன்களையும் விட்டுச் சென்றுள்ளார்.
ஒரு திறமையான இயந்திர இயக்குனரான சரத், தொழிலாளர்களின் உரிமைகளுக்கும் சோசலிச அனைத்துலகவாதத்திற்குமான விட்டுக்கொடுப்பற்ற போராளியும் ஆவார். அவர், அடிக்கடி நிர்வாகம் மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவங்களுக்கு எதிராக சக ஊழியர்களின் சார்பில் பேசியதுடன் செயல்பட்டதுடன் அதற்காக அடிக்கடி பழிவாங்கப்பட்டார்.
கொழும்பு புறநகரான மொரட்டுவையைச் சேர்ந்த சரத், பிரின்ஸ் ஒஃப் வேல்ஸ் என்ற ஒரு பிரசித்திபெற்ற உள்ளூர் கல்லூரியால் கற்றார். அவரது தந்தை ஒரு சிறிய பட்டறை நடத்திய ஒரு திறமையான வார்ப்புத் தொழிலாளியாவர்.
1984 இல், சரத், உள்ளூரில் உள்ள ஒரு அரசு சாரா நிறுவனமான கம்கரு செவன (தொழிலாளர் பொழில்) நடத்தும் தொழில்நுட்பப் பள்ளி மற்றும் பட்டறையில் சேர்ந்தார். அவர் பள்ளியின் முதல் மாணவர் குழுவில் சிறந்த இயந்திரவியலாளராக விருது பெற்றார், பின்னர் ஒரு பயிற்றுவிப்பாளராக பதவி உயர்வு பெற்றார்.
சரத் மற்றும் அவரது சக ஊழியரும் நண்பருமான கிறிசாந்த ஜெயசிங்க, தொழிலாளர்களின் உரிமைகளுக்கான போராட்டத்தில் தங்கள் வேலைத் தளத்தில் இலங்கை வர்த்தக ஊழியர் சங்கத்தின் (CMU) கிளையை ஸ்தாபிப்பதில் முக்கிய பங்கு வகித்தனர்.
அந்த நேரத்தில், ஐக்கிய தேசியக் கட்சி (ஐ.தே.க.) அரசாங்கம் நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கில் பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக இரத்தக்களரி இனவாத யுத்தத்தை நடத்திக் கொண்டிருந்தது.
சோ.ச.க. முன்னோடியான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் (பு.க.க.), ஸ்ரீ லங்கா-ஈழம் சோசலிசக் குடியரசைக் கட்டியெழுப்புவதற்கான சர்வதேச முன்னோக்கில், கொழும்பு அரசாங்கத்தின் யுத்தத்திற்கும், விடுதலைப் புலிகளின் பிரிவினைவாத வேலைத்திட்டத்திற்கும் எதிராக தொழிலாள வர்க்கத்தின் அனைத்துப் பிரிவினரையும் ஐக்கியப்படுத்தப் போராடியது.
1988 மற்றும் 1990க்கு இடையிலான காலப்பகுதியில், ஐ.தே.க. அரசாங்கம் மக்கள் விடுதலை முன்னணியில் (ஜே.வி.பி.) பாசிச ஆத்திரமூட்டல்களை சுரண்டிக்கொண்டு, தீவின் தெற்கில் உள்ள கிராமப்புறங்களில் இரத்தக்களறி அடக்குமுறையை கட்டவிழ்த்துவிட்டு சுமார் 60,000 இளைஞர்களைக் கொன்று தள்ளியது. பு.க.க., நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் நெருக்கமான ஒத்துழைப்புடன், இந்த அடக்குமுறைக்கு எதிராக இலங்கையிலும் சர்வதேச அளவிலும் தொழிலாளர்களை அணிதிரட்ட பிரச்சாரம் செய்தது.
சரத்தும் கிறிசாந்தவும் பு.க.க. முன்னெடுத்த பிரச்சாரத்தில் கவரப்பட்டு, 1991ல் உறுப்பினர்களானார்கள். கொழும்பின் புறநகர்ப் பகுதியான இரத்மலான பகுதியில் உள்ள தொழிற்துறைப் பிரதேசங்களில் அரசியல் பணிகளை முன்னெடுத்து வந்த இரத்மலானை கிளையில் இணைந்து கொண்டனர்.
பு.க.க. அபிவிருத்திசெய்த புரட்சிகர முன்னோக்கின் அவசியம் குறித்து சக தொழிலாளர்களின் நம்பிக்கையை வென்றெடுப்பதற்காக அவர்கள் போராடத் தொடங்கிய பின்னர், கம்கரு செவன நிர்வாகம் ஒரு வகுப்புவாத ஆத்திரமூட்டலை ஏற்பாடு செய்து அவர்களை வேலை நீக்கம் செய்தது.
ஒரு நீண்டகால சந்தர்ப்பவாதியும் பப்லோவாத ஐக்கிய செயலகத்தின் உறுப்பினருமான பாலா தம்பு தலைமையிலான சி.எம்.யு. தொழிற்சங்கம், நிர்வாகத்தின் பக்கம் நின்று அவர்களைப் பாதுகாக்க மறுத்தது. சரத்தும் கிறிசாந்தவும் தம்புவிடம் தங்கள் வழக்கை எழுப்ப முயன்ற பல சந்தர்ப்பங்களிலும் சி.எம்.யு. தலைமையகத்திலிருந்து அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.
பு.க.க. இரத்மலானவில் தொழிற்துறை தொழிலாளர்கள் மத்தியில் ஒரு சக்திவாய்ந்த பிரச்சாரத்தை ஆரம்பித்ததுடன், சி.எம்.யு. உறுப்பினர்கள் உட்பட தொழிலாளர்களின் பரந்த ஆதரவை வென்றெடுத்தது. தொழிலாளர்கள், அவர்களை மீண்டும் பணியில் அமர்த்தக் கோரியும் சி.எம்.யு. தலைமையின் காட்டிக்கொடுப்பை எதிர்த்தும் மனுவில் கையெழுத்திட்டனர்.
பு.க.க. அதன் தொழிலாளர் பாதை பத்திரிகையில் அந்த நேரத்தில் எழுதியதாவது;
'வேலை நீக்கம் செய்யப்பட்ட சி.எம்.யு. உறுப்பினர் தொழிலாளர்கள் [சரத் மற்றும் கிறிசாந்த] [CMU தலைமைக்கு] விரிவான தரவுத் தகவலுடன், இந்த தாக்குதல் சி.எம்.யு. கிளையை சிதைப்பதாகவும், அரசியல் அடக்குமுறையின் ஒரு பகுதியும் வகுப்புவாத ஆத்திரமூட்டலுமாகும் என விளக்கி, கடிதம் ஒன்றை எழுதியிருந்தாலும், பாலா தம்பு முதலாளிகள் பக்கம் நின்றுகொண்டு, அது ஒரு 'ஒழுக்க மீறல்' என்று கூறிக்கொண்டார்.
வேலைநீக்கம் செய்யப்பட்ட பிறகு, சரத் சிறிய பட்டறைகளில் வேலை தேடிக்கொள்ள நிர்ப்பந்திக்கப்பட்டார். 1995ல், கொழும்பின் புறநகர்ப் பகுதியில் பிலியந்தலவில் உள்ள எலாஸ்டோமெரிக் டூல்ஸ் அன்ட் டைஸ் நிறுவனத்தில் இயந்திர வல்லுநராக வேலையைப் பெற்றார். சுவிட்சர்லாந்தை தளமாகக் கொண்ட Gislaved Gummi AB க்கு சொந்தமான இந்த நிறுவனம், பிரதானமாக ஃபோர்ட், BMW மற்றும் Audi போன்ற வாகன உற்பத்தியாளர்களுக்காக ரப்பர் பாகங்களை தயாரித்தது,
1997ல், நிர்வாகம் தொழிற்சாலையை மூடுவதையும், நூற்றுக்கணக்கான தொழிலாளர்களை வேலை நீக்கம் செய்வதையும் தடுக்க முன்னெடுத்த போராட்டத்தின் முன்னணியில் சரத் இருந்தார். சோ.ச.க. எலாஸ்டோமெரிக் ஐக்கிய நடவடிக்கை குழுவை உருவாக்கியது. சரத் அதன் தலைவராக தொழிலாளர்களால் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்தப் பிரச்சாரம் அப்பகுதியில் உள்ள தொழிலாளர்கள், வேலையற்றோர் மற்றும் அருகிலுள்ள மொரட்டுவ பல்கலைக்கழக மாணவர்களிடமிருந்து குறிப்பிடத்தக்க ஆதரவைப் பெற்றதால் நிறுவனத்தை பின்வாங்கச் செய்தது. எவ்வாறெனினும் எலாஸ்டோமெரிக் நிர்வாகம் சரத்தை அகற்றுவதில் உறுதியாக இருந்ததால் சில ஆண்டுகளுக்குப் பிறகு மற்றொரு வேட்டையாடலைத் தொடங்கியது.
2000 ஜூனில், அவரது சாதாரண வேலை நேரத்துக்குப் பிறகு தொழிற்சாலையை விட்டு வெளியேற தனது மேலதிகாரியின் அனுமதியைப் பெற்றிருந்த போதிலும், மேலதிக நேரத்தைச் செய்ய மறுத்ததாக போலிக் குற்றச்சாட்டின் பேரில் சரத் வேலை இடை நீக்கம் செய்யப்பட்டதுடன் வேலை நீக்கம் செய்யப்படுவார் என்று அச்சுறுத்தப்பட்டார். சரத்தின் இடைநீக்கத்திற்கு முந்தைய மாதங்களில் நூறுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பல்வேறு சாக்குப்போக்குகளில் வேலை நீக்கம் செய்யப்பட்டதன் மூலம் நிர்வாகம் உற்பத்தியை விரைவுபடுத்தியதுடன் தொழில்களை வெட்டியது.
ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் அரசாங்கத்தினால் அவசரகாலச் சட்டங்களை அமுல்படுத்தப்பட்டதுடன் அதன் இன்னொரு பக்கமாக சரத் மீதான பழிவாங்கல் இருந்தது. வடக்கில் ஆனையிறவு இராணுவ முகாமை புலிகள் கைப்பற்றியதைத் தொடர்ந்து அனைத்து வேலைநிறுத்தங்கள், ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பொதுக் கூட்டங்களை குமாரதுங்க தடை செய்தார்.
தொழிற்சாலையில், ஜே.வி.பி.யின் கட்டுப்பாட்டில் இருந்த அனைத்து கூட்டுத்தாபன ஊழியர் சங்கம் (ICEU) சரத்தை பாதுகாக்க மறுத்தது. எலாஸ்டோமெரிக்கிலும் அப்பகுதியில் உள்ள ஏனைய தொழிற்சாலைகளிலும் தொழிலாளர்கள் மத்தியில் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்து, மனுக்களை விநியோகித்து பிரச்சாரம் செய்த சோ.ச.க., சரத்தை உடனடியாக மீண்டும் வேலையில் அமர்த்தக் கோரியது. சரத்தின் இடைநீக்கத்தை தொழிற்சங்கம் ஏன் எதிர்க்கவில்லை என்பதைத் தெரிவிக்கக் கோரி அனைத்துக் கூட்டுத்தாபன ஊழியர் சங்க உறுப்பினர்கள் தங்கள் உள்ளூர் கிளைக் கூட்டத்தில் எதிர்ப்பு தெரிவித்தனர்.
புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் சக்திவாய்ந்த பிரச்சாரம் ஒரு மாதத்திற்குள் சரத்தை மீண்டும் வேலையில் அமர்த்த நிர்வாகத்தை கட்டாயப்படுத்தியது, ஆனால் நிர்வாகம் அதன் ஆத்திரமூட்டல்களைத் தொடர்ந்தது. சரத் மற்றும் ஏனைய தொழிலாளர்கள் நிர்வாகப் பட்டியலில் வேலை செய்யாவிட்டால் வேறு தொழிற்சாலைக்கு மாற்றப்படுவர் என்று அச்சுறுத்தப்பட்டனர். அவர், இரவு மற்றும் வார இறுதி நாட்களில் வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டார்.
ஐந்து மாதங்களுக்குப் பிறகு, 2000 அக்டோபரில், சரத் வேலை நேரத்தில் வேலைத் தளத்தில் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டி, நிறுவனம் இரண்டாவது முறையாக அவரை இடைநீக்கம் செய்தது. தொழிற்சாலையின் கேட்டுகளுக்கு வெளியே இருந்த அவரது தனிப்பட்ட லாக்கரை நிர்வாகம் உடைத்து, 2000 அக்டோபரில் பொதுத் தேர்தலுக்கான சோ.ச.க.யின் தேர்தல் அறிக்கை மற்றும் கட்சியின் செய்தித்தாளான கம்கருமாவத்தவின் பல பிரதிகள் உட்பட அவரது உடமைகள் அனைத்தையும் கைப்பற்றியது.
சரத் பொய்யான குற்றச்சாட்டை மறுத்தார். தொழிற்சாலைக்கு வெளியே சட்டப்பூர்வமாக அரசியல் பணியில் ஈடுபட்டதாகவும், அதற்கான ஜனநாயக உரிமை தனக்கு இருப்பதாகவும் அவர் விளக்கினார். மீண்டும் அனைத்து கூட்டுத்தாபன ஊழியர் சங்கம் சரத்தை பாதுகாக்கவில்லை. சோ.ச.க. இந்த சோடிப்பு குற்றச்சாட்டுக்கு எதிராகப் பிரச்சாரம் செய்தபோது, நிர்வாகம் அவரை மீண்டும் வேலையில் அமர்த்த மறுத்தது.
பல ஆண்டுகளாக சொற்ப ஊதியத்திற்கு சிறு பட்டறைகளில் வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்ட சரத், தனது இரண்டு மகன்களின் கல்விக்காகவும், தனது குடும்பத்திற்கு ஒழுக்கமான வாழ்க்கையை வழங்கவும் அதிக ஊதியம் தேவைப்பட்டதால் 2008 ஆம் ஆண்டு சவுதி அரேபியாவில் தயக்கத்துடன் வேலைக்குச் சேர்ந்தார்.
கொடூரமான மற்றும் சர்வாதிகார சவூதி அரேபிய ஆட்சியின் கீழ் சரத்தின் அரசியல் நடவடிக்கைகள் மட்டுப்படுத்தப்பட்டன. எவ்வாறாயினும், அவர் தனது சக தொழிலாளர்களுக்கு சோ.ச.க.யின் பகுப்பாய்வை அறிமுகப்படுத்த போராடியதோடு கட்சியை கட்டியெழுப்ப சோ.ச.க.யின் சமூக ஊடக பிரச்சாரங்களில் தீவிரமாக ஈடுபட்டார். அவர் தொடர்ந்து இணையவழியாக கிளை கூட்டங்களில் பங்கேற்றதோடு கடைசி காலத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் நடவடிக்கை குழுவை அமைப்பதில் ஈடுபட்டார்.
சோ.ச.க. தலைவரும் நீண்டகால கட்சியின் பொதுச் செயலாளருமான தோழர் விஜே டயஸின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக சரத் கடைசியாக ஜூலை மாதம் இலங்கைக்கு விஜயம் செய்தார்.
அவர் WSWS இடம் கூறியதாவது: “நான் சவூதி அரேபியாவில் பணிபுரியும் போது தோழர் விஜே டயஸின் மறைவு பற்றி அறிந்து, அவருக்கு அஞ்சலி செலுத்த இலங்கைக்கு வந்தேன். அவரது இழப்பு பற்றிய செய்தி எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்ததுடன் உடலின் ஒரு பகுதியை இழந்தது போல் உணர்ந்தேன். அவரது விரிவுரைகள், கருத்துக்கள் மற்றும் விளக்கங்கள், கேள்விகளுக்கான அணுகுமுறை மற்றும் அவரது மார்க்சிய முறை ஆகியவை கட்சிக்கு எங்களை ஈர்த்தது.”
கோவிட்-19 காரணமாக சவுதி அரேபியாவில் வேலை நிலைமைகள் மோசமாகிவிட்டதாக கடந்த ஆண்டு சரத் WSWS இடம் கூறினார்.
'2020ல் தொற்றுநோய்க்காக ஒரு சுருக்கமான பூட்டுதலைத் தொடர்ந்து, நாடு மீண்டும் திறக்கப்பட்டதிலிருந்து தொழிலாளர்களின் ஊதியம், மேலதிக நேரக் கொடுப்பனவுகள் உட்பட மாதத்திற்கு 246-394 டொலர் மட்டுமே. தொற்றுநோய்க்கு முன்பிருந்தே வேலையின் அளவு மூன்று மடங்காக அதிகரித்துள்ளது,' என்று அவர் கூறினார்.
சவூதி அரேபியாவில் வேலைக்குச் செல்வதற்கு முன், சரத்தின் வீடு, கிளைக் கூட்டங்கள் மற்றும் பிற கலந்துரையாடல்கள் போன்ற கட்சிப் பணிகளுக்கு எப்போதும் பயன்படுத்தக் கூடியதாக இருக்கும். அவரும் அவரது குடும்பத்தினரும் கடினமான காலங்களை எதிர்கொண்ட நேரத்திலும் கூட, அவர்களின் விருந்தோம்பல் குறைந்திருக்கவில்லை. வார்த்தையின் உண்மையான அர்த்தத்தில் சரத் ஒரு தன்னலமற்ற நபர்.
சரத்தின் தோழரான கிறிசாந்த ஜயசிங்க, அவரை பின்வருமாறு விவரித்தார்.
'ட்ரொட்ஸ்கிசத்தின் சர்வதேச சோசலிச மூலோபாயத்தை அவர் உறுதியாக நம்பிய பிறகு, அவர் இறக்கும் வரை, அவர் ஒருபோதும் வலைந்து கொடுத்திருக்கவில்லை. சரத் எப்பொழுதும் சக ஊழியர்களிடம் தனது நம்பிக்கையைப் பற்றிப் பேசினார் மற்றும் அதற்கான காரணத்தை விளக்கினார், மேலும் அவர் ஜேவிபி போன்ற அரசியல் நீரோட்டங்களுக்கு எதிராக கடுமையாக வாதிட்டார். அவர் தனது சக ஊழியர்களிடையே பிரபலமான மற்றும் அன்பான தொழிலாளியாக இருந்தார், அவர்கள் எப்போதும் நம்பியிருக்கக்கூடிய ஒரு நபராக அவரைக் கருதினார். அவர் அரசியல் ரீதியாக பழிவாங்கப்பட்டபோது, அவர் ஒருபோதும் குற்றத்தை ஒப்புக்கொள்ள மாட்டார், மாறாக அவரது தனிப்பட்ட சிரமங்களை மீறி ஒரு புரட்சிகர போராளியாக போராடினார். அவர் உருகும் இதயம் கொண்டவராகவும், தனது இசைத்திறனைப் பயன்படுத்தி மற்றவர்களை மகிழ்விப்பவராகவும் இருந்தார். இந்த துயரமான தருணத்தில் எனது நண்பருக்கும் எனது தோழருக்கும் வணக்கம் செலுத்துகிறேன்.”
இரத்மலானை கட்சிக் கிளையில் சரத்துடன் இணைந்து பணியாற்றிய நீண்டகால தோழரான சுஜீவ அமரநாத் கூறியதாவது: “நான், பல்கலைக்கழக மாணவனாக இருந்து, 1990களின் இறுதியில் சோ.ச.க.யில் சேர்ந்தபோது, சரத் ட்ரொட்ஸ்கிச இயக்க வரலாற்றில் ஆழமான அறிவைக் கொண்ட ஆற்றல் மிக்க இளைஞனாக இருந்தார். அந்த நேரத்தில், ஜே.வி.பி. மீது நான் அரசியல் அனுதாபங்கள் கொண்டிருந்தேன். அது சோசலிசத்திற்காக போராடும் என்று பொய்யான நம்பிக்கையும் இருந்தது. ஜே.வி.பி.யின் குட்டி முதலாளித்துவ கொரில்லா வேலைத்திட்டத்தின் விளைவுகளைப் பற்றிய விமர்சன மதிப்பீட்டை சரத் எனக்கு வழங்கினார், மேலும் அதன் வலதுசாரிப் பாதையை சரியாகக் கணித்தார், இவை அனைத்தும் சரியாக நிரூபிக்கப்பட்டுள்ளன.”
சரத் தனது இளமை பருவத்தில் நன்கு அறியப்பட்ட இலங்கை இசைக் கலைஞர்களிடம் கற்று, இசையை விரும்புபவராக இருந்தார். அவரால் பாரம்பரிய இசைக்கருவியான செர்பினா மற்றும் தபேலாவை வாசிக்கவும், இசைக்கும் போதே பாடவும் முடியும். அவர் கலை மற்றும் கலைஞர்களை நேசித்தார்.
சரத் கடைசி வரை ட்ரொட்ஸ்கிசத்திற்கான ஒரு கொள்கை ரீதியான போராளியாக இருந்தார். பொருளாதார சூழ்நிலைகள் மற்றும் முதலாளித்துவத்தால் உருவாக்கப்பட்ட சமூக அவலங்களால் சுருக்கப்பட்ட வாழ்க்கை, அவரை அவரது குடும்பம், நண்பர்கள் மற்றும் எல்லாவற்றிற்கும் மேலாக அவரது தோழர்களிடமிருந்து தனிமைப்படுத்தியது. அவரது நினைவு சோசலிசத்திற்கான போராட்டத்திற்கு ஒரு சக்திவாய்ந்த உத்வேகம் ஆகும்.