மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
புதிய வேலைநிறுத்த சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தை தொழிற்சங்க காங்கிரஸ் (TUC) மற்றும் பிரிட்டனின் தொழிற்சங்க தலைவர்களின் கைகளில் விட்டுவிடக்கூடாது. இல்லையெனில் அது தோல்வியடையும்.
முன்னோடியில்லாத வகையில் தொழிலாளர்களின் ஜனநாயக உரிமைகளுக்கு எதிராக எழுந்துள்ள மிகப்பெரிய அச்சுறுத்தலுக்கு எதிராக ஒரு நாள் வேலைநிறுத்த நடவடிக்கைக்கு கூட TUC ஏற்பாடு செய்யவில்லை. புதிய வேலைநிறுத்த (குறைந்தபட்ச சேவை வரம்புகள்-MSLs) மசோதாவானது, பழமைவாத அரசாங்கம் மற்றும் முதலாளிகளின் காட்டுமிராண்டித்தனமான வெட்டுக்களுக்கு எதிராக தற்போது எடுக்கப்பட்டு வரும் கிட்டத்தட்ட அனைத்து தொழில்துறை நடவடிக்கைகளையும் குற்றப்படுத்தும்.
ஆயினும்கூட, எந்தவொரு தொழிற்சங்கமும், எதிர்காலத்தில் சட்டப்பூர்வமான வாக்கெடுப்புக்குப் பின்னர் வேலைநிறுத்தம் செய்தால், அதன் உறுப்பினர்கள் பாரிய பணிநீக்கங்களை எதிர்கொள்ளக்கூடும் என்றாலும், இந்த மசோதாவுக்கு எதிராக எந்த தொழில்துறை நடவடிக்கைக்கும் தொழிற்சங்கங்கள் ஏற்பாடு செய்யவில்லை. மாறாக, பலர் வெட்கக்கேடான வகையில் ஊதியம், வேலைகள் மற்றும் நிபந்தனைகள் தொடர்பாக நடந்து வரும் சர்ச்சைகளை ஒருங்கிணைத்துள்ளனர். எனவே, அரை மில்லியன் தொழிலாளர்கள் இன்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். அதே வேளை, அரசாங்கத்தால் அரசியல் வேலைநிறுத்தம் என்று குற்றம் சாட்டப்படக்கூடிய எதையும் அவர்கள் தவிர்க்கின்றனர்.
இரயில், கடல்சார் மற்றும் போக்குவரத்து (RMT), ASLEF இரயில் தொழிற்சங்கங்கள், பொது மற்றும் வணிக சேவைகள் சங்கம் (PCS), பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரி ஒன்றியம், தேசிய கல்வி ஒன்றியம் (NEU) மற்றும் ஸ்கொட்லாந்தின் கல்வி நிறுவனம் உள்ளிட்ட, இன்றைய தொழில்துறை நடவடிக்கைகளின் ஒருங்கிணைப்பாளர்கள், இந்த கோடையில் statue புத்தகங்களில் இடம்பெறவிருக்கும் புதிய சட்டங்களை எதிர்ப்பதை விட, தற்போதைய வேலைநிறுத்த தடைச் சட்டத்தை கடைபிடிப்பதில் அதிக அக்கறை கொண்டுள்ளனர்.
மேலும், Royal College of Nursing (RCN), Unison மற்றும் GMB சுகாதார சேவை உறுப்பினர்கள் இவை எதிலும் பங்கேற்கவில்லை.
மாறாக, தொழிற்சங்கங்கள் மூடிய கதவுகளுக்குப் பின்னால் வெறித்தனமான விவாதங்களை நடத்தி வருகின்றன. அதாவது, வேலைநிறுத்தத்தை வாபஸ் பெறுவதற்கு திங்களன்று NEU நடத்திய பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தது உட்பட, வேலைகள் மற்றும் நிலைமைகளைப் பாதுகாக்க எதுவும் செய்யாத, பணவீக்கத்திற்கு கீழான அழுகிப்போன ஊதியச் சலுகைகளை அடிப்படையாக வைத்து வேலைநிறுத்த அலையை முடிவுக்குக் கொண்டுவர தொழிற்சங்கங்கள் முயல்கின்றன.
RMT இன் பொதுச் செயலாளர் மிக் லிஞ்ச், பணவீக்க விகிதத்தில் பாதிக்குக் குறைவான மதிப்புடைய இறுதிச் சலுகையை வழங்கும் அதேவேளை, குறைந்த எண்ணிக்கையிலான ஓட்டுநர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுத்தார். மேலும் கணிசமான வேலை இழப்புகள் மற்றும் வேகப்படுத்துதல்கள் உட்பட, இரயில் காவலர்கள் மற்றும் நிலையப் பணியாளர்களுக்கு பயிற்சியளிக்க அவர் ஏற்பாடு செய்கிறார்.
வேலைநிறுத்த தடைச் சட்டங்களைப் பற்றி எந்த குறிப்பும் இல்லாமல், வரவு செலவுத் திட்ட நிறைவேற்று நாளான மார்ச் 15 அன்று NEU மற்றும் PCS தொழிற்சங்க அமைப்புக்களை தவிர வேறு எந்த ஒருங்கிணைந்த நடவடிக்கைக்கும் முன்மொழியப்படவில்லை.
TUC பொதுச் செயலாளர் போல் நோவாக்கும், பிற தொழிற்சங்கத் தலைவர்களும், வேலைநிறுத்த தடைச் சட்டம் ஒருமுறை நிறைவேற்றப்பட்டுவிட்டால், தொழிலாள வர்க்கம் எவ்வளவு விலை கொடுத்தாலும் அதனைப் பொருட்படுத்தாமல், ஷரத்தின் விதிகளுக்கு அவர்கள் கட்டுப்படுவார்கள் என்பதை தெளிவுபடுத்தியுள்ளனர். அந்த தருணத்தில் இருந்து அவர்கள் வழங்குவது அனைத்தும், எதிர்கால தொழிற்கட்சி அரசாங்கம் சட்டத்தை நீக்குவதற்கு சேர் கெய்ர் ஸ்டார்மர் உறுதியளித்துள்ளதற்கான மீளுறுதிகளாக உள்ளன.
தொழிலாள வர்க்கத்தை ஒடுக்குவதற்கு தொழிற்கட்சி, தொழிற்சங்கங்கள் மற்றும் முதலாளிகளுக்கு இடையே ஒழுங்கமைக்கப்பட்ட கூட்டுக்கு பதிலாக ஸ்டார்மர் இதை நம்புகிறார். கடந்த அக்டோபரில் நடந்த TUC மாநாட்டில், ‘அரசாங்கம், வணிகம் மற்றும் தொழிற்சங்கங்களுக்கு இடையேயான ஒரு உண்மையான கூட்டாண்மையின்’ அடிப்படையில் ‘தொழில்துறை மூலோபாய குழுவை’ நிறுவப்போவதாக அவர் கூறினார்.
இந்த மசோதாவை எதிர்த்து, தொழிற்கட்சி துணைத் தலைவர் ஏஞ்சலா ரெய்னர் அரசாங்கத்தை எச்சரித்தார். அதாவது, இதுபோன்ற வேலைநிறுத்த தடைச் சட்டங்கள் நடைமுறையில் உள்ள பிரான்சிலும் ஸ்பெயினிலும், ‘பிரிட்டனை விட அதிக வேலைநிறுத்த நாட்களை அவர்கள் இழந்துள்ளனர்’ என்கிறார்.
ஸ்டார்மரின் முன்னோடிகளான டோனி பிளேயரும் கோர்டன் பிரவுனும், தற்போதுள்ள அனைத்து தொழிற்சங்க எதிர்ப்புச் சட்டங்களையும் தக்கவைத்து, இரயில்வே துறையை தேசியமயமாக்கும் வாக்குறுதியை மீறியதுடன், 1979-1997 காலக்கட்ட தாட்சர்-மேஜர் டோரி அரசாங்கத்தை விடக் குறைவான வலதுசாரிகள் அல்ல என்பதை நிரூபித்து தமது கொள்கைகளை அமுல்படுத்தினர். ஸ்டார்மரின் தொழிற் கட்சியானது, அதன் சித்தாந்த வழிகாட்டிகளைப் போலவே தொழிலாள வர்க்கத்திற்கு ஒவ்வொரு வகையிலும் விரோதமாக உள்ளது. அதாவது, அவர் சிக்கன நடவடிக்கைக்கும் போருக்கும் ஒத்துழைப்பவராக இருக்கிறார். மேலும் தொழில்துறை நடவடிக்கைக்கு அறிவிக்கப்பட்ட எதிர்ப்பாளராக இருக்கிறார்.
அரசாங்கத்தில் உள்ள பிளவுகள் வேலைநிறுத்த தடைச்சட்ட மசோதாவை நிறுத்த முடியும் என்று கூறினாலும், டோரி பாராளுமன்ற உறுப்பினர்களிடம் முறையிடுமாறு தொழிலாளர்களையே அவை வலியுறுத்துகின்றன! RMT உறுப்பினர்களுக்கு அனுப்பப்பட்ட மின்னஞ்சல் சுற்றறிக்கையில் லிஞ்ச் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார், “சில டோரி பாராளுமன்ற உறுப்பினர்கள் நிலை தடுமாறத் தொடங்கியுள்ளனர்… மேலும் மசோதாவைப் பற்றிய கவலைகள் குறித்து குரல் கொடுக்கத் தொடங்கியுள்ளனர். நாம் பாராளுமன்ற உறுப்பினர்களை அணுக வேண்டும்… இந்த மசோதா குறித்து டோரி கட்சியை பிளவுபடுத்துவோம்.”
டோரிகள் தான் இந்த சட்டத்தை கொண்டு வந்துள்ளனர். ஏனென்றால் இப்போது திட்டமிட்டு நடத்தி வரும் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலின் கீழ் தொழிலாள வர்க்கத்தை தொழிற்சங்கங்களால் கட்டுப்படுத்த முடியாது என்று டோரிகள் அஞ்சுகின்றனர். சட்டவிரோத வேலைநிறுத்தங்களுக்கு 1 மில்லியன் பவுண்டுகள் நஷ்டஈடு என்ற அச்சுறுத்தல்களானது ஒன்றும் செய்ய முடியாது என்பதை வலியுறுத்த தொழிற்சங்க அதிகாரத்துவத்தால் அது பயன்படுத்தப்படும்.
தொற்றுநோய் இலாபம் ஈட்டுபவர்களிடம் ஒப்படைக்கப்பட்ட பில்லியன்களுக்கு மற்றும் அதிகரித்துவரும் உலகப் பொருளாதார நெருக்கடிக்கு தொழிலாளர்கள் விலை செலுத்த வேண்டும் என்பது மட்டும் அல்ல. இது பிரிட்டிஷ், ஐரோப்பிய மற்றும் அமெரிக்க தொழிலாள வர்க்கம் உக்ரேனில் ரஷ்யாவுடனான துப்பாக்கிச் சூடு போருக்கு இழுக்கப்படும் நிலைமைகளின் கீழ் மேற்கொள்ளப்பட வேண்டும்.
அமெரிக்கா, இங்கிலாந்து, ஜேர்மனி மற்றும் பிற நாடுகளால் உக்ரேனுக்கு யுத்த டாங்கிகள் அனுப்பப்பட்டு வருகின்றன. இவற்றைத் தொடர்ந்து நேட்டோ துருப்புக்களின் நேரடி ஈடுபாட்டுடன், போர் விமானங்கள் வழங்கப்படுவதுடன், விமானங்கள் பறக்கக் கூடாத பகுதி உருவாக்கப்படுகிறது. பால்டிக் நாடுகளில் உள்ள ரஷ்யாவின் எல்லைகள் உட்பட வடக்கு மற்றும் கிழக்கு ஐரோப்பா முழுவதும் பல்லாயிரக்கணக்கான துருப்புக்கள் ஏற்கனவே நிலைநிறுத்தப்பட்டுள்ளன.
வெளிநாட்டில் போர் என்பது உள்நாட்டில் வர்க்கப் போரை உருவாக்குகிறது. ரஷ்யாவிற்கு எதிரான நேட்டோ போருக்கு சாமானிய மக்களின் ஆதரவு இல்லை என்ற நிலையில், எதிர்ப்பின் தவிர்க்க முடியாத வளர்ச்சி அங்கு ஒடுக்கப்பட வேண்டும். கூடுதலாக, முன்னணி இராணுவ சிந்தனை குழுவான ரோயல் யுனைடெட் சர்வீசஸ் நிறுவனம் அறிவித்துள்ளது போல், அத்தகைய போர் தொடர்புபட்ட பாரிய செலவினங்களை சுகாதாரம் மற்றும் பிற அத்தியாவசிய சேவைகளை இல்லாதொழிப்பதன் மூலம் மட்டுமே வழங்க முடியும். அது, இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ‘அமைதியின் ஈவை’ முடிவுக்குக் கொண்டு வருகிறது.
அதனால்தான் டோரிகளும் அரசியல் எதிர்ப்பைக் குற்றமாக்கும் சட்டத்தை முன்வைக்கின்றனர்.
தொழிற்கட்சி மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் எந்தப் பிரிவும் இதை எதிர்க்கும் என்று நாம் நம்ப முடியாது. இது, ஸ்டார்மரை எதிர்க்க மறுக்கும் அதேவேளையில் ‘ஒற்றுமை’ பற்றி முடிவில்லாமல் கூச்சலிடுவதைத் தவிர வேறெதையும் செய்யாத ஜேர்மி கோர்பினையும், மற்றும் தொழிலாள வர்க்கத்திற்காக அல்லாமல், ஏகாதிபத்திய சார்பு தொழிற்கட்சிக்கு எப்போதும் விசுவாசமாக இருக்கும் ஒரு சில தொழிற்கட்சி இடதுசாரிகளையும் உள்ளடக்கிறது.
ஆகவே, தொழிற்சங்கம் மற்றும் தொழிற்கட்சி அதிகாரத்துவத்திற்கு நேர் எதிராக தொழிலாளர்கள் இந்த போராட்டத்தை தாமே முன்னெடுக்க வேண்டும்.
சோசலிச சமத்துவக் கட்சியானது (SEP), அடிப்படை ஜனநாயக உரிமைகளை பாதுகாப்பது மற்றும் சிக்கனம், ‘என்றென்றும் கோவிட்’ எனும் கொலைகாரக் கொள்கை மற்றும் போர் முனைப்பு ஆகியவற்றை எதிர்ப்பது தொடர்புபட்ட சமூக மற்றும் அரசியல் போராட்டத்திற்கான ஒரு புதிய வேலைத்திட்டத்தை ஏற்றுக்கொள்ளுமாறு தொழிலாளர்களுக்கு அழைப்பு விடுக்கிறது.
தொழிலாளர்கள் தங்கள் தலைவிதியை தங்கள் கைகளில் எடுத்துக்கொள்ள வேண்டும். டோரி அரசாங்கத்தை வீழ்த்துவதற்கான பொது வேலைநிறுத்தத்தை அணிதிரட்டுவதற்கான போராட்டம் தொடர்பாக தொழிலாள வர்க்கத்தின் பரந்த பிரிவினரிடையேயான பொதுவான நடவடிக்கைக்கு திட்டமிட தொழிற்சங்க அதிகாரத்துவத்தில் இருந்து சுயாதீனமாக செயல்படக்கூடிய சாமானிய தொழிலாளர் பாதுகாப்புக் குழுக்களை கட்டமைக்க நாங்கள் தொழிலாளர்களுக்கு அழைப்பு விடுக்கிறோம். பெரும்பாலான தொழிலாளர்களும் அதைத்தான் கோருகின்றனர்.
அவர்களுக்குப் பதிலாக எந்தக் கட்சி ஆட்சி அமைக்கப் போகிறது என்ற பிரச்சினையை இது எழுப்புகிறது. தொழிற்கட்சி என்பது உண்மையில் சரியான மாற்று அல்ல என்பதுடன், மில்லியன் கணக்கான தொழிலாளர்களால் அது அவ்வாறு பார்க்கப்படுவதில்லை. சாத்தியமான பொதுத் தேர்தலை எதிர்கொண்டால், அதில் எவரும் வாக்களிக்க மாட்டார்கள் என்பதே பெரும்பாலும் கிடைக்கும் பதிலாக உள்ளது.
உண்மையில் தொழிலாள வர்க்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு புதிய கட்சி இங்கு கட்டமைக்கப்பட வேண்டும்.
பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும். டோரிகளுக்கு ஆட்சி செய்யும் உரிமை இல்லை. எந்தவொரு தேர்தலிலும், சோசலிச சமத்துவக் கட்சி வேட்பாளர்கள் தற்போதைய நெருக்கடிக்கு அடித்தளமாக இருக்கும் பிரச்சினைகளை வெளிச்சத்திற்குக் கொண்டு வருவார்கள். இதை டோரிகளும் தொழிற்கட்சியும் வணிக சார்பு, போர் சார்பு பிரச்சாரத்தின் கீழ் புதைக்க சதி செய்கிறார்கள். போரை நிறுத்தவும், பூஜ்ஜிய கோவிட் கொள்கையை ஏற்கும்படி கட்டாயப்படுத்தவும், மற்றும் முதலாளித்துவத்திற்கு ஒரு சோசலிச மாற்றீட்டிற்கான ஆதரவை உருவாக்கவும் என, வேலைநிறுத்தங்கள், பாரிய எதிர்ப்புக்கள் மற்றும் பொது வேலைநிறுத்தத்திற்கு நாம் ஏற்பாடு செய்வோம்.
அனைத்து நாடுகளிலும் சுமத்தப்பட்டுவரும் காட்டுமிராண்டித்தனமான வெட்டுக்களுக்கு எதிராகவும், அணுவாயுதங்கள் கொண்டு நடத்தப்படும் மூன்றாம் உலகப் போரின் அச்சுறுத்தலுக்கு எதிராகவும், முழு உலகத் தொழிலாளர்களின் ஐக்கியத்தின் அடிப்படையில் ஒரு சர்வதேச மூலோபாயத்தை பின்பற்றாமல், அனைத்து எதிர்க்கட்சிகளின் நடைமுறை ஆதரவை அனுபவிக்கும் கன்சர்வேடிவ் அரசாங்கத்தின் தாக்குதலை தொழிலாளர்களால் எதிர்க்க முடியாது.
‘செல்வந்தர்களின் ஜனாதிபதி’ என வெறுக்கப்படும் மக்ரோனால் பில்லியன் கணக்கான யூரோக்கள் மதிப்பில் விதிக்கப்பட்ட ஓய்வூதிய வெட்டுக்கள் மற்றும் ஓய்வு வயது உயர்த்தப்பட்டது ஆகியவற்றை எதிர்த்து மில்லியன் கணக்கான பிரெஞ்சு தொழிலாளர்கள் தற்போது எதிர்ப்பதையும் வேலைநிறுத்தம் செய்வதையும் பிரிட்டன் தொழிலாளர்களும் பின்பற்ற வேண்டும். பெல்ஜியம், கிரீஸ் மற்றும் இத்தாலியில் உள்ள தொழிலாளர்களும், மற்றும் ஐரோப்பா எங்கிலும் பிற தொழிலாளர்களும் பலமுறை ஒரு நாள் பொது வேலைநிறுத்தங்களை நடத்தியுள்ளனர். இது போர்வெறியில் ஈடுபடும் அரசாங்கங்கள் மற்றும் உலகளாவிய பெருநிறுவனங்கள், வங்கிகள் மற்றும் அவை அனைத்தும் சேவை செய்யும் நிதிய தன்னலக்குழுவை எடுத்து தோற்கடிக்கக்கூடிய ஒரு தடுத்து நிறுத்த முடியாத சக்தியை உருவாக்கும்.
இந்த சோசலிச முன்னோக்கிற்கு உடன்படுபவர்கள் சோசலிச சமத்துவக் கட்சியில் இணைந்து இந்தப் போராட்டத்தை முன்னெடுக்க முன்வர வேண்டும்.