சட்டவிரோத ஆக்கிரமிப்பை பாதுகாக்க சிரியா மீது அமெரிக்கா குண்டு வீச்சு

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம். 

சிரியாவின் இறையாண்மை மற்றும் சர்வதேச சட்டத்தை மீறி நாட்டின் மீதான வாஷிங்டனின் குற்றவியல் ஆக்கிரமிப்பைப் பாதுகாப்பதற்காக அமெரிக்க விமானப்படை வியாழக்கிழமை இரவு சிரியாவின் கிழக்கு மாகாணமான டெய்ர் எஸ்ஸோரிலுள்ள இலக்குகளுக்கு எதிராக தொடர்ச்சியான தாக்குதல்களை நடத்தியது.

பென்டகனின் கூற்றுப்படி, வடகிழக்கு சிரியாவிவுள்ள ஹசாகா நகருக்கு அருகிலுள்ள கராப் அல்-ஜிர் இராணுவ விமான நிலையத்திலுள்ள அமெரிக்க இராணுவ பராமரிப்பு மையத்தின் மீது ஆளில்லா விமானம் தாக்கியதில் ஒரு இராணுவ ஒப்பந்தக்காரர் கொல்லப்பட்டார் மற்றும் ஐந்து அமெரிக்க இராணுவ சிப்பாய்கள் மற்றும் மற்றொரு ஒப்பந்தக்காரர் காயமடைந்தனர், அதன் பின்னர் தான் இந்தக் குண்டு தாக்குதல்களுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டார். 

டிசம்பர் 4, 2022 அன்று சிரியாவில் நடவடிக்கை ஆதரவு தளமான கொனோகோவில் நிறுத்தப்பட்டிருந்த அமெரிக்க படையினர் ஒரு எம் 777 ஹோவிட்ஸரால் தாக்குதல் நடத்துகின்றனர். [Photo: US Department of Defense/ Army Sgt. Julio Hernandez]

அமெரிக்க வெடிகுண்டுகள் அடர்த்தியான மக்கள்தொகை கொண்ட நகரமான டெய்ர் எஸ்ஸோரின் ஹராபிஷ் சுற்றுப்புறத்தின் மீதும், அல்-புகாமால் பாலைவனத்திலுள்ள ஒரு இலக்கான அல் மயாதின் நகரத்தின் மீதும் விழுந்தன. இந்த தாக்குதல்கள் 'ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையுடன் தொடர்புடைய குழுக்கள் பயன்படுத்திய தளங்களை' தாக்கியதாக பென்டகன் கூறியது.

எவ்வாறெனினும், அமெரிக்க ஏவுகணைகள் ஒரு தானிய சேமிப்பு கிடங்கு மற்றும் ஒரு கிராமப்புற மேம்பாட்டு மையத்தை தாக்கியதாக உள்ளூர்வாசிகள் ஈரானிய மற்றும் லெபனான் ஊடகங்களுக்கு தெரிவித்தனர். அமெரிக்கத் தாக்குதலில் ஈரானியர்கள் யாரும் கொல்லப்படவில்லை என்று ஈரானிய அரச ஊடகம் கூறியுள்ளது.

லண்டனை தளமாகக் கொண்ட சிரிய மனித உரிமைகள் கண்காணிப்பகம், அமெரிக்க குண்டுவெடிப்புகளில் இரண்டு சிரிய குடிமக்கள் உட்பட குறைந்தது 11 குடிப்படைக் குழு உறுப்பினர்கள் கொல்லப்பட்டதாக கூறியது. அமெரிக்க தாக்குதலில் கொல்லப்பட்டவர்கள் சிரிய வீரர்கள் என்று உள்ளூர் ஆதாரங்களை மேற்கோள்காட்டி ஈரானின் Press TV தெரிவித்துள்ளது.

ஹசாகா அருகேயுள்ள அமெரிக்க ராணுவ தளம் ராக்கெட் தாக்குதலுக்கு உள்ளானதாக வெள்ளிக்கிழமை தெரிவிக்கப்பட்டது. வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி ஊடகங்களிடம் கூறுகையில், இந்த ஏவுகணையால் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்றார்.

வெள்ளியன்று பிற்பகுதியில் மூன்று அமெரிக்கத் தளங்கள் மீது ராக்கெட் தாக்குதல்கள் தொடர்ந்தன, குறைந்தது ஒரு அமெரிக்க சிப்பாய் காயமடைந்தார், மேலும் அமெரிக்க இராணுவமானது போர் விமானங்கள் மற்றும் தாக்குதல் ஹெலிகாப்டர்களைப் பயன்படுத்தி தாக்குதல்களை நடத்தி வருவதாக செய்திகள் வெளிவந்தன.

அமெரிக்க இராணுவ செய்தித் தொடர்பாளர்கள் மேலும் மேலும் இரத்தக்களரியான அமெரிக்க இராணுவத் தாக்குதல்கள் நடக்கக்கூடும் என்பதை தெளிவுபடுத்தியுள்ளனர். பிராந்தியத்திலுள்ள அனைத்து அமெரிக்க இராணுவப் படைகளையும் மேற்பார்வையிடும் அமெரிக்க மத்திய கட்டளையகத்தின் தலைவர் ஜெனரல் எரிக் குரில்லா வியாழனன்று அமெரிக்க ஆயுத சேவைகள் குழுவிடம், 'கூடுதல் ஈரானிய தாக்குதல்களுக்கு' பதிலடி கொடுப்பதாகக் கூறப்படுவதில் அவர்கள் 'அளவிடக்கூடிய விருப்பங்களுக்கு' தயாராக இருப்பதாக கூறினார். தனது பங்கிற்கு, பாதுகாப்பு செயலாளர் லாயிட் ஆஸ்டின், வாஷிங்டனானது 'நாங்கள் தேர்ந்தெடுக்கும் நேரத்திலும் இடத்திலும் எப்போதும் பதிலளிக்கும்' என்று சூளுரைத்தார்.

பைடன் நிர்வாகம், இராணுவம் மற்றும் அமெரிக்க ஊடகங்கள் சிரியாவில் அமெரிக்க தாக்குதல்களை 'ஈரானிய ஆக்கிரமிப்பிற்கு' 'பழிவாங்கும்' பதில்களாக சித்தரிக்கும் முயற்சிகள் மோசடியானவை மற்றும் சிடுமூஞ்சித்தனமானவையாகும்.

சிரியாவின் நிலப்பரப்பை அமெரிக்கப் படைகள் சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளனர். சுமார் 900 அமெரிக்க துருப்புக்கள், இன்னும் அதிக எண்ணிக்கையிலான அமெரிக்க இராணுவ ஒப்பந்தக்காரர்களுடன் சேர்ந்து இந்த ஆக்கிரமிப்பில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் சிரியாவின் வடகிழக்கு எண்ணெய் வயல்களில் நிறுத்தப்பட்டுள்ளனர், போரால் பாதிக்கப்பட்ட நாட்டிற்கு மிகவும் தேவையான எரிசக்தி விநியோகங்களுக்கு அணுகலை மறுக்கின்றனர் மற்றும் தெற்கிலுள்ள அல்-டான்ஃப் இல், மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த பாக்தாத் முதல் டமாஸ்கஸ் நெடுஞ்சாலையில் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ளனர்.

இந்த ஆக்கிரமிப்பின் குற்றவியல் தன்மையானது, பொருளாதாரத் தடைகள் மூலம் நாட்டை பொருளாதார ரீதியாக கழுத்தை நெரிக்கும் வாஷிங்டனின் முயற்சியுடன் சேர்ந்து, கடந்த மாதம் நடந்த பேரழிவுகரமான துருக்கிய-சிரிய பூகம்பத்தால் ஆழப்படுத்தப்பட்டுள்ளது, இது ஆயிரக்கணக்கான சிரியர்களைக் கொன்றதோடு, மில்லியன் கணக்கானவர்களை அவர்களின் வீடுகளை விட்டு வெளியேற்றியது.

ஐ.எஸ்.ஐ.எஸ் (ISIS - இஸ்லாமிய அரசு) இன் மிஞ்சியிருப்பவர்களை எதிர்த்துப் போராடும் சாக்குப்போக்கில் தொடரும் இந்த ஆக்கிரமிப்பு உண்மையில் சிரிய அரசாங்கம், ஈரானிய ஆதரவு போராளிகள் மற்றும் ரஷ்ய இராணுவத்திற்கு எதிராக இயக்கப்படுகிறது, அவைகள் ஒன்றாக ஐ.எஸ்.ஐ.எஸ் இன் தோல்வியில் தீர்க்கமான பாத்திரங்களை வகித்தன. சிரியாவில் ஆட்சி மாற்றத்திற்கான சிஐஏ-திட்டமிடப்பட்ட போரின் விளைபொருளே ஐ.எஸ்.ஐ.எஸ் ஆகும். இதில் வாஷிங்டன் பில்லியன் கணக்கான டொலர்கள் ஆயுதங்களையும் பணத்தையும் அல் கொய்தாவுடன் தொடர்புடைய இராணுவக் குழுக்கள் மீது கொட்டியதோடு, நூறாயிரக்கணக்கானவர்களைக் கொன்ற மற்றும் மில்லியன் கணக்கானவர்களை அகதிகளாக மாற்றிய ஒரு மோதலையும் வளர்த்தது.

அமெரிக்க ஆக்கிரமிப்பு இந்த காட்டுமிராண்டித்தனமான போரின் தொடர்ச்சியாகும். இது சிரிய அரசோ அல்லது ஐக்கிய நாடுகள் சபையோ அனுமதிக்காத சர்வதேச சட்டத்தை மீறுவதாகும். இந்த நிலைமைகளின் கீழ், இந்த ஆக்கிரமிப்பை எதிர்ப்பவர்களின் மற்றும் அமெரிக்காவை சிரியாவில் இருந்து வெளியேற்றி நாட்டின் இறையாண்மையை மீட்டெடுக்க முயற்சிப்பவர்களின் ஆயுத நடவடிக்கைகள் முற்றிலும் நியாயமானவையாகும்.

சிரியாவில் மட்டுமன்றி ஈராக், ஆப்கானிஸ்தான், லிபியா மற்றும் யேமனிலும் மில்லியன் கணக்கானவர்களைக் கொன்று முடமாக்கிய பிராந்தியத்தில் மூன்று தசாப்த கால அமெரிக்க ஏகாதிபத்திய இராணுவத் தலையீட்டைத் தொடர்ந்து இந்த ஆக்கிரமிப்பு நிகழ்ந்துள்ளது.

டமாஸ்கஸில் சிரிய அரசாங்கத்திற்கு ஆதரவாகத் தலையிட்ட ரஷ்யாவை எதிர்கொள்வதன் மூலம் உக்ரேனில் அமெரிக்க-நேட்டோ பினாமிப் போரை ஆதரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மார்ச் மாதத்தில் ஒவ்வொரு நாளும் அல் தான்ஃப் அமெரிக்க பாதுகாப்புத் தளத்தின் மீது ஆயுதமேந்திய ஜெட் விமானங்களை பறக்கவிட்டதன் மூலம் ரஷ்யா முந்தைய ஒப்பந்தத்தை மீறியுள்ளது என்ற அமெரிக்க இராணுவ கட்டளையகத்தின் குற்றச்சாட்டுகளால் இந்த வாரம் ஒரு நேரடி இராணுவ மோதலின் அச்சுறுத்தல்களால் அடிக்கோடிட்டுக் காட்டப்பட்டது.

அதே நேரத்தில், மத்திய கிழக்கில் சீனாவின் வளர்ந்து வரும் பொருளாதார மற்றும் அரசியல் செல்வாக்கை எதிர்க்க வாஷிங்டன் மத்திய கிழக்கில் அதன் இராணுவ இருப்பை முன்னெப்போதையும் விட அதிகமாக சார்ந்துள்ளது.

சீனாவானது மத்திய கிழக்கில் மிகப் பெரிய முதலீட்டாளராக மாறியுள்ளது, அதே நேரத்தில் பிராந்தியத்துடனான அதன் மொத்த வர்த்தகம் அமெரிக்காவை விட மிக அதிகமாக உள்ளது. 2021 ஆம் ஆண்டில், மத்திய கிழக்கில் இருந்து சீனாவின் இறக்குமதி - பெரும்பாலும் எண்ணெய் மற்றும் எரிவாயு - அமெரிக்காவை விட நான்கு மடங்கு அதிகமாக இருந்தது, 130 பில்லியன் டாலர்கள் அளவிற்கு மாறாக 34 பில்லியன் டாலர்கள்; மற்றும் சீன ஏற்றுமதிகள் அமெரிக்க ஏற்றுமதியை விட கிட்டத்தட்ட மூன்று மடங்காக இருந்தது, 129 பில்லியன் டாலர்கள் அளவிற்கு மாறாக 48 பில்லியன் டாலர்களாக இருந்தன. 2021 ஆம் ஆண்டில் மட்டும், இப்பிராந்தியத்தில் சீன முதலீடுகள் 360 சதவீதம் அதிகரித்துள்ளன.

ஈராக்கிற்கு எதிராக அமெரிக்கா அதன் குற்றவியல் போரை தொடங்கி இருபது ஆண்டுகளுக்குப் பிறகு, சீனாவின் வழி & சாலை முன்முயற்சி (Belt & Road Initiative) திட்டத்தில், சீனாவால் நிதியளிக்கப்பட்ட பெரிய கட்டுமானத் திட்டங்களுக்காக ஒரு நாளைக்கு 100,000 பீப்பாய்கள் ஈராக்கிய எண்ணெயை ஏற்றுமதி செய்யும் ஒரு ஒப்பந்தத்தின் கீழ், அந்நாடு முன்னணி பங்காளிகளில் ஒன்றாக உள்ளது.

சிரியாவில் அல் கொய்தாவுடன் தொடர்புடைய இராணுவக் குழுக்களுக்கு ஆதரவளிப்பதில் முன்னர் வாஷிங்டனின் முக்கிய கூட்டாளியாக இருந்த சவூதி அரேபியாவிற்கும், அவர்களுக்கு எதிராக டமாஸ்கஸை ஆதரித்த ஈரானுக்கும் இடையே ஒரு சமரசத்திற்கு பெய்ஜிங் மத்தியஸ்தம் செய்ததை அடுத்து சிரியாவில் அமெரிக்க 'இயக்க நடவடிக்கை' திடீரென வெடித்தது தற்செயலானது அல்ல.

சிரியாவும் சவூதி அரேபியாவும் இராஜதந்திர உறவுகளை மீண்டும் நிறுவுவதற்கான உடன்பாட்டை எட்டியுள்ளன என்ற அறிக்கை வெளியான சில நாட்களுக்குப் பிறகும், சிரியாவின் ஜனாதிபதி பஷார் அல்-அசாத் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் ஓமானுக்கு அரசு முறை விஜயங்களை மேற்கொண்ட பின்னர், அமெரிக்க இராணுவ விரிவாக்கம் வந்துள்ளது. அமெரிக்காவின் கடுமையான அழுத்தங்களுக்கு மத்தியிலும் ஒன்றன்பின் ஒன்றாக அரபு அரசாங்கங்கள் சிரியாவுடனான உறவுகளை மீண்டும் ஆரம்பித்து வருகின்றன.

பிராந்தியத்தில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பொருளாதார மற்றும் அரசியல் மேலாதிக்கத்தின் வீழ்ச்சியை ஈடுசெய்யும் முயற்சியில், மத்திய கிழக்கில் வாஷிங்டனின் தொடர்ச்சியான இராணுவ பலத்தைப் பயன்படுத்துவது, உக்ரேனில் 'மனித உரிமைகள்' மற்றும் 'தேசிய இறையாண்மையை' பாதுகாப்பது குறித்த அனைத்து பிரச்சாரங்களின் உயர் பாசாங்குத்தனத்தை அம்பலப்படுத்த உதவுகிறது.

ரஷ்யாவிற்கு எதிராக அமெரிக்காவும் நேட்டோவும் முன்னெடுத்து வரும் பினாமிப் போரானது சிரியா, ஈராக் மற்றும் பிராந்தியத்தின் ஏனைய பகுதி மக்களுக்கு எதிரான தசாப்தகால அமெரிக்க இராணுவ ஆக்கிரமிப்பின் தொடர்ச்சி மற்றும் ஆபத்தான விரிவாக்கத்தை பிரதிபலிக்கிறது, அவர்களின் இறையாண்மையும் மனித உரிமைகளும் 'அதிர்ச்சி மற்றும் பிரமிப்பு' குண்டுவீச்சுகள், காலனித்துவ பாணி ஆக்கிரமிப்பு, படுகொலைகள் மற்றும் சித்திரவதைகளால் நாசமாக்கப்பட்டன.

உக்ரேனில் யுத்த வலயங்களில் இருந்து குழந்தைகளை ரஷ்யா வெளியேற்றியதற்காக ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை போர்க்குற்றவாளி என்று குற்றஞ்சாட்டியுள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ICC - ஐ.சி.சி), சிரியாவில் அதன் தொடர்ச்சியான ஆக்கிரமிப்பு மற்றும் குண்டுவீச்சு மூலம் வாஷிங்டனின் அப்பட்டமான சர்வதேச சட்ட மீறல்கள் தொடர்பாக அதன் உதடுகளை இறுக மூடிக் கொண்டுள்ளது, அதற்கு முந்தைய 30 ஆண்டுகளுக்கும் மேலான அமெரிக்க ஏகாதிபத்திய குற்றங்களைப்பற்றி அது குறிப்பிடவில்லை.

கடந்த மூன்று தசாப்தங்களில் ஒவ்வொரு அமெரிக்க ஜனாதிபதியும் ஈராக், ஆப்கானிஸ்தான், லிபியா, சிரியா மற்றும் யேமனுக்கு எதிரான போர்கள், மில்லியன் கணக்கானவர்களின் உயிர்களைப் பறித்த ஒருதலைப்பட்ச பொருளாதாரத் தடைகள் மற்றும் குற்றவியல் சிஐஏ படுகொலைகள் மற்றும் சித்திரவதைத் திட்டங்கள் ஆகியவற்றிற்காக போர்க்குற்ற விசாரணையின் குற்றவாளிக் கூண்டில் நிற்பதற்கு தகுதியானவர்கள்.

ஐ.சி.சி.யின் அதிகார வரம்பை அங்கீகரிக்க மறுக்கும் வாஷிங்டன், அமெரிக்க இராணுவம் அல்லது அரசியல் பிரமுகர்களை விசாரிக்க நீதிமன்றம் முயன்றால் ஹேக்கிற்கு எதிராக இராணுவ பலத்தைப் பயன்படுத்த அச்சுறுத்தும் சட்டத்தை இயற்றும் அளவுக்குச் சென்றுள்ளது. அதே நேரத்தில்,  ஆப்கானிஸ்தானில் அமெரிக்க போர்க் குற்றங்கள் குறித்த குற்றச்சாட்டுகளை விசாரிக்கத் துணிந்ததற்காக ஐ.சி.சி சட்ட வல்லுநர்கள் மீது பயங்கரவாதிகள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்படுவது போன்ற பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது.

பென்டகன் மத்திய கிழக்கில் பல தசாப்தங்களாக மேற்கொண்ட ஆக்கிரமிப்பு போர்களில் இருந்து ரஷ்யா மற்றும் சீனாவுக்கு எதிரான புதிய மற்றும் உலக-பேரழிவு தரக்கூடிய அணுஆயுத போர்களை தயாரிப்பதில் தனது கவனத்தை மாற்றினாலும், அது இன்னும் சிரியா, ஈரான், ஈராக் மற்றும் இப்பிராந்தியத்தின் பிற பகுதிகளுக்கு எதிராக பாரிய வன்முறையை கட்டவிழ்த்துக் கொண்டிருக்கிறது.