மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
சிரியாவில், மேற்கத்திய நாடுகளின் ஆதரவுடைய ஹையத் தஹ்ரிர் அல்-ஷாம் (HTS) ஆட்சியானது, அலவைட்டுகள் மீதான படுகொலைகளை தீவிரப்படுத்தியுள்ளதால், 1,000 க்கும் மேற்பட்டவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
இங்கிலாந்தை தளமாகக் கொண்ட சிரிய மனித உரிமைகள் கண்காணிப்பகம் (SOHR), HTS ஆட்சியுடன் இணைந்த ஆயுதக் குழுக்களானது கடந்த வியாழக்கிழமை முதல், கடலோரப் பகுதியில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட குறைந்தது 745 பொதுமக்களைக் கொன்றுள்ளதாகத் தெரிவித்துள்ளது. இந்தப் படுகொலைகளின் கொடூரம், ஒரு எச்சரிக்கையாக தெருக்களில் விடப்பட்டதன் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.
அலவைட்டுகள் மற்றும் பிற மத சிறுபான்மையினருக்கு எதிரான HTS ஜிஹாதிகளின் பயங்கரவாதம் ஒன்றும் புதிதல்ல. உலக சோசலிச வலைத் தளம் அறிவித்ததைப் போல, இந்தத் தாக்குதல்கள் ஜனாதிபதி பஷர் அல்-அசாத்தின் ஆட்சியைக் கவிழ்த்து, கடந்த டிசம்பரில் சிரியாவில் அதிகாரத்திற்கு வந்ததில் இருந்தே திட்டமிட்டு நடத்தப்பட்டு வருகின்றன. கடந்த டிசம்பர் மாத இறுதியில், ஆட்சியிலுள்ள படைகளின் தாக்குதல்கள் பாரிய போராட்டங்களுக்கு வழிவகுத்தன.
BBC அறிக்கைகளின்படி, லடாகியாவில் உள்ள பெய்ட் அனா கிராமத்தில் வசிப்பவர்கள் வியாழக்கிழமை ஒரு சந்தேகத்திற்குரிய நபரை பாதுகாப்புப் படையினரிடம் ஒப்படைக்க மறுத்தபோது வன்முறை தொடங்கியது மற்றும் விரைவில் வடமேற்கில் உள்ள மற்ற கடலோர நகரங்களுக்கும் பரவியது. முன்னாள் சிரிய இராணுவ சிப்பாய்களைக் கொண்ட ஆயுதமேந்திய குழுக்கள் அரசாங்க சோதனைச் சாவடிகள், பாதுகாப்பு வாகனங்கள் மற்றும் இராணுவ நிலைகள் மீது ஒருங்கிணைந்த தாக்குதல்களைத் தொடங்கின. இதற்கு பதிலடியாக, இடைக்கால அரசாங்கப் படைகள் ஒரு பெரிய அளவிலான நடவடிக்கையைத் தொடங்கின.
கடந்த சனிக்கிழமையன்று, இந்த நடவடிக்கையின் போது குறைந்தது 745 பொதுமக்கள், 148 கிளர்ச்சியாளர்கள் மற்றும் 125 அரசு படையினர்கள் கொல்லப்பட்டதாக சிரிய மனித உரிமைகள் கண்காணிப்பகம் ஏற்கனவே தெரிவித்துள்ளது. அசாத் ஆட்சியின் கீழ் பாதுகாப்புப் படைகளில் பணியாற்றிய அலவைட் ஆண்கள் புதிய அரசாங்கப் படைகளால் தூக்கிலிடப்பட்டனர். மேலும் பல அலவைட் கிராமங்கள் சூறையாடப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டன.
அல்-ஆன் தொலைக்காட்சியின் மத்திய கிழக்கு செய்தியாளர் ஜெனன் மௌசா, லடாகியா பிராந்தியத்தில் HTS ஆயுதக் குழுக்கள் நடத்திய தாக்குதல்கள் தொடர்பான காட்சிகளை சமூக ஊடகங்களில் கடந்த வெள்ளிக்கிழமை பகிர்ந்து கொண்டார். சிரிய ஆட்சியால் “பழைய ஆட்சியின் எச்சசொச்சங்கள்” என்று விவரிக்கப்பட்ட தனிநபர்களுக்கு எதிரான கடுமையான வன்முறையை அந்த காணொளிகள் காட்டுகின்றன. பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் சிவிலியன் உடைகளை அணிந்திருந்தனர். அல்-மொக்தாரியே பகுதியில் 29 பேரும், அல்-ஹஃபாவில் 11 பேரும் தூக்கிலிடப்பட்டதை மௌசாவின் காட்சிகள் வெளிப்படுத்திக் காட்டின.
அந்தக் காணொளிகளில் அவமதிப்புகளும், மதவெறி வாசகங்களும் இடம்பெற்றிருந்தன. ஒரு காணொளியில், ஒரு HTS ஆதரவாளர் பாதிக்கப்பட்டவர்களை “இறந்த விலங்குகள்” என்று குறிப்பிட்டார். மற்றொறு காணொளி, சிவில் உடைகளையும் செருப்புகளும் அணிந்த ஒரு மனிதன் மிக அருகில் இருந்து சுட்டுக்கொல்லப்படுவதை காட்டியது.
சிரிய மனித உரிமைகள் கண்காணிப்பகம் (SOHR) என்பது இங்கிலாந்து வெளியுறவு அலுவலகம் மற்றும் பிற ஐரோப்பிய சக்திகளால் நிதியளிக்கப்படும் ஒரு அசாத் எதிர்ப்பு அமைப்பாகும். இதன் இயக்குனர் ரமி அப்துல் ரஹ்மான் இங்கிலாந்துக்கு தப்பிச் செல்வதற்கு முன்பு சிரியாவில் மூன்று முறை சிறையில் அடைக்கப்பட்டார். ஜப்லே, பனியாஸ் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள் போன்ற அடர்த்தியான அலவைட் மக்கள் வசிக்கும் பகுதிகளில் நடந்த பரவலான படுகொலைகள், 14 ஆண்டுகால உள்நாட்டுப் போரில் நடந்த மிக மோசமான வன்முறைகளில் ஒன்றாகும் என்று அவர் கூறினார். “இது முன்னாள் அசாத் ஆட்சிக்கு ஆதரவாகவோ அல்லது எதிராகவோ இருப்பது பற்றியது அல்ல. இவை அலவைட் மக்களை அவர்களின் வீடுகளில் இருந்து வெளியேற்றுவதை நோக்கமாகக் கொண்ட மதக்குழுவாத படுகொலைகளாகும்” என்று அப்துல்ரஹ்மான் வலியுறுத்தி கூறினார்.
கடந்த சனிக்கிழமை, சமூக ஊடகத் தளங்கள் கடலோரப் பகுதியில் கொல்லப்பட்டவர்கள் தொடர்பான சிரிய பயனர்களின் புகைப்படங்கள் மற்றும் இரங்கல் செய்திகளால் நிரம்பியிருந்தன. ஆறு குடியிருப்பாளர்களிடம் தொடர்புகொண்டு ராய்ட்டர்ஸ் பேசியதில், வியாழக்கிழமை முதல் பாதுகாப்பு காரணங்களுக்காக ஆயிரக்கணக்கான அலவைட்டுகளும் கிறிஸ்தவர்களும் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியதாக தெரிவித்தனர். பலர், பெரும்பாலும் பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள், லடாகியாவின் ஹ்மெய்மிமில் உள்ள ரஷ்ய இராணுவத் தளத்தில் தஞ்சம் புகுந்தனர்.
பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட அலவைட் பொதுமக்கள் “தூக்கிலிடப்பட்டனர்” என்றும், அவர்களின் வீடுகள் மற்றும் சொத்துக்கள் சூறையாடப்பட்டன என்றும் அப்துல்ரஹ்மான் குறிப்பிட்டார். சனிக்கிழமை நிலவரப்படி பனியாஸ் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் இரவு முழுவதும் கொலைகள், கொள்ளைகள் மற்றும் தீ வைப்பு சம்பவங்கள் தொடர்ந்ததாக அவர் தெரிவித்தார்.
“புதிய ஆட்சியின் அதிகாரம் பெரும்பாலும் அலவைட்டுகளை கடவுளின் எதிரிகளாகக் கருதும் தீவிர ஜிஹாதிகளை அடிப்படையாகக் கொண்டது” என்று சுயாதீன ஆராய்ச்சி அறக்கட்டளையான செஞ்சுரி இன்டர்நேஷனலைச் சேர்ந்த ஆரோன் லுண்ட் AFP இடம் கூறினார். “ஒரு தாக்குதல் நடந்தால், இந்தக் குழுக்கள் அலவைட்டு கிராமங்களைத் தாக்குகின்றன, அதில் பாதிக்கப்படக்கூடியவர்கள் ஆயுதமேந்திய முன்னாள் படையினர்கள் மட்டுமல்ல, பொதுமக்களும் அடங்குவர்” என்று லுண்ட் மேலும் குறிப்பிட்டார்.
சிரிய அரசாங்க செய்தி நிறுவனமான SANA ஒரு பெயரிடப்படாத பாதுகாப்பு அதிகாரியை மேற்கோளிட்டு, பல ஆயுததாரிகள் பாதுகாப்புப் படைகளுக்கு எதிரான தாக்குதல்களுக்கு பழிவாங்குவதற்காக கடலோரப் பகுதிகளுக்குச் சென்றுள்ளனர் என்று கூறியுள்ளது.
அல்-கொய்தாவுடன் முன்னர் கூட்டணி வைத்திருந்த அல்-நுஸ்ரா முன்னணியின் வாரிசு அமைப்பான HTS-சார்ந்த குழுக்கள், “அலவைட்டுகளைக் கொல்வது கட்டாயம்” என்று மசூதிகளில் அழைப்பு விடுத்துள்ளதாக குற்றச்சாட்டுகள் தெரிவிக்கின்றன. சமூக ஊடகங்களில் இந்தக் குற்றச்சாட்டுகளை ஆதரிக்கும் வீடியோக்கள் உள்ளன.
டமாஸ்கஸில் உள்ள அல் ஜசீராவின் நிருபர் ரசூல் செர்தார் சனிக்கிழமை பிற்பகல் மோதல்களின் தீவிரம் கணிசமாகக் குறைந்துவிட்டது என்றும், இருப்பினும் நகரங்களுக்கு வெளியே சண்டை தொடர்கிறது என்றும் தெரிவித்தார். அதிகரித்து வரும் உயிரிழப்புகளால், அதிகரித்து வரும் “துயரத்தை” வலியுறுத்திய சேர்தார், “நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர், அவர்களில் பெரும்பான்மையானவர்கள் பொதுமக்கள்” என்று குறிப்பிட்டார்.
லடாகியாவில் தெருக்களில் ஒரு சடலம் இழுத்துச் செல்லப்படுவதைக் காட்டும் இரண்டு வீடியோக்களின் நம்பகத்தன்மையை பிபிசி உறுதிப்படுத்தியது.
லடாகியாவில் உள்ள ஒரு சிரிய ஆர்வலர் பிபிசி செய்தி நேர நிகழ்ச்சிக்கு தெரிவிக்கையில், இந்த வன்முறைகள் அலவைட் சமூகத்தில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது என்று கூறினார். பெயர் குறிப்பிட விரும்பாத ஆர்வலர் ஒருவர், “அவர்கள் மிகவும் பயப்படுகிறார்கள் ... அவர்களுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. அவர்களுக்கு உதவவும், அவர்களைப் பாதுகாக்கவும் எந்த அரசாங்கமோ அல்லது எந்த நாடுகளுமோ தயாராக இல்லை” என்று கூறினார்.
அலவைட்டுகள் அடர்த்தியாக வசிக்கும் ஹோம்ஸ், லடாகியா மற்றும் டார்டஸில் ஊரடங்கு உத்தரவுகள் விதிக்கப்பட்டன. அதே நேரத்தில், லடாகியாவின் ஆளுநர் இப்பகுதியில் தொடர்ந்து மின்வெட்டுகளை அறிவித்தார்.
ஆட்சி மாற்றத்திற்குப் பின்னர் “இடைக்கால ஜனாதிபதி” என்று அறிவித்த HTS அமைப்பின் தலைவர் அபு முஹம்மது அல்-ஜொலானி (அஹ்மத் அல்-ஷரா), ஒரு வீடியோ செய்தியில் இந்தப் படுகொலைகளை பாதுகாத்தார், “வெளியேற்றப்பட்ட ஆட்சியின் எஞ்சியவர்கள் அதைப் புரிந்து கொள்ளாமல் புதிய சிரியாவை சோதிக்க முயன்றனர், இன்று அவர்கள் சிரியாவை மீண்டும் கற்றுக்கொள்கிறார்கள்” என்று அவர் தெரிவித்தார். நேட்டோ நட்பு நாடுகளை கடினமான நிலையில் வைப்பதைத் தவிர்ப்பதற்காக, “கைதிகள் அவமானப்படுத்தப்படவோ அல்லது அடிக்கப்படவோ கூடாது, ஏனெனில் இது கடவுளின் கட்டளைக்கும் நாட்டின் சட்டங்களுக்கும் எதிரானது” என்று அல்-ஜோலானி கூறினார்.
துருக்கி உட்பட நேட்டோ சக்திகள், அவற்றின் புதிய கூட்டாளியான HTS ஆட்சியின் இரத்தம் தோய்ந்த ஆக்கிரமிப்பு பற்றி பெரும்பாலும் மெளனமாக இருக்கையில், அவர்கள் வெளியிட்ட சில அறிக்கைகள் அப்பட்டமான பாசாங்குத்தனத்திற்கு ஒரு உதாரணம் ஆகும்.
“சிரியாவின் மேற்குப் பகுதிகளில் ஏராளமான பாதிக்கப்பட்டவர்களால் நான் மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளேன் என்று சிரியாவிற்கான ஜேர்மனியின் சிறப்புத் தூதர் ஸ்டீபன் ஷ்னெக், X இல் கூறினார். சிரியாவிற்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதர் மைக்கேல் ஓன்மாச்ட், ஷ்னெக்கின் பதிவை மறு ட்வீட் செய்து, “அனைத்து தரப்பினரும் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்ற அழைப்பு குறித்து எனது ஜேர்மனியின் சகாவின் கருத்தை நான் பகிர்ந்து கொள்கிறேன்” என்று கூறினார்.
அடிப்படை ஜனநாயக உரிமைகளுக்கு விரோதமான இஸ்லாமிய ஜிஹாதிஸ்டுகள் சிரியாவில் ஒரு “ஜனநாயகப் புரட்சிக்கு” தலைமை கொடுத்திருப்பதாக வாதிடும் நேட்டோ சக்திகளும் அவற்றின் போலி-இடது ஆலோசகர்களும், இத்தகைய படுகொலைகளுக்கான பொறுப்பைப் பகிர்ந்து கொள்கின்றனர். சிரியாவிலும் பரந்த மத்திய கிழக்கிலும் ரஷ்ய மற்றும் ஈரானிய செல்வாக்கைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் பொருட்டு, ஆட்சி மாற்றத்திற்கான போரில் 2011 முதல் தாங்கள் ஆதரித்த இஸ்லாமியவாதிகள் கடந்த டிசம்பரில் ஆட்சிக்கு வந்ததை அவர்கள் பாராட்டினர். மேலும் அவர்கள் புதிய ஆட்சியுடன் தங்கள் உறவுகளை உறுதிப்படுத்த விரைந்தனர்.