மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
கடந்த வாரம் துனிசியக் கடற்கரையில் நடந்த மூன்று படகு விபத்துக்களில் குறைந்தது 29 அகதிகள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். மேலும் 67 பேர் காணாமல் போயுள்ளதாக உதவி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
இந்த புதிய துயரங்கள் துனிசியாவிலிருந்து அகதிகளின் தொடர்ச்சியான வெளியேற்றத்திற்கு மத்தியில் நிகழ்ந்துள்ளன. இவர்களில் பெரும்பாலானவர்கள் மத்திய ஆபிரிக்கா மற்றும் மேற்கு ஆபிரிக்கா, அத்துடன் பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் ஆகிய பகுதிகளில் இருந்து வந்தவர்களாவர். இவர்கள் துனிசிய அரசாங்கத்தினதும், ஐரோப்பிய ஒன்றியத்தினதும் குற்றவியல் அகதிகள் எதிர்ப்பு கொள்கையின் மூலம் நடத்தப்பட்ட இனவெறி பிரச்சாரத்தால் பாதிக்கப்பட்டவர்களாவர்.
மஹ்தியா நகருக்கு அருகே கவிழ்ந்த படகுகளில் ஒன்றிலிருந்து பதினோரு அகதிகளை மட்டுமே துனிசிய கடலோர காவல்படையால் மீட்க முடிந்தது. அதேவேளை, மற்றொரு ரோந்து படகு தண்ணீரிலிருந்து எட்டு உடல்களை வெளியே எடுத்தது. மேலும், இரண்டு மீன்பிடி படகுகள் துறைமுக நகரமான ஸ்ஃபாக்ஸின் கடற்கரையிலிருந்து 60 கிலோமீட்டர் தொலைவில் கடலில் இருந்து மேலும் 21 உடல்களை மீட்டன. எவ்வாறாயினும், உண்மையான இறப்பு எண்ணிக்கை மிக அதிகமாகவே இருக்கும். Sky News ஊடகத்திடம் பேசிய ஒருவர், கடந்த வாரத்தில் 130 பேர் உயிரிழந்ததாகக் கூறினார். அவர் மேலும், “இந்த வாரத்தில் பல பேரழிவுகள் நிகழ்ந்துள்ளது” என்றும் கூறினார்.
கடந்த வாரம் குறைந்தது 80 பழுதடைந்த படகுகளில் சுமார் 3,000 அகதிகளை ஏற்றிக்கொண்டு இத்தாலிக்குச் செல்வதற்காக கடலைக் கடக்க முயன்றதாகவும், இப்போது அவை மீண்டும் துனிசியாவிற்கு திருப்பிக்கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் துனிசிய கடலோர காவல்படை தெரிவித்தது.
கிட்டத்தட்ட 2022 ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் இருந்ததைப் போலவே, இத்தாலியிலும் அதே காலகட்டத்தில் 6,564 அகதிகள் கடற்கரையில் பதிவு செய்யப்பட்டுள்ளனர். துனிசியாவில் இருந்து 12,000 அகதிகள் வெளியேறியுள்ளது உட்பட, மொத்தம் 27,000 அகதிகள் ஏற்கனவே இந்த ஆண்டு இத்தாலியின் கடற்கரையில் சிக்கித் தவிப்பதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் துனிசியாவில் இருந்து வெறும் 1,300 அகதிகள் பதிவு செய்யப்பட்டிருந்ததை விட இது பல மடங்கு அதிகமாகும்.
சமூக மற்றும் பொருளாதார உரிமைகளுக்கான உதவி அமைப்பு (FTDES) ஆனது, துனிசிய கடலோர காவல்படை மொத்தம் 14,000 அகதிகளை கடலைக் கடந்து இத்தாலிக்குச் செல்ல விடாமல் தடுத்ததாக தெரிவித்துள்ளது. துனிசியாவானது, மத்தியதரைக் கடலைக் கடந்து ஐரோப்பிய ஒன்றியத்தை நோக்கி அகதிகள் செல்வதற்கான முக்கிய இடமாக இருந்த லிபியாவை பிரதியீடு செய்துள்ளது.
இருப்பினும், இதுவரை இத்தாலியில் பதிவு செய்யப்பட்ட துனிசியாவில் இருந்து வந்த அகதிகளில் 1,771 பேர் மட்டுமே துனிசியக் குடியுரிமை பெற்றுள்ளனர். Süddeutsche Zeitung பத்திரிகையின் அறிக்கையின்படி, 3,660 பேர் ஐவரி கோஸ்டை தங்கள் பூர்வீக நாடாகப் பதிவு செய்திருந்தனர். மேலும் 3,177 பேர் கினியா, 1,986 பேர் பாகிஸ்தான், 1,896 பேர் பங்களாதேஷ் மற்றும் 1,195 பேர் எகிப்து என தங்கள் பூர்வீகத்தை பதிவு செய்திருந்தனர்.
இந்த ஆண்டு பெப்ரவரி 21 அன்று துனிசிய ஜனாதிபதி கெய்ஸ் சையத் இனவெறியுடன் பேசியது தான் துனிசியாவில் இருந்து பெருமளவில் அகதிகள் வெளியேறுவதற்கு உடனடி தூண்டுதலாக இருந்தது. தேசிய பாதுகாப்புக் குழுவின் தளபதிகளிடம் பேசிய சையத், அகதிகளை பலிகடாக்களாக்கி, நாட்டின் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு அவர்கள் தான் காரணம் என்று அறிவித்தார். இந்நெருக்கடி பரந்த அளவிலான மக்களின் வறுமைக்கு வழிவகுத்தது.
“துணை-சஹாரா ஆபிரிக்காவில் இருந்து சட்டவிரோதமாக குடியேறுபவர்களின் கூட்டம் இன்னும் வந்து கொண்டுதான் இருக்கின்றது. அதனுடன் வன்முறையும், குற்றச் செயல்களும் ஏற்றுக்கொள்ள முடியாத நடைமுறைகளும் உள்ளன” என்று சையத் கூறினார். மேலும், “தொடர்ச்சியான சட்டவிரோத குடியேற்றங்களின் மறைமுகமான நோக்கம், துனிசியாவை இனி அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகளுக்கு சொந்தமில்லாத மற்றொரு ஆபிரிக்க நாடாக மாற்றுவதாகும்” என்றும் அவர் கூறினார். மேலும், ஐரோப்பாவில் உள்ள தீவிர வலதுசாரி மற்றும் பாசிச அமைப்புகளால் பரவலாகப் பரப்பப்படும் இனவாத தத்துவத்தின் அடிப்படையில் இங்கு வேண்டுமென்றே ஒழுங்கமைக்கப்பட்ட “மக்கள் பரிமாற்றம்” நடத்தப்படுவதாக அவர் கூறுகிறார்.
உண்மையில், துனிசியாவின் 12 மில்லியன் மக்கள்தொகையில், சுமார் 12,000 பேர் மட்டுமே மத்திய மற்றும் மேற்கு ஆபிரிக்காவைச் சேர்ந்தவர்களாவர். ஆனால், சர்வாதிகார சக்திகளுடன் ஆட்சி செய்யும் சையத், குறிப்பாக பாதுகாப்புப் படையினருக்கு மத்தியில், அத்துடன் மக்கள்தொகையில் மிகவும் பின்தங்கிய அடுக்கினருக்கு மத்தியிலும், புலம்பெயர்ந்தோருக்கு எதிராகவும் படுகொலைக்கு ஒத்த கிளர்ச்சியைத் தூண்டியுள்ளார்.
சையத் உரையின் இரண்டு மணி நேரங்களுக்குப் பிறகு, ஸ்பாக்ஸ் துறைமுக நகரத்தின் 300,000 குடியிருப்பாளர்கள் மத்தியில் பொலிஸ் கைது அலைகளைத் தொடங்கியது. மத்திய மற்றும் மேற்கு ஆபிரிக்காவில் இருந்து குடியேறியவர்கள் தன்னிச்சையாகவும் கண்மூடித்தனமாகவும் சிறையில் அடைக்கப்பட்டனர். பெரும்பாலும் மத்திய ஆபிரிக்காவில் இருந்து குடியேறிய மக்களுக்கு வீடுகளும் வேலைகளும் வழங்குபவர்கள் குற்றவாளிகளாக கருதப்படுவார்கள் என்ற பயத்தில், நிலசொந்தக்காரர்களும் முதலாளிகளும் அவர்களுக்கு வழங்கியிருந்த குடியிருப்புகளையும் வேலைகளையும் இரத்து செய்தனர்.
துனிஸில் நூற்றுக்கணக்கான புலம்பெயர்ந்தோர், உத்தியோகபூர்வ சோதனைகள் மற்றும் தாக்குதல்களில் இருந்து தங்குமிடம் தேடும் நம்பிக்கையில், குடியேற்றத்திற்கான சர்வதேச அமைப்பு (IOM) அலுவலகத்திற்கு வெளியே கூடாரங்கள் மற்றும் தார்ப்பாய்களுடன் கூடியுள்ளனர். அவர்கள் அங்கு சுகாதாரம் மற்றும் போதிய உணவு கிடைக்காமல் தவிக்கின்றனர்.
மத்திய மற்றும் மேற்கு ஆபிரிக்காவில் இருந்து 10,000 குடியேறியவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் முன்னர் ஸ்பாக்ஸில் வசித்து வந்தனர். அவர்களில் சிலர் தங்கள் சொந்த நாடுகளுக்கு திரும்பியுள்ளனர். ஆனால் ஆயிரக்கணக்கானோர் துனிசிய பாதுகாப்பு அதிகாரிகளின் அட்டூழியங்களில் இருந்து தப்பிக்க ஐரோப்பாவில் பாதுகாப்பு தேட முயற்சிக்கின்றனர்.
சிறிய வட ஆபிரிக்க நாட்டிலிருந்து பெருமளவிலான மக்கள் குடியேற்றத்திற்கான தீவிர காரணம், ஆபிரிக்காவின் பல நாடுகளைத் தாக்கிய பேரழிவுகர பொருளாதார நெருக்கடியாகும். கோவிட்-19 தொற்றுநோய் பொருளாதார உற்பத்தியில் பாரிய சரிவுக்கு வழிவகுத்தது. குறிப்பாக சுற்றுலா மற்றும் சேவைத் துறைகளை பாதிப்புக்கு உள்ளாக்கியது. ஒரு வருடத்திற்கு முன்பு வெளியிடப்பட்ட பொருளாதார ஒத்துழைப்பிற்கும் அபிவிருத்திக்குமான அமைப்பான (OECD) Tunisia 2022 அறிக்கையானது, “துனிசியர்கள் ஒரு தலைமுறையில் மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்கிறார்கள்” என்று அறிவித்துள்ளது.
அப்போதிருந்து, நேட்டோ சக்திகளால் தூண்டிவிடப்பட்ட உக்ரேன் போரானது நிலைமையை படு மோசமாக்கியுள்ளது. எரிபொருள் மற்றும் உணவுப் பொருட்களின் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளன. அடிப்படை உணவுப் பொருட்கள் கிடைப்பது கடினமாகியுள்ளதுடன், உத்தியோகபூர்வ பணவீக்க விகிதம் 10.4 சதவிகிதமாகியுள்ளது. இளைஞர்களின் வேலையின்மை விகிதம் கிட்டத்தட்ட 40 சதவிகிதமாகவுள்ளது. அதே நேரத்தில், ஜனாதிபதி சையத்தின் அரசாங்கத்திற்கான ஆதரவு மதிப்பீடுகள் பெரிதும் சரிந்துள்ளன. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில், 11 சதவீத வாக்காளர்கள் மட்டுமே வாக்களித்தனர். அதேவேளை, போராட்டங்களும் வேலைநிறுத்தங்களும் அங்கு அதிகரித்துள்ளன.
துனிசியாவின் எதிர்வரவிருக்கும் பொருளாதாரச் சரிவானது ஐரோப்பிய ஒன்றியத்தில் எச்சரிக்கை மணியை அடித்துள்ளது. இத்தாலியின் பாசிச சகோதரர்கள் (Fratelli d’Italia) கட்சியைச் சேர்ந்த இத்தாலியின் குடியுரிமைப் பாதுகாப்பு மற்றும் கடல் அமைச்சர் செபாஸ்டியானோ முசுமேசி, துனிசியாவை ஒரு நேர வெடிகுண்டு என்று விவரித்ததோடு, பாதுகாப்பு தேடும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைக் குறிப்பிட்டு, “அலை வீசத்தொடங்கியுள்ளதாக” அறிவித்தார். பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி ஒரு வாரத்திற்கு முன்பு, “துனிசியாவின் கடுமையான நிதி சிக்கல்கள் புதிய இடம்பெயர்வு அலையைத் தூண்டலாம்” என்று அறிவித்தார்.
ஐரோப்பிய ஆணையத்தின் துணைத் தலைவர் ஜோசப் பொரேல் அதே உணர்வை எதிரொலித்தார். அதாவது, துனிசியாவின் பொருளாதாரச் சரிவானது ஐரோப்பாவிற்கு குடியேறுபவர்களின் புதிய அலையைத் தூண்டக்கூடும் என்று அவர் அஞ்சினார். எனவே, அகதிகள் மத்தியதரைக் கடலைக் கடந்து ஐரோப்பாவிற்கு செல்வதைத் தடுக்கும் நோக்கில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஐரோப்பிய ஒன்றியம் ஏற்கனவே வட ஆபிரிக்க நாடுகளுக்கு கூடுதலாக 110 மில்லியன் யூரோக்களை வழங்கியுள்ளது.
அதே நேரத்தில், இத்தாலி மற்றும் பிரான்ஸ் அரசாங்கங்கள் அந்நாட்டிற்கு 2 பில்லியன் டாலர் கடனுக்கான பேச்சுவார்த்தைகளை முடிக்க சர்வதேச நாணய நிதியத்திற்கு அழுத்தம் கொடுக்கின்றன. உண்மையில், கடன் ஆனது சையத் அரசாங்கத்தின் மீது சிக்கனக் கட்டளையைச் சுமத்தி, மீதமுள்ள அனைத்து மானியங்களைக் குறைக்கவும், மற்றும் பொதுத்துறையை கடுமையாகக் குறைக்கவும் நிர்ப்பந்திக்கும். இருப்பினும், நிர்வாக எந்திரம், குறிப்பாக பாதுகாப்புத்தறை சையத்தின் கடைசி அதிகார அடித்தளமாக உள்ளது என்பதுடன், பேச்சுவார்த்தைகள் தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ளன.
அல்ஜீரிய ஜனாதிபதி அப்துல் மஜீத், பல வளைகுடா நாடுகளுடன் சேர்ந்து துனிசியாவிற்கு கடன் வழங்க முன்வந்துள்ளதாக Süddeutsche Zeitung செய்தியிதழ் திங்களன்று தெரிவித்துள்ளது. கூடுதலாக, ரஷ்யா மற்றும் சீனா அரசாங்கங்களுடனான சையத்தின் கடன் பேச்சுவார்த்தைகள் முடிவுக்கு வரும் என்று கூறப்படுகிறது.
அகதிகளுக்கு எதிரான அதன் தடுப்பு மூலோபாயத்தில், ஒரு மூலோபாய கூட்டாண்மைக்காக துனிசியாவை தேர்ந்தெடுத்துள்ள ஐரோப்பிய ஒன்றியம் அத்தகைய ஒப்பந்தத்தை எந்த வகையிலும் தடுக்க விரும்புகிறது. மற்ற விடயங்களுடன், துனிசியாவில் “புகலிட மையங்கள்” அமைக்கப்படவுள்ளன. இது, இன்னும் ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் பொருந்தும் விதிகளுக்கு கட்டுப்படாத அகதிகளிடமிருந்து பெறப்படும் தஞ்சம் கோரும் விண்ணப்பங்களை, ஐரோப்பிய ஒன்றியம் இந்த தடுப்பு முகாம்களில் வைத்து முடிவு செய்யமுடியும் என்பதைக் குறிக்கிறது. மேலும், லிபிய கடலோரக் காவல்படையுடன் ஐரோப்பிய ஒன்றியத்தால் ஏற்கனவே நிறுவப்பட்ட நடைமுறையைப் போன்றே துனிசிய கடலோரக் காவல்படையும் விரிவுபடுத்தப்பட உள்ளது.
துனிசிய எல்லைக் காவலர்கள் ஏற்கனவே லிபிய மற்றும் கிரேக்கக் கடலோரக் காவல்படையினரால் சில காலமாக பயன்படுத்தப்பட்ட சட்டவிரோத மோதல் நுட்பத்தை பின்பற்றுகின்றனர். Sky News இடம் பேசுகையில், ஐவரி கோஸ்டில் இருந்து வந்த அகதிகள், துனிசிய கடலோரக் காவல்படையினரால் தங்கள் படகு எவ்வாறு நிறுத்தப்பட்டது என்பதைத் தெரிவித்தார்கள். ‘அவர்கள் எங்கள் கைத்தொலைபேசிகளை பறித்துக்கொண்டனர். நாங்கள் நடுக்கடலில் இருக்கையில் அவர்கள் எங்கள் படகின் இயந்திரங்களைத் திருடிக் கொண்டு எங்களை அப்படியே கடலில் தத்தளிக்க விட்டுவிட்டனர். அவர்கள் கொள்ளக் கும்பல்கள் மற்றும் இனவெறியர்களாவர்’ என்று கூறினர்.
துனிசியாவில் வசிக்கும் புலம்பெயர்ந்தோர் இரட்டை தீமைகளுக்கு இடையில் சிக்கியுள்ளனர்: ஒருபுறம், துனிசியாவில் உள்ள இனவெறி அரசாங்கமானது அங்கு நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு அவர்களை பலிகடாக்களாக முத்திரை குத்துகிறது. மறுபுறம், மனிதாபிமானமற்ற ஐரோப்பிய ஒன்றியம் அகதிகளுக்கு எதிராக அதன் இரக்கமற்ற பிரச்சாரத்தை நடத்துகிறது.
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் அறிக்கையானது, லிபிய கடலோரக் காவல்படை என்று அழைக்கப்படுபவர்கள் குற்றச் செயல்களில் ஈடுபடுவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் உதவுகிறது என்பதை சமீபத்தில் நிரூபித்துள்ளது. தனிப்பட்ட மனித உரிமை நிபுணர்களால் எழுதப்பட்ட இந்த அறிக்கையானது, 400 க்கும் மேற்பட்ட நேர்காணல்கள், ஆவணங்கள் மற்றும் லிபியாவிற்குச் சென்று மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டதாகும்.
ஜெனீவாவில் அறிக்கையை வெளியிட்ட இணை ஆசிரியர் சலோகா பயானி, லிபிய கடலோர காவல்படையின் செயல்பாடுகளுடன் தொடர்புடைய, குடிமக்கள் மற்றும் குறிப்பாக புலம்பெயர்ந்தோருக்கு எதிரான கடுமையான மனித உரிமை மீறல்கள் கண்டறியப்பட்டுள்ளன என்றும், இதற்கு ஐரோப்பிய ஒன்றியத்தால் நிதியளிக்கப்பட்டு பயிற்சியளிக்கப்படுகிறது என்றும் கூறியுள்ளார். அதாவது, “ஐரோப்பிய ஒன்றியம் இந்தக் குற்றங்களைச் செய்ததாக நாங்கள் கூறவில்லை. மாறாக இந்தக் குற்றங்களுக்கு அது துணை நிற்கிறது என்று தான் கூறுகிறோம்” என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
கடலோரக் காவல்படை மற்றும் பிற லிபிய அரசு நிறுவனங்களின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் தடுப்பு மையங்களில், மக்கள் சித்திரவதை செய்யப்படுகிறார்கள், மிரட்டப்படுகிறார்கள், கற்பழிக்கப்படுகிறார்கள், மற்றும் கொலை செய்யப்படுகிறார்கள். அதேவேளை, மற்றவர்கள் அடிமைகளாக விற்கப்படுகிறார்கள் மற்றும் சிலர் பாலியல் ரீதியாக சுரண்டப்படுகிறார்கள். “இந்த மையங்கள், புலம்பெயர்ந்தோரை இடைமறித்து திருப்பி அனுப்புவது உட்பட பல விடயங்களுக்கு, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அதன் அங்கத்துவ நாடுகளில் இருந்து தொழில்நுட்ப, தளபாட மற்றும் நிதி ஆதரவுகளைப் பெறுகின்றன” என்று அந்த அறிக்கை கூறுகிறது. இந்த மோதல்கள் சட்டவிரோதமானவை என்பதுடன், ஜெனீவா அகதிகள் உடன்படிக்கையை கடுமையாக மீறுவதாகும்.
லிபிய கடலோரக் காவல்படையை ஆதரிப்பது மத்தியதரைக் கடலில் உயிர்களைக் காப்பாற்ற உதவுவதற்காக என ஐரோப்பிய ஒன்றியம் தனது பங்கிற்கு கூறுகிறது. இந்த ஆண்டு ஏற்கனவே குறைந்தது 500 அகதிகள் மத்தியதரைக் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளதையும், மற்றும் லிபிய, துனிசிய மற்றும் கிரேக்க கடலோரக் காவல்படையினரால் பல ஆயிரக்கணக்கான அகதிகள் சட்டவிரோதமாக திருப்பி அனுப்பப்பட்டுள்ளதையும் வைத்துப் பார்த்தால் அகதிகளின் பார்வையில் இது முட்டாள்தனமானது என்பதுடன், சிடுமூஞ்சித்தனத்தின் உச்சகட்டமுமாகும்.