அரசர் மூன்றாம் சார்ல்ஸ் மற்றும் ராணி கமீலாவின் முடிசூட்டு விழா: பிரிட்டிஷ் முடியாட்சியின் இறுதி நெருக்கடி

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம் 

அரசர் மூன்றாம் சார்ல்ஸ் மற்றும் ராணி கமீலா ஆகியோரின் ஆடம்பரமான முடிசூட்டு விழா, விரிவாக்கப்பட்ட ஊடக விரிவெல்லை மற்றும் ஒரு நாள் வங்கி விடுமுறை வழங்குவது ஆகியவைகள் தேசத்தை ஒருங்கிணைக்கும் தருணமாக முன்னிறுத்தப்படுகின்றன. ஆனால், அது அப்படி ஒன்றும் இல்லை.

பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் மரபுரிமை மற்றும் செல்வத்தின் வெளிப்பாடு, மூர்க்கமான இராணுவவாதம் மற்றும் புகழ்ச்சி, கொள்ளையடிக்கப்பட்ட பாரிய இரத்தினக்கற்கள் மற்றும் அவற்றுடன் இணைக்கப்பட்ட பல்வேறு கிரீடங்கள், செங்கோல்கள் மற்றும் ஊழியர்கள், மேலும் வரி செலுத்துவோரின் 250 மில்லியன் பவுண்டுகள் மசோதா ஆகியவைகள் வெறுப்பேற்றுபவைகளாக இருக்கின்றன -இது மில்லியன் கணக்கான போராடும் தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களுக்கு ஒரு சிறிதளவும் கருத்தில் கொள்ளாத அவமதிப்பாகும்.

2022 ஆம் ஆண்டில் அப்போதைய வேல்ஸ் இளவரசராக இருந்த அரசர் மூன்றாம் சார்ல்ஸ், தனது தாயார் ராணி இரண்டாம் எலிசபெத் சார்பாக உரையை வாசிக்கிறார். [Photo by Annabel Moeller / CC BY 2.0]

இந்த முடிசூட்டு விழா, முடியாட்சியைப் புதுப்பிப்பதற்கான வாய்ப்பை வழங்குவதற்குப் பதிலாக, இந்த அழுகிய நிறுவனத்திற்கான ஆதரவின் வீழ்ச்சியை உறுதிப்படுத்துவதோடு, குறிப்பாக இளைய தலைமுறையினரிடையே, அதன் இறுதி நெருக்கடியைக் குறித்துக்காட்டுகிறது.

பிரிட்டனின் மிக வயதான அரசரான 74 வயதான சார்ல்ஸ், தனது தாயின் நிழலில் பல தசாப்தங்களுக்குப் பிறகு முடிசூட்டப்பட்டார். ராணி இரண்டாம் எலிசபெத் வசம் இருந்த மக்கள் ஈர்ப்பு எதையும் அவர் அனுபவிக்கவில்லை என்பது மட்டுமல்லாமல், அவர் ஒரு கேலிக்குரிய நபராக பரவலாகக் கருதப்படுகிறார். மன்னர் சார்ல்ஸ் நீண்ட காலமாக ஹோமியோபதி, ஆன்மீக 'சுய குணப்படுத்துதல்' மற்றும் பழச்சாறு மற்றும் காபி மூலம் புற்றுநோய்க்கு சிகிச்சையளிப்பது உள்ளிட்ட போலி விஞ்ஞான மற்றும் நிரூபிக்கப்படாத சிகிச்சைகளை ஊக்குவித்து வருகிறார். அவர் ஒரு வெறித்தனமான, பணவெறி மற்றும் ஆழமான ஊழல் குடும்பத்தின் தலைவராக நிற்பதுடன் மற்றும் அவரின் தாய்வழி வழங்கிய கட்டுப்பாடற்ற கையுடன் மற்றும் அரசியல் கேடயத்திலிருந்து விடுவிக்கப்பட்ட ஒருவராக இருந்தார்.

ராணியின் மரணம் குறித்து உலக சோசலிச வலைத் தளம் பின்வருமாறு குறிப்பிட்டது:

'பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு கடுமையான பொருளாதார, சமூக மற்றும் அரசியல் நெருக்கடியின் ஒரு நேரத்தில் அவரது மரணம் நிகழ்கிறது, இதில் பெரும் மந்தநிலைக்குப் பிந்தைய வாழ்க்கைத் தரங்களின் ஆழமான சரிவு, ஐரோப்பாவின் பிரதான நிலப்பரப்பில் ரஷ்யாவுக்கு எதிரான நேட்டோவின் பினாமி போர் மற்றும் ஒரு பொது வேலைநிறுத்தமாக வெடிக்க அச்சுறுத்தும் வர்க்கப் போராட்டத்தின் எழுச்சி அலை ஆகியவைகள் அடங்குகின்றன.

'ஆளும் வர்க்கம் இப்போது தேசிய ஒற்றுமை என்ற கட்டுக்கதையை முன்வைப்பதற்கும் சமூக மோதலை நசுக்குவதற்கும் அதன் மக்கள் பிரதிநிதி இல்லாமல் இந்த சரியான புயலை எதிர்கொள்கிறது... இன்று, ஆளும் வர்க்கத்தின் ஆழ்ந்த நம்பிக்கை என்னவென்றால், சார்ல்ஸின் அரியணையின் நேரம் குறுகியது, இதனால் கவனமாக அலங்கரிக்கப்பட்ட மற்றும் தயாரிக்கப்பட்ட இளவரசர் வில்லியம் மிகவும் சுருங்கிப்போன முடியாட்சியின் பொது அந்தஸ்தை மீட்டெடுக்க ஒரு வாய்ப்பைப் பெற முடியும்.'

சார்ல்ஸ் அரசராகவும், அரசுத் தலைவராகவும் பதவி ஏற்பது பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு கடுமையான நெருக்கடியான தருணத்தில் வருவது மட்டுமல்லாமல், ஒரு வரலாற்று சமூக இறுதிக் கட்ட மையமாகவும் ஒருங்கிணைப்பாகவும் செயல்படுகிறது என்பதை நிரூபிக்கும் நிகழ்வுகள் இந்த மதிப்பீட்டை உறுதிப்படுத்தியுள்ளன.

வரலாற்று மற்றும் சமீபத்திய சிக்கல்களைத் தணிக்க இந்த விழாவில் வரம்புகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. மக்கள் தொகையில் வெறும் 16 சதவீதத்தினரால் பின்பற்றப்படும் இங்கிலாந்து திருச்சபையின் (Church of England) தலைவராக செயல்பட்டு வரும் சார்ல்ஸ், தங்களுக்கு மதம் இல்லை என்று 40 சதவீதம் பேர் கூறியுள்ள நிலையில், சார்ல்ஸ் தன்னை 'நம்பிக்கையின் பாதுகாவலர்' என்று குறிப்பிட மாட்டார். அதற்கு பதிலாக யூத, சன்னி மற்றும் ஷியா முஸ்லீம், சீக்கிய, பௌத்த, இந்து, ஜெயின், பஹாய் மற்றும் ஜொராஸ்ட்ரிய மதங்களைச் சேர்ந்த தலைவர்கள் இந்த விழாவில் பங்கேற்பார்கள். கூடுதலாக, இளவரசர் வில்லியம் மட்டுமே அரசருக்கு விசுவாசத்தை உறுதியளிக்கும் 'ராஜ இரத்தத்தின் மரியாதை' என்ற கோரமான பெயரிடப்பட்ட நிகழ்ச்சியை நிகழ்த்துவார். வழக்கம் போல, அரச பிரபுக்களின் பங்கேற்பில் ஊழல் நிறைந்த இளவரசர் ஆண்ட்ரூ மற்றும் துரோகி இளவரசர் ஹாரி ஆகியோர் கட்டாயம் பங்கேற்பார்கள். சசெக்ஸ் சீமாட்டி (Duchess of Sussex) மேகன் கலிபோர்னியாவில் இருப்பார்.

பட்டாபிஷேகத்தின் அபரிமிதமான செலவைக் கருத்தில் கொண்டு, அதன் 'தன்னடக்கமான' தன்மையை வலியுறுத்துவதற்கான அசாதாரண முயற்சிகள் நடந்துள்ளன — குறைந்தபட்சம் 1953 இல் எலிசபெத்துடன் ஒப்பிடும்போது — அதே நேரத்தில் அதன் ஆடம்பரம் மற்றும் அலங்காரத்தைப் பற்றி பெருமைப்பட்டுக் கொள்கின்றன.

எடுத்துக்காட்டாக, பிரிட்டனின் இராணுவ வலிமைக்கு சான்றாக, ஆயுதப்படைகளின் 6,000 க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் பங்கேற்பார்கள், பாதுகாப்புப் படைகளின் தலைமைத் தளபதி அட்மிரல் சர் டோனி ராடகின் மற்றும் ஜெனரல் சர் பேட்ரிக் சாண்டர்ஸ் ஆகியோர் மூன்று ஆயுதப்படைகளிலிருந்தும் 68 விமானங்கள் மூலம் வான்வழிக் கண்காட்சியுடன் முக்கிய நிகழ்வுப் பாத்திரங்களாக பங்கேற்பார்கள். ஆனால், அரச விமர்சகர்கள் இந்த காட்சியை எலிசபெத்திற்காக வானில் பறந்த 600 ரோயல் விமானப் படை (RAF)  மற்றும் காமன்வெல்த் விமானங்களுடன் ஒப்பிட்டுள்ளனர். இந்த பட்டாபிஷேகத்தில் எலிசபெத்தின் 8,000 க்கும் மேற்பட்ட விருந்தினர்களுடன் ஒப்பிடும்போது 2,000 விருந்தினர்கள் கலந்து கொள்வார்கள். 'வாழ்க்கைச் செலவு நெருக்கடி மற்றும் எத்தனை பேர் வாழ்க்கைக்காக போராடுகிறார்கள் என்பதை அரசர் நன்கு அறிவார்' என்று ஒரு அரச வட்டாரம் டெய்லி மிரரிடம் தெரிவித்தது.

இரண்டாம் எலிசபெத் மகாராணியின் முடிசூட்டு ஓவியம், செசில் பீட்டன், ஜூன் 1953, லண்டன், இங்கிலாந்து. [Photo: Cecil Beaton/Royal Collection RCIN 2153177]

இத்தகைய மனச்சிதைவான முயற்சிகள் ஆளும் வட்டாரங்களில் பெரும் பதட்டத்தை பிரதிபலிக்கின்றன, அரசாட்சிக்கு பொதுமக்களின் ஆதரவு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது. பிரித்தானியர்களில் 29 சதவீதத்தினர் மட்டுமே முடியாட்சியை 'மிகவும் முக்கியமானது' என்றும், 25 சதவீதம் பேர் இது 'முக்கியமானது அல்ல' என்றும் ஒழிக்கப்பட வேண்டும் என்றும் கூறுகின்றனர். இளைஞர்களில், 78 சதவீதம் பேர் முடியாட்சியில் ஆர்வம் காட்டவில்லை, 38 சதவீதம் பேர் அதை ஒழிக்க விரும்புகின்றனர்.

டெய்லி மிரர் நடத்திய கருத்துக் கணிப்பில் 52 சதவீத வாசகர்கள்  சார்ல்ஸ் தனது சொந்த முடிசூட்டு விழாவிற்கு பணம் செலுத்த வேண்டும் என்று கருதுகின்றனர். சார்ல்ஸின் அசாதாரணமான தனிப்பட்ட சொத்துக்கள் குறித்து கார்டியன் பத்திரிகை நடத்திய விரிவான விசாரணையைத் தொடர்ந்து, ராணியிடமிருந்து வரிவிலக்கு பெற்ற வாரிசுரிமைகளுக்குப் பிறகு அது கிட்டத்தட்ட 2 பில்லியன் பவுண்டுகளாக உயர்ந்துள்ளது என்று கண்டறியப்பட்டுள்ளது.

எதிர்பார்க்கப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நசுக்குவதற்கான அரசாங்க நடவடிக்கைகளால் முடிசூட்டு விழாவுக்கான பொதுமக்களின் எதிர்ப்பை எதிர்கொண்டுள்ளது. சாலைகள் மற்றும் இரயில்களை மறிப்பதற்காக 12 மாத சிறைத்தண்டனை மற்றும் கட்டிடங்கள் அல்லது இலக்குகளை 'பூட்டுவதற்கு' ஆறு மாத சிறைத்தண்டனை மற்றும் வரம்பற்ற அபராதம் உள்ளிட்ட சமீபத்தில் இயற்றப்பட்ட பொது ஒழுங்கு மசோதாவிலுள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி 11,500 க்கும் மேற்பட்ட போலீசார் பணியில் இருப்பார்கள். உள்துறை அலுவலகம் குடியரசுக் குழு என்ற அமைப்புக்கு (இந்த அமைப்பு முடியாட்சியை ஒழித்து, அதற்குப் பதிலாக பாராளுமன்றக் குடியரசைக் கொண்டுவர வேண்டும் என்று வாதிடுகிறது) மிரட்டல் செய்திகளை அனுப்பியுள்ளது.

பட்டாபிஷேகத்தின் சேவை ஒழுங்கானது -அங்கீகாரம், சத்தியப்பிரமாணம், அபிஷேகம், முடி சூடும் சடங்கு மற்றும் முடி சூட்டுதல், முடி சூட்டுதலும் மரியாதையும், ராணியின் முடிசூட்டு விழா - பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கான அதன் மூலோபாய முக்கியத்துவத்தை குறைத்து மதிப்பிடக்கூடிய அளவுக்கு மிகவும் கேலிக்கூத்தாக இருந்தது.

விதியின் கல்,  அரசின் வாள், காணிக்கையின் வாள், கருணையின் வாள், நேர்மை மற்றும் ஞானத்தின் வளையல்கள் , மற்றும் நீதியின் அங்கி உள்ளிட்ட ஆடைப் பொருட்கள் போன்ற சாதனங்களைப் பயன்படுத்தி இந்த விழா ஆயிரம் ஆண்டு வரலாற்றை  நினைவுபடுத்துகிறது,  இன்னும் பல. இஸ்ரேலிய ஆலிவ்களிலிருந்து பிழியப்பட்ட எண்ணெயால் சார்ல்ஸ் அபிஷேகம் செய்வதன் மூலம், விவிலிய அரசர்களான சவுல், தாவீது மற்றும் சொலமோனுடன் ஆங்கில மகுடத்தை இணைப்பதும் உள்ளது – அதாவது அவரும் பூமியில் கடவுளின் பிரதிநிதி என்பதை வலியுறுத்துகிறது.

'அரசர்களின் தெய்வீக உரிமை' பற்றிய குறிப்பு ஐக்கிய இராச்சியத்தில் அரசு ஆட்சியின் ஒரு அம்சமாக உள்ளது, இந்தக் கொள்கையை வலியுறுத்தியதற்காக, ஆங்கில உள்நாட்டுப் போருக்குப் பிறகு முதலாம் சார்ல்ஸ் உயர் தேசத் துரோகத்திற்காக தூக்கிலிடப்பட்ட 374 ஆண்டுகளுக்குப் பிறகு, இது நடந்தேறுகிறது. 1660 ஆம் ஆண்டில் இரண்டாம் சார்ல்சின் கீழ் முடியாட்சியை மீட்டெடுப்பதன் மூலம் இது மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டது, ஆனால் 1688 ஆம் ஆண்டின் கீர்த்தி வாய்ந்த புரட்சியைத் (Glorious Revolution of 1688) தொடர்ந்து, அரசர் மூன்றாம் வில்லியம் மற்றும் ராணி மேரி ஆகியோர் பாராளுமன்றத்தில் இயற்றப்பட்ட சட்டங்களை நிலைநிறுத்துவதாக உறுதிமொழி எடுத்தபோது, வளர்ந்து வரும் முதலாளித்துவத்தின் அரசியல் கருவியாக பாராளுமன்றத்தின் கீழ் அரசர்கள் ஆட்சி செய்தனர்.

அடுத்தடுத்த நூற்றாண்டுகளில், அரசாட்சியும் நிலப்பிரபுத்துவத்தின் பிற பொறிகளும் முதலாளித்துவ ஆட்சியின் சேவைக்காக வைத்திருந்தன. உலக சோசலிச வலைத் தளம் கடந்த ஆண்டு செப்டம்பரில், அரசராக மூன்றாம் சார்ல்ஸின் முதல் பெரிய பொது ஈடுபாடு குறித்து இவ்வாறு கருத்துரைத்தது:

'முடிவற்ற ஆடம்பரம் மற்றும் விழாக்களில் வெளிப்படுத்தப்படுவது அரசின் வலிமை, தேசத்தின் மேன்மை மற்றும் பரந்த ஏற்றத் தாழ்வுகளால் வகைப்படுத்தப்பட்ட தற்போதைய சமூக அமைப்பின் நிரந்தரத்தன்மை என்று கூறப்படுவதாகும், அங்கு ஒவ்வொருவரும் 'பாரம்பரியம்' மற்றும் இந்த பாரம்பரியங்களை உள்ளடக்கிய ஆளும் உயரடுக்கிற்கு தேவையான மரியாதையையும் பணிவிணக்கத்தையும் காட்ட வேண்டும்.'

எனவே, சார்ல்ஸின் முடிசூட்டு விழாவின் மிகவும் அசாதாரணமான அம்சம் என்னவென்றால், அரச தலைவர் என்ற அரசரின் நிலையை குறைத்து மதிப்பிடுவதற்குப் பதிலாக, வலுப்படுத்தவும் வெளிப்படுத்தவும் எடுத்த முடிவு ஆகும். பெரும் ஆரவாரத்துடன், கேன்டர்பரி பேராயரை பிரதிநிதித்துவப்படுத்தும் லம்பேத் அரண்மனை, சார்ல்ஸ் மற்றும் சுனாக் அரசாங்கத்துடன் கலந்துரையாடி, ''மக்களின் மரியாதையை'' வழங்கினர். ''சகாக்களின் மரியாதைக்கு'' மாற்றாக, இங்கிலாந்து மற்றும் 15 பொதுநலவாய அரசுகளின் 150 மில்லியன் குடிமக்கள், மகுடத்திற்கு விசுவாசமாக இருப்பதாக உறுதியளித்து 'உரத்த குரலில்' பங்கேற்க அழைக்கப்பட்டார்கள். 

பரம்பரை சலுகை மற்றும் தேர்ந்தெடுக்கப்படாத இந்த அரசுத் தலைவருக்கு மக்கள் அடிபணிவதைத் தூண்டும் இந்த அருவெறுப்பு, தொழிற்கட்சியின் தேசிய பிரச்சார ஒருங்கிணைப்பாளரான ஷபானா மஹ்மூத் எம்.பி., உள்ளிட்ட இழிந்தவர்களால் 'நவீனமயமாக்கலுக்கு' ஒரு எடுத்துக்காட்டு என்று பாராட்டப்படுகிறது, 'விழாவையும் முடியாட்சியையும் மக்களுக்கு நெருக்கமாகக் கொண்டு வருவதற்கான ஒரு அற்புதமான வழி' என்று அவர் இதனை விவரித்தார்.

ஆபத்தில் இருப்பது அரசரின் மீதான தனிப்பட்ட விசுவாசம் அல்ல, மாறாக அவர் தலைமை தாங்கும் முதலாளித்துவ அரசு இயந்திரத்தின் மீதான விசுவாசம் ஆகும். சமூக பதட்டங்கள் மற்றும் வர்க்க மோதல்கள் அதிகரித்து வரும் நேரத்தில், ஐரோப்பிய மண்ணில் ஏற்கனவே போர் வெடித்துள்ள நிலையில், தேசிய ஒற்றுமைக்கான வேண்டுகோளாக இந்த முடிசூட்டு விழா கருதப்படுகிறது. இது பிரிட்டனில் ஒரு வேலைநிறுத்த அலை மற்றும் மக்ரோனின் ஓய்வூதிய சீர்திருத்தத்தை சர்வாதிகாரமாக திணிப்பதற்கு எதிராக பிரான்சில் ஆங்கில கால்வாயின் மறுபுறத்தில் வெகுஜன போராட்டங்களுக்கு மத்தியில் நிகழ்கிறது, இது 1968 மே-ஜூன் மாதத்திற்குப் பின்னர் அங்கு நடைபெறும் மிகப்பெரிய வேலைநிறுத்தம் மற்றும் எதிர்ப்பு இயக்கமாகும். உண்மையில், ஆறு வாரங்களுக்கு முன்னர் அரசர் சார்ல்ஸ் பிரான்சுக்கு செல்லவிருந்த பயணம் அவசரமாக இரத்து செய்யப்பட்டது, பிரிட்டனின் முன்னாள் தூதர் பீட்டர் ரிக்கெட்ஸ், வெர்சாய் அரண்மனையில் சார்ல்ஸால் திட்டமிடப்பட்ட விருந்து பிரெஞ்சு புரட்சியின் 'எதிரொலிகளை' கொண்டிருக்கக்கூடும் என்று எச்சரித்தார்.

ராணி இரண்டாம் எலிசபெத் முதல் மூன்றாம் சார்ல்ஸ் வரை

ராணி எலிசபெத் II வால்டர் பாகேஹாட்டின் மாணவியாக இருந்தபோது, ஆங்கில அரசியலமைப்பு (The English Constitution 1867 இல் புத்தகமாக வெளியிடப்பட்டது) 1938 இல் ஈடன் கல்லூரியில் வாரத்திற்கு இருமுறை தனிப்பட்ட பாடங்களின் போது அவருக்குக் கற்பிக்கப்பட்டது. 1936 ஆம் ஆண்டில் தனது மாமனார் எட்வர்ட் பதவி துறந்த பின்னர் அரியணையின் வாரிசான அப்போதைய 12 வயது இளவரசி, அரசியலமைப்பு முடியாட்சியின் இன்றியமையாத செயல்பாடு பற்றிய பாகேஹோட்டின் விளக்கத்தை உள்ளடக்கியதாக இருந்தார்.

நார்மன் ஹிர்ஸ்ட் வரைந்த வால்டர் பாகேஹோட் (1826-1877) ஓவியம்

சார்ட்டிஸ்ட் இயக்கம், 1848 புரட்சிகள் மற்றும் அமெரிக்க உள்நாட்டுப் போர் ஆகியவற்றைத் தொடர்ந்து பிரிட்டிஷ் ஆளும் வர்க்கத்தின் மைய அச்சங்களை பாகேஹோட்டின் கட்டுரைகள் வெளிப்படுத்தின. ஜனநாயக, சமத்துவ, குடியரசு மற்றும் சோசலிச போதனைகளால் ஏற்படும் ஆபத்துக்கள் குறித்து முழுத் தீவிர எச்சரிக்கையுடன், பாகேஹோட்டின் கட்டுரைகளானது , தொழிலாள வர்க்கத்தின் மீதான பிரிட்டிஷ் ஆளும் வர்க்கத்தின் அச்சத்தையும் வெறுப்பையும் வெளிப்படுத்தியது — 'வோக்ஸ் டயபோலி' (பிசாசின் குரல்) என்று பயன்படுத்தப்படுகிறது.

'கீழ் வகுப்பினரின் அரசியல் கலவையை... முதல் அளவின் தீமையை' தடுக்க, 'இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்த பெரும்பான்மையினரை விட, அரிதாகவே நாகரீகமான மக்கள் கூட்டத்தின் மீது கட்டுப்பாட்டைக் கொண்டு வருவதற்கான வழிமுறையைக் கண்டறிய வேண்டும். இது முடியாட்சியால் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்ட அரசினுடைய அரசியலமைப்பின் அத்தியாவசிய 'நாடகத்தன்மை' உறுப்பு ஆகும், இது 'மதத்தின் வலிமையுடன் எங்கள் அரசாங்கத்தை பலப்படுத்துகிறது' என்று அவர் எழுதினார்.

அவர் தொடர்ந்தார், 'மிகவும் எளிதான பயபக்தியைத் தூண்டும் கூறுகள் நாடகக் கூறுகளாக இருக்கும் - புலன்களைக் கவர்பவை, அவைகள் மிகச்சிறந்த மனித சிந்தனைகளின் உருவகங்கள் என்று கூறிக்கொள்கின்றன, அவை சில சந்தர்ப்பங்களில் மனித தோற்றத்தை விட மிக அதிகமானவை. அதன் கூற்றுக்களில் மறைஞானம் உடையது, அதன் செயல்பாட்டு முறையில் அமானுஷ்யமானது, கண்ணுக்குப் பிரகாசமானது, அது ஒரு கணம் தெளிவாகக் காணப்படுகிறது, பின்னர் காணப்படுவதில்லை, மறைவானதும், மறைக்கப்படாததும், அது தனித்துவமானது, ஆனால் சுவாரஸ்யமானது, அதன் தோற்றத்தில் தெளிவாகத் தெரிகிறது, ஆனால் அதன் முடிவுகளில் தெளிவாகத் தெரிகிறது...'

இரண்டாம் எலிசபெத்தின் செல்வம் மற்றும் சலுகைகளின் அரணாக தனக்கு ஒதுக்கப்பட்ட பாத்திரத்தை மிகச் சிறப்பாக ஆற்றினார், முடிக்குரியவர்களை 'தொடக்கூடாது என்ற பாகேஹோட்டின் கட்டளைக்கு இணங்கினார். அவர் எந்த தவறும் செய்யவில்லை என்பது தெளிவாக இருக்க வேண்டும். அவரை உண்மையான அளவீட்டுக்கு மிக நெருக்கமாக கொண்டு வரக்கூடாது. அவர் தனிமையாகவும் தனி ஒதுக்கப் பண்புடையவராகவும் இருக்க வேண்டும்... ஒரு சின்னம் தேவைப்படும் அளவுக்கு இன்னும் முழுமையற்ற கல்வியறிவு பெற்றவர்களுக்கு ஒற்றுமையின் வெளிப்படையான சின்னம்' என்று அவர் எழுதினார்.

கோப்பு - செவ்வாய்க்கிழமை, ஜூலை 10, 2018 கோப்பு புகைப்படத்தில், அரச குடும்ப உறுப்பினர்கள் பக்கிங்ஹாம் அரண்மனையின் பால்கனியில் கூடி நிற்கிறார்கள், இடமிருந்து, இளவரசர் சார்ல்ஸ், கார்ன்வால் சீமாட்டி கமீலா, இளவரசர் ஆண்ட்ரூ, ராணி இரண்டாம் எலிசபெத், சசெக்ஸ் சீமாட்டி மேகன், இளவரசர் ஹாரி, இளவரசர் வில்லியம் மற்றும் கேம்பிரிட்ஜ் சீமாட்டி கேட் ஆகியோர் லண்டனிலுள்ள பக்கிங்காம் அரண்மனையின் மீது ராயல்   விமானப்படை விமானங்கள் செல்வதைப் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.  [AP Photo/Matt Dunham]

அரசரின் அடிப்படை நோக்கமானது, அரசின் வர்க்கத் தன்மையை தொழிலாள வர்க்கத்திடமிருந்து மறைப்பதாகும். பாகேஹோட் எழுதினார், 'அரசியலமைப்பு அரசபதவி என்பது எனது கடைசி கட்டுரையில் நான் விரிவாக வலியுறுத்திய செயல்பாட்டைக் கொண்டுள்ளது, அது மிகப் பெரியது என்றாலும், நான் இப்போது மீண்டும் விரிவுபடுத்த வேண்டிய அவசியமில்லை. இது ஒரு மாறுவேடத்தில் செயல்படுகிறது. இது நம் உண்மையான ஆட்சியாளர்களை மக்களுக்குத் தெரியாமல் மாற்ற உதவுகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்திற்கு ஆங்கிலேயர்களின் பெருந்திரளான மக்கள் தகுதியற்றவர்கள், அவர்கள் அதற்கு எவ்வளவு அருகில் இருக்கிறார்கள் என்று அவர்களுக்குத் தெரிந்தால், அவர்கள் ஆச்சரியப்படுவார்கள், கிட்டத்தட்ட நடுங்குவார்கள்.'

'மேல்தட்டு வர்க்கங்களிலுள்ள மிகச்சிறந்த ஞானத்தாலும், மிகப் பெரிய தொலைநோக்குப் பார்வையாலும்' மட்டுமே 'கீழ் வர்க்கத்தினரின்' மேலாதிக்கத்தைத் தவிர்க்க முடியும் என்று பாகேஹோட் எச்சரித்திருந்தார். ஆனால் சார்ல்ஸ் போன்ற ஒரு ஆழமான செல்வாக்கற்ற நபரின் முடிசூட்டு விழா — அவரது சொந்த நண்பர்களால் ஒரு 'ஒலிம்பியன் விங்கர் (மகிழ்ச்சியற்ற அறிவற்றவர்)' என்று விவரிக்கப்பட்டது— ஒரு ஐக்கியப்படுத்தும் சக்தியாக செயல்படும் அரசாட்சியின் திறனை முடக்குகிறது. 'ஒரு அரச குடும்பம் நல்ல மற்றும் அழகான நிகழ்வுகளை பருவகாலமாக சேர்ப்பதன் மூலம் அரசியலை இனிமையாக்குகிறது' என்று பாகேஹோட் வலியுறுத்தினார். அவர் அரசாங்க விவகாரங்களில் பொருத்தமற்ற உண்மைகளை அறிமுகப்படுத்துகிறார், ஆனால் அவை 'ஆண்களின் இதயங்களுடன்' பேசும் மற்றும் அவர்களின் எண்ணங்களைப் பயன்படுத்தும் உண்மைகள். ஆனால் இளவரசர் ஆண்ட்ரூவின் ஜெஃப்ரி எப்ஸ்டீனுடனான உறவைச் சுற்றியுள்ள துர்நாற்றம் மற்றும் இளவரசர் ஹாரி, சார்ல்ஸ், கமிலா மற்றும் வில்லியம் ஆகியோருக்கு இடையிலான மோசமான உள் சண்டைகள் தற்போதைய நெருக்கடியின் ஆழத்தை சுட்டிக்காட்டும் 'உண்மைகள்'. 1930 களில் இருந்து பிரிட்டிஷ் முதலாளித்துவம் எதிர்கொள்ளும் ஆழ்ந்த பொருளாதார, சமூக மற்றும் அரசியல் முட்டுக்கட்டைகளுக்கு மத்தியில் அரச குடும்பத்திற்கான மக்கள் ஆதரவு சரிந்து வருகிறது.

ட்ரொட்ஸ்கி தனது 1925 இல் எழுதிய படைப்பான 'பிரிட்டன் எங்கே செல்கிறது?' என்ற நூலில், பிரிட்டிஷ் முடியாட்சியின் பாத்திரம் குறித்து பொதுவாக, குறிப்பாக கடுமையான நெருக்கடி காலங்களில், அத்தியாவசியமான பகுதிகளை எழுதினார், தொழிற்கட்சித் தலைவர்களின் பிற்போக்குத்தனமான அனுபவவாத, படிப்படியான மற்றும் வரலாற்றுக்கு புறம்பான தத்துவம் உட்பட, அதை நோக்கிய கொள்கையற்ற அணுகுமுறை பற்றிய பேரழிவுகரமான விமர்சனத்தை முன்வைத்தார்.

'அரசர்களின் பதவியானது, நாட்டின் முன்னேற்றத்தை 'தடுக்காது' என்றும், தேர்தலுக்கான அனைத்து செலவுகளையும் கணக்கிட்டால் ஒரு ஜனாதிபதியை விட மலிவானது என்றும் அவர்கள் அறிவிக்கிறார்கள். தொழிற்கட்சித் தலைவர்களின் இத்தகைய பேச்சுக்கள் பழமைவாதத் தொகுதித் தலைமைத்துவத்தைத் தவிர, வேறு எதனையும்விட அவர்களது 'முட்டாள்தனத்தின்' ஒரு அம்சத்தைக் காட்டுகின்றன.'

லியோன் ட்ரொட்ஸ்கி

ட்ரொட்ஸ்கி இதற்கு எதிர்வினையாற்றி எழுதினார், 'முதலாளித்துவ பாராளுமன்றம் முதலாளித்துவ ஆட்சியின் கருவியாக இருக்கும் வரை மற்றும் முதலாளித்துவ வர்க்கத்திற்கு பாராளுமன்றத்திற்கு அப்பாற்பட்ட வழிமுறைகள் தேவைப்படாத வரை அரசரின் பதவி பலவீனமாக உள்ளது. ஆனால் முதலாளித்துவ வர்க்கம் தேவைப்பட்டால் அனைத்து நாடாளுமன்றத்திற்கு அப்பாற்பட்ட, அதாவது தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான உண்மையான சக்திகளின் மையமாக அரசரின் பதவியை பயன்படுத்தலாம்.'

பிரிட்டிஷ் முடியாட்சி பெரும் அதிகாரத்தைக் கொண்டுள்ளது. சாதாரண நிலைமைகளின் கீழ், சட்டத்திற்கு அரச ஒப்புதல் தேவைப்படுவது, அரசியல்வாதிகள் மற்றும் தளபதிகள் அரசருக்கு விசுவாசமாக சத்தியப்பிரமாணம் செய்வது உள்ளிட்ட அரசுத் தலைவராக அரசரின் பங்கு பழமை வாய்ந்ததாகவும், சம்பிரதாயமானதாகவும் தோன்றுகிறது. ஆனால் வர்க்கப் பகைமைகள் வெளிப்படையான மோதல் நிலைக்கு வளரும்போது, ஜனநாயகம் சர்வாதிகாரத்திற்கு வழிவிட வேண்டும், இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையின் தலைமைத் தளபதியாக அரசரின் பங்கு உட்பட அரசரின் 'அடையாள' அதிகாரங்கள் உண்மையானதாகி, அவற்றை மீறுவது தேசத்துரோகச் செயலாகும்.

இந்த புரிதலுடன், ட்ரொட்ஸ்கி இவ்வாறு எழுதினார், 

'ஒரு சோசலிஸ்டைப் பொறுத்தவரை முடியாட்சி குறித்த பிரச்சினையானது, ஒரு முடியாட்சியின் மதிப்பை நவீன கணக்கியல் முறைகளால் மட்டும் தீர்மானிக்க முடியாது, குறிப்பாக பதிவுகள் பொய்யாக்கப்பட்டிருந்தால். இது சமூகத்தை முற்றிலுமாகத் தலைகீழாக மாற்றுவதும், ஒடுக்குமுறையின் அனைத்துக் கூறுகளிலிருந்தும் அதை அகற்றுவதும் ஆகும். இத்தகைய பணி, அரசியல் ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும், அரசாட்சியுடன் எந்த சமரசத்தையும் தவிர்க்கிறது.'

தொழிலாள வர்க்கமானது இன்று முழு முதலாளித்துவ அமைப்புமுறை, அதன் கட்சிகள், அதன் அரசு எந்திரம் மற்றும் முடியாட்சியுடன் மோதலுக்கு தள்ளப்படுகிறது. வர்க்க ஒடுக்குமுறை, வறுமை மற்றும் போருக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய அவசியத்தால் தொழிலாளர்கள் உந்தப்படும் நேரத்தில், பக்கிங்ஹாம் அரண்மனையிலுள்ள அரசியல் முட்டாள்தனமான மூன்றாவது அரசர் சார்ல்ஸ் இறுதியானது என்பதை நிரூபிக்க முடியும்.