இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
அமெரிக்க அரசின் குற்றவியல் சட்டத்தை மீறியதற்காக, வரலாற்றிலேயே முதன்முறையாக, ஒரு முன்னாள் அதிபர் செவ்வாய்கிழமை நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவார். டொனால்ட் ட்ரம்ப் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வது என்ற முடிவு, ஆளும் வர்க்கத்திற்குள் நிலவும் ஆழ்ந்த பிளவுகளைப் பிரதிபலிப்பதுடன், வரவிருக்கும் வாரங்கள் மற்றும் மாதங்களில் அமெரிக்க அரசியல் ஸ்தாபகத்தின் அடித்தளத்தையே ஆட்டிப்படைக்கும் ஒரு நெருக்கடியை வேகப்படுத்துகிறது.
ட்ரம்ப் மீது வழக்குத் தொடுப்பதற்கு அரசியல் ரீதியான மற்றும் அரசியலமைப்பு ரீதியான காரணங்கள் குறைவின்றி உள்ளன. அதிபராக அவருடைய நான்காண்டுகளில், அவர் மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமைகள் மீது முரட்டுத்தனமாக செயல்பட்டார். ஜனவரி 6, 2021 இல் அரசியலமைப்பைத் தூக்கியெறிந்து, ஒரு சர்வாதிகாரத்தை நிறுவும் ஒரு முயற்சிக்கு அவர் தலைமை கொடுத்தார். புலம்பெயர்ந்தோரின் குழந்தைகளை அவர்களின் பெற்றோர்களிடம் இருந்து பிரிக்க ஹிட்லர் பாணியில் நடவடிக்கை எடுத்தார். 2020 அதிபர் தேர்தலுக்கு முன்னதாக வாக்காளர்களை மிரட்ட, பாசிச ஆதரவாளர்களை “பக்கவாட்டில் நிறுத்துவதை” ஊக்குவித்தார். போர் குற்றவாளிகளுக்கு மன்னிப்பளித்த அவர், “சித்திரவதை தான் வேலை செய்கிறது' என்று அறிவித்ததுடன், சர்வதேச சட்டம் மற்றும் நூரெம்பேர்க் கோட்பாடுகளை மீறி ஈரானிய கலாச்சார தளங்களைத் தகர்க்க அச்சுறுத்தினார்.
ஆனால், ஜனநாயகக் கட்சி தலைமையில் டொனால்ட் ட்ரம்ப் மீதான இந்த வழக்கு, இந்த குற்றங்களில் எதையும் குறிப்பிடவில்லை. ட்ரம்பும் அவரின் முக்கிய சக-சதிகாரர்களும் மக்கள் உரிமைகள் மீதான தாக்குதல்களுக்காக ஒருபோதும் தண்டிக்கப்படாத அதேவேளையில், ட்ரம்ப் மீதான நீதித்துறையின் இந்தக் குற்றப்பத்திரிகை தேசிய பாதுகாப்பு எந்திரத்திற்கு எதிரான அவரின் அத்துமீறல்களில் மட்டுமே ஒருமுனைப்பட்டுள்ளது.
அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் போர் திட்டங்கள் தொடர்பான அரசு இரகசியங்களை ட்ரம்ப் தொடர்ந்து வைத்திருந்தார் என்பதே இந்தக் குற்றப்பத்திரிகையின் மையத்தில் உள்ளது. ட்ரம்ப் பதவி இறங்கிய பின்னரும் தக்க வைத்திருந்தார் என்று அந்தக் குற்றப்பத்திரிகைக் குறிப்பிடும் ஆவணங்களில், அமெரிக்க மற்றும் அதன் எதிரிகளின் அணுஆயுத திறன்களை விவரிக்கும் ஆவணங்களும், அத்துடன் பல்வேறு நாடுகளுக்கு எதிரான தாக்கும் திட்டங்கள் மற்றும் திடீர் போர்களுக்கான திட்டங்கள் குறித்த ஆவணங்களும் உள்ளடங்கி இருந்தன. இத்தகைய ஆவணங்களை மக்கள் தெரிந்து கொள்ள அனுமதிக்காதவாறு, இந்த அரசு இவற்றை “உயர்மட்ட இரகசிய” ஆவணங்களாகப் பாதுகாக்கிறது.
பைடென் நிர்வாகம் அதன் இரகசியப் போர்த் திட்டங்களைப் பாதுகாப்பதற்காக, அதன் இந்தக் குற்றப்பத்திரிகையானது, ஏறக்குறைய முற்றிலுமாக 1917 உளவுச் சட்டத்தின் சட்டப்பூர்வ அதிகாரத்தைச் சார்ந்துள்ளது.
உளவு சட்டத்தின் அடிப்படையில் ட்ரம்ப் மீது வழக்குத் தொடுப்பதால் முற்போக்கான எதுவும் நடந்து விடாது. ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக, அரசின் பிற்போக்குத்தன கருவிக்கூடத்தில் கூர்மையான சட்ட செயல்பாடாக சேவையாற்றி உள்ள இந்த உளவுச் சட்டம், ஏகாதிபத்தியப் போருக்கு எதிரான எதிர்ப்பை நசுக்குவதற்காகப் பயன்படுத்தப்பட்டது.
வெளிப்படையாகவே 1798 அன்னிய பிரிவினைச் சட்டத்தின் அடிப்படையில் அமைக்கப்பட்ட இந்த உளவுச்சட்டம், முதலாம் உலகப் போர் மற்றும் ரஷ்ய புரட்சியின் வெடிப்பை எதிர்கொண்ட போது, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இரத்தக்களரியான இளம் பருவத்தில் எழுந்தது.
அதிபர் உட்ரோ வில்சன் முதன்முதலில் டிசம்பர் 7, 1915 கூட்டாட்சி மன்ற உரையில் இத்தகைய ஒரு சட்டத்தை நிறைவேற்ற வேண்டுமென கோரினார். அப்போது அமெரிக்கா அது உள்ளிழுக்கப்பட்டு கொண்டிருந்த ஏகாதிபத்திய பெருஞ்சுழலில் உத்தியோகப்பூர்வமாக நடுநிலை வகித்தது.
'நம் தேச வாழ்வின் இரத்த நாளங்களிலே துரோகத்தின் விஷத்தை ஊற்றியவர்களை” கண்டித்த வில்சன், “தேசத்தின் கௌரவத்தையும் சுயமரியாதையையும் காப்பாற்றுவதற்காக” “கூடிய விரைவில் இத்தகைய சட்டங்களை நிறைவேற்றுமாறு” காங்கிரஸிடம் கோரினார். வேலைநிறுத்தங்கள் அதிகரித்து வருவதையும் குறிப்பாக புலம்பெயர்ந்த தொழிலாளர்களிடையே சோசலிசத்தின் செல்வாக்கு அதிகரித்து வருவதையும் குறிப்பிட்டு, அவர் கூறுகையில், “இத்தகைய உணர்ச்சியும், துரோகமும், அராஜகவாதமும் கொண்ட உயிரினங்கள் நசுக்கப்பட வேண்டும். … நம் அதிகார கரம் கொண்டு ஒட்டுமொத்தமாக அவர்களை இறுக்க வேண்டும்,” என்றவர் அறிவித்தார்.
வில்சனின் உரை, ஜேர்மனிக்கு எதிரான போர் பிரகடனம் மற்றும் உளவுச்சட்டம் என, 1917 காங்கிரஸ் நடவடிக்கையின் இரண்டு ஒன்றோடொன்று பிணைந்த முக்கிய விஷயங்களைச் சுற்றி நடந்த விவாதங்களுக்கான தொனியை அமைத்தது.
ஒரு போர் பிரகடனம் கோரி காங்கிரஸ் சபையில் அவர் ஆற்றிய உத்தியோகப்பூர்வ உரையில், வில்சன் உள்நாட்டு குழப்பங்களுக்கு ஜேர்மன் சூழ்ச்சிகள் மீது பழி சுமத்தினார்: “தற்போதைய இந்தப் போரின் ஆரம்பத்தில் இருந்தே, நமது சந்தேகத்திற்கு இடமில்லாத சமூகங்களிலும், நம் அரசு அலுவலகங்களிலும் கூட அது உளவாளிகளை நிரப்பி உள்ளது மற்றும் நம் தேசிய ஒற்றுமை குழுவுக்கு எதிராகவும், நமக்குள்ளும் நமக்கு வெளியிலும் உள்ள நம் சமாதானத்திற்கு எதிராகவும், நம் தொழில்துறைகள் மற்றும் நம் வர்த்தகத்திற்கு எதிராகவும் எங்கெங்கிலும் குற்றகரமான சூழ்ச்சிகளின் காலடியைப் பதித்தது.” அரசின் போர் திட்டங்களைப் பாதுகாக்கவும் மற்றும் அதிருப்திகளை நசுக்கவும் விரைவில் ஒரு சட்ட மசோதா நிறைவேற்றுமாறு அவர் மீண்டும் கோரினார். அத்தகைய ஒரு மசோதா ஏப்ரல் ஆரம்பத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு, மே 4 இல் 261 இக்கு 109 என்ற வாக்குகளில் பிரதிநிதி சபையில் நிறைவேற்றப்பட்டது, மே 14 இல் 80 இக்கு 8 என்ற வாக்கு எண்ணிக்கையில் செனட்டில் நிறைவேற்றப்பட்டது, மற்றும் ஜூன் 15 இல் வில்சனால் அது சட்டமாகக் கையெழுத்திடப்பட்டது.
அந்த உளவுச் சட்டம் மீதான விவாதங்களும் அது நிறைவேற்றப்பட்டமையும், ரஷ்யாவில் நடந்து கொண்டிருந்த வேகமான புரட்சிகர மாற்றங்களுடன் பொருந்தி இருந்தன.
பிப்ரவரியில், ரஷ்ய தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் புரட்சிகர எழுச்சி, ரோமானொவ் வம்சம் வீழ நிர்பந்தித்ததுடன், அதன் இடத்தில் ஒரு முதலாளித்துவ இடைக்கால அரசாங்கம் நிறுவப்பட்டது. ஏப்ரலில், அமெரிக்காவில் பிரதிநிதிகள் சபையில் உளவுச்சட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட அதேநேரத்தில், லெனின் ரஷ்யாவுக்குத் திரும்பினார். இந்த இடைக்கால அரசாங்கத்தின் வெளியுறவுத்துறை அமைச்சர் பாவெல் மில்லிகொவ் (Pavel Miliukov), ஏப்ரல் மத்தியில், போருக்கு தொடர்ந்து ஆதரவளிக்குமாறு கூட்டாளிகளுக்கு மன்றாடி எழுதிய ஓர் இரகசிய கடிதம் பொதுவெளியில் கசிந்த போது, ரஷ்ய உழைப்பாளர்களிடையே போர்-எதிர்ப்புணர்வு வெடித்தது.
வாஷிங்டன் இந்த அபிவிருத்திகளை மிகவும் தீவிர அக்கறையோடும் கவனத்தோடும் பின்தொடர்ந்து, புரட்சியின் அச்சுறுத்தலில் இருந்து அரசைப் பாதுகாக்கவும் மற்றும் ஏகாதிபத்திய போர் நடத்துவதில் இருந்த தடைகளை அகற்றுவதற்கும் இந்த உளவுச்சட்டத்தை நிறைவேற்றியது.
அது சட்டமாக மாறியதில் இருந்து, கடந்த நூற்றாண்டில் இவ்விரு கட்சிகளும் கட்டமைத்துள்ள மிகப்பெரும் தேசிய பாதுகாப்பு எந்திரத்திற்கான சட்டரீதியான அடித்தளமாக இந்த உளவுச்சட்டம் சேவையாற்றி உள்ளது. முன்னாள் செனட்டர் டேனியல் பேட்ரிக் மொய்னிஹன் (Daniel Patrick Moynihan) அவருடைய Secrecy என்ற நூலில், இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டிருப்பதுடன் “நவீன யுகம் தொடங்கியது” என்று எழுதினார். அவர் தொடர்ந்து பின்வருமாறு எழுதினார்:
சதி, விசுவாசம், இரகசியம் ஆகிய மூன்று புதிய அமைப்புகள் அமெரிக்க வாழ்வில் நுழைந்து விட்டன. ஒவ்வொன்றுக்கும் முன்னோடிகள் இருந்தன என்றாலும், இப்போது ஒரு வித்தியாசம் இருந்தது. ஒவ்வொன்றும் அமைப்பு ரீதியாக ஆகிவிட்டன; ஒவ்வொன்றையும் கவனிக்க அதிகாரத்துவங்கள் நிறுவப்பட்டன. காலப்போக்கில், உள்நாட்டு சதியைக் கண்காணிக்க ஒரு மத்திய புலனாய்வு அமைப்பும், வெளிநாடுகளைக் கண்காணிக்க ஒரு மத்திய உளவுத்துறையும், துரோகம் அல்லது நாசவேலைகளை வேரறுக்க உளவுத்துறை சட்டக் குழுக்கள் மற்றும் விசுவாசக் குழுக்களும் இருக்கும். மேலும் இவை அனைத்தும் பராமரிக்கப்படும், மற்றும் விரிவான இரகசிய ஆட்சிமுறைகள் மூலம் தேசிய பாதுகாப்பு பாதுகாக்கப்படும்.
20 ஆம் நூற்றாண்டின் போக்கில், உளவுச்சட்டம் அதன் மிகக் கொடூரமான குற்றங்களில் சிலவற்றை மேற்கொள்வதற்காகக் குடியரசுக் கட்சி மற்றும் ஜனநாயக கட்சி நிர்வாகங்களால் பயன்படுத்தப்பட்டது.
வில்சன் நிர்வாகத்தின் முதல் இலக்குகளில் சோசலிசக் கட்சியின் புரட்சிகரத் தலைவரான ஏஜின் வி. டெப்ஸூம் (Eugene V. Debs) இருந்தார். ஓஹியோ, கன்டனில் போரையும் முதலாளித்துவ வர்க்கத்தையும் தாக்கி டெப்ஸ் ஏகாதிபத்திய எதிர்ப்பு உரை ஒன்றை வழங்கிய பின்னர், அவர் உளவுச்சட்டத்தை மீறியதாக கைது செய்யப்பட்டு தண்டிக்கப்பட்டார். 'இந்த பிரபுத்துவ சதிகாரர்கள் மற்றும் கொலைகாரர்களாக இருக்கக் கூடியவர்களை ஆதரிக்கும் ஒவ்வொருவரும் தன்னை ஒரு பரம-தேசபக்தராக கூறிக் கொள்கிறார்' என்று டெப்ஸ் அறிவித்தார். “உலகை ஜனநாயகத்திற்குப் பாதுகாப்பானதாக மாற்றவே இந்தப் போர் தொடுக்கப்பட்டு வருவதாக அவர்களில் ஒவ்வொருவரும் வலியுறுத்துகிறார்கள். என்னவொரு பிதற்றல்! என்னவொரு பொய்யான பாசாங்குத்தனம்!” 1920 இல் அதிபர் பதவிக்குச் சிறையில் இருந்தே போட்டியிட்ட டெப்ஸ், ஏறக்குறைய ஒரு மில்லியன் வாக்குகளைப் பெற்றார்.
எம்மா கோல்ட்மென் (Emma Goldman), கேட் ரிச்சர்ட்ஸ் ஓ'ஹேர் (Kate Richards O’Hare), சார்லஸ் ஷெங்க் (Charles Schenk) மற்றும் ஜேக்கப் ஆப்ராம்ஸ் (Jacob Abrams) உட்பட மற்றவர்கள், முதலாம் உலகப் போருக்கு எதிராக பேசியதற்காக சிறையில் அடைக்கப்பட்டனர். பல தொடர்ச்சியான வேட்டையாடல்களில் ஆயிரக் கணக்கான புலம்பெயர்ந்தோர் அவர்களின் அரசியல் கண்ணோட்டங்களுக்காகக் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டனர். வில்சனின் அரசு வழக்குத்தொடுனர் ஏ. மிட்செல் பால்மர் (A. Mitchell Palmer) உளவுச்சட்டத்தின் கீழ் பகுதியாக அதை நியாயப்படுத்தினார்.
இரண்டாம் உலகப் போரின் போது, ஃபிராங்க்ளின் டெலானோ ரூஸ்வெல்ட்டின் அரசு வழக்குத்தொடுனர் பிரான்சிஸ் பிட்டில் (Francis Biddle) ஸ்மித் சட்டத்தின் கீழ் சோசலிசத் தொழிலாளர் கட்சியின் 18 உறுப்பினர்களைப் போரை எதிர்த்ததற்காகத் தண்டித்தப் பின்னர், சோசலிசத் தொழிலாளர் கட்சியின் பிரசுரமான The Militant பத்திரிகையை தபால் மூலமாக அனுப்பத் தடை விதிக்க, பிட்டில் இந்த உளவுச்சட்டத்தைப் பயன்படுத்தினார்.
இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஆண்டுகளில், ஏதெல்லும் (Ethel) ஜூலியஸ் ரொசென்பேர்க்கும் (Julius Rosenberg) சோவியத் ஒன்றியத்திற்காக அணு ஆற்றல்களை உளவுபார்க்கும் சதியில் ஈடுபட்டதாக ஜோடிக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களின் பேரில் ஜூன் 19, 1953 இல் மிகவும் இழிவாக படுகொலை செய்யப்பட்டனர் என்பது உட்பட, இந்த உளவுச் சட்டம் 1950 களின் கம்யூனிச-விரோத வேட்டையாடல்களுக்கு போலி-சட்ட முதுகெலும்பாக பயன்படுத்தப்பட்டது. அணு ஆற்றல் இரகசியச் சட்டத்தில் மரண தண்டனை இல்லை ஆனால் உளவுச்சட்டத்தில் மரண தண்டனை இருந்தது என்பதற்காக, அந்த அரசாங்கம் ரோசன்பேர்க்கினரை அணு ஆற்றல் இரகசியச் சட்டத்தை விட உளவுச்சட்டத்தின் கீழ் குற்றஞ்சாட்ட முடிவெடுத்தது.
தென்கிழக்கு ஆசியாவில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் போர் திட்டங்கள் மற்றும் குற்றங்களை விவரித்த பென்டகன் ஆவணங்களை முன்னாள் RAND பணியாளர் டேனியல் எல்ஸ்பேர்க் நியூ யோர்க் டைம்ஸ் மற்றும் வாஷிங்டன் போஸ்டுக்கு வழங்கியதும், 1971 இல், நிக்சன் நிர்வாகம் இந்த உளவுச் சட்டத்தை மீறியதாக அவரைக் குற்றஞ்சாட்டியது.
20 ஆம் நூற்றாண்டின் அதிபர் நிர்வாகங்கள் இந்த உளவுச் சட்டத்தை அடிக்கடி பயன்படுத்தத் தயங்கின என்றாலும், பராக் ஒபாமா எந்தத் தயக்கத்தையும் கைவிட்டிருந்தார். இவரின் நீதித்துறை, அதற்கு முந்தைய அதிபர்கள் அனைவரும் எத்தனை பேரை ஒட்டுமொத்தமாக உளவுச் சட்டத்தின் கீழ் வழக்கில் இழுத்திருந்தார்களோ அதை விட அதிக நபர்களை வழக்கில் இழுத்திருந்தது.
ஒபாமா நிர்வாகம் தொடுத்த வழக்குகள், முற்றிலுமாக இராணுவ ஆவணங்களைப் பத்திரிகைகளுக்குக் கசிய விடுவதை நிறுத்துவதில் ஒருமுகப்பட்டிருந்தது. ஈரான் மீது சிஐஏ இரகசியமாக உளவு பார்த்த விபரங்களை நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகையாளர் ஜேம்ஸ் ரைசெனுக்கு வெளியிட்ட ஒரு முன்னாள் சிஐஏ அதிகாரி ஜெஃரெ அலெக்சாண்டர் ஸ்டெர்லிங்; NSA உளவுபார்ப்பு குறித்து Baltimore Sun இக்கு தகவல்கள் அளிக்க முயன்ற ஒரு முன்னாள் தேசிய உளவுத்துறை அதிகாரி தோமஸ் ட்ரேக்; ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் போர் குற்றங்கள் பற்றிய தகவல்களை விக்கிலீக்ஸிற்கு வழங்கிய செல்சியா மேனிங்; கைதிகளைச் சட்டவிரோதமாக சித்திரவதைச் செய்ததைக் குறித்து தகவல்களைக் கசியவிட்ட ஜோன் கிரியாகொ; உலக மக்கள் மீது பாரியளவில் சட்டவிரோத உளவுபார்ப்பில் NSA ஈடுபட்டிருந்ததைக் காட்டும் பாரிய ஆவணங்களைப் பத்திரிகையாளர்களுக்கு வழங்கிய எட்வர்ட் ஸ்னோவ்டென்; பென்டகனின் ட்ரோன் படுகொலை திட்டங்களைக் குறித்து உள்துறை இராணுவ ஆவணங்களைக் கசியவிட்ட டேனியல் ஹேல் (Daniel Hale) ஆகியோர் ஒபாமாவினால் வழக்கு தொடுக்கப்பட்டவர்களில் உள்ளடங்குவர்.
விக்கிலீக்ஸ் வெளியீட்டாளர் ஜூலியன் அசான்ஜ் நான்காண்டுகளாக அடைக்கப்பட்டுள்ள இலண்டன் பெல்மார்ஷ் சிறையில் இருந்து அவரை அமெரிக்காவுக்கு நாடு கடத்த பைடென் நிர்வாகம் தொடர்ந்து போராடி வரும் நிலையில், இந்த உளவுச் சட்டத்தின் கீழ் ட்ரம்ப் மீது வழக்குத் தொடுக்கும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பெல்மார்ஷ் சிறையில் அவர் அடைக்கப்படுவதற்கு முன்னர், அசான்ஜ் இலண்டனின் ஈக்வடோரிய தூதரகத்தில் அகதியாக இருக்க நிர்பந்திக்கப்பட்டிருந்தார். அங்கே அவர் நடைமுறையளவில் ஏழாண்டுகள் சிறைப்பட்டிருந்தார். அமெரிக்க ஏகாதிபத்தியம் மற்றும் அதன் கூட்டாளிகள் நடத்திய பாரியளவிலான போர் குற்றங்களின் ஆதாரங்களை அவர் வெளியிட்டார் என்பதே அசான்ஜின் “குற்றமாக” உள்ளது. உளவுச் சட்ட குற்றச்சாட்டுக்களின் கீழ் அவர் சாத்தியமான 170 ஆண்டு கால சிறை தண்டனையை முகங்கொடுக்கிறார்.
ட்ரம்ப் இந்த அரசால் பாதிக்கப்பட்டிருப்பவர் இல்லை. ஒரு பாசிச சதிகாரரான அவர், அமெரிக்க இராணுவப் படைகளின் முன்னாள் தலைமை தளபதி ஆவார். ஆனால், உளவுச் சட்டத்தின் கீழ் டொனால்ட் ட்ரம்ப் மீது வழக்குத் தொடுத்திருப்பது எந்த முற்போக்கான விளைவையும் கொண்டு வராது. துல்லியமாக இதனால் தான், ட்ரம்பை அரசியல் வட்டாரத்தில் இருந்து நீக்கும் முயற்சிக்கு சட்ட வாகனமாக, ஜனநாயகக் கட்சி உளவுச் சட்டத்தைத் தேர்ந்தெடுத்துள்ளது. மேலும் 2017 இல் ட்ரம்ப் பதவியேற்றதில் இருந்தே வலதுசாரி வெளியுறவு கொள்கை பரிசீலனைகளின் அடிப்படையில் ட்ரம்பை எதிர்க்கும் அதன் மூலோபாயத்திற்கு இது ஒத்திசைந்துள்ளது.
ட்ரம்ப், அதிபர் பதவிக்கான முன்னணி குடியரசுக் கட்சி வேட்பாளராக உள்ளார். நிஜமாகவே அவர் பதவிக்கு வருவதற்கான வாய்ப்பு உள்ளதுடன், இது அபாயகரமானதும் கூட. ஆனால் ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்காவும் நேட்டோவும் விரிவாக்கி வரும் போர் ஆழ்ந்த எதிர்ப்பைக் கட்டவிழ்த்து விடும் என்பது ஆளும் வர்க்கத்திற்கு தெரியும். அவர்கள் போர் எதிர்ப்புணர்வைச் சட்டவிரோதமாக்கி ஒடுக்கவும், உற்பத்தியை அச்சுறுத்தும் வேலைநிறுத்தங்களை நசுக்கவும் அவர்களின் இயங்குபொறிகளை அவர்கள் தயார் செய்து வருகிறார்கள். இந்த உளவுச் சட்டம் சந்தேகத்திற்கிடமின்றி இந்த நோக்கத்திற்குப் பயன்படுத்தப்படும்.
ஆளும் வர்க்கம் அதன் போருக்கான ஆதரவை உருவாக்க, முற்றிலும் பிற்போக்குத்தனமான அடுக்கான உயர்மட்ட-நடுத்தர வர்க்கத்திற்கு முறையிடுகிறது. ட்ரம்பை எதிர்ப்பதற்கான தொழிலாள வர்க்கத்தின் அணுகுமுறையானது, பாலியல் மோசடிகள் மற்றும் ரஷ்ய-விரோத விஷமப் பிரச்சார அணுகுமுறையில் இருந்து முற்றிலும் வேறுபட்டதாகும். விரிவாக்கப்பட்டு வரும் இந்தப் போரின் சமூக மற்றும் பொருளாதார செலவுகளைத் தொழிலாளர்கள் எதிர்கொண்டு வருவதால், கண்ணுக்கெட்டிய தூரத்தில் அளப்பரிய சமூக போராட்டங்கள் தெரிகின்றன. ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சி இரண்டில் இருந்தும் சுயாதீனமாக ஒரு சோசலிச அரசியல் முன்னோக்கில் ஆயுதபாணியான தொழிலாள வர்க்கத்திற்கு, பாசிச சர்வாதிகாரம் மற்றும் ஏகாதிபத்திய போர் இரண்டையும் தடுப்பதற்கான ஆற்றல் உள்ளது.