புர்கினா பாசோ ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியைத் தொடர்ந்து உயர் அதிகாரிகளை புர்கினாபே இராணுவ ஆட்சிக்குழு கைது செய்துள்ளது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

கடந்த வாரம், செவ்வாய்கிழமை நடந்த சதிப்புரட்சி முயற்சியை முறியடித்ததாக புர்கினா பாசோவின் இராணுவ ஆட்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். “புர்கினா பாசோவின் ஆளும் இராணுவ ஆட்சியாளர்களுக்கு எதிராக, இராணுவ அதிகாரிகளும் மற்றவர்களும் ஆட்சியைக் கைப்பற்றவும் நாட்டை குழப்பத்தில் ஆழ்த்தவும் மேற்கொண்ட சதி முயற்சியை நாட்டின் உளவுத்துறை மற்றும் பாதுகாப்பு சேவைகள் முறியடித்துள்ளன என்று இராணுவம் கடந்த புதன்கிழமை விடுத்த ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

செப்டம்பர் 2022 இல் இராணுவ சதிப்புரட்சி மூலம் புர்கினா பாசோவில் கேப்டன் இப்ராஹிம் ட்ரேரே பதவிக்கு வந்த ஒரு வருடத்திற்குப் பிறகு, இந்த தோல்வியுற்ற சதி முயற்சி நடந்துள்ளது. “அனுமானிக்கப்படும் இறையாண்மையை நோக்கிய நமது தவிர்க்கமுடியாத பயணத்தை நிறுத்துவதற்கான பல்வேறு சூழ்ச்சிகள் இருந்தபோதிலும், மாற்றத்தை பாதுகாப்பாக வழிநடத்துவதற்கான எனது உறுதியை நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன். குடிமக்கள் கண்காணிப்பை தொடர்ந்து உறுதி செய்யும் அனைத்து புர்கினாபே மக்களுக்கும் நன்றி” என்று ட்ரேரே தெரிவித்தார்.

புர்கினா பாசோ ஆட்சிக்கவிழ்ப்பு தலைவர் கேப்டன் இப்ராஹிம் ட்ரேர் தலைநகர் ஓவாகடூகோவில் நடந்த விழாவில் பங்கேற்கிறார். கோப்பு -Oct. 15, 2022.

புர்கினாபே இராணுவ வழக்குரைஞர் அலுவலகம், “அரச பாதுகாப்பிற்கு எதிரான சதி பற்றிய நம்பகமான அறிக்கைகளின் அடிப்படையில்”, ஒரு விரிவான விசாரணையைத் தொடங்கியதாகக் குறிப்பிட்டது. இதன் விளைவாக, நான்கு அதிகாரிகள் கைது செய்யப்பட்டதோடு, தோல்வியுற்ற சதியில் ஈடுபட்டது தொடர்பாக மேலும் இருவர் தேடப்பட்டு வருகின்றனர்.

“அரசுப் பாதுகாப்புக்கு எதிராக நடந்து வரும் சதியின் நம்பகமான கண்டனத்தின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட அதிகாரிகளில் இருவர் தப்பி ஓடிவிட்டனர், நான்கு பேர் கைது செய்யப்பட்டனர் (... நாங்கள்) இது தொடர்பான உண்மைகளை தெளிவுபடுத்த ஆழமான விசாரணையை, உடனடியாகத் தொடங்கியுள்ளோம்” என்று இராணுவ வழக்கறிஞர் அலுவலகத்தின் வழக்கறிஞர் அகமது பெர்டினாண்ட் சவுண்டூரா கடந்த வியாழக்கிழமை தெரிவித்தார். அத்துடன் டிசம்பர் 2022 இல், ஆட்சியை சீர்குலைக்கும் முயற்சிக்கு அரசுத் தரப்பு ஏற்கனவே கண்டனம் தெரிவித்திருந்ததுடன், சம்பந்தப்பட்ட படையினரைக் கைது செய்வதாகவும் அறிவித்துள்ளது.

ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சிக்கு தலைமை தாங்கியதாக கூறப்படும் இராணுவ ஆட்சிக்குழு பெயரிட்ட அதிகாரிகள் பின்வருமாறு:

*லெப்டினன்ட்-கேர்னல் சீக் ஹம்ஸா ஔட்டாரா, தேசிய ஜென்டர்மேரியின் (ஜென்டர்மேரி என்பது அரசை பாதுகாக்கும் பணிகளுக்குப் பொறுப்பான ஒரு ஆயுதப் படையாகும்) சிறப்புப் படைக்கு தலைமை தாங்கினார்;

*கேப்டன் கிறிஸ்டோஃப் மைகா, அதே ஜென்டர்மேரியின் சிறப்பு தலையீட்டுப் பிரிவின் இரண்டாவது தளபதியாக இருந்தார்;

* அப்துல் அஜிஸ் அவுபா, புர்கினாபே சிறப்புப் படைகளின் தளபதி;

*பௌபகார் கெய்டா, சிவில் பாதுகாப்பு ஆய்வுகளின் உயர் கல்வி நிறுவனத்தின் இயக்குநர் ஜெனரல்,

தப்பியோடிய மற்ற இரண்டு அதிகாரிகளும் தேசிய புலனாய்வு சேவையின் முன்னாள் உறுப்பினர்கள் ஆவர். அதில் ஒருவர், ஏஜென்சியின் முன்னாள் துணை டைரக்டர் ஜெனரல் கமாண்டர் செகோவ் ஓட்ரோகோ ஆவர். இவர், செப்டம்பர் 13 அன்று, புர்கினாபே இராணுவ ஆட்சிக்குழுவின் தலைவரான கேப்டன் இப்ராஹிம் ட்ரேர் ஆல் அவரது கடமைகளில் இருந்து நீக்கப்பட்டவராவர்.

பிரெஞ்சு வெளியீடான Jeune Afrique பத்திரிகையின் அச்சு மற்றும் இணையம் உட்பட 'அனைத்து வெளியீட்டு முறைகளையும்' இடைநிறுத்துவதாகவும் இராணுவ ஆட்சிக்குழு அறிவித்துள்ளது. 2022 முதல், இராணுவ ஆட்சிக்குழு ஏற்கனவே பல பிரெஞ்சு தொலைக்காட்சி அல்லது வானொலி சேனல்களை தற்காலிகமாக அல்லது காலவரையின்றி இடைநிறுத்தியுள்ளது. இராணுவ ஆட்சிக்குழு ஏற்கனவே பிரான்சின் LCI, Liberation, Le Monde மற்றும் France 24 ஆகிய செய்தி நிறுவனங்களையும் குறிவைத்துள்ளது. அத்துடன், வெளிநாட்டு நிருபர்களை குறிப்பாக, பிரெஞ்சு ஊடகங்களில் இருந்து இன்னும் பரந்த அளவில் நிருபர்களை வெளியேற்றியுள்ளது.

ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி பற்றிய செய்தி புர்கினா பாசோ முழுவதும் அரசாங்க சார்பு செய்தி ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் பரவியது. கேப்டன் இப்ராஹிம் ட்ரேரே தனது ஆதரவாளர்களிடம் அவரை 'பாதுகாக்க' பகிரங்கமாக வேண்டுகோள் விடுத்ததை அடுத்து, கடந்த செவ்வாயன்று, ஆயிரக்கணக்கான இராணுவ ஆட்சியின் ஆதரவாளர்கள் தலைநகர் உகடூகு மற்றும் நாட்டின் பிற இடங்களில் தற்போதைய இராணுவ ஆட்சிக்கு தங்கள் ஆதரவைக் காட்ட தெருக்களுக்கு வந்தனர்.

இந்த சதிப்புரட்சி அச்சுறுத்தலின் தன்மை மற்றும் புர்கினாபே இராணுவ ஆட்சிக் கவிழ்ப்பு தலைவர்கள் என்று பெயரிடப்பட்ட அதிகாரிகளின் செயல்பாடுகள் தெளிவாக இல்லை என்றாலும், புர்கினாபே இராணுவ ஸ்தாபனத்தில் மோதல்களை உந்துவிக்கும் அத்தியாவசிய அரசியல் பிரச்சினைகள் இன்னும் தெளிவாக வருகின்றன.

மாலி மற்றும் சஹேல் பிராந்தியம் முழுவதும் பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தின் 2013-2022 போருக்கு ஆழ்ந்த மக்கள் எதிர்ப்பின் மத்தியில், அருகிலுள்ள மாலி மற்றும் நைஜரில் உள்ளதைப் போலவே புர்கினா பாசோவிலும் இராணுவ ஆட்சி அதிகாரத்திற்கு வந்தது. பிரெஞ்சு மற்றும் நேட்டோ துருப்புக்களின் பிரசன்னத்திற்கு எதிராக தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் பாரிய வேலைநிறுத்தங்கள் மற்றும் எதிர்ப்புக்கள், மதிப்பிழந்த பிரெஞ்சு சார்பு ஜனாதிபதிகளை அகற்றுவதற்கு இராணுவத்தை இட்டுச் சென்றன. புர்கினா பாசோ, நைஜர் மற்றும் மாலியில் அதிகாரத்தில் இருந்த இராணுவ ஆட்சிக் குழுக்கள் முன்னாள் காலனித்துவ சக்தியான பிரான்சை தங்கள் நாடுகளில் இருந்து, அதனது படைகளை திரும்பப் பெறுமாறு கேட்டுக் கொண்டன.

தற்போது மேற்கு ஆபிரிக்கா முழுவதும் அரசியல் ரீதியாக வெடிக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது. புர்கினா பாசோ, மாலி மற்றும் நைஜர் மீது படையெடுப்பதற்கு தயாராகுமாறு மேற்கு ஆபிரிக்க நாடுகளின் பொருளாதார சமூகம் (ECOWAS) மீது பிரெஞ்சு ஏகாதிபத்தியம் அழுத்தம் கொடுக்கிறது. இந்த மாத தொடக்கத்தில், இந்த மூன்று நாடுகளும் பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தம் ஒன்றை, சஹேல் அரசுகளின் கூட்டமைப்பு (AES) என்பதை உருவாக்கிக் கொண்டன. AES நாடுகளில் ஒன்றிற்கு எதிரான படையெடுப்பு முயற்சிக்கு, இந்த மூன்று நாடுகளுக்கும் எதிரான தாக்குதலாகும் என்று கருதி, இந்த மூன்று நாடுகளும் சேர்ந்து பதிலளிப்பார்கள் என்று இந்த ஒப்பந்தம் குறிப்பிடுகிறது.

தற்போது நடந்துவரும் இந்த மோதலானது, இப்போது உக்ரேனில் நேட்டோ-ரஷ்யா போருடன் ஆழமாக இணைக்கப்பட்டுள்ளது. ஏனெனில், இப்ராஹிம் ட்ரொரே தலைமையிலான புர்கினாபே இராணுவம், கிரெம்ளினுடன் இராணுவ உறவுகளை வளர்த்து வருகிறது. இதனால் உக்ரேனில் நடக்கும் போர் ஆப்பிரிக்காவின் பரந்த பகுதிகளுக்கும் பரவும் அபாயம் உள்ளது.

இந்த வெடிக்கும் உலகளாவிய சூழ்நிலை, ஒருபுறம் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் ஏகாதிபத்திய எதிர்ப்பு உணர்வுகளுக்கும், மறுபுறம் நேட்டோ ஏகாதிபத்திய நாடுகளுடனான அவர்களின் தொடர்புகளுக்கும் இடையே சூழ்ச்சி செய்யும் AES நாடுகளின் முதலாளித்துவ ஆளும் உயரடுக்குகளில் தீர்க்க முடியாத பிளவுகளை உருவாக்குகிறது. இந்தப் பிராந்தியத்தில் ஏகாதிபத்திய மேலாதிக்கத்தை முடிவுக்குக் கொண்டுவரும் மற்றும் ஏகாதிபத்திய சக்திகளை ஆபிரிக்காவில் இருந்து வெளியேற்றும் எந்தவொரு நிலையான முதலாளித்துவ ஜனநாயக ஆட்சியையும் ஸ்தாபிப்பதை இதே சக்திகள் நிராகரிக்கிறது. அதேநேரம், ஒவ்வொரு பெரிய அரசியல் நெருக்கடியிலும், வர்க்கப் போராட்டத்தின் எழுச்சியிலும், போட்டி இராணுவப் பிரிவுகள் அதிகாரத்திற்காக போட்டியிடுகின்றன.

குறிப்பாக, பிரெஞ்சு ஏகாதிபத்தியம் தனது சொந்த நலனுக்காக ஆபிரிக்க முதலாளித்துவ வர்க்கங்களின் இந்த கன்னைப் போட்டிகளை கையாள்வதில் நீண்ட கால சாதனையை கொண்டுள்ளது.

1960ல் பெயரளவுக்கு சுதந்திரம் பெற்றதில் இருந்து, பாரிஸ் அதன் முன்னாள் ஆபிரிக்க காலனித்துவ சாம்ராஜ்யத்தில் எண்ணற்ற இராணுவ சதிகளை ஆதரித்துள்ளது. பாரிஸின் நவகாலனித்துவ கொள்கைகளை விமர்சித்துவந்த ஆபிரிக்க ஆட்சிகளை வெளியேற்றுவதற்கு, ஆபிரிக்க நாடுகளின் அதிகாரி படையில், அதன் விரிவான தொடர்புகளை அது மீண்டும் மீண்டும் பயன்படுத்தியுள்ளது. 1987 இல், புர்கினா பாசோவில், சோவியத் சார்பு ஜனாதிபதி தோமஸ் சங்கராவை தூக்கியெறிந்து கொலை செய்த பிளைஸ் கம்போரேவை பிரெஞ்சு அரசாங்கம் ஆதரித்தது.

உள்ளூர் முதலாளித்துவ வர்க்கத்தினுள் இருக்கும் இந்த கன்னைப் போட்டிகள், பிராந்தியத்தின் தொழிலாளர்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட கிராமப்புற மக்கள் எதிர்கொள்ளும் தீர்க்க முடியாத சமூக மற்றும் பொருளாதார நெருக்கடியை பிரதிபலிக்கின்றன.

ஆப்பிரிக்காவின் மிக மோசமான அகதிகள் நெருக்கடிகளில் ஒன்றான, புர்கினா பாசோவில் நடந்துவரும் சண்டையால் இரண்டு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர் மற்றும் பல்லாயிரக்கணக்கானோர் பட்டினியின் விளிம்பிற்கு தள்ளப்பட்டுள்ளனர்.

கடந்த வாரம், அரசாங்கப் படைகள் பல்வேறு பகுதிகளை மீண்டும் கைப்பற்றிய பின்னர் உள்நாட்டில் இடம்பெயர்ந்த சுமார் 192,000 மக்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். செப்டம்பர் தொடக்கத்தில் யாதெங்கா மாகாணத்தில் ஜிஹாதி கிளர்ச்சியாளர்களுடனான மோதலில் பதினேழு படையினர்கள் மற்றும் 36 பொதுமக்கள் தன்னார்வலர்கள் கொல்லப்பட்டனர். 2015ஆம் ஆண்டு முதல் புர்கினா பாசோவில் மட்டும் 17,000க்கும் அதிகமான மக்கள் இந்த வன்முறையில் உயிரிழந்துள்ளனர்.

சுமார் 23 மில்லியன் மக்கள் வசிக்கும் புர்கினா பாசோவில், கடந்த ஆண்டில் மட்டும் இரண்டு இராணுவப் புரட்சிகளைக் கண்டுள்ளது. 2022 செப்டம்பர் பிற்பகுதியில், இரண்டாவது சதிப்புரட்சியில் கப்டன் ட்ராரே ஆட்சியைக் கைப்பற்றியதில் இருந்து கிளர்ச்சியாளர்களால் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை முந்தைய 18 மாதங்களுடன் ஒப்பிடும்போது கிட்டத்தட்ட மூன்று மடங்காக அதிகரித்துள்ளது என்று ஆபிரிக்கா மூலோபாய ஆய்வு மையத்தின் அறிக்கை தெரிவிக்கிறது.

“இந்த வன்முறை, உகடூகோவைச் சுற்றியுள்ள தீவிரவாத நடவடிக்கைகளின் புவியியல் பரவலுடன் சேர்ந்து, புர்கினா பாசோவை முன்னெப்போதையும் விட வீழ்ச்சியின் விளிம்பில் நிறுத்துகிறது” என்று அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

ஆப்பிரிக்காவில் தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான தலையீடு இல்லாமல் இந்த வெடிக்கும் நிலைமையை மாற்ற முடியாது. ஏகாதிபத்திய ஆத்திரமூட்டல்களுக்கு எதிரான போராட்டத்தை முதலாளித்துவத்திற்கும், ஏகாதிபத்தியத்துடனான அதன் ஆழமான உறவுகளுக்கும் எதிராக தொழிலாளர்களையும் இளைஞர்களையும் அணிதிரட்டாமல் நடத்த முடியாது என்பதையே முன்னாள் காலனித்துவ நாடுகளின் முழு வரலாறும் எடுத்துக் காட்டுகிறது. ஆபிரிக்கா, ஐரோப்பா மற்றும் உலகம் முழுவதிலும் உள்ள தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களிடையே ஒரு சோசலிச, போர் எதிர்ப்பு மற்றும் ஏகாதிபத்திய எதிர்ப்பு வெகுஜன இயக்கத்தை கட்டியெழுப்புவது இன்றியமையாத கேள்வியாகும்.