அமெரிக்க நடிகர் மஹேர்ஷலா அலி வாசித்த பாலஸ்தீனிய கவிதையை 500,000 க்கும் அதிகமானோர் பார்வையிட்டுள்ளனர்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம் 

கடந்த வியாழனன்று, பாலஸ்தீன இலக்கிய விழா தனது ட்விட்டர்/எக்ஸ் கணக்கில், தற்போது காஸாவில் சிக்கியுள்ள இளம் பாலஸ்தீனிய கவிஞர் முகமது அல்-குத்வாவின் கவிதையை வெளியிட்டது, அது மற்றய பொதுமக்களுடன் சேர்ந்து, இஸ்ரேலிய ஆட்சியின் மரணம், சிதைவு, பசி அல்லது வெளியேற்ற அச்சுறுத்தல்களை அது அம்பலப்படுத்தியது. அமெரிக்க நடிகர் மஹெர்ஷலா அலி வாசித்த இந்தக் கவிதை இதுவரை 593,000 க்கும் மேற்பட்ட பார்வையிடல்களைப் பெற்றுள்ளது.

இஸ்ரேலிய கொலை இயந்திரத்தால் காஸாவில் பாலஸ்தீனியர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதற்கு பொதுமக்களின் நிலையான கோபத்தையும் வெறுப்பையும் சமூக ஊடகங்களில் இந்த கவிதையின் வரவேற்பு வெளிப்படுத்துவது மட்டுமல்லாமல், பெரும்பாலும் விளிம்புநிலை அல்லது இறந்த கலை வடிவமாக அறிவிக்கப்படும் கவிதை ஒடுக்கப்பட்ட மக்களின் ஆழமான உணர்வுகளைக் குறித்து பேசும் போது வெகுஜன மக்களை நகர்த்த முடியும் என்பதையும் இது காட்டுகிறது.

கவிதையை வாசிக்கும் மஹேர்ஷாலா அலி

இதன் காரணமாகவே சியோனிச அரசு பொதுமக்களுக்கு எதிராக மட்டுமல்ல, அதன் குற்றங்களை அங்கீகரித்து நினைவுகூருவதற்கும் எதிராகவும் போர் தொடுக்கிறது. இஸ்ரேல் அரசாங்கத்தின் முக்கிய குறிக்கோள்களில் ஒன்று காஸாவில் இது குறித்து செய்தி வெளியிடும் பத்திரிகையாளர்களை அழிப்பதாகும். இதை எழுதும் போது அவர்களது குடும்பத்தினர் தவிர 200க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

பொதுவாக காஸா மற்றும் பாலஸ்தீனத்திலுள்ள கலைஞர்களின் நிலையும் இதே போன்றதுதான். சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இனப்படுகொலை வழக்கு சியோனிச அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல், பாலஸ்தீன மக்களின் வேதனையை ஆவணப்படுத்தும் மற்றும் சியோனிசத்தையும் ஏகாதிபத்தியத்தையும் எதிர்க்க மில்லியன் கணக்கானவர்களைத் தூண்டும் குறிப்பிடத்தக்க கவிதைகள், நாவல்கள், நாடகங்கள் மற்றும் திரைப்படங்களின் சாத்தியக்கூறுகள் உள்ளன.

கடந்த வாரம் உலக சோசலிச வலைத் தளம் குறிப்பிட்டது போல, “சியோனிஸ்டுகள் பொதுவாக தங்கள் கொலை வெறியின் சாட்சிகளையும், குறிப்பாக, முக்கியமான படைப்புப் பணிகளில் பயங்கரமான நிகழ்வுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் திறன் கொண்ட எவரையும் அதாவது இரண்டையும் அழிக்க வேண்டியதன் அவசியத்தை நன்கு உணர்ந்துள்ளனர்” என்று குறிப்பிட்டது.

இதற்காக, டிசம்பர் 6 அன்று, இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் பல கொலை மிரட்டல்களை விடுத்ததைத் தொடர்ந்து, காஸாவில் ஒரு முக்கிய எழுத்தாளரும் கல்வியாளருமான டாக்டர் ரெஃபாத் அல்-அரீரையும், அவரது சகோதரர், சகோதரி மற்றும் அவரது நான்கு மருமகன்கள் மற்றும் மருமகள்களையும் சியோனிச அரசு படுகொலை செய்தது. கவிஞர் மொசாப் அபு தோஹா காஸாவிலிருந்து தப்பிச் சென்றபோது இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளால் தடுத்து வைக்கப்பட்டு தாக்கப்பட்டார். சர்வதேச அளவில் கடும் எதிர்ப்பு கிளம்பிய பிறகே அவர் விடுவிக்கப்பட்டார்.

இந்த வீடியோவை தயாரித்த பாலஸ்தீன இலக்கிய விழாவானது (Palestine Festival of Literature) ஜெருசலேம், ரமல்லா, ஹைஃபா மற்றும் நப்லஸ் போன்ற பல பாலஸ்தீனிய நகரங்களில் ஆண்டுதோறும் நடைபெறுகிறது, ஏனெனில் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு பாலஸ்தீனியர்களின் பயண திறனைக் கட்டுப்படுத்துகிறது. சமீபத்திய ஆண்டுகளில் இஸ்ரேலிய முற்றுகை காரணமாக காஸாவில் அதன் நிகழ்ச்சிகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த விழாவில் பாலஸ்தீன எழுத்தாளர்கள் மற்றும் பிற கலைஞர்களின் வாசிப்புகள் மற்றும் நிகழ்ச்சிகள் வழங்கப்படுகின்றன. விழா புரவலர்களில் சினுவா அச்செபே, ஜான் பெர்கர், மஹ்மூத் தர்விஷ், சீமஸ் ஹீனி, ஹரோல்ட் பின்டர், பிலிப் புல்மேன் மற்றும் எம்மா தாம்சன் ஆகியோர் அடங்குவர்.

ரெஃபாத் அல்-அரீரின் படுகொலைக்குப் பிறகு, டிசம்பர் 12 அன்று, பிரிட்டிஷ் நடிகர் பிரையன் காக்ஸ் வாசித்த அல்-அரீரின் “ நான் இறக்க வேண்டும் என்றால்” (“If I Must Die”) என்ற கவிதையின் வாசிப்பை இந்த விழா தனது ட்விட்டர் / எக்ஸ் இல் வெளியிட்டது. இந்த வாசிப்பு 13 மில்லியன் முறை பார்க்கப்பட்டுள்ளது.

நிலவின் வெளிச்சம் (Moonlight - 2016) என்ற படத்தில் நடித்ததற்காகவும், பசுமை புத்தகத்தில் (Greenbook) நடித்ததற்காகவும் 2019 ஆம் ஆண்டில் சிறந்த துணை நடிகருக்கான அகாதமி விருதையும், பிற கௌரவங்களையும் வென்ற மஹேர்ஷாலா அலியால், முகமது அல்-குத்வாவின் கவிதை மறக்க முடியாத மற்றும் சக்திவாய்ந்த முறையில் வாசிக்கப்படுகிறது. இவர் 2017 ஆம் ஆண்டில் உண்மையான துப்பறிவாளர் (True Detective) HBO தொடரில் ஆர்கன்சாஸ் போலீஸ் மாநில துப்பறிவாளர் வெய்ன் ஹேஸ் என்ற பாத்திரத்தில் நடித்ததற்காக நன்கு அறியப்படுகிறார்.

காஸாவில் இஸ்ரேலிய பேரழிவுக்கு போர் நிறுத்தம் கோருமாறு அமெரிக்க அரசாங்கத்திற்கு அழைப்பு விடுத்துள்ள Artists4Ceasefire அமைப்பின் உறுப்பினராக அலி இருக்கிறார். கவிதையைப் வாசிப்பதற்கு முன்பு அவர் வீடியோ கிளிப்பில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்: “பாலஸ்தீனத்திற்கு போர் நிறுத்தம் மற்றும் சுதந்திரத்திற்காக நாம் பணியாற்றினால், நாம் செய்யக்கூடிய பல விஷயங்களில் ஒன்று இன்று பாதுகாப்பை அடைய முயற்சிக்கும் குடும்பங்களுக்கு உதவுவதாகும்.”

முகமது அல்-குத்வா தனது குடும்பத்தையும் தன்னையும் காஸாவிலிருந்து வெளியேற நிதி கோரிய ஒரு GoFundMe appeal  வேண்டுகோளில் கூறுகிறார்: “எனக்கு ஒரு சகோதரியும் ஒரு சகோதரரும் உள்ளனர். என் சகோதரி எகிப்தில் ஒரு பல் மருத்துவ மாணவி, ஆனால் அவர் முந்தைய ஆண்டு தனது படிப்பை முடித்து பல் மருத்துவத்தில் பயிற்சி ஆண்டில் இருந்தார், எனவே அவர் நாட்டை விட்டு வெளியேற வேண்டியிருந்தது, ஆனால் போர் வெடித்தது, என் சகோதரர் தலையில் காயம் மற்றும் ஒரு கட்டியால் பாதிக்கப்பட்டுள்ளார்.”

அவரது “ஹைஃபாவுக்கான ஏக்கம்” இந்த நகரத்தின் மீதான ஏக்கத்தைப் பற்றியும், பாலஸ்தீனியர்கள் தங்கள் நிலத்திற்குத் திரும்புவதற்கான விருப்பத்தைப் பற்றியும் பேசுகிறது. 1947-48 ஆம் ஆண்டில் பயங்கரவாதம் மற்றும் இனச்சுத்திகரிப்பு தாக்குதலில் இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளின் முன்னோடியான ஹகேனாவால் (Hagenah) கைப்பற்றப்பட்ட நகரம் இதுவாகும். இன்று இஸ்ரேலின் மூன்றாவது பெரிய நகரமாக இருக்கும் ஹைஃபா, அதன் யூத மற்றும் பாலஸ்தீனிய கலப்பு மக்களுக்கான குறிப்பிடத்தக்க இடமாக இருக்கிறது.

அல்-குத்வாவின் கவிதையானது காஸாவில் தற்போதைய இனப்படுகொலையின் உருவப் படங்கள் மற்றும் உருவகங்கள் மூலம் உணர்வுகளை வெளிப்படுத்துகிறது.

உலக சோசலிச வலைத் தளமானது இக்கவிதையை முழுமையாக ஆங்கிலத்தில் பாலஸ்தீன இலக்கிய விழா வழங்கிய அரபு மொழியிலிருந்து மொழிபெயர்ப்பாக வெளியிட்டதை தமிழில் வெளியிடுகிறது.

“ஹைஃபாவுக்கான ஏக்கம்”

எழுதியவர் முகமது அல்-குத்வா

கடைசியாக கடலோரத்தை என் கண்களால் உற்று நோக்குகிறேன்

நான் காத்திருக்கிறேன்

ஒரு கப்பலுக்கு.

ஒரு பாய்மர படகுக்கு.

அல்லது ஒரு ஆரஞ்சு மரத்தின் தண்டில் கூட.

நான் கடக்க வேண்டும்

கடலின் தடைகளை உடைக்க

என் ஆரஞ்சு பழம் தருகிறது என்று

ஆழ்ந்து உண்ண வேண்டும்.

ஒருவேளை அது என்னைக் காப்பாற்றும்

ஒரு சுறாவின் மரணத்திலிருந்து.

நான் கடலைப் பார்த்து கடைசியாக புன்னகைக்கிறேன்

அல்லது அதற்கு சற்று முன்

நோவாவின் அற்புதத்திற்காக நான் காத்திருக்கிறேன்

கடல் என்னுடன் நகரத் தொடங்குகிறது

என்னை சூரியனை நோக்கி இழுக்க

ஒவ்வொரு நாளும் நான் உதவிக்கான அழைப்பைக் கேட்கிறேன்

கடைசி முறையாக.

நான் எத்தனை முறை அவற்றை ஒப்பிட்டுப் பார்த்தேன்:

என் காதலியாக கிடைத்த பரிசு, கடல்?

ஒவ்வொரு காலையிலும் அந்த முதல் கதிர்கள்

அவள் இடுப்பு வரை கூந்தலை போல ஓடியது.

அவள் என்னை எத்தனை முறை நம்பினாள்?

எங்கள் கடற்கரை நகரத்தை அவள் அறிந்திருந்தாள்

அந்த விடியல்களை நாம் பார்க்க முடியாது.

கடல் இன்னும் என்னைப் பிரிக்கிறது.

என் உறுப்புகளை என்னிடமிருந்து திருடுகிறது

நான் ஒரு கையை நீந்தப் பயன்படுத்துகிறேன்,

மற்றொன்று அலைகளை தள்ளிவிடும்.

இதையெல்லாம் மீறி நான் கடந்து செல்வேன்

நான் புறப்படுகிறேன்,

நாளை, ஒரு ஆரஞ்சை கடல் கரைக்குத் தள்ளிவிடும்.

ஒருவேளை அது ஹைஃபாவில் தரையிறங்கும்

மேலும் நான் மீண்டும் வேரூன்றி அங்கு வளர முடியும்.

அவள் கூந்தல் மீதான என் காதலை கடலால் தடுக்க முடியாது

என்னை மறக்கவும் வேண்டாம்

சூரியனின் இறுதி ஒலி.