முன்னோக்கு

பாலஸ்தீன எழுத்தாளர் டாக்டர் ரெஃபாத் அல்-அரீரை இஸ்ரேல் கொன்றது உலக அளவில் பெரும் சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம் 

டாக்டர். ரெஃபாத் அல்-அரீர் [Photo: Dr. Refaat al-Ar’eer]

திறமையான ஆங்கில ஆசிரியர், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர் மற்றும் பாலஸ்தீன உரிமைக்கான வழக்கறிஞரான டாக்டர் ரெஃபாத் அல்-அரீர் காஸாவில் அமெரிக்க ஆதரவு பெற்ற இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளால் டிசம்பர் 6 அன்று இலக்கு வைக்கப்பட்ட படுகொலை செய்யப்பட்டது உலகெங்கிலும் பாரிய சீற்றத்தைத் தூண்டியுள்ளது. இஸ்ரேல் பாதுகாப்புப் படையால் (IDF) அழிக்கப்பட்ட காஸாவிலுள்ள இஸ்லாமிய பல்கலைக்கழகத்தின் பேராசிரியரான டாக்டர் அல்-அரீர், கடந்த இரண்டு மாதங்களில் IDF ஆல் கொல்லப்பட்ட 17,400 க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்களில் ஒருவராவார்.

இனப்படுகொலைக்கு எதிராக குரல் கொடுப்பவர்களை ஒடுக்கும் மோசமான நடவடிக்கையின் ஒரு பகுதியாக இஸ்ரேலிய அரசாங்கம் மேற்கொண்ட கொடூரமான அட்டூழியங்களில் அல்-அரீரின் படுகொலையும் ஒன்றாகும். மனித உரிமை அமைப்பான யூரோ-மெட் மானிட்டரின் கூற்றுப்படி, அல்-அரீர் மற்றும் அவரது சகோதரர், சகோதரி மற்றும் அவர்களின் நான்கு குழந்தைகள் புதன்கிழமையன்று காஸாவிலுள்ள 'குடியிருப்பை குறிவைத்து' இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டனர்.

“காஸாவின் குரல்” (the voice of Gaza) என்ற திறமையான மற்றும் அன்பிற்குரிய கல்வியாளர், ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்களை ஆங்கிலம் கற்கவும், ஷேக்ஸ்பியரைப் படிக்கவும், ஆக்கிரமிப்பை மீறி யூத மக்களிடத்தில் மனிதநேயத்தைக் காணவும் தூண்டினார். அவர் கொல்லப்படுவதற்கு முன்பு, அல்-அரீர் காஸா மீண்டும் எழுதுகிறது (Gaza Writes Back)  மற்றும் அமைதியற்ற காஸா (Gaza Unsilenced) என்னும் இரண்டு புத்தகங்களை தொகுத்துள்ளார், மேலும் 2022 இன் காஸாவில் ஒளி (Light in Gaza): நெருப்பில் பிறந்த எழுத்து (Writing Born of Fire) உட்பட பல படைப்புகளுக்கு பங்களிப்பு செய்தார். மின்னணுசார் இன்டிபாடா (Electronic Intifada) உள்ளிட்ட பாலஸ்தீனிய மற்றும் இடதுசாரி செய்தித் தளங்களில் வழக்கமான பங்களிப்பாளரான அல்- அரீர், இஸ்ரேலின் 2014 இராணுவ நடவடிக்கையான “பாதுகாப்பு விளிம்பு நடவடிக்கையை” (Operation Protective Edge) தொடர்ந்து, உயிர் தப்பிப்பிழைத்த இளம் பாலஸ்தீனியர்களுக்கு உதவுவது மட்டுமல்லாமல், இராணுவ ஆக்கிரமிப்பின் கதையை உலகிற்கு தெளிவுபடுத்துவதற்காக, நாங்கள் எண்கள் அல்ல (We Are Not Numbers) என்ற அமைப்பையும் நிறுவினார்.

'காசாவில் ரெஃபாத்' என்பவர் பல பாலஸ்தீனியர்களில் ஒருவராகும், புகைப்பட பத்திரிகையாளர் மோட்டாஸ் அசைசா மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் பிசான் ஓவாடா உட்பட பலர், காஸாவிலிருந்து புதிய கள நிகழ்வுகளை வெளியிட்டதற்காக உலகெங்கிலுமுள்ள தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கு நன்கு அறியப்பட்டவர்களாக இருக்கின்றனர். இது முதலாளித்துவ பத்திரிகைகளின் பொய்களை உடைப்பது மட்டுமல்லாமல், இஸ்ரேலின் போர்க் குற்றங்களின் யதார்த்தத்தையும் அம்பலப்படுத்தி வருகிறது.

எக்ஸ்/ட்விட்டரில் ரெஃபாட்டின் இறுதி இடுகைகளில் கடந்த மாதம் எழுதப்பட்ட ஒரு கவிதை மற்றும் படுகொலையில் பைடென் நிர்வாகம் மற்றும் ஜனநாயகக் கட்சியின் பங்கைக் கண்டிக்கும் ஒரு இடுகை ஆகியவைகளும் அடங்குகின்றன. ஒட்டுமொத்தமாக, இந்த எழுத்தின்படி, இந்த இடுகைகள் 35 மில்லியனுக்கும் அதிகமான 'பார்வைகளைப்' பெற்றுள்ளன மற்றும் 145,000 க்கும் மேற்பட்ட முறை 'மறு ட்வீட்' செய்யப்பட்டுள்ளன, இது அல்-அரீரின் படுகொலை தூண்டிய வெகுஜன துக்கம் மற்றும் கோபத்தின் பிரதிபலிப்பாகும்.

இஸ்ரேல் இராணுவம், அதன் இனப்படுகொலை நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக பாலஸ்தீனிய பத்திரிகையாளர்கள் மற்றும் கல்வியாளர்களை வேண்டுமென்றே கொல்கிறது என்பது தெளிவாகியுள்ளது.

டாக்டர் அல்-அரீர் கொல்லப்படுவதற்கு நான்கு நாட்களுக்கு முன்பு, இயற்பியல் மற்றும் பயன்பாட்டு கணிதத்தில் முன்னணி ஆராய்ச்சியாளரும், அல்-அரீர் கற்பித்த காஸா இஸ்லாமிய பல்கலைக்கழகத்தின் தலைவருமான பேராசிரியர் சூஃபியன் தாயே தனது குடும்பத்தினருடன் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டார்.

அல்-அரீர் மற்றும் தாயேவின் கொலைகள் தவறாக பெயரிடப்பட்ட 'மனிதாபிமான இடைநிறுத்தம்' முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து, ராய்ட்டர்ஸ் பத்திரிகையாளர் இசாம் அப்துல்லாவைக் கொன்ற மற்றும் ஆறு பேரை காயப்படுத்திய அக்டோபர் 13 இஸ்ரேலிய இராணுவத் தாக்குதல் குறித்த ஒரு கூட்டு அறிக்கை, மனித உரிமை அமைப்புகளால் வெளியிடப்பட்டது. சர்வதேச மனித உரிமைகள் அமைப்பு (Amnesty International), மனித உரிமைகள் கண்காணிப்பகம், ராய்ட்டர்ஸ் மற்றும் ஏஜென்சி பிரான்ஸ்-பிரஸ் (AFP) ஆகியவற்றின் இந்த கூட்டு அறிக்கையானது, இந்த தாக்குதல் வேண்டுமென்றே இஸ்ரேலிய டாங்கித் தாக்குதலின் விளைவாகும் என்பதை உறுதிப்படுத்தியது. டிசம்பர் 8 நிலவரப்படி, பத்திரிகையாளர்களைப் பாதுகாப்பதற்கான குழுவானது அக்டோபர் 7 முதல் 63 பத்திரிகையாளர்கள், பெரும்பாலும் பாலஸ்தீனியர்கள் இறந்ததை உறுதிப்படுத்தியுள்ளது.

உலகெங்கிலும் மில்லியன் கணக்கான மக்கள் 'காஸாவின் குரல்' அல்-அரீர் கொல்லப்பட்டதற்காக துக்கம் அனுசரித்து வரும் நிலையில், நியூயோர்க் டைம்ஸ், வாஷிங்டன் போஸ்ட் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் உள்ளிட்ட பிரதான மேற்கத்திய பத்திரிகைகள் — அவரது மரணம் பகிரங்கப்படுத்தப்பட்டு 36 மணி நேரத்திற்கும் மேலாகியும் — இன்னும் ஒரு கட்டுரையையும் எழுதவில்லை. கடந்த இரண்டு மாதங்களாக பாலஸ்தீனிய ஊடகவியலாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் கல்வியாளர்கள் இலக்கு வைத்து கொல்லப்பட்டது குறித்து அவர்கள் மௌனம் காப்பது, அமெரிக்க அரசாங்கத்திற்கும் பாலஸ்தீனியர்களுக்கு எதிரான அதன் இனப்படுகொலைக் கொள்கை அறிக்கைகளுக்கான வடிகாலாக மட்டுமே செயல்படுகின்றன என்பதை அம்பலப்படுத்துகிறது.

பெஞ்சமின் நெதன்யாகுவின் பாசிச ஆட்சி, பைடென் நிர்வாகம் மற்றும் நேட்டோ சக்திகளின் நேரடி உடந்தையுடன் நடத்திய அல்-அரீரின் படுகொலை ஒரு போர்க்குற்றம் மட்டுமல்ல, உலகெங்கிலுமுள்ள இனப்படுகொலை எதிர்ப்பாளர்களுக்கு ஒரு தீவிர எச்சரிக்கையாகும். போருக்கு எதிரான உலகளாவிய வெகுஜன இயக்கத்தைக் கண்டு அச்சமடைந்து, சியோனிசம் யூத மதத்திற்கு ஒத்ததாக இருக்கிறது என்ற வரலாற்றுப் பொய் கருத்துக்களை பொதுமக்கள் மீது திணிக்க முடியவில்லை— உலகெங்கிலுமுள்ள முதலாளித்துவ அரசாங்கங்கள் போருக்கான-எதிர்ப்பை, 'யூத எதிர்ப்பு' என்று குற்றமாக்குவதற்கான சிறந்த முயற்சிகள் இருந்தபோதிலும்— இஸ்ரேலிய ஆளும் வர்க்கம், 'மத்திய கிழக்கில் அமெரிக்காவின் வலுவான கூட்டாளி', அதன் அரசியல் எதிரிகளையும் புறநிலை பார்வையாளர்களையும் கூட கொலை செய்ய முயல்கிறது.

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஆதரவுடன் இஸ்ரேலிய அரசாங்கத்தின் கொலைவெறி வெறியாட்டமானது, உலகெங்கிலுமுள்ள தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கு ஒரு எச்சரிக்கையாகும். சமத்துவமின்மை, போர் மற்றும் இனப்படுகொலைக்கு எதிரான வெகுஜன எதிர்ப்பின் நிலைமைகளின் கீழ், முதலாளித்துவ அரசாங்கங்கள் இனப்படுகொலை மற்றும் நிராயுதபாணியான அரசியல் எதிரிகள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களை இலக்கு வைத்து படுகொலை செய்வதை அரசு கொள்கையாக அதிக அளவில் ஏற்றுக்கொண்டு வருகின்றன.

அல்-அரீரின் கொலை ஜனநாயக உரிமைகள் மீதான உலகளாவிய தாக்குதலின் தீவிரத்தை பிரதிபலிக்கிறது, இது தைரியமான விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசான்ஜ் மீது வழக்குத் தொடுத்ததன் மூலம் அமெரிக்காவால் வழிநடத்தப்படுகிறது, அவர் தற்போது நாடு கடத்தப்படுவதற்காக பெல்மார்ஷ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். உள்நாட்டு அரசியல் எதிர்ப்பை நசுக்குவதற்காக வாஷிங்டன், லண்டன், பாரிஸ், பேர்லின், ரோம் மற்றும் டெல் அவிவ் ஆகிய இடங்களிலுள்ள அரசாங்கத்தின் உயர் மட்டங்களில் ஏற்கனவே அல்-அரீர் மற்றும் அசான்ஜிற்கு எதிராக பயன்படுத்தப்பட்ட இதேபோன்ற நடவடிக்கைகள் விவாதிக்கப்பட்டு வருகின்றன. இந்த இனப்படுகொலை மற்றும் எதேச்சதிகார நடவடிக்கைகள் அமெரிக்காவிலும் சர்வதேச அளவிலுமுள்ள முழு அரசியல் ஸ்தாபகத்தின் ஆதரவைக் கொண்டுள்ளன.

அமெரிக்காவும் அதன் சியோனிச கூட்டாளியும் செய்துவரும் குற்றங்கள் இன்னும் நடக்கவிருக்கும் மோசமானவைகளுக்கு ஒரு முன்னறிவிப்பாகும். அதே நேரத்தில், காஸாவில் தற்போது இனப்படுகொலையில் ஈடுபட்டுள்ள அரசாங்கங்களால் இனப்படுகொலை மற்றும் இலக்கு வைக்கப்பட்ட படுகொலைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டிருப்பது, அதே அரசியல்வாதிகளுக்கு வேண்டுகோள் விடுப்பதன் பயனற்ற தன்மையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

இரண்டு மாதங்களுக்கும் மேலாக, உலகெங்கிலுமுள்ள மில்லியன் கணக்கான மக்கள், இனப்படுகொலைக்கு முற்றுப்புள்ளி வைக்கவும், சமூகத்தின் வளங்களை போர் இலாபக்காரர்களை வளப்படுத்தாமல், சமூக நிலைமைகளை மேம்படுத்துவதற்கு திருப்பிவிடக் கோரியும் தெருக்களிலும் பள்ளி வளாகங்களிலும் இறங்கி போராடி வருகின்றனர். அமெரிக்காவில், பைடெனும் ஜனநாயகக் கட்சியும் இந்த அழைப்புகளை நிராகரித்து, பாலஸ்தீனிய இறப்பு எண்ணிக்கையை குறைத்து மதிப்பிட்டுள்ளன. அத்துடன் இஸ்ரேலிய இராணுவத்தின் போர்க் குற்றங்களை மூடி மறைத்துள்ளன, மேலும் சியோனிச திட்டத்திற்கு தங்கள் முழுமையான ஆதரவை அறிவிக்கும் பல தீர்மானங்களையும் நிறைவேற்றியுள்ளன.

வளர்ந்து வரும் வேலைநிறுத்த அலையின் நிலைமைகளின் கீழ், அமெரிக்க முதலாளித்துவத்தின் வீழ்ச்சியை அதன் போட்டியாளர்களான சீனாவுடன் ஒப்பிடுகையில் மாற்றியமைக்க முடியாத நிலைமைகளின் கீழ், அமெரிக்க ஆளும் வர்க்கமும் அதன் நேட்டோ கூட்டாளிகளும் காஸா இனப்படுகொலையை எதிர்கால போர்க் குற்றங்கள் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான கட்டுப்பாடுகளுக்கு ஒரு தொடக்க புள்ளியாக பயன்படுத்தி வருகின்றனர்.

தங்களது மூன்றாம் உலகப் போர் நிகழ்ச்சி நிரலை செயல்படுத்துவதற்காக, உலகெங்கிலுமுள்ள முதலாளித்துவ வர்க்கம் பாசிச மற்றும் அதி-வலது சக்திகளின் வளர்ச்சியை ஊக்குவித்து வருகிறது.

வளர்ந்து வரும் போர்-எதிர்ப்பு இயக்கம் போர்க் குற்றவாளிகளுக்கு அழைப்பு விடுப்பதை நோக்கமாகக் கொண்டிருக்கக் கூடாது, மாறாக போரை நிறுத்துவதற்கும், போர், வறுமை மற்றும் பாசிசத்தின் ஆதாரமான முதலாளித்துவ அமைப்புமுறையை தூக்கியெறிவதற்கும் திறன் கொண்ட ஒரே சமூக சக்தியான தொழிலாள வர்க்கத்தை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும்.