இனப்படுகொலை எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுக்கு எதிரான பொலிஸ் ஒடுக்குமுறையின் மீதான வேலைநிறுத்த நடவடிக்கைக்கு அங்கீகாரம் வழங்க, கலிபோர்னியா பல்கலைக்கழக அமைப்புமுறையின் 10 வளாகங்களில் 48,000 பட்டதாரி மாணவர் தொழிலாளர்களால் திங்களன்று காலை வாக்களிப்பு தொடங்கியது. ஐக்கிய வாகனத்துறை தொழிலாளர்கள் சங்கத்தின் (UAW) உள்ளூர் 4811 உறுப்பினர்களின் இணையவழி வாக்களிப்பு புதன்கிழமை வரை தொடர்கிறது.
உலக சோசலிச வலைத் தளம் சாத்தியமானளவுக்கு பரந்தளவில் 'ஆம்' என்று வாக்களிப்பதற்கு அழைப்பு விடுக்கிறது. சாமானிய தொழிலாளர்கள், தொழிலாள வர்க்கத்தின் பரந்த பிரிவுகளை உள்ளடக்கிய ஒரு முழுவீச்சிலான வேலைநிறுத்தத்திற்கான தயாரிப்புகளை இப்போதே தொடங்க வேண்டும். UAW தொழிற்சங்க எந்திரமானது, அதை மட்டுப்படுத்தி கட்டுப்படுத்தும் முயற்சிகளை, அவர்கள் நிராகரிக்க வேண்டும்.
காஸாவில் அமெரிக்க ஆதரவிலான இஸ்ரேலிய இனப்படுகொலைக்கு எதிராக மாணவர் தலைமையிலான நடவடிக்கைகள் நடந்து வருகின்ற பின்னணியில், இந்த வேலைநிறுத்த வாக்கெடுப்பு இடம்பெறுகிறது. வார இறுதியில், வாக்கெடுப்பு நடைபெறும் வளாகங்களில் ஒன்றான கலிபோர்னியா பேர்க்லி பல்கலைக்கழகம், டியூக் பல்கலைக்கழகம் மற்றும் பிறவற்றில் மாணவர்கள் எதிர்ப்பு போராட்டங்களை நடத்தினர்.
நாடெங்கிலும் போராட்டங்கள் முன்னொருபோதும் இல்லாத வகையில், பொலிஸ் அணிதிரட்டல் மற்றும் அடிப்படை ஜனநாயக உரிமைகள் மீதான அடக்குமுறையை எதிர்கொண்டுள்ளன. இதற்கு ஜனநாயக மற்றும் குடியரசுக் கட்சி அரசியல்வாதிகளின் ஆதரவும் உள்ளது. நாடு முழுவதிலும், குறைந்தபட்சம் 3,000 போராட்டக்காரர்கள், முக்கியமாக மாணவர்கள், கடந்த மூன்று வாரங்களில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
லொஸ் ஏஞ்சல்ஸில் (UCLA) உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் முகாமிட்டிருந்த போராட்டக்காரர்கள் மீதான போலீஸ் தாக்குதலால் கலிபோர்னியா பேர்க்லி பல்கலைக்கழகத்தில் (UC) வாக்கெடுப்பு தூண்டப்பட்டது. வலதுசாரி சியோனிஸ்டுகள் ஐந்து மணி நேரம் போராட்டக்காரர்களைத் தாக்கிய வேளையில், வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த கலகம் ஒடுக்கும் பொலிசார் பின்னர், வளாகத்தை வலுக்கட்டாயமாக மூடினர். நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டு, வளாகம் போலீசாரின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளது.
ரஃபா மீதான தாக்குதலுடன் காஸா இனப்படுகொலை ஒரு புதிய கட்டத்திற்குள் நுழையும் போது வேலைநிறுத்த வாக்கெடுப்பும் நடைபெறுகிறது. இஸ்ரேல் உணவு வழங்கலை முற்றிலுமாக நிறுத்திவிட்டதால், வடக்கு காஸாவில் கடுமையான பஞ்ச நிலைமைகள் உள்ளன. இனப்படுகொலையைத் தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் அடுத்த கட்டத்தில் பல்லாயிரக்கணக்கானோர், நூறாயிரக்கணக்கானோர் உயிரிழக்க நேரிடும்.
இந்த இனப்படுகொலைக்கு ஒட்டுமொத்த ஆளும் வர்க்கம், மற்றும் அதன் இரண்டு கட்சிகளான ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சியின் ஆதரவு உள்ளது. மேலும் அது கொடூரமானது, இனப்படுகொலை என்பது வளர்ந்து வரும் மூன்றாம் உலகப் போரில் ஒரு போர்முனை மட்டுமே.
அமெரிக்காவும் ஏனைய ஏகாதிபத்திய சக்திகளும் உக்ரேன் விவகாரத்தில் ரஷ்யாவிற்கு எதிரான போரை பாரிய அளவில் விரிவுபடுத்த திட்டமிட்டு வருகின்றன. அழித்து நிர்மூலமாக்கும் அணு ஆயுத அச்சுறுத்தல் ரஷ்ய மண்ணில் தாக்குதல்களை நடத்துவதிலிருந்தும் மேற்கத்திய துருப்புக்களை நேரடியாக நிலைநிறுத்துவதிலிருந்தும் கூட நேட்டோவைத் தடுத்து நிறுத்தாது என்று அவர்கள் மீண்டும் மீண்டும் கூறி வந்துள்ளனர்.
மாணவர்களின் போராட்டங்கள், பாராட்டத்தக்கவை மற்றும் துணிச்சலானவை என்றாலும், காஸாவில் இனப்படுகொலையைத் தடுக்க போதுமானதாக இல்லை.
சமூகத்தின் அனைத்து செல்வ வளங்களையும் உற்பத்தி செய்கின்ற சர்வதேச தொழிலாள வர்க்கம் மட்டுமே, முதலாளித்துவ ஆளும் உயரடுக்கின் குற்றகரமான நடவடிக்கைகளை எதிர்க்கவும் தோற்கடிக்கவும் சக்தி கொண்டுள்ளது.
வெளிநாட்டில் போர் என்பது, அதேநேரத்தில் உள்நாட்டில் தொழிலாள வர்க்கத்தின் மீதான ஒரு போராகும். சமூக ஆதார வளங்களை போருக்காக விடுவிப்பதற்கு, ஆளும் வர்க்கம் பாரிய பணிநீக்கங்களை மேற்கொண்டு வருகிறது. அமெரிக்காவில் மட்டும் நூறாயிரக்கணக்கான வெட்டுக்கள் இந்த ஆண்டு அறிவிக்கப்பட்டுள்ளன. பைடெனின் வெள்ளை மாளிகையின் ஆதரவுடன் 'வரலாற்று' ஒப்பந்தம் என்று சொல்லப்பட்டதாக கூறப்படுவது நிறைவேற்றப்பட்டு வெறும் சில மாதங்களுக்குப் பின்னர், ஆயிரக்கணக்கான வாகனத்துறை தொழிலாளர்களும் இந்த பணிநீக்கங்களில் உள்ளடங்குவர்.
சுரண்டல் மற்றும் சமத்துவமின்மைக்கு எதிரான தொழிலாளர்களின் எதிர்ப்பு, பொதுமக்களிடையே பரவலாக இருக்கும் போர் எதிர்ப்பு உணர்வுகளுடன் இணைவதற்கான மகத்தான சாத்தியக்கூறு உள்ளது. அதிகரித்து வரும் பணவீக்கம், உள்கட்டமைப்பின் பொறிவு மற்றும் சமூக வேலைத்திட்டங்கள் துடைத்தெறியப்படுவதால் உருவாக்கப்பட்ட பேரழிவுகரமான நிலைமைகளை தொழிலாளர்கள் எதிர்கொள்கின்றனர்.
கடந்த வாரம், ஸ்டெல்லாண்டிஸின் முக்கியமான வாரன் ஸ்டாம்பிங் ஆலையின் தொழிலாளர்கள் சுகாதார மற்றும் பாதுகாப்பு பிரச்சினைகளுக்காக வேலைநிறுத்தம் செய்ய வாக்களித்தனர். ஆனால், இது நிலவும் ஆழ்ந்த கோபத்தின் ஒரு பிரதிபலிப்பு மட்டுமே.
போருக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தில் ஒரு இயக்கம் அபிவிருத்தி அடைவதைத் தடுப்பதில் தொழிற்சங்க எந்திரம்தான் மத்திய பாத்திரம் வகித்து வருகிறது.
ஐக்கிய வாகனத்துறை தொழிலாளர் சங்கத்தின் தலைவர் ஷான் பெயின், அனைத்து நோக்கங்களுக்காகவும் மற்றும் பைடென் நிர்வாகத்தின் ஒரு பகுதியாகவும் இருக்கின்றார். தொழிலாளர்களை முன்னரங்கில் இருந்து வெளியேற்ற மட்டுமே 'போர்நிறுத்தத்திற்கு' போலியான ஆதரவை கோரும் அதே வேளையில், மறுதேர்தலில் பைடென் போட்டியிடுவதற்கு UAW ஒப்புதல் அளித்ததோடு, அவரது ஏற்பு உரையில் இருந்து போர்-எதிர்ப்பு எதிர்ப்பாளர்களை வெளியேற்றியது.
இதர தொழிற்சங்க அதிகாரத்துவத்தினர், எதிர்ப்பு போராட்டங்களுக்கு தங்கள் விரோதப் போக்கை மறைக்க எந்த முயற்சியையும் மேற்கொள்ளவில்லை. அமெரிக்க ஆதரவிலான போர்களுக்கு ஆதரவாக உலகெங்கிலும் சுற்றி வரும் அமெரிக்க ஆசிரியர் சம்மேளனத்தின் தலைவர் ராண்டி வெயின்கார்டன், இனப்படுகொலையை எதிர்த்து போராடும் மாணவர்களையும் கல்வியாளர்களையும் 'யூத-எதிர்ப்பு' என்று அவதூறு செய்துள்ளார்.
இந்த வாக்கெடுப்பிற்கு அழைப்பு விடுக்க விரும்பாத UAW தொழிற்சங்க அதிகாரத்துவம், ஏற்கனவே இதை மட்டுப்படுத்த முயன்று வருகிறது. கலிபோர்னியா பல்கலைக்கழக வாக்கெடுப்பை வாரக்கணக்கில் தாமதப்படுத்தி, எதிர்ப்பு போராட்டங்கள் மீதான தாக்குதல் நடந்த நியூ யோர்க் பல்கலைக்கழகம் போன்ற வளாகங்களில் கூட அவர்கள் வேலைநிறுத்த வாக்கெடுப்புகளுக்கு அழைப்பு விடுக்கவில்லை. இனப்படுகொலையை நிறுத்துவதற்கு எதுவும் செய்யாத பல்கலைக்கழக நிர்வாகத்தின் பெறுமதியற்ற வாக்குறுதிகளுக்கு ஈடாக, வடமேற்கு பல்கலைக்கழகத்தின் காட்டிக்கொடுப்பின் பாதையில், 'விரிவடைவதை தளர்த்தும்' (வேறு வார்த்தைகளில் கூறுவதானால், போராட்டங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு) ஒரு ஒப்பந்தத்தை தாங்கள் தேடுவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
பட்டதாரி மாணவர்கள் வேலைநிறுத்தம் செய்வதற்கு வாக்களித்தாலும், UAW தொழிற்சங்க எந்திரமானது, அவர்கள் ஒரேயடியாக அழைக்கப்பட மாட்டார்கள் என்று கூறியுள்ளது. அதற்கு பதிலாக, UAW ஆனது கடந்த ஆண்டு வாகனத் தொழில்துறையில் நடந்த 'திடீர்' வேலைநிறுத்தத்திற்குப் பிறகு, எந்த நடவடிக்கையையும் இதனை முன்மாதிரியாக கொள்ள விரும்புகிறது. இது பெரும்பான்மையான தொழிலாளர்களை பணியில் வைத்திருந்து சலுகை ஒப்பந்தங்கள் மற்றும் பணிநீக்கங்களுக்கு வழி வகுத்தது.
கல்வியாளர்கள் தங்கள் போராட்டத்தை தோற்கடிப்பதற்கான இந்த முயற்சியை நிராகரிக்குமாறு உலக சோசலிச வலைத் தளம் அழைப்பு விடுக்கிறது. வேலைநிறுத்தத்திற்கு வாக்களிப்பது என்பது வேலைநிறுத்தம் செய்வதற்கான வாக்கு என்று பொருள்! தொழிற்சங்க எந்திரம் திரைக்குப் பின்னால் அதன் சூழ்ச்சிகளில் ஈடுபடுகையில் பணியில் இருக்கக்கூடாது.
வாகனத் தொழிலாளர்கள் மற்றும் பாதுகாப்பு ஆலைகளில் இருக்கும் தொழிலாளர்கள் உட்பட ஐக்கிய வாகன தொழிலாளர்கள் சங்கத்தின் அனைத்து 400,000 தீவிர உறுப்பினர்களும், மாணவர்கள் மற்றும் பாலஸ்தீனிய மக்களை பாதுகாப்பதற்கு அணிதிரட்டப்பட வேண்டும். வேலைநிறுத்த நடவடிக்கையானது, கலிபோர்னியா பல்கலைக்கழக அமைப்புடன் மட்டும் மட்டுப்படுத்தப்படாமல், இனப்படுகொலைக்கு முற்றுப்புள்ளி வைக்க அமெரிக்க தொழில்துறையின் மூலோபாய துறைகளை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்.
அனைத்திற்கும் மேலாக, உற்பத்தி நிகழ்ச்சிப்போக்கில் ஒன்றுபட்டுள்ள மற்றும் மனிதகுலம் முழுவதையும் அச்சுறுத்தும் ஒரு போரைத் தீவிரப்படுத்துவதில் எந்த ஆர்வமும் இல்லாத உலகெங்கிலுமான தொழிலாளர்களுக்கும் இது விரிவுபடுத்தப்பட வேண்டும்.
அதிகாரத்துவ தலையீடு மற்றும் நாசவேலைகளில் இருந்து சுதந்திரமாக இந்த நடவடிக்கையை ஒழுங்கமைக்க, சாமானிய தொழிலாளர் குழுக்களின் அபிவிருத்தி அவசியமாகும். 2022 இல் UAW தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஒரு சோசலிச வாகனத்துறை தொழிலாளியான வில் லேமன் சமீபத்தில் கூறியதைப் போல: 'இதற்கான போராட்டத்தை இப்போதே தொடங்க வேண்டும். நடவடிக்கைகளை விவாதிக்க உங்கள் பணியிடத்தில் பாரிய கூட்டங்களை நடத்துங்கள். ஐக்கிய வாகன தொழிலாளர்கள் சங்க அதிகாரத்துவத்திடம் இருந்து தவிர்க்கவியலாத எதிர்ப்பை முகங்கொடுக்கையில், உங்களது ஜனநாயக விருப்பத்தை நடைமுறைப்படுத்த சாமானிய தொழிலாளர் வேலைநிறுத்தக் குழுக்களை ஒழுங்கமையுங்கள்.'
மனிதநேயம் ஒரு முச்சந்தியில் நிற்கிறது. முதலாளித்துவப் பாதையானது ஆழமடையும் பொருளாதார மற்றும் சமூக நெருக்கடிகளுக்கு இட்டுச் சென்று, பாசிசம், உலகப் போர் மற்றும் இறுதியில் மனித நாகரீகத்தினை அழித்தொழிப்பதில் உச்சக்கட்டத்தை அடைகிறது. போர், சுரண்டல் மற்றும் சர்வாதிகாரத்தில் எந்த ஆர்வமும் இல்லாத தொழிலாள வர்க்கம் ஒரு புரட்சிகர அரசியல் சக்தியாக எழுச்சி பெறுவதுதான் இதற்கான ஒரே மாற்றீடு ஆகும்.
போர் மற்றும் சமத்துவமின்மைக்கு எதிரான போராட்டம் காலாவதியாகிவிட்ட முதலாளித்துவ அமைப்புமுறைக்கு எதிரான போராட்டத்துடன் இணைக்கப்பட வேண்டும். காஸாவிலும், பல்கலைக்கழக வளாகங்களிலும் அழிவுகரமான தர்க்கமாக கையாளப்பட்டு வரும் இலாப நோக்கம், ஒரு தொழிலாளர் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ், மனித தேவையைப் பூர்த்தி செய்ய உலகின் ஆதாரவளங்களை பகுத்தறிவார்ந்த முறையில் திட்டமிடுவதைக் கொண்டு பிரதியீடு செய்யப்பட வேண்டும். இதுதான் சோசலிசத்தின் வேலைத்திட்டமாகும்.