பங்காளதேஷ் பிரதமர் வெகுஜன எழுச்சிக்கு மத்தியில்,  இந்தியாவுக்கு தப்பி ஓடினார்

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

பங்களாதேஷின் நீண்டகால பிரதமர் ஷேக் ஹசீனா, அவரது மேலோங்கி வந்த கொடூரமான சர்வாதிகார ஆட்சிக்கு எதிரான வெகுஜன எழுச்சிக்கு மத்தியில் திங்கட்கிழமை நாட்டை விட்டு வெளியேறினார்.

5 ஆகஸ்ட் 2024 திங்கட்கிழமை, பங்களாதேஷின் டாக்காவில், பிரதமர் ஷேக் ஹசீனாவின் இராஜினாமாவைக் கொண்டாடும் போது எதிர்ப்பாளர்கள் கோஷங்களை எழுப்பிய போது. [AP Photo/Rajib Dahr]

டாக்கா சர்வதேச விமான நிலையத்தில் இராணுவ துணையுடன் அவரும் அவரது சகோதரியும் காணப்பட்ட சில மணி நேரங்களுக்குப் பிறகு, இராணுவத் தலைவர் ஜெனரல் வாக்கர்-உஸ்-ஜமான் தேசத்திற்கு தொலைக்காட்சியில் விடுத்த அறிக்கை ஒன்றில் ஹசீனா இராஜினாமா செய்ததாக அறிவித்தார். கடந்த 15 ஆண்டுகளாக பங்களாதேஷின் அரசாங்கத்திற்கு தலைமை தாங்கிய ஹசீனா, தனது ஆட்சியுடன் நெருங்கிய உறவுகளை கொண்டுள்ள இந்தியாவிற்கு பறந்துவிட்டதாக பின்னர் அறியக் கிடைத்தது.

170 மில்லியன் மக்களைக் கொண்ட நாடு 'ஒரு புரட்சிகர காலகட்டதின் ஊடாக கடக்கின்றது' என்று அறிவித்த ஜெனரல் வாக்கர்-உஸ்-ஜமான், ஒரு புதிய அரசாங்கத்திற்கு அதிகாரம் அமைதியான முறையில் மாற்றப்படுவதையும் ஒழுங்கை மீட்டெடுப்பதையும் இராணுவம் மேற்பார்வையிடும் என்று கூறினார். எதிர்க்கட்சித் தலைவர்கள் மற்றும் 'சிவில் சமூக' குழுக்களுடன் ஏற்கனவே ஆலோசனை நடத்தியதாக அவர் தெரிவித்தார்.

பொது மக்களை வீதிகளை விட்டு வெளியேறுமாறு வேண்டுகோள் விடுத்ததுடன், ஊரடங்குச் சட்டம் நீக்கப்பட்டதன் பின்னர் செவ்வாய்க்கிழமை காலை பாடசாலைகள், கல்லூரிகள், தொழிற்சாலைகள் மற்றும் அலுவலகங்களை மீண்டும் திறக்குமாறு உத்தரவிட்டார். வெகுஜன கோபத்தைத் தணிக்க முயற்சித்த வேக்கர்-உஸ்-ஜமான் மக்களின் நண்பராக தன்னைக் காட்டிக்கொண்டார். 'நான் உங்கள் அனைவருக்கும் உறுதியளிக்கிறேன், அனைத்து கொலைகளுக்கும் நாங்கள் நீதி வழங்குவோம்... நாட்டின் இராணுவத்தின் மீது நம்பிக்கை வையுங்கள். தயவு செய்து வன்முறைப் பாதைக்குத் திரும்ப வேண்டாம், தயவு செய்து அகிம்சை மற்றும் அமைதியான வழிகளுக்குத் திரும்புங்கள்” என்று அவர் வாக்குறுதி அளித்தார்.

ஜெனரல் பேசும்போது, தேசிய தலைநகர் டாக்காவின் தெருக்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது. பிரதமரின் இல்லம் மற்றும் பல அரசு கட்டிடங்கள் தாக்கப்பட்டன. நியூயார்க் டைம்ஸ் ஒரு ஆடைத் தொழிலாளியான மான்சூர் அலியை மேற்கோள் காட்டியிருந்தது. ஹசீனாவின் வீட்டிற்குள் நுழைந்த ஆயிரக்கணக்கான மக்களில் தானும் ஒருவர் என்று கூறினார். “நாங்கள் கோபத்தில் அங்கு சென்றோம். அங்கே எதுவும் மிச்சமில்லை” என்றார்.

இரத்தம் தோய்ந்த அடக்குமுறை மூலம் பதவியில் ஒட்டிக்கொண்டிருப்பதற்கான ஹசீனாவின் முயற்சி பங்களாதேஷ் முதலாளித்துவத்தை ஆபத்தான முறையில் சீர்குலைக்கின்றது என்ற முடிவுக்கு வந்த பின்னர், இராணுவ உயர்மட்ட அதிகாரிகள் ஹசீனாவை அதிகாரத்தில் இருந்து இறங்க கட்டாயப்படுத்தினர் என்றே எல்லா விவாகாரங்களும் காட்டுகின்றன.

தொழிலாள வர்க்கம் இன்னும் ஒரு சுயாதீன அரசியல் சக்தியாக இந்த நெருக்கடியில் தலையிடவில்லை. ஆனால், கடந்த மாத தொடக்கத்தில் ஒரு பிற்போக்கான அரசு வேலை ஒதுக்கீடு முறைமைக்கு எதிராக பல்கலைக்கழக மாணவர்கள் தொடங்கிய எதிர்ப்பு இயக்கத்தில் உழைக்கும் மக்கள் அதிக எண்ணிக்கையில் இணைந்துகொண்டனர். அவர்கள் அரச வன்முறையை எதிர்ப்பதற்காகவும், பாரிய வேலையின்மை, வாட்டும் வறுமை மற்றும் எப்போதும் ஆழமாகிவரும் சமூக சமத்துவமின்மையின் மீதும் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தவும் அவ்வாறு இணைந்துகொண்டனர்.

இராணுவமும் ஆளும் வர்க்கமும், நாட்டின் பாரிய ஆடைத் தொழிற்துறையின் தொடர்ச்சியான சீர்குலைவு இலாபங்களைக் குறைப்பதுடன், நாட்டின் பொருளாதார நெருக்கடியை அதிகப்படுத்துவதோடு தொழிலாளர்களின் அமைதியின்மையைத் தூண்டும் என்று தெளிவாக பீதியடைந்துள்ளன.

ஞாயிற்றுக்கிழமை, நாடு முழுவதும் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடந்த மோதல்களில் 13 பொலிஸ் அதிகாரிகள் உட்பட கிட்டத்தட்ட நூறு பேர் கொல்லப்பட்டனர். இது போராட்ட இயக்கம் தொடங்கியதில் இருந்து கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையை 300க்கும் அதிகமாக உயர்த்தியது.

அடக்குமுறையும் நாடுபூராவுமான அரசாங்க ஊரடங்கு உத்தரவும் இருந்தபோதிலும், பாரபட்சத்திற்கு எதிரான மாணவர்கள், ஹசீனாவின் இராஜினாமாவைக் கோரி, திங்கள்கிழமை டாக்காவில் உள்ள பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தை நோக்கி ஒரு வெகுஜன அணிவகுப்புக்கு அழைப்பு விடுத்தனர்.

திங்கட்கிழமை வரை, மோசமான பயங்கரவாத எதிர்ப்பு துரித நடவடிக்கை படையணி மற்றும் அவரது அரசியல் கட்சியான அவாமி லீக் ஏற்பாடு செய்த குண்டர்கள் உட்பட, அமைதியான போராட்டக்காரர்களுக்கு எதிராக பொலிஸை கட்டவிழ்த்துவிட்டு, ஹசீனா ஒரு கடுமையான போக்கைக் கடைப்பிடித்தார், மாணவர்களை 'பயங்கரவாதிகள்' என்று கண்டனம் செய்த அவர், அரசாங்க ஊரடங்கு உத்தரவை மீறுபவர்களை 'சுட்டுக் கொல்ல' உத்தரவுகளை வழங்கியதுடன், இந்த இயக்கம் பிரதான எதிர்க்கட்சிகளான பங்களாதேஷ் தேசியவாத கட்சி (BNP) மற்றும் ஒரு இஸ்லாமிய வகுப்புவாதக் கட்சியான ஜமாத்-இ-இஸ்லாமியினாலும் திட்டமிடப்பட்டதாக பொய்யாகக் கூறினார்.

போராட்டங்களுக்கு எதிராக இராணுவம் நிலைநிறுத்தப்பட்ட நிலையில், அவர்களை வன்முறையில் ஒடுக்கும் முயற்சியில் பொலிஸ் அடிப்படைபங்கு வகித்தது. இதில் ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். பத்திரிகைச் செய்திகளின்படி, கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில், நிராயுதபாணியான போராட்டக்காரர்களை சுட்டுக் கொல்ல வேண்டிய நிலை குறித்து கனிஷ்ட அதிகாரிகள் தங்கள் உயர் அதிகாரிகளிடம் கவலை தெரிவித்தனர்.

இராணுவத் தளபதி ஹசீனாவின் இராஜினாமாவை அறிவித்த சில மணிநேரங்களுக்குப் பிறகு, பங்களாதேஷ் ஜனாதிபதி முகமது ஷஹாபுதீன், கடற்படை மற்றும் விமானப்படைத் தலைவர்கள் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்களும் ஜெனரல் வாக்கர்-உஸ்-ஜமானுடன் நடத்திய ஒரு கூட்டத்திற்குத் தலைமை தாங்கியதாகக் கூறினார்.

'இடைக்கால அரசாங்கத்தை' ஸ்தாபிக்க அனுமதிக்கும் வகையில் பாராளுமன்றம் கலைக்கப்பட வேண்டும் என்று கூட்டத்தில் முடிவெடுத்துள்ளதாகவும், 'தற்போது நிலவும் அராஜக நிலைமையை சீராக்க இராணுவம் நடவடிக்கை எடுக்கும்' என்றும் ஜனாதிபதி கூறினார்.

ஹசீனாவின் அவாமி லீக் ஆதிக்கம் செலுத்தும் தற்போதைய நாடாளுமன்றம், கடந்த ஜனவரியில் ஒரு வாக்கெடுப்பின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டது. இந்த வாக்கெடுப்பை பிஎன்பி மற்றும் அதன் கூட்டாளிகளான ஜமாத்-இ-இஸ்லாமியும் பகிஷ்கரித்திருந்தன. அரசாங்கத்தின் அரசியல் எதிரிகளை நசுக்குவது மற்றும் தேர்தலை மேற்பார்வையிட ஒரு காபந்து அரசாங்கத்தை நியமிக்க அனுமதிக்க மறுத்ததையும் அவர்கள் மேற்கோள் காட்டினர்.

2018ஆம் ஆண்டு ஊழல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பிஎன்பியின் நீண்டகாலத் தலைவர் கலிட ஸியாவை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று கூட்டத்தில் ஒப்புக்கொள்ளப்பட்டதாகவும் ஜனாதிபதி ஷஹாபுதீன் அறிவித்தார்.

பாரபட்சத்திற்கு எதிரான மாணவர்களின் தலைவர்கள், பங்களாதேஷ் இராணுவத்தின் தலையீட்டை வரவேற்றுள்ளனர். பங்களாதேஷ் இராணுவமானது முதலாளித்துவ ஆட்சியின் அரணாக இருந்துகொண்டு, அடக்குமுறை மற்றும் சர்வாதிகாரத்தின் இழிந்த சாதனையைக் கொண்ட அமைப்பாகும்.

அத்தகைய அரசாங்கம், ஒழுங்கை மீட்டெடுப்பதையும் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் அரசாங்கம் 2023 இல் 4.7 பில்லியன் டொலர் சர்வதேச நாணய நிதிய பிணை எடுப்பு கடனுக்கு ஈடாக அமுல்படுத்த ஒப்புக்கொண்ட சிக்கன மற்றும் தனியார்மயமாக்கல் நடவடிக்கைகளை தொடர்ந்து செயல்படுத்துவதையும் கடமையாகக் கொண்ட ஒரு வலதுசாரி முதலாளித்துவ ஆட்சியாகவே இருக்கும்.

இடைக்கால அரசாங்கத்தில் பி.என்.பி. மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கு பிரதான இடம் கிடைக்கும். ஆனால் இராணுவம் சிம்மாசனத்தின் பின்னால் இருக்கும் சக்தியாக இருக்கும்.

பங்களாதேஷில் பல தசாப்தங்களாக உத்தியோகபூர்வ அரசியலானது ஹசீனா மற்றும் அவரது அவாமி லீக் மற்றும் ஸியா மற்றும் அவரது பி.என்.பி. இடையேயான கடுமையான போட்டியைச் சுற்றியே இருந்து வந்துள்ளது. பங்களாதேஷ் சுதந்திரப் போராட்டத்தில் மிக முக்கியமான அரசியல் தலைவரும், நாட்டின் அப்போதைய ஜனாதிபதியுமான தனது தந்தை ஷேக் முஜிபுர் ரஹ்மான், வெற்றிகரமான இராணுவச் சதியின் பகுதியாக 1975ல் படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஹசீனா அவாமி லீக்கின் தலைவராக உருவெடுத்தார்.

கணவரும் கட்சியின் நிறுவனரும் பங்களாதேஷின் ஐந்தாவது ஜனாதிபதியுமான ஜியாவுர் ரஹ்மான், இராணுவ அதிகாரிகள் குழுவால் படுகொலை செய்யப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, ஸியா 1983 இல் பி.என்.பி.யின் தலைவராக ஆனார்,

சர்வதேச மூலதனத்திற்குக் கட்டுப்பட்ட, விரிவான முதலாளித்துவ விசுவாச மற்றும் ஊழல் ஆதரவு வலைப்பின்னல்களைக் கொண்டிருக்கின்ற இந்த இரு கட்சிகளும், தங்கள் அரசியல் போட்டியாளர்களுக்கு எதிராக அடக்குமுறை மற்றும் ஜனநாயக விரோத மிலேச்சத்தைப் பயன்படுத்திய, மற்றும் தொழிலாள வர்க்கத்தின் எந்தவொரு தீவிர எதிர்ப்பு இயக்கத்தையும் இரும்புக் கரங்கொண்டு நசுக்கிய ஆட்சிகளை நடத்தியவை ஆகும்.

அரசாங்க அடக்குமுறைக்கு எதிராக வெகுஜனங்கள் ஆத்திரத்தில் தெருக்களில் இறங்கிய பின்னரே, பி.என்.பி., ஜூலை நடுப்பகுதியில் மாணவர் இயக்கத்திற்கு அதன் 'ஆதரவை' அறிவித்தது.

உலகின் எட்டாவது அதிக மக்கள்தொகை கொண்ட நாடான பங்களாதேஷில் இப்போது விரிவடைந்து வரும் நெருக்கடிக்கும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இலங்கையை உலுக்கிய நெருக்கடிக்கும் இடையே பல சமாந்தரங்கள் உள்ளன. ஜூலை 2022 இல், பாரிய போராட்டங்கள் மற்றும் வேலைநிறுத்தங்கள் ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்ஷவை அதிகாரத்திலிருந்து துரத்தின. ஆனால் தொழிற்சங்கங்கள் மற்றும் எதிர்க்கட்சிகளின் உதவியுடன் ஒரு புதிய அரசாங்கம் விரைவில் பெருவணிக ஆதரவு மற்றும் வாஷிங்டன் சார்பு ரணில் விக்கிரமசிங்கவின் கீழ் நிறுவப்பட்டது. அது சர்வதேச நாணய நிதியத்தின் கொடூரமான சிக்கன நடவடிக்கைகளை தினித்த அதே வேளை, தொழிலாள வர்க்கத்துடன் ஒரு வன்முறை மோதலுக்கான தயாரிப்பில் அரசின் அடக்குமுறை சக்திகளைக் கட்டியெழுப்பியுள்ளது.

இதேபோன்ற விளைவைத் தடுக்கவேண்டுமெனில், பங்களாதேஷ் தொழிலாளர்களும் மாணவர்களும் லியோன் ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சியின் வேலைத்திட்டத்தின் அடிப்படையில் ஒரு புதிய பாடத்திட்டத்தை உருவாக்கி கற்றுக்கொள்ள வேண்டும். நிரதந்தரப் புரட்சியே அக்டோபர் 1917 ரஷ்யப் புரட்சிக்கு உருவகம் கொடுத்தது. அதுமட்டுமன்றி அக்டோபர் புரட்சி ஸ்ராலினிசத்தால் சீரழிக்கப்பட்டதற்கு எதிரான போராட்டத்தை உயிர்ப்பித்ததும் நிரந்தரப் புரட்சிக் கோட்பாடே ஆகும். பங்களாதேஷில் உள்ள தொழிலாள வர்க்கம், முழு அரசியல் ஸ்தாபனத்திற்கும் மற்றும் ஆளும் வர்க்கத்தின் அனைத்து பிரிவுகளுக்கும் மற்றும் அதன் அரசு எந்திரத்திற்கும் எதிராக, ஒரு சுயாதீனமான அரசியல் சக்தியாக தன்னை உருவாக்கிக் கொள்ள வேண்டும். பொருளாதார வாழ்வை சோசலிச முறையில் மறுசீரமைப்பு செய்வதற்கு அர்ப்பணித்துக்கொண்ட தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்தை ஸ்தாபிப்பதற்கான போராட்டத்தில் கிராமப்புற உழைப்பாளிகளை அதன் பின்னால் அணிதிரட்டிக்கொள்வதோடு ஏகாதிபத்தியம் மற்றும் பூகோள மூலதனத்திற்கு எதிராக சர்வதேச தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Loading