நேட்டோவின் பிரதான யுத்த டாங்கிகள் குர்ஸ்க் தாக்குதலில் ரஷ்யாவிற்குள் செயல்பட்டு வருகின்றன

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

வியாழனன்று பிரிட்டிஷ் சேலஞ்சர் 2 முக்கிய போர் டாங்கிகள் ரஷ்யாவின் குர்ஸ்க் பிராந்தியத்திற்கு எதிரான நேட்டோ-உக்ரேனிய தாக்குதலின் ஒரு பகுதியாக ரஷ்யாவிற்குள் நிலைநிறுத்தப்பட்டுள்ளன என்று ஸ்கை நியூஸ் தெரிவித்துள்ளது.

சேலஞ்சர் 2 முக்கிய யுத்த டாங்கிகள் உக்ரேனிய கொடியை பறக்கவிட்டுள்ளன

அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஜேர்மனி ஆகியவை உக்ரேனுக்கு நூற்றுக்கணக்கான ஆப்ராம்ஸ், சேலஞ்சர் 2 மற்றும் லியோபார்ட் 2 முக்கிய யுத்த டாங்கிகளை வழங்கியுள்ளன. ஆனால், ஸ்கை நியூஸின் அறிக்கை, இந்த டாங்கிகள் ரஷ்ய எல்லைக்குள் உக்ரேனிய துருப்புக்களால் பயன்படுத்தப்பட்டுள்ளன என்பதை உறுதிப்படுத்தும் முதல் செய்தியாகும்.

ஆகஸ்ட் 6ம் தேதி, ஆயிரக்கணக்கான உக்ரேனிய துருப்புக்கள் ரஷ்ய எல்லைப் பகுதியான குர்ஸ்க் மீது குவியத் தொடங்கின. இதையொட்டி மாநிலத்திலும் அதைச் சுற்றியுள்ள பிராந்தியங்களிலும் இருந்து 120,000 மக்கள் வெளியேற்றப்பட்டனர்.

சமீபத்திய நாட்களில், உக்ரேனிய துருப்புக்கள் பெல்கரோட் பிராந்தியத்தில் தாக்குதல்களை நடத்தின, அங்கும் மக்கள் வெளியேற்றங்கள் நடந்துள்ளன.

கடந்த வியாழனன்று, உக்ரேனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி, ஐரோப்பாவிற்கு ரஷ்ய இயற்கை எரிவாயுவை வழங்குவதற்கான முக்கிய குழாய் உள்கட்டமைப்பின் தாயகமான ரஷ்ய நகரமான சுட்ஜாவின் முழு கட்டுப்பாட்டையும் உக்ரேனிய படைகள் எடுத்துக் கொண்டதாக கூறினார்.

எல்லையிலிருந்து ஆறு மைல் தொலைவில் உள்ள இந்த நகரம், உக்ரேன் அதன் 10 நாள் தாக்குதலில் கைப்பற்றியதாகக் கூறும் 80 குடியிருப்புகளில் ஒன்றாகும்.

100க்கும் மேற்பட்ட ரஷ்ய போர்க் கைதிகளை உக்ரேன் படையினர் பிடித்துள்ளதாகவும் ஜெலன்ஸ்கி கூறினார்.

புதனன்று உக்ரேனிய ஆயுதப் படைகளின் தலைவரான ஒலெக்சாந்தர் சிர்ஸ்கி, உக்ரேன் இப்பொழுது 1,150 சதுர கிலோமீட்டர் ரஷ்ய நிலப்பரப்பைக் கட்டுப்பாட்டில் கொண்டுள்ளது என்று குறிப்பிட்டார்.

உக்ரேனிய தாக்குதலை நிறுத்தும் முயற்சியில் ரஷ்யா டான்பாஸ் பிராந்தியத்தில் இருந்து ஆயிரக்கணக்கான துருப்புக்களை திருப்பிவிட்டுள்ளதாக வியாழனன்று CNN தெரிவித்துள்ளது.

இதுவரையில் ஒரு நேட்டோ அதிகாரியின் மிக விரிவான கருத்துரையாக, வியாழனன்று நேட்டோவின் உயர்மட்ட இராணுவ தளபதி ஜெனரல் கிறிஸ்தோபர் கவோலி கூறுகையில், 'அது நன்றாக சென்று கொண்டிருப்பதாக தோன்றுகிறது என்று கூறுவது போதுமானது... அவர்கள் ரஷ்யர்களின் நிலைகளிலுள்ள பலவீனமான ஒரு பகுதியைக் கண்டனர், அவர்கள் அதை விரைவாக சுரண்டிக் கொண்டனர், அதை மிகவும் திறமையாக சுரண்டிக் கொண்டனர்' என்று குறிப்பிட்டார்.

அமெரிக்க குடியரசுக் கட்சியின் போர்க் கழுகான லிண்ட்சே கிரஹாமும் இதேபோல் இத்தாக்குதலைப் பாராட்டி, 'இது 'தைரியமானது, புத்திசாலித்தனமானது மற்றும் அழகானது. இப்படியே செயற்படுத்துங்கள்' என்று கூறிய அவர், 'இதை ஆரம்பித்து வைத்த புட்டினை அடித்து நொறுக்குங்கள்' என்று கூறினார்.

ரஷ்யாவைத் தாக்குவதற்கான உக்ரேனின் திட்டங்கள் குறித்து நேட்டோவுக்கு தெரிவிக்கப்படவில்லை என்று அமெரிக்க மற்றும் நேட்டோ அதிகாரிகளும் அவர்களின் ஊடக பிரச்சாரகர்களும் ஆரம்பத்தில் கூறினாலும், இந்த கூற்றைத் தக்கவைத்துக்கொள்வது மிகவும் கடினமாகி வருகிறது.

கடந்த வியாழனன்று பிரசுரிக்கப்பட்ட ஒரு கட்டுரையில், நியூ யோர்க் டைம்ஸ் 'அமெரிக்க உளவுத்துறை முகமைகள், கடந்த ஆண்டு வெளிப்படுத்தியதைப் போல, ஓராண்டுக்கும் மேலாக எல்லை தாண்டி தாக்குதல் நடத்துவதற்கான உக்ரேனின் அபிலாஷை குறித்து அறிந்திருந்தன' என்று எழுதியது.

மேலும், 'உண்மையில், பைடென் நிர்வாகத்தின் சமீபத்திய கொள்கை மாற்றங்கள் இந்த நடவடிக்கையை சாத்தியமாக்கின. அவரது ஆலோசகர்கள் மற்றும் முக்கிய கூட்டாளிகளின் அழுத்தத்தின் கீழ், திரு பைடென் மே மாத பிற்பகுதியில் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்களைக் கொண்டு ரஷ்யாவிற்குள் மட்டுப்படுத்தப்பட்ட தாக்குதல்களை நடத்த உக்ரேனுக்கு அங்கீகாரம் அளித்தார். இது உக்ரேனுக்கான போரில் ஒரு புதிய அத்தியாயத்தைத் திறக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது' என்று அது எழுதியது.

'ஒரு அணுஆயுதமேந்திய எதிரியின் எல்லைகளுக்குள் பீரங்கிகள், ஏவுகணை தளங்கள் மற்றும் கட்டளை மையங்கள் மீது ஒரு அமெரிக்க ஜனாதிபதி மட்டுப்படுத்தப்பட்ட இராணுவ பதலிடி தாக்குதலை அனுமதித்தது இதுவே முதல் தடவையாக திரு. பைடெனின் முடிவாக தோன்றுகிறது' என்று டைம்ஸ் மேலும் சேர்த்துக் கொண்டது.

டைம்ஸ் கட்டுரை சுட்டிக்காட்டுவதைப் போல, குர்ஸ்க் மீதான உக்ரேனின் தாக்குதல், உக்ரேனுக்கு நீண்டதூர ஏவுகணைகளை வழங்கியதன் மூலமும், ரஷ்யாவிற்குள் நேரடியாக தாக்குவதற்கு நேட்டோ வழங்கிய இராணுவ தளவாடங்களைப் பயன்படுத்த அங்கீகாரம் வழங்கியதன் மூலமும் போரில் அமெரிக்க-நேட்டோவின் நேரடி ஈடுபாட்டில் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்தைப் பின்தொடர்கிறது.

நேட்டோ இராணுவக் கூட்டணியின் கட்டுப்பாட்டின் கீழ் உக்ரேனிய துருப்புக்களுக்கு ஆயுத தளவாட ஏற்பாடுகள் மற்றும் பயிற்சியை ஏற்பாடு செய்திருந்த வாஷிங்டனில் இடம்பெற்ற நேட்டோ உச்சிமாநாட்டிற்கு ஒரு மாதத்திற்குப் பின்னர் இத்தாக்குதல் வந்துள்ளது.

இப்போது, இந்த மாதம் போர் முன்னரங்கில் எப்-16 போர் விமானங்களின் வருகையுடன் நேட்டோ போரில் அதன் நேரடி ஈடுபாட்டை மேலும் விரிவுபடுத்தி வருகிறது. வியாழனன்று, வெள்ளை மாளிகை உக்ரேனுக்கு JASSM நீண்ட தூர வானிலிருந்து-ஏவப்படும் விமான ஏவுகணைகளை அனுப்புவதற்கான மிக முன்னேறிய திட்டங்களை உருவாக்கி வருவதாக பொலிடிகோ அறிவித்தது. இது உக்ரேன் மீது பறக்கும் எஃப்-16 போர் விமானங்களுக்கு ரஷ்ய நிலைகளுக்கு நூற்றுக்கணக்கான மைல்கள் பின்னால் இருந்து தாக்கும் திறனை வழங்கும்.

இதற்கு விடையிறுப்பாக, பிரதான அமெரிக்க மற்றும் ஐரோப்பிய வெளியீடுகள் இன்னும் நேரடியான நேட்டோ விரிவாக்கத்தைக் கோருகின்றன. தி எகனாமிஸ்ட் ஒரு தலையங்கத்தில், உக்ரேனில் நேட்டோ ஆயுதங்களைப் பயன்படுத்துவதில் எஞ்சியிருக்கும் கட்டுப்பாடுகள் நீக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தது.

... போர் விரிவாக்கத்தின் ஆபத்தை மிகைப்படுத்தப்படக்கூடாது. உக்ரேனிய நகரங்களை அழிக்கவும், அதன் சிப்பாய்களைக் கொல்லவும் ஜெட் விமானங்கள் கிளைட் குண்டுகளை வழங்கும் ரஷ்ய விமானத் தளங்களைத் தாக்க உக்ரேனுக்கு அனுமதி இல்லை என்பது விபரீதமானது. உக்ரேனின் எல்லைகளை அப்பட்டமாகவும் குற்றமாகவும் மீறும் ரஷ்யப் படைகள் தங்கள் சொந்த எல்லைகளுக்குப் பின்னால் எந்த அடைக்கலத்தையும் எதிர்பார்க்கக்கூடாது” என்று அது குறிப்பிட்டது.

இதற்கிடையில், வாஷிங்டன் போஸ்ட், வியாழனன்று பிரசுரித்த ஒரு தலையங்க கட்டுரையில், 'அமெரிக்காவும் ஐரோப்பாவும் உக்ரேனுக்கு பலம் வாய்ந்த நிலையில் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு சாத்தியமான அனைத்து வழிகளையும் வழங்க வேண்டும் என்றும் அது மேற்குலகுடன் இணைந்த செழிப்பான ஜனநாயகமாக செயல்பட வேண்டும்' என்றும் கோரிக்கை விடுத்தது.

ரஷ்ய எல்லைக்குள் நேட்டோ வழங்கிய டாங்கிகளைப் பயன்படுத்துவதை அங்கீகரிப்பதில், உக்ரேனின் ஏகாதிபத்திய ஆதரவாளர்களின் இன்றியமையாத சூறையாடும் போர் நோக்கங்கள் அம்பலப்பட்டு வருகின்றன. ரஷ்யாவை இராணுவரீதியில் தோற்கடித்து, அதன் அரசாங்கத்தைத் தூக்கியெறிந்து நாட்டை உடைக்கும் நோக்கத்துக்காகவே, நேட்டோ சக்திகள் உக்ரேன் மீதான 2022 ரஷ்ய படையெடுப்பைத் தூண்டின. இப்போது, ஒரு 'தற்காப்பு' போரைத் தொடுத்து வருவதாக கூறும் நேட்டோவின் கூற்றுகள் வீழ்ச்சியடைந்து வருவதுடன், ரஷ்யாவிற்குள் ஒரு தாக்குதல் போரைத் தொடுக்க நேட்டோவின் ஆயுதங்கள் நேரடியாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

Loading