முன்னோக்கு

ட்ரம்பும், குடியரசுக் கட்சியினரும் வாக்களிப்பதைத் தடுக்கவும், தேர்தலைக் கவிழ்க்கவும் வெளிப்படையாக சதி செய்து வருகிறார்கள்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம். 

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னும் இரண்டு மாதங்களே இருக்கின்றன. முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும், அவரது குடியரசுக் கட்சியின் சக-சதிகாரர்களும், 2020 ஜனாதிபதித் தேர்தலைக் கவிழ்க்கும் நோக்கில் ஒரு வன்முறை கிளர்ச்சியை நடத்தி மூன்று ஆண்டுகளுக்கும் அதிகமான காலத்திற்குப் பின்னரும், இந்த ஆட்சிக்கவிழ்ப்பு சதிக்கு இட்டுச் சென்ற அனைத்து நிலைமைகளும் அப்படியே இருப்பது மட்டுமல்ல, மாறாக அவை உருமாற்றம் அடைந்தும் வருகின்றன.

குடியரசுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரான முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், மிச்சிகனில் உள்ள பாட்டர்வில்லில் உள்ள ஆல்ரோ ஸ்டீலில் (Alro Steel) வியாழக்கிழமை, ஆகஸ்ட் 29, 2024 அன்று ஒரு பிரச்சார நிகழ்வின் போது பேசுகிறார். [AP Photo/Alex Brandon]

2024 தேர்தல்களின் முடிவுகளை நிராகரிப்பதற்கான அடித்தளத்தை அமைத்து, ட்ரம்பும் குடியரசுக் கட்சியினரும் நவ-நாஜி “மாபெரும் மாற்றுக் கோட்பாட்டை” அடிப்படையாகக் கொண்ட தேர்தல் மறுப்புவாதம் மற்றும் புலம்பெயர்ந்தோர்-விரோத கிளர்ச்சி ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் பிரச்சாரத்தில் குதித்துள்ளனர். பைடென் மற்றும் ஹாரிஸின் “திறந்த எல்லைக்” கொள்கைகள் என்று கூறப்படுவதன் காரணமாக, மில்லியன் கணக்கான “சட்டவிரோத அன்னியர்” மற்றும் “குடிமக்கள் அல்லாதவர்கள்” வரவிருக்கும் தேர்தல்களில் வாக்களிப்பார்கள் என்று ட்ரம்பும் குடியரசுக் கட்சியினரும் கூறி வருகின்றனர். மேலும், தேர்தல் முடிவுகளை ஏற்றுக்கொள்வார் எனக் கூறுவதற்கு, ட்ரம்ப் பலமுறை மறுத்து வருகிறார்.

குடியரசுக் கட்சியின் தேசிய குழுவும் ட்ரம்ப்புடன் இணைந்த பிற குழுக்களும் வாக்குகளை ஒடுக்கும் நோக்கில் “போர்க்கள” மாநிலங்களில் தொடர்ச்சியான வழக்குகளைத் தாக்கல் செய்யத் தொடங்கியுள்ளன.

  • வடக்கு கரோலினாவில், RNC (குடியரசுக் கட்சியின் தேசியக் குழு) மற்றும் வட கரோலினாவின் GOP (குடியரசுக் கட்சி) ஆகியவை கடந்த சில வாரங்களில், வாக்காளர் பட்டியலில் இருந்து “குடிமக்கள் அல்லாதவர்களை” நீக்கத் தவறியதாகக் கூறி மாநிலத் தேர்தல் வாரியத்தின் மீது ஏற்கனவே இரண்டு முறை வழக்குத் தொடுத்துள்ளன. வாக்காளர் பட்டியலில் இருந்து 225,000 பேரை நீக்கி, நவம்பரில் தற்காலிக வாக்குச் சீட்டுகளை அளிக்க அவர்களை கட்டாயப்படுத்துமாறு குடியரசுக் கட்சியினர் தேர்தல் வாரியத்தை கேட்டுக் கொண்டுள்ளனர்.

  • அரிசோனாவில், வாஷிங்டன், டி.சி-யை தளமாகக் கொண்ட, டிரம்பின் பாசிச ஆலோசகர் ஸ்டீபன் மில்லர் தலைமையிலான அமெரிக்கா பெர்ஸ்ட் லீகல் (America First Legal-AFL) என்ற சட்ட நிறுவனம், குடிமக்கள் அல்லாத வாக்காளர் பட்டியலை அகற்றத் தவறியதற்காக மாநிலத்தில் உள்ள அனைத்து 15 மாவட்டங்களையும் இலக்கு வைத்து வழக்குப் பதிவு செய்துள்ளது. மில்லரின் குழு முதலில் 4.5 மில்லியனுக்கும் அதிகமான மக்களைக் கொண்ட அமெரிக்காவின் நான்காவது பெரிய மாவட்டமான மாரிகோபா மாவட்டம் (Maricopa County) மீது மட்டுமே வழக்குத் தொடர்ந்தது. புதன்கிழமை வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில், மில்லர் கூறுகையில், “சட்டவிரோத வெளிநாட்டினர் மற்றும் குடிமக்கள் அல்லாதவர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க மறுத்ததற்காக அரிசோனாவில் உள்ள 14 கூடுதல் மாவட்டங்கள் மீது நாங்கள் இப்போது வழக்குத் தொடுத்துள்ளோம்” என்று கூறினார்.

டெக்சாஸ், டென்னசி, வேர்ஜீனியா மற்றும் அலபாமா உட்பட பல குடியரசுக் கட்சி தலைமையிலான மாநிலங்கள், 2021 முதல் ஆயிரக்கணக்கான வாக்காளர்களை அல்லது டெக்சாஸைப் பொறுத்தவரை, 1.1 மில்லியன் வாக்காளர்களை பதிவுப் பட்டியலில் இருந்து நீக்கியதாக சமீபத்திய வாரங்களில் பெருமையடித்துக் கொண்டன. இவர்களில் பலர் மாநிலத்தை விட்டு வெளியேறுவது அல்லது இறப்பது போன்ற நியாயமான காரணங்களுக்காக நீக்கப்பட்டிருக்கலாம் என்றாலும், மற்றவர்கள் சமீபத்தில் வாக்களிக்காத அல்லது காகித வேலைகளில் பிழைகள் இருந்த சட்டப்பூர்வ வாக்காளர்களாக இருந்தாலும் அகற்றப்படுகிறார்கள்.

ஆயினும்கூட, குடியரசுக் கட்சியினர் கிட்டத்தட்ட எல்லா நிகழ்வுகளையும் “சட்டவிரோத அன்னியர்களின்” தீங்கிழைக்கும் செயல்களுக்கு எடுத்துக்காட்டுகளாக முன்வைக்கின்றனர். இருப்பினும், உண்மையில் மாநிலத்தில் அளிக்கப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கையை விரல் விட்டு கணக்கிட முடியும்.

வாக்குகளை நசுக்குவதற்கான முயற்சிகள் வாக்காளர் பட்டியலை களையெடுப்பதையும் தாண்டி விரிவடைகின்றன. கடந்த மாதம் டெக்சாஸில், அட்டார்னி ஜெனரல் கென் பாக்ஸ்டன் (Ken Paxton) மூன்று மாவட்டங்களில் உள்ள பிரச்சார தொழிலாளர்கள் மற்றும் ஜனநாயகக் கட்சி அரசியல்வாதிகளின் வீடுகளை இலக்கு வைத்து கெஸ்டாபோ பாணியிலான தொடர்ச்சியான சோதனைகளுக்கு கையெழுத்திட்டார். சட்டவிரோத வாக்காளர் பதிவு நடவடிக்கைகள் பற்றி பாக்ஸ்டன் கூறினாலும், இக்கட்டுரை எழுதப்படும் வரை குற்றச்சாட்டுக்கள் ஏதும் பதிவு செய்யப்படவில்லை. சோதனையில் இலக்கு வைக்கப்பட்ட நான்கு இலத்தீன் அமெரிக்கா பெண்களின் தொலைபேசிகள் மற்றும் மடிக் கணினிகளை போலீஸ் முகவர்கள் பறிமுதல் செய்வதை இது தடுக்கவில்லை. இந்தப் பெண்களில் மூன்று பேர் 70 வயதைக் கடந்தவர்கள், மற்றொருவர் 87 வயதான ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியை ஆவர்.

2020 இல் வாக்குப்பதிவை முறியடிக்க ட்ரம்ப் அவரது மிகவும் ஆக்ரோஷமான பிரச்சாரத்தைத் தொடங்கிய மாநிலங்களில் ஒன்றான ஜோர்ஜியாவில், கடந்த மாதம் குடியரசுக் கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள மாநில தேர்தல் வாரியம் 3-2 என்ற வாக்கு வித்தியாசத்தில் விதிகளை ஏற்றுக்கொண்டது. இது உள்ளூர் தேர்தல் அதிகாரிகள் வாக்காளர் மோசடி என்று கூறப்படுவது குறித்து “நியாயமான விசாரணைகளை” நடத்தவும், முடிவுகளை சான்றளிப்பதற்கு முன்னதாக “தேர்தல்களை நடத்தும் போது உருவாக்கப்பட்ட அனைத்து தேர்தல் தொடர்பான ஆவணங்களையும்” ஆய்வு செய்யவும் அனுமதிக்கிறது.

100 ஆண்டுகளுக்கும் மேலாக, உள்ளாட்சித் தேர்தல் அதிகாரிகளால் தேர்தல் முடிவுகளுக்கு சான்றளிப்பது ஒரு “அமைச்சரவைக் கடமையாக” இருந்து வருகிறது. இது சுயாதீனமான பாத்திரம் இல்லாத கட்சி சார்பற்ற அதிகாரிகளால் செய்யப்படுகிறது. அவர்களின் நோக்கம் வெறுமனே பூர்த்தி செய்யப்பட்ட மொத்த வாக்குகளைப் பதிவு செய்வதாகும்.

ஜோர்ஜியாவில் புதிய விதிகள் அமெரிக்க தேர்தல் அமைப்புமுறையின் “நேர்மையை” உறுதிப்படுத்துவதற்காக நடைமுறைப்படுத்தப்படவில்லை. மாறாக, அதிகாரத்திற்கு திரும்புவதற்கான ட்ரம்பின் முயற்சிகளுக்கு உதவும் பொருட்டு தேர்தல் முடிவுகளின் முடிவை ஒடுக்குவதற்கும் தாமதப்படுத்துவதற்கும் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. ஜோர்ஜியாவில் இந்த விதி தேர்தல் ஒழுங்கு வலையமைப்பின் (Election Integrity Network - EIN) பிராந்திய இயக்குனரும் ஃபுல்டன் (Fulton) மாவட்ட தேர்தல் வாரிய உறுப்பினருமான ஜூலி ஆடம்ஸ் (Julie Adams) ஆல் முன்னெடுக்கப்பட்டது. ட்ரம்ப் பிரச்சாரத்தின் சட்டப்பூர்வ போர்க்குழுவின் அங்கமான அமெரிக்கா முதல் கொள்கை நிறுவனத்தின் (America First Policy Institute) ஆதரவுடன், இந்தாண்டு மட்டும் ஜோர்ஜியாவில் இரண்டு முறை தேர்தல் முடிவுகளுக்கு சான்றளிக்க அவர் ஏற்கனவே மறுத்துவிட்டார்.

குடியரசுக் கட்சியின் ஒரு நீண்டகால செயல்பாட்டாளரும் பரம-பிற்போக்குத்தனமான உச்ச நீதிமன்ற நீதிபதி கிளாரன்ஸ் தோமஸின் (Clarence Thomas) மனைவியான வேர்ஜீனியா “ஜின்னி” தோமஸின் (Ginni Thomas) “மிக நெருங்கிய நண்பர்” கிளெட்டா மிட்செல்தான் (Cleta Mitchell) தேர்தல் ஒழுங்கு வலையமைப்பின் தலைவராக உள்ளார். நவம்பர் 2020 தேர்தலுக்கு முன்னும் பின்னும், மிட்செல், ஜின்னி தாமஸ் மற்றும் டிரம்பின் வழக்கறிஞர் ஜான் ஈஸ்ட்மேன் (John Eastman ஆகியோருடன் இணைந்து ஜனாதிபதித் தேர்தல்களுக்கு வாக்காளர்களை அல்ல, மாநில சட்டமன்றங்களே வாக்காளர்களைத் தேர்வு செய்கிறார்கள் என்ற சர்வாதிகார சட்டக் கோட்பாட்டை ஊக்குவிக்க பணியாற்றினார்.

ட்ரம்பின் 2020 தோல்வியைத் தொடர்ந்து, வேர்ஜீனியா தோமஸ் விஸ்கான்சின் மற்றும் அரிசோனா போன்ற “போர்க்கள” மாநிலங்களில் உள்ள குடியரசுக் கட்சியினருக்கு மின்னஞ்சல்களை அனுப்பி, வெகுஜன வாக்குகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட வாக்காளர்களை தூக்கி எறிந்து, அதற்கு பதிலாக, ட்ரம்ப் ஆதரவு வாக்காளர்களின் சொந்த பட்டியலை நிறுவுமாறு கேட்டுக் கொண்டார்.

வாக்களிப்பை ஒடுக்குவதற்கு ட்ரம்ப் மற்றும் குடியரசுக் கட்சியினரின் முயற்சிகள், நிதிய தன்னலக்குழுவின் பிரிவுகளின் குறிப்பிடத்தக்க நிதி ஆதரவுடன் மேற்கொள்ளப்படுகின்றன. அவர்கள், அமெரிக்காவில் அதிகரித்து வரும் வர்க்க விரோதங்களை எதிர்கொண்டு, ஒரு பாசிச இயக்கத்தைக் கட்டியெழுப்ப ட்ரம்பின் முயற்சிகளை ஊக்குவித்து வருகின்றனர்.

சர்வாதிகாரத்திற்கான இரண்டாவது முயற்சியை மேற்கொள்ள ட்ரம்ப் சுதந்திரமாக இருக்கிறார் என்பது முற்றிலும் ஜனாதிபதி ஜோ பைடன், துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் மற்றும் ஜனநாயகக் கட்சியினரின் பொறுப்பாகும். ரஷ்யாவுக்கு எதிரான அமெரிக்க-நேட்டோ போர், காஸாவில் இனப்படுகொலை மற்றும் சீனாவுடன் அபிவிருத்தி அடைந்து வரும் மோதல் உட்பட போரைத் தீவிரப்படுத்துவதே ஜனநாயகக் கட்சியின் மத்திய முன்னுரிமையாக உள்ளது.

ஜனநாயகக் கட்சியினர் அவர்களின் கூட்டு போர் திட்டநிரலை முன்னெடுப்பதற்காக, தங்கள் “குடியரசுக் கட்சி சகாக்களுடன் இணைந்து” பாரிய இராணுவ வரவு செலவுத் திட்டங்களை நிறைவேற்றியுள்ளனர். இதற்கு, சமூகச் செலவினங்களை வெட்டிக் குறைத்தும், தொழிலாளர்களை வறுமைக்குள் தள்ளியும், சமூகக் குறைகளை எரியூட்டியும், டிரம்ப் மற்றும் தீவிர வலதுசாரிகள் முக்கியமாக ஆழமடைந்துவரும் சமூக நெருக்கடிக்கு, புலம்பெயர்ந்தோரை பலிகடா ஆக்குவதன் மூலம் சுரண்டி வருகின்றனர். மேலும், தேசியவாதத்தைப் பயன்படுத்தி தொழிலாள வர்க்கத்தை “பிளவுபடுத்தி வெற்றி கொள்வதற்கு”, குடியரசுக் கட்சியினருடன் ஜனநாயகக் கட்சியினர் மற்றும் பெருநிறுவன தொழிற்சங்கங்கள் இணைந்துள்ளனர்.

ட்ரம்பின் கீழ் குடியரசுக் கட்சியினர் இரண்டாவது ஆட்சிக்கவிழ்ப்பு சதித்திட்டம் தீட்டி வருகின்ற நிலையில், ஈராக்கிற்கு எதிரான போரின் முன்னணி சிற்பியான முன்னாள் துணை ஜனாதிபதி டிக் செனியின் (Dick Cheney) மகள் குடியரசுக் கட்சியின் லிஸ் செனி (Liz Cheney) ஹாரிஸுக்கு ஒப்புதல் அளித்ததை ஜனநாயகக் கட்சியினர் பாராட்டி வருகின்றனர்.

ட்ரம்ப் மீண்டும் அதிகாரத்திற்கு வருவதற்கான ஆபத்தை குறைத்து மதிப்பிட ஹாரிஸும் ஜனநாயகக் கட்சியினரும் தங்களால் முடிந்த அனைத்தையும் செய்து வருகின்றனர். கடந்த மாதம் இடம்பெற்ற ஜனநாயகக் கட்சியின் தேசிய காங்கிரசில், ட்ரம்ப் தோற்றால் “இரத்தக்களரிக்கு” தயார் செய்து வருகிறார் என்றும், அவர் வெள்ளை மாளிகைக்குத் திரும்பினால் “முதல் நாளில் ஒரு சர்வாதிகாரியாக” இருப்பார் என்றும் பைடென் கூறியதை ஜனநாயகக் கட்சியினரும் ஊடகங்களும் முற்றிலும் புறக்கணித்துள்ளனர்.

ஹாரிஸும் அவரது துணை வேட்பாளரான மினசோட்டா ஆளுநர் டிம் வால்ஸும் குடியரசுக் கட்சியினரை வெறுமனே “விசித்திரமானவர்கள்” என்று குணாம்சப்படுத்துகின்றனர். அதேவேளையில், ட்ரம்பையும் அதிவலதுகளையும் பலப்படுத்தும் நிகழ்முறையில், ட்ரம்பின் புலம்பெயர்ந்தோர்-விரோத கொள்கைகளை நடைமுறைப்படுத்த, இணைந்து செயல்படவும் அவர்கள் சூளுரைக்கின்றனர்.

பைடெனின் அறிக்கைகளுக்கு விடையிறுக்காதது குறித்து கருத்துரைக்கையில், உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவரான டேவிட் நோர்த், ஆகஸ்ட் 25 அன்று துருக்கியின் புயுக்கடா இல் லியோன் ட்ரொட்ஸ்கியின் படைப்புகளின் இரண்டாவது சர்வதேச நினைவு தின நிகழ்ச்சி உரையில் பின்வருமாறு தெரிவித்தார்:

இந்த மௌனம் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதில் அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் அலட்சியத்தை வெளிப்படுத்துகிறது. உண்மையில், அமெரிக்காவில் ஆளும் தன்னலக்குழுக்களுக்குள் ஒருமித்த கருத்து வளர்ந்து வருகிறது, ஆனால் அங்கு மட்டுமல்ல, உண்மையில், உலகெங்கிலும் உள்ள நாடுகளில், உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும், அவர்களின் நலன்கள் ஜனநாயகத்துடன் பொருந்தாது என்று ஒருமித்த கருத்து வளர்ந்து வருகிறது. சமூக சமத்துவமின்மையின் மலைப்பூட்டும் நிலை, வளர்ந்து வரும் மக்களின் கோபத்தைத் தூண்டுகிறது என்பதையும், ஏகாதிபத்திய இராணுவவாதத்திற்கு தேவைப்படும் வாழ்க்கை நிலைமைகள் மீதான தாக்குதல்கள் வர்க்க மோதலின் மிகப்பெரிய விரிவாக்கத்திற்கு வழிவகுக்கும் என்பதையும் ஆளும் உயரடுக்குகள் முழுமையாக அறிந்திருக்கின்றன. ஆளும் வர்க்கம் பாசிசத்திற்கு திரும்புவது என்பது, தொழிலாள வர்க்கத்தின் அரசியல் தீவிரமயமாக்கலையும், சோசலிசத்தை நோக்கி அது திரும்புவதையும் வன்முறையைக் கொண்டு முன்கூட்டியே தடுத்து ஒடுக்குவதற்கான ஒரு முயற்சியாகும்.

ட்ரம்ப் மற்றும் குடியரசுக் கட்சியால் முன்னிறுத்தப்படும் ஆபத்து மிகவும் உண்மையானது. எவ்வாறிருப்பினும், ஜனநாயக ஆட்சி வடிவங்களைப் பாதுகாப்பதற்கு ஆளும் வர்க்கத்திற்குள் எந்த குறிப்பிடத்தக்க பகுதியும் இல்லை.

ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் விரிவாக்குவதற்கும், பெருநிறுவன மற்றும் நிதியியல் செல்வந்த தட்டுக்களின் இரண்டு கட்சிகளான ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சி இரண்டிற்கும் எதிராக தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவது அவசியமாகும். சர்வாதிகாரம் என்பது சோசலிசத்தின் அச்சுறுத்தலுக்கு ஆளும் வர்க்கத்தின் விடையிறுப்பாகும். சோசலிசத்திற்கான போராட்டமானது, ஆளும் உயரடுக்குகள் சர்வாதிகாரத்தை நோக்கித் திரும்புவதற்கு தொழிலாள வர்க்கத்தின் விடையிறுப்பாக இருக்க வேண்டும்.

Loading