பிரான்சில் மக்ரோன் அதி-வலதுசாரி அரசாங்கத்தை நியமித்ததை வெகுஜனப் போராட்டங்கள் எதிர்க்கின்றன

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

நவ-பாசிசவாத தேசிய பேரணியின்(RN) ஆதரவிலான ஒரு வலதுசாரி அரசாங்கத்தின் தலைவராக மிஷேல் பார்னியரை மக்ரோன் நியமித்ததற்கு எதிராக, சனிக்கிழமையன்று நூறாயிரக் கணக்கானவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். பாரிசில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பேரணி நடத்தினர். ஜூலை 7 தேர்தல்களில் வெற்றி பெற்ற புதிய மக்கள் முன்னணியின் (NFP) பிரதான சக்தியான ஜோன்-லூக் மெலோன்சோனின் அடிபணியா பிரான்ஸ் (LFI) கட்சியானது இந்த ஆர்ப்பாட்டங்களுக்கு அழைப்பு விடுத்திருந்தது.

ஒரு வலதுசாரி பிரெஞ்சு அரசாங்கம் நிறுவப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் ஒரு பதாகையில் “மக்ரோனின் ஆட்சிக்கவிழ்ப்புச் சதியை நிறுத்து!” என்று குறிப்பிடுகிறது.

உலக சோசலிச வலைத் தள நிருபர்கள் இந்த ஆர்ப்பாட்டப் போராட்டத்தில் தலையீடு செய்தனர், இது நாஜி-ஒத்துழைப்புவாத விச்சி ஆட்சிக்குப் பின்னர், அதிவலது ஆதரவை பகிரங்கமாக சார்ந்திருந்த பிரான்சின் முதல் தேசிய அரசாங்கம் அமைப்பதற்கு இளைஞர்கள் மற்றும் தொழிலாளர்கள் மத்தியில் எழுந்த எதிர்ப்பைப் பிரதிபலித்தது. மக்ரோன்-பார்னியேர் அரசாங்கம், ரஷ்யாவுக்கு எதிராக உக்ரேனுக்கு துருப்புகளை அனுப்பவும் காஸாவில் இஸ்ரேலிய இனப்படுகொலையை ஆதரிக்கவும் தயாரிப்பு செய்து வருகின்ற நிலையில், புலம்பெயர்ந்தவர்கள் மீதான தாக்குதல்களைத் தீவிரப்படுத்துதல், கூடுதல் ஓய்வூதிய வெட்டுக்கள் உட்பட சிக்கன நடவடிக்கைகள், மற்றும் நேட்டோவுக்கான ஆதரவு ஆகியவற்றின் ஒரு பாசிசவாத வேலைத்திட்டத்தை வகுத்துள்ளது.

ஆர்ப்பாட்டக்காரர்கள் பெரும்பாலும் LFI ஆதரவாளர்களாக இருந்தபோதிலும், அவர்கள் மெலோன்சோனையும் விமர்சித்தனர். அவர் சமூக ஜனநாயகக் கட்சியினர், பசுமைக் கட்சியினர் மற்றும் ஸ்ராலினிஸ்டுகளுடன் NFP இன் கூட்டணியையும், அதன்பின் ஜூலை 7 தேர்தல்களில் மக்ரோனுடன் ஒரு தேர்தல் கூட்டணியையும் உருவாக்கினார், இது RN ஐ தடுப்பதற்காக என்று கூறப்பட்டது. இந்த உத்தியானது முற்றிலும் தவறானது என்று நிரூபணமானது. RN உடனான இரகசிய பேச்சுவார்த்தைகள் உட்பட ஏழு மாத கால பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர், மக்ரோன் தேர்தல் முடிவுகளை காலில் போட்டு மிதித்து, ஒரு NFP பிரதம மந்திரியின் பெயரைக் குறிப்பிட மறுத்து, அதற்கு பதிலாக RN-ஆதரவிலான ஒரு அரசாங்கத்தை பெயரிட்டார்.

பாரிசில் உள்ள ஒரு மாணவரான ஜோர்டி, உலக சோசலிச வலைத் தளத்திடம் கூறுகையில், “சில பிரச்சினைகளில் மக்களிடையே பலமான எதிர்ப்பு உள்ளது என்பதைக் காட்டுவதற்காக” அவர் கலந்து கொண்டதாகத் தெரிவித்தார். அவர் மேலும் கூறினார் “இந்தப் பிரதம மந்திரியைத் தேர்ந்தெடுப்பதற்கான மக்ரோனின் முடிவும் மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களில் சமீபத்திய மாதங்களில் அவர் நடந்து கொண்ட விதமும், பிரான்சில் நாம் முகங்கொடுக்கும் காலநிலை, புவிசார் அரசியல் மற்றும் சமூக அவசரநிலைகளுக்கு பொருத்தமான ஒன்றில் நாம் திருப்தியடையக்கூடிய ஒன்றல்ல.”

ஜோர்டி

காஸாவில் இஸ்ரேலிய ஆட்சியின் இனப்படுகொலையை எதிர்த்து ஆர்ப்பாட்டத்திற்கு  வந்தவர்கள் ஏந்தியிருந்த பாலஸ்தீனிய கொடிகளை சுட்டிக்காட்டி, ஜோர்டி இவ்வாறு கூறினார், “இந்த வடிவங்கள் மீண்டும் மீண்டும் வருவதை நாங்கள் காண்கிறோம். விச்சி ஆட்சியுடன் நாம் ஒப்பிடக்கூடிய விடயங்கள் உள்ளன, அதாவது இரண்டாம் உலகப் போருக்கு முந்தைய ஆண்டுகளை நினைவுகூரக்கூடிய மையக்கருத்துகள், தேசியவாத, தீவிர வலதுசாரி சிந்தனைகள், வித்தியாசமானவர்களை நிராகரிப்பது போன்ற சிந்தனைகள் உள்ளன.”

ரோமண்ட் மற்றும் ஜாஸ்மின், இருவரும் மாணவர்கள், மக்ரோனுடனான கோபத்தையும், NFP பற்றிய அவர்களின் கவலைகளையும் பற்றிப் பேசினர். ரோமாண்ட் கூறினார், “மக்ரோன் அதிவலதுக்கு மிகவும் நெருக்கமான சிந்தனைகளைக் கொண்ட ஒரு வலதுசாரி பிரதமரைத் தேர்ந்தெடுத்தார், அதேசமயம் நாடாளுமன்றத் தேர்தல்களின் போது, அவர் நவ-பாசிசவாதிகளைத் தடுத்து நிறுத்த ஒரு ஜனநாயக முன்னணியில் பங்கெடுப்பதாக பாசாங்கு செய்தார். ஆகவே, எனது பார்வையில், இது மக்ரோனின் தரப்பில் மிக மோசமான பாசாங்குத்தனமாகும்.

மெலோன்சோன் முன்மொழிவதைப் போல, மக்ரோன் மற்றும் முதலாளித்துவ சோசலிஸ்ட் கட்சி உடனான ஒரு கூட்டணி மூலமாக பாசிசத்தை எதிர்த்துப் போராடுவது சாத்தியமா என்று வினவிய போது, ரோமாண்ட் பதிலளித்தார்: “இது உண்மையிலேயே ஒரு தீவிரமான கேள்வி... . [RN] தலைவர் மரின் லு பென்னின் அதே வேலைத்திட்டத்தை பார்னியே கொண்டிருக்கிறார். ஆம், மரின் லு பென்னின் கட்சியில் இருந்து தெளிவாக கருத்துக்கள் அங்கே வருகின்றன.”

ஜாஸ்மின் கூறுகையில், “NFP பற்றி, அவர்கள் ஒன்றுபடுவதற்கான ஒரு உடன்பாட்டிற்கு வர முடிந்தபோது நான் உண்மையிலேயே மகிழ்ச்சியடைந்தேன். … எனவே தேர்தலில் NFP வெற்றி பெற்ற பிறகு, என்னைப் போன்றவர்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்தோம். இப்போது, ஏமாற்றம் மிகப்பெரியது என்று நாம் கூறலாம். “

ஓய்வுபெற்ற ஆசிரியரும் ஸ்ராலினிச பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியின் (PCF) முன்னாள் உறுப்பினருமான எடித், மக்ரோனை “முற்றிலும் ஊழல்மிக்கவர், ஒழுக்கங்கெட்டவர்” என்று கண்டனம் செய்தார். RN அதிகாரத்தில் இருந்து தடுப்பதற்காக என்று கூறி, மக்ரோனின் கட்சியை ஆதரிப்பதற்காக இரண்டாம் சுற்று வாக்கெடுப்பில் அதன் வேட்பாளர்களைத் திரும்பப் பெறும் NFP இன் கொள்கையை அவர் ஆதரிக்கவில்லை என்பதையும் அவர் சேர்த்துக் கொண்டார். மெலோன்சோனும் NFPயும் நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க உதவியது, அவர்களின் வாக்குகள் இப்போது RN-ஆதரவிலான அரசாங்கத்தை அதிகாரத்தில் வைத்திருக்கின்றன.

இரண்டாவது சுற்று வாக்கெடுப்பில் பல தொகுதிகளில் மக்ரோனின் குழுமக் கட்சி வேட்பாளர்களை ஆதரிப்பதற்காக NFP தனது வேட்பாளர்களை திரும்பப் பெற்றது. இது குறித்து, எடித் கூறினார், “நான் அதற்கு உடன்படவில்லை, அதனால்தான் இப்போது நான் சங்கடமாக உணர்கிறேன். எனது அரசியல் குடும்பம் LFI யாக இருந்தாலும், எனக்கு பிடிக்காத விஷயங்கள் உள்ளன. நான் [RN க்கு எதிரான] ஒரு ஜனநாயக முன்னணியை ஆதரிக்கவில்லை, உண்மையில், இப்போது நாம் ஒரு முட்டுச்சந்தில் இருப்பதை காண்கிறோம். நாங்கள் முன்வைத்த வேட்பாளர்கள் கடைசி வரை இருந்திருக்க வேண்டும். இப்போது அது திரும்பி வந்து நம்மை நேரடியாக தாக்குவதைக் கண்டு நாம் ஆச்சரியப்பட வேண்டியதில்லை..”

எடித்

கடந்த ஆண்டு மக்ரோனின் சட்டவிரோத ஓய்வூதிய வெட்டுக்களுக்கு எதிரான பாரிய போராட்டங்களின் குரல்வளையை நெரிப்பதில் NFP உடன் இணைந்த தொழிற்சங்க அதிகாரத்துவங்கள் ஒரு மத்திய பாத்திரம் வகித்தன என்பதை எடித் ஒப்புக் கொண்டார். அவர் கூறினார், “நான் உங்களுடன் உடன்படுகிறேன், தொழிற்சங்கங்கள் இந்தப் பணிக்குப் போதுமானதாக இல்லை. இரண்டு போராட்டங்கள், மூன்று போராட்டங்கள், லட்சக்கணக்கான மக்கள் தெருக்களில் இறங்கினாலும் கூட அது போதுமானதாக இருக்கும் என்று நினைப்பது தவறு. ... உயர் பதவிகளில் இருக்கும் தொழிற்சங்க அதிகாரிகள் ஒருவகையில் ஆளும் வர்க்கத்தின் ஒரு பகுதியாகவே உள்ளனர்.”

ரஷ்யாவுக்கு எதிரான உக்ரேனிய ஆட்சியின் போரில் இணைந்துகொள்வதற்கு துருப்புகளை அனுப்புவதற்கான மக்ரோனின் பாரியளவில் மதிப்பிழந்த அழைப்புக்கு NFP இன்  வேலைத்திட்டம் ஒப்புதல் அளித்திருப்பது குறித்து வினவிய போது, எடித் கூறுகையில், பிரான்ஸ் “உக்ரேனுக்கு நிதி ஒதுக்க வாக்களித்தது, ஆனால் நாம் அதை ஒருபோதும் செய்திருக்கக் கூடாது. நாம் இன்னும் உறுதியாக இருந்திருக்க வேண்டும். உக்ரேனியர்கள் அமெரிக்கர்களின் ஆதரவுடன் பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மையை சீர்குலைக்க அனைத்தையும் செய்துள்ளனர். ரஷ்யர்கள் மிகவும் பொறுமையானவர்கள் என்று நான் நினைக்கிறேன். இடதுசாரிகள் இன்னும் உறுதியாக இருந்திருக்க வேண்டும், அது மௌனமாக இருந்தது, எந்த சக்திகள் செயலூக்கத்துடன் இருந்தன என்பதை வெளிப்படையாக கூறவில்லை”

எடித்தின் கருத்துக்கள், மெலன்சோனையும் அவரைச் சுற்றியுள்ள நடுத்தர வர்க்கக் கட்சிகள் மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவம் ஆகியவற்றின் முழு போலி-இடதுகளின் சுற்றுவட்டத்தையும் குறித்து தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களிடையே ஏற்பட்டுள்ள பிரமைவிலகலை சுட்டிக்காட்டுகின்றன. பிரான்சில் பத்தில் ஒன்பது பேர் எதிர்க்கும் கொள்கைகளுக்கு – ரஷ்யாவுடனான போர், காஸாவில் இனப்படுகொலை மற்றும் ஓய்வூதிய சீர்திருத்தங்கள் – எதிராக அவர்களுக்கு வாக்களித்த மில்லியன் கணக்கான தொழிலாளர்களின் அணிதிரள்வை அவர்கள் தடுத்தனர். கோடை முழுவதிலும், மெலோன்சோன் அவரை ஆதரித்த தொழிலாளர்களை வேலைநிறுத்தம் செய்யுமாறு ஒருமுறை கூட அழைப்புவிடுக்கவில்லை.

மெலோன்சோனின் அரசியல் திவால்நிலையால் முன்னிறுத்தப்படும் தடையை தொழிலாளர்கள் எவ்வாறு கடந்து வர முடியும் என்பதன் மீது அடிப்படையிலேயே இரண்டு வேறுபட்ட முன்னோக்குகள் நிலவுகின்றன.

மெலோன்சோனால் வழிநடத்தப்பட்ட மக்ரோன் மற்றும் RN தலைமையிலான ஒரு பொலிஸ் அரசின் எழுச்சியானது, முதலாளித்துவ அடித்தளத்தில் ஜனநாயகத்தைப் பாதுகாப்பது சாத்தியமற்றது என்பதை வெளிப்படுத்துகிறது. அடிப்படை சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்கு, ஏகாதிபத்திய போர், இனப்படுகொலை மற்றும் முதலாளித்துவத்திற்கு எதிரான போராட்டத்தில் தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டும் சோசலிசத்திற்கான போராட்டம் அவசியப்படுகிறது. அதுபோன்றவொரு போராட்டமானதூ அவசியமாக சர்வதேசரீதியானதாக இருக்க வேண்டும், அதற்கு பிரான்சிலும் ஏனைய நாடுகளிலும் உள்ள தொழிலாளர்களின் ஐக்கியப்பட்ட, புரட்சிகர போராட்டம் அவசியமாகும்.

பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாற்று நோக்குநிலையைப் பின்பற்றிய எடித், சர்வதேசியவாதத்தை நோக்கிய தனது ஐயுறவுவாதத்தை சுட்டிக்காட்டினார்; மெலோன்சோன் மீது ஏமாற்றமடைந்துள்ள அவர், RN தலைவர் மரின் லு பென்னின் முன்னாள் உதவியாளரான ஃப்ளோரியான் பிலிப்போவை ( Florian Philippot) ஆதரித்து வருவதாகவும் சேர்த்துக் கொண்டார்.

“ஆகவே நான் இப்போதும் LFI உடன் நெருக்கமாக இருக்கிறேன் என்பது உண்மைதான், ஆனால் பிலிப்போ தலைமையிலான பல போராட்டங்களிலும் நான் கலந்து கொண்டிருக்கிறேன்,” என்று எடித் தெரிவித்தார். அவர் கூறுகையில், மெலன்சோன் புலம்பெயர்ந்தோருக்கு முறையிடுகிறார், ஆனால் பூர்வீக தொழிலாளர்களுக்கு முறையிடவில்லை என்பதால் பிலிப்போவின் சில கருத்துக்களை ஆதரிப்பதாகக் கூறினார். வெற்றி பெற வேண்டுமெனில், “பிரான்சில் வாழும் புலம்பெயர்ந்தோர்களிடமும், அதே வேளையில் இறையாண்மைக்கு ஆதரவான மனநிலையிலும் பேசியிருக்க வேண்டும்” என்று அவர் கூறினார்.

மெலோன்சோன் மற்றும் சோசலிஸ்ட் கட்சியின் அரசியல் காட்டிக்கொடுப்புகளால் ஏமாற்றமடைந்த தொழிலாளர்கள் மத்தியில் நவ-பாசிசவாத செல்வாக்குகள் மேலெழுவதால் முன்னிறுத்தப்படும் அரசியல் சவால்களை பல ஆர்ப்பாட்டக்காரர்கள் சுட்டிக்காட்டினர்.

ஒரு மாணவரான அனஸ் உலக சோசலிச வலைத் தளத்திடம் கூறினார்: “ஒரு வலதுசாரி பிரதம மந்திரியின் பெயர் என்னை வீதிகளில் இறங்க உண்மையில் தள்ளியது. நடப்பது அபத்தமானது. … வெளிப்படையாகச் சொல்வதானால், என்னைப் பொறுத்தவரை, புதிய மக்கள் முன்னணி பற்றி எனக்கு சந்தேகங்கள் உள்ளன. NFP, சரி, ஆனால் PS உள்ளது, பசுமைவாதிகளின் ஒரு பகுதி உள்ளது. சோசலிஸ்ட் கட்சியும் அவர்கள் தங்கள் வார்த்தையை எப்படி திரும்பப் பெறுகிறார்கள் என்பதை நாங்கள் நன்கு அறிவோம். … தொழிலாள வர்க்கத்தில் சோசலிஸ்ட் கட்சிக்கு இனி ஒன்றும் இல்லை, ஏனென்றால் சோசலிஸ்ட் கட்சி ஒரு பிளவுபடுத்தும், முதலாளித்துவக் கட்சியாகும். அவர்கள் மோசடிகளில் மிகவும் கைதேர்ந்தவர்கள்.”

RN அதன் பங்கிற்கு, தொழிலாளர்களுக்கு “ஒரு இனவாத உடன்படிக்கையை, அதாவது, தேசத்தின் கொடியின் கீழ், ஒரு பிரெஞ்சு பதாகையின் கீழ் ஐக்கியப்படுவதற்கு” முன்மொழிகிறது என்று அனஸ் தெரிவித்தார். … உண்மையில், பிரச்சனை என்னவென்றால், தொழிலாளர்கள் ஒரு பாத்திரத்தை வகிக்க வேண்டும். அனைத்து தொழிலாளர்களும் RNக்கு வாக்களிக்கிறார்கள் என்று நான் கூறவில்லை. ஆனால் நாம் ஏதாவது மாற்ற வேண்டும்.”

தொழிலாளர்களும் இளைஞர்களும் ஒருபுறம் தேசிய பேரணியையும் மக்ரோனையும், மறுபுறம் மெலன்சோன் போன்ற அவர்களின் போலி-இடது ஆதரவாளர்களையும் சமரசமின்றி எதிர்க்க வேண்டும். மெலன்சோனுக்கு எதிராக சோசலிசம் மற்றும் தொழிலாளர் அதிகாரத்திற்கான போராட்டத்தின் அடிப்படையானது, பிரான்சில் சோசலிச சமத்துவக் கட்சியால் (Parti de l’égalité socialiste) பிரதிநிதித்துவப்படுத்தப்படும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் ட்ரொட்ஸ்கிசத்தைப் பாதுகாப்பதாகும்.

Loading