முன்னோக்கு

ட்ரம்பின் சமூக எதிர்புரட்சிக்கான அமைச்சரவை

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம். 

குடியரசுக் கட்சியின் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப், தனது அமைச்சரவையை தொடர்ந்து நிரப்பி வருகின்ற நிலையில், அவரது வரவிருக்கும் அரசாங்கத்தின் எதிர்ப்புரட்சிகர தன்மை மேலும் மேலும் வெளிப்படையாகி வருகிறது. பிரதானமாக இராணுவ-உளவுத்துறை முகமைகள் மற்றும் உள்நாட்டு ஒடுக்குமுறை எந்திரத்தை சேர்ந்த ட்ரம்பின் முந்தைய நியமனங்கள், மில்லியன் கணக்கான புலம்பெயர்ந்தவர்கள் மீது ஒரு வன்முறையான பாசிச தாக்குதலைத் தொடங்குவதற்கான அவரது தீர்மானத்தை எடுத்துக்காட்டுகின்றன. உழைக்கும் மக்களுக்கு வரையறுக்கப்பட்ட வகையில் சமூக நலன்களை வழங்கும் கூட்டாட்சித் துறைகளுக்கான அவரது சமீபத்திய தேர்வுகள், அவற்றின் செயற்பாட்டை சீர்குலைக்கும் அல்லது அவற்றை முற்றிலுமாக அழிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன.

திருப்புமுனை அதிரடி பிரச்சார பேரணியில் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ராபர்ட் கென்னடி ஜூனியருடன் கைகுலுக்குகிறார். புதன்கிழமை, அக்டோபர் 23, 2024 அன்று ஜோர்ஜியாவின் துலுத் [AP Photo/Alex Brandon]

சமூக சேவைகளுக்கான ட்ரம்பின் திட்டங்களின் முதல் சமிக்ஞை, தடுப்பூசி எதிர்ப்பு சதிக் கோட்பாட்டாளரான ரோபர்ட் எஃப். கென்னடி ஜூனியரை சுகாதாரம் மற்றும் மனித சேவைகள் துறைக்கு தலைமை தாங்க அவர் தேர்ந்தெடுத்ததன் மூலம் வெளிவந்தது. இந்த மிகப்பெரிய நிறுவனத்தில், சமூக பாதுகாப்பு நிர்வாகம், முதியோருக்கு ஓய்வூதிய வருமானம், சுகாதார காப்பீடு, அனைத்து வயதினருக்கும் குறைந்த வருமானம் உள்ளவர்களுக்கு சுகாதார காப்பீடு ஆகியவற்றை வழங்கும் மருத்துவ பராமரிப்பு மற்றும் மருத்துவ உதவி சேவைகளுக்கான மையங்கள் (CMS) ஆகியவை அடங்குகின்றன.

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்தை கைவிடுவதற்கு முன்பு, கென்னடி ஜனநாயகக் கட்சியின் வேட்புமனுவில் போட்டியிடத் தொடங்கினார். பின்னர், ட்ரம்பை ஆதரிப்பதற்கு முன்பு “சுயேட்சையாக” பிரச்சாரம் செய்யத் தொடங்கினார். கென்னடி மன இறுக்கத்தை (autism) ஏற்படுத்தும் குழந்தை பருவ தடுப்பூசிகள் குறித்த அவரது மோசமான பொய்களுக்கு மிகவும் பிரபலமானவர். இந்த தடுப்பூசிகளை மதிப்பிழக்கச் செய்வதற்கான அவரது பல மில்லியன் டாலர் முயற்சியானது, பொது சுகாதாரத்தில் ஆழமான எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது,

குறிப்பாக தட்டம்மை போன்ற நோய்களுக்கு, 95 சதவீதத்திற்கும் குறைவான குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி, மீண்டும் இந்த நோய் பரவுவதற்கான நிலைமையை உருவாக்குகிறது. பழைய மற்றும் புதிய நோய்களின் அபாயத்திற்கு எதிராக அமெரிக்க மக்களை நிராயுதபாணியாக்கும் விளைவைக் கொண்டிருக்கும் “ஆரோக்கியத்தின் மீது காட்டுத்தனமாக செல்வதற்கான” அதிகாரத்தை கென்னடிக்கு வழங்குவதாக ட்ரம்ப் உறுதியளித்துள்ளார்.

அடுத்ததாக டாக்டர் மெஹ்மெட் ஓஸ், மருத்துவ பாதுகாப்பு மற்றும் மருத்துவ உதவி சேவைகளுக்கான மையங்களின் (CMS) தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். முதலில் இருதய அறுவை சிகிச்சை நிபுணராக மெஹ்மெட் ஓஸ் இருந்தபோது, ​​ஒரு தொலைக்காட்சி பிரபலமாக இருந்தார். முதலில் ஓப்ரா வின்ஃப்ரே திட்டத்திற்கு பிறகு, இந்த நிகழ்ச்சியானது, வின்ஃப்ரேயின் தயாரிப்பு நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு பின்னர் சோனி பிக்சர்ஸ் மூலம் விநியோகிக்கப்பட்டது. சந்தேகத்திற்குரிய சிகிச்சைகளை ஊக்குவிப்பவராக இழிபுகழ் பெற்ற ஓஸ், கொலம்பியா பல்கலைக்கழகத்தின் சக மருத்துவர்களால் “தனிப்பட்ட நிதி ஆதாயத்தின் நலனுக்காக போலி சிகிச்சைகள் மற்றும் குணப்படுத்துதல்களை ஊக்குவித்ததற்காக” கண்டனம் செய்யப்பட்டார். கோவிட்-19க்கு மருந்தாக ஹைட்ராக்ஸி குளோரோகுயின் என்ற ட்ரம்பின் பரிந்துரையை அவர் ஆதரித்தார். 2022 வாக்கில், முழுமையாக பாசிச முகாமில் இணைந்துகொண்ட ஓஸ், பென்சில்வேனியாவில் இருந்து அமெரிக்க செனட்டிற்கு ட்ரம்ப் ஆதரவுடன் குடியரசுக் கட்சி வேட்பாளராக தேர்தல் அரசியலில் நுழைந்தார். இந்த போட்டியில் அவர் ஜனநாயகக் கட்சியின் ஜான் ஃபெட்டர்மேனிடம் மயிரிழையில் தோல்வியடைந்தார்.

மெஹ்மெட் ஓஸை நியமிக்கும் அவரது அறிக்கையை, ட்ரம்ப் தனது தொலைக்காட்சி நிகழ்ச்சியில், ஒன்பது பகல்நேர எம்மி விருதுகளை ஏதோ ஒரு மருத்துவச் சான்று போல் சுட்டிக்காட்டினார். “டாக்டர் ஓஸ் ரோபர்ட் எஃப். கென்னடி ஜூனியருடன் நெருக்கமாக வேலை செய்வார், நோய் தொழில்துறை வளாகத்தையும் மற்றும் அதன் பின்னணியில் எஞ்சியிருக்கும் அனைத்து கொடூரமான நாட்பட்ட நோய்களையும் எடுத்துக் கொள்வார்” என்று ட்ரம்ப் அறிவித்தார்.

எச் 5 என் 1 மற்றும் எம்போக்ஸ் போன்ற பெரிய புதிய தொற்றுநோய் அச்சுறுத்தல்கள் எழுந்து வருகின்ற நிலையிலும், கோவிட்-19 இன்னும் ஒரு பெரிய உயிர்க்கொல்லியாக நீடிக்கும் நிலையிலும் கூட, கூட்டாட்சி பொது சுகாதார உள்கட்டமைப்பை அழிப்பதே இந்த நியமனங்களின் ஒரு மத்திய கொள்கை இலக்காகும். கிட்டத்தட்ட அனைத்து வகையான தடுப்பூசிகளையும் எதிர்க்கும் கென்னடியைத் தவிர, புளோரிடா சர்ஜன் ஜெனரல் ஜோசப் லடாபோ மற்றும் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழக மருத்துவ பேராசிரியரும், பொது சுகாதாரத்திற்கு எதிரான கிரேட் பேரரிங்டன் பிரகடனத்தின் இணை ஆசிரியருமான ஜே பட்டாச்சார்யா ஆகியோர், தேசிய சுகாதார நிறுவனங்கள் (NIH) போன்ற நிறுவனங்களுக்கு தலைமை தாங்குவதற்கான குறுகிய பட்டியலில் இருப்பதாக கூறப்படுகிறது.

ஜோர்ஜ் டபுள்யூ புஷ் நிர்வாகத்தின் கீழ், இருதரப்பு சட்டத்தின் மூலம் நிறுவப்பட்ட மருத்துவ காப்பீட்டின் தனியார்மயமாக்கப்பட்ட பதிப்பான மருத்துவ காப்பீட்டு நன்மையை ஆதரிக்கும் தனியார் இலாபத்திற்கு ஓஸ் ஒரு தீவிர ஆதரவாளராகவும் உள்ளார். மருத்துவப் பாதுகாப்பு பெறுபவர்களுக்காக “ஜனாதிபதி ட்ரம்ப் விரிவுபடுத்திய தனியார் துறை திட்டங்களுக்கான அணுகலை விரிவுபடுத்துவதற்கான” முயற்சிகளை அவர் பாராட்டினார். இது மத்திய அரசாங்கத்திடம் இருந்து பில்லியன் கணக்கான டாலர்கள் உத்தரவாதத்துடன் அணுகுவதன் மூலமாக காப்பீட்டு நிறுவனங்களின் இலாபங்களை அதிகரிக்கும் விளைவைக் கொண்டுள்ளது.

2022 இல் ஓஸைத் தோற்கடித்த ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த செனட்டர் ஃபெட்டர்மேன், “மருத்துவ காப்பீடு மற்றும் மருத்துவ உதவியைப் பாதுகாப்பது பற்றி” ஒரு உறுதிப்பாட்டை அவர் அளித்தால், அவரை உறுதிப்படுத்த வாக்களிப்பேன் என்று கூறினார். இது எந்த HHS பரிந்துரைக்கும், எந்தவொரு நபரும் அவர்களின் நோக்கங்கள் எதுவாக இருந்தாலும் உறுதியளிப்பதை குறிக்கிறது.

அவரது கருத்து, காங்கிரஸிலுள்ள ஜனநாயகக் கட்சியினரின் பிரதிபலிப்புக்கு பொதுவானது, அவர்கள் வரவிருக்கும் அதிதீவிர வலது ஆட்சிக்கு எந்தவொரு முறையான எதிர்ப்பையும் நடத்த மறுத்து, அட்டர்னி ஜெனரலுக்கான முன்னாள் காங்கிரஸ் உறுப்பினர் மாட் கெய்ட்ஸ் போன்ற விரல்விட்டு எண்ணக்கூடிய மிகவும் ஆத்திரமூட்டும் நியமனங்களுக்கு எதிராக அவதூறு பரப்புவதோடு தங்களை மட்டுப்படுத்திக் கொண்டனர். வெள்ளை மாளிகையில் ட்ரம்பை சந்தித்த அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடென், ஒரு “சுமூகமான ஆட்சி மாற்றத்திற்கு” உறுதியளித்தார். மேலும் “உங்களுக்கு இடமளிக்கப்படுவதை உறுதிப்படுத்த எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம்” என்று பைடென் உறுதியளித்தார்.

ட்ரம்பின் HHS நியமனங்களின் மோசமான உட்பொருள் என்னவென்றால், இரண்டாவது ட்ரம்ப் நிர்வாகம் அத்தியாவசிய சுகாதாரப் பாதுகாப்புத் திட்டங்களுக்கு பாரிய வெட்டுக்களைத் தயாரித்து வருகிறது என்பதாகும். குறிப்பாக, இந்த மருத்துவ உதவி, பல குடியரசுக் கட்சி ஆளும் மாநிலங்கள் பங்கேற்க மறுத்த போதிலும், கட்டுப்படியாகக்கூடிய மருத்துவ பராமரிப்புச் சட்டத்தின் (Obamacare) விளைவாக இது கணிசமாக விரிவாக்கப்பட்டிருந்தது.

கடந்த புதனன்று நியூ யோர்க் டைம்ஸில் வெளியான ஒரு செய்தியின்படி, “பழமைவாத சட்டமியற்றுபவர்கள் மற்றும் அடுத்த ட்ரம்ப் நிர்வாகத்திற்கு ஆலோசனை வழங்கக்கூடிய கொள்கை வல்லுநர்கள் மருத்துவ உதவிக்கு நீண்டகாலமாக எதிர்பார்க்கப்படும் வெட்டுக்களைப் பற்றி விவாதித்து வருகின்றனர், இது அனைத்து அமெரிக்கர்களில் ஐந்தில் ஒரு பங்கை உள்ளடக்கியதோடு, மத்திய பட்ஜெட்டில் 10 சதவிகிதம் ஆக உள்ளது” என்று குறிப்பிட்டுள்ளது. இந்த மாற்றங்களில் மருத்துவ உதவி பெறுபவர்களுக்கு வேலை தேவைகளை சுமத்துவது அல்லது போதுமான நபர்களுக்கு தகுதியை மறுத்தால் அவர்கள் மற்ற நோக்கங்களுக்காக பயன்படுத்தக்கூடிய திட்ட நிதியை மாநிலங்களுக்கான தொகுதி மானியமாக மாற்றுவது ஆகியவை உள்ளடங்குகின்றன. ட்ரம்ப் அத்தகைய முயற்சிகளுக்கு தனது ஆதரவை சுட்டிக்காட்டி, டாக்டர் ஓஸ் “நமது நாட்டின் மிகவும் விலையுயர்ந்த அரசு முகமைக்குள் வீண்விரயங்கள் மற்றும் மோசடிகளை குறைப்பார்” என்று அறிவித்தார்.

K-12, கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மட்டங்களில் பொதுக் கல்விக்கு மத்தியிலுள்ள கூட்டாட்சியின் ஆதரவுக்கான சாத்தியக்கூறு இன்னும் மோசமாக உள்ளது. உலக மல்யுத்த பொழுதுபோக்கு நிறுவனத்தின் பில்லியனரும், இணை உரிமையாளரும், நீண்டகால நெருங்கிய நண்பரும் அரசியல் ஆதரவாளருமான லிண்டா மக்மஹோனை கல்வித்துறை செயலராக நியமிப்பதாக ட்ரம்ப் செவ்வாயன்று அறிவித்தார். மக்மஹோன் அவரது முதல் பதவிக்காலத்தில் சிறு வணிக நிர்வாகத்திற்கு தலைமை தாங்கினார். இந்தாண்டு ட்ரம்பின் தேர்தல் பிரச்சாரத்தில் மில்லியன் கணக்கானவர்களை ஈர்த்தார். பின்னர் அவரது “இடைநிலைக் குழுவின்” இணைத்-தலைவராக பணியாற்றினார். இது புதிய நிர்வாகத்தில் முக்கிய பதவிகளுக்கு சாத்தியமான வேட்பாளர்களின் பட்டியலை உருவாக்கியது.

கல்வித் துறைக்கு தலைமை தாங்குவதற்கு மக்மஹோனுக்கு எந்தத் தகுதியும் இல்லை என்று கூறுவது ஒரு குறைமதிப்பீடாகும். தொழில்முறை ரீதியான மல்யுத்தத்தில் அவரது பின்னணி, அதில் இருந்து அவரும் அவரது கணவர் வின்ஸும் தங்கள் செல்வத்தை ஈட்டினர். அவரை ஒரு கல்வியாளரைக் காட்டிலும் கலாச்சார பின்தங்கிய நிலையை ஊக்குவிப்பவராகவும், ஒரு கேளிக்கையாளராகவும் மற்றும் மோசடி கலைஞராகவும் அடையாளம் காட்டுகிறது. அதில், நிச்சயமாக, மக்மஹோனும் ட்ரம்பும் ஒரு இறகு விரித்த பறவைகள் ஆவர்.

கல்வித் துறை என்பது பொதுப் பள்ளிகளுக்கான நிதியின் துணை ஆதாரம் மட்டுமே. அவை முக்கியமாக மாநில மற்றும் உள்ளூர் மட்டங்களில் பணம் செலுத்தப்பட்டு நிர்வகிக்கப்படுகின்றன. இது, மிகப்பெரியளவில் $1.6 டிரில்லியன் டாலர் கல்லூரி மாணவர் கடன் இலாகாவையும் நிர்வகிக்கிறது. இது வருவாயின் குறிப்பிடத்தக்க ஆதாரமாகும். மில்லியன் கணக்கான முன்னாள் கல்லூரி மாணவர்களின் கடன் சுமையைத் தணிப்பதற்கான முயற்சிகளை ட்ரம்பும் குடியரசுக் கட்சியினரும் எதிர்த்து வருகின்றனர். அவர்களில் பலர் தங்கள் கடன்களுக்கு குறைந்தபட்ச தவணைகளை செலுத்துவதற்கு மேல் எதுவும் செய்ய முடியாமல் வாழ்வாதாரத்தை நடத்தி வருகின்றனர்.

கல்வி என்ற தலைப்பில் மக்மஹோனின் கடந்தகால கருத்துக்கள் “பள்ளி தேர்வுக்கான” ஆதரவையும், வவுச்சர்கள் மூலம் பொதுக் கல்வியை திறம்பட தகர்ப்பதையும் உள்ளடக்கியுள்ளது. இது மதப் பள்ளிகள் உட்பட தனியார் பட்டயப் பள்ளிகளுக்கு நிதியை மாற்றும், இது தேவாலயம் மற்றும் அரசுக்கு இடையிலான அரசியலமைப்பு பிரிவினையை மீறுகிறது.

ஆனால், அவர் தலைமை வகிக்கும் அமெரிக்கா முதல் கொள்கை நிறுவனம் “தேசபக்தி” கல்வி, வீட்டுக்கல்வி, கல்வியில் “பன்முகத்தன்மை, சமத்துவம் மற்றும் உள்ளடக்கம்” (DEI) முயற்சிகளை ஒடுக்குவதற்கும், மற்றும் மாணவர்களுக்கு எதிரான ஒடுக்குமுறை நடவடிக்கைகளை வலுப்படுத்துவதற்கும் அழைப்பு விடுத்து ஆவணங்களை வெளியிட்டுள்ளது. அவரது நியமனம், இலாப-நோக்கற்ற கல்லூரிகளின் சங்கத்தாலும், “பெற்றோர்களின் உரிமைகள்” என்ற பொய்யான சுலோகத்தின் கீழ், பொதுப் பள்ளிகளில் புத்தக-தடை மற்றும் பிற வடிவிலான தணிக்கைக்கு முனையும் பில்லியனர்-ஆதரவிலான வலதுசாரி பிரச்சாரமான சுதந்திரத்திற்கான அம்மாக்கள் அமைப்பாலும் வரவேற்கப்பட்டது.

எவ்வாறிருப்பினும், கொள்கை மாற்றங்கள் மற்றும் திட்ட வெட்டுக்களுக்கும் அப்பால், ஜிம்மி கார்ட்டர் நிர்வாகத்தின் போது மத்தியிலுள்ள கூட்டாட்சி சட்டத்தால் 1977 இல் ஸ்தாபிக்கப்பட்ட கல்வித் துறையை முற்றிலுமாக ஒழிப்பதற்கு ட்ரம்ப் ஆதரவளித்துள்ளார். கடந்த திங்களன்று வெளியிட்ட ஒரு அறிக்கையில், பில்லியனர்களான எலோன் மஸ்க் மற்றும் ட்ரம்பின் அதிகாரபூர்வமற்ற “அரசாங்க செயல்திறன் துறை” (DOGE) தலைவரான விவேக் ராமசாமி, அத்துறையை கலைப்பது “மிகவும் நியாயமான முன்மொழிவு” என்று அழைத்தனர். மக்மஹோனை நியமித்த ட்ரம்ப், “நாங்கள் கல்வியை மீண்டும் மாநிலங்களுக்கு அனுப்புவோம், லிண்டா அந்த முயற்சிக்கு தலைமை தாங்குவார்” என்று கூறினார்.

வோல் ஸ்ட்ரீட் ஜேர்னலில் புதன்கிழமை மாலை பிரசுரிக்கப்பட்ட ஒரு தலையங்க கட்டுரையில், மஸ்க்கும் ராமசாமியும் ஒரு தனியார் வணிகத்தைப் போலவே, வேலைகளைக் குறைப்பதன் மூலமும் மற்றும் குறைவான தொழிலாளர்களைக் கொண்டு அதிக உற்பத்தியை நிர்பந்திப்பதன் மூலமும் “செலவுகளைக் குறைப்பதற்கு” அவர்கள் தீர்மானகரமாக இருப்பதை அறிவித்துள்ளதாக தெரிவித்தது. வரவிருக்கும் ட்ரம்ப் ஆட்சியின் சர்வாதிகார உந்துதலை அடிக்கோடிட்டுக் காட்டும் வகையில், “புதிய சட்டங்களை இயற்றுவதை விட தற்போதுள்ள சட்டத்தின் அடிப்படையில் நிறைவேற்று நடவடிக்கை மூலம் மாற்றத்தை ஏற்படுத்துவதில் குறிப்பாக கவனம் செலுத்துவோம்” என்று அவர்கள் எழுதினர்.

உச்ச நீதிமன்றத்தில் அதிதீவிர வலது பெரும்பான்மையின் பல சமீபத்திய முடிவுகளை மேற்கோள் காட்டி, —ட்ரம்ப் நியமித்த ஆறு பேரில் மூன்று பேர்— இந்த இரண்டு பில்லியனர்களும் பெருநிறுவன அமெரிக்கா மீதான நெறிமுறைகளின் ஒரு நெருப்பைத் தழுவிக் கொள்கின்றனர். இது பெருநிறுவனங்கள் தங்கள் தொழிலாளர்களையும் பொதுமக்களையும் ஆபத்திற்கு உட்படுத்துவதற்கு சுதந்திரம் அளிக்கும், அத்துடன் கூட்டாட்சி தொழிலாளர்களின் வேலைகளைக் குறைப்பதற்கான நிலைமைகளையும் தோற்றுவிக்கும். “கூட்டாட்சி விதிமுறைகளில் ஒரு கடுமையான குறைப்பு, கூட்டாட்சி அதிகாரத்துவம் முழுவதும் பாரிய குறைப்புக்கு சிறந்த தொழில்துறை தர்க்கத்தை வழங்குகிறது. ஒரு ஏஜென்சியில் தேவைப்படும் குறைந்தபட்ச ஊழியர்களின் எண்ணிக்கையை அடையாளம் காண, அந்த ஏஜென்சிகளில் உட்பொதிக்கப்பட்ட நபர்களுடன் இணைந்து பணியாற்ற அரசாங்க செயல்திறன் துறை விரும்புகிறது”.

கூட்டாட்சி முகமைகளை வாஷிங்டனுக்கு வெளியே இடமாற்றம் செய்வதன் மூலமும், “நாங்கள் வரவேற்கும் தன்னார்வ பணிநீக்கங்களின் ஒரு அலையை” கட்டாயப்படுத்தும் “பெரியளவிலான பணிநீக்கங்களில்” இருந்து, பில்லியனர்களால் “வீட்டிலேயே இருந்து பணிபுரியும் கோவிட்-சகாப்த சிறப்புரிமை” என்று இழிவுபடுத்தும் தொலைதூரத்தில் இருந்து பணிபுரியும் வேலை முறைகளை முடிவுக்குக் கொண்டு வருவது வரையிலான வழிமுறைகளை அவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

இது சமூக எதிர்ப்புரட்சிக்கான ஒரு வேலைத்திட்டமாகும். ஆரம்பத்தில் புலம்பெயர்ந்தோர் மீதும், பின்னர் ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயக உரிமைகள் மீதும் போர் தொடுத்திருக்கும் அடக்குமுறை அமைப்புகளுக்கும், இராணுவத்திற்கும் ட்ரில்லியன் டாலர்கள் கொட்டப்படும். அதே நேரத்தில், இராணுவமயமாக்கல் மற்றும் ஒடுக்குமுறைக்கான செலவுகளை, சுகாதாரப் பாதுகாப்பு, கல்வி மற்றும் சமூக பாதுகாப்பு போன்ற பொது சமூக சேவைகளில் எஞ்சியிருப்பவற்றை அழிப்பதன் மூலமாக தொழிலாள வர்க்கத்தால் செலுத்தப்படும்.

Loading