மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
எண்பது ஆண்டுகளுக்கு முன்னர், 1945 ஜனவரி 27 அன்று, சோவியத் செம்படை ஆவுஷ்விட்ஸ்-பிர்கெனோ (Auschwitz-Birkenau) நிர்மூலமாக்கல் வதை முகாமை விடுவித்தது. அப்போது விவரிக்க முடியாத பயங்கரமான காட்சியை செம்படை வீரர்கள் எதிர்கொண்டனர். தெற்கு போலந்தில் உள்ள ஓஸ்விசிம் என்ற சிறிய நகரத்தின் ஜேர்மன் பெயரான ஆவுஷ்விட்ஸ், மனித கற்பனைக்கு அப்பாற்பட்ட குற்றங்களின் உச்ச இடமாக மாறியுள்ளது.
இரண்டாம் உலகப் போரின் போது நாஜி ஆட்சியானது, ஆவுஷ்விட்ஸ் வதைமுகாம் வளாகத்தில் இருந்த 1.1 முதல் 1.5 மில்லியன் மக்களை படுகொலை செய்தது. கொல்லப்பட்டவர்களில் தொண்ணூறு சதவீதம் பேர் யூதர்கள், போலந்துக்காரர்கள், சிந்திகள், ரோமாக்கள் மற்றும் சோவியத் போர்க் கைதிகள் ஆவர்.
ஆவுஷ்விட்ஸை மிகவும் கொடூரமானதாக ஆக்குவது, அங்கு படுகொலை செய்யப்பட்டவர்களின் பிரம்மாண்டமான எண்ணிக்கையில் மட்டுமல்ல. மாறாக, பத்தாயிரக்கணக்கான SS விசேட பொலிஸ் உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் வணிகத் தலைவர்கள் ஒன்றிணைந்து இந்த பாரிய கொடுரமான படுகொலைகளை சாத்தியமாக்குவதில் காட்டிய இரக்கமற்ற செயல்திறனிலும் அடங்குகிறது. இனப்படுகொலையை நடத்துவதற்கு ஒரு நவீன தொழில்துறைமயமான அரசின் எந்திரம் இதற்கு முன்னர் ஒருபோதும் இந்தளவுக்கு திட்டமிட்டு பயன்படுத்தப்பட்டதில்லை.
ஜேர்மனியிலும், நாஜி ஆக்கிரமிப்பு பிரதேசங்களிலும் இருந்த நகராட்சி அதிகாரிகள் பாதிக்கப்பட்ட யூதர்களை பொலிசாருக்கு அடையாளம் காட்டினர். அவர்களை சுற்றி வளைத்த போலிசார், கால்நடைகளைப் போல ரயிலில் சரக்குகள் ஏற்றப்படும் பெட்டிகளில் அடைத்து அவுஷ்விட்ஸுக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்கள் சாய்வு தளத்தில் பிரிக்கப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
கடின உழைப்பில் வேலை செய்ய முடியாதவர்கள் (முக்கியமாக குழந்தைகள், பெண்கள் மற்றும் முதியவர்கள்) விஷவாயு அறைகளுக்குள் கூட்டமாக கொண்டு செல்லப்பட்டு, அடைக்கப்பட்டு கொல்லப்பட்டனர். அவர்களின் உடல்கள் எரிக்கப்பட்டு சாம்பலாக்கப்பட்டன. 1944 மே முதல் ஜூலை வரையிலான மூன்று மாதங்களில் மட்டும், ஹங்கேரியைச் சேர்ந்த சுமார் 400,000 யூதர்கள் ஆவுஷ்விட்ஸ்-பிர்கெனாவின் எரிவாயு அறைகளில் இந்த வழியில் கொல்லப்பட்டனர்.
வேலை செய்ய முடிந்தவர்கள் முகாமிலேயே அல்லது ஜேர்மன் நிறுவனங்களுக்காக, பசி மற்றும் சோர்வு காரணமாக இறக்கும் வரை அல்லது எரிவாயு அறைகளுக்குள் தள்ளப்படும் வரை உழைக்க வேண்டியிருந்தது. சிலர் மருத்துவ பரிசோதனைகளுக்காக ஆய்வக விலங்காக இறப்பதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டனர். IG Farben போன்ற ஜேர்மன் நிறுவனங்கள், மூன்று பிரதான வதை முகாம்களையும் 50 துணை முகாம்களையும் கொண்டிருந்த பிரமாண்டமான ஆவுஷ்விட்ச் வளாகத்தில் இந்த நோக்கத்திற்காகவே குறிப்பாக தொழிற்சாலைகளைக் கட்டின. நாஜிக்கள் லாபத்தின் கடைசி துளியையும் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து பிழிந்தெடுக்க முயன்றனர். அவர்களின் தலைமுடி மற்றும் தங்க பற்கள் கூட வணிக ஆதாயத்திற்காக பயன்படுத்தப்பட்டன.
ஆவுஷ்விட்ஸ், ஜேர்மனியின் அழித்தொழிப்பு முகாம்களில் ஒன்றாகும். போலந்து மற்றும் சோவியத் ஒன்றியத்தின் ஊடாக ஜேர்மன் துருப்புக்கள் முன்னேறியபோது, மில்லியன் கணக்கான மக்கள் சம்பவ இடத்திலேயே சுட்டுக் கொல்லப்பட்டனர் அல்லது பிற மிருகத்தனமான வழிகளில் கொல்லப்பட்டனர்.
இந்தப் பாரிய படுகொலைக்கு பொறுப்பானவர்களில் ஒரு சிலர் மட்டுமே அவர்களின் நடவடிக்கைகளுக்காக பொறுப்பாக்கப்பட்டனர். குறிப்பாக, போருக்குப் பின்னர் சோவியத் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த கிழக்கு ஐரோப்பாவில், விசாரணைகள் நடத்தப்பட்டு, சிலருக்கு மரண தண்டனைகளும் வழங்கப்பட்டன. 1945-46 இல் நூரெம்பேர்க்கில், போர்க்கால நேச நாடுகள், நாஜி ஆட்சியின் முன்னணி பிரதிநிதிகள் மீது 13 விசாரணைகளை நடத்தின.
இருப்பினும், 24 மரண தண்டனைகள் மற்றும் 118 சிறை தண்டனைகளுடன் விளைவு சுமாராகவே இருந்தது, பின்னர் இவற்றின் காலம் விரைவில் குறைக்கப்பட்டன. நூரெம்பேர்க் விசாரணைகளின் முக்கிய முக்கியத்துவம் அவை சர்வதேச சட்டத்தில் புதிய தரங்களை நிர்ணயித்தன என்ற உண்மையில் தங்கியுள்ளது.
நாஜிக்களை ஆதரித்த மற்றும் கட்டாய உழைப்பில் இருந்து இலாபம் அடைந்த வணிகத் தலைவர்களும் நூரெம்பேர்க்கில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். அவர்களுக்கு குறுகிய கால சிறைத்தண்டனைகள் மட்டுமே கிடைத்தது. இந்த தண்டனைகள் முதன்மையாக அவர்களின் சொந்த பாதுகாப்பிற்காகவே இருந்தது. கொள்ளை மற்றும் பாரிய படுகொலைகள் மூலம் அவர்கள் சம்பாதித்த சொத்துக்களில் பெரும்பாலானவற்றை அவர்கள் வைத்திருக்க அனுமதிக்கப்பட்டனர். மேலும், சிறையில் இருந்தபடியே தங்கள் நிறுவனங்களை நடத்தவும் அனுமதிக்கப்பட்டனர். இன்றளவும், பல ஜேர்மன் பில்லியனர் குடும்பங்களின் செல்வமானது, அவர்களின் பெற்றோர்கள் மற்றும் தாத்தா பாட்டிகள் நாஜி ஆட்சிக்கு உடந்தையாக இருந்து, சூறையாடப்பட்டவை என்று அறியப்படுகிறது.
யுத்தத்துக்கு பின்னரான பனிப்போர் தொடங்கியவுடன், மேற்கில் நாஜி குற்றவாளிகள் மீதான வழக்கு பெரும்பாலும் நிறுத்தப்பட்டது. இராணுவ அதிகாரிகள், இரகசிய போலீஸ் முகவர்கள், நீதிபதிகள், மூத்த அரசு ஊழியர்கள், பேராசிரியர்கள் மற்றும் வணிகத் தலைவர்கள் “நாஜி நீக்கம்” செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டு அவர்களின் பழைய பதவிகளுக்கு திரும்புவதற்கு அனுமதிக்கப்பட்டனர். முக்கியமான பணியாளர் முடிவுகள் எடுக்கப்பட்ட சான்சலர் அலுவலகம், நூரெம்பேர்க் இனச் சட்டங்களின் இணை ஆசிரியரும் விளக்கவுரையாளருமான ஹான்ஸ் க்ளோப்கே (Hans Globke) தலைமையில் இருந்தது.
சோவியத் துருப்புக்கள் வெகுஜனப் படுகொலைகளை முடிவுக்குக் கொண்டு வந்த 18 ஆண்டுகளுக்குப் பிறகும், ஜேர்மனியில் முதல் ஆவுஷ்விட்ஸ் விசாரணை 1963 வரை நடைபெறவில்லை. இதற்கு, ஹெஸ் மாநிலத்தின் தலைமை வழக்கறிஞரான ஃபிரிட்ஸ் பாயரின் அயராத முயற்சிகள் முக்கிய காரணமாகும். அவர் எண்ணற்ற தடைகள் மற்றும் தனிப்பட்ட தாக்குதல்களுக்கு எதிராகப் போராட வேண்டியிருந்தது. இங்கும் தண்டனை பெற்றவர்களின் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது. எவ்வாறாயினும், பிராங்பேர்ட் ஆவுஷ்விட்ஸ் விசாரணைகள் பெரும் கல்வி மதிப்பைக் கொண்டிருந்தன. அவை போருக்குப் பின்னர் வளர்ந்திருந்த இளைய தலைமுறையின் கண்களைத் திறந்து, அவர்களின் தீவிரமயமாக்கலுக்கும் 1968-69 வெகுஜன எதிர்ப்பு போராட்டங்களுக்கும் கணிசமான பங்களிப்பை வழங்கின.
1970 களில், நாஜி ஆட்சியுடனான மோதல் பள்ளிகளிலும் அதன் வழியைக் கண்டது. பல பழைய நாஜிக்கள் அப்போது ஓய்வு பெற்று, 1968 இயக்கத்தால் பாதிக்கப்பட்ட இளைய ஆசிரியர்களால் மாற்றப்பட்டனர். “மீண்டும் ஒருபோதும் வேண்டாம்!” என்ற சுலோகம், இந்த பேரழிவுக்கு துல்லியமாக என்ன வழிவகுத்தது என்பதை அவர்கள் புரிந்து கொள்ளாமலேயே, ஒரு தலைமுறையின் நனவில் ஆழமாக பொறிக்கப்பட்டிருந்தது. ஆனால் பரந்த பெரும்பான்மையினர் மனிதகுலத்திற்கு எதிரான அத்தகைய குற்றம் மீண்டும் நிகழக்கூடாது, மீண்டும் செய்யப்படக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தனர்.
ஆவுஷ்விட்ஸ் விடுதலை பெற்று எண்பது ஆண்டுகளுக்குப் பிறகும், நிலைமை தற்போதும் தொடர்கிறது. இனப்படுகொலை, ஒட்டுமொத்த மக்களையும் அவர்களின் தேசிய வம்சாவளி அல்லது மதத்தின் காரணமாக துன்புறுத்துதல், படுகொலை செய்தல், அப்பாவி மக்களையும், சிப்பாய்களையும் இலக்கு வைத்து நடத்தப்படும் “முழுமையான போர்”, அணுஆயுதங்களின் சாத்தியமான பயன்பாடு கூட மீண்டுமொருமுறை “இயல்பானதாக” ஆக்கப்படுகிறது. இதுவே, முன்னாள் ஆவுஷ்விட்ஸ் வதை முகாம் இருந்த இடத்தில் ஜனவரி 26ம் திகதி மாலை 4 மணிக்கு நடைபெற்ற அதிகாரப்பூர்வ நினைவு விழாவின் சிறப்பியல்பாகும்.
இந்த நிகழ்வில், உத்தியோகபூர்வ விருந்தினர் பட்டியலில் பல நாடுகளின் தலைவர்களும் ஐரோப்பாவின் அரசாங்கத் தலைவர்களும் இருந்தனர். பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோன், ஜேர்மன் ஜனாதிபதி பிராங்க்-வால்டர் ஸ்ரைன்மயர், சான்சிலர் ஓலாஃப் ஷோல்ஸ் மற்றும் பிரிட்டனின் மன்னர் சார்லஸ் ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
பெரும் விலை கொடுத்து ஆவுஷ்விட்ச்சை விடுவித்த சோவியத் ஒன்றியத்தின் முக்கிய வாரிசு நாடான ரஷ்யா, இந்த நிகழ்வில் பிரதிநிதித்துவம் செய்யப்படவில்லை. இதற்குக் காரணம், உக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்க-நேட்டோ போரில், ஜேர்மனி மீண்டுமொருமுறை கிழக்கு போர் முனையில் போரைத் தொடுத்து வருகிறது. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு போர் தொடங்கியதில் இருந்து, ஏகாதிபத்திய சக்திகள் உக்ரேனுக்கு ஆயுதங்கள், வெடிமருந்துகள் மற்றும் நிதி உதவியுடன் மொத்தம் 213 பில்லியன் யூரோக்களை வழங்கியுள்ளன. இன்னும் 147 பில்லியன் யூரோக்களை மேலதிகமாக வழங்குவதற்கு ஏற்கனவே உறுதியளித்துள்ளன.
இந்தப் போர், ரஷ்ய ஆக்கிரமிப்புப் போருக்கு எதிராக உக்ரேனைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டது என்ற கூற்று வெறுமனே ஒரு பொய்யாகும். உண்மையில், நேட்டோ அதன் முந்தைய உறுதிமொழிகளுக்கு மாறாக, ரஷ்யாவிற்குள் மேலும் அதன் நடவடிக்கைகளை விரிவாக்கியதன் காரணமாக இந்தப் போர் தூண்டப்பட்டது.
சோவியத் ஒன்றியத்தின் கலைப்பு மற்றும் பில்லியனர் தன்னலக்குழுக்களால் சமூக சொத்துக்கள் சூறையாடப்பட்டதன் மூலம் அதன் அதிகாரத்திற்குக் கடமைப்பட்டிருக்கும் புட்டின் ஆட்சியிடம், இதற்கு எந்த முற்போக்கான பதிலும் இல்லை. உக்ரேனிய மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கத்திற்கு அழைப்புவிட இலாயக்கற்றிருந்த புட்டினின் ஆட்சி, ஒரு பிற்போக்குத்தனமான போரைக் கொண்டு பதிலளித்தது. இருப்பினும், போருக்கான பொறுப்பு நேட்டோவிடம் உள்ளது. அது உக்ரேனைக் கட்டுப்படுத்துதல், ரஷ்யாவை உடைத்தல் மற்றும் இரு நாடுகளின் பரந்த இயற்கை வளங்களை சுரண்டுதல் என்ற இலக்குகளைப் பின்தொடர்கிறது.
ஆவுஷ்விட்ஸ் நினைவேந்தலில் விருந்தினர்களின் அதிகாரப்பூர்வ பட்டியலில் எந்த உக்ரேனிய பிரதிநிதியும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ரஷ்யாவிற்கு எதிரான போரில் போலந்து உக்ரேனின் நெருங்கிய கூட்டாளிகளில் ஒன்றாக இருப்பதால் இது மாறக்கூடும்.
இருப்பினும், ஆவுஷ்விட்ஸ் நினைவேந்தலுக்கு போலந்து உக்ரேனை அழைக்காததற்கு இதர காரணங்களும் உள்ளன. கியேவ் ஆட்சி யூத இனப்படுகொலையை மேற்கொண்ட நாஜி ஒத்துழைப்பாளர்கள் மற்றும் உடந்தையாளர்களை கௌரவித்து வருகிறது. ஆவுஷ்விட்ச்சில் இருந்து 400 கிலோ மீட்டருக்கும் குறைவான தொலைவில் உள்ள உக்ரேனிய நகரமான எல்விவில், நாஜி ஒத்துழைப்பாளரான ஸ்டீபன் பண்டேராவின் OUN கட்சியானது, இனப்படுகொலைக்கு ஆதரவு கொடுத்தது மட்டும் இல்லாமல், இனரீதியாக தூய்மைபடுத்தப்பட்ட மேற்கு உக்ரேனை தோற்றுவிப்பதற்காக பல்லாயிரக்கணக்கான போலந்து மக்களையும் கொன்று தள்ளியது. அதிகாரப்பூர்வ பண்டேரா வழிபாட்டு முறை வார்சோவிற்கும் கியேவிற்கும் இடையில் பலமுறை மோதல்களுக்கு வழிவகுத்துள்ளது.
இஸ்ரேல் கல்வி அமைச்சர் யோவ் கிஷ் இந்த நிகழ்வில் கலந்துகொண்டார். பிரதம மந்திரி பெஞ்சமின் நெதன்யாகு ஆவுஷ்விட்ஸுக்கு பயணம் செய்யவில்லை. ஏனென்றால், சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்காக அவருக்கு எதிராக கைது ஆணை பிறப்பித்துள்ளது. போலந்தில் சட்டபூர்வமாக செயல்படுத்த கடமைப்பட்டுள்ள அவர் மீதான கைது ஆணை புறக்கணிக்கப்பட வேண்டுமா என்பது பற்றி நீண்ட விவாதம் நடந்தது.
நாஜிக்களின் அச்சமூட்டும் வழிமுறைகளுக்கு இணையான விதத்தில், பாலஸ்தீனியர்களுக்கு எதிரான இஸ்ரேலின் நடவடிக்கைகள் இனப்படுகொலை எந்த அளவிற்கு மீண்டும் அதிகாரப்பூர்வமாக “இயல்பானதாக” ஆகியிருக்கிறது என்பதற்கான தெளிவான எடுத்துக்காட்டு ஆகும்.
அமெரிக்க அரசாங்கத்திலிருந்து, நினைவேந்தலில் மூன்றாம் நிலை உறுப்பினரும், பில்லியனரும் மத்திய கிழக்கு தூதருமான ஸ்டீவ் விட்கோஃப் மட்டுமே பிரதிநிதித்துவம் செய்தார். ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஹிட்லருக்கு மறைமுகமான ஆதரவை கொடுத்து வருகிறார். மேலும் அவரது கொள்கைகள் - மில்லியன் கணக்கான புலம்பெயர்ந்தோரை நாடு கடத்துதல், பாரிய சமூக வெட்டுக்கள், ஒரு போலீஸ் அரசை நிறுவுதல், போட்டியாளர்கள் மற்றும் கூட்டாளிகளுக்கு எதிரான வன்முறை அச்சுறுத்தல்கள் - நாஜிக்களின் கொள்கைகளுக்கு வலுவாக இணையானவை என்பதைக் காட்டுகின்றன.
ட்ரம்பின் நெருங்கிய நம்பிக்கைக்குரியவரும், உலகின் மிகப் பெரிய பணக்காரருமான எலோன் மஸ்க், ஆவுஷ்விட்ஸ் நினைவு நிகழ்விற்கு முந்தைய வாரயிறுதியில் ஹாலேயில் (Halle) நடந்த அதிவலது ஜேர்மனிக்கான மாற்றீடு கட்சின் (AfD) தேர்தல் பிரச்சார தொடக்க நிகழ்வில் ஒரு பெரிய திரையில் உரையாற்றியிருந்தார். இந்த அதிதீவிர வலதுசாரிக் கட்சியின் 4,500 உற்சாகமான ஆதரவாளர்களை, “கடந்த கால குற்ற உணர்ச்சிகளில் அதிகமாக கவனம் செலுத்துவதை” நிறுத்துமாறு அவர் அழைப்பு விடுத்தார். பிள்ளைகள் தங்கள் கொள்ளுத் தாத்தா பாட்டி செய்த பாவங்களுக்குக் குற்றவாளிகளாக இருக்கக்கூடாது என்று எலோன் மஸ்க் குறிப்பிட்டார். மேலும், “ஜேர்மனியில் உள்ள மக்கள் ஜேர்மனியராக இருப்பதில் பெருமைப்படுவது மிகவும் முக்கியம்” என்று மஸ்க் வலியுறுத்தினார். ஆகவே, ஆவுஷ்விட்ஸ் நினைவுகூரல் என்பது இவர்களுக்கு தொந்தரவு மட்டுமே செய்யும்.
ஆவுஷ்விட்ஸ் விடுவிக்கப்பட்டு எண்பது ஆண்டுகளுக்குப் பின்னர், நாஜி காட்டுமிராண்டித்தனம் ஒரு வரலாற்று விபத்து என்று இனியும் கூற முடியாது. அது முதலாளித்துவ சமூக அமைப்புமுறையின் திவால்நிலையின் ஒருமுகப்படுத்தப்பட்ட வெளிப்பாடாக இருந்தது. முதலாம் உலகப் போரின் போது, ஜேர்மன் ஏகாதிபத்தியம் ஐரோப்பாவை அதன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரவும் கிழக்கு நோக்கி விரிவடையவும் முயன்று தோல்வியுற்றது. நாஜிக்களின் கீழ், அது இரண்டாவது முயற்சியை மேற்கொண்டது. தொழிலாளர் இயக்கத்தை நசுக்கி, முழுப் பொருளாதாரத்தையும் போர் உற்பத்திக்கு மாற்ற, ஜேர்மன் ஏகாதிபத்தியத்துக்கு ஹிட்லர் தேவைப்பட்டார்.
தொழிலாள வர்க்கம் அப்போதே ஹிட்லரைத் தடுத்திருக்க முடியும். ஜேர்மன் தொழிலாளர்களின் இரண்டு பிரதான கட்சிகளான சமூக ஜனநாயகக் கட்சி (SPD) மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி (KPD) ஆகியவை நாஜிக்களை விட அதிக ஆதரவாளர்களைக் கொண்டிருந்தன. அவை ஜேர்மன் பொருளாதாரத்தின் இதயத்தானத்தில் ஒப்பிடவியலாத பலமான இடத்தைப் பிடித்திருந்தன. ஆனால், சமூக ஜனநாயகக் கட்சியோ அல்லது ஜேர்மன் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையோ போராடத் தயாராக இல்லை. சமூக ஜனநாயகக் கட்சி வைய்மார் அரசையும் குடியரசின் ஜனாதிபதி ஹின்டென்பேர்க்கையும் நம்பியிருந்தது. அவர்தான் இறுதியில் ஹிட்லர் அதிகாரத்திற்கு வர உதவினார். ஸ்டாலினின் தீங்கு விளைவிக்கும் செல்வாக்கின் கீழ் இருந்த ஜேர்மன் கம்யூனிஸ்ட் கட்சி, சமூக ஜனநாயகக் கட்சி மீதான தீவிரவாத வாய்மொழித் தாக்குதல்களுக்குப் பின்னால் போராட அதன் விருப்பமின்மையை மறைத்தது.
தொழிலாள வர்க்கத் தலைமையின் தோல்வியின் விளைவாகவே யூதர்களின் இனப்படுகொலை நடந்தது. சமூக பதட்டங்களை திசைதிருப்புவதற்காக, சிறுபான்மையினருக்கு எதிராக ஹிட்லர் யூத-எதிர்ப்புவாதத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்தினார். இதை அவர் வியன்னாவில் யூத-எதிர்ப்புவாத மேயர் கார்ல் லூகெரிடமிருந்து கற்றுக் கொண்டார். இது, சோவியத் ஒன்றியத்திற்கு எதிரான நிர்மூலமாக்கும் போர் பின்னர் அவரது கொலைகார திட்டங்களை யதார்த்தமாக்குவதற்கான நிலைமைகளை உருவாக்கியது.
இன்று, புலம்பெயர்ந்தோர் மீதான தாக்குதல்கள், குறிப்பாக முஸ்லீம் மத நம்பிக்கை கொண்டவர்கள் மீதான தாக்குதல்கள், கடந்த காலத்தில் யூத-எதிர்ப்புவாதம் வகித்த அதே பாத்திரத்தை வகிக்கின்றன. ஆனால், யாரும் தவறாக எண்ணிவிடக் கூடாது: எங்கெல்லாம் வலதுசாரி தீவிரவாதிகளும் பாசிசவாதிகளும் இருக்கிறார்களோ, அங்கே யூத-எதிர்ப்புவாதமும் பரவலாக உள்ளது.
உலகம் இப்போது ஜேர்மன் ஏகாதிபத்தியத்தின் வெடிப்பை மட்டுமல்ல, மாறாக அமெரிக்க ஏகாதிபத்தியத்தையும் எதிர்கொண்டுள்ளது. ஹிட்லரைப் போன்று ட்ரம்ப் ஒரு வரலாற்று விபத்து அல்ல. உலக சோசலிச வலைத்தளம் (WSWS) அறிவித்ததைப் போல, வெள்ளை மாளிகைக்கு ட்ரம்ப் மீண்டும் திரும்பியிருப்பது, “அமெரிக்க அரசியல் அதன் அடித்தளத்தில் உள்ள சமூக யதார்த்தத்துடன் வன்முறையாக மறுஅணிதிரள்வதை” குறிக்கிறது. மிகப்பெரிய சமூக ஏற்றத் தாழ்வுகளையும், அதன் போட்டியாளர்களுடன், குறிப்பாக சீனாவுடன் ஒப்பிடும்போது அமெரிக்கப் பொருளாதாரத்தின் ஒப்பீட்டளவிலான வீழ்ச்சியும், ஜனநாயகம் மற்றும் அமைதியுடன் சமரசம் காண முடியாது.
இது, ஜேர்மனிக்கும் ஐரோப்பாவிற்கும் பொருந்தும். ஹங்கேரி, இத்தாலி, நெதர்லாந்து மற்றும் விரைவில் ஆஸ்திரியாவில் அதிவலதுசாரி கட்சிகள் ஏற்கனவே அதிகாரத்தில் உள்ளன. ஜேர்மனியில், தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகளில் அதிவலதுசாரி AfD கட்சியானது, சுமார் 20 சதவீத ஆதரவுடன் இரண்டாவது பலமான கட்சியாக உள்ளது. அடுத்த ஜேர்மன் அரசாங்கம் பாதுகாப்பு செலவினங்களை இரட்டிப்பாக்க அல்லது மும்மடங்காக்க விரும்புகிறது. அனைத்து ஸ்தாபக கட்சிகளும் இதில் உடன்படுகின்றன. இதை பாசிச வழிமுறைகளால் மட்டுமே அடைய முடியும்
ஆவுஷ்விட்ஸ் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய ஒரு படிப்பினை இருக்கிறது என்றால், அது இதுதான்: அதாவது, பாசிசத்தையும் போரையும் தொழிலாள வர்க்கத்தின் தலையீட்டால் மட்டுமே ஒழித்துக்கட்ட முடியும். அது, அனைத்து ஜனநாயக மற்றும் சமூக உரிமைகளையும் பாதுகாப்பதற்கு, சர்வதேச அளவில் ஐக்கியப்பட வேண்டும். அது, செல்வந்த தன்னலக்குழுக்களின் சொத்துக்களைப் பறிமுதல் செய்து ஒரு சோசலிச சமூகத்தைக் கட்டியெழுப்ப வேண்டும். இதைச் செய்வதற்கு, அதன் சொந்த கட்சியான ஜேர்மனியில் உள்ள சோசலிச சமத்துவக் கட்சியும், உலகெங்கிலும் உள்ள நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் சகோதரக் கட்சிகளும் அவசியமாகும்.