மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
ஞாயிறன்று நடைபெறுகின்ற கூட்டாட்சி தேர்தல்கள், போருக்குப் பிந்தைய ஜேர்மன் மற்றும் ஐரோப்பிய வரலாற்றில் ஒரு தீர்க்கமான திருப்புமுனையைக் குறிக்கின்றன. 80 ஆண்டுகளுக்கு முன்னர் மூன்றாம் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின்னர் முதல்முறையாக, நாஜிக்களுடன் நேரடியான சித்தாந்த தொடர்ச்சியைக் கொண்டுள்ள ஒரு கட்சி, அரசாங்கத்தில் நுழைவதற்கான ஒரு நிஜமான சாத்தியக்கூறைக் கொண்டுள்ளது.
21 சதவீத வாக்குகளைக் கொண்டிருக்கின்ற பாசிச ஜேர்மனிக்கான மாற்றீடு கட்சி (AfD), 28 சதவீத வாக்குகளைக் கொண்டிருக்கின்ற கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சியினருக்கு (CDU/CSU) பின்னால் உள்ளது. ஆளும் சமூக ஜனநாயகக் கட்சி (SPD) 16 சதவீதத்திற்கு வீழ்ச்சி அடைந்துள்ளது. அதேவேளையில், பசுமைக் கட்சி 14 சதவீதத்திலும் இடது கட்சி 8 சதவீதத்திலும் உள்ளன.
AfD அடுத்த அரசாங்கத்திற்கு வெளியே இருந்தாலும் கூட, அதன் எழுச்சி ஒட்டுமொத்த அரசியல் ஸ்தாபனத்தின் வலதை நோக்கிய பரந்த மாற்றத்தை பிரதிபலிக்கிறது. தேர்தல் பிரச்சாரத்தின் போது, நாடாளுமன்றத்தின் அனைத்துக் கட்சிகளும் புலம்பெயர்ந்தோரருக்கு எதிரான போரில் போட்டியிட்டு, இராணுவ மீள்ஆயுதமயமாக்கலுக்கு அழைப்பு விடுத்ததோடு, AfD இன் கொள்கைகளில் தங்களை இணைத்துக் கொண்டன — AfD இன் கௌரவத் தலைவரான அலெக்சாண்டர் கௌலாண்ட் (Alexander Gauland), “ஹிட்லரும் நாஜிக்களும், ஆயிரம் ஆண்டுகால வெற்றிகரமான ஜேர்மன் வரலாற்றில் வெறும் பறவையின் எச்சம் மட்டுமே “ என்று விவரித்தார்.
இருப்பினும், இவர்களுக்கான எதிர்ப்பு அதிகரித்து வருகிறது. ஜேர்மனியில் AfD க்கு எதிராகவும் ஜேர்மன் நாடாளுமன்றத்தில் அனைத்து கட்சிகளது வலதுசாரி திருப்பத்திற்கும் எதிராக நூறாயிரக் கணக்கானவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். பிரச்சாரத்தின் இறுதி நாட்களில், பல்லாயிரக்கணக்கான பொதுத்துறை ஊழியர்கள் வேலை வெட்டுக்கள் மற்றும் ஊதிய வெட்டுக்களுக்கு எதிராக எச்சரிக்கை வேலைநிறுத்தங்களை நடத்தினர்.
நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் ஜேர்மன் பிரிவான ஜேர்மன் சோசலிச சமத்துவக் கட்சி (SGP) இந்த எதிர்ப்புக்கு ஒரு அரசியல் குரலையும், ஒரு வரலாற்று முன்னோக்கையும் வழங்கிறது. ஜேர்மன் இராணுவவாதம் மற்றும் பாசிசவாதத்தின் மீள்வருகைக்கும் அவற்றுடன் சேர்ந்து வருகின்ற சமூக சீரழிவுக்கும் எதிரான போராட்டத்திற்கு, எல்லாவற்றிற்கும் மேலாக, அதற்கான காரணங்களைக் குறித்த ஒரு தெளிவான புரிதல் அவசியமாகும்.
AfD இன் வளர்ச்சி ஒரு தற்செயலானதல்ல, மாறாக பல தசாப்த கால பிற்போக்குத்தனமான கொள்கைகளின் விளைபொருளாகும். உத்தியோகபூர்வ பிரச்சாரத்தால் ஜனநாயகத்தின் வெற்றி என்று கொண்டாடப்பட்ட ஜேர்மன் மறுஐக்கியம் இடம்பெற்று 30 ஆண்டுகளுக்கும் அதிகமான காலத்திற்குப் பின்னர், கிழக்கு ஜேர்மனியில் முதலாளித்துவத்தின் மீட்சி முழுப் பிராந்தியங்களையும் பேரழிவிற்கு உட்படுத்தி, பாரிய வேலையின்மையையும் சமூக அவலங்களையும் தோற்றுவித்துள்ளது.
கிழக்கு ஜேர்மனி பொருளாதாரத்தின் சீரழிவு, அதனால் விளைந்த வறுமை மற்றும் எதிர்காலத்திற்கான வாய்ப்பின்மை ஆகியவை பாசிஸ்ட்டுக்களுக்கு ஒரு விளைநிலத்தை உருவாக்கின. சமூக ஜனநாயகக் கட்சியும் ஸ்ராலினிச சோசலிச ஐக்கிய கட்சியின் —ஜனநாயக சோசலிசக் கட்சி மற்றும் இடது கட்சி— வாரிசுக் கட்சிகளும் இந்த நிகழ்ச்சிப்போக்கிற்கு வசதி செய்து கொடுத்தன. தொழிற்சங்கங்களின் ஒத்துழைப்புடன், சமூக வேலைத்திட்டங்கள் மீதான தாக்குதல்களை அவை ஒழுங்கமைத்தன.
சமீபத்திய ஆண்டுகளில், அனைத்து ஸ்தாபக கட்சிகளும் ஊடகங்களும் AfD இன் அகதிகள்-விரோத கொள்கையை ஏற்பது உட்பட அதை அங்கீகரிப்பதற்கும் உதவியுள்ளன. தேர்தல் பிரச்சாரத்தின் போது, CDU வேட்பாளரான பிரெடெரிக் மெர்ஸ் (Friedrich Merz), தஞ்சம் கோரும் உரிமை மீதான சட்டங்களை கடுமையாக்க ஜேர்மன் நாடாளுமன்றத்தில் AfD உடன் பெரும்பான்மையை வென்றார். அவ்விதத்தில் அவர் பாசிசவாதிகளுடன் சேர்ந்து ஆட்சி புரிவதற்கான அவரது விருப்பத்தை சமிக்ஞை செய்தார். அதிவலதுசாரிகளின் அகதிகள் தொடர்பான கொள்கையை நடைமுறைப்படுத்த தங்களுடன் இணைந்து செயல்பட மறுத்ததற்காக சமூக ஜனநாயகக் கட்சி மற்றும் பசுமை கட்சியினர் மெர்ஸைத் தாக்கினர்.
ஹிட்லரின் நாஜி கட்சியைப் போலன்றி, AfD க்கு பாரிய பாசிச அடித்தளம் இல்லை. குறிப்பாக கிழக்கு ஜேர்மனியில், ஸ்தாபக கட்சிகள் மற்றும் அவற்றின் தொழிலாளர்-விரோத கொள்கைகள் மீதான கோபத்தில் இந்தக் கட்சிக்கு பல தொழிலாளர்கள் வாக்களிக்கின்றனர். அரசாங்கத்தின் மறுஆயுதபாணியாக்கம், ஆக்ரோஷமான போர்க் கொள்கை மற்றும் ரஷ்யாவிற்கு எதிரான நேட்டோவின் போரை விமர்சிப்பதால், முற்றிலும் இராணுவவாத AfD கூட போர் எதிர்ப்பு உணர்வை சுரண்டிக் கொள்ளக்கூடிய நிலைமைகளை உருவாக்கியுள்ளது.
இந்த அபிவிருத்திகள் போருக்குப் பிந்தைய ஜேர்மன் வரலாற்றின் ஒரு அடிப்படை கட்டுக்கதையை தகர்க்கின்றன. அதாவது, பாசிசம் என்பது இரண்டாம் உலகப் போருக்கு முந்தைய நெருக்கடிக்கு மட்டுப்படுத்தப்பட்ட ஒரு வரலாற்று ஒழுங்கின்மை என்பதே அந்த கட்டுக்கதையாகும். ஆனால் உண்மையில், ஆளும் வர்க்கம் முதலாளித்துவத்தின் ஆழமான நெருக்கடிக்கு ஒரு பிரதிபலிப்பாக பாசிசத்தை நோக்கித் திரும்புகிறது.
அமெரிக்காவில் உள்ள அவர்களின் சகாக்களைப் போலவே, ஜேர்மன் ஆளும் வர்க்கமும் மீள்ஆயுதமயமாக்கல், சமூக வெட்டுக்கள் மற்றும் சர்வாதிகாரத்தை நடைமுறைப்படுத்த மீண்டுமொருமுறை பாசிச சக்திகளை நோக்கித் திரும்பி வருகிறது. சோசலிச சமத்துவக் கட்சியின் தேர்தல் அறிக்கை பின்வருமாறு எச்சரிக்கிறது: “டொனால்ட் ட்ரம்ப் ... பொருளாதார ரீதியாக மிரட்டி பணம் பறிப்பதற்கு, இராணுவ வெற்றி மற்றும் வன்முறை ஒடுக்குமுறை ஆகியவற்றின் ஒரு கொள்கையைப் பின்பற்றுகிறார்.”
ஜேர்மன் ஆளும் வர்க்கமும் இதேபோன்ற பாதையைப் பின்பற்றி வருகிறது. “அமெரிக்காவை மீண்டும் மகத்தானதாக்குவோம்” என்பதற்கு ஜேர்மன் ஆளும் வர்க்கத்தின் பதில், “அனைத்திற்கும் மேலாக ஜேர்மனி” என்பதாக இருக்கிறது. ஹிட்லருக்குப் பின்னர் பார்த்திராத வேகத்தில் ஜேர்மன் இராணுவத்தை மீள்ஆயுதபாணியாக்குவதன் மூலமாக ட்ரம்புக்கு ஜேர்மன் ஆளும் வர்க்கம் பதிலளிக்கிறது. கூட்டாட்சி பாராளுமன்றத்தில் (Bundestag) பிரதிநிதித்துவம் செய்யும் அனைத்துக் கட்சிகளும் இதில் ஒன்றுபட்டுள்ளன. ரஷ்யாவுக்கு எதிரான போரில், அவர்கள் ஓர் அணுஆயுத மோதல் அபாயத்தை எடுக்கத் தயாராக உள்ளனர். காஸாவில் இடம்பெற்றுவரும் இனப்படுகொலையை அவர்கள் ஆதரித்து வருகின்றனர். சமூக ஜனநாயகக் கட்சி (SPD) தலைமையிலான மதிப்பிழந்த கூட்டணி அரசாங்கத்தை விட, போர்க் கொள்கைகளையும் அதையொட்டிய சமூக வெட்டுக்களையும் மிகவும் திறம்பட செயல்படுத்தும் திறன் கொண்ட ஒரு அரசாங்கத்தை நிறுவுவதற்காக கூட்டாட்சி தேர்தல் முன்கூட்டியே கொண்டு வரப்பட்டுள்ளது.
மூனிச் பாதுகாப்பு மாநாட்டில் அட்லாண்டிக் கடந்த நாடுகளுக்கு இடையிலான உறவுகளின் முறிவும், அத்துடன் புட்டினுடன் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்துவதன் மூலமாக உக்ரேனில் ஐரோப்பாவைப் புறக்கணிக்கும் அமெரிக்காவின் அச்சுறுத்தலும் இந்த அபிவிருத்திகளை மேலும் தீவிரப்படுத்தி உள்ளன. ஜேர்மன் ஆளும் வர்க்கம் மீள்ஆயுதமயமாக்கல் மற்றும் போரின் ஒரு கண்கூடான வெறியுடன் எதிர்வினையாற்றி வருகிறது.
நேட்டோ தூண்டிய உக்ரேன் மீதான ரஷ்ய படையெடுப்பைத் தொடர்ந்து, வெளியுறவுக் கொள்கையில் ஜேர்மனியின் “புதிய சகாப்தத்தின்” ஒரு பகுதியாக இராணுவச் செலவினங்களை இரட்டிப்பாக்கும் பிரச்சாரத்தின் போது, சான்சலர் ஓலாஃப் ஷொல்ஸ் (Olaf Scholz) பெருமை பீற்றினார். பசுமைக் கட்சி வேட்பாளரான ரோபர்ட் ஹாபெக் (Robert Habeck), மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.5 சதவீதமாக இராணுவச் செலவினங்களை மூன்று மடங்காக உயர்த்த அழைப்பு விடுத்துள்ளார். மேலும், அடுத்த அரசாங்கம் ஐரோப்பாவின் இராணுவ பலத்தைக் கட்டியெழுப்புவதில் “உறுதியாக இருக்க வேண்டும்” என்று அவர் அறிவித்துள்ளார்.
ஹிட்லரின் மூன்றாம் பேரரசின் போது பாதுகாப்புப்படையின் (Wehrmacht) மீள்ஆயுதமயமாக்கலை ஆதரித்த உலகப் பொருளாதாரத்திற்கான கீல் (Kiel) பயிலகம், அமெரிக்க இராணுவ ஆதரவை பிரதியீடு செய்ய ஐரோப்பா என்ன நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதை சமீபத்தில் கோடிட்டுக் காட்டியது. இராணுவத்தின் திறன் இடைவெளிகளை இட்டுநிரப்ப 50 கூடுதல் படையணிகளும், ஆயிரக் கணக்கான புதிய டாங்கிகள் மற்றும் காலாட்படை சண்டையிடும் வாகனங்களும், மற்றும் ரஷ்யாவுடனான ஒரு சாத்தியமான போரில் நேட்டோவுக்காக 100,000 துருப்புகளை ஜேர்மன் இராணுவம் அணிதிரட்ட வேண்டியிருக்கும் என்றும் அதன் அறிக்கை மதிப்பிடுகிறது.
ஹாபெக்கைப் போலவே, மெர்ஸும், சான்சிலராக அவர் மாஸ்கோவை எட்டக்கூடிய நீண்ட தூர டாரஸ் (Taurus) கண்டம்விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளையும் கியேவுக்கு வழங்க இருப்பதாக ஏற்கனவே அறிவித்துள்ளார். இது, ஜேர்மன் ஏகாதிபத்தியம் மீண்டுமொருமுறை ரஷ்யாவுக்கு எதிரான போருக்கு தயாரிப்பு செய்து வருகிறது என்பதில் எந்த சந்தேகத்திற்கும் இடம் வைக்கவில்லை. “எல்லைகளை மீறுவதில் இருந்து புட்டின் மேலும் பின்வாங்குவதற்கு வெட்கப்பட மாட்டார்” என்று “உறுதியாக கருத முடியும்” என்று தேர்தலுக்கு முந்தைய நாள் மெர்ஸ் தெரிவித்தார். “நேட்டோ பிராந்தியம் புட்டினின் பார்வையில் உள்ளது, நாம் அதற்கு தயாராக இருக்க வேண்டும்” என்று அவர் மேலும் தெரிவித்தார்.
இது யதார்த்தத்தை தலைகீழாக மாற்றுகிறது. உண்மையில், ஜேர்மன் ஆளும் வர்க்கம்தான், 20 ஆம் நூற்றாண்டில் அதன் காட்டுமிராண்டித்தனமான குற்றங்களுக்கு இடையே, மீண்டுமொருமுறை “எல்லைகளை அத்துமீறுவதுடன்” கிழக்கு நோக்கி உந்தி, அதன் இருண்ட பாரம்பரியங்களை உள்ளிழுத்துக் கொண்டிருக்கிறது.
ஆரம்பத்தில் இருந்தே இந்த அபிவிருத்திகளை முன்கணித்து அவற்றுக்கு எதிராக போராடி வருகின்ற ஒரே கட்சி சோசலிச சமத்துவக் கட்சி (SGP) மட்டுமே ஆகும். 2014 க்குப் பின்னர், ஜேர்மன் இராணுவவாதத்தின் மீள்வருகைக்கு எதிராகவும், அதனுடன் இணைந்த பாசிசவாதிகளைப் பலப்படுத்துவதற்கு எதிராகவும், SGP திட்டமிட்டு எச்சரித்து வந்துள்ளது.
அப்போதைய வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்தவரும், இப்போதைய கூட்டாட்சி ஜனாதிபதியுமான பிராங்க்-வால்டர் ஸ்ரைன்மையர் (SPD), 2014 மூனிச் பாதுகாப்பு மாநாட்டில், ஜேர்மனி “உலக அரசியலைப் பற்றி பக்கவாட்டில் இருந்து கருத்துரைப்பதை விட, மிகப் பெரியதாகவும் பொருளாதார ரீதியாகவும் மிகவும் வலிமையாக உள்ளது” என்று அறிவித்த போதும், அதன்பின் ஜேர்மன் அரசாங்கம் உக்ரேனில் ரஷ்ய-விரோத ஆட்சிக்கவிழ்ப்பு சதியை ஆதரித்த போதும், நாம் ஒரு தீர்மானத்தில் பின்வருமாறு எழுதினோம்:
வரலாறு ஒரு பழிவாங்கலுடன் திரும்பி வருகிறது. நாஜிக்களின் குற்றங்கள் மற்றும் இரண்டாம் உலகப் போரில் அதன் தோல்விக்கு ஏறத்தாழ 70 ஆண்டுகளுக்குப் பின்னர், ஜேர்மன் ஆளும் வர்க்கம் மீண்டுமொருமுறை கெய்சர் பேரரசு மற்றும் ஹிட்லரின் ஏகாதிபத்திய வல்லரசு அரசியலை ஏற்று வருகிறது.
ஜேர்மனி ஓர் ஆக்ரோஷமான ஏகாதிபத்திய வெளியுறவு கொள்கைக்குத் திரும்பியிருப்பதுடன், நாஜிக்கள் மேற்கொண்ட குற்றங்களைக் குறைத்துக் காட்டுவதுடன் கைகோர்த்து செல்கிறது. மேலும் 2014 ஆம் ஆண்டில், தீவிர வலதுசாரி ஹம்போல்ட் பல்கலைக்கழக பேராசிரியர் ஜோர்க் பாபெரோவ்ஸ்கி (Jörg Baberowski) Der Spiegel பத்திரிகையில், “ஹிட்லர் ஒரு மனநோயாளி அல்ல, அவர் கொடூரமானவர் அல்ல. யூதர்களை அழித்தொழிப்பது குறித்து அவர் தனது மேசையில் பேச விரும்பவில்லை” என்று அறிவித்தார். அதே மூச்சில், அவர் ரஷ்ய உள்நாட்டுப் போரில் நடந்த படுகொலை மற்றும் துப்பாக்கிச் சூடுகளை ஒப்பிட்டு, “அடிப்படையில், இவை இரண்டும் ஒன்றே: இவை தொழில்மயமாக்கப்பட்ட கொலைகள்” என்று கூறினார்.
அனைத்துக் கட்சிகளும் தீவிர வலதுசாரி பார்பெரோவ்ஸ்கியைப் பாதுகாத்தன. அதேவேளையில் அரசாங்கமானது, நாஜிசம் புத்துயிரூட்டப்பட்டு வருவதை எதிர்த்ததற்காக ஜேர்மன் சோசலிச சமத்துவக் கட்சியை குற்றகரமாக்கியது. அது ஜேர்மன் சோசலிச சமத்துவக் கட்சியை, வலதுசாரி தீவிரவாதிகளால் நிரம்பியுள்ள உள்நாட்டு உளவுத்துறை முகமையான அரசியலமைப்பு பாதுகாப்பு அலுவலகத்தின் கண்காணிப்பில் வைத்தது. ஜேர்மன் அரசுக்கும் ஆளும் உயரடுக்குகளுக்கும் உண்மையான எதிரி இடதுதான்.
2025 கூட்டாட்சி தேர்தல் ஒரு திருப்புமுனை மற்றும் எச்சரிக்கையாகும். ஜேர்மனியில், உலகப் போர் மற்றும் பாசிசவாதத்தின் கொடூரங்கள் நன்கறியப்பட்டவை. நாஜி குற்றங்களுக்கான — அழித்தொழிப்பு போரில் 27 மில்லியன் சோவியத் உயிர்கள் பலியாக்கப்பட்டதுடன், 6 மில்லியன் யூதர்கள் மீதான தொழில்மயமாக்கப்பட்ட படுகொலையும் இடம்பெற்றது— நினைவுச்சின்னங்கள் இடைவிடாத நினைவூட்டல்களாக நிற்கின்றன. இத்தகைய குற்றங்களை உருவாக்கிய அதே அதிகார மற்றும் போர் அரசியலுக்கு ஆளும் வர்க்கம் திரும்பும்போது, அது தொழிலாள வர்க்கத்துடன் ஒரு மிருகத்தனமான மோதலுக்குத் தயாராகி வருகிறது. தொழிலாளர்கள் ஒரு நனவான அரசியல் வேலைத்திட்டத்துடன் இதற்கு பதிலளிக்க வேண்டும்.
சமூக ஜனநாயகக் கட்சி, பசுமைக் கட்சி, இடது கட்சி அல்லது உயர் நடுத்தர வர்க்கத்தின் போலி-இடது குழுக்களுக்கு முறையிடுவது பேரழிவுக்கு வழிவகுக்கும். இந்தக் கட்சிகளும் தொழிற்சங்க எந்திரமும் வலதை நோக்கிய மாற்றத்தை எதிர்ப்பவர்கள் அல்ல. மாறாக, முதலாளித்துவ அரசின் சார்பாக அதைத் திணிப்பதில் செயலூக்கத்துடன் பங்கெடுத்துக் கொண்டிருக்கின்றன. அவை முதலாளித்துவ ஜனநாயகம் மற்றும் ஒட்டுமொத்த முதலாளித்துவ அமைப்புமுறையின் முழுமையான சிதைவையே பிரதிநிதித்துவம் செய்கின்றன. இந்த அடிப்படையில் தான், ஜேர்மனியில் மட்டுமல்ல, மாறாக உலகெங்கிலும் அதிவலதுகள் செல்வாக்கு பெற்று வருகின்றன.
இந்த அபிவிருத்தியை தார்மீக சீற்றத்தால் தடுத்து நிறுத்திவிட முடியாது. பாசிசம், இராணுவவாதம் மற்றும் சமூக சமத்துவமின்மைக்கு எதிரான போராட்டத்திற்கு, முதலாளித்துவ அரசியலின் ஒட்டுமொத்த கட்டமைப்பில் இருந்தும் அரசியல் ரீதியாக முறித்துக் கொள்வதும், சோசலிச அடிப்படையில் ஒரு சுயாதீனமான தொழிலாளர் இயக்கத்தை அபிவிருத்தி செய்வதும் அவசியமாகும்.
ஸ்ராலினிசம், சமூக ஜனநாயகம் மற்றும் அத்தனை வகையான குட்டி-முதலாளித்துவ தேசியவாதத்திற்கும் எதிராக புரட்சிகர மார்க்சிச வேலைத்திட்டத்தை பாதுகாத்து வந்துள்ள நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவில் உள்ள அதன் சகோதரக் கட்சிகளுடன் சேர்ந்து, சோசலிச சமத்துவக் கட்சி போராடி வருகிறது. ஜேர்மன் சோசலிச சமத்துவக் கட்சி இப்போது தொழிலாள வர்க்கத்தின் புதிய தலைமையாக கட்டியெழுப்பப்பட வேண்டும். உலகப் போர் மற்றும் காட்டுமிராண்டித்தனத்திற்குள் மீண்டும் செல்வதைத் தடுப்பதற்கான ஒரே வழி, முதலாளித்துவத்தை ஒழித்து, சமூகத்தை ஒரு புதிய, சமத்துவ அடிப்படையில் மறுஒழுங்கமைக்கின்ற ஒரு சோசலிசப் புரட்சி அவசியமாகும்.