முன்னோக்கு

ட்ரம்பின் சுங்கவரி "இடைநிறுத்தம்": அமெரிக்க ஏகாதிபத்தியம் மற்றும் முதலாளித்துவ ஒழுங்கின் ஆழமடைந்து வரும் நெருக்கடியின் மற்றொரு வெளிப்பாடு

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம். 

நெவார்க் துறைமுகத்திலுள்ள கொள்கலன் முனையத்தில் நிறுத்தப்பட்டுள்ள புதிய வாகனங்கள். மார்ச் 27, 2025 நியூ யோர்க் [AP Photo/Ted Shaffrey]

பேச்சுவார்த்தைகளுக்கு அனுமதிப்பதற்காக, “பரஸ்பர சுங்கவரி” விதிப்புகளை செயல்படுத்துவதில் 90 நாள் இடைநிறுத்தம் என்று அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் நேற்றைய முன்தினம் அறிவித்தது, அமெரிக்க ஏகாதிபத்தியம் மற்றும் அதன் அரசின் ஆழமடைந்து வரும் பொருளாதார மற்றும் நிதியியல் நெருக்கடியின் மற்றொரு வெளிப்பாடாகும்.

செப்டம்பர் 2008 மற்றும் மார்ச் 2020 ல் இடம்பெற்ற நெருக்கடிகளின் அளவிலான வீழ்ச்சி அல்லது அதைவிட மோசமான நிலைக்குச் செல்ல முழு நிதியியல் அமைப்புமுறையும் —குறிப்பாக அமெரிக்க கருவூல சந்தை— சில நாட்கள், சில மணிநேரங்கள் இல்லையென்றாலும், இன்னும் சில நாட்கள் மட்டுமே உள்ளன என்பதற்கான அறிகுறிகள் அதிகரித்து வரும் நிலையிலேயே இந்த நடவடிக்கை வந்துள்ளது.

இந்த இடைநிறுத்தத்தை அறிவிக்கையில், அமெரிக்க அரசியல் ஸ்தாபகத்தின் அனைத்துக் கன்னைகளும் அமெரிக்காவின் உலகளாவிய மேலாதிக்கத்தின் உயிர்பிழைப்புக்கான அச்சுறுத்தலாக கருதும் உலகின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதாரமான சீனாவுக்கு எதிரான பொருளாதாரப் போரைத் தீவிரப்படுத்தியதன் மூலமாக, ட்ரம்ப் தனது சுங்கவரி உயர்வுகளின் அடிப்படை கருவை வெளிப்படுத்தினார்.

அமெரிக்க சுங்கவரி உயர்வுகளுக்கு சீனா பதிலடி கொடுத்துள்ளதால், சீனப் பண்டங்கள் மீதான சுங்கவரி விதிகள் “உடனடியாக நடைமுறைக்கு” வரும் வகையில் 125 சதவீதமாக உயர்த்தப்படும் என்று ட்ரம்ப் அறிவித்தார்.

முந்தைய காலகட்டத்தில், இத்தகைய பொருளாதார முற்றுகை ஒரு போர் நடவடிக்கையாக அங்கீகரிக்கப்பட்டிருக்கும்.

ஏனைய அனைத்து நாடுகள் மீதும் “பரஸ்பர சுங்கவரிகள்” தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அதேவேளையில், அமெரிக்காவிற்குள் நுழையும் அனைத்துப் பண்டங்கள் மீதும் 10 சதவீத சுங்கவரி தொடர்ந்து நடைமுறையில் இருக்கும்.

இந்த அறிவிப்புக்கு முன்னதாக, உலகப் பங்குச் சந்தைகளில் விற்பனை தொடர்ந்தது. எவ்வாறிருப்பினும், உலகளாவிய நிதியியல் அமைப்புமுறையின் ஒரு அடித்தளமான அமெரிக்க கருவூல சந்தையில் நடந்த விற்றுத்தள்ளல் இன்னும் அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. இது ஆதாயங்களை கடுமையாக உயர்த்தியது. இந்த அதிகரித்து வரும் நிதிக் கொந்தளிப்பு, ட்ரம்பின் இடைநிறுத்த முடிவுக்கு ஒரு முக்கிய காரணியாக இருந்தது.

பைனான்சியல் டைம்ஸால் (Financial Time) மேற்கோளிடப்பட்ட “வெள்ளை மாளிகைக்கு நெருக்கமானவர்” என்று விவரிக்கப்பட்ட ஒரு நபரின் கூற்றுப்படி:

வோல் ஸ்ட்ரீட் ஒரு பாதிப்பை சந்தித்து வருவதை ட்ரம்ப் ஒப்புக்கொள்கிறார். ஆனால், முழுக் கட்டிடமும் உடைந்து விழுவதை அவர் விரும்பவில்லை

கருவூல பத்திர சந்தையில் வளர்ந்து வரும் நெருக்கடிக்கு பல காரணிகள் உந்துதலாக உள்ளன. நூற்றுக்கணக்கான பில்லியன் டாலர்கள் மொத்த பங்குச் சந்தை இழப்புகளால் தத்தளித்து வரும் முதலீட்டு நிதிகள் மற்றும் பிற பெரிய முதலீட்டாளர்கள், வங்கிகளிடமிருந்து கூடுதல் பணத்தை சேர்ப்பதற்கான அழைப்புகளை எதிர்கொண்டனர். - அவர்களின் செயல்பாடுகளுக்கு அவசியமான கடன் வரிகளைப் பராமரிக்க பிணையமாக கூடுதல் நிதிகளுக்கான கோரிக்கைகளுக்கு முகங்கொடுத்து வந்தனர்.

சந்தைகள் சரிந்ததால், கூடுதல் பணத்திற்கான ஒரே ஆதாரம் கருவூல பங்குகளை விற்பனை செய்வதாகும். இது தொடர்ந்திருந்தால், மார்ச் 2020 அளவில் ஒரு பீதியைத் தூண்டியிருக்கும். அப்போது கருவூலச் சந்தை உறைந்து, அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கி தலையிட்டு, ஸ்திரத்தன்மையை மீட்டெடுக்க சில நாட்களுக்குள் டிரில்லியன் கணக்கான டாலர்களை அமைப்புமுறைக்குள் செலுத்தியது.

அமெரிக்க கருவூலப் பத்திரங்களில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கை வைத்திருக்கும் வெளிநாட்டு முதலீட்டாளர்களும் அரசாங்கங்களும் சந்தையில் இருந்து வெளியேறத் தொடங்கியுள்ளன என்பது வெளிப்படையாகத் தெரிந்தது.

தனியார் முதலீட்டு நிதிகள் அவற்றின் “அடிப்படை வர்த்தகங்கள்” என்றழைக்கப்படுவதை தளர்த்துவதற்கு நிர்பந்திக்கப்பட்டு வருகின்றன என்பதற்கான அறிகுறிகளும் இருந்தன. இந்த மூலோபாயம் கருவூல பத்திரங்களின் விலைக்கும் அவற்றுடன் தொடர்புடைய எதிர்கால ஒப்பந்தங்களுக்கும் இடையிலான சிறிய வேறுபாடுகளில் இருந்து இலாபம் ஈட்டுகிறது. விலை இடைவெளி குறைவாக இருப்பதால், இந்த வர்த்தகங்கள் பாரிய அந்நியச் செலாவணியை நம்பியுள்ளன. இதன் மொத்த அளவு சுமார் 1 டிரில்லியன் டாலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்க கருவூல பத்திரங்களை வைத்திருக்கும் இரண்டாவது பெரிய நாடான சீனா, ட்ரம்பின் பொருளாதாரப் போருக்கு விடையிறுப்பாக டாலர் சொத்துக்களில் இருந்து வெளியேறத் தொடங்கலாம் என்ற அச்சங்கள் எழுந்துள்ளன.

நாணயச் சந்தைகளில் டாலரின் மதிப்பு சரிந்து வருகிறது. இது, அமெரிக்க கொள்கை உறுதியற்ற தன்மை மற்றும் நிச்சயமற்ற தன்மைக்கு ஒரு முக்கிய ஆதாரமாக இருக்கும் சூழ்நிலையில், உலகளாவிய இருப்பு நாணயமாக அதன் பங்கை எவ்வளவு காலம் தக்க வைத்துக் கொள்ள முடியும் என்பது பற்றி பெருகிய வினாக்களை எழுப்பியுள்ளது.

தற்போது மோசமடைந்து வரும் நிலைமையைச் சுருக்கமாகக் கூறும்போது, நீண்டகால ஆய்வாளரான எட் யார்டேனி, அமெரிக்க கருவூலங்களில் ஏற்பட்ட விற்பனை - பொதுவாக நிதி நெருக்கடி காலங்களில் பாதுகாப்பான புகலிடமாகக் கருதப்படுகிறது - “ட்ரம்ப் நிர்வாகம் திரவ நைட்ரோ வெடிபொருட்களுடன் விளையாடக்கூடும்” என்பதற்கான அறிகுறியாகும் என்று குறிப்பிட்டார்.

கிளிண்டனின் கீழ் கருவூலச் செயலராக இருந்த லாரி சம்மர்ஸ் கடந்த புதன்கிழமை கூறுகையில், முந்தைய 24 மணி நேர நிகழ்வுகள், “அமெரிக்க அரசாங்க சுங்கவரி விதிப்பு கொள்கையால் முழுமையாகத் தூண்டப்பட்ட கடுமையான நிதி நெருக்கடி” ஏற்படக்கூடும் என்பதற்கான எச்சரிக்கை என்று கூறினார்.

ட்ரம்பின் இடைநிறுத்த அறிவிப்பைத் தொடர்ந்து, வோல் ஸ்ட்ரீட் மகிழ்ச்சியில் மூழ்கியது. நாஸ்டாக் அண்மித்து 12 சதவீதம் உயர்ந்தது —2008 க்குப் பிந்தைய அதன் மிகப்பெரிய ஒருநாள் ஆதாயம்— அதேவேளையில் S&P 500 9.5 சதவீதம் உயர்ந்தது, டோவ் 8 சதவீதம் உயர்ந்தது.

ட்ரம்ப் நிர்வாகத்தின் ஒவ்வொரு நடவடிக்கையையும் போலவே, நேற்றைய சம்பவங்களும் ஊழல் மற்றும் குற்றகரத்தன்மையில் மூழ்கியிருந்தன. சந்தைகள் திறக்கப்படுவதற்கு சற்று முன்னதாக —மற்றும் “இடைநிறுத்தம்” குறித்த பகிரங்க அறிவிப்புக்கு பல மணி நேரங்களுக்கு முன்னர்— ட்ரம்ப் சமூக ஊடகங்களில் “இது பங்குகளை வாங்குவதற்கு ஒரு சிறந்த நேரம்” என்று பதிவிட்டார். ட்ரம்ப் குடும்பத்தினரும் நிர்வாகத்திலும் அதைச் சுற்றியும் செயல்படும் பாசிஸ்டுகளின் கும்பலும் எத்தனை பில்லியன் டாலர்களை சம்பாதித்தன என்பதைக் கண்டுபிடிப்பது எதிர்கால விசாரணைக்கு விடப்பட வேண்டும்.

சுங்கவரி விதிப்புகள் மீது பேச்சுவார்த்தை நடத்த விரும்பும் நாடுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவது, —ட்ரம்பினது ஒழுங்கற்ற, மீண்டும், மீண்டும் தொடர்ந்து வருகின்ற வழிமுறைகள்— அமெரிக்க முதலாளித்துவத்திற்கு பயனளிக்கும் ஒப்பந்தங்களைச் செய்வதற்கான அவரது சிறந்த திறனுக்கு ஒரு சான்றாகும் என்று ட்ரம்பும் அவரது கூட்டாளிகளும் கூறுவார்கள்.

இதைவிட உண்மைக்கு அப்பாற்பட்டது வேறு எதுவும் இருக்க முடியாது. ட்ரம்பின் திடீர் திருப்பங்கள் வலிமையின் அடையாளங்கள் அல்ல. மாறாக, அமெரிக்க ஏகாதிபத்தியம் மற்றும் அதன் அரசின் ஆழமடைந்து வரும் நெருக்கடியின் உருவகப்படுத்தப்பட்ட வெளிப்பாடாகும். இந்த நெருக்கடிக்கு அவரிடம் எந்த தீர்வும் இல்லை.

அமெரிக்க அரசாங்கக் கடன் 36 டிரில்லியன் டாலராக உள்ளது. மேலும், இந்தக் கடன் தினமும் அதிகரித்து வருகிறது. இது “நிலையானதாக இல்லாதது” என்று உலகளவில் ஒப்புக் கொள்ளப்பட்ட ஒரு பாதையில் உள்ளது. வட்டி செலுத்துதல்கள் மட்டும் ஆண்டுதோறும் 1 டிரில்லியன் டாலர்களை நெருங்கி வருகின்றது. மேலும், அவை அமெரிக்க பட்ஜெட்டில் மிகப்பெரிய செலவினமாக வேகமாக மாறி வருகின்றன.

கடந்த 12 மாதங்களில் 17 சதவீதம் அதிகரித்துள்ள வர்த்தகப் பற்றாக்குறை சுமார் 1 டிரில்லியன் டாலரில் ஓடிக் கொண்டிருக்கிறது.

உள்நாட்டில், நுகர்வோர் செலவினம் மற்றும் நம்பிக்கை இரண்டுமே வீழ்ச்சி அடைந்து வருகின்றது. மேலும் சுங்கவரி உயர்வுகளின் காரணமாக வீட்டு நுகர்வில் பெரும் பங்கை வகிக்கும் சீனாவில் இருந்து வரும் பொருட்களின் விலைகள் அதிகரித்து வருகின்ற நிலையில், நூறு மில்லியன் கணக்கான தொழிலாளர்களும் அவர்களது குடும்பங்களும், அவர்களின் வாழ்க்கைத் தரங்களில் மேலதிக குறைப்புகளுக்கு முகங்கொடுக்கின்றனர்.

ட்ரம்ப் நிர்வாகத்தின் கொள்கைகளால் உருவாக்கப்பட்ட நிச்சயமற்ற தன்மையால் வணிக நம்பிக்கை சிதைந்துள்ளது. “பரஸ்பர சுங்கவரிகளால்” இலக்கில் வைக்கப்பட்டுள்ள டசின் கணக்கான நாடுகளுடனான பேச்சுவார்த்தைகளுக்கான 90 நாள் இடைநிறுத்தம், இந்தப் பொறிவை மாற்றுவதற்கு ஒன்றும் செய்யப் போவதில்லை. மந்தநிலை அடிவானத்தில் உள்ளது.

பேச்சுவார்த்தையில் என்ன நடக்கும் என்று யாருக்கும் தெரியாது. ஆனால் வியட்நாம், தாய்லாந்து மற்றும் கம்போடியா போன்ற நாடுகள் —அத்துடன் பல வறிய ஆபிரிக்க நாடுகளும்— அமெரிக்காவின் வர்த்தக பற்றாக்குறையைத் தீர்க்க தகைமை கொண்ட எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்க முடியும் என்ற கருத்து நகைப்புக்குரியதாகும்.

ஜப்பான் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் போன்ற பெரும் சக்திகளிடமும் இதற்கு எந்த தீர்வும் இல்லை. இந்த “இடைநிறுத்தத்திற்கு” பின்னர் என்ன நடக்கும் என்பது ட்ரம்ப் உட்பட யாருக்கும் தெரியாது.

இந்த “இடைநிறுத்தத்தின்” ஒரு அம்சம் தெளிவான தர்க்கத்தைப் பின்பற்றுகிறது. இது, சீனாவிற்கு எதிரான அமெரிக்க தலைமையிலான உலகளாவிய தாக்குதலுக்குள் நாடுகளை கட்டிப்போடுவதற்கான ஒரு பரந்த உந்துதலின் பாகமாக உள்ளது. இது குறிப்பாக தென்கிழக்கு ஆசியாவில் தெளிவாகத் தெரிகிறது. அங்கு, பிராந்திய நாடுகளை நோக்கி செலுத்தப்படும் பொருளாதார அச்சுறுத்தல்கள் பெய்ஜிங்கை நெருங்கிச் செல்ல வேண்டாம் என்று அழுத்தம் கொடுக்கும் நோக்கத்தை கொண்டுள்ளன.

இப்போது வழங்கப்பட்டு வரும் செய்தி இதுதான்: “தேசிய பாதுகாப்பு”, அதாவது சீனாவிற்கு எதிரான போருக்கான தயாரிப்பு போன்ற முக்கிய பிரச்சினையில் அமெரிக்காவுடன் இணைந்து கொள்ளுங்கள். மேலும், பொருளாதார பிரச்சினைகளில் மட்டுமல்ல, வெளியுறவுக் கொள்கையிலும் அமெரிக்காவிற்கு பெரும் சலுகைகளை வழங்குங்கள். இல்லையெனில், நீங்கள் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்பதாகும்.

வரலாறு காணாதளவுக்கு சீனாவிற்கு எதிரான சுங்கவரிகளை முன்னெப்போதும் இல்லாத வகையில் உயர்த்துவதுதான் இந்த உத்தரவை வழங்குவதற்கான வடிவமாகும்.

ட்ரம்பின் நேற்றைய நடவடிக்கைகள், வாரயிறுதியிலேயே வெடித்திருக்கக்கூடிய ஒரு முழு அளவிலான நிதி நெருக்கடியில் இருந்து அமெரிக்காவை பின்னோக்கி இழுத்துள்ளன. ஆனால், நேற்று நடந்தது நெருக்கடிக்கான ஒரு தீர்வு அல்ல, மாறாக அடுத்த நெருக்கடியை நோக்கிய ஒரு அடி மட்டுமே, அது இன்னும் வெடிப்பார்ந்த வடிவத்தை எடுக்கும்.

ஏனென்றால், ட்ரம்பின் “விடுதலை தினம்” என்று அழைக்கப்படும் ஏப்ரல் 2, பேச்சுவார்த்தைக்கான தந்திரோபாயம் அல்ல. மாறாக, 2ம் உலகப் போருக்குப் பிந்தைய சர்வதேச வர்த்தக ஒழுங்கில் எஞ்சியிருந்தவற்றை அழிப்பதாகும். அதை மீண்டும் ஒன்றாக இணைக்க முடியாது. 1930 களில் வெடித்து உலகப் போருக்கு வழிவகுத்த நெருக்கடி வகையைத் தடுக்க 1945 க்குப் பிறகு வைக்கப்பட்ட அனைத்து “பாதுகாப்புத் தடுப்பரண்களும்” இனி இல்லை.

ட்ரம்ப் நிர்வாகத்தின் கொள்கையில் ஒரு பைத்தியக்காரத்தனம் இருக்கிறது — ஆனால் அது ஒரு புறநிலை அடித்தளத்துடனான ஒரு பைத்தியக்காரத்தனமாகும். ஒரு பொருளாதார பின்னடைவிலிருந்து மற்றொன்றிற்கு அது தாவிக் கொண்டிருக்கையில், தன்னிடம் தீர்வு இல்லாத நெருக்கடியை எதிர்கொண்டு, நிர்வாகம் ஜனநாயக உரிமைகள் மீது திட்டமிட்ட தாக்குதலை நடத்தி வருவதுடன், அமெரிக்காவில் ஒரு சர்வாதிகார கட்டமைப்பை எழுப்பி வருகிறது. அரசு எந்திரத்திற்குள் என்னதான் மோதல்கள் நிலவினாலும், பேரழிவை நோக்கி விரைந்து கொண்டிருக்கும் ஒரு முதலாளித்துவ அமைப்புமுறையைப் பாதுகாப்பதற்கான அவற்றின் தீர்மானத்தில் அனைத்து கன்னைகளும் ஒன்றுபட்டுள்ளன.

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அவலட்சணமான மற்றும் குற்றகரமான ஆளுருவாக விளங்கும் ட்ரம்ப், ஒவ்வொரு நாட்டிலும் உள்ள ஆளும் வர்க்கங்களின் பிரதிநிதிகளுடன் சேர்ந்து, சர்வதேச போட்டியாளர்களுக்கு எதிரான தங்கள் பதில்களை ஒருங்கிணைக்க இந்த “இடைநிறுத்தத்தை” பயன்படுத்துவார். மேலும், வரவிருக்கும் என்று அவர்கள் அனைவரும் அஞ்சுகின்ற மற்றும் அறிந்திருக்கும் வர்க்கப் போராட்டத்தின் வெடிப்புக்கு எதிரான தயாரிப்பில், உள்நாட்டில் தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக தங்கள் ஆயுதங்களைக் கூர்மைப்படுத்த இதனைப் பயன்படுத்துவார்கள்.

சர்வதேச தொழிலாள வர்க்கம் கடந்த வார நிகழ்வுகளை குறித்து தெளிவான மதிப்பீட்டைப் பெற வேண்டும். ட்ரம்பின் சுங்கவரி “இடைநிறுத்தத்துடன்” நெருக்கடியும் எப்படியோ கடந்துவிட்டதாக நினைப்பதுதான் அது செய்யக்கூடிய மிக மோசமான தவறாக இருக்கும். அந்த நெருக்கடி கடந்து செல்லவில்லை.

எனவே, முதலாளித்துவ ஆளும் வர்க்கங்கள் எதிர்காலத்திற்குத் தயாராகும் அதே வேளையில், அமெரிக்காவிலும் உலகெங்கிலும் உள்ள தொழிலாள வர்க்கமும் அதே வழியில் தனது எதிர்காலத்துக்காக தயாராக வேண்டும். இதற்கான தயாரிப்பு, அனைத்துக்கும் மேலாக, சோசலிச வேலைத்திட்டத்திற்கான அரசியல் போராட்டத்தை உள்ளடக்கியுள்ளது. முதலாளித்துவ அமைப்புமுறையின் ஆழமடைந்து வரும் நெருக்கடிக்கு ஒரே சாத்தியமான தீர்வாக, இது மிகவும் தெளிவாகக் காட்டப்பட்டுள்ளது.