முன்னோக்கு

ட்ரம்பின் சுங்கவரி இடைநிறுத்தலும் முதலாளித்துவ அரசின் வர்க்கத் தன்மையும்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம். 

நியூ யோர்க்கில் உள்ள பங்குச் சந்தையில் வர்த்தகர்கள் தளத்தில் வேலை செய்யும் போது ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தொலைக்காட்சியில் காணப்படுகிறார், ஏப்ரல் 7, 2025 திங்கட்கிழமை [AP Photo/Seth Wenig]

டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாக இருக்கிறார். ஆனால், அவர் ஒரு முதலாளித்துவ தன்னலக்குழுவின் சார்பாக ஆட்சி செய்கிறார். இதுவே கடந்த 48 மணி நேர சம்பவங்களில் இருந்து எடுக்கப்பட வேண்டிய ஒரு அடிப்படை அரசியல் முடிவாகும்.

தற்போதைய நிகழ்வுகளின் அடிப்படை வடிவம் தெளிவாக உள்ளது. உலகில் உள்ள ஒவ்வொரு நாட்டின் மீதும் கடுமையான சுங்கவரிகளை விதிக்கும் திட்டத்தை ட்ரம்ப் தொடங்கி வைத்து பின்வாங்க முடியாது என்று அறிவித்தார். சரிந்து வரும் சந்தைகளை கேலி செய்த அவர், இப்போது “முதலீடு செய்வதற்கு ஒரு சிறந்த நேரம்” என்று கூறுகிறார்.

ட்ரம்பின் அறிவித்தலுக்கு வெறும் சில மணி நேரங்களுக்குப் பின்னர், வோல் ஸ்ட்ரீட்டில் ஒரு நிதிப் பேரழிவு உடனடியாக ஏற்படவுள்ளதாக தமது ஒருமித்த கருத்தைத் தெரிவித்த இரண்டு பில்லியனர் ஆலோசகர்களான கருவூல செயலாளர் ஸ்காட் பெசென்ட் மற்றும் வர்த்தகத்துறை செயலாளர் ஹோவர்ட் லுட்னிக் ஆகியோருடன் ட்ரம்ப் கூடியிருந்தார். அவர்கள் இந்தக் கருத்தை வலியுறுத்தியதால், ட்ரம்ப் தனது ட்ரூத் என்ற சமூகத் தளத்தில், ஒரு அறிக்கையை வெளியிட்டார். அதில், சீனாவைத் தவிர்த்து அவரது வரிவிதிப்பு போருக்கு 90 நாள் “இடைநிறுத்தத்தை” அறிவித்தார்.

டரம்ப் நிர்வாகம் சீனாவிற்கு எதிரான அதன் பொருளாதாரப் போரை தீவிரப்படுத்தி, நேரடியான ஆக்கிரமிப்பு வடிவங்களை அறிவிக்கும் வேளையில், இந்த விதிவிலக்கு அதிமுக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. எவ்வாறாயினும், பெரும்பாலான பிற சுங்கவரிகளின் தற்காலிக தாமதம் ட்ரம்பின் தரப்பில் ஏற்பட்ட தெளிவான தலைகீழ் மாற்றமாகும்.

கடந்த வியாழனன்று பைனான்சியல் டைம்ஸ் அதன் ஆசிரியர் தலையங்கத்தில், “டொனால்ட் ட்ரம்ப் சந்தைகளின் அதிகாரத்திற்கு வளைந்து கொடுக்கிறார்” என்று தலைப்புச் செய்தியாக வெளியிட்டது.

இந்த தலைகீழ் மாற்றத்திற்கு முன்னர், இரண்டு நாள் பங்குச் சந்தையில் ஏற்பட்ட சரிவு 6 டிரில்லியன் டாலருக்கும் அதிகமான மதிப்பை அழித்துவிட்டது. ஆப்பிள் நிறுவனம் மட்டும் சந்தை மதிப்பில் 600 பில்லியன் டாலரை இழந்தது. அதே நேரத்தில் தெற்கு மற்றும் கிழக்கு ஆசியாவில் பெரும்பாலான தயாரிப்புகளை உற்பத்தி செய்யும் பிற தொழில்நுட்ப நிறுவனங்களும் இதேபோன்ற இழப்புகளைச் சந்தித்தன.

அங்கே பெருநிறுவன அமெரிக்காவிடம் இருந்து சுங்கவரிகள் குறித்து பரவலான கண்டனங்கள் எழுந்தன. ஆனால், ட்ரம்பும் அவரது உயர்மட்ட உதவியாளர்களும் இந்த நெருக்கடி குறையும் என்றும், வரிவிதிப்புக் கொள்கையின் இறுதி விளைவு, அமெரிக்க முதலாளித்துவத்திற்கு ட்ரம்ப் பிரகடனப்படுத்திய “புதிய பொற்காலம்” இருக்கும் என்றும் அறிவித்தனர்.

சுங்கவரிகள் உண்மையில் கடந்த புதன்கிழமை காலையில் இருந்து நடைமுறைக்கு வர இருந்த நிலையில், திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் பத்திர சந்தைக்குள் நிதியியல் பீதி பரவியதே பங்கு விலைகளில் ஏற்பட்ட வீழ்ச்சியை விட மிக முக்கியமாக இருந்தது. உலகின் மிகப்பெரிய 28 டிரில்லியன் டாலர் மதிப்புள்ள அமெரிக்க கருவூலப் பத்திரச் சந்தையில் ஏற்பட்ட தாக்கம், குறிப்பாக முக்கியமானதாக இருந்தது. இது உலகிலேயே மிகப்பெரியது மற்றும் சர்வதேச நிதி பரிவர்த்தனைகளுக்கான அளவுகோலாக இருக்கிறது.

கடந்த செவ்வாயன்று பத்திர சந்தை வீழ்ச்சியடைவதைக் கண்ட ட்ரம்ப், “நேற்றிரவு மக்கள் கொஞ்சம் குழப்பமடைந்ததை நான் பார்த்தேன்,” என்று கூறினார். புதன்கிழமை காலை ஃபாக்ஸ் பிசினஸில் ஜேபி மோர்கன் சேஸ் தலைமை நிர்வாக அதிகாரி ஜேமி டிமோன் மரியா, பார்ட்டிரோமோவுக்கு அளித்த பேட்டியைப் பார்த்ததை அவர் ஒப்புக்கொண்டார். அதில் மந்தநிலை என்பது சுங்கவரி உயர்வுகளின் “சாத்தியமான விளைவு” என்று டிமோன் கூறினார். “நான் அமைதியாக இருக்கிறேன், ஆனால் நிலைமை மோசமடையக்கூடும்” என்று டிமோன் எச்சரித்தார்.

மேலும், இது தொடர்பாக அப்பட்டமான கருத்துக்களும் கூறப்பட்டன. Fundstrat Global Advisors இன் நிர்வாகப் பங்குதாரரும் ஆய்வுப் பிரிவின் தலைவருமான தோமஸ் லீ, கடந்த புதனன்று ஒரு குறிப்பை அனுப்பினார். இது Quartz இல் மேற்கோளிடப்பட்டது. பல நிதிய மேலாளர்கள் வெள்ளை மாளிகை பகுத்தறிவுடன் செயல்படவில்லை என்று கவலை தெரிவித்தனர். “சிலர் இது சித்தாந்தத்தைப் பற்றியது அல்ல என்று கூட அஞ்சுகிறார்கள். சிலர் ஜனாதிபதிக்கு பைத்தியமா என்று கூட யோசித்தனர்” என்று லீ எழுதினார்.

ஒரு வங்கி பீதி அல்லது ஒரு வைரஸ் தொற்றுநோயால் அல்ல, மாறாக அமெரிக்க ஜனாதிபதியின் ஒரு கொள்கை முடிவால் ஏற்பட்ட ஒரு நெருக்கடியை சமாளிக்க பெடரல் வங்கி இந்த வாரம் தலையிட வேண்டியிருக்கும் என்ற கணிசமான கவலையும் அங்கே இருந்தது. அது வெறுமனே இந்த அல்லது அந்த முதலீட்டின் மதிப்பை மட்டுமல்ல, மாறாக அமெரிக்க அரசாங்கத்தின் ஸ்திரத்தன்மையையும் மற்றும் உலக முதலாளித்துவத்தின் அடித்தளமாக இருக்கும் அமெரிக்க டாலரின் பாத்திரத்தையும் கேள்விக்குள்ளாக்கியது.

வாஷிங்டன் போஸ்டின் ஒரு தலையங்கம் பின்வருமாறு எச்சரித்தது:

பீதி காலங்களில், இந்த பத்திரங்கள் பொதுவாக முதலீட்டாளர்களை ஈர்க்கின்றன. இந்த முறை அவர்கள் அவ்வாறு செய்யத் தவறியது, அமெரிக்க அரசாங்கம் அதன் கடன்களைத் திருப்பிச் செலுத்தும் என்ற நம்பிக்கை குறைந்து வருவதைப் பிரதிபலிக்கிறது.

ஒரு பில்லியனரும் அமேசான் நிறுவனருமான ஜெஃப் பெசோஸுக்கு சொந்தமான இந்தப் பத்திரிகை, முன்னாள் பிரிட்டிஷ் பிரதமர் லிஸ் டிரஸ் வரி வெட்டுக்கள் மற்றும் அதிக கடன் வாங்குவதை இணைக்கும் ஒரு திட்டத்தை முன்னெடுத்த பின்னர், அவரது அரசாங்கத்தின் 2022 சரிவின் “எச்சரிக்கைக் கதையை” மேற்கோள் காட்டியது. இது ஓய்வூதிய நிதிகளின் பொறிவை அச்சுறுத்திய ஒரு நிதி பீதியைத் தொட்டது மற்றும் அவரது வேலைத்திட்டத்தை திரும்பப் பெறுமாறு அவரை நிர்பந்தித்தது. சில வாரங்களுக்குப் பிறகு அவர் பிரதமர் பதவியிலிருந்து நிரந்தரமாக வெளியேறினார்.

கடந்த வார நிகழ்வுகள் முதலாளித்துவ அரசின் வர்க்க அடித்தளங்களை கொடூரமாக அம்பலப்படுத்தியுள்ளன. “வெல்ல முடியாத” ட்ரம்ப், பத்திர சந்தை மற்றும் ஜேமி டிமோனின் கோரிக்கைகளுக்கு முன்னால் நொறுங்கினார். வோல் ஸ்ட்ரீட்டிற்கு ஒரு திருத்தம் தேவைப்பட்டது, அது கிடைத்தது. டிரில்லியன் கணக்கான சந்தை இழப்புக்களும் கருவூலச் சந்தையில் ஏற்பட்ட அதிர்வுகளும் திடீரென, தற்காலிகமானதாக இருந்தாலும் ட்ரம்பை பின்வாங்கச் செய்யப் போதுமானவையாக இருந்தன.

ஜனநாயகக் கட்சி ட்ரம்பை ஒரு வெல்ல முடியாத அரசியல் பிரமுகராக சித்தரித்தது. ஜனநாயக உரிமைகளை தகர்த்தல், வர்த்தகப் போர்க் கொள்கை மற்றும் ட்ரம்பினது பாசிச பிரகடனங்கள் ஆகியவற்றின் மீது, அது தனது இயலாமையை வெளிப்படுத்துகிறது. எதற்காக? ஏனென்றால் அவர்கள் ஒரே வர்க்க நலன்களைப் பகிர்ந்து கொள்கிறார்கள். குடியரசுக் கட்சியினரைப் போலவே ஜனநாயகக் கட்சியினரும் நிதிய தன்னலக்குழுவிற்கு சேவை செய்கின்றனர். மேலும் அதன் செல்வத்தையும் உலகளாவிய அந்தஸ்தையும் பாதுகாக்கும் கொள்கைகளுக்கு உண்மையான எதிர்ப்பை அவர்கள் ஏற்படுத்த மாட்டார்கள்.

இந்த உண்மை, வோல் ஸ்ட்ரீட்டின் செல்வாக்கிற்கும் ஏப்ரல் 5ம் தேதி அமெரிக்கா முழுவதும் நடைபெற்ற பாரிய ஆர்ப்பாட்டங்களை முற்றிலும் புறக்கணித்ததற்கும் இடையிலான வேறுபாட்டால் இன்னும் அப்பட்டமாக வெளிப்பட்டது. ட்ரம்பின் எதேச்சதிகாரம், அவரது போர் முனைப்பு, புலம்பெயர்ந்தோர், தொழிலாளர்கள் மற்றும் அரசியலமைப்பு மீதான அவரின் தாக்குதல்களை எதிர்க்க மில்லியன் கணக்கானவர்கள் வீதிகளில் இறங்கினர். சந்தை இயக்கங்கள் தொடர்பாக முடிவில்லா செய்தி வர்ணனைகளுக்கு உட்பட்டிருக்கையில், பாரிய போராட்டங்கள் தொடர்பான செய்திகள், ஊடகத்தால் ஒரு சிறிய, உள்ளூர் பிரச்சினையாகவே கையாளப்பட்டன. மேலும், அப்படியான ஒரு போராட்டம் நடக்கவே இல்லை என்பது போல் விரைவில் மறைந்தன.

ட்ரம்ப் நிர்வாகம் ஒருவரின் தனிப்பட்ட உருவாக்கம் அல்ல, மாறாக ஒரு முதலாளித்துவ தன்னலக்குழுவின் அரசியல் கருவியாகும். ஜனநாயக உரிமைகள் அழிக்கப்படுவது ட்ரம்பின் சர்வாதிகார தூண்டுதல்களின் விளைவு மட்டுமல்ல, ஒரு சிறிய உயரடுக்கால் பயன்படுத்தப்படும் வர்க்க ஆட்சியின் சமூக யதார்த்தத்தை பிரதிபலிக்கும் வகையில், அரசின் நனவான மறுஒழுங்கைமைப்பாகும்.

அங்கே ஆளும் வர்க்கத்திற்குள் கடுமையான மோதல்கள் உள்ளன — ஆனால் அவை தன்னலக்குழுவிற்குள் உள்ளாகவே, அதன் மேலாதிக்கத்தை எவ்வாறு சிறப்பாக பாதுகாப்பது மற்றும் அதிகரித்து வரும் சமூக எதிர்ப்பை எவ்வாறு ஒடுக்குவது என்பது மீதான மோதல்களாகும். முதலாளித்துவ அரசின் வர்க்கத் தன்மையிலிருந்து ஒரு தவிர்க்கவியலாத முடிவு பிறக்கிறது: தொழிலாள வர்க்கம் ஆளும் வர்க்கத்தின் அனைத்துக் கன்னைகளிடம் இருந்தும் முறித்துக் கொண்டு, அதைத் தூக்கியெறிவதற்கான போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும்.

பாரிய புரட்சிகர போராட்டங்களின் பாதையிலும், தொழிலாள வர்க்கப் பெரும்பான்மையினரின் பிரதிநிதித்துவத்திலும் எழும் உண்மையான பங்கேற்பு ஜனநாயகத்தின் புதிய வடிவங்கள் மற்றும் கட்டமைப்புகள், தொழிலாளர் அரசாங்கத்தின் அடித்தளமாக உருவாக்கப்பட வேண்டும். அதாவது, அமெரிக்காவிலும் உலகம் முழுவதும் தொழிலாளர்களுக்கான, தொழிலாளர்களின் ஒரு அரசாங்கம், பொருளாதார வாழ்க்கையின் சோசலிச மறுஒழுங்கமைப்பிற்கான அடிப்படையாக உருவாக்கப்பட வேண்டும்.