பில்லியனர்களின் செல்வம் $2 டிரில்லியன் டாலர் அதிகரித்துள்ள நிலையில், "பிரபுத்துவ தன்னலக்குழுவால்" உலகம் ஆளப்படுவதாக ஆக்ஸ்பாம் கூறுகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

மார்க் ஜுக்கர்பெர்க், ஜெஃப் பெசோஸ், சுந்தர் பிச்சை மற்றும் எலோன் மஸ்க் உள்ளிட்ட விருந்தினர்கள், ஜனவரி 20, 2025 திங்கட்கிழமை, வாஷிங்டனில் உள்ள அமெரிக்க கேபிட்டலின் ரோட்டுண்டாவில் 60 வது ஜனாதிபதி பதவியேற்புக்கு விழாவுக்கு வரும்போது. [Photo by AP Photo/Julia Demaree Nikhinson, Pool]

உலக பில்லியனர்களின் செல்வம் 2024 இல் $2 ட்ரில்லியன் டாலருக்கும் அதிகமாக அதிகரித்துள்ளது என்று வறுமை-எதிர்ப்பு தொண்டு நிறுவனமான ஆக்ஸ்பாமின் (Oxfam) 2025ம் ஆண்டு அறிக்கை தெரிவிக்கிறது. உலகளாவிய சமூகம் பெருகியமுறையில் “பிரபுத்துவ தன்னலக்குழுவால்” மேலாதிக்கம் செலுத்தப்படுவதாக ஆக்ஸ்பாம் எச்சரித்துள்ளது.

உலக பில்லியனர்களின் செல்வம் 2024 இல் $13 டிரில்லியன் டாலரிலிருந்து 15 டிரில்லியன் டாலராக அதிகரித்துள்ளது, இது 2023 ஐ விட மூன்று மடங்கு வேகமாக நடந்துள்ளது என்று அந்தத் தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.

2024 ஆம் ஆண்டில் 10 பணக்கார தனிநபர்கள் ஒவ்வொருவரின் செல்வமும் சராசரியாக ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட $100 மில்லியன் அமெரிக்க டாலராக அதிகரித்திருக்கிறது.

செல்வந்தர்களின் எண்ணிக்கை 204 என அதிகரித்து 2,769 ஆக உயர்ந்துள்ளது. ஒட்டுமொத்தமாக, அவர்களின் செல்வவளம் ஒவ்வொரு நாளும் சுமார் $5.7 பில்லியன் டாலர் அளவுக்கு அதிகரித்துள்ளது, வாரத்திற்கு சராசரியாக நான்கு புதிய பில்லியனர்கள் உருவாக்கப்பட்டுள்ளனர்.

ஆக்ஸ்பாம் அதன் அறிக்கையில், இந்தப் பத்தாண்டின் இறுதிக்குள் உலகில் மாபெரும் செல்வந்தர்களாக ஐந்து டிரில்லியனர்கள் இருப்பார்கள் என்று கணித்துள்ளது, கடந்த ஆண்டு ஒருவர் மட்டுமே இருப்பார் என்று அதன் மதிப்பீட்டு அறிக்கையில் ஒப்பிடப்பட்டிருந்தது.

ஆக்ஸ்பாம் சர்வதேச நிர்வாக இயக்குனர் அமிதாப் பெஹர் (Amitabh Behar) கூறுகையில், “நமது உலகப் பொருளாதாரத்தை ஒரு சலுகை பெற்ற சிலரால் கைப்பற்றப்படுவது ஒரு காலத்தில் கற்பனைகூட செய்யமுடியாத அளவுக்கு உயரத்தை எட்டியிருக்கிறது” என்று கூறினார். “பில்லியனர்களைத் தடுக்கத் தவறியதால் இப்போது அதிக டிரில்லியனர்களை உருவாக்குகிறது. பில்லியனர்களின் செல்வவளத்தின் அளவு விகிதம் மூன்று மடங்கு அதிகரித்துள்ளது மட்டுமல்ல, மாறாக அவர்களின் சக்தியும் அதிகரித்துள்ளது,” என்றார்.

டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க் $449 பில்லியன் டாலர் நிகர மதிப்புடனும்; அமேசன் தலைமை செயலதிகாரி ஜெஃப் பெஸோஸ், $245 பில்லியன் டாலர் நிகர சொத்து மதிப்புடனும்; மற்றும் பேஸ்புக் தலைமை செயலதிகாரி மார்க் ஜுக்கர்பேர்க், $217 பில்லியன் டாலர் நிகர சொத்து மதிப்புடனும்உலகின் பெரும் செல்வந்தர்களாக இருக்கின்றனர்.

டொனால்ட் டிரம்பின் பதவியேற்பு விழாவில் சிறப்பு விருந்தினர்களாக உலகின் 10 செல்வந்தர்களில் மஸ்க், பெசோஸ், ஜுக்கர்பெர்க், பிரான்சின் பெர்னார்ட் அர்னால்ட் மற்றும் கூகுள் இணை நிறுவனர் செர்ஜி பிரின் உட்பட ஐந்து பேர் கலந்து கொண்டனர்.

“இந்த நேரத்தில் ஒரு பில்லியனர் ஜனாதிபதி இன்று சத்தியப்பிரமாணம் செய்வது செல்வந்தர்களின் ஆதரவுடன்தான் என்பதை நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள்” என்று டிரம்ப் மற்றும் மஸ்க்கைக் குறிப்பிட்டு பெஹார் கூறியுள்ளார். “எனவே இது உலகளாவிய தன்னலக்குழுக்களின் கிரீடத்தில் உள்ள ஒரு இரத்தினமாக இருக்கிறது.”

“இது ஒரு குறிப்பிட்ட தனிநபரைப் பற்றியது அல்ல,” என்று அவர் மேலும் கூறினார். “நாம் உருவாக்கிய பொருளாதார அமைப்புதான் இது அதில் பில்லியனர்கள் இப்போது பொருளாதாரக் கொள்கைகள், சமூகக் கொள்கைகளை வடிவமைக்க முடிகிறது, இது இறுதியில் அவர்களுக்கு மேலும் மேலும் இலாபத்தை அளிக்கிறது.”

மனிதகுலத்தின் பரந்த பெரும்பான்மையினருக்கு அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு நெருக்கடிக்கு மத்தியில் நிதி தன்னலக்குழுக்களின் பாரிய செல்வச்செழிப்பானது ஏற்பட்டிருக்கிறது. சமூகத்தின் மிகப் பெரிய பணக்காரர்களின் 1 சதவீதத்தினர் அனைத்து செல்வத்திலும் ஏறத்தாழ 45 சதவீதத்தைக் கொண்டிருக்கின்ற அதேவேளையில், மனிதகுலத்தின் 44 சதவீதத்தினர் உலக வங்கியின் வறுமைக் கோட்டின்கீழ் அதாவது நாளொன்றுக்கு $6.85 டாலர் வருமானத்திற்குக் கீழ் வாழ்ந்து வருகின்றனர்.

ஆக்ஸ்பாம் அறிக்கை, அது எதை “பிரபுத்துவ தன்னலக்குழுக்கள்” என்று அழைக்கிறதோ அதன் அதிகரித்தளவில் வேரூன்றிய தன்மையையும் சுட்டிக்காட்டுகிறது. அந்த அறிக்கை குறிப்பிடுகிறது, “அதீத செல்வம் என்பது அதீத திறமைக்கான வெகுமதி என்ற கருத்து நமது ஊடகங்கள் மற்றும் வெகுஜன கலாச்சாரத்தில் பரவலாக உள்ளதோடு மற்றும் பலமாக வலுவூட்டப்பட்டுள்ளது. ஆனால் இந்த கருத்து யதார்த்தத்தில் வேரூன்றியிருக்கவில்லை.

அது தொடர்ந்தது: “2023 இல்—முதன்முறையாக— அதிகமான புதிய பில்லியனர்கள் தொழில்முனைவோர் மூலமாகச் செல்வந்தர்களாக ஆனார்கள். 30 வயதுக்கு குறைந்த உலகின் அனைத்து பில்லியனர்களும் அவர்களின் செல்வத்தை மரபுரிமையாகப் பெற்றிருக்கின்றனர்.”

இந்த நிதியியல் செல்வந்த தட்டுக்களின் செல்வவளம் உண்மையில் “முழுமையையும் புரிந்துகொள்ளமுடியாதது” என்பதை தெளிவுபடுத்தும் புள்ளிவிபரங்களை இந்த அறிக்கை உள்ளடக்கி உள்ளது. “315,000 ஆண்டுகளுக்கு முன்பு முதல் மனிதர்கள் தோன்றியதிலிருந்து நீங்கள் தினமும் $1,000 அமெரிக்க டாலர்களை சேமித்திருந்தாலும் கூட, பணக்கார பத்து பில்லியனர்களில் ஒருவருக்கு இருக்கும் அளவுக்கு நிகரான பணம் உங்களிடம் இருக்காது” என்று அது குறிப்பிட்டுள்ளது.

“பணக்கார 10 பில்லியனர்களில் எவரேனும் அவர்களின் செல்வவளத்தில் 99 சதவீதத்தை இழந்தாலும், அவர்கள் அப்போதும் ஒரு பில்லியனராகவே இருப்பார்கள்,” என்பதையும் அது சேர்த்துக் கொண்டது.

அந்த அறிக்கை சமூக சமத்துவமின்மையின் அதிகரிப்பை தொழில்துறையின் அதிகரித்துவரும் ஏகபோகமயமாக்கலுடன் (monopolization) தொடர்புபடுத்தியுள்ளது. “ஏகபோகங்கள் தொழில்துறைகள் மீதான அவர்களின் பிடியை இறுக்குகின்ற நிலையில், பில்லியனர்கள் அவர்களின் செல்வவளம் முன்னொருபோதும் இல்லாத மட்டங்களுக்கு உயர்ந்து வருவதைக் காண்கின்றனர். ஏகபோக அதிகாரம் உலகெங்கிலும் அதீத செல்வத்தையும் சமத்துவமின்மையையும் அதிகரிக்க வழிசெய்கிறது. ஏகபோக பெருநிறுவனங்கள் சந்தைகளைக் கட்டுப்படுத்த முடியும், மற்ற நிறுவனங்கள் மற்றும் தொழிலாளர்களுடன் பரிவர்த்தனை விதிகளையும் விதிமுறைகளையும் அமைக்க முடியும், மேலும் வணிகத்தை இழக்காமல் அதிக விலைகளை நிர்ணயிக்க முடியும்.”

உதாரணமாக, “[உலகின் இரண்டாவது மிகப் பெரிய செல்வந்தரான பெஸோஸுக்கு சொந்தமானது] ஜேர்மனி, பிரான்ஸ், பிரிட்டன் மற்றும் ஸ்பெயினில் இணையவழி கொள்முதல்களில் 70 சதவீதம் அல்லது அதற்கு அதிகமானவற்றைக் கொண்டுள்ளது” என்ற மலைப்பூட்டும் எண்ணிக்கையை அந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

வாரயிறுதியில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடென் பதவியை விட்டு விலகிய பின்னர் ஆற்றிய ஓர் உரையில், “அமெரிக்காவில் அதீத செல்வம், அதிகாரம் மற்றும் செல்வாக்கு கொண்ட ஒரு தன்னலக்குழு உருவாகி வருவதாக” எச்சரித்தார்.

எவ்வாறிருப்பினும், இந்த செல்வந்தத் தட்டுக்கள் வெறுமனே “வடிவம் பெறவில்லை” என்பதை ஆக்ஸ்ஃபோம் அறிக்கை தெளிவுபடுத்துகிறது, அது பைடென் நிர்வாகத்தின் கீழ் அதன் செல்வத்தையும் அதிகாரத்தையும் பெருமளவில் அதிகரித்துள்ளது. கோவிட்-19 பெருந்தொற்று நோய் உச்சத்திலிருந்தபோது பதவியேற்ற பைடென், அவரது நிர்வாகத்தின் பிரதான உள்நாட்டு அக்கறையாக வோல் ஸ்ட்ரீட்டை பிணையெடுப்பது மற்றும் பிரதான நிறுவனங்களுக்கான செலவுகளைக் குறைக்கும் நோக்கத்துடன், தொற்றுநோயின் மையமாக இருந்த வேலையிடங்களுக்கு தொழிலாளர்களை மீண்டும் வேலைக்கு விரட்டுவதாக இருந்தது. அதன் கொள்கைகளின் விளைவாக, தேசிய வருமானத்தில் தொழிலாளர்களின் பங்கு பல தசாப்தங்களில் மிகக் குறைந்த மட்டத்திற்கு வீழ்ச்சியடைந்தது.

இந்த நிதிய தன்னலக்குழு இரு அரசியல் கட்சிகள் மீதும் அதன் கட்டுப்பாட்டைப் பயன்படுத்தி தொழிலாள வர்க்கத்தினை பிழிவதன்மூலம் அதன் செல்வத்தையும் அதிகாரத்தையும் அதிகப்படுத்துகிறது. தொழிலாள வர்க்கத்தின் சுரண்டல்தான் அவற்றின் செல்வத்திற்கு அடிப்படையாக உள்ளது. வரவிருக்கும் ட்ரம்ப் நிர்வாகம், உலக சோசலிச வலைத் தளம் விளக்கியதைப் போல, “செல்வந்த தன்னலக்குழுக்களால் மற்றும் அவர்களுக்காக” நடத்தப்படும் ஒரு அரசாங்கமாக இருக்கும்.

சுவிட்சர்லாந்தின் டாவோஸில் நடைபெறும் உலகப் பொருளாதார மன்றத்தின் (World Economic Forum) ஆண்டுக் கூட்டத்திற்கு முன்னதாக ஆக்ஸ்பாமின் அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது. சமத்துவமின்மையின் வளர்ச்சி குறித்த சக்திவாய்ந்த மற்றும் மறுக்கவியலாத புள்ளிவிபரங்களை இந்த அறிக்கை முன்வைக்கின்ற அதேவேளையில், “பெருநிறுவனங்களும் பெரும் செல்வந்தர்களும் வரிகளில் அவர்களின் நியாயமான பங்கைச் செலுத்துவதை உறுதிப்படுத்துவதன்” மூலமாக நிதியியல் செல்வந்த தட்டுக்களின் அதிகரித்து வரும் பிடியை உடைக்க முடியும் என்று அது வாதிடுகிறது. நிதியத் தன்னலக்குழு அதிகாரத்தின் அனைத்து நெம்புகோல்களையும் கட்டுப்படுத்தும் நிலைமைகளின் கீழ் இது எவ்வாறு சாதிக்கப்பட முடியும் என்பதை இது விளக்கவில்லை.

ஆனால் உலக சோசலிச வலைத் தளத்தின் புதிய ஆண்டு அறிக்கை விளக்கியதைப் போல,

தன்னலக்குழுவிற்கு எதிரான போராட்டம் அதன் இயல்பிலேயே ஒரு புரட்சிகரக் பணியாகும். அதன் செல்வவளம் பறிமுதல் செய்யப்பட வேண்டும், பொருளாதார மற்றும் அரசியல் வாழ்வின் மீதான அதன் இரும்புப்பிடி அகற்றப்பட வேண்டும். அரசியல் அதிகாரத்தைக் கையிலெடுப்பதற்கும், உற்பத்தி நிகழ்ச்சிப்போக்கின் மீது ஜனநாயகக் கட்டுப்பாட்டை நிலைநிறுத்துவதற்கும், சோசலிசத்தின் அடிப்படையில் அதாவது, தனியார் இலாபத்திற்காக அல்லாமல் சமூக தேவையின் அடிப்படையில் சமூகத்தை மறுஒழுங்கு செய்வதற்கும், உலகளவில் தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவது இதற்கு அவசியமாகும்.