மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
டொனால்ட் ட்ரம்ப் இரண்டாவது முறையாக பதவியேற்று இன்றுடன் ஒரு மாதம் நிறைவடைகிறது. ட்ரம்ப் அதிகாரத்திற்கு திரும்பியமையானது, “அமெரிக்காவில் நிலவுகின்ற நிஜமான சமூக உறவுகளுக்கு பொருத்தமாக அமெரிக்க அரசியல் மேற்கட்டுமானத்தின் வன்முறையான மறுஒழுங்கமைப்பை” பிரதிநிதித்துவம் செய்கிறது என்று தேர்தலுக்கு அடுத்த நாள் உலக சோசலிச வலைத் தளத்தால் செய்யப்பட்ட பகுப்பாய்வை கடந்த நான்கு வார நிகழ்வுகள் ஊர்ஜிதம் செய்துள்ளன.
ட்ரம்ப் நிர்வாகத்தின் முதல் மாதத்தின் முக்கிய கூறுகள்:
1. வரம்பற்ற ஜனாதிபதி அதிகாரங்களை வலியுறுத்தலும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீதான தாக்குதலும்
வெள்ளை மாளிகையில் மீண்டும் அதிகாரத்துக்கு வந்துள்ள ட்ரம்ப், முதல் நாளில் தொடங்கி, பெருமளவிலான நாடுகடத்தல்கள் மற்றும் பொலிஸ் அரசு நடவடிக்கைகளுக்கான கட்டமைப்பை அமைக்கும் தொடர்ச்சியான நிர்வாக உத்தரவுகளில் கையெழுத்திட்டுள்ளார். அமெரிக்காவின் தெற்கு எல்லையில், இம்பொறாத ஒரு “படையெடுப்புக்கு” பதிலளிப்பது என்ற பாசாங்குத்தனத்தின் கீழ், பெருநிறுவன மற்றும் நிதியியல் செல்வந்த தட்டுக்களின் கொள்கைகளுக்கு எதிரான அனைத்து எதிர்ப்புக்களையும் நோக்கி, வரம்பற்ற அதிகாரங்களை செயல்படுத்துவதற்காக நிர்வாகம் திட்டவட்டம் செய்துள்ளது.
ட்ரம்பினது ஆரம்ப நிர்வாக உத்தரவுகள், அரசிலமைப்பில் பதினான்காவது திருத்தத்தில் உத்தரவாதம் அளிக்கப்பட்ட பிறப்புரிமை குடியுரிமையை ஒழிக்க முற்படுகின்றன. குறிப்பாக, அமெரிக்காவில் குடியேறிய அனைவருக்கும் உள்ள பேச்சுரிமை உரிமைகளை ஒழித்துக் கட்டுகின்றன; உள்நாட்டு விவகாரங்களில் இராணுவத்தின் பங்கை பெருமளவில் விரிவுபடுத்துகின்றன; மற்றும் முன்னெப்போதும் இல்லாத அளவில் பெருமளவில் நாடுகடத்தப்படுவதற்கான அடித்தளத்தை அமைக்கின்றன. இந்த நடவடிக்கைகள் மில்லியன் கணக்கான மக்களின் உரிமைகளைப் பறிப்பதற்கும், ஜனாதிபதி தனது விருப்பப்படி சட்ட மற்றும் அரசியலமைப்பு கட்டுப்பாடுகளை மீறுவதற்கு அதிகாரம் அளிப்பதற்கும் ஒரு கட்டமைப்பை நிறுவுகின்றன.
2. அமெரிக்க இராணுவவாதத்தின் பூகோள விரிவாக்கம்
கடந்த ஒரு மாதமாக, அமெரிக்க இராணுவவாதத்தை கணிசமாக அதிகரித்துள்ள ட்ரம்ப், காஸாவில் நடந்து வரும் இனப்படுகொலையை ஆழப்படுத்தி, மத்திய கிழக்கில் பரந்த போர்களுக்கு அடித்தளம் அமைத்துள்ளார். மேலும், காஸா மீதான இனச்சுத்திகரிப்புக்கு பகிரங்கமாக ஒப்புதல் அளித்துள்ள அவர், அப்பகுதி “துடைத்தெறியப்பட வேண்டும்” என்று அறிவித்த கொள்கையை இஸ்ரேல் தழுவி, அதனை நடைமுறைப்படுத்தத் தொடங்கியுள்ளது.
அதேநேரத்தில் ட்ரம்ப், முக்கிய ஆதாரவளங்கள் மற்றும் வர்த்தக பாதைகளைப் கைப்பற்ற அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உலகளாவிய மூலோபாயத்தை மறுநோக்கு நிலைப்படுத்தி வருகிறார். கிரீன்லாந்தை இணைத்து பனாமா கால்வாய் மீது கட்டுப்பாட்டை வலியுறுத்தும் திட்டங்களை அவர் மீண்டும் புதுப்பித்துள்ளார். இவை இரண்டும் உலகளாவிய வர்த்தகம் மற்றும் இராணுவ தளவாடங்களுக்கு இன்றியமையாதவையாகும். ஒட்டுமொத்த மேற்கு அரைக்கோளத்திலும் அமெரிக்க மேலாதிக்கத்தை ஸ்தாபிக்கும் முயற்சியில், கனடா மற்றும் இலத்தீன் அமெரிக்கா மீது பொருளாதார மற்றும் இராணுவ அழுத்தத்தை வாஷிங்டன் அதிகரித்து வருகிறது. ட்ரம்ப் நிர்வாகம் பொருளாதார போர்முறையைத் தீவிரப்படுத்தி, வர்த்தகப் போர் நடவடிக்கைகளை விரிவுபடுத்தி, உலகளாவிய வினியோக சங்கிலிகளில், குறிப்பாக அரிய பூமி தாதுக்கள் மற்றும் மின்குறைக்கடத்திகள் மீது மேலாதிக்கம் செலுத்த முனைகின்ற நிலையில், இந்த நடவடிக்கைகள் அனைத்தும் சீனாவுடன் ஒரு நேரடி மோதலுக்கான தயாரிப்பு நடவடிக்கைகளாகும்.
3. தொழிலாள வர்க்கத்தின் மீதான தாக்குதலும் சமூக வேலைத்திட்டங்களை அழிப்பதும்
ட்ரம்ப் நிர்வாகம் வெளிநாடுகளில் போரை விரிவாக்கி வருகின்ற அதேவேளையில், அது உள்நாட்டில் ஒரு சமூக எதிர்புரட்சியை நடத்தி வருகிறது. எலோன் மஸ்க் மற்றும் “அரசு செயல்திறன் துறை” (DOGE) மூலமாக நிர்வாகம், நிதியியல் தன்னலக்குழுக்களின் நலன்களுக்காக அரசின் ஒரு மறுசீரமைப்பை நடைமுறைப்படுத்தி வருகிறது. சமூக வேலைத்திட்டங்களை முற்றிலுமாக அழிப்பதும், பெருநிறுவன இலாபமீட்டலுக்கு ஏற்ப அனைத்து தடைகளை நீக்குவதும், எதிர்ப்பை ஒடுக்க ஒரு கண்காணிப்பு ஆட்சியை பலப்படுத்துவதுமே இதன் நோக்கமாகும்.
இந்த செயல்முறையின் முதல் முக்கிய கட்டம், அத்தியாவசிய பொது சேவைகளை வழங்கும் நிறுவனங்களை இலக்கு வைத்து, கூட்டாட்சி தொழிலாளர்களை பெருமளவில் பணிநீக்கம் செய்வதாகும். ஏற்கனவே பல்லாயிரக்கணக்கானோர் அகற்றப்பட்டு, முழு நிறுவனங்களும் ஒரே இரவில் மூடப்பட்டுவிட்டன. சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிறுவனம் (EPA), உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (FDA) மற்றும் சுகாதார மனித சேவைகள் துறை (HHS) ஆகியவை ஆழ்ந்த வெட்டுக்களை எதிர்கொண்ட முதல் நிறுவனங்களில் ஒன்றாகும்.
அரசு செயல்திறன் துறையின் மூலமாக, எலோன் மஸ்க் கூட்டாட்சி செலவினங்களில் 2 ட்ரில்லியன் டாலர்களை வெட்டுவதற்கும், தொழிலாள வர்க்கத்திற்கு பயனளிக்கும் திட்டங்களை நீக்குவதற்கும், அதேவேளையில் இன்னும் அதிக செல்வ வளத்தை பெரும் செல்வந்தர்களுக்கு மாற்றுவதற்கும் ஒரு திட்டத்தை முன்னெடுத்து வருகிறார். இந்த செயல்முறையின் ஒரு முக்கிய கூறுபாடு, செயற்கை நுண்ணறவு உந்துதல் கண்காணிப்பு அமைப்பை நிறுவுவதாகும். எலோன் மஸ்க், உள் வருவாய் சேவை (IRS), சமூக பாதுகாப்பு நிர்வாகம் மற்றும் பிற கூட்டாட்சி நிறுவனங்களின் தரவை ஒருங்கிணைத்து நவீன கால கறுப்புப் பட்டியலை உருவாக்கி வருகிறார். இந்த அமைப்புமுறை அரசியல் எதிரிகளை குறிவைக்கவும், கருத்து வேறுபாடுகளை குற்றமாக்கவும், ட்ரம்ப் நிர்வாகத்தை எதிர்க்கும் தொழிலாளர்களுக்கு எதிராக பொருளாதார பழிவாங்கலை மேற்கொள்ளவும் பயன்படுத்தப்படும்.
தன்னலக்குழுவிற்கான அரசாங்கம்
மேலும் மேலும் வெளிப்படையாக, ட்ரம்ப், தான் ஒரு சர்வாதிகாரியாக செயல்பட்டு வருவதாக அறிவித்து வருகிறார். கடந்த செவ்வாயன்று, வெள்ளை மாளிகையின் அதிகாரப்பூர்வ சமூக ஊடகக் கணக்கு, “மன்னர் நீடூழி வாழ்க!” என்ற பிரகடனத்துடன் கூடிய கிரீடம் அணிந்த ட்ரம்பின் படத்தை வெளியிட்டது. “நாட்டைக் காப்பாற்றுபவன் எந்த சட்டத்தையும் மீறமாட்டான்” என்று அவர் கூறிய சில நாட்களுக்குப் பிறகு இது வந்தது.
ட்ரம்ப் நிர்வாகம் வெறுமனே ஊழல் தனிநபர்களின் அபிலாஷைகளை மட்டும் பிரதிபலிக்கவில்லை. இது முன்னொருபோதும் இல்லாத அளவிற்கு செல்வவளத்தை குவித்து வைத்துள்ள அமெரிக்க பெருநிறுவன மற்றும் நிதியியல் தன்னலக்குழுக்களின் அரசியல் வெளிப்பாட்டின் பிரதிபலப்பாகும்.
அதே நேரத்தில், ட்ரம்ப் வெள்ளை மாளிகையின் கொள்கைகள் வலிமையின் நிரூபணம் அல்ல, மாறாக நெருக்கடி மற்றும் விரக்தியின் நிரூபணம் ஆகும். தன்னலக்குழுவானது, அதன் உலகளாவிய பொருளாதார அந்தஸ்தின் நீண்ட-கால வீழ்ச்சி, வோல் ஸ்ட்ரீட்டின் தொடர்ச்சியான பிணையெடுப்புகளின் மூலமாக கட்டமைக்கப்பட்ட ஒரு பாரிய கடன் மலை, அதன் சொந்த பொறுப்பற்ற இராணுவவாதம் மற்றும் அமெரிக்காவிலும் உலகெங்கிலும் வளர்ந்து வரும் எதிர்ப்பின் பேரழிவு விளைவுகள் ஆகியவற்றை எதிர்கொள்கிறது.
ஜனநாயகக் கட்சி இந்த நிகழ்ச்சிப்போக்கின் எதிர்ப்பாளர் அல்ல, மாறாக அதன் முக்கிய சிற்பிகளில் ஒன்றாகும். அது சமூக எதிர்ப்புக்கான கட்சி அல்ல, மாறாக ஜனநாயக உரிமைகள் மற்றும் சமூக வேலைத்திட்டங்களை அழிப்பதற்கு முழுமையாக உடந்தையாக உள்ள முதலாளித்துவ அரசின் ஒரு தூணாகும்.
ஜனநாயகக் கட்சியினர் தங்களை ட்ரம்பின் விமர்சகர்களாக காட்டிக் கொள்கின்ற அதேவேளையில், அவர்களின் எதிர்ப்பு முற்றிலுமாக ஆளும் வர்க்க மூலோபாயத்தின் நிலைப்பாட்டில் இருந்து வருகிறது. அவர்களின் மிகப்பெரிய கவலை ட்ரம்பினது சர்வாதிகார அபிலாஷைகள் அல்ல, மாறாக அவரது கொள்கைகள் உக்ரேனில் அமெரிக்க தலைமையிலான போருக்கு குழிபறித்து வருகின்றன மற்றும் ஐரோப்பாவில் வாஷிங்டனின் மேலாதிக்கத்தை பலவீனப்படுத்துகின்றன என்பதாகும். இதனால் தான், ட்ரம்ப் ஜனாதிபதி பதவிக்கு வந்து ஒரு மாதத்திற்குப் பின்னர், ஜனநாயகக் கட்சியினரின் உரத்த எதிர்ப்புகள் சமூக பாதுகாப்பை அவர் வெட்டுவதற்கு எதிராகவோ அல்லது புலம்பெயர்ந்தவர்களுக்கு எதிராக இராணுவ பலத்தைப் பயன்படுத்துவதற்கு எதிராகவோ இல்லை. மாறாக, ரஷ்யாவை “திருப்திப்படுத்துவதாக” சொல்லப்படுவதற்கு எதிரானதாக உள்ளன.
ட்ரம்ப் ஒரு மாற்றத்தைப் பிரதிநிதித்துவம் செய்கின்ற அதேவேளையில், ஜனநாயகக் கட்சியினர் மற்றும் குடியரசுக் கட்சியினர் இருவராலும் மேற்பார்வையிடப்படும் ஒரு பரந்த நிகழ்முறையில் இருந்தும் அவர் எழுகிறார். கிளிண்டனின் கீழ் துரிதப்படுத்தப்பட்ட ஏழைகளுக்கான நலத்திட்டங்களின் அழிவு, வரலாற்றில் பணக்காரர்களுக்கு மிகப்பெரிய செல்வவளத்தைக் கைமாற்றுவதை மேற்பார்வையிட்ட ஒபாமா மற்றும் பைடெனின் கீழ் தொடர்ந்தது. பைடென் நிர்வாகத்தின் மைய முன்னுரிமை உலகளாவிய ஏகாதிபத்தியப் போரை அதிகரிப்பதாகும். இதில், உக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்க-நேட்டோ போர் மற்றும் காஸாவில் இனப்படுகொலை ஆகியவை அடங்கும்.
இப்போது, ட்ரம்ப் மீண்டும் அதிகாரத்துக்கு வந்தவுடன், அவரது நிர்வாகத்திற்கு எதிராக பாரிய எதிர்ப்பை அணிதிரட்டுவதற்கு ஜனநாயகக் கட்சியினருக்கு எந்த உத்தேசமும் இல்லை. அவர்களின் அச்சம் ட்ரம்ப் மீது அல்ல, மாறாக தொழிலாள வர்க்கத்தைக் குறித்ததாகும்.
தொழிலாள வர்க்கத்துடனான வளர்ந்துவரும் மோதலும், முன்னோக்கி செல்லும் பாதையும்
அரசு மீதான ட்ரம்ப் நிர்வாகத்தின் வன்முறையான மறுஒழுங்கமைப்பு ஒரு வெற்றிடத்தில் நிகழவில்லை. ஆளும் வர்க்கம் அதன் கொள்கைகளுக்கு எதிரான பாரிய எதிர்ப்பை முன்கூட்டியே தடுத்து அடக்க முயற்சிக்கும் நிலையில், அமெரிக்காவிற்குள்ளும் சர்வதேச அளவிலும் வர்க்கப் போராட்டத்தின் வளர்ச்சிக்கான ஒரு பிரதிபலிப்பை குறிக்கிறது.
ஆனால், அரசியலின் மறுசீரமைப்பு என்பது ஒரு பக்கத்தில் மட்டும் நடைபெறுவதில்லை. கடந்த இரண்டு ஆண்டுகளில், குறிப்பாக விண்வெளித் தொழிலாளர்கள், சரக்கு விநியோக தொழிலாளர்கள், ஆசிரியர்கள், வாகனத்துறை தொழிலாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் சேவைத்துறை தொழிலாளர்கள் மத்தியில், தொழிலாள வர்க்கப் போராட்டங்கள் கணிசமான அளவில் அதிகரித்துள்ளன.
ட்ரம்ப்-மஸ்க் நாசகார நடவடிக்கையை எதிர்க்கும் கூட்டாட்சி தொழிலாளர்கள் மற்றும் அரசாங்க விஞ்ஞானிகள் மத்தியில் ஏற்கனவே எதிர்ப்பு எழுந்து வருகிறது. அஞ்சல் சேவையை தனியார்மயமாக்கும் அரசாங்கத்தின் திட்டங்களால், அஞ்சல் ஊழியர்கள் கோபமடைந்துள்ளனர். இது பெருமளவிலான பணிநீக்கங்களுக்கும் ஒரு முக்கியமான பொது நிறுவனத்தை அழிப்பதற்கும் வழிவகுக்கும்.
மில்லியன் கணக்கானவர்கள் ஏற்கனவே வறுமை, வீடற்ற நிலை மற்றும் மருத்துவ கவனிப்பு கிடைக்காத நிலைக்கு முகங்கொடுத்து வருகின்ற நிலையில், மலைப்பூட்டும் சமூக நெருக்கடி நிலைமைகளின் கீழ், ட்ரம்ப் நிர்வாகத்தின் கொள்கைகள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. கடந்த வாரம், இரண்டு குழந்தைகளின் குடும்பம் அவர்களின் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட பின்னர், டெட்ராய்டில் குளிரில் உறைந்து இறந்தனர்—இது ட்ரம்பின் நிகழ்ச்சிநிரலின் விளைவுகளின் ஒரு கொடூரமான முன்னோட்டமாகும். அதேநேரத்தில், கோவிட்-19 தொற்றுநோய் தொடர்ந்து பரவி வருகின்ற நிலையிலும், H5N1 “பறவைக் காய்ச்சல்” போன்ற புதிய நோய் அச்சுறுத்தல்கள் கட்டுப்படுத்தப்படாமல் வெளிப்பட்டு வருகின்ற நிலையிலும், பொது சுகாதாரத் திட்டங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன. பொதுக் கல்வியை ஒழித்துக்கட்டுவதும், சமூகத் திட்டங்களில் பெருமளவில் வெட்டுக்களை செய்வதும் ட்ரம்பிற்கு வாக்களித்த பல தொழிலாளர்கள் உட்பட மில்லியன் கணக்கானவர்களுக்கு பேரழிவு தரும் விளைவுகளை ஏற்படுத்தும்.
இந்த தாக்குதல்களின் அளவும் வேகமும் ஒரு பொது வேலைநிறுத்தத்திற்கான அழைப்புக்கள் உட்பட பிரமாண்டமான எதிர்ப்பு இயக்கத்தைத் தூண்டும். தொழிலாளர்களின் போராட்டங்களை நசுக்குவதற்கு திட்டமிட்டு செயற்பட்டு வருகின்ற பெருநிறுவன-சார்பு தொழிற்சங்க அதிகாரத்துவமே இந்த அபிவிருத்தி அடைந்து வரும் இயக்கத்திற்கு ஒரு பிரதான தடையாக உள்ளது. பைடென் நிர்வாகத்தின் கீழ், தொழிற்சங்க எந்திரம் பெருநிறுவன நலன்களைப் பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகித்துள்ளது. இதில், ரயில்வே தொழிலாளர்கள் மீது அரசாங்க ஆதரவு ஒப்பந்தத்தை சுமத்துவதும் அடங்கும், அதை அவர்கள் பெருமளவில் நிராகரித்திருந்தனர்.
ட்ரம்பின் மீள்வருகையுடன், தொழிற்சங்க எந்திரம் அவரது முதல் நிர்வாகத்தின் கீழ் செய்ததைப் போலவே, புதிய ஆட்சிக்கு ஏற்ப தன்னை தகவமைத்துக் கொண்டிருக்கிறது. டீம்ஸ்டர்ஸ் தலைவர் சீன் ஓ’பிரையன் தன்னை வெள்ளை மாளிகைக்கான ஒரு ஆலோசகராக நிலைநிறுத்திக் கொண்டுள்ளார். அதேவேளையில், ஐக்கிய வாகன தொழிலாளர்கள் சங்கத்தின் தலைவர் ஷான் ஃபெயின் தேசியவாத பொருளாதார கொள்கையில் ட்ரம்புடன் “வேலை செய்ய” தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார். நூறாயிரக்கணக்கான அரசாங்க ஊழியர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் AFGE (அமெரிக்க அரசாங்க ஊழியர்களின் கூட்டமைப்பு), பாரிய பணிநீக்கங்களை எதிர்க்க ஏதும் செய்யவில்லை. அது தொழிலாளர்களை நீதிமன்றங்களை நம்புமாறும் அல்லது தேசிய தொழிலாளர் உறவுகள் வாரியத்திடம் (NLRB) பயனற்ற முறையீடுகளை செய்யுமாறும் கூறி வருகிறது.
ஜனநாயகக் கட்சிக்குள்ளும் அதைச் சுற்றியும் செயல்படும் போலி-இடது அமைப்புகளும் ட்ரம்பின் எழுச்சிக்கு நேரடிப் பொறுப்பாளிகளாகும். கடந்த தசாப்தத்தில், இந்த சக்திகள் தொழிலாள வர்க்கத்தை இன மற்றும் பாலின கோடுகளில் பிளவுபடுத்த முனைந்துள்ளன.
சர்வாதிகாரம், போர் மற்றும் முதலாளித்துவ சுரண்டலுக்கு எதிரான ஒரு போராட்டத்தில் தொழிலாளர்களை ஐக்கியப்படுத்தி, ட்ரம்ப் நிர்வாகத்திற்கு எதிராக தொழிலாள வர்க்கத்தை ஒழுங்கமைப்பதற்கான போராட்டத்தை சோசலிச சமத்துவக் கட்சி முன்னெடுத்து வருகிறது. இந்த முயற்சியின் மையமாக, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவால் (ICFI) ஸ்தாபிக்கப்பட்ட சர்வதேச தொழிலாளர் குழுக்களின் சாமானிய தொழிலாளர் கூட்டணி (IWA-RFC) இருந்து வருகிறது. இது, தொழில்துறைகள் மற்றும் தேசிய எல்லைகளைக் கடந்து, தொழிலாளர்களின் போராட்டங்களை ஒருங்கிணைக்க அமைப்புரீதியான வழிமுறைகளை வழங்கி வருகிறது.
IWA-RFC, பணியிடங்கள், பள்ளிகள் மற்றும் சுற்றுப்புறங்களில் - எதிர்ப்பு மையங்களாகச் செயல்படும் சுயாதீனமான போராட்ட அமைப்புகளான தொழிலாளர் குழுக்களை கட்டியெழுப்ப செயலூக்கத்துடன் போராடி வருகிறது. இந்தக் குழுக்கள் தொழிலாள வர்க்கத்தின் அனைத்து பிரிவுகளையும் அவர்களின் சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதில் ஐக்கியப்படுத்தும், பாரிய வேலைநீக்கங்கள் மற்றும் சமூக வெட்டுக்களுக்கு எதிரான போராட்டத்தை புலம்பெயர்ந்தோரின் பாதுகாப்பு மற்றும் போருக்கு எதிரான போராட்டத்துடன் ஒன்றிணைக்கும்.
கடிதப் போக்குவரத்து மற்றும் ஒத்துழைப்பின் ஒரு சக்திவாய்ந்த வலையமைப்பின் மூலமாக IWA-RFC, தொழிலாளர்களுக்கு அமெரிக்காவிலும் சர்வதேச அளவிலும் வேலைநிறுத்தங்கள், ஆர்ப்பாட்டங்கள் மற்றும் வெகுஜன நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க தேவையான வழிகாட்டுதலையும் ஆதரவையும் வழங்கும்.
சர்வாதிகாரத்திற்கு எதிரான போராட்டம் என்பது முதலாளித்துவத்திற்கு எதிரான போராட்டத்தில் இருந்து பிரிக்க முடியாததாகும். சோசலிச சமத்துவக் கட்சி தொழிலாள வர்க்கத்தின் நலன்களுக்காக சமூகத்தை மறுசீரமைக்க ஒரு சோசலிச வேலைத்திட்டத்தை முன்வைக்கிறது. நிதியியல் தன்னலக்குழுக்களின் செல்வவளம் பறிமுதல் செய்யப்பட்டு, அனைவருக்கும் மருத்துவக் கவனிப்பு, கல்வி மற்றும் பாதுகாப்பான, நல்ல ஊதிய வேலைகளுக்கு நிதியாதாரம் அளிக்க, அவை பயன்படுத்தப்பட வேண்டும். ஏகாதிபத்திய போர் எந்திரம் கலைக்கப்பட்டு, அமெரிக்க-தலைமையிலான போர்களை முடிவுக்குக் கொண்டு வந்து, இராணுவத்துக்கான செலவீனங்களை சமூகத்தின் மறுகட்டமைப்புக்காக திருப்பி விடப்பட வேண்டும். அரசியல் மற்றும் பொருளாதார அதிகாரத்தை முதலாளித்துவ தன்னலக்குழுவின் கைகளில் அல்லாமல் தொழிலாள வர்க்கத்தின் கைகளில் ஒப்படைக்க ஒரு தொழிலாளர் அரசாங்கம் ஸ்தாபிக்கப்பட வேண்டும்.
இந்த போராட்டத்தை முன்னெடுக்க விரும்பும் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் அனைவரையும் சோசலிச சமத்துவக் கட்சியில் இணைந்து அதைக் கட்டியெழுப்புமாறு நாங்கள் வலியுறுத்துகிறோம். சர்வாதிகாரத்தை நோக்கிய உந்துதலை தடுத்து நிறுத்த தகைமை கொண்ட ஒரே சமூக சக்தி தொழிலாள வர்க்கம் மட்டுமே ஆகும். ஆனால், அது ஒரு புரட்சிகரத் தலைமை மற்றும் வேலைத்திட்டத்தைக் கொண்டு ஆயுதபாணியாக்கப்பட்டாக வேண்டும். இந்தத் தலைமையைக் கட்டியெழுப்புவதற்கும், வரவிருக்கும் பிரமாண்டமான போராட்டங்களுக்கு தொழிலாள வர்க்கத்தை தயார்படுத்துவதற்கும், ஒரு சோசலிச எதிர்காலத்திற்காகப் போராடுவதற்கும் சோசலிச சமத்துவக் கட்சி உறுதிபூண்டுள்ளது.