முன்னோக்கு

ட்ரம்பின் உக்ரேனிய கொள்கை மாற்றம், அமெரிக்காவின் உலகளாவிய போரின் புதிய கட்டத்தை சமிக்ஞை செய்கிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம். 

ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், உக்ரேன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியை செப்டம்பர் 27, 2024 அன்று நியூ யோர்க்கில் உள்ள ட்ரம்ப் டவரில் சந்திக்கிறார். [AP Photo/Julia Demaree Nikhinson]

கடந்த செவ்வாயன்று, அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மார்கோ ரூபியோ ரஷ்ய வெளியுறவு மந்திரி செர்ஜி லாவ்ரோவ் உடன் சவூதி அரேபியாவில் ஒரு உத்தியோகபூர்வ சந்திப்பை மேற்கொண்டார். இது பிப்ரவரி 2022 உக்ரேன் மீதான ரஷ்யா மேற்கொண்ட படையெடுப்புக்குப் பின்னர், அமெரிக்க மற்றும் ரஷ்ய அதிகாரிகளுக்கு இடையில் இடம்பெற்ற முதல் உயர்மட்ட உச்சிமாநாடு ஆகும்.

இந்த சந்திப்பைத் தொடர்ந்து, அமெரிக்காவும் ரஷ்யாவும் இராஜதந்திர உறவுகளை மீட்டெடுக்க பாடுபடும் என்று ரூபியோ அறிவித்தார். ட்ரம்ப் நிர்வாகம் “உக்ரேனில் ஏற்பட்ட மோதலை நீடித்த மற்றும் அனைத்து தரப்பினரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் பேச்சுவார்த்தை நடத்தி முடிப்பதை” நோக்கமாகக் கொண்டுள்ளது என்று அவர் கூறினார். ரஷ்யாவுடனான “புவிசார் அரசியல் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு” இரண்டையும் அமெரிக்கா ஆராயும் என்பதையும் அவர் சேர்த்துக் கொண்டார்.

உக்ரேன் மற்றும் அமெரிக்காவின் நேட்டோ நட்பு நாடுகள் இரண்டையும் தவிர்த்து, இருதரப்பு அடிப்படையில் இந்த சந்திப்பு நடந்தது. பைடென் நிர்வாகத்தின் கீழ், உக்ரேன் பெற்ற இராணுவ உதவிகளை திருப்பிச் செலுத்த வேண்டும் என்ற சாக்குபோக்கின் கீழ், உக்ரேன் அதன் கனிம வளங்களில் பாதியை அமெரிக்காவிடம் ஒப்படைக்க வேண்டுமென்ற ட்ரம்ப் நிர்வாகத்தின் உத்தியோகபூர்வ கோரிக்கைகளும் இதனுடன் சேர்ந்திருந்தன.

ரஷ்யாவுடன் இராஜதந்திர உறவுகளை மீண்டும் திறப்பதன் மூலமாக, ட்ரம்ப் நிர்வாகம் ஐரோப்பாவிலோ அல்லது உலகிலோ அமைதியை அடைவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று யாரும் தவறாக நம்பக்கூடாது. மாறாக, ட்ரம்ப் அமெரிக்க மேலாதிக்கத்திற்கு பயன்படுத்தவும், இறுதியில் அமெரிக்க இராணுவ ஆக்ரோஷத்தின் மைய இலக்கான சீனாவின் மீது கவனம் குவிக்கவும், ஐரோப்பிய அரங்கில் இருந்து இராணுவ ஆதாரவளங்களை மறுநிலைநிறுத்த முனைந்து வருகிறார்.

உக்ரேனுக்கு ஆயுதங்களை வழங்கும் ஏகாதிபத்திய சக்திகளின் முக்கிய அமைப்பான உக்ரேன் தொடர்புக் குழுவிடம் பேசுகையில், பாதுகாப்புச் செயலர் பீட் ஹெக்செத் கடந்த வாரம் இதைத் தெளிவுபடுத்தினார். “ஐரோப்பாவின் பாதுகாப்பில் அமெரிக்கா முதன்மையாக கவனம் செலுத்துவதை அப்பட்டமான மூலோபாய யதார்த்தங்கள் தடுக்கின்றன” என்று அவர் குறிப்பிட்டார். மேலும், “இந்தோ-பசிபிக் பகுதியில் எமது தாயகத்தையும் முக்கிய தேசிய நலன்களையும் அச்சுறுத்தும் திறன் மற்றும் நோக்கத்துடன் கம்யூனிஸ்ட் சீனாவின் ஒரு சக போட்டியாளரையும் நாங்கள் எதிர்கொள்கிறோம்” என்று அவர் குறிப்பிட்டார்.

ஹெக்செத்தின் கருத்துக்கள், சமீபத்திய ஆண்டுகளில் எல்பிரிட்ஜ் கோல்பி போன்ற நபர்களால் உருவாக்கப்பட்ட பைடெனின் வெளியுறவுக் கொள்கை மீதான விமர்சனத்தை பிரதிபலிக்கின்றன. சீனாவுடனான போருக்காக அமெரிக்காவின் இராணுவ வளங்களை மறுஒருமுனைப்படுத்த அழைப்பு விடுத்துள்ள கோல்பியின் கொள்கைக்கான பாதுகாப்பு துணைச் செயலாளராக ஹெக்செத்தை ட்ரம்ப் தேர்வு செய்யதுள்ளார்.

2024 ஆம் ஆண்டில், “அமெரிக்கா யதார்த்தத்திற்கு முகம்கொடுக்க வேண்டும், ஐரோப்பாவை விட சீனாவுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்” என்று அறிவித்து, இரண்டு பிராந்தியங்களிலும் ஒரே நேரத்தில் போர் நடத்த அமெரிக்காவிடம் ஆதாரவளங்கள் இல்லை என்று கோல்பி வாதிட்டார். அவர் அதை “மூலோபாய முன்னுரிமை” என்று அழைத்தார்: பற்றாக்குறையின் யதார்த்தத்தையும் கடினமான தேர்வுகளுக்கான தேவையையும் எதிர்த்துப் போரிடுதல், அமெரிக்காவின் மிக முக்கியமான நலன்கள் ஆபத்தில் இருக்கும் ஆசியாவில் வளங்கள் மற்றும் மன உறுதியை ஒருமுனைப்படுத்துதலே” அந்த முன்னுரிமையாகும்.

உக்ரேனை ஒரு அரைக்-காலனித்துவமாக மாற்றுகின்ற அதேவேளையில், ஐரோப்பிய சக்திகளுக்கு எதிரான அதன் வர்த்தகப் போர் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தி அவற்றை கொள்ளையடிக்கும் பங்கிலிருந்து துண்டிப்பதே ட்ரம்ப் நிர்வாகத்தின் ஒரு நோக்கமாகும்.

உக்ரேனில் ரஷ்யாவுடனான பைடெனின் போர் விரிவாக்கம் ஐரோப்பிய சக்திகளை பொருளாதாரரீதியில் பலவீனப்படுத்தும் விளைவைக் கொண்டிருந்தது. அதேவேளையில், அவற்றை அமெரிக்காவில் இருந்து எண்ணெய் மற்றும் எரிவாயு இறக்குமதிகளைச் சார்ந்திருக்கவும் வைத்தது—இந்தக் கொள்கை ரஷ்ய-ஜேர்மன் நோர்ட் ஸ்ட்ரீம் 2 குழாய் வழித் திட்டத்தை அமெரிக்கா அழிப்பதில் மிகவும் ஆக்ரோஷமாக வெளிப்படுத்தப்பட்டது.

ட்ரம்ப் தனது கொள்ளகை மாற்றத்தை செயல்படுத்துவதன் மூலம், உக்ரேனில் ரஷ்யாவுடனான அமெரிக்க போரை நியாயப்படுத்த பைடென் நிர்வாகம் பயன்படுத்திய பொய்களை கைவிடுகிறார். கடந்த புதன்கிழமை, உக்ரேன் ரஷ்யாவுடன் போரைத் தொடங்கியதாகவும், உக்ரேன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி ஒரு சர்வாதிகாரியாக ஆட்சி செய்வதாகவும் ட்ரம்ப் குற்றம் சாட்டினார்.

ட்ரம்பின் அறிக்கைகள் ஜனநாயகக் கட்சி அரசியல்வாதிகளிடம் இருந்தும் அமெரிக்க ஊடகங்களிடம் இருந்தும் கோபத்தின் ஊளைகளைத் தூண்டின. இவை ரஷ்யாவின் 2022 படையெடுப்பு ஒரு “தூண்டப்படாத போர்” என்றும், அதன் ஒரே அடிப்படைக் காரணம் ரஷ்ய ஜனாதிபதியின் உளவியல் என்றும் பைடென் நிர்வாகம் பல ஆண்டுகளாக வறட்டுத்தனமாக ஊதிப் பிரச்சாரம் செய்து வந்தன.

“இது யதார்த்தத்தின் ஒரு அதிர்ச்சியூட்டும் திரித்தல்” என்று குறிப்பிட்ட நியூ யோர்க் டைம்ஸ், “ஜெலென்ஸ்கியும் அவரது நாடும் தாக்கப்பட்டன, அதன் பின்னரே ஜனாதிபதி ஜோசப் ஆர் பைடென் ஜூனியரின் கீழ், அமெரிக்கா விரிவான நிதி உதவியுடன் பதிலளித்தது” என்று எழுதியது.

“தூண்டப்படாத போர்” என்ற இந்த விவரிப்பு ஒரு மோசடியாகும். உக்ரேன், அமெரிக்காவின் ஆதரவுடன், 2021 இல், இராணுவ பலத்தின் மூலம் கிரிமியாவை மீண்டும் கைப்பற்றுவதற்கான அதன் நோக்கத்தை அரசு கோட்பாடாக ஸ்தாபித்ததன் மூலமும், நேட்டோ கூட்டணியில் இணைவதற்கான அதன் நகர்வுகளை துரிதப்படுத்தியதன் மூலமும் ரஷ்ய படையெடுப்பைத் தூண்டியது. உக்ரேனில், 2014 ஆட்சிக்கவிழ்ப்பு சதிக்குப் பின்னர், அமெரிக்க மற்றும் நேட்டோ சக்திகள் அதன் இராணுவத்தைக் கட்டியெழுப்ப அந்நாட்டிற்குள் பில்லியன் கணக்கான டாலர்களைப் பாய்ச்சின. பைடென் பதவியேற்றதும், ரஷ்ய படையெடுப்பைத் தூண்டும் நோக்கத்துடன் இந்த நடவடிக்கைகளை அவர் விரிவுபடுத்தினார்.

இருப்பினும், உக்ரேன் “பைடெனை ஒரு பிடில் போல வாசித்தது” கூறும்போது ட்ரம்ப் பொய் சொல்கிறார். நேட்டோ சக்திகளைப் பயன்படுத்தியது உக்ரேன் அல்ல, நேட்டோ சக்திகள்தான் உக்ரேனைப் பயன்படுத்தின. பல ஆண்டுகளாக, நேட்டோ ரஷ்யாவை பலவீனப்படுத்தும் நம்பிக்கையில் “கடைசி உக்ரேனியர் இருக்கும்வரை போரில் ஈடுபடுவதற்கான” கோரிக்கையை விடுத்து வந்தது.

உக்ரேன் மீதான அமெரிக்கக் கொள்கையில் ட்ரம்ப் மேற்கொண்ட மாற்றம் மட்டுமே, அவரது ஜனாதிபதி பதவிக் காலத்தில் இதுவரை ஜனநாயகக் கட்சி மற்றும் அதனுடன் இணைந்த ஊடகங்களுக்குள் குறிப்பிடத்தக்க அரசியல் எதிர்ப்பைத் தூண்டியுள்ளது.

“செவ்வாய்க்கிழமை அமெரிக்காவிற்கு ஒரு இருண்ட நாளாக இருந்தது” என்று வாஷிங்டன் போஸ்ட் கட்டுரையாளர் டேவிட் இக்னேஷியஸ் அறிவித்தார். அமெரிக்காவை ஒரு தனிநபர் சர்வாதிகாரமாக மாற்றுவது, பத்தாயிரக் கணக்கான கூட்டாட்சி தொழிலாளர்களை பணிநீக்கம் செய்வது, அல்லது உரிமைச் செலவினங்களைக் குறைப்பது ஆகியவற்றை நோக்கமாகக் கொண்ட ட்ரம்பின் எந்தவொரு நடவடிக்கைகளையும் விவரிக்க அவர் இதேபோன்ற மொழியைப் பயன்படுத்தவில்லை. உண்மையில், “நான் பொதுவாக தினசரி ஜனாதிபதியின் வெடிப்பை புறக்கணிக்கிறேன். ஆனால் இந்த முறை வேறுபட்டது” என்று இக்னேஷியஸ் ஒப்புக்கொண்டார்.

இது “வேறுபட்டது” ஏனெனில், இது அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் முக்கியமான புவிசார்-மூலோபாய நலன்களுடன் தொடர்புடையது. மேலும், இதன் மீது குறிப்பிடத்தக்க பிளவுகள் உள்ளன. உக்ரேனிய போருக்கு முன்னுரிமையைக் குறைப்பதன் மூலமாகவும், நடைமுறையளவில் ரஷ்யாவுக்கு களத்தை விட்டுக்கொடுப்பதன் மூலமாகவும், ட்ரம்ப் யூரேசியாவில் அமெரிக்க செல்வாக்கைப் பலவீனப்படுத்தி வருகிறார் என்று ஜனநாயகக் கட்சியினர் மட்டுமல்ல, அரசியல் ஸ்தாபகத்தின் மேலாதிக்க கன்னைகளும் அஞ்சுகின்றன. இது சீனாவைப் பலவீனப்படுத்துவதற்கு முக்கியமானதாக அவர்கள் காண்கின்றனர்.

மற்றபடி ட்ரம்பின் அனைத்து சட்டவிரோத நடவடிக்கைகளையும் உற்சாகப்படுத்திய வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல், உக்ரேனில் ஒரு காட்டிக்கொடுப்பு என்று அது அழைக்கும் ஒன்றுக்காக அவரை பகிரங்கமாக கண்டித்தது. “உக்ரேன் சரணடைதலை நோக்கி ட்ரம்ப் நகர்கிறார்” என்ற தலைப்பில் கடந்த புதன்கிழமை ஜேர்னல் எழுதிய தலையங்க கட்டுரையில் பின்வருமாறு குறிப்பிட்டது:

“நேட்டோ எல்லையின் கூடுதல் பகுதிகளில் திரு. புட்டினுக்கு ஒரு புதிய இடத்தை மறுப்பதில் அமெரிக்கா ஆழ்ந்த ஆர்வம் கொண்டுள்ளது. இதுவே அமெரிக்கா உக்ரேனை ஆயுதபாணியாக்க சரியாக இருப்பதற்கான உண்மையான காரணம். உக்ரேனிய சரணடைதலுக்கு நிகரான ஒரு உடன்பாடு பசிபிக் மற்றும் மத்திய கிழக்கிற்கு பரவும் அமெரிக்க சக்திக்கு ஒரு அடியாக இருக்கும். அமெரிக்காவின் கௌரவம் மற்றும் உலக அமைதியின் பொற்காலத்தை மீட்டெடுப்பதாக திரு ட்ரம்ப் அளித்த வாக்குறுதிக்கு இது எதிரானதாக இருக்கும்.”

2008 இல், புஷ் நிர்வாகம் உக்ரேன் நேட்டோவின் ஒரு அங்கத்துவ நாடாக “ஆகும்” என்று அறிவித்தது. அப்போதிருந்து, குடியரசுக் கட்சி மற்றும் ஜனநாயகக் கட்சி என நான்கு நிர்வாகங்களில், அமெரிக்க ஏகாதிபத்தியம் உக்ரேனை நேட்டோவின் கிழக்கு நோக்கிய விரிவாக்கத்திற்கான ஒரு ஈட்டிமுனையாக மாற்ற பரந்த ஆதாரவளங்களை செலவிட்டு வந்துள்ளது. இது, ரஷ்யாவை அதன் மேற்கு எல்லைகளில் ஒரு இரத்தக்களரிப் போருக்கு இழுப்பதன் மூலம் பலவீனப்படுத்தும் நோக்கில் உள்ளது.

ட்ரம்பின் வெளியுறவுக் கொள்கை தொடர்பான மாற்றமானது, இந்தக் கொள்கை ரஷ்யா மீது “மூலோபாய தோல்வியை” சுமத்தும் இலக்கை அடையத் தவறிவிட்டது என்ற யதார்த்தத்தைப் பிரதிபலிக்கிறது. ஆனால், அரசியல் ஸ்தாபகத்தின் ஆதிக்கப் பிரிவுகள், இப்போது உக்ரேனில் இருந்து “துண்டித்து ஓடுவது” என்பது தோல்வியை ஒப்புக்கொள்வதாக இருக்கும் என்றும், இது நேட்டோ கூட்டணிக்கு மட்டுமல்ல, மாறாக அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உலகளாவிய அந்தஸ்துக்கே பேரழிவுகரமான விளைவுகளைக் கொடுக்கும் என்றும் அஞ்சுகின்றன. அனைத்திற்கும் மேலாக, அமெரிக்காவின் நேட்டோ கூட்டாளிகளை அந்நியப்படுத்துவது, சீனாவை எதிர்கொள்ளும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் திறனுக்கு எதிர்மறையான விளைவுகளுடன், டாலருக்கு மாற்றீடுகளைத் தேடுவது உட்பட, அமெரிக்காவிலிருந்து அவர்களின் சொந்த கூட்டணிகளை உருவாக்க வழிவகுக்கும் என்று அவை அஞ்சுகின்றன.

2024 ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக, பைடென் நிர்வாகம் உக்ரேன் போரை பொறுப்பற்ற முறையில் தீவிரப்படுத்தியதானது, ட்ரம்ப் “அமைதியை” நாடுபவராகக் காட்டிக் கொள்ள அனுமதித்தது. ரஷ்யாவுடனான அமெரிக்க போருக்கு வசதியான உயர் நடுத்தர வர்க்கத்தில் ஜனநாயகக் கட்சியின் அடித்தளத்திற்கு வெளியில் பரந்த மக்கள் ஆதரவு இல்லாத நிலைமைகளின் கீழ், போரின் ஒரு எதிர்ப்பாளராக ட்ரம்ப் காட்டிக் கொண்டது அவரது தேர்தல் வெற்றியில் ஒரு பாத்திரம் வகித்தது.

உண்மையில், ட்ரம்ப் நிர்வாகம் உலகளாவிய போர் நடவடிக்கைகளுக்கு பரந்த அளவில் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறது. ட்ரம்ப் பதவியேற்ற முதல் மாதத்தில், இராணுவ பலத்தைக் கொண்டு கிரீன்லாந்து மற்றும் பனாமா கால்வாயை கைப்பற்றுவதற்கும், பொருளாதார பலவந்தத்தின் மூலமாக கனடாவை இணைத்துக் கொள்வதற்கும், மற்றும் காஸாவை இனரீதியில் சுத்திகரித்து அதை ஒரு அமெரிக்க காபந்து நாடாக மாற்றுவதற்கும் அவர் நோக்கத்தை அறிவித்துள்ளார்.

போர் மற்றும் காலனித்துவ மேலாதிக்கத்திற்கான இந்தத் திட்டங்களுக்கு, மத்திய கூட்டாட்சி தொழிலாளர் படையின் மீதான ட்ரம்பின் பாரிய தாக்குதல்கள் மற்றும் சமூகநலத் திட்டங்களை வெட்டித்தள்ளி தொழிலாள வர்க்கத்தை வறுமையில் ஆழ்த்த எலோன் மஸ்க்கின் அரசாங்க செயல்திறன் துறையின் (DOGE) தலைமையிலான தொடர்ச்சியான முயற்சிகள் மூலம் நிதியளிக்கப்பட உள்ளன.

நிலைமை எவ்வாறு அபிவிருத்தி அடைகிறது என்பது நிச்சயமற்றதாகவே உள்ளது. உக்ரேன் மீது ட்ரம்ப் மற்றும் புட்டினுக்கு இடையிலான எந்தவொரு உடன்படிக்கையும் ட்ரம்ப் நிர்வாகத்தின் மற்றும் அது பிரதிநிதித்துவம் செய்யும் ஆளும் வர்க்கத்தின் கன்னைகளின் நலன்களுக்கு சேவையாற்றும் வரையில் மட்டுமே நீடிக்கும். அனைத்திற்கும் மேலாக, உக்ரேனிய போர், பல முனைகளில் தீவிரமடைந்து வரும் ஓர் உலகளாவிய மோதலின் ஒரு கூறுபாடு மட்டுமே. ஆளும் வர்க்கத்திற்குள் என்னதான் தந்திரோபாய வேறுபாடுகள் இருந்தாலும், அனைத்துக் கன்னைகளும் அமெரிக்க ஏகாதிபத்திய மேலாதிக்கத்தை பாதுகாக்க இராணுவ வலிமையை பயன்படுத்த பொறுப்பேற்றுள்ளன.

போருக்கு எதிரான போராட்டம் அதை உருவாக்கும் முதலாளித்துவ அமைப்புமுறைக்கு எதிரான போராட்டத்தில் இருந்து பிரிக்க முடியாதது என்பதை தொழிலாள வர்க்கம் உணர வேண்டும். ஏகாதிபத்தியத்திற்கு எதிரான ஒரு இயக்கமானது, போர், சுரண்டல் மற்றும் சர்வாதிகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் ஒரு சோசலிச வேலைத்திட்டத்துடன் ஆயுதபாணியாக்கப்பட்டு, தேசிய எல்லைகளைக் கடந்து தொழிலாளர்களை சுயாதீனமாக அணிதிரட்டுவதை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும்.