மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
சாமானிய தொழிலாளர் குழுக்களின் சர்வதேச தொழிலாளர் கூட்டணி (IWA-RFC), இப்போது எலோன் மஸ்க்கின் அரசு செயல்திறன் துறையால் (DOGE) நடத்தப்பட்டு வரும், கூட்டாட்சி அரசுத் தொழிலாளர்கள் மீதான ட்ரம்ப் நிர்வாகத்தின் தாக்குதலை நிறுத்த பாரிய நடவடிக்கைக்கு அழைப்பு விடுக்கிறது. இது, தொழிலாள வர்க்கத்தின் மீதான முன்னொருபோதும் இல்லாத தாக்குதலும், ஒரு பகிரங்க போர் அறிவிப்பும் ஆகும். தொழிலாளர்கள் இப்போது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், அதன் விளைவுகள் கூட்டாட்சி அரசுத் தொழிலாளர்களுக்கு மட்டுமல்ல, மாறாக ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கத்திற்கும் பேரழிவுகரமானதாக இருக்கும்.
இந்தப் போராட்டத்திற்கு தலைமை கொடுக்க, தொழிற்சங்க அதிகாரத்துவங்களில் இருந்து சுயாதீனமான, சாமானிய தொழிலாளர் குழுக்களை உருவாக்குமாறு கூட்டாட்சி அரசுத் தொழிலாளர்களுக்கு IWA-RFC அழைப்பு விடுக்கிறது. பணிநீக்கங்கள் மற்றும் அத்தியாவசிய திட்டங்களை அகற்றுவதை நிறுத்த அவசர வேலைநிறுத்த நடவடிக்கைக்கு தயாரிப்பு செய்ய பாரிய கூட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட வேண்டும்.
ட்ரம்பின் துணை பியூரராக, (Führer என்பது, அடால்ஃப் ஹிட்லருக்கு வழங்கப்பட்ட தலைவர் பட்டம்) செயல்படும் மஸ்க், அரசாங்கத்தை தனது தனிப்பட்ட நிறுவனமாக நடத்தி, தொழில் மற்றும் தகுதிகாண் தொழிலாளர்கள் உட்பட ஆயிரக்கணக்கான கூட்டாட்சி அரசுத் தொழிலாளர்களை பணிநீக்கம் செய்கிறார். நிர்வாக ஆணையின் மூலமாக, வேலை ஒப்பந்தங்கள் செல்லுபடியற்றதாக்கப்படுகின்றன, முறையான நடைமுறை உரிமைகள் நசுக்கப்படுகின்றன, மேலும் தொழிலாளர்கள் ஒரு பில்லியனர் தன்னலக்குழுவின் விருப்பப்படி பணிநீக்கம் செய்யப்படுகிறார்கள்.
சமீபத்திய தாக்குதலில், 'ஜனாதிபதி ட்ரம்பின் அறிவுறுத்தல்களுக்கு இணங்க', அனைத்து கூட்டாட்சி அரசுத் தொழிலாளர்களும் 'கடந்த வாரம் என்ன வேலை செய்தார்கள்' என்பதை விளக்கி திங்கள்கிழமை இரவுக்குள் மின்னஞ்சல் அனுப்ப வேண்டும்' என்று மஸ்க் கடந்த வார இறுதியில் சமூக ஊடகங்களில் அறிவித்தார். 'இதற்கு பதிலளிக்கத் தவறினால் ராஜினாமாவாக கருத்தில் எடுத்துக் கொள்ளப்படும்' என்று மஸ்க் அறிவித்தார். சிறிது நேரத்திற்குப் பின்னர், கூட்டாட்சி அரசுத் தொழிலாளர்களுக்கு அறிவுறுத்தும் ஒரு மூன்று வரி மின்னஞ்சல் வந்தது. அதில், 'கடந்த வாரம் நீங்கள் சாதித்தவற்றில் தோராயமாக சுமார் 5 புள்ளிகளைக் குறிப்பிட்டு, இந்த மின்னஞ்சலில் உங்கள் மேலாளருக்குக் பதிலளிக்கவும்' என்று கேட்கப்பட்டது.
இது அனைத்து எதிர்ப்பையும் பயமுறுத்தவும், அவமானப்படுத்தவும், ஒழிக்கவும் செய்யும் முயற்சியாகும். கூட்டாட்சி அரசுத் தொழிலாளர்கள் பண்ணையடிமைகளாக குறைக்கப்பட்டு, மஸ்க் மற்றும் நிதியியல் தன்னலக்குழுவின் முன் பணிந்து நடக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
மஸ்க் ட்விட்டரை வாங்கும்போது பயன்படுத்திய அதே முறையைப் பின்பற்றுகிறார். அங்கு அவர் 80 சதவீதமான ஊழியர்களை பணிநீக்கம் செய்வதற்கு முன்பு ஒவ்வொரு ஊழியருக்கும் ஒரே மின்னஞ்சலை அனுப்பினார். கூட்டாட்சி அரசுத் தொழிலாளர்களில் ஒரு பகுதியினருக்கு இதே கதி ஏற்பட்டால், அது லட்சக்கணக்கான பணிநீக்கங்களைக் குறிப்பதோடு, இது அமெரிக்க வரலாற்றில் மிகப்பெரிய அளவிலான பணிநீக்கமாக இருக்கும்.
முக்கியமான சமூக செயல்பாடுகளைச் செய்யும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களை பணிநீக்கம் செய்யப்படுவதற்கான நகர்வுகளைத் தொடர்ந்து மஸ்க்கின் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஒரு 'ஒத்திவைக்கப்பட்ட இராஜினாமா' திட்டம் 75,000 தொழிலாளர்களை வெளியேற்றுவதற்கு இட்டுச் சென்றது. அதற்கு முன்னர் ஒரு கூட்டாட்சி நீதிபதி அதை தற்காலிகமாக நிறுத்தி வைத்தார். ஒரு வருடத்திற்கும் குறைவான சேவையைக் கொண்ட கிட்டத்தட்ட அனைத்து ஊழியர்களும் இலக்கு வைக்கப்பட்டுள்ளனர். மேலும், இது பல நிறுவனங்களில் பணிபுரியும் 220,000 தொழிலாளர்களையும் பாதிக்கிறது.
தொழிலாளர்களின் பற்றாக்குறை, பழமையான உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் பாதுகாப்பு தோல்விகள் காரணமாக விமானங்கள் விபத்துக்குள்ளாகி வருவதால், மத்திய விமான போக்குவரத்து நிர்வாகம் (FAA) அழிக்கப்பட்டு வருகிறது. தற்போதைய தொற்றுநோய் மற்றும் H5N1 போன்ற புதிய நோய்களின் தோற்றத்திற்கு மத்தியில் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (FDA) குறைக்கப்படுகிறது. காலநிலை மாற்றம் அமெரிக்காவிலும் உலகெங்கிலும் அழிவுகரமான பேரழிவுகளுக்கு எரியூட்டுகின்ற நிலையில், சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிறுவனம் (EPA) கலைக்கப்பட்டு வருகிறது.
உலகின் மிகப்பெரிய பணக்காரரான எலோன் மஸ்க், தொழிலாளர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை அறிய விரும்புகிறார். சுருக்கமாக, எல்லாவற்றையும் அறிய விரும்புகிறார். உண்மையான கேள்வி என்னவென்றால்: மஸ்க்கும் அவரது சக தன்னலக்குழுக்களும் என்ன செய்கிறார்கள்? அவர்கள் எதையும் உருவாக்குவதில்லை, எதற்கும் பங்களிப்பு செய்வதில்லை. மற்றவர்களின் உழைப்பால் அவர்கள் செல்வந்தர்களாகிறார்கள்.
ட்ரம்பின் தனியார்மயமாக்குவதற்கான முனைப்பில் 600,000 க்கும் மேற்பட்ட தபால் ஊழியர்களும் இலக்கு வைக்கப்பட்டுள்ளார்கள். அமெரிக்க தபால் சேவையை (USPS) வர்த்தகத் துறையின் கீழ் கொண்டு வருவதற்கான திட்டங்களை வெள்ளியன்று அறிவித்த ட்ரம்ப், அதன் சுதந்திரத்தை அகற்றி, பெருமளவிலான பணிநீக்கங்கள், ஊதியக் குறைப்புக்கள் மற்றும் செயல்பாடுகளை Amazon, UPS அல்லது FedEx போன்ற நிறுவனங்களுக்கு விற்பனை செய்வதற்கு வழி வகுக்கின்றார். மேலும், விலைகளை உயர்த்தி வேலைகளை அழிப்பதன் மூலம், உலகளாவிய சேவை ஆணையை முடிவுக்குக் கொண்டுவருவதே இதன் இலக்காகும்.
1981 இல், ஜனாதிபதி ரோனால்ட் ரீகன் வேலைநிறுத்தம் செய்த 11,000 க்கும் அதிகமான விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அதிகாரிகளை பணிநீக்கம் செய்தார். இது, தொழிலாளர்களுக்கு எதிரான வர்க்கப் போரில் ஒரு முக்கிய திருப்புமுனையைக் குறித்தது. பரந்த ஆதரவுடன் இருந்த இந்த வேலைநிறுத்தமானது, ஒரு பொது வேலைநிறுத்த நடவடிக்கையை மேற்கொள்வதற்கான உணர்வு வளர்ந்து வந்தது. ஆனால் AFL-CIO தொழிற்சங்க அதிகாரத்துவம் இந்த எதிர்ப்பை அணிதிரட்ட மறுத்து, விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அதிகாரிகளை நசுக்கவும், அவர்களுடைய தொழிற்சங்கத்தை அழிக்கவும், ஊதியங்கள், வேலைகள் மற்றும் வேலைநிறுத்த உரிமை மீதான நான்கு தசாப்த கால தாக்குதல்களுக்கு வழிவகுக்கவும் அரசாங்கத்தை அனுமதித்தது.
கூட்டாட்சி அரசுத் தொழிலாளர்களை ட்ரம்ப் பணிநீக்கம் செய்யப்படுவது PATCO வையும் தாண்டி வெகுதூரம் செல்கிறது. இது வெறுமனே பாரிய வேலைநீக்கங்கள் அல்ல—இது சிவில் சேவையை கலைப்பதற்கும் சமூக வேலைத்திட்டங்களை அகற்றுவதற்குமான ஒரு முயற்சியாகும். PATCO வேலைநிறுத்தக்காரர்கள் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்ட அதேவேளையில், ட்ரம்பும் மஸ்க்கும் ஒட்டுமொத்த முகமைகளையும் துடைத்தெறிந்து, ஒரு பில்லியனருக்கு அவர்களின் வேலைகளை நியாயப்படுத்த தொழிலாளர்களை நிர்பந்தித்து வருகின்றனர். இது வெற்றி பெற்றால், அனைத்து தொழிலாளர்கள் மீதும் தாக்குதல்களை அதிகரிக்கவும், ஊதியக் குறைப்புகளை விதிக்கவும், பெருமளவிலான பணிநீக்கங்களை விதிக்கவும், சர்வாதிகார முறைகள் மூலம் எதிர்ப்பை அடக்கவும் ஆளும் வர்க்கத்தை ஊக்குவிக்கும்.
1980 கள் மற்றும் அதைத் தொடர்ந்து வந்த தசாப்தங்களில், தொழிற்சங்க அதிகாரத்துவம் தன்னை பெருநிறுவன நிர்வாகத்துடன் முழுமையாக ஒருங்கிணைத்துக் கொண்டதன் மூலமாக தொழிலாளர்கள் மீதான ஆளும் வர்க்கத்தின் தாக்குதலுக்கு விடையிறுத்தது. இப்போது, ட்ரம்பும் மஸ்க்கும் வரலாற்றிலேயே மிகப் பெரியளவில் அரசாங்க ஊழியர்கள் மீதான களையெடுப்பை நடத்தி வருகின்ற நிலையில், இதே அமைப்புகள் அதைத் தடுக்க ஒரு விரலைக் கூட உயர்த்த மறுக்கின்றன.
AFL-CIO தொழிற்சங்கம் இது தொடர்பாக ஒரு சம்பிரதாய பூர்வமான அறிக்கையை வெளியிட்டு பின்வருமாறு அறிவித்தது:
நீங்கள் இப்போது செய்யக்கூடிய மிக சக்திவாய்ந்த விஷயம், அரசு செயல்திறன் துறையின் (DOGE) பொறுப்பற்ற வெட்டுக்களுக்கு ஒரு முகத்தை மட்டும் காட்ட வேண்டும் என்பதாகும். நீங்கள் ஒரு தொழிலாளியாகவோ அல்லது DOGE ஆல் பாதிக்கப்பட்ட ஒரு தொழிலாளியின் நண்பராகவோ அல்லது குடும்ப உறுப்பினராகவோ இருந்தால், நீங்கள் யார், நீங்கள் எமது நாட்டிற்கு எவ்வாறு உதவினீர்கள், DOGE உங்களை எவ்வாறு பாதிக்கிறது என்பதைப் பற்றி மேலும் அறிய விரும்புகிறோம்.
அதாவது, நூறாயிரக்கணக்கானோர் தங்கள் வேலைகளை இழக்கும்போது AFL-CIO தனிப்பட்ட நிகழ்வுகளுக்கான வேண்டுகோளை மட்டுமே வழங்குகிறது.
மிகப்பெரிய கூட்டாட்சி தொழிற் சங்கமான AFGE, அது 'நாடு முழுவதும் உள்ள எங்கள் உறுப்பினர்கள் மற்றும் கூட்டாட்சி அரசுத் பணியாளர்களின் எந்தவொரு சட்டவிரோத பணிநீக்கத்தையும் சவால் செய்வதாகக்' கூறி ஓர் அறிக்கையை வெளியிட்டது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், பயனற்ற சட்டப்பூர்வ மேல்முறையீடுகளைத் தாக்கல் செய்வதைத் தவிர, பாரிய பணிநீக்கங்கள் எதிர்ப்பு இல்லாமல் தொடர அனுமதிப்பதைத் தவிர வேறு எதையும் இவர்கள் செய்யமாட்டார்கள்.
ட்ரம்பும் மஸ்க்கும் தற்போதுள்ள அனைத்து சட்டம் மற்றும் அரசியலமைப்பு உரிமைகளையும் மீறி நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் கூட, எந்தவொரு எதிர்ப்பும் சட்டவிரோதமானது என்று கூறி எதிர்ப்பை அடக்குவதற்கான அதன் முயற்சிகளை இந்த தொழிற்சங்க எந்திரம் நியாயப்படுத்துகிறது.
வோல் ஸ்ட்ரீட் மற்றும் போரின் கட்சியாக இருந்துவரும் ஜனநாயகக் கட்சியைப் பொறுத்த வரையில், அவர்கள் சமூகத் திட்டங்கள் மீதான தாக்குதலையும் நிதியியல் தன்னலக்குழுவினரின் வளப்படுத்தலையும் ஆதரிக்கின்றனர். அமெரிக்க வரலாற்றில் மிகக் கடுமையான அரசியலமைப்பு நெருக்கடிக்கு மத்தியில், அவர்கள் குடியரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மிகவும் பலவீனமான முறையீடுகளை மட்டுமே முன்மொழிகின்றனர். எல்லாவற்றிற்கும் மேலாக கீழிருந்து வெளிவரும் ஒரு இயக்கத்தைக் கண்டு அவர்கள் அஞ்சுகின்றனர்.
தொழிலாள வர்க்கத்தின் மத்தியில் ஒரு பரந்தளவில் மாறுபட்ட மனோநிலை அபிவிருத்தி அடைந்து வருகிறது— அது, போராடுவதற்கும் தொழிற்சங்க எந்திரத்தின் தளைகளில் இருந்து முறித்துக் கொள்வதற்குமான அதிகரித்து வரும் உறுதிப்பாடாகும். கடந்த ஞாயிறன்று சாமானிய தொழிலாளர் குழுக்களின் சர்வதேச தொழிலாளர் கூட்டணி மற்றும் அஞ்சல் ஊழியர் சாமானிய தொழிலாளர் குழுவால் கூட்டப்பட்ட அவசரக் கூட்டத்தில் இது தெளிவாக வெளிப்படுத்தப்பட்டது. இதில் 150 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.
உலக சோசலிச வலைத் தளத்தின் ஒரு எழுத்தாளரான ரொம் ஹால் (Tom Hall) இந்தக் கூட்டத்தைத் தொடங்கி வைத்து, இது வேலை வெட்டுக்கள் பற்றியது மட்டும் அல்ல, ஒரு சர்வாதிகாரத்தை நிறுவுதல் பற்றியதாகும் என்று எச்சரிக்கை விடுத்தார். 'ட்ரம்பின் நடவடிக்கைகள் அப்பட்டமாக சட்டவிரோதமானவை' என்று ஹால் கூறினார். 'அவர் அரசியலமைப்பை மீண்டும் எழுதவும், காங்கிரஸின் சட்டங்களை மீறவும், தனிப்பட்ட முறையில் தனக்கு விசுவாசமாக இல்லாத அரசாங்கத்தில் உள்ள அனைவரையும் பணிநீக்கம் செய்ய முயற்சிக்கிறார். அவர் அமெரிக்காவில் ஒரு சர்வாதிகாரத்தை ஸ்தாபிக்கவும், ஜனநாயகத்தை அல்லது அதில் எஞ்சியிருப்பவற்றை தூக்கியெறியவும் முயன்று வருகிறார்' என்று குறிப்பிட்டார்.
'ட்ரம்பின் சதி தோற்கடிக்கப்பட வேண்டுமானால் (அது தோற்கடிக்கப்பட முடியும்) அது தொழிலாள வர்க்கத்தால் கீழிருந்து பாரிய, சுயாதீனமான நடவடிக்கை மூலம் மட்டுமே வர வேண்டும்' என்று ஹால் விளக்கினார்.
இந்தக் கூட்டத்தில் 'தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் கோழைத்தனம் மற்றும் உடந்தைத்தனத்தை' கண்டித்து ஒரு தீர்மானம் பெரும்பான்மை வாக்குகளில் நிறைவேற்றப்பட்டது. 'தொழிற்சங்கத் தலைமை இதை எதிர்த்துப் போராடாவிட்டால், அவர்கள் எதையும் எதிர்த்துப் போராடப் போவதில்லை' என்ற தீர்மானத்தையும் இக்கூட்டம் அறிவித்தது. அந்தத் தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
வெற்று அறிக்கைகளுக்கான காலம் முடிந்துவிட்டது. சாமானிய தொழிலாளர் குழுக்களின் சர்வதேச தொழிலாளர் கூட்டணி (IWA-RFC) மற்றும் அஞ்சல் தொழிலாளர்களின் சாமானிய தொழிலாளர் குழு ஆகியவை வேலைநிறுத்த நடவடிக்கை உட்பட பாரிய எதிர்ப்பு போராட்டத்துக்கான தயாரிப்புகளுக்கு உடனடியாக அழைப்பு விடுக்கின்றன. இந்தக் களையெடுப்பை நிறுத்த அஞ்சல் துறை தொழிலாளர்கள், கூட்டாட்சி அரசுத் தொழிலாளர்கள், தளவாட தொழிலாளர்களுடன் அனைத்துத் தொழிலாளர்களும் இணைந்து கொண்டு செயற்பட வேண்டும்.
தொழிற்சங்க அதிகாரத்துவங்களில் இருந்து சுயாதீனமாக சாமானிய தொழிலாளர் குழுக்களை உருவாக்குமாறு கூட்டாட்சி அரசுத் தொழிலாளர்களுக்கு சாமானிய தொழிலாளர் குழுக்களின் சர்வதேச தொழிலாளர் கூட்டணி அழைப்பு விடுக்கிறது. கூட்டு எதிர்ப்பை ஒருங்கிணைக்க தபால்துறை தொழிலாளர்கள், வாகனத்துறை தொழிலாளர்கள், அமேசன் தொழிலாளர்கள், ஆசிரியர்கள், செவிலியர்கள் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் அனைத்து பிரிவுகளுடனும் இந்த குழுக்கள் ஐக்கியப்பட வேண்டும்.
சாமானிய தொழிலாளர் குழுக்களின் சர்வதேச தொழிலாளர் கூட்டணி அழைப்பு விடுக்கின்ற குழுக்கள் மூலமாக கூட்டாட்சி அரசுத் தொழிலாளர்கள் பணியிடங்களுக்கு இடையே தொடர்பு கொள்ளவும், தகவல்களைப் பரிமாறிக் கொள்ளவும் மற்றும் கூட்டு நடவடிக்கையை ஒருங்கிணைக்கவும் முடியும். ஒவ்வொரு வேலையிடத்திலும் சாமானிய தொழிலாளர் குழுக்களை விரிவாக்குவதன் மூலமாக, பாரிய வேலைநீக்கங்கள், சமூக வேலைத்திட்டங்கள் அழிப்பு மற்றும் பொதுச் சேவைகளை தனியார்மயமாக்குவதை எதிர்க்க, தொழிலாளர்கள் ஆதரவைக் கட்டியெழுப்ப முடியும் மற்றும் வேலைநிறுத்த நடவடிக்கைக்கு தயாரிப்பு செய்ய முடியும்.
இந்த தொழிலாளர் குழுக்கள், நாடுகடத்தலை எதிர்த்துப் போராடும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், வேலை வெட்டுக்களை எதிர்க்கும் கல்வியாளர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள், சுரண்டல் மற்றும் பாதுகாப்பற்ற நிலைமைகளுடன் போராடி வரும் தொழில்துறை தொழிலாளர்கள் ஆகியோருடன் கூட்டாட்சி அரசுத் தொழிலாளர்களை ஐக்கியப்படுத்தி, ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கத்தின் மீதான தாக்குதல்களுக்கு எதிராக ஒரு பொதுவான போராட்டத்தை உருவாக்கும்.
இப்போது ஒரு நிலைப்பாட்டை எடுத்து போராட வேண்டிய நேரம் இது! சாமானிய தொழிலாளர் குழுக்களின் சர்வதேச தொழிலாளர் கூட்டணி இந்த போராட்டத்திற்கு தேவையான தலைமையையும் அமைப்பையும் கட்டியெழுப்பி வருகிறது.