மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
உக்ரேன் விவகாரத்தில் ரஷ்யாவுடன் ஒருதலைப்பட்சமாக ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்த அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மேற்கொண்டுள்ள முயற்சிக்கு ஒன்றுபட்ட பதிலை உருவாக்க, பிரிட்டன், பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி ஸ்பெயின் உட்பட முக்கிய ஐரோப்பிய சக்திகளின் தலைவர்களுடன் கனடாவும், துருக்கியின் வெளியுறவு அமைச்சர் மற்றும் உக்ரேன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியும் ஞாயிற்றுக்கிழமை லண்டனில் உள்ள லான்காஸ்டர் மாளிகையில் சந்தித்தனர்.
பிரிட்டனின் பிரதம மந்திரி சேர் கெய்ர் ஸ்டார்மர் கூட்டிய இந்த உச்சிமாநாடு, அமெரிக்க-ஐரோப்பிய உறவுகளின் வரலாற்று முறிவை மட்டும் உறுதிப்படுத்தவில்லை, மாறாக ஐரோப்பிய சக்திகளின் பதிலிறுப்பையும் அடிக்கோடிட்டுக் காட்டியது: அதாவது, உக்ரேனில் 30,000 துருப்புகளை நிலைநிறுத்துவது உட்பட, ரஷ்யாவுடனான போரைத் தொடர்வதற்கும், அதை விரிவுபடுத்துவதற்குமான ஒரு உறுதிப்பாட்டை இது குறிக்கிறது.
“தரையில் பிரிட்டனின் பூட்ஸ்களையும் வானில் விமானங்களையும்” உள்ளடக்கிய, ஒரு சமாதான ஒப்பந்தத்தை உக்ரேனில் அமுல்படுத்த “விரும்பும் நாடுகளின் ஐரோப்பிய கூட்டணியை” உருவாக்கும் உடனடித் திட்டங்களை ஸ்டார்மர் அறிவித்தார். வான் பாதுகாப்புக்கு “பின்புறமாக” அமெரிக்க ஆதரவை இன்னும் தேடும் அதே வேளையில், எதிர்காலத் திட்டங்கள் 1930 களுக்குப் பிறகு காணப்படாத அளவில் ஐரோப்பிய இராணுவ மீள்ஆயுதமயமாக்கலை மையமாகக் கொண்டுள்ளன.
கடந்த வெள்ளிக்கிழமை, வெள்ளை மாளிகையில் ட்ரம்ப்புக்கும் ஜெலென்ஸ்கிக்கும் இடையில் வெடித்த மோதலை அடுத்து ஐரோப்பிய தலைவர்கள் இந்த சந்திப்பை மேற்கொண்டனர். உக்ரேனின் கனிம வளத்தின் பெரும்பகுதியின் மீது அமெரிக்காவிற்கு கட்டுப்பாட்டை வழங்கும் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கு முன்னர் “பாதுகாப்பு உத்தரவாதங்களைக்” கோரி அமெரிக்காவை “அவமரியாதை” செய்ததற்காக ட்ரம்பும் துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸும் ஜெலென்ஸ்கியை பகிரங்கமாகக் சாடினர்.
உக்ரேன் போரை ஒரு விலைமதிப்பான தோல்வியாக ட்ரம்ப் பார்க்கிறார். ஜனாதிபதி விளாடிமீர் புட்டினுடன் ஒரு உடன்படிக்கை குறித்து பேரம்பேசுவதன் மூலமாக, உக்ரேனின் அரிய மண் தாதுக்கள் மற்றும் பிற மூலோபாய சொத்துக்களை அமெரிக்கா உடனடியாக அணுக வேண்டும் என்று அவர் இப்போது விரும்புகிறார் — இந்த உடன்படிக்கை, மாஸ்கோ தெளிவுபடுத்தியுள்ளபடி, உக்ரேனின் வளங்களை விட மிக அதிகமாக ரஷ்ய வளங்களை அமெரிக்கா அணுக அனுமதிக்கிறது.
உக்ரேனில் ஏற்படும் ஒரு தோல்வி என்பது ஐரோப்பிய சக்திகளுக்கு ஒரு பெரிய அடியாக இருக்கும். அதேபோல், ஐரோப்பா கண்டத்தின் பொருளாதாரங்களுக்கு இன்றியமையாத கனிம இருப்புக்கள் மீது அமெரிக்கா ஒரு இறுக்கமான பிடியையும் வைத்திருக்கும். மேலும், ஒரு பரந்த அமெரிக்க-ரஷ்ய கூட்டணியின் சாத்தியத்தை, ஐரோப்பிய சக்திகள் இன்னும் ஆபத்தானதாகவும், அவர்களின் உயிர்பிழைப்புக்கான அச்சுறுத்தலாகவும் காண்கின்றன. இதுவே, இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் பிற நாடுகள் இப்போது உக்ரேனுக்கு துருப்புக்களை அனுப்புவது குறித்து பரிசீலித்து வருவதற்கும், அமெரிக்க ஆதரவுடன் அல்லது இல்லாமல் ரஷ்யாவுடன் நேரடிப் போர் ஆபத்தில் ஈடுபடுவதற்கும் உண்மையான காரணமாகும்.
இந்தக் கட்டத்தில், ஸ்டார்மர், பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோன், இத்தாலியின் பாசிச பிரதம மந்திரி ஜியோர்ஜியா மெலோனி மற்றும் ஏனையவர்களும் அமெரிக்காவின் ஒப்புதல் இல்லாமல் எதுவும் நடக்காது என்றும், எந்தவொரு ஐரோப்பிய முன்மொழிவும் ட்ரம்பின் பரிசீலனைக்கு சமர்ப்பிக்கப்படும் என்றும் வலியுறுத்துகின்றனர். இருப்பினும், சமரசத்திற்கான முயற்சிகள் என்னவாக இருந்தாலும், லண்டன், பாரிஸ் மற்றும் பேர்லினுக்கு என்ன சிரமங்கள் இருந்தாலும், திசை வாஷிங்டனுடன் வெளிப்படையான மோதலை நோக்கியே உள்ளது.
ட்ரம்பின் எரியூட்டுகின்ற மற்றும் சில நேரங்களில் ஒழுங்கற்ற நடத்தையானது, ஒரு தெளிவான அரசியல் மற்றும் பொருளாதார தர்க்கத்தைப் பின்பற்றுகிறது. உலகின் மிகப் பெரிய செல்வந்தரான எலோன் மஸ்க்கின் உருவகமாக விளங்கும் அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் ஒரு பிரிவினர், ஐரோப்பாவை ஒரு கூட்டாளியாக அல்லாமல் ஒரு நேரடிப் போட்டியாளராக கருதுகின்றனர். இந்தக் குழுவினர், அமெரிக்க மூலோபாய நலன்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக அவர்கள் கருதும் ஐரோப்பிய ஒன்றியத்தை எதிர்கொள்ள ரஷ்யாவுடன் ஒரு அரசியல், பொருளாதார மற்றும் இராணுவ கூட்டணியைக் கூட பரிசீலிக்கத் தயாராக உள்ளனர்.
ஒரு சிறிய பொருளாதார சக்தியான ரஷ்யா, உலகப் பொருளாதாரத்திற்கு மூலப்பொருட்கள், எரிபொருள்கள் மற்றும் உணவுப் பொருட்களை வழங்குவதையே பெரும்பாலும் சார்ந்துள்ளது. இதற்கு நேர்மாறாக, சீனாவிற்குப் பிறகு அமெரிக்காவின் மிகப்பெரிய பொருளாதாரப் போட்டியாளராக உள்ள ஐரோப்பா கூட்டாக, ரஷ்யாவின் பொருளாதாரத்தை விட 10 மடங்கு பெரியதாக இருக்கிறது.
ஐரோப்பிய ஒன்றியத்தை பலமுறை தாக்கி வருகின்ற ட்ரம்ப், அமெரிக்காவை “ஏமாற்றுவதற்காக” வடிவமைக்கப்பட்ட ஒரு “அட்டூழியமே” ஐரோப்பிய ஒன்றியம் என்று கூறியுள்ளார். இந்த வாரம், ஐரோப்பிய பொருட்களுக்கு மிக விரைவில் 25 சதவீத சுங்கவரிகளை விதிப்பதற்கான திட்டங்களை ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
“அமெரிக்கா முதலில்” என்றால் ஐரோப்பா இப்போது கடைசியாக வருகிறது என்று அர்த்தமாகும்.
இரண்டாம் உலகப் போரின் முடிவில் இருந்து ஐரோப்பாவை அமெரிக்காவின் அணுவாயுத குடையின் கீழ் வைத்திருந்த நேட்டோ கூட்டணி, இப்போது உடனடி அச்சுறுத்தலை எதிர்கொள்கிறது. ஞாயிற்றுக்கிழமை, முன்னணி ட்ரம்ப் ஆதரவாளரான குந்தர் ஈகிள்மேனின் அறிக்கையை மீண்டும் வெளியிட்டு, “நேட்டோ மற்றும் ஐ.நா.வை விட்டு வெளியேற வேண்டிய நேரம் இது” என்று எலோன் மஸ்க் தனது சொந்த ஒப்புதலுடன் வெளிப்படையாகக் கூறினார்: “நான் இதற்கு உடன்படுகிறேன்”. நேட்டோ “ஒரு பனிப்போர் காலத்து நினைவுச்சின்னம், அதை ஸ்மித்சோனியனின் (வாஷிங்டனிலுள்ள ஒரு தேசிய அருங்காட்சியகம்) பேசும் அறையாக மாற்ற வேண்டும்” என்று நேட்டோவை நிராகரித்த குடியரசுக் கட்சியின் பிரதிநிதி தோமஸ் மாஸியின் பதிவையும் மஸ்க் வலியுறுத்தினார்.
ஐரோப்பாவின் முறையீடுகளின் ஒரு குறிப்பிடத்தக்க அம்சம் —பெயரளவிற்கு ட்ரம்பை நோக்கி திருப்பி விடப்பட்டாலும்— அமெரிக்க ஆளும் வர்க்கத்திற்குள் உள்ள சக்திவாய்ந்த கன்னைகள் புட்டினை நோக்கிய ட்ரம்பின் முயற்சிகளை பலமாக எதிர்க்கின்றன என்ற கணக்கீடுகள் ஆகும். ஜனநாயகக் கட்சியால் அரசியல்ரீதியில் பிரதிநிதித்துவம் செய்யப்படும் இந்த சக்திகள், ரஷ்யா மீது ஆழ்ந்த குரோதத்தைக் கொண்டுள்ளன. மேலும், இந்த சக்திகள், பல தசாப்தங்களாக அமெரிக்க மேலாதிக்கத்தைப் பாதுகாத்து வந்த ஏற்பாடுகளுக்கு ஒரு மூலோபாய அச்சுறுத்தலாக, நேட்டோ மற்றும் இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஒழுங்கின் பிற தூண்களை, ட்ரம்ப் தகர்த்தெறிவதற்கு விடுத்த அச்சுறுத்தல்களாக பார்க்கின்றன.
ஐரோப்பிய சக்திகள் நீண்டகாலமாகவே அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மிக மோசமான அத்துமீறல்களை கட்டுப்படுத்தும் கரங்களாக தங்களை சித்தரித்து வந்துள்ளன. இன்று வாஷிங்டனுடனான அவர்களின் கருத்து வேறுபாடுகள் உக்ரேனில் போரைத் தொடர்வதை மையமாகக் கொண்டுள்ளன. இதில் ஸ்டார்மரின் வான் பாதுகாப்பு ஏவுகணைகளை வாங்க கூடுதலாக 2 பில்லியன் டாலர் உறுதிமொழியும் அடங்கும்.
ஐரோப்பாவின் ஏகாதிபத்திய நலன்களை ஆக்கிரோஷமாக பின்தொடர்வதற்கு உள்ள ஒரே தடை அது மறுஆயுதபாணியாக்கக்கூடிய வேகம்தான். அனைத்து ஐரோப்பிய தலைநகரங்களிலும், இடம்பெற்றுவரும் முதன்மை விவாதம் இராணுவ விரிவாக்கத்தை விரைவுபடுத்துவதைச் சுற்றி வருகிறது.
ஜேர்மன் ஆளும் வர்க்கம், ஏற்கனவே செலவிட்ட 100 பில்லியன் யூரோக்களுக்கு கூடுதலாக, குறைந்தபட்சம் 200 பில்லியன் யூரோக்களுக்கான சிறப்பு மறுஆயுதமயமாக்கல் நிதியை பரிசீலித்து வருகிறது. அதே நேரத்தில், முக்கிய தொழிற்துறைகளை பொதுமக்களுக்கான உற்பத்தியிலிருந்து இராணுவ உற்பத்திக்கு மாற்றுவதற்கு அழுத்தம் கொடுத்து வருகிறது. இதற்கிடையில், கண்டத்தின் இராணுவக் கட்டமைப்பிற்கு நிதியளிக்க ஐரோப்பிய ஒன்றியம் 500 பில்லியன் யூரோக்கள் “மறுஆயுதமயமாக்கல் வங்கிக்கான” திட்டங்களை முன்மொழிந்து வருகிறது.
“ரஷ்யாவின் ஆக்கிரமிப்பைத் தடுக்க ஐரோப்பாவிற்கு குறுகிய காலத்தில் 300,000 கூடுதல் துருப்புக்களும், குறைந்தபட்சம் 250 பில்லியன் யூரோக்களும் வருடாந்திர பாதுகாப்புச் செலவின உயர்வு தேவைப்படலாம்” என்று செல்வாக்கு மிக்க ப்ரூகல் (Bruegel) பயிலகம் எழுதியது. தி எகனாமிஸ்ட் (The Economist) பத்திரிகையானது, 300 பில்லியன் யூரோ என்ற எண்ணிக்கையைக் குறிப்பிட்டுள்ளது.
வர்த்தக, இராணுவ மோதல்கள், போருக்காக சமூகத்தை முழுமையாக அணிதிரட்டுவதை அவசியமாக்குகின்றன. இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஐரோப்பாவின் நலன்புரி அரசின் எச்சங்களை அகற்றுவதுதான் கண்டத்தின் முதலாளித்துவ அரசாங்கங்கள் இப்போது கோரும் இராணுவச் செலவினங்களுக்கு பணம் செலுத்தக்கூடிய ஒரே வழி முறையாகும். இதன் பொருள், தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக போர் தொடுப்பதாகும்.
“கடனில் மூழ்கியுள்ள பழமையான ஒரு கண்டம், அரிதாகவே வளர்ந்து வருகிறது. அது தன்னைத் தற்காத்துக் கொள்ளவோ அல்லது கடுமையான சக்தியை வெளிப்படுத்தவோ முடியாதுள்ளது” என்று புலம்பிய, தி எகனாமிஸ்ட் பத்திரிகை, ஒரு வரிவிதிக்கும் புரட்சிக்கு அழைப்பு விடுத்தது. மேலும் அது, “ஐரோப்பா சமூக நலத்திட்டங்களைக் வெட்டிக்குறைக்க வேண்டியிருக்கும், ஜேர்மனியின் முன்னாள் சான்சிலர் ஏஞ்சலா மேர்க்கல், ஐரோப்பா உலக மக்கள் தொகையில் 7 சதவீதம், அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தி 25 சதவீதம், ஆனால் அதன் சமூக செலவினங்களில் 50 சதவீதம் ஐரோப்பாவில் இருப்பதாகக் கூறுவார்” என்று விளக்கியது.
குறுகிய காலத்தில் பாதுகாப்பு செலவினத்தில் 250 பில்லியன் யூரோ அதிகரிப்பு என்ற புரூகல் பயிலகத்தின் புள்ளிவிபரமானது, ஐரோப்பிய ஒன்றியம் சமூக நலத் திட்டங்களுக்கும் (முக்கியமாக ஓய்வூதியங்கள், சமூக நலன்கள் மற்றும் சுகாதாரப் பராமரிப்பு) கல்விக்காகவும் செலவிடும் 5,000 பில்லியன் யூரோவில் 5 சதவீதத்தை பிரதிநிதித்துவம் செய்கிறது. ஆயினும்கூட, இது இராணுவச் செலவினங்களை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 3 சதவீதமாக உயர்த்துகிறது. இது, தற்போதைய 1.6 சதவீதத்திலிருந்து அதிகமாகும். அதே நேரத்தில், ஆளும் வர்க்க மூலோபாயவாதிகள் இப்போது 4 அல்லது 5 சதவீத இலக்குகளைப் பற்றி வெளிப்படையாகப் பேசி வருகிறார்கள்.
ஐரோப்பாவின் ஆளும் வர்க்கங்களுக்கான இந்த மூலோபாய கட்டாயம், - ட்ரம்ப் மற்றும் மஸ்க் வழங்கிவரும் ஆதரவு மட்டுமல்ல - ஜேர்மனிக்கான மாற்று மற்றும் மெலோனியின் இத்தாலி சகோதரர்கள் போன்ற அதி தீவிர வலதுசாரி கட்சிகளை வளர்ப்பதற்குக் காரணமாகிறது. இந்தக் கட்சிகள், அடிப்படை ஜனநாயக உரிமைகள் மீதான திட்டமிட்ட தாக்குதலுக்கும், தேசியவாத எதிர்த்தாக்குதலை ஊக்குவிப்பதற்காக புலம்பெயர்ந்த தொழிலாளர்களை தொடர்ந்து பலிகடா ஆக்குவதற்கும் முன்னணியில் உள்ளன.
கடந்த வெள்ளியன்று கிரேக்கத்தில் நடந்த பாரிய ஆர்ப்பாட்டங்களும் பொது வேலைநிறுத்தங்களும், தொழிற்சங்கங்கள், சமூக ஜனநாயக மற்றும் ஸ்ராலினிசக் கட்சிகள் மற்றும் அவற்றின் போலி-இடது கூட்டாளிகளால் நீண்டகாலமாக அடக்கப்பட்ட வர்க்க விரோதங்களின் விரைவான வளர்ச்சியை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. ஐரோப்பிய அரசாங்கங்கள் தொழிலாள வர்க்கத்தின் மீதான தாக்குதல்களைத் தீவிரப்படுத்தி வருகையில், இன்னும் பெரிய மற்றும் தீவிரமான சமூகப் போராட்டங்கள் தவிர்க்க முடியாதவையாக வெளிப்பட்டு வருகின்றன.
ஆனால் இந்தப் போராட்டங்கள் ஒரு புதிய அரசியல் முன்னோக்கினால் வழிநடத்தப்பட வேண்டும்: அது, வாழ்க்கைத் தரங்கள் மற்றும் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதுடன் போருக்கு எதிரான போராட்டத்தை ஐக்கியப்படுத்தும் சோசலிச சர்வதேசியவாத வேலைத்திட்டமாகும்.
தொழிலாளர்களும் இளைஞர்களும் ஏதாவதொரு ஏகாதிபத்திய முகாமுக்குப் பின்னால் தங்களை அணிதிரட்டுவதற்கான அனைத்து முயற்சிகளையும் நிராகரிக்க வேண்டும். சர்வதேச அளவில் அவர்களின் சகோதர சகோதரிகளுடன் சேர்ந்து அனைத்து தேசிய பிளவுகளையும் எதிர்க்க வேண்டும். அத்துடன், இராணுவவாதம் மற்றும் போரின் செலவுகளை அவர்களின் முதுகில் சுமத்துவதற்கான அனைத்து முயற்சிகளையும் எதிர்க்க வேண்டும்.
அமெரிக்கா, ரஷ்யா அல்லது வேறெந்த ஐரோப்பிய நாடாக இருந்தாலும் சரி, ஆளும் வர்க்கத்தின் எந்தவொரு பிரிவும் ஜனநாயகத்தைப் பிரதிநிதித்துவம் செய்யவில்லை, அல்லது போர் மற்றும் சமூக-பொருளாதார பேரழிவை முகங்கொடுக்கும் உலக மக்களுக்கு எந்த பாதையையும் வழங்கவில்லை. அந்தப் பாதை சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் சோசலிசப் போராட்டத்தால் உருவாக்கப்படும்.