முன்னோக்கு

மஹ்மூத் கலீலை விடுதலை செய்! ட்ரம்பின் சர்வாதிகாரத்திற்கு எதிராக தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டு!

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம். 

நியூ யோர்க்கில் உள்ள ஜேக்கப் கே. ஜாவிட்ஸ் கூட்டாட்சி அரசு கட்டிடத்திற்கு வெளியே பாலஸ்தீன ஆர்வலர் மஹ்மூத் கலீலை விடுவிக்கக் கோரி போராட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர். திங்கள், மார்ச் 10, 2025 [AP Photo/Yuki Iwamura]

உலக சோசலிச வலைத் தளம், அமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சி (அமெரிக்கா) மற்றும் சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பு ஆகியவை, மஹ்மூத் கலீலை உடனடியாக விடுதலை செய்யக் கோருகின்றன. அவர் கைது செய்யப்பட்டிருப்பது ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதலை பாரியளவில் தீவிரப்படுத்தியுள்ளது. ட்ரம்ப் நிர்வாகம் எந்தவொரு சட்டங்கள் அல்லது அரசியலமைப்பு உரிமைகளுக்கும் அலட்சியமாகவும், கட்டுப்படாமலும் ஒரு சர்வாதிகாரமாக செயல்பட்டு வருகிறது. 

கொலம்பியா பல்கலைக்கழக பட்டதாரியும் கடந்த ஆண்டு பல்கலைக்கழக போராட்டங்களுக்கு முக்கிய ஆலோசகருமாக இருந்த கலீல், காசாவில் நடந்துவரும் இனப்படுகொலையை எதிர்க்கும் அவரது அரசியல் கருத்துக்களுக்காக, முதல் அரசியலமைப்பு திருத்தத்தை அப்பட்டமாக மீறும் வகையில் இலக்கு வைக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவில் சட்டப்பூர்வ நிரந்தர குடியிருப்பாளரும், கிரீன் கார்டு வைத்திருப்பவருமான அவர், எந்தவொரு குற்றத்திற்காகவும் கைது செய்யப்படவில்லை அல்லது குற்றம் சாட்டப்படவில்லை.

கடந்த சனிக்கிழமை மாலை, உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை (DHS) முகவர்கள் கலீலையும் அவரது அமெரிக்க குடிமகளான மனைவியையும் அவர்களது அடுக்குமாடி கட்டிடத்தின் வரவேற்பறையில் பதுங்கியிருந்து தாக்கினர். அவர்கள் அவரைக் கடத்தி, கைது செய்வதாக மிரட்டி, நியூ ஜெர்சியிலுள்ள எலிசபெத்தில் உள்ள குடிவரவு மற்றும் சுங்க அமலாக்க (ICE) சிறைச்சாலைக்கு கொண்டு சென்றனர். அவரது வழக்கறிஞர்கள் மன்ஹாட்டனில் ஒரு ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தபோதும், அவர் ரகசியமாக 1,300 மைல்கள் தொலைவில் லூசியானாவில் உள்ள ஒரு தனியார் தடுப்புக்காவல் மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை முழுவதும், அவரது வழக்கறிஞர்களுக்கோ அல்லது அவரது மனைவிக்கோ அவர் எங்கே இருக்கிறார் என்பது தெரியாது. இது ஒரு சர்வாதிகார வழிமுறையாகும் — காணாமல் ஆக்குதல் என்பது இலத்தீன் அமெரிக்க இராணுவ ஆட்சிக்குழுக்களால் பயன்படுத்தப்படும் சட்டத்திற்குப் புறம்பான கடத்தல் வகையாகும்.

இக்கட்டுரை எழுதப்படும் நேரத்தில், நியூ யோர்க்கின் தெற்கு மாவட்டத்தில் உள்ள ஒரு கூட்டாட்சி அரசின் நீதிபதி கலீலை நாடுகடத்துவதற்கு இடைக்காலத் தடை விதித்துள்ளார். அவரது கைது மற்றும் தடுப்புக்காவல் சட்டபூர்வமானதா என்பது குறித்த புதன்கிழமை விசாரணை நிலுவையில் உள்ளது. ஆனால், ட்ரம்ப் நிர்வாகம் இந்த தீர்ப்பை கடைபிடிக்கும் என்று நம்புவதற்கு எந்தக் காரணமும் இல்லை.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் திங்களன்று பதிவிட்ட ஒரு அசாதாரண அறிக்கையில், கலீலின் கைது நடவடிக்கையில் அவர் வகித்த பாத்திரம் குறித்து பெருமைபீற்றியதுடன், மேலும் ஆயிரக்கணக்கான மற்றவர்களை இதேபோன்ற நடவடிக்கைக்கு அச்சுறுத்தினார். இனப்படுகொலைக்கு எதிரான எதிர்ப்பு “யூத-எதிர்ப்பு” என்று ஒட்டுமொத்த அரசியல் ஸ்தாபகமும் ஊக்குவித்துவரும் வழக்கமான பொய்யைப் பயன்படுத்தி, ட்ரம்ப் ட்ரூத் சமூகத் தளத்தில், “கொலம்பியா மற்றும் நாடெங்கிலுமான பிற பல்கலைக்கழகங்களில் பயங்கரவாத-சார்பு, யூத-எதிர்ப்பு, அமெரிக்க-விரோத நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள அதிகமான மாணவர்கள் உள்ளனர் என்பது எங்களுக்குத் தெரியும், ட்ரம்ப் நிர்வாகம் அதை பொறுத்துக் கொள்ளாது” என்று எழுதினார்.

இதன்பின் அவர் வெளிப்படையாக காசாவில் இனப்படுகொலையை எதிர்க்கும் எவருக்கும் எதிராக பாரிய கைதுகள் மேற்கொள்ளப்படும் என்று அச்சுறுத்தினார். “இது வரவிருக்கும் பலருக்கு முதல் கைதாகும். இந்த பயங்கரவாத ஆதரவாளர்களை நம் நாட்டிலிருந்து கண்டுபிடித்து, கைது செய்து, எங்கள் நாட்டில் இருந்து நாடு கடத்துவோம் - மீண்டும் அவர்கள் ஒருபோதும் திரும்பி வர மாட்டார்கள்” என்று அவர் குறிப்பிட்டார்.

அமெரிக்க வரலாற்றில் இதுபோன்ற அறிக்கைக்கு எந்த முன்னுதாரணமும் இல்லை. ட்ரம்ப், அரசியலமைப்பை நேரடியாக மீறும் வகையில், சட்டபூர்வமாக வசிப்பவர்களின் உரிமைகளைப் பறிப்பதற்கும், விசாரணையின்றி அவர்களை நாடு கடத்துவதற்குமான உரிமையை பகிரங்கமாக கூறி, அனைத்து சட்ட கட்டுப்பாடுகளுக்கும் வெளியில் செயல்பட்டு வருகிறார்.

பதவியேற்ற முதல் 50 நாட்களில், ட்ரம்ப் அரசியலமைப்பின் மீது ஒரு திட்டமிட்ட போரைத் தொடுத்துள்ளார். ஜனநாயக உரிமைகள் மீதான உறுதியான தாக்குதல், அரசியல் எதிர்ப்பாளர்களை கைது செய்தல், “அவசரகால நிலை” என்ற சாக்குப்போக்கில் நிர்வாகத்தால் அசாதாரண அதிகாரங்களை வலியுறுத்துதல் — இவை அனைத்தும் இதற்கு முன்னரும் ஹிட்லரின் ஜேர்மனி, பினோச்சேயின் சிலி மற்றும் பல சர்வாதிகார ஆட்சிகளில் நடந்துள்ளன. ட்ரம்பும் அவரது நாஜி காதலர்களின் குழுவும் சட்டங்களை நொறுக்கி வருகின்றனர். ஒவ்வொரு அத்து மீறலும் அடுத்த கட்டத்திற்கு களம் அமைக்கிறது.

கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் ஒரு போலீஸ் அரசு திணிக்கப்பட்டு வருகிறது. இதில், கைது அல்லது நாடுகடத்தப்படும் அச்சுறுத்தலின் கீழ் எதிர்ப்பு உணர்வு குற்றமாக்கப்படுகிறது. திங்களன்று வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் “அமெரிக்க வளாகங்களில் தீவிர இடதுசாரி சித்தாந்தம் என்று அழைப்பதை அகற்றுவதற்கான ட்ரம்ப் நிர்வாகத்தின் பிரச்சாரத்தில் கொலம்பியா பூஜ்ஜியமாகிவிட்டது” என்று எழுதியது.

கல்வி அமைச்சகம், “யூத மாணவர்களைப் பாதுகாப்பதற்கான தங்கள் கடமைகளை நிறைவேற்றத் தவறினால் கட்டாய நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்து 60 பள்ளிகளுக்கு கடிதங்களை அனுப்பியுள்ளது. இந்தப் பட்டியலில் ஐவி லீக், மாநில மற்றும் சிறிய தாராளவாத-கலைக் கல்லூரிகளும் அடங்கும்” என்று அது குறிப்பிட்டது.

எவ்வாறாயினும், இந்த தாக்குதல் வளாகங்களுடன் மட்டுப்படுத்தப்படாது. ட்ரம்ப் ஆட்சியின் நடவடிக்கைகளையும் அது பிரதிநிதித்துவம் செய்யும் ஆளும் வர்க்கத்தின் நலன்களையும் எதிர்க்கும் எவரொருவரும் இலக்கில் வைக்கப்படுவார்கள். குறிப்பாக, தங்கள் வாழ்க்கைத் தரங்கள் மீதான தாக்குதல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து வேலைநிறுத்தம் செய்யும் தொழிலாளர்கள் கைதுக்கு உட்படுத்தப்படலாம்.

ட்ரம்ப் மற்றும் எலோன் மஸ்க் ஆகியோரால் பல்லாயிரக்கணக்கான கூட்டாட்சி அரசுத் தொழிலாளர்களை பெருமளவில் பணிநீக்கம் செய்தல், வணிக நடவடிக்கைகளுக்கான அனைத்து கட்டுப்பாடுகளையும் நீக்குதல் மற்றும் மருத்துவ உதவி மற்றும் சமூகப் பாதுகாப்பு போன்ற சமூகத் திட்டங்கள் மீதான நேரடித் தாக்குதல் ஆகியவற்றின் மத்தியில் கலீல் மீதான தாக்குதல் வந்துள்ளது. ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல், கிரீன்லாந்து மற்றும் கனடாவை இணைப்பதற்கான ட்ரம்பின் அழைப்புகளில் இருந்து பாலஸ்தீன மக்கள் மீதான இஸ்ரேலின் இனச் சுத்திகரிப்புக்கு அவர் ஆதரவளிப்பது வரையில், ஆழமடைந்து வரும் போர் தயாரிப்புகளுடன் பிரிக்கவியலாது பிணைந்துள்ளது.

கலீலின் சட்டவிரோத கைது மற்றும் நாடுகடத்தல் அச்சுறுத்தலை எந்த ஜனநாயகக் கட்சித் தலைவரும் எதிர்க்கவில்லை. நியூ யோர்க் ஆளுநர் கேத்தி ஹோச்சுல் இதுபற்றி எதுவும் கூறவில்லை. மேலும், இந்த மாத தொடக்கத்தில் கொலம்பியாவில் மாணவர் போராட்டக்காரர்களுக்கு எதிராக “விரைவான நடவடிக்கை” எடுக்க வேண்டும் என்று அவர் தனிப்பட்ட முறையில் அழைப்பு விடுத்தார். ட்ரம்புடன் நெருக்கமாகப் பணியாற்றி வரும் மற்றும் முன்னர் போராட்டக்காரர்களை “வெளிப்புறக் கிளர்ச்சியாளர்கள்” என்று கண்டித்த நியூ யோர்க் நகர மேயர் எரிக் ஆடம்ஸின் செய்தித் தொடர்பாளர், நகரம் “ICE உடன் ஒத்துழைக்கவில்லை” என்று ஒரு மேலோட்டமான அறிக்கையை வெளியிட்டார்.

செனட் மற்றும் பிரதிநிதிகள் சபையில் உள்ள உயர்மட்ட ஜனநாயகக் கட்சியினர், “சுயாதீன” செனட்டர் பெர்னி சாண்டர்ஸுடன் சேர்ந்து, அனைவரும் அமைதியாக உள்ளனர்.

ஜனநாயகக் கட்சியுடன் ஆழமாக பிணைந்துள்ள கொலம்பியா பல்கலைக்கழகம், கலீல் மீதான தாக்குதலுக்கு தீவிரமான பங்கு வகித்துள்ளது. கலீல் கைது செய்யப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பு, கொலம்பியா பேராசிரியர் ஷாய் டேவிடாய் மற்றும் பிறரால் வழிநடத்தப்பட்ட ஒருங்கிணைந்த நச்சுப் பிரச்சாரத்திற்கு கலீல் உட்படுத்தப்படுவதாகவும், அவர்கள் அவரை பாதுகாப்பு அச்சுறுத்தல் என்று முத்திரை குத்தி நாடுகடத்தப்பட வேண்டும் என்று அழைப்பு விடுத்து வருவதாகவும், இடைக்காலத் தலைவர் கத்ரீனா ஆம்ஸ்ட்ராங் எச்சரித்தார்.

“ICE அல்லது ஒரு ஆபத்தான நபர் என் வீட்டிற்கு வரக்கூடும் என்ற பயத்தில் என்னால் தூங்க முடியவில்லை,” என்று எழுதிய கலீல், சட்ட ஆதரவு மற்றும் பாதுகாப்பிற்காக மன்றாடினார். அவரது இந்த முறையீடுகளைப் புறக்கணித்த கொலம்பியா பல்கலைக்கழகம், ட்ரம்பின் முகவர்கள் அவரை அவரது வீட்டிலிருந்து இழுத்துச் செல்ல அனுமதித்தது.

கலீல் கைது செய்யப்பட்டிருப்பது பரவலான சீற்றத்தை தூண்டியுள்ளது. வளாகத்தில் உள்ள குழுக்களால் தொடங்கப்பட்ட கடிதம் எழுதும் பிரச்சாரத்தில் 1.2 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பங்கேற்றுள்ளனர். அரை மில்லியனுக்கும் மேலானவர்கள் அவரை விடுதலை செய்யக் கோரி மனுக்களில் கையெழுத்திட்டுள்ளனர்.

திங்கட்கிழமை பிற்பகல் கொலம்பியாவில் கலீல் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து கொலம்பியா பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் இதர ஆதரவாளர்கள் ஒரு பத்திரிகையாளர் கூட்டத்தை நடத்தினர். மன்ஹாட்டன் பெடரல் நீதிமன்றத்திற்கு வெளியே நூற்றுக்கணக்கான ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இந்த நடவடிக்கைகள் விரிவுபடுத்தப்பட வேண்டும். கொலம்பியா, நியூ யோர்க் பல்கலைக்கழகம் மற்றும் நகரம் முழுவதிலும், மாநிலம் மற்றும் தேசிய அளவிலும் பிற பள்ளிகளில் பாரிய கூட்டங்களும் ஆர்ப்பாட்டங்களும் ஒழுங்கமைக்கப்பட வேண்டும்.

மாணவர்களை தனியாக போராட விட முடியாது. இந்தப் போராட்டம் தொழிலாள வர்க்கத்திற்குள் கொண்டு செல்லப்பட வேண்டும். ஐக்கிய வாகன தொழிலாளர்கள் சங்கத்தின் (UAW) உறுப்பினராக கலீல் இருந்து வருகின்ற போதிலும், UAW தலைமை மெளனமாக இருந்து வருகிறது. சாமானிய தொழிலாளர்கள் செயல்பட வேண்டும். வாகனத்துறை தொழிலாளர்கள், கல்வியாளர்கள், அமேசான் தொழிலாளர்கள், சுகாதாரத்துறை தொழிலாளர்கள் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் ஒவ்வொரு பிரிவினருடன் சேர்ந்து, ஐக்கிய வாகன தொழிலாளர்கள் சங்கத்தின் பட்டதாரி மாணவர்களும் கலீலின் விடுதலைக்கான போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும்.

ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்க வேலையிடங்களிலும் தொழிற்சாலைகளிலும் சாமானிய தொழிலாளர் குழுக்கள் ஸ்தாபிக்கப்பட வேண்டும். அவை, இந்தப் போராட்டத்தை தொழிலாள வர்க்கத்தின் மீதான ட்ரம்பின் தாக்குதலுக்கு எதிரான பரந்த போராட்டத்துடன் இணைக்க வேண்டும்.

ஜனநாயக உரிமைகள் மீதான இந்தத் தாக்குதலின் அளவை எவரும் குறைத்து மதிப்பிடக் கூடாது. இது செயல்பாட்டில் உள்ள தன்னலக்குழுவின் ஆட்சியாகும்.

ஜனநாயகக் கட்சி அல்லது தொழிற்சங்க எந்திரத்தின் மீது நம்பிக்கை வைப்பது மிகப் பெரிய தவறாக இருக்கும். மஹ்மூத் கலீலை விடுவிப்பதற்கான போராட்டம் நிதியத் தன்னலக்குழுவின் சர்வாதிகாரத்திற்கு எதிரான பரந்த போராட்டத்தின் பிரிக்க முடியாத பகுதியாகும். ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்கவும், போர் மற்றும் சர்வாதிகாரத்தை நோக்கி திரும்புவதை எதிர்க்கவும் தொழிலாள வர்க்கம் அதன் சொந்த சுயாதீனமான பலத்துடன் தலையீடு செய்ய வேண்டும்.