மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
வெனிசுவேலாவில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பதிவுகள் குறித்த இரண்டு பகுதித் தொடரின் இரண்டாம் பகுதி இது. முதல் பகுதி இங்கே பதிவிடப்பட்டுள்ளது.
பனிப்போர் காலத்தின் போது வெனிசுவேலாவும் அமெரிக்க ஏகாதிபத்தியமும்
1938-ல் மெக்சிகோ அதிபர் லாசரோ கார்டெனாஸ், அந்நாட்டின் எண்ணெய்த் தொழிற்துறையை தேசியமயமாக்கியதைத் தொடர்ந்து, அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கும் அதன் இலாப நோக்கங்களுக்கும், வெனிசுவேலா மூலோபாய ரீதியாக இன்னும் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியது. வெனிசுவேலாவின் எண்ணெய் வளங்கள் அமெரிக்க மற்றும் ஆங்கிலோ-டச்சு பன்னாட்டு நிறுவனங்களால் ஏகபோகமாக ஆக்கிரமிக்கப்பட்டிருந்தன. இது இரண்டாம் உலகப் போரின்போது அமெரிக்க இராணுவத்திற்கு எரிபொருள் வழங்கவும், போருக்குப் பிந்தைய பொருளாதார வளர்ச்சி மற்றும் பனிப்போர் காலத்தின்போது தீவிரமடைந்து வந்த இராணுவவாதத்திற்கும் முக்கிய ஆதாரமாக விளங்கியது.
“கெழுத்தி மீன்” (Catfish) என்று அழைக்கப்பட்ட கோமஸின் மறைவிற்குப் பிறகு, ஜெனரல்கள் வரிசையாக ஜனாதிபதி பதவியை வகித்து வந்தனர். அவர்கள் சர்வாதிகாரப் பிடியை படிப்படியாகத் தளர்த்தியதன் விளைவாக, கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தொழிற்சங்கங்கள் சட்டப்பூர்வமாக்கப்பட்டன. 1943-ல் நாட்டின் முதல் பெட்ரோலிய சீர்திருத்தச் சட்டம் இயற்றப்பட்டது. இருப்பினும், பொதுத்தேர்தல் இன்றி மற்றொரு ஜனாதிபதியை திணிப்பதற்கான முயற்சி, 1945-இல் “அக்டோபர் புரட்சி” என்று அழைக்கப்படுவதைத் தூண்டியது. இப்புரட்சி ரோம்லோ பெட்டான்கோர்ட்டின் முதலாளித்துவ ஜனநாயகக் கட்சியான அக்சியோன் டெமோக்ராட்டிகா (AD) மற்றும் தேசபக்தி இராணுவ ஒன்றியம் என ஒழுங்கமைக்கப்பட்ட இளம் இராணுவ அதிகாரிகளின் குழுவால் முன்னெடுக்கப்பட்டது. இந்த இராணுவக் குழுவின் மிக முக்கியமான உறுப்பினராக மார்கோஸ் பெரெஸ் ஜிமெனெஸ் இருந்தார்.
இதன்பின்பு, பெட்டான்கோர்ட் தலைமையிலான புதிய அரசாங்கம் தொடர்ச்சியான சீர்திருத்தங்களைத் தொடங்கியது. ஆனால், வெளிநாட்டு எண்ணெய் நிறுவனங்களைத் தேசியமயமாக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை அது நிராகரித்தது. 1947-ல், வெனிசுவேலா தனது முதல் நேரடி மற்றும் முழுமையான தேர்தலை நடத்தியது. இதில் அக்சியோன் டெமோக்ராட்டிகா கட்சியின் வேட்பாளரும், புகழ்பெற்ற நாவலாசிரியருமான ரோமுலோ காலேகஸ் அமோக வெற்றி பெற்றார். அவரது முக்கியமான நடவடிக்கைகளில் ஒன்று, வெளிநாட்டு எண்ணெய் நிறுவனங்களின் இலாபத்தின் மீதான வரியை 43 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாக உயர்த்தியதாகும். (”ஐம்பதுக்கு/ஐம்பது” என்று அழைக்கப்படும் இந்த ஏற்பாடு பின்னர் சவுதி அரேபியா உட்பட பிற முக்கிய எண்ணெய் உற்பத்தி நாடுகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டது). காலேகஸின் இந்த நடவடிக்கைகள் எண்ணெய் நிறுவனங்களுக்குப் பிடிக்கவில்லை. இதன் விளைவாக, அவர் பதவியேற்ற ஒன்பதே மாதங்களில் இராணுவத்தால் தூக்கியெறியப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து வெனிசுவேலா, கேர்னல் மார்கோஸ் பெரெஸ் ஜிமெனெஸ் தலைமையில் மற்றொரு பத்தாண்டு கால கொடூரமான சர்வாதிகாரத்திற்கு ஆளானது. வெறுப்புக்கு உள்ளான இராணுவ சர்வாதிகாரத்தின் தேசிய பாதுகாப்பு இயக்குநரகம் (Directorate of National Security), படுகொலைகள், காணாமல் ஆக்குதல்கள், சித்திரவதைகள் மற்றும் ஆயிரக்கணக்கான அரசியல் கைதிகளை வதை முகாம்கள் மற்றும் சிறைகளில் அடைத்து வைத்தல் ஆகியவற்றைப் பயன்படுத்தி ஒரு பயங்கரவாத ஆட்சியை திணித்தது. இந்த ஆட்சியானது, எண்ணெய் நிறுவனங்கள் மற்றும் வெளிநாட்டு மூலதனத்துடன் மிகச்சிறந்த உறவைக் கொண்டிருந்ததோடு, நாட்டையும் அதன் வளங்களையும் சுரண்டுவதுக்கு அவர்கள் அழைக்கப்பட்டனர். பரந்துபட்ட மக்களை ஒடுக்கி, இலாபமீட்ட வசதிகளைச் செய்து கொடுத்த சேவைகளுக்காக, அமெரிக்க ஜனாதிபதி டுவைட் ஐசனோவர், கேர்னல் பெரெஸ் ஜிமெனெஸுக்கு சிறந்த சேவைக்கான (Legion of Merit) உயரிய விருதை வழங்கிக் கௌரவித்தார்.
ஜனவரி 1, 1958 அன்று தொடங்கிய மற்றொரு “சிவில்-இராணுவ” சதிப்புரட்சிக்கு பெரெஸ் ஜிமெனெஸ் பலியானார். பொதுக் கருவூலத்திலிருந்து நூற்றுக்கணக்கான மில்லியன் டாலர்களைத் திருடிக்கொண்டு அவர் நாட்டை விட்டு ஓடினார். முதலில் மியாமி கடற்கரையிலும், பின்னர் ஸ்பெயினின் பிராங்கோ சர்வாதிகார ஆட்சியின் பாதுகாப்பிலும் அவர் வசதியாக தஞ்சம் புகுந்தார்.
பெரெஸ் ஜிமெனெஸின் வீழ்ச்சிக்கு ஐந்து மாதங்களுக்குப் பிறகு, இலத்தீன் அமெரிக்கப் பயணத்தின் இறுதியில் வெனிசுவேலாவுக்குச் சென்ற அமெரிக்கத் துணை ஜனாதிபதி ரிச்சர்ட் நிக்சன், சர்வாதிகாரத்தையும் பல தசாப்த கால சுரண்டலையும் ஆதரித்ததற்காக, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மீதான கடுமையான மக்கள் கோபத்திற்கு இலக்கானார். விமானத்திலிருந்து இறங்கிய உடனேயே நிக்சன் மீது குப்பைகளை வீசியும், காறித் துப்பியும், அவரது கார் அணிவகுப்பைச் சூழ்ந்துகொண்ட மக்கள் கூட்டத்தினர், கற்கள், குழாய்கள் மற்றும் தடிகளால் காரின் கண்ணாடிகளை உடைத்துத் தாக்கினர். இதிலிருந்து மயிரிழையில் நிக்சன் உயிர் தப்பினார். அப்போது தனது துப்பாக்கியை எடுத்து, “இந்த நாய்களைக் கொஞ்சம் கவனிப்போம்” என்று கத்திய தனது இரகசிய சேவை முகவர்களில் ஒருவரை, அமெரிக்கத் துணை ஜனாதிபதி மிகவும் சிரமப்பட்டுத் தடுத்து நிறுத்தினார்.
நிக்சன் எதிர்கொண்ட எதிர்ப்பு பற்றிய செய்தி வாஷிங்டனை எட்டியபோது, கியூபாவின் குவாண்டனாமோ விரிகுடாவில் உள்ள அமெரிக்க கடற்படை தளத்திற்கு கடற்படை சிப்பாய்கள் மற்றும் வான்குடை சிப்பாய்களை (paratroopers) அனுப்புமாறு ஐசனோவர் உத்தரவிட்டார். மேலும், துணை ஜனாதிபதியை மீட்பதற்காக குராசோ தீவிற்கு (Curaçao) போர் விமானங்களையும் அனுப்பினார். இறுதியில் கைவிடப்பட்ட இந்தத் திட்டம், “புவர் ரிச்சர்ட் நடவடிக்கை” என்று அழைக்கப்பட்டது. இது நிக்சனுக்கு ஒரு தர்மசங்கடமான சூழலை உருவாக்கியதோடு, இலத்தீன் அமெரிக்கா முழுவதும் கடும் கோபத்தைத் தூண்டியது.
அடுத்தடுத்த ஆண்டுகளில், பெட்டான்கூர்ட்டின் அக்சியன் டெமோக்ராட்டிகா கட்சியின் அரசாங்கம் வாஷிங்டனுக்கு ஒரு முன்மாதிரியாக மாறியது. இது கம்யூனிச எதிர்ப்பு, ஆனால் சிவில் ஆட்சியாக இருந்தது. இது தனியார் சொத்துரிமையையும் வெளிநாட்டு மூலதனத்தின் நலன்களையும் பாதுகாப்பதில் உறுதியாக இருந்தது. அதே நேரத்தில், தனக்கு இடதுபுறம் இருந்த அரசியல் இயக்கங்களை ஒடுக்கியது. கென்னடியின் “முன்னேற்றத்திற்கான கூட்டணி” திட்டத்தை வரவேற்ற பெட்டான்கூர்ட், “பணக்காரர்களைக் காப்பாற்றுவதற்காக ஏழைகளுக்கு உதவுவது அவசியம்” என்று பிரகடனப்படுத்தினார். வாஷிங்டனுக்கு அடிக்கடி விஜயம் செய்த பெட்டான்கூர்ட், AFL-CIO தொழிற்சங்க அதிகாரத்துவத்துடன் உறவுகளை வளர்த்துக் கொண்டார். இது, அரசாங்கத்திற்கும் எண்ணெய் நிறுவனங்களுக்கும் விசுவாசமான ஒரு கம்யூனிச எதிர்ப்பு தொழிற்சங்க எந்திரத்தை வளர்ப்பதில் அவருக்கு உதவியது.
தென் அமெரிக்காவின் பெரும்பாலான பகுதிகளில் சி.ஐ.ஏ (CIA) ஆதரவு பெற்ற இராணுவ சதிப்புரட்சிகள் கொடூரமான சர்வாதிகார ஆட்சிகளை அதிகாரத்திற்குக் கொண்டு வந்த காலகட்டத்தில், வெனிசுவேலா ஒரு “மாதிரி ஜனநாயகம்” (Model democracy) என்று போற்றப்பட்டது. மன்ரோ கோட்பாடு மீண்டும் ஒருமுறை திருத்தி எழுதப்பட்டது. இந்த முறை அது கெனன் திருத்தம் என்று அழைக்கப்பட்டது. சோவியத் யூனியனைக் கட்டுப்படுத்தும் கொள்கையை உருவாக்கிய அமெரிக்க இராஜதந்திரி ஜோர்ஜ் எஃப். கெனன் பெயரால் இது அழைக்கப்பட்டது. இலத்தீன் அமெரிக்காவிற்குப் பயன்படுத்தப்பட்டுவந்த இந்தக் கோட்பாடு “தேசிய பாதுகாப்பு” கோட்பாடாக மாறியது. இதன் கீழ், கீழ்த்தட்டு மக்களிடமிருந்து வரும் எந்தவொரு புரட்சிகர அச்சுறுத்தலும், சோவியத் விரிவாக்கத்தின் வெளிப்பாடாகக் கருதப்பட்டு, அது இரக்கமின்றி ஒடுக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டது.
உண்மையில், வெனிசுவேலாவின் இந்த “ஜனநாயகம்”, அந்த பிராந்தியத்தின் பிற பகுதிகளில் வாஷிங்டனால் திணிக்கப்பட்ட கொடுமையான சித்திரவதை ஆட்சிகளை விடக் குறைவானது அல்ல. அரசாங்கமும், அதன் இரகசிய போலீஸ் அமைப்பான வெறுப்புக்குரிய DISIP-உம், புதிதாக உருவாகிய கொரில்லா இயக்கங்களையும், இடதுசாரி மற்றும் தொழிற்சங்க ஆர்வலர்களையும் கொடூரமாக ஒடுக்கின. அரசாங்கத்தின் சொந்த மதிப்பீட்டின்படி, “ஜனநாயக” ஆட்சிகள் என்று சொல்லப்பட்டவற்றின் கீழ் இருந்த ஒடுக்குமுறைப் படைகளால், கிட்டத்தட்ட 900 வெனிசுவேலா பொதுமக்கள் கொல்லப்பட்டனர் அல்லது காணாமல் ஆக்கப்பட்டனர்.
பெட்டான்கூர்ட்டின் நெருங்கிய கூட்டாளியும் அக்சியன் டெமோக்ராட்டிகா கட்சியின் இணை நிறுவனருமான கார்லோஸ் ஆண்ட்ரெஸ் பெரெஸ் ஜனாதிபதியாக இருந்தபோது, 1976-ல் வெனிசுவேலா அரசாங்கம் எண்ணெய் தொழிற்துறையை தேசியமயமாக்கியது. அந்தக் காலகட்டத்தின் எரிசக்தி நெருக்கடியால் ஏற்பட்ட கடுமையான விலை உயர்வுகளுக்கு மத்தியில் இது நடந்தது. அமெரிக்காவிடமிருந்து வெனிசுவேலா எண்ணெயையும் நிலத்தையும் “திருடிவிட்டது” என்ற ட்ரம்பின் கூற்றுகளுக்கு மாறாக, எண்ணெய் நிறுவனங்களுக்கு சுமார் 1 பில்லியன் டாலர் இழப்பீடு வழங்கப்பட்டது. மேலும், அந்த எண்ணெயோ அல்லது நிலமோ ஒருபோதும் அமெரிக்காவிற்குச் சொந்தமானதாக இருக்கவில்லை; ஸ்டாண்டர்ட் ஆயில் (Standard Oil) மற்றும் பிற நிறுவனங்கள் அடுத்தடுத்து வந்த வெனிசுவேலா ஆட்சிகளால் வழங்கப்பட்ட தாராளமான சலுகைகளின் கீழ் வளங்களைச் சுரண்டி வந்தன.
“பிசாசின் கழிவு”
ஒரு முதலாளித்துவ அரசாங்கத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட தேசியமயமாக்கல், வெனிசுவேலாவின் அடிப்படை வர்க்க உறவுகளை மாற்றுவதில் தோல்வியடைந்தது. அந்த நாடு தனது வருமானத்திற்காக ‘எண்ணெய்’ என்ற ஒரே ஒரு பொருளை மட்டுமே முழுமையாகச் சார்ந்திருந்தது. அதுவும் பெருமளவு அமெரிக்காவிற்கே விற்கப்பட்டதால், சந்தை விலையேற்ற இறக்கங்களின் கருணையில் வெனிசுவேலா இருக்க வேண்டியிருந்தது.
வெளிநாட்டு நிறுவனங்களால் பணியமர்த்தப்பட்ட அதே கட்டமைப்புகளும், அதே வெனிசுவேலா மேலாளர்களும் தொடர்ந்து பதவியில் இருந்தனர். வெளிநாட்டு எண்ணெய் நிறுவனங்கள், அரசுக்குச் சொந்தமான PDVSA நிறுவனத்தின் துணை நிறுவனங்கள் என்ற புதிய பெயர்களில் தொடர்ந்து இயங்கி இலாபம் ஈட்டி வந்தன. பொருளாதாரத்தை பன்முகப்படுத்த இறக்குமதி மாற்றீட்டைப் பயன்படுத்துவதற்கான முயற்சிகள் தோல்வியடைந்தன. இதனால் வெனிசுவேலா தனது உணவுப் பொருட்களில் 80 சதவீதத்திற்கும் மேலாகவும், பெரும்பாலான உற்பத்திப் பொருட்களுக்கும் இறக்குமதியையே சார்ந்திருக்க வேண்டியிருந்தது.
பெட்டான்கூர்ட்டின் எரிசக்தி அமைச்சராகப் பணியாற்றிய முக்கிய அரசியல்வாதியான ஜுவான் பாப்லோ பெரெஸ் அல்போன்சோ, “இன்னும் பத்து ஆண்டுகளில், இருபது ஆண்டுகளில் பாருங்கள்; எண்ணெய் நம்மை அழிவுக்குக் கொண்டு செல்லும். எண்ணெய் என்பது பிசாசின் கழிவு” என்று முன்னறிவித்தார். அந்த நாடு “டச்சு நோய்” (Dutch disease) எனப்படும் ஒரு உன்னதமான பொருளாதாரப் பாதிப்பிற்கு உள்ளானது. இதில் ஒரு நாட்டின் பொருளாதாரம் ஒரே ஒரு ஏற்றுமதித் துறையால் (எண்ணெய்) ஆதிக்கம் செலுத்தப்படும்போது, உற்பத்தி மற்றும் விவசாயம் போன்ற பிற துறைகள் வளர்ச்சியின்றி முடங்கிப்போகும். இதனால் ஏற்றுமதி விலைகள் வீழ்ச்சியடையும் போது நாடு கடுமையான நெருக்கடிகளுக்கு ஆளாகிறது.
அக்சியன் டெமோக்ராட்டிகா கட்சி மற்றும் அதன் நட்பு ரீதியான போட்டியாளரான கிறிஸ்துவ ஜனநாயகக் கட்சியான COPEI ஆகியவற்றின் மாறிமாறி வந்த ஆட்சிகள், அதிகரித்து வந்த சமூக சமத்துவமின்மை மற்றும் பரவலான ஊழல் மலிந்த நிலைமைக்கு தலைமை தாங்கின. அதே நேரத்தில், நாட்டின் கடன் படிப்படியாக உயர்ந்தது. இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்த கார்லோஸ் ஆண்ட்ரெஸ் பெரெஸ், எண்ணெய் விலைகளில் ஏற்பட்ட கூர்மையான வீழ்ச்சிக்கு பதிலளித்து, வெளிநாட்டு நிறுவனங்களின் சுரண்டலுக்கு எண்ணெய் வயல்களை மேலும் திறந்துவிட்டார். மேலும், சர்வதேச நாணய நிதியம் (IMF) விதித்த கடுமையான “அதிர்ச்சி சிகிச்சை” (shock therapy) திட்டத்தையும் திணித்தார். அதில் எரிபொருள் விலைகளில் ஏற்பட்ட 100 சதவீதம் அதிகரிப்பும் அடங்கும்.
வறுமையில் வாடிய வெனிசுவேலா மக்கள், தங்களின் வாழ்க்கைத் தரம் மீதான இந்தத் தாக்குதலுக்கு எதிராக காரகாசோ (Caracazo) என்று அழைக்கப்படும் ஒரு மக்கள் எழுச்சியுடன் எதிர்வினையாற்றினர். இதற்கு, இராணுவச் சட்டம் மற்றும் இரத்தக் களரியான ஒடுக்குமுறை மூலம் பதிலடி கொடுத்த அரசாங்கம், ஆயுதமற்ற மக்கள் கூட்டத்தின் மீது தானியங்கி துப்பாக்கிகளால் சுட்டுத்தள்ளியும் மற்றும் ஏழை குடியிருப்புகளில் உள்ள வீடுகளிலிருந்து மக்களை இழுத்துச் சென்றும் உடனுக்குடன் மரணதண்டனைகளை நிறைவேற்றியது. இந்த நிகழ்வுகள், பெரெஸ் ஜிமெனெஸின் வீழ்ச்சிக்குப் பிறகு ஆதிக்கம் செலுத்தி வந்த தாராளவாத கம்யூனிச எதிர்ப்பு உடன்படிக்கையின் முறிவைக் குறிப்பதாக அமைந்தன.
வெனிசுவேலாவில் ஏற்பட்ட தொடர்ச்சியான அமைதியின்மையைத் தொடர்ந்து, 1992-ல் இளம் அதிகாரியான ஹியூகோ சாவேஸ் தலைமையில் ஒரு தோல்வியுற்ற இராணுவச் சதி முயற்சி நடந்தது. ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு நடந்த தேர்தலில் சாவேஸ் ஜனாதிபதியானார். அந்தத் தேர்தலில் AD மற்றும் COPEI ஆகிய இரு கட்சிகளும் மக்களால் முழுமையாக நிராகரிக்கப்பட்டன. ஊழல் மற்றும் மக்களின் நலன்களைப் புறக்கணித்து முதலாளித்துவ நலன்களைப் பாதுகாத்ததற்காக இவ்விரு கட்சிகளும் மக்களால் பெரிதும் வெறுக்கப்பட்டன.
இலத்தீன் அமெரிக்காவின் “இளம் சிவப்பு அலை” (Pink Tide) என்று அழைக்கப்படுவதைத் தொடங்கிய சாவேஸ் அரசாங்கம், உயர்ந்த எண்ணெய் விலையைப் பயன்படுத்தி கல்வி மற்றும் சுகாதாரத்தை மேம்படுத்தும் சமூகத் திட்டங்களுக்கு நிதியளித்தது. இந்த மிதமான சீர்திருத்தங்களைத் தொடர்ந்து, புதிய அரசாங்கம் கியூபாவுடன் பொருளாதார மற்றும் அரசியல் உறவுகளை உறுதிப்படுத்தியது. அதே நேரத்தில், அமெரிக்காவின் ஆப்கானிஸ்தான் மீதான படையெடுப்பைக் கண்டித்தது. இது வாஷிங்டனின் பெருகிய விரோதத்திற்கு வழிவகுத்தது.
இந்த மோதல் ஏப்ரல் 2002-ல் அமெரிக்க ஆதரவுடன் நடந்த ஒரு ஆட்சிக் கவிழ்ப்பில் உச்சத்தை எட்டியது. சாவேஸ் சிறிது காலம் பதவியிலிருந்து நீக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால், வெகுஜனப் போராட்டங்கள் அவரை மீண்டும் பதவியில் அமர்த்த வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தின. இந்தச் ஆட்சிக் கவிழ்ப்பை ஆதரித்த இராணுவ அதிகாரிகள், பெரும் வணிகப் பிரதிநிதிகள் மற்றும் AFL-CIO-தொடர்புடைய தொழிற்சங்க அதிகாரத்துவத்தினரின் குழுவில் மரியா கொரினா மச்சாடோவும் (Maria Corina Machado) இணைந்திருந்தார். அமெரிக்க நிதியுதவி பெறும் வலதுசாரியான இவருக்கு, ஆட்சி மாற்றத்திற்கான அமெரிக்கப் போரை ஆதரித்ததற்காக, சமீபத்தில் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
2007-ஆம் ஆண்டில், சாவேஸ் அரசாங்கம் அடுத்தகட்ட தேசியமயமாக்கல் நடவடிக்கைகளை மேற்கொண்டது. இது முந்தைய தசாப்தத்தில் நடந்த தனியார்மயமாக்கல் மற்றும் அமெரிக்க நிறுவனங்களிடம் செயல்பாடுகளை ஒப்படைக்கும் போக்கை மாற்றியமைத்தது. எக்ஸான்மொபில் (ExxonMobil) மற்றும் கோனோகோபிலிப்ஸ் (ConocoPhillips) ஆகிய நிறுவனங்கள், புதிய ஒப்பந்தங்களின் கீழ், அரசாங்கம் பெரும்பான்மை பங்குகளைப் பெறுவதற்கு மறுப்புத் தெரிவித்த பின்னரே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
2013-இல் சாவேஸின் மறைவு மற்றும் நிக்கோலஸ் மதுரோவின் பதவியேற்பிற்குப் பிறகு, எண்ணெய் விலை வீழ்ச்சி அடைந்தது. இதனுடன் பராக் ஒபாமா தலைமையிலான ஜனநாயகக் கட்சி ஆட்சியின் போது தொடங்கப்பட்டு, பின்னர் தீவிரப்படுத்தப்பட்ட கடுமையான பொருளாதாரத் தடைகளும் சேர்ந்துகொண்டன. இதன் விளைவாக, வெனிசுவேலாவின் பொருளாதாரம் வியத்தகு முறையில் சுருங்கியது, மக்கள் பெருமளவில் நாட்டை விட்டு வெளியேறினர் மற்றும் வாழ்க்கைத்தரம் கடுமையாக வீழ்ச்சியடைந்தது.
ஆட்சிக் கவிழ்ப்பு சதித்திட்டங்கள், கொலை முயற்சிகள் மற்றும் வெனிசுவேலா கடற்கரையில் கூலிப்படையினரை இறக்குவது உள்ளிட்ட அமெரிக்கத் தலையீடுகள் அதிகரித்தன. ட்ரம்ப் நிர்வாகம் தனக்கு விருப்பமான, தேர்ந்தெடுக்கப்படாத மற்றும் அதிகம் அறியப்படாத வலதுசாரி பாராளுமன்ற உறுப்பினர் ஜுவான் கைடோவை (Juan Guaidó) ஜனாதிபதியாக திணிக்க முயன்றது. அவரது “இடைக்கால அரசாங்கம்” மக்கள் ஆதரவைப் பெறுவதில் தோல்வியடைந்ததுடன், அமெரிக்கா வழங்கிய மில்லியன் கணக்கான டாலர் உதவி நிதியை கொள்ளையடிப்பதில் மட்டுமே திறமையானது என்பதை நிரூபித்தது.
“வரலாறு தன்னைத்தானே மீண்டும் நிகழ்த்திக் கொள்வதில்லை, ஆனால் அது பெரும்பாலும் ஒரே மாதிரியான ஓசையைக் (rhymes) கொண்டிருக்கும்.” புகழ்பெற்ற எழுத்தாளரும், நகைச்சுவையாளரும், ஏகாதிபத்திய எதிர்ப்பாளருமான மார்க் ட்வைன் கூறியதாகக் கருதப்படும் இந்தப் பொன்மொழியை உறுதிப்படுத்துவது போல, 123 ஆண்டுகள் இடைவெளியில் வெனிசுவேலா கடற்கரையில் வெளிநாட்டு கடற்படைகள் நிறுத்தப்பட்டதும், அதைத் தொடர்ந்து மன்ரோ கோட்பாட்டிற்கு இரண்டு துணைவிதிகள் அறிவிக்கப்பட்டதும் அமைந்துள்ளன.
இருப்பினும், தியோடர் ரூஸ்வெல்ட் 1902-ஆம் ஆண்டு நெருக்கடியைப் பயன்படுத்தி, வளர்ந்து வந்த உலக வல்லரசான அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பேராசைமிக்க நலன்களுக்கு ஏற்ப மன்ரோ கோட்பாட்டைத் திருத்தினார். ட்ரம்பின் “துணைவிதி” ரூஸ்வெல்ட்டைப் பின்பற்றுவது போலத் தெரிந்தாலும், அது உண்மையில் அமெரிக்காவின் தீர்க்க முடியாத நெருக்கடி மற்றும் உலகளாவிய மேலாதிக்கத்தை இழந்து வருவதன் வெளிப்பாடாக உள்ளது. இழந்த மேலாதிக்கத்தை இராணுவவாதம் மற்றும் ஆக்கிரமிப்பு மூலம் மீட்டெடுக்க அமெரிக்கா தீவிரமாக முயல்கிறது.
தென் அமெரிக்காவின் முன்னணி வர்த்தகப் பங்காளியாக இருந்துவரும் சீனா, ஏற்கனவே அமெரிக்காவை முந்தியுள்ளது. 2035-ஆம் ஆண்டிற்குள் இலத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் பிராந்தியம் முழுவதும் சீனா அமெரிக்காவை முந்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெருவின் சாங்காய் (Chancay) புதிய ஆழ்கடல் துறைமுகம் முதல், 5-G வலையமைப்புக்களை உருவாக்குவது வரை, அமெரிக்காவால் ஈடுகொடுக்க முடியாத பெரிய அளவிலான உள்கட்டமைப்பு முதலீடுகளை சீனா இப்பகுதியில் மேற்கொண்டு வருகிறது. இதற்கிடையில், ஐரோப்பிய ஒன்றியமும் இப்பகுதியின் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த மூலப்பொருட்களைப் பெறுவதற்குத் தனது சொந்த வழிகளையும் தேடி வருகிறது.
இத்தகையச் சூழலில், டிசம்பர் 4-ஆம் தேதி வெள்ளை மாளிகை வெளியிட்ட தேசிய பாதுகாப்பு மூலோபாய ஆவணம் பின்வருமாறு கூறுகிறது:
பல ஆண்டுகால அலட்சியத்திற்குப் பிறகு, மேற்கு அரைக்கோளத்தில் அமெரிக்காவின் மேலாதிக்கத்தை மீட்டெடுக்கவும், எமது தாயகத்தைப் பாதுகாக்கவும், பிராந்தியம் முழுவதிலும் உள்ள முக்கிய புவியியல் பகுதிகளுக்கான எமது அணுகலை உறுதிப்படுத்தவும், அமெரிக்கா மன்ரோ கோட்பாட்டை மீண்டும் வலியுறுத்தி நடைமுறைப்படுத்தும். எமது அரைக்கோளத்தில் படைகளை நிறுத்தவோ, அச்சுறுத்தும் திறன்களை நிலைநிறுத்தவோ அல்லது மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த சொத்துக்களைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கவோ அரைக்கோளத்திற்கு வெளியே உள்ள போட்டியாளர்களுக்கு நாம் அனுமதி வழங்கமாட்டோம். மன்ரோ கோட்பாட்டிற்கான இந்த ட்ரம்ப்பின் துணைவிதி என்பது, அமெரிக்கப் பாதுகாப்பு நலன்களுக்கு ஏற்ப, அமெரிக்க அதிகாரம் மற்றும் முன்னுரிமைகளை மீட்டெடுப்பதற்கான ஒரு பொது அறிவார்ந்த மற்றும் சக்திவாய்ந்த நடவடிக்கையாகும்.
மன்ரோ கோட்பாட்டின் இந்தப் புதிய வலியுறுத்தலால் வகுக்கப்பட்ட பாதை, முதல் பார்வையில் “பொது அறிவு” என்பதை விட மாயத்தோற்றம் கொண்டதாகவே தோன்றுகிறது. வரலாற்றின் வேறு எந்தக் காலகட்டத்தையும் விட, இது போருக்கான ஒரு நிச்சயமான பாதையைப் பிரதிபலிக்கிறது. ட்ரம்ப் நிர்வாகத்தால் குறிப்பிடப்பட்டுள்ள இந்த இலக்குகளை, இராணுவ வெற்றி மூலமாகவும், அணு ஆயுதம் ஏந்திய சீனா மற்றும் ரஷ்யாவுடனான நேரடி இராணுவ மோதல்கள் மூலமாகவும் மட்டுமே அடைய முடியும்.
அதே நேரத்தில், இலத்தீன் அமெரிக்காவின் மீது நவ-காலனித்துவ விலங்குகளைப் பூட்டும் இந்த முயற்சியானது, மேற்கு அரைக்கோளம் (வட அமெரிக்கா, இலத்தீன் மற்றும் தென் அமெரிக்கா) முழுவதும் வர்க்கப் போராட்டத்தின் ஒரு மிகப் பிரம்மாண்டமான வெடிப்பை தவிர்க்க முடியாமல் தூண்டும்.
மாற்றீடுகள் இதற்கு முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு இவ்வளவு தெளிவாக இருந்ததில்லை. முதலாளித்துவத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க தொழிலாள வர்க்கம் தேசிய எல்லைகளைக் கடந்து, அமெரிக்கா மற்றும் அதற்கு அப்பாலும் தனது போராட்டங்களை ஐக்கியப்படுத்த வேண்டும். இல்லையெனில், மரணத் தருவாயில் உள்ள இந்த அமைப்புமுறை, மனிதகுலத்தை அணு ஆயுதப் போர் எனும் மூன்றாவது உலகப் போரின் படுகுழிக்குள் இழுத்துச் செல்லும்.
