ஈரானில் பெருகிவரும் பொருளாதார நெருக்கடி தொடர்பாக வெகுஜன போராட்டங்கள் வெடிக்கின்றன

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்

25 ஜூன் 2024 செவ்வாய்க்கிழமை, ஈரானின் தெஹ்ரானில் ஷியாக்களின் ஈத் அல்-காதிர் பண்டிகையைக் குறிக்கும் விழாவில் அதி-உயர் தலைவர் அயதுல்லா அலி கமேனி பேசுகிறார்.  [AP Photo] [AP Photo]

கடந்த வாரத்தில் ஈரானின் பல பகுதிகளில் அதிகரித்து வரும் பொருளாதார நெருக்கடிக்கு எதிராக பெரிய அளவிலான போராட்டங்கள் நடந்துள்ளதுடன் அதிகரித்து வரும் அரச அடக்குமுறையை எதிர்கொண்ட போதிலும் அவை தொடர்கின்றன.

போராட்டக்காரர்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையிலான மோதல்களில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை குறித்து முரண்பட்ட தகவல்கள் உள்ள போதிலும் எண்ணிக்கை 10 அல்லது அதற்கு மேற்பட்டதாக இருக்கலாம். சனிக்கிழமை, அரசு-சார்பு மெஹர் செய்தி நிறுவனம், மேற்கு ஈரானில் உள்ள குர்திஷ் மக்கள் அதிகம் வாழும் ஒரு நகரமான மலேக்ஷாஹியில், போராட்டக்காரர்கள் பொலிஸ் நிலையத்தைத் தாக்க முயன்றதாகக் கூறப்படும் ஒரு சம்பவத்தில், இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் ஒரு உறுப்பினரும் இரண்டு போராட்டக்காரர்களும் கொல்லப்பட்டதாக அறிவித்தது.

2022 இன் பின்னர் நடந்த இந்த மிகப்பெரிய போராட்டங்கள், சமூக ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் பன்முகத்தன்மை கொண்டவை.

அதிகரித்து வரும் பணவீக்கம், வெகுஜன வேலையின்மை, தொடர்ந்து வளர்ந்து வரும் சமூக சமத்துவமின்மை, சரிந்து வரும் பொது உள்கட்டமைப்பு மற்றும் எந்த வடிவத்திலும் தொழிலாள வர்க்கம் சுயாதீனமாக அணிதிரள்வதையிட்டு பீதியடைந்துள்ள ஒரு முதலாளித்துவ தேசியவாத, மதகுருமார் தலைமையிலான ஆட்சியின் பரவலான அடக்குமுறை ஆகியவற்றால் ஈரானின் தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற உழைக்கும் மக்கள் மத்தியில் ஆழமாக வேரூன்றிய சமூக துன்பங்களாலேயே இந்நப் போராட்டங்கள் தூண்டப்படுகின்றன.

பொருளாதார நிவாரணத்துக்கான கோரிக்கைகளுக்கும் மேலதிகமாக, போராட்டக்காரர்கள் இஸ்லாமிய குடியரசு மற்றும் அதன் அதி-உயர் தலைவர் அயதுல்லா கமேனிக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பியுள்ளனர்.

வட அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்திய சக்திகள் ஈரானுக்கு எதிரான தங்கள் ஆக்கிரோசமான பிரச்சாரத்தை நியாயப்படுத்தவும் விரிவுபடுத்தவும் இந்தப் போராட்டங்களை விரைவாகப் பற்றிக்கொண்டன. முதலில் ஈரான் மீதான இஸ்ரேலிய-அமெரிக்கப் போராலும், பின்னர், முன்பு தளர்த்தப்பட்டிருந்த முடக்கும் பொருளாதாரத் தடைகளை, பிரிட்டன், ஜெர்மனி மற்றும் பிரான்சின் தூண்டுதலின் பேரில், “மீண்டும் விதித்ததன்” மூலமும் இந்த ஆக்கிரோசம் 2025 இல் வியத்தகு முறையில் தீவிரமடைந்தது. 2016இல் ஐ.நா.வின் ஆதரவுடன் மேற்கொள்ளப்பட்ட ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்திற்கு தெஹ்ரான் இணங்கத் தவறிவிட்டது என்ற அடிப்படையிலேயே பொருளாதாரத் தடை மீண்டும் விதிக்கப்பட்டது. உண்மையில், ஈரானின் பொருளாதாரத்தை நொறுக்கி ஆட்சி மாற்றத்தைத் துரிதப்படுத்தும் நோக்கில் 'அதிகபட்ச அழுத்தம்' கொடுக்கும் பிரச்சாரத்தின் பாகமாக அமெரிக்காவே 2018இல் அந்த ஒப்பந்தத்தை நிராகரித்ததுடன் ட்ரம்ப்பின் கீழும், பின்னர் பைடனின் கீழும் அந்த உடன்படிக்கை நிராகரிக்கப்பட்டு வந்துள்ளது,

வெள்ளிக்கிழமை அதிகாலையில், ட்ரம்ப் தன்னை ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளின் பாதுகாவலராக காட்டிக் கொண்டு ஈரானை நேரடியாக அச்சுறுத்தினார். தனது உண்மை என்ற சமூக தளத்தில் ஒரு ட்வீட்டில், ஈரான் 'அமைதியான போராட்டக்காரர்களை வன்முறையில் கொன்றால்' அமெரிக்கா 'அவர்களை மீட்கும்' என்று சபதம் செய்தார். பின்னர் அவர் அச்சுறுத்தும் வகையில், நாங்கள் 'ஆயுதங்களுடனும் படைகளுடனும் தயாராக இருக்கின்றோம்' என்று கூறினார்.

அமெரிக்காவின் சர்வாதிகாரியாக இருக்கக் கூடிய ஜனாதிபதி, டிசம்பர் 29 திங்கட்கிழமை, ஈரானுக்கு எதிரான மேலும் இராணுவ நடவடிக்கை எடுப்பது உட்பட, 'புதிய மத்திய கிழக்கை' உருவாக்குவதற்கான அமெரிக்க ஏகாதிபத்தியத் தலைமையிலான உந்துதலில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாட இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை சந்தித்த பின்னரும், பென்டகன் அன்று மாலை வெனிசுலா மீதான தாக்குதலுக்கான தயாரிப்புகளை பூர்த்தி செய்து கொண்டிருந்தபோதுமே தனது போர் அச்சுறுத்தலை வெளியிட்டார். அடுத்த நாள், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கொள்ளையடிக்கும் வேட்கையை மூடிமறைக்க எந்தவொரு முயற்சியும் எடுக்க விரும்பாத ட்ரம்ப், அமெரிக்கா வெனிசுலாவின் எண்ணெய் வளத்தைக் கைப்பற்றி வருவதாகவும், எதிர்வரும் காலத்தில் அமெரிக்கா அந்த நாட்டை ஆளும் என்றும் வெளிப்படையாக அறிவித்தார்.

டிசம்பர் 28 அன்று வரலாற்று ரீதியாக ஆட்சியின் தூணாக இருந்து வந்த தெஹ்ரானின் கிராண்ட் பஜாரை மூடுவதன் மூலம், பஜார் வணிகர்கள் மற்றும் வர்த்தகர்களால் ஏற்பாடு செய்யப்பட்டு போராட்டங்கள் தொடங்கின. அடுத்தடுத்த நாட்களில், இஸ்ஃபஹான், மஷாத் மற்றும் அஹ்வாஸ் போன்ற முக்கிய தொழில்துறை மையங்கள் உட்பட நாட்டின் பெரும்பகுதி முழுவதும் பெரு நகரங்கள் மற்றும் சிறு நகரங்களுக்கு அவை பரவின. குர்திஸ்தானிகள் உட்பட சிறுபான்மை இன மக்கள் பெருந்தொகையில் வாழும் பகுதிகளிலும் எதிர்ப்பு இயக்கம் குறிப்பாக வலுவாக இருந்ததாக செய்திகள் குறிப்பிடுகின்றன.

பல்கலைக்கழக மாணவர்கள், கடைக்காரர்கள், லொரி ஓட்டுநர்கள் மற்றும் பொதுத்துறை ஊழியர்கள் உட்பட பல்வேறு சமூக அடுக்குகளை இந்த போராட்டங்கள் உள்ளடக்கியுள்ளதோடு 'துறை-சார் வேலைநிறுத்தங்கள்' மற்றும் குறுகிய ஆர்ப்பாட்டங்கள் மற்றும் வெகுஜன கூட்டங்கள் போன்ற வடிவிலும் போரட்டங்கள் நடக்கின்றன.

டிசம்பர் 29 திங்கட்கிழமை, எதிர்ப்பு இயக்கம் தெஹ்ரானுக்கு அப்பால் வேகமாக பரவி வந்ததால், ஈரானின் மத்திய வங்கியின் தலைவர் முகமது ரெசா ஃபார்சின் தனது ராஜினாமாவை சமர்ப்பித்தார். ஈரானின் நாணயமான ரியாலின் மதிப்பு சரிந்தமை, ஈரானின் 40 சதவீதத்திற்கும் அதிகமான பணவீக்க விகிதத்திற்கு ஒரு முக்கிய காரணியாகும்.

அடுத்த நாள், ஈரானிய ஜனாதிபதி மசூத் பெஷேஷ்கியன் போராட்டக்காரர்களுடன் 'பேச்சுவார்த்தை' நடத்த அழைப்பு விடுத்தார். 'நாணய மற்றும் வங்கி முறையை சீர்திருத்துவதற்கும் மக்களின் வாங்கும் சக்தியைப் பாதுகாப்பதற்கும் எங்கள் நிகழ்ச்சி நிரலில் அடிப்படை நடவடிக்கைகள் உள்ளன,' என்று அவர் கூறினார்.

உண்மையில், உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் கொள்கை பரிந்துரைகளின்படி, சமீபத்திய ஆண்டுகளில் ஈரானிய அரசாங்கங்களால் மேற்கொள்ளப்பட்ட தனியார்மயமாக்கல் மற்றும் அத்தியாவசியப் பொருட்களுக்கான மானியங்களை நீக்குதல் அல்லது குறைத்தல் உட்பட 'தாராளமயமாக்கல்' நடவடிக்கைகள், உழைக்கும் மக்களை வறுமையில் ஆழ்த்துவதற்கும், ஒரு சிறிய முதலாளித்துவ உயரடுக்கை மேலும் வளப்படுத்துவதற்கும் மட்டுமே உதவியுள்ளன.

சனிக்கிழமை, அதி-உயர் தலைவர் கமேனி, போராட்டங்கள் சம்பந்தமாக தனது மௌனத்தை கலைத்தார். ஈரானின் பொருளாதார நிலை குறித்து முதலாளித்துவ மற்றும் குட்டி முதலாளித்துவத்தின் அதிருப்தியடைந்த பிரிவுகளின் புகார்கள் மற்றும் விரக்திகளைக் ஏற்றுக்கொண்டு அவர்களுக்கு வேண்டுகோள் விடுத்த அவர், 'கலவரக்காரர்கள்' என்று அடையாளம் கண்டவர்களை -அதாவது, கட்டுக்கடங்காத தொழிலாள வர்க்கத் தட்டினர் மற்றும் இளைஞர்களை- கொடூரமாக அடக்குவதாகவும் அச்சுறுத்தல் விடுத்தார்.

'பஜாரி வர்க்கம், இஸ்லாமியப் புரட்சிக்கும் நாட்டுக்கும் மிகவும் விசுவாசமான பிரிவுகளில் ஒன்றாகும்' என்று கமேனி அறிவித்தார்.

'பஜாரிகள் சொல்வது சரிதான், இந்த நிலைமைகளில் அவர்களால் வியாபாரம் செய்ய முடியாது,' என்று அவர் தொடர்ந்தார்.

86 வயதில் இஸ்லாமிய குடியரசின் அதி-உயர் தலைவராக 36வது வருடமாக இருக்கும் கமேனி, 'நாங்கள் போராட்டக்காரர்களுடன் பேசுகிறோம். அதிகாரிகள் அவர்களுடன் பேச வேண்டும், ஆனால் கலகக்காரர்களுடன் பேசுவதால் எந்தப் பயனும் இல்லை. கலகக்காரர்களை அவர்களின் இடத்தில் வைக்க வேண்டும்,' என்று கூறினார்.

ஆட்சிக்கு ஆதரவைத் திரட்டும் முயற்சியில், ஷாவின் முடியாட்சி சர்வாதிகாரத்தின் கீழ் நிலவிய நவ-காலனித்துவ அடிமைத்தனத்திற்கு ஈரானை மீண்டும் கொண்டு வர ட்ரம்ப் விடுக்கும் அச்சுறுத்தல்களையும் வாஷிங்டன் தலைமையிலான ஏகாதிபத்திய சக்திகளின் தொடர்ச்சியான உந்துதல்களையும் கமேனி சுட்டிக்காட்டினார்.

ஆனால் உண்மை என்னவென்றால், ஈரானிய முதலாளித்துவமும் இஸ்லாமிய குடியரசின் அரசியல்-மதகுருமார் ஸ்தாபனமும், ஏகாதிபத்திய சக்திகளுடனான ஈரானின் மோதலின் முழு சுமையையும் தொழிலாள வர்க்கம் மற்றும் கிராமப்புற உழைப்பாளிகளின் முதுகில் சுமத்த முயல்கின்ற அதேநேரம், தங்களை வளப்படுத்திக் கொண்டு வாஷிங்டன் மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்திய சக்திகளுடன் இணக்கமாக இருக்க முயல்கின்றன.

பல ஆண்டு கால தண்டனை பாணியிலான தடைகள்; ஈரானிய முதலாளித்துவம் அதன் சுயநல வர்க்க நலன்களைப் பேணுகின்றமை; கடந்த ஆண்டு ஈரானின் சிவில் அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்க தாக்குதலுடன் முடிவுக்கு வந்த இஸ்ரேலுடனான பன்னிரண்டு நாள் போர்; தளர்த்தப்பட்டிருந்த பொருளாதாரத் தடைகள் கடந்த அக்டோபரில் இன்னும் விரிவாக “மீண்டும் அமுல்படுத்தப்பட்டமை”; மற்றும் எண்ணெய் விலை வீழ்ச்சி ஆகிய அனைத்தும், ஈரானின் பொருளாதாரம் மற்றும் சாதாரண ஈரானியர்களின் வாழ்க்கைத் தரங்கள் மற்றும் பிழைப்பில் பேரழிவு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.

பாழடைந்த உள்கட்டமைப்பின் விளைவாக, ஈரான் கடுமையான எரிசக்தி பற்றாக்குறையை எதிர்கொண்டு, மின்வெட்டுகளை முன்னெடுக்க நிர்ப்பந்திக்கப்பட்டமையால், உற்பத்தி சீர்குலைக்கப்பட்டதுடன் தெஹ்ரான் தற்காலிகமாக அரசு அலுவலகங்களை மூடி, நாட்டின் பெரும்பகுதி முழுவதும் குறுகிய வேலை வாரத்தை விதிக்கத் தள்ளப்பட்டது. காலநிலை மாற்றத்தால் ஏற்படும் வறட்சியால் ஈரானின் பெரும் பகுதி மோசமாக பாதிக்கப்பட்டுள்ளமை, உணவு விலைகளை மேலும் உயர்த்தியுள்ளதோடு கிராமப்புற வருமானங்களைக் குறைத்துள்ளது.

ஏற்கனவே, சமூக நல அமைச்சு, 2024 ஆம் ஆண்டில், 57 சதவீத ஈரானியர்கள் ஊட்டச்சத்து குறைபாட்டை அனுபவித்ததாகக் கண்டறிந்துள்ளது. கடந்த ஆண்டு ஒட்டுமொத்தமாக உணவு விலைகள் சுமார் 70 சதவீதம் உயர்ந்துள்ளதுடன் இறைச்சி ஒரு ஆடம்பரப் பொருளாக மாறியுள்ளது. 2025 ஆம் ஆண்டில் நூற்றுக்கணக்கான பிரதான மருந்துகளுக்கான விலைகள் இரட்டிப்பாகவோ அல்லது அதிகமாகவோ இருந்தமையால், பலர் பிரதான சுகாதாரப் பராமரிப்பை கைவிட நிர்ப்பந்திக்கப்ட்டனர்.

1979 பிப்ரவரியில் ஷாவின் கொடுங்கோல் ஆட்சியைக் கவிழ்த்த ஏகாதிபத்திய எதிர்ப்பு எழுச்சிக்குப் பின்னர், ஈரானின் மதகுருமார் தலைமையிலான முதலாளித்துவ-தேசியவாத ஆட்சி, இடதுசாரிகளையும் புரட்சியின் உச்சத்தில் தொழிலாள வர்க்கம் உருவாக்கிய சுயாதீன அமைப்புகளையும் ஈவிரக்கமின்றி அடக்குவதன் மூலம் அதன் அதிகாரத்தை பலப்படுத்திக்கொண்டது.

ஆயினும்கூட, புரட்சியின் உடனடி விளைவுகளில் தொழிலாள வர்க்கத்திற்கும் கிராமப்புற உழைப்பாளிகளுக்கும் வழங்கப்பட்ட சில சமூக சலுகைகளைப் பராமரிக்க அது நிர்ப்பந்திக்கப்பட்டது. கடந்த 15 ஆண்டுகளில், இந்த சலுகைகளில் எஞ்சியிருப்பவையும் திட்டமிட்ட தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன. அடுத்தடுத்து ஆட்சியில் இருந்த, சர்வதேச நாணய நிதியம்-சார்ந்த 'சீர்திருத்தவாதிகள்' அல்லது அமெரிக்க-விரோத மத 'கடும்போக்காளர்கள்' (கொள்கையாளர்கள்) தலைமையிலான ஈரானிய நிர்வாகங்கள், தனியார்மயமாக்கல் மற்றும் மானிய வெட்டுக்கள் முதல் நிலையற்ற ஒப்பந்த-தொழிலாளர் வேலைவாய்ப்பை ஊக்குவித்தல் வரை 'சந்தை சார்பு சீர்திருத்தங்களை' செயல்படுத்தியுள்ளன.

இதன் விளைவாக, நகர்ப்புற மற்றும் கிராமப்புற ஏழைகள் மத்தியில் ஆட்சியின் ஆதரவுத் தளம் பெருமளவில் அரிக்கப்பட்டுள்ளது. 2018 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் ஈரான் முழுவதும் வெகுஜன தொழிலாள வர்க்கப் போராட்டங்கள் வெடித்ததுடன், 2022 இலையுதிர்காலத்தில் ஈரானின் 'ஒழுக்காற்று பொலிசில்' காவலில் இருந்தபோது 22 வயதான மஹ்சா அமினியின் மரணத்தால் தூண்டப்பட்ட வெகுஜன போராட்டங்களால் நாடு மீண்டும் ஸ்தம்பித்தது.

சமீபத்திய மாதங்களில் ஆசிரியர்கள், செவிலியர்கள் மற்றும் எண்ணெய் தொழிலாளர்கள் உட்பட தொழிலாளர் போராட்டங்கள் மற்றும் வேலைநிறுத்தங்களின் அலைகள் காணப்படுகின்றன. நவம்பர் 11 அன்று, தெற்கு பார்ஸில் உள்ள ஒரு டஜன் சுத்திகரிப்பு நிலையங்களில் ஒப்பந்தத் தொழிலாளர்கள் எதிர்ப்பு ஊர்வலங்களையும் கூட்டங்களையும் நடத்தினர்.

மேற்கத்திய ஏகாதிபத்திய சக்திகளுடன் விரைவான நல்லிணக்கத்தை ஆதரிக்கும் ஒரு பிரிவினருக்கும், சீனா மற்றும் ரஷ்யாவுடனான பொருளாதார மற்றும் இராணுவ-மூலோபாய உறவுகளுக்கு முன்னுரிமை அளிப்பதன் மூலமும், எதிர்ப்பு மையம் (ஹமாஸ், ஹெஸ்பொல்லா மற்றும் டிசம்பர் 2024 இல் அது சரியும் வரை, சிரியாவின் அசாத் ஆட்சியையும் உள்ளடக்கிய நட்பு நாடுகளின் வலையமைப்பு) எனப்படுவதன் ஊடாக அமெரிக்க-இஸ்ரேலிய இராணுவ அழுத்தத்தை எதிர்ப்பதன் மூலமும், கடுமையாக பேரம் பேச முயலும் ஒரு பிரிவினருக்கும் இடையே ஆட்சி நீண்ட காலமாகப் பிளவுபட்டுள்ளது. அதி-உயர் தலைவராக கமெனி, அவரும் ஈரானிய முதலாளித்துவமும் பெரும் வல்லரசுகளுக்கு இடையில் உத்தியைக் கையாண்டு ஈரானுக்குள் அதிகரித்து வரும் வெடிக்கும் வர்க்க முரண்பாடுகளைக் கட்டுப்படுத்த முயன்ற நிலையில், முதலில் ஒன்றையும், பின்னர் மற்றொன்றையும் ஆதரித்து இரு பிரிவுகளுக்கும் இடையில் சூட்சுமத்தைக் கையாள முயன்றார்,  

இஸ்லாமியக் குடியரசின் அரசியல் ஸ்தாபனம் மற்றும் ஈரானிய முதலாளித்துவத்தின் அனைத்து பிரிவுகளின் திவால்நிலையையும், ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போராடுவதற்கான அவர்களின் கூற்றுக்களின் வெற்றுத்தனத்தையும், தொழிலாள வர்க்கத்தின் மீதான அவர்களின் விரோதத்தையும், ஏகாதிபத்திய ஒடுக்குமுறைக்கு எதிரான ஒரு பொதுவான போராட்டத்தில் அனைத்து மத மற்றும் இன வேறுபாடுகளையும் கடந்து மத்திய கிழக்கின் மக்களை அணிதிரட்ட அவற்றின் இயல்பான இயலாமையையும் இந்த நிகழ்வுகள் நிரூபித்துள்ளன.

ட்ரம்ப் வெள்ளை மாளிகைக்கு மீண்டும் வந்தமைக்கு ஈரானிய ஆட்சி பேச்சுவார்த்தைகளுக்கு மன்றாடுவதன் மூலம் பிரதிபலத்ததுடன் அவர் ஈரானை போர் மூலம் அச்சுறுத்திய போதும், காசா மீதான இஸ்ரேலின் இனப்படுகொலை தாக்குதலுக்கு அமெரிக்க ஆதரவைத் தீவிரப்படுத்திய போதும் அது அந்த முயற்சியை தொடர்ந்தது. அமெரிக்காவை எதிர்த்து நிற்பது பற்றிய அவர்களின் அனைத்து வாய்ச்சவடால்களும் ஒருபுறம் இருக்க, ஈரானின் இராணுவத் தலைமையின் பெரும்பகுதியை வெற்றிகரமாக அழிக்கும் தாக்குதலுடன் தொடங்கிய, ஜூன் 13 இஸ்ரேலின் தாக்குதலுக்கு சற்று முன்னதாக, ஈரானுடன் பேச்சுவார்த்தைகள் தொடரும் என்று ட்ரம்ப் பாசாங்கு செய்கையில், மறுபக்கம் அமெரிக்க ஏகாதிபத்தியமும் அதன் இஸ்ரேலிய தாக்குதல் நாயும் தங்களுக்கு எதிராக வைத்த பொறிக்குள் ஈரானின் தேசிய பாதுகாப்பு எந்திரத்தின் தலைமை கண்ணை திறந்துகொண்டே நுழைந்தது.

அதன் பின்னர் வந்த மாதங்களிலும் அதே மூலோபாயத்தைப் பின்பற்றி வருகின்ற ஈரான், ட்ரம்புடன் பேரம் பேசவும், ஈரானிய பொருளாதாரத்தை பெரிய அளவிலான அமெரிக்க முதலீட்டிற்குத் திறந்து விடவும் தொடர்ந்து முன்வந்துள்ள அதேநேரம், வாஷிங்டனை பேரம் பேசும் மேசைக்கு வர அழுத்தம் கொடுப்பதற்காக தனது சிவில் அணுசக்தி நிலையங்களை மறுகட்டமைக்க முயற்சிக்கிறது.

தெஹ்ரான் தனது கோபத்தின் பெரும்பகுதியை ஐரோப்பிய ஏகாதிபத்தியவாதிகளின் பக்கம் திருப்பியுள்ளது. ட்ரம்ப்புடன் அனுகூலம் பெறவும் உக்ரேன் போருக்கு மத்தியில் ரஷ்யாவுக்கு மட்டுப்படுத்தப்பட்ட இராணுவ உதவியைச் செய்தமைக்காக ஈரானைத் தண்டிக்கவும் கடந்த இலையுதிர் காலத்தில் பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ஜேர்மனியும் ஐ.நா. கட்டுப்பாடுகளை “மீண்டும் அமுல்படுத்த” நடவடிக்கை எடுக்கும் வரை, வாஷிங்டனை விட நல்லிணக்கத்துக்கு “நியாயமானவர்கள்” மற்றும் வழிக்கு வரக்கூடியவர்கள் என்று ஐரோப்பாவை ஈரான் நீண்டகாலமாக எண்ணிக்கொண்டிருந்தது.

ஈரானிய தொழிலாள வர்க்கம் ஈரானிய முதலாளித்துவத்தின் அனைத்து பிரிவுகளையும் எதிர்ப்பதன் மூலமும், தொழிலாளர்களின் ஈரானுக்கான போராட்டத்தை பிற்போக்கு முதலாளித்துவ இஸ்லாமிய குடியரசிற்கு எதிராக திருப்புவதன் மூலமும் மட்டுமே அதன் வர்க்க நலன்களை உறுதிப்படுத்திக்கொள்ள முடியும். கிராமப்புற உழைப்பாளர்களை தம் பின்னால் அணிதிரட்டிக்கொண்டு தொழிலாள வர்க்கத்தின் ஒரு வெகுஜன சோசலிச இயக்கத்தை கட்டியெழுப்புவதன் மூலம் மட்டுமே, ஏகாதிபத்தியத்திற்கும் அதன் சியோனிச வாடிக்கையாளருக்கும் எதிரான ஒரு உண்மையான போராட்டத்தை முன்னெடுக்க முடியும்.

20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அரசியலமைப்புப் புரட்சியின் தோல்வியிலிருந்து 1953 இல் மொசாடெக்கின் தேசியவாத ஆட்சி தூக்கியெறியப்பட்டது முதல் 1979 ஈரானியப் புரட்சியைக் கடத்தி ஒடுக்கியமை மற்றும் இஸ்லாமியக் குடியரசின் 47 ஆண்டுகள் வரையிலான நவீன ஈரானின் முழு வரலாறும், ஈரானிய தொழிலாள வர்க்கத்திற்கான ஒரே சாத்தியமான மூலோபாயம் நிரந்தரப் புரட்சி மூலோபாயமே என்பதை நிரூபிக்கிறது. முதலில் லியோன் ட்ரொட்ஸ்கியால் வகுக்கப்பட்ட நிரந்தரப் புரட்சி மூலோபாயமானது 1917 ரஷ்யப் புரட்சியையும், புரட்சி தனிமைப்படுத்தப்பட்ட நிலைமைகளின் கீழ் தொழிலாள வர்க்கத்திடமிருந்து அதிகாரத்தைக் கைப்பற்றி, இறுதியில் முதலாளித்துவத்தை மீள ஸ்தாபித்த தேசியவாத ஸ்ராலினிச அதிகாரத்துவத்திற்கு எதிரான போராட்டத்தையும் உயிர்ப்பித்தது. ஏகாதிபத்திய சகாப்தத்தில், தேசிய சுதந்திரம் மற்றும் ஐக்கியம் மற்றும் தேவாலயத்தை அரசிலிருந்து வேறுபடுத்துவது உட்பட, 18 மற்றும் 19 ஆம் நூற்றாண்டுகளின் வரலாற்று முதலாளித்துவப் புரட்சிகளுடன் தொடர்புடைய ஜனநாயகப் பணிகளை, தொழிலாளர்களின் அதிகாரத்தை நிறுவுவதன் மூலமும் உலக சோசலிசப் புரட்சிக்கான போராட்டத்தின் ஒரு பகுதியாகவும் மட்டுமே யதார்த்தமாக்க முடியும் என்பதை இது நிறுவுகிறது.

உலகளாவிய போரின் மூலம் பூகோளத்தை மறுபகிர்வு செய்வதற்கான அமெரிக்க தலைமையிலான ஏகாதிபத்திய உந்துதலின் ஒருங்கிணைந்த பகுதியான, ஈரானுக்கு எதிரான தொடர்ச்சியான ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பை வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் உள்ள தொழிலாளர்கள் தங்கள் பங்கிற்கு, சளைக்காமல் எதிர்க்க வேண்டும்,.

Loading